போர்டிங் பாஸ் பரிசோதனை கவுன்டர் தொடங்கி விமானத்திற்கு நம்மை வழிநடத்தி, வரவேற்று, இருக்கையில் அமரவைக்கும் வரை வழிநெடூக மனித எந்திரன்களும் எந்திரிகளும் வணக்கம், வந்தனம், நமஸ்கார், நமோஷ்மார், ஸ்ஸ்வாகதங்களைச் சொல்லின.
நாங்கள் ஆறுபேர் ஒன்றாய் வந்திருந்தாலும், விதியின் வசத்தில் எனக்கு மட்டும் தனித்தீவு ஒன்றில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. யாரோ ஒன்றாய் வந்த மூன்று நண்பர்கள் ஏ, சி மற்றும் டி இருக்கையில் அமர்ந்து கொண்டு ‘பி’ இருக்கையில் என்னை வைத்துப் பிழிய ஆயத்தமாயினர். மிஸ்டர் ஏ ஜன்னலோரம் உட்கார்ந்திருக்க, அவரை விடுத்து மற்ற இருவரிடமும் “ஸ்வாமி, ஏதாவது ஒரு ஓர சீட்டுல என்னை விட்டுடுங்க. நீங்க ஒட்டுக்கா கதைச்சிட்டு வரலாம்”, என்ற ஐடியாவை லெஃப்ட் ஹாண்டில் புறந்தள்ளின சி’யும் டி’யும். எக்கேடோ கெட்டுப் போங்க என “வாழ்விலே ஒரு முறை” “கண்ணீரில்லாமல்” இரண்டையும் கையிலெடுத்து இன்க்கி பின்க்கி பான்க்கி போட்டு, “கண்ணீரில்லாமல்” புத்தகத்தை கைப்பைக்குள் சொருகினேன்.
மிஸ்டர் ஏ என்னையே கொஞ்ச நேரம் பார்த்து “வாட் புக் இஸ் திஸ்”,
“தமிழ்”
“தட் ஐ குட் ஸீ. ஹூ இஸ் தி ஆத்தர்”
“ஜெயமோகன்”
“ஓ, ஐ நோ பாரடியார் அண்ட் டிருவல்லுவர்”
“ஓ, குட் டு நோ. போத் ஆர் நோ மோர் நவ்”
“யா! ஐ நோ, யு கண்டின்யூ”, என கையிலிருந்த ஏதோ பிஸினஸ் புத்தகத்தில் மூழ்க....
மேலும் கொஞ்ச தாமதம், ரன்வேயில் காத்திருப்பு அப்படி இப்படியென ஒரு மணிநேரத் தாமதத்தில் விமானம் புறப்பட்டது.
விசிறி சாமியார் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிளைப் பரிசளிக்க, எனக்கு வயிற்றின் அமிலக் கரைசல் மறுபடி நினைவுக்கு வர... சரியாய் வந்து சேர்ந்தான் விமான சிப்பந்தி. தூரத்தில் நீள் செவ்வக வண்டியொன்றை அவன் மெதுவாய்த் தள்ளி வருவது தெரிய, “ஆஹா”, எனத் துள்ளியமர்ந்தேன். ஒவ்வொரு இருக்கையாய் நின்று, என்ன வேண்டும் என ஒவ்வொருவராய் விசாரித்து நீ.செ.வ. உள்ளிருந்து எடுத்துத் தந்து கொண்டிருந்தான். “அப்பாடா”, என நிம்மதிப் பெருமூச்சுவிட்டு சாய்ந்து அமர்ந்தேன்.
திடீரென “காச் மூச்” என ஏதோ சத்தம். ஒரு ’கன’வான் ஒருத்தர் அந்த சிப்பந்தியிடம் எழுந்து நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார். “எதிர்பாராததை எதிர்கொள்ளடா”, என உள்ளே குரல் அலறியது.
விஷயம் இதுதான்.... அந்த நேரத்து ஜெட் விமான சேவையில் உண்ணும் பொருள் யாவும் விலை கொடுத்தே வாங்கப்ப்ட வேண்டும். இதைத் தெளிவாக ஈ.டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என கனவானின் குற்றச்சாட்டு. ஏதும் தருகிறோம் என்றும் குறிப்பிடவில்லையே என்பது சிப்பந்தியின் வாதம்.
“ஐ டொண்ட் வாண்ட் எனிதிங்”, எனக் கடைசிக் கத்தலை இறைத்துவிட்டு அமர்ந்தார் கனவான்.
"ஐ டூ டோண்ட் வாண்ட் எனிதிங், இஃப் யு வாண்ட் மனி”, என்னுள்ளே எவனோ ஒருத்தன் திடீர்க் குரல் தந்தான். “டேய், யாரப்பா நீ? துட்டு இருக்குல்ல, வாங்கித் துன்னா என்னாவாம்”, என எதிர்க்குரல் தந்த அந்த இன்னொரு மடையனின் வாதம் தலையில் தட்டி அடக்கப்பட்டது.
