Sep 30, 2012

தி.ஜானகிராமன் வாரம்


நாளை (அக்.1) தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ஆம்னிபஸ் தளத்தில் தி.ஜானகிராமன் புத்தகங்களுக்கு அறிமுக / விமர்சனப் பதிவுகள் வெளிவருகின்றன. 

சென்றவாரம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை ஐந்து பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆம்னிபஸ் ரெகுலர் ஓட்டுனர்களே அந்தப் பதிவுகளை எழுதச் சித்தமாக இருக்கிறார்கள். எனினும், சிறப்புப் பதிவர்களின் பதிவுகளும் வரவேற்கப்படுகின்றன.

நாளை தொடங்கி அடுத்த ஞாயிறுவரை மாலை ஆறுமணிக்கு மேலாக பதிவுகள் வலையேற்றப்படும். 

காத்திருந்து வாசிக்கவும்.

Sep 29, 2012

கதம்பம் - 3

கொரியன் கொலைவெறி


நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பெய்ர்ஸ்டோவை அவுட் ஆக்கிய க்றிஸ் கெயில் ஆடிய இந்த நடன அசைவு கீழே இருக்கும் விடியோவின் இன்ஸ்பிரேஷனாம். கொலைவெறி கொலைவெறி என்று ஐந்து கோடி ஹிட், ஆறு கோடி ஹிட் எனக் கொண்டாடும் நமக்கு 30 கோடி ஹிட்டடித்த இந்த இரண்டு மாதமே ஆன கொரியன் பாப் பாடலில் அந்தக் குதிரையசைவைத் தவிர்த்து அப்படி என்னவிருக்கிறது எனப் புரியவில்லை.





என்னத்த சொல்ல

சமீபத்தில் தொடர் நிகழ்வாகிப் போன பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் விபத்துகளில், இருக்கும் அத்தனை அரசுத் துறைகளின் மெத்தனங்களையும் வார்த்தைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறோம். பள்ளிகளுக்குப் பொறுப்பில்லை என ஓலமிடுகிறோம்.

இது சென்ற வாரம் நிகழ்ந்த நிகழ்வு: சென்னை சைதாப்பேட்டை அருகே லிட்டில்மவுண்ட்’டில் 16 வயது சிறுவன் ஒருவன் தன் வயதையொத்த மேலும் இரண்டு சிறுவர்களைத் தன் தந்தையிடம் கிளப்பிக் கொண்டு வந்த மொபெட்டில் வைத்து ரவுண்டு அடித்திருக்கிறான். போதாத குறைக்குத் துணைக்கு தம் வீட்டருகே இருந்த ஆறு வயது சின்னஞ்சிறுவனையும் அதே வண்டியில் ஏற்றிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள். மெயின் ரோட்டில் விட்ட சவாரியில் அன்றைய எமனாகக் குறுக்கே வந்த அரசுப் பேருந்து மோதி அந்த ஆறுவயது சின்னஞ்சிறுவன் ஸ்பாட் டெட்.

இத்தனை சிறுவர்களிடம் நம்பி வண்டியைத் தரும் பெற்றோரை என் சொல்ல? அந்த ஆறுவயது சிறுசை அலட்சியமாக ட்ரிப்பிள்ஸ் போன வண்டியில் நான்காவதாக ஏற்றி அனுப்பிய பெற்றோரை என்ன சொல்ல?

சீயோன் பள்ளி விபத்தில் இறந்த குழந்தைக்காய்ப் பொங்கியெழுந்த நாம், இது போன்ற நிகழ்வுகளிலிருந்தும் நம் குழந்தைகளைக் காத்துக் கொள்ள எப்போது பொங்கப் போகிறோம்?

எம் புள்ள, எட்டு வயசுதான் ஆவுது, என்னாமா கார் ஓட்டுது தெரியுமா / என்னாமா பைக் ஓட்டுது தெரியுமா என்று பெருமையடிக்கும் பெற்றோர்களை இனி கேட்ட இடத்திலேயே தூக்கிப் போட்டுத்தான் மிதிக்க வேண்டும். 



மெகா சீரியல் ஜிங்காலாலா

மேட்டர்  1: 

#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனெ தேவுரு வரவிருக்கும் பத்து மணி ஸ்லாட் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக மாங்கல்யாவால் ஆளப்பட்டு வந்தது. ஆசியாக் கண்டத்தில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிக அதிக எபிசோடுகளைத் தாண்டியது அது. (இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேலே.) மாங்கல்யா’, தமிழ் மெட்டி ஒலியின் கன்னட வடிவம்.

ஒரிஜினல் கதை எழுநூற்று சொச்ச எபிசோட்களில் முடிந்துவிடும். ஆனால் கன்னடத்தில் மக்கள் அதை முடிக்க விரும்பவில்லை. எனவே திரைக்கதையை வளர்க்கும் பொறுப்பை சினி டைம்ஸ் ராஜ் பிரபுவிடம் அளித்தது. முடியவிருந்த ஒரு கதையை மேற்கொண்டு ஆயிரத்தி ஐந்நூறு எபிசோடுகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றார் அவர்.
- ”மனெ தேவுரு” கன்னட சீரியல் வசனகர்த்தா ரைட்டர் பாரா


மேட்டர்  2: 

#அடடடடடடடடடடடடடடடடடடடடடடடடே

"நான் சீரியல் நடிகைதாங்க. ஆனா அதனால உங்களுக்கு என்ன நல்லது இருக்கு? ஒரு நிகழ்ச்சி பார்க்கறிங்கன்னா அதனால உங்களுக்கு ஏதாச்சும் கிடைக்கணும் இல்லை? மெகா சீரியலில் என்னங்க இருக்கு? நான் நடிக்கிற ஒரு சீரியல். 3 வருஷமா அதே இடத்துலதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கதை நகரல. நானும் நடிச்சிட்டுதான் இருக்கேன். அது எனக்கு ப்ரெட் & பட்டர். ஆனா உங்களுக்கு என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறத‌ லேட்டாக்குறத தான் இந்த சீரியல் செஞ்சிருக்கு. வேற ஒண்ணும் செய்யல"
இதைச் சொன்னவர், இதோ இங்கே இருப்பவர். இவர் யாரென்று தெரியாதவரிடம் நான் என்னத்த சொல்ல? கார்க்கி சொல்றார் பாருங்க



கோரத் தாண்டவம்

தமிழ் இணையத்தில் தாண்டவம் படம் குறித்த அப்டேட்களை கொஞ்சம் மேய்ந்தேன். பழகிப் போன, புளித்துப் போன அடித்துத் துவைக்கும் மேதாவித்தன விமர்சனங்கள். முக்கியமாக தமிழ் ட்விட்டருலகினரின் வழமைமாறா “அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீய” ரக அப்டேட்கள். 


இனி நீங்க உலாத்துற ட்விட்டர் பக்கங்களுக்குத்தான் வரக்கூடாதய்யா. #முடியலை.

இன்று மேட்னி ஷோ புக் பண்ணீயிருக்கிறோம். பார்த்து வந்துவிட்டு என் பங்கிற்கு நானும்.....

வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கொசுக்களின் ப்ளூ அட்டாக்

மழை வருகிறதோ இல்லையோ, மழைக் காலம் வரவிருக்கிறது. நம்மூரில் கூடவே கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வரும். (அல்ரெடி வந்தாச்சா? வெரிகுட், கைகுடுங்க! நீங்க நம்மாளு).

ஒரு உண்மை தெரியுமா? கொசுக்களுக்கு நீல நிறம் ரொம்ப அட்ராக்டிவ் நிறமாம். ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். பாத்து பதவிசா நடந்துக்கிட்டு கொசுக்களிடமிருந்து கொஞ்சூண்டு தப்பிச்சிக்கோங்க. 
.
.
.


Sep 26, 2012

வண்ணத்துப்பூச்சி வரைந்தவன்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை

நா.முத்துக்குமார் - இன்றைய தமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால் அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.

2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனிபடத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

சந்தோஷிடம் சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.

பாடல் முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது. 

சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா இருக்கு”, என்றான்.

நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை,  யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல் விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் நச்என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில் என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்! 

அடுத்த இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ் நான்குமுறை பார்த்தது தனிக்கதை.

2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான குருபிரசாத் என் கையில் சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாக கண்பேசும் வார்த்தைகள் புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான். நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவாவும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.

கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு  பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன்ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது.

நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே



Sep 23, 2012

டியர் ராஜா சார்....

டியர் ராஜா சார்,

உங்க நீஎபொவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கேன். என்னோடு வா வா, காற்றைக் கொஞ்சம், முதல்முறை பார்த்த, சற்றுமுன்பு’ன்னு என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் பத்தியெல்லாம் பத்தி பத்தியா சொல்லிக்கிட்டு சுத்தி வளைச்சி, நீட்டிமுழக்க விரும்பலை.

யுவன் தன் ம்யூசிக்’ல பாடும்போதே ஓடற வண்டியில இருந்து குதிக்கறவன் நான். உங்களுக்கு யுவன் பாடகரா இல்லையான்னு தெரியாதா? அவருக்கு எதுக்கு ரெண்டு பாட்டைத் தூக்கித் தந்தீங்க? காலத்தின் கட்டாயமா? அதுக்கு நீங்களும் அடிமையா? முடியலை சார்.

அடுத்து, உங்க குரலுக்குன்னு கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்கன்றது இந்த உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, வானம் மெல்ல மாதிரியான க்ளாஸ் ட்யூனை நீங்க பாட நினைச்சது ஏன்? எதுக்கு எட்டாத ரேஞ்ச் பத்தியெல்லாம் கவலைப்படாம அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க. யெஸ், ஐ ரிப்பீட். எதுக்காக அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க?

உங்க கொலைவெறி ரசிகர்கள் நீங்க படத்துக்கு ஒரு பாட்டு பாடியே ஆகணும்னு நெனைக்கறாங்க, நிஜம்தான். அதுக்கு நீங்களும் செவி சாய்க்கணும்னு நெனைச்சீங்கன்னா ”என்னைத் தாலாட்ட வருவாளா” பாட்டை கேஸட்ல எக்ஸ்ட்ராவா பாடினாப்ல, ”வானம் மெல்ல” பாட்டை ஹரிஹரனுக்கோ ஹரிசரணுக்கோ தந்துட்டு நீங்க எக்ஸ்ட்ராவா பாடி கேஸட்ல சேத்துருக்கலாம். 

எட்டு ட்யூன் போட்டுட்டு அதுல நாலு ட்யூனை மட்டும் என்னைக் கேக்க விடற நீங்க..... விதவிதமா விருந்து சமைச்சிட்டு அதைப் பாதிக்குப் பாதி தின்னவிடாம செஞ்சாப் போல எனக்குத் தோணுது.

இந்த காலத்தின் கட்டாயத்தின் பேர்லயும், கொலைவெறி ரசிகர்களுக்காகவும் செய்யப்படற காம்ப்ரமைஸ்கள் எனக்குப் பிடிக்கலை சார். என்னைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே கருத்தோட இருப்பாங்கன்னு நான் வலுவா நம்பறேன்.

இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நீஎபொவ படத்துல நாலே பாட்டுதான்னு நாங்க எங்களைச் சமாதானப்படுத்திக்கறோம், விடுங்க.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

Sep 22, 2012

பயம் - குறும்படம்

தனுஷ்குமார், கமல் மற்றும் இதர நண்பர்கள் இணைந்து “பயம்” என்னும் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.


இந்தக் குறும்படம் முதலில் உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்கிறேன். இந்தப்படம் பற்றிய என் விரிவான கருத்து / விமர்சனத்தை இங்கே பின்னர் பதிவு செய்கிறேன்.

நன்றி: Friends Media Makers

Sep 21, 2012

கதம்பம் - 2



கடவுளுக்குக் காதைக் கொடு

சில வருஷங்கள் முன் ஒரு யோகா மையத்தில் சூன்ய தியானம் கற்றுக் கொள்ளப் போயிருந்தேன். நூற்று சொச்ச மாணவர்கள் தியானம் கற்க வந்திருந்தனர். தியானப் பயிற்றுவிப்பு முடிந்து, தீட்சை தந்தபின் தியானம் எதற்கு என்பது பற்றி குருநாதர் பேசத் துவங்கினார்.

கேள்வியை எங்களிடமே கேட்டு தியானத்தின் அவசியத்தி விளக்க முயன்றார் அவர். ”தியானம் எதற்காக செய்ய வேண்டும்?”, இது முதல் கேள்வி.

விதவித பதில்கள் வந்து குதித்தன. நோய் எதிர்ப்பு சக்தி, தீராத நோய்களில் இருந்து விடுதலை, மனநிம்மதி, மனக்குவிப்புத் திறன், செயல்திறன் அதிகரிப்பு என்று ஆளுக்கு ஒரு காரணம் அடுக்கினார்கள்.

”எல்லாம் சரியான பதில்களே. சரி, என் அடுத்த கேள்வி இது, கோயிலுக்குப் போனால் சாமியிடம் என்ன கேட்பீர்கள்?”

இந்தக் கேள்விக்கு இன்னும் நான்கு மடங்கு பதில்கள். ஆரோக்யம், மனநிம்மதி, படிப்பு, வேலை, பெண்ணுக்குக் கல்யாணம், பணம், குறைந்த வட்டியில் கடன், இத்யாதி, இத்யாதி.

“ஆக, கடவுளைப் பார்க்கப் போனால் அவரை விடுவதாயில்லை. இத்தைக் கொடு, அத்தைக் கொடு என்று ஒரே பிடுங்கல்தான். அப்படித்தானே?”

“................”

“கடவுளை என்றாவது உங்களிடம் பேச அனுமதித்திருக்கிறீர்களா?”, கேட்டாரே ஒரு கேள்வி?

“.................”

”அதற்காகத்தான் இந்த பதினைந்து நிமிட தியான நேரம் உங்களுக்கு. அந்த பதினைந்து நிமிடங்களாவது உங்கள் வாயை சாத்துங்கள். கடவுளை உங்களிடம் பேச அனுமதியுங்கள்”

நீலத்திமிங்கிலம்

Blue Whale எனப்படும் நீலத் திமிங்கிலத்தின் நாக்கின் எடை மட்டுமே ஒரு சராசரி யானையின் எடையைக் காட்டிலும் அதிகமாம்.


யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


ததாஸ்து

குமரகுருவுடன் இந்த வாரமும் ராமாயண, மகாபாரத விவாதம் தொடர்ந்தது. ராமரைப் பற்றி ஏதோ கேட்கப் போக வழக்கம்போல நீண்டநெடிய வியாக்கியானம் தந்துவிட்டு குமரகுரு சடாரென்று மகாபாரதத்திற்குத் தாவினார்.

மகாபாரதப் போர் நேரம். குந்திதேவி கிருஷ்ணனைச் சந்திக்கிறாள். அவனிடம் கேட்கிறாள், “என் ஐந்து பிள்ளைகளையும் இந்தக் கொடும் சகோதரச் சண்டையில் இருந்து உயிருடன் காப்பாற்றிக் கொடுத்துவிடு கண்ணா”

“ததாஸ்து”, என்று விடுகிறான் கிருஷ்ணன். தட்ஸ் இட்!

கேள்வி கேட்ட தருணத்தில் தன் மூத்த மகனை, கர்ணனை மனதில் நினைக்கவில்லை குந்தி. ”என் பிள்ளைகளை” என்று கேட்டிருக்க வேண்டியதை குறிப்பாக என் ஐந்து பிள்ளைகளை என்று அவள் குறிப்பிட்டது தவறாய்ப் போனது. ஐந்து மகன்கள் மீண்டார்கள், கர்ணன் மாண்டான்.

“அதனால்தான் கடவுளிடம் எதுவும் கேட்கக் கூடாது என்பார்கள். உனக்கு என்ன வேண்டும் என்பது உன்னைவிட அவனுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீயாகக் கேட்கத் தெரியாமல் கேட்டுவிட்டு பின்னர் அவனைக் குறை சொல்லாதே”  என்கிறார் குமரகுரு. 

சரியான பாய்ண்ட்தான், ரைட்?


இன்னொரு முட்டாள்


ராஜபக்‌ஷே ராட்சஷன் டெல்லி வந்திருக்கிறான். அதை எதிர்த்து இந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த இன்னொரு முட்டாள் தீக்குளித்து இறந்திருக்கிறான். 

இவர்களுக்கு நினைவேந்தல்களும், வீரவணக்கங்களும், துக்க விசாரிப்புகளும், தர்ணாக்கள், மாவீரன் பட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கின்றன. இவை இன்னமும் நடக்கும். நடந்து கொண்டே இருக்கும்.

"ஏண்டா டேய்! உனக்கு அவன் மேல கோபமுன்னா நீ ஏண்டா சாவற? அது எப்படிடா வீரம் ஆகும்? அதுக்கு எந்த _______க்குடா வீர வணக்கம்”ன்னு ஒருவனும் கேட்பதில்லை.

இந்தத் தற்கொலைகளை மறைமுகமாகக் கொண்டாடுபவர்களைக் கழுவிலேற்றினாலே ஒழிய இந்த நாடகங்கள் முடியும் என்று தோன்றவில்லை.
.
.

Sep 20, 2012

வெல்கம் ஆஃப்கன்



நேற்று நடந்த 2012 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறது.

காட்சி 1: சர்வதேச கிரிக்கெட்டின்  ஜூனியர் அணியான ஆஃப்கனுக்கு எதிரே இந்திய அணி அடிப்பின்னிப் பெடலெடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. 
டயலாக் 1: ”அட! இதென்னய்யா பிரமாதம், பூச்சி டீமைத்தானே ஜெயிச்சீங்க”
காட்சி 2: சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஜூனியர் அணி என்றாலும் களத்தில் கலக்கோ கலக்கு எனக் கலக்கினார்கள் ஆஃப்கன் அணியினர். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய அணியினர் கண்களில் விரல் விட்டு ஆட்டினார்கள். எனினும் எப்படியோ சமாளித்து இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்தது.
டயலாக் 2: “ஒரு சின்ன பூச்சி டீம் கிட்ட கூட கம்ஃபர்டபிளா ஜெயிக்காதீங்கய்யா! என்னத்த சாம்பியன் டீமோ நீங்க?

முதல் காட்சி நேற்று அரங்கேறாததால் இரண்டாம் டயலாகைப் பேசும் துர்பாக்கிய நிலைக்கு இந்திய விமர்சக ரசிகர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஜெய் ஜக்கம்மா!
.
.
.

Sep 19, 2012

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை




விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை..

ஒரு ஊரிலே ஒருத்தன் இருந்தானாம். அவன் மாமியார் வூட்டுக்கு விருந்துக்கு போனானாம். அங்கே அவன் மாமியார் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாளாம். அதிலே கொழுக்கட்டை இருந்திச்சாம். நம்மாளு லைஃப்லே அது வரைக்கும் கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்லையாம். ‘ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்’ அப்படீன்னு சொல்லிட்டு கொழுக்கட்டையை ரவுண்டு கட்டினானாம்.

“மாமி.. இது பேரு என்ன சொன்னீங்க?”

”கொழுக்கட்டை”

“ஓ சரி.. முதல் காரியமா வூட்டுக்கு போயி பொண்டாட்டிக்கிட்டே சொல்லி கொழுக்கட்டை செய்யச் சொல்லணும்” அப்படீன்னு சொல்லிட்டு அது பேரு மறந்திடக் கூடாதுன்னு, “கொழுக்கட்டை.. கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிக்கிட்டே ஊருக்கு போயிட்டிருந்தானாம்.

போற வழியிலே ஒரு பெரிய கால்வாய். கர்நாடகாக்காரன் அணை உடைஞ்சு போயி நாசமாயிடுமோன்னு பயந்து போய் திறந்து விட்டுருந்த தண்ணி பின்னிப் பெடலெடுத்து ஓடிட்டிருந்துச்சாம். நம்மாளுக்கு முன்னாடி போனவன் கொஞ்சம் பின்வாங்கி, வேகமா ஓடி வந்து “அ...த்...தி...ரி...பா...ட்...சா” அப்படீன்னு சொல்லி தொபுக்கடீர்ன்னு அந்தப் பக்கம் குதிச்சு நடந்து போனானாம்.

“ஓஹோ.. இப்படி ஒரு வழி இருக்கோ?”ன்னு யோசிச்ச நம்மாளு.. “கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிட்டிருந்ததை விட்டுட்டு... “அ...த்...தி...ரி..பா..ட்..சா”அப்படீன்னு சொல்லிக்கிட்டே தாவினானாம். அந்தப் பக்கம் போய் குதிச்ச அப்புறம் ‘கொழுக்கட்டை’ன்றது மறந்திடுச்சாம். “அத்திரிபாட்சா.. அத்திரிபாட்சா..” அப்படீன்னு சொல்லிக்கிட்டே வீட்டுக்கு போனான்.

பொண்டாட்டியைக் கூப்பிட்டு, “ஏய்.. உங்கம்மா அத்திரிபாட்சா செஞ்சு கொடுத்தாங்க. ரொம்ப சூப்பர். அதே மாதிரி நீயும் அத்திரிபாட்சா செஞ்சு கொடு” அப்படீன்னானாம்.

“என்னாது... அத்திரிபாட்சாவா.. என்ன கண்ராவிய்யா அது?” அப்படீன்னு பொண்டாட்டி கேட்டாளாம்.

“அடிப்போடி..அத்திரிபாட்சா செய்யத் தெரியாமா நீயெல்லாம் எதுக்குடி ஒரு பொண்டாட்டி?”ன்னு கேட்டுட்டு கண்,மண் தெரியாம பொண்டாட்டியை பின்னிப் பெடலெடுத்துட்டானாம் (அட... கதை தானே.. அப்படியே இருந்திருக்கும்ன்னு நம்புங்க சார்!)

பொண்டாட்டிக்காரிக்கு அங்கங்கே காயம் பட்டு வீங்கியிருந்திச்சாம்.

பொண்டாட்டியோட அம்மா தன்னோட பொண்ணைப் பார்க்க வந்தவங்க இதைப் பாத்துட்டு, “அடப்பாவி.. என்னோட பொண்ணை இப்படி போட்டு அடிச்சிருக்கியே.. உடம்பு முழுக்க கொழுக்கட்டையாட்டம் வீங்கியிருக்கேய்யா”ன்னு மாப்பிள்ளைக்கிட்டே கேட்டாராம்.

“ஆங்...அதே தான்.. அதே தான்.. கொழுக்கட்டை.. கொழுக்கட்டை.. அதைத்தான் கேட்டேன்” அப்படீன்னானாம்.

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை இது தான்.. போய் புள்ளக்குட்டிங்ககிட்ட இந்தக் கதையை சொல்லுங்கப்பா!

நன்றி: கதைசொல்லி ரமேசுகுமார், பேசுபுக்கு

Sep 18, 2012

ஒண்ணரை டன் இட்லி


சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திற்கு நேற்று ஆம்னிபஸ்’சில் ஒரு அறிமுகம் எழுதி ட்ராஃப்டில் சேர்த்துவிட்டு குடும்பத்துடன் சென்னை சேத்பட் வரை ஒரு வேலையாய்ப் போயிருந்தேன். திரும்புகையில் பல்லாவரம் ரயில் பிடிக்க எக்மோர் வந்தோம். மாலை ஆறரை மணி. அகில் மதியம் ஏதும் சாப்பிடவில்லை. காலை பத்தரை மணிக்குத் தின்ற பருப்பு சாதம்தான். இடையில் இரண்டொரு பிஸ்கோத்துகள், டீக்கடையில் வாங்கிய ப்ளெயின் கேக்குகள் இரண்டுதான் உள்ளே இறங்கியிருந்தன.

ராமகிருஷ்ணா மிஷனின் ஊதுபத்தி மணம்கமழும் பக்திப் பொருள்கள் விற்பனை மையம் கடந்து ரயில்நிலையம் உள்ளே நுழைந்தோம்.  அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறி அனந்தபுரியில் இடம் பிடிக்க மகாஜனங்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தன. வலது பக்கம் திரும்பிப் படியேறினால் உள்ளூர் ரயிலுக்கான நடைமேடைக்குப் போய்விடலாம்.

“கொழந்தைக்கு எதான சாப்பிடக் கிடைக்குதா பாருங்க. இப்படியே வாங்கி ஊட்டிவிட்டுட்டுப் போயிடலாம்”, மனைவியார் நினைவூட்டினார்.

உள்ளூர் ரயில் பிடிக்க வேண்டும் என்பதால் ஆட்டோக்காரரை அந்தண்டை அந்தமுனையில் இறக்கிவிடப்பா என்றது தப்பாய்ப் போனது. மறுமுனையில் இருக்கும் அடையார் ஆனந்தபவன் போக ஒண்ணரை கிலோமீட்டர் நடைமேடையில் வடம் பிடிக்கவேணும்.

நாலு அடி நடந்ததும் எக்மோர் ஸ்டேஷன் கனவான்கள் சிலர் பொட்டலம் பொட்டலமாகக் கடை விரித்திருந்தார்கள். பொட்டலத்தின் மேல் பண்டத்தின் பெயர், தயாரித்த தேதி ஆகியவை நீல நிற சாப்பா குத்தியிருந்தன. 

“பொங்கல் இருக்கா சார்?”

“பூரி இருக்கு சார்”

“பொங்கல்?”

“சப்பாத்தி இருக்கே”

“பொங்கல் இல்லையா?”

“சாயங்காலம் யார் சார் பொங்கல் சாப்புடுவா?”

இல்லை என்ற அபசகுண வார்த்தையைச் சொல்ல மாட்டாராமாம். “ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்”, என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டுப் புராணத்தில் சமஸ் குறிப்பிட்ட “ரயில் பயணமும், ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும்” அத்தியாயம் அங்கே நினைவுக்கு வந்தது. ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற இட்லிப் பொட்டலம் பற்றின பதிவு அது. அத்தனை மிருதுவாய் இல்லாவிட்டாலும் அகில் வயிற்றில் இறங்குவதாய் இட்லி இருந்தால் போதும்.

, “இட்லி இருக்குமா?”

”இருக்கு சார்”

“ரெண்டு குடுங்க”

“நாப்பது ரூவா”

“என்னது? ரெண்டு இட்லி நாப்பது ரூபாவா?”

“ரெண்டு பாக்கெட்டுங்க. ஒரு பாக்கெட்ல நாலு இருக்கும்”

“ரெண்டு வராதா?”

“வராது”

“சரி, ஒரு பாக்கெட் குடுங்க”

வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த காத்திருப்பு அறைக்குள் நுழைந்தோம். பிரித்துப் பிய்த்தால் ரப்பர் போல் இருக்கிறது இட்லி. தட்டையாய் பிய்க்கவியலாமல் கெட்டியாய் நான்கையும் சேர்த்து வளைத்துப் பிடித்தால் “ரிங் பால்” செய்துவிடலாம் போல கனமான ரப்பர்.

இதை மட்டும் அகில் வாய்க்குக் கொண்டு சென்றால் தெனாலிராமனின் பூனையாய் ஆயுளுக்கும் இட்லியைத் தொடமாட்டான் அவன்.

மேலே படத்தில் பொங்கும் சூர்யா கணக்காய் ”ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா”, என்று விற்றவன் முகத்திலேயே அந்த இட்லிகளை எறியச் சென்றவனிடம்,  “பேக் பண்ணி வருது. நாங்க வாங்கி விக்கறோம். இதுல உங்களுக்கு கம்ப்ளெயிண்ட்டுன்னா புகார் மனு இருக்கு, எழுதித் தந்துட்டுப் போங்க. நாங்க ஆபீஸருக்கு அனுப்பிருவோம். அவங்க நடவடிக்கை எடுப்பாங்க”, என்றது எந்திரம்.

அந்த புகார் மனு எங்கே போகும் என்று தெரியாதா நமக்கு? இந்த மனசாட்சி இல்லாத ராட்சஷனுங்க பவுசு காலங்காலமாத் தெரிஞ்சும் இவனுங்க கிட்ட வாங்கினது நம்ம தப்பு என நொந்துகொண்டு திரும்பினேன்.

ஆமாம், இப்படியெல்லாம் வயிற்றில் அடிப்பவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை? 


Sep 14, 2012

கதம்பம்


2010’ல் வெள்ளிதோறும் “வெள்ளிக் கதம்பம்” என்று பிச்சிப் பிச்சி ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்.

அண்ணன்மார்கள் ஜாக்கி எழுதிய நான்வெஜ்-சாண்ட்விஜ் மற்றும் உனாதானா’வின் இட்லிவடைபொங்கல் இரண்டு தொடர்களும் இன்ஸ்பிரேஷன் அந்த கட்டத்தில். பிறகு அது பாதியில் எல்லாம்வல்ல சோம்பேறித்தனத்தில் நின்றுபோனது.

இப்போது சமுத்ரா எழுதும் கலைடாஸ்கோப் வாசிக்கையில் நாமும் அவ்வளவு உருப்படியாக ஏதும் எழுதாவிட்டாலும் எதையேனும் வாராவாரம் வழக்கப் பழக்கமாகக் கொண்டு கிறுக்கலாம் எனத் தோன்றுகிறது.

இப்படி யோசித்ததன் பலன்? இதோ வெள்ளிக் கதம்பம் வாஸ்துப்படி தலைப்பைத் திருத்திக்கொண்டு “கதம்பம்” என்ற பெயரில் உங்கள் முன்னே.

வாரம் ஐநூறு வார்த்தைகள் லட்சியம். முன்னூறு நிச்சயம்.

ஆ..! அறிமுகத்திலேயே அறுபத்தியாறு ஆச்சுது.

குப்பையைக் குப்பைத் தொட்டியில்...

பம்மல் சங்கர் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக சென்ட்ரல் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. பம்மல், பல்லாவரம் என பணமெடுக்க ஓடத் தேவையில்லாமல் நமக்குப் பக்கமாக இந்த ஏடிஎம் இருப்பது பெரிய துணை.

ஒரே குறை. அந்த ஏடிஎம் என்றும் சுத்தமாக இருந்ததில்லை. செக்யூரிட்டி துணையற்ற அந்த ஏடிஎம் முழுக்க மக்கள் பணமெடுத்த பின் தூக்கியெறிந்து செல்லும் பணப்பட்டுவாடா ஸ்லிப்புகள் கீழே கிடக்கும். இத்தனைக்கும் அலங்கார வங்கிமுத்திரை பதித்த ஒரு உயரமான பட்டுத்தெறிக்கும் சிவப்பு நிற “குப்பைத் தொட்டி’யும் அங்கே உண்டு.

நம் மக்கள் பாரம்பரிய குணத்தை அந்த சிவப்பு ஈர்க்கவில்லை.

இன்று உள்ளே நுழைந்தால் தரை சுத்தமாகக் குப்பை அனைத்தும் குப்பைக் கூடையில் இருந்தது. புதிதாக யாரேனும் செக்யூரிட்டி வேலைக்கு இருக்கிறார்களா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. 

அப்போது இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்?

இரண்டு சின்னச் சின்ன சுவரொட்டிகள்.

“குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு நன்றி” / "Thanks for using the Dustbin"

நம் மக்களுக்கு எப்படியெல்லாம் இன்ஜெக்‌ஷன் போடவேண்டியிருக்கிறது?

#TamilProverbsInSimpleEnglish


நேற்று இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் பரபரவென்று ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவற்றில் சில இங்கே. உங்களால் அவற்றின் ஒரிஜினல் வெர்ஷனைக் கண்டறிய முடிகிறதா பாருங்கள்: ஈஸிதான்.

Once flood goes above your head, what is inch, what is foot; anyway you are dead.

City breaks in two, Stand Up Comedian celebrates!

stone husband grass husband

Don't know depth?, then don't insert leg!!

For crow its tool golden tool.

When head is there, tail should not give proxy

Good cow one heat. Good man one word. 

ராமா! நீங்க நல்லவரா கெட்டவரா?

எங்கள் டீமில் (அலுவலகத்தில்) ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி இருக்கிறார். நைஷ்டிக பிரம்மச்சாரி என்றால் என்ன என்பதை வேறொரு கதம்பத்தில் பார்ப்போம். இங்கே அது நமக்குத் தேவையில்லை. அவருக்கு குமரகுரு என்று பெயர் சூட்டிக் கொண்டால் அவரைப் பற்றி அடிக்கடிப் பேச வகையாயிருக்கும். எங்கே போனாலும் எனக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி அளவளாவ ஒருத்தர் கிடைத்திடுவார். இங்கே இந்த டீமில் இவர் வாய்த்திருக்கிறார்.


எல்லோரும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு அரதப்பழைய கேள்வியை மற்றொரு நண்பரான...ம்ம்ம்ம்... இவர் பெயரை பிரசன்னா  எனக் கொள்வோமே.... அந்தப் பிரசன்னா கேட்டார்.

”ராமர் ரெண்டு தப்பு செஞ்சாருங்க அது சரிதானா?”

”என்ன தப்பு?” இது குமரகுரு.

“ஒண்ணு வாலியை எப்படி அவரு மறைஞ்சிருந்து தாக்கலாம்? ரெண்டு, பொண்டாட்டியை கடைசில காட்டுல கொண்டு விட்டுட்டாரே சந்தேகப்பட்டு”

இதற்கு நம் குமரகுரு தந்த வியாக்கியானத்தைத் தனி புத்தகமாக முடியாவிட்டாலும் ஒரு அத்தியாயம் கொண்டுதான் எழுத வேண்டும். நேரமிருந்தால் பின்னர் எழுதுகிறேன்.

இடையே ஒரு சூப்பர் கேள்வி நம்ம பிரசன்னா கேட்டார் பாருங்கள். ”எல்லாத்தையும் பண்ணிட்டு ராமன் மனுஷன்’னு சொல்லிட்டா அவரை எதுக்கு கடவுளாக் கும்புடறீங்க” குட் கொஸ்சின் ரைட்? எனி ஆன்ஸர்ஸ்?

மே பி, சொக்கன் ஏதோ கம்பன் பாட்காஸ்ட் ஓட்டிக் கொண்டிருக்கிறார், கேட்டால் புரியுமோ என்னவோ.

ஆல்டோ / ஐஃபோன் / அம்பது இன்ச் டிவி

என்னவோ போங்க. இந்தத் தலைப்புல எதாவது ஒண்ணு பத்தி “வாங்கிட்டேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்” அப்டின்னு ஒரு அப்டேட் தந்துடணும்னு பாக்கறேன், stone see dog not see, dog see stone not see.

அகில் அப்டேட்ஸ்

அகிலுக்கு ரெண்டு வயசும் அஞ்சு மாசமும் ஆகுது. இன்னைக்கு குச்சி மிட்டாய் எனப்படும் லாலிபாப் சாப்டுட்டு இருந்தான். விளையாட்டா அவன் கைலருந்து அதைப் பிடுங்கி "உஷ் காக்கா"ன்னு சொல்லிட்டு இன்னொரு கையில பின்பக்கமா அதை மறைச்சி வெச்சுக்கிட்டேன். அழுகை முட்டிக்கிட்டு வந்துடுச்சு அவனுக்கு. பாக்க பாவமா இருக்க, உடனே "உஷ், காக்கா திருப்பி தந்துடுச்சு"ன்னு சொல்லி அதை அவனுக்கே தந்துட்டேன்.
ரெண்டே நிமிஷம், அந்த மிட்டாயை கடக் முடக்'குன்னு அவசர அவசரமா கடிச்சித் தின்னுட்டு, வெறும் வெள்ளைப் பிளாஸ்டிக் குச்சியை என் கையில குடுத்து,

"ம்ம்ம் காக்கா உஷ்.... ம்ம்ம் காக்காஉஷ்", அப்டின்றான்
அர்த்தம்: இப்போ இந்த குச்சியை காக்காவுக்குக் குட்த்துடலாம். 
பயபுள்ளைங்க  தக்குனூன்டு இருக் சொல்லவே என்னா வில்லத்தனம் செய்யுதுங்க.
.
.
.

Sep 9, 2012

பேசும் படங்கள்

http://www.uniquescoop.com என்றொரு தளம். தினம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரே உணர்வு / அர்த்தத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களை இந்தத் தளத்தில் பகிர்கிறார்கள். 

சில தினங்கள் அசாதாரணத் தொகுப்புகளைக் காணலாம். சில தினங்களில் அப்படி ஒன்றும் சொல்வதற்கில்லை.

நேற்று இந்தத் தளத்தில் வெளியான புகைப்படங்களுக்கான தலைப்பு “Old Couples In Love Are So Cute" (இதை எப்படித் தமிழ்ப்படுத்த?). வயதான ஜோடிகள் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் படங்களின் தொகுப்பு. அவற்றில் சில படங்கள் கவிதை பேசின.

என்னைக் கவர்ந்த மூன்று படங்களை இங்கே பகிர்கிறேன்...





இதற்கு மேலும் நான் சொல்ல ஏதேனும் இருக