அவ்வப்போது ஏதேதோ அறிவிப்புகள் ஹிந்தி கலந்த ஆங்கிலம், ஆங்கிலம் கலந்த ஹிந்தி என மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன. விமானி ஒருமுறை குரல் கொடுத்தார். முப்பத்து ஆறாயிரம் அடியில் பறப்பதாகவும், வெளியே மைனஸ் 43 டிகிரி குளிர் எனவும் குறிப்பிட்டார்.
இப்போது வண்டி அருகில் வர...
உள்ளேயிருந்த இரண்டாவது ஆசாமியின் குரல், “வெஜ் சாண்ட்விட்ச்?”
”டூ ஹண்ட்ரட் சார்”
முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”
இரண்டாம் ஆசாமி மீண்டும், “சாஃப்ட் ட்ரின்க்ஸ்”
“நைன்ட்டி சார்”
முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”
இருவரும் சேர்ந்து, “வாட்டர்”
“தட்ஸ் ஃப்ரீ சார்”
“குட், கிவ் மி அ கப்”
கையிலெடுத்த காகிதக் கோப்பை நிறைந்துவிடா வண்ணம் முக்காலுக்கு அரைக்கும் இடையே அளந்து கொடுக்கப்பட்டது.
ஏ’வும் சி’யும் கேஷ்யுக்களையும், சாஃப் ட்ரிங்க் டின்களையும், சாண்ட்விட்ச்’களையும் இடவலப் புறங்களில் அதகளம் செய்து என்னைக் கடுப்பேற்றின.
வெளியே தட்பவெப்பநிலை சரியில்லாததால், சீட் பெல்ட் அணிந்தவாறே பயணிப்பது நலம் என ஒரு அறிவிப்பு வந்தது. அவ்வப்போது மேகங்களுக்குள்ளே புகுந்து தடதடத்து ரயிலாட்டம் ஆடியாடிச் சென்றது விமானம். வயிற்றை ஏதோ பயம் கவ்வியிழுத்தது.
பெல்ட் அணிந்து தலை சாய்த்து டி’யைப் பார்க்க அங்கே கைகளில் ஏதுமில்லை. இந்த சிகாமணி பரவாயில்லை தின்னி பார்ட்டியில்லை என நினைத்த வேளையில்,
கடந்து சென்ற ஹோஸ்டஸிடம் , “கேன் யு கெட் மீ மை பேக்?”, தலைக்கு மேலே காட்டினார்.
“ஏன் உன்னால எந்திரிச்சி எடுக்க முடியாதா?” என்ற கடுப்பை ஒரு புன்னகை மூலம் அந்தப்பெண் முகத்தில் மறைத்து, அந்தப் பையை மேலிருந்து எடுத்துத் தந்தாள்.
தன் பையைத் திறந்து ஒரு காகிதத் தட்டு, அதன் மேல் ஐந்து வகை வடக்கத்தி பட்சணங்களை வைத்து மொசுக்கத் தொடங்கினார் மிஸ்டர்.டி. “டேய், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”, எவனோ உள்ளே புலம்பினான்.
மீண்டும் சிப்பந்தி வண்டியோடு வந்து தின்றும் தின்னாத குப்பைகளை அள்ளிக்கொண்டு போக, வெறும் வயிற்றில் குலுங்கின அரைக்கோப்பைத் தண்ணீர் விமானப்பயண ஸீ-ஸாக்களோடு சேர்த்து பிரட்டத் தொடங்கியது.
இப்போது ஜெயமோகன் வீட்டிற்குள் குட்டிப்பையன் மனோஜ் வந்து ஃப்ரிட்ஜ் உள்ளே இருந்த சிப்ஸ் வாங்கித் தின்றான். அடுத்த அத்தியாயத்தில் யாரேனும் ஏதேனும் தின்றால், நான் ஜன்னல் வழியே குதித்துவிடும் அபாயம் கருதி புத்தகத்தை மூடி உள்ளே வைத்தேன்.
ஜன்னல் வழியே பார்த்தேன். ஏதோ பனிப்பிரதேசத்திற்கு சற்றே மேலே பறப்பது போல் பனிப்படுக்கையாய் கீழே மேகம். அதிலும் சில மேகங்கள் கோன் ஐஸ் ரூபத்தில் தெரிந்து வெறுப்பேற்றின. போதும்டா என இருக்கையில் சாய்ந்து கண்கள்மூடித் தூங்கக் தொடங்கினேன்.
விமானம் புறப்பட்டு இரண்டு மணிநேரங்கள் ஆகியிருக்க, இறங்குமுன் முகலட்சணத்தை சோதித்துக் கொள்ள வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். வயிற்றில் மீண்டும் உருட்டல் பிரட்டல். ஒன்றுமில்லா வயிற்றிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு வந்தது. வயிற்றில் ஒரு அழுத்தம் தந்து அதை எடுத்துத் தொலைத்தேன்... “அரை கப் தண்ணீர்”
”விமானம் தரையிறங்க இருப்பதால் பயணிகள் இருக்கையில் அமரவும், சீட் பெல்ட் அணிந்து கொள்ளவும்”
ஜெட் பந்தம் நிறைந்தது. தில்லி விமான நிலையம் வரவேற்கக் காத்திருந்தது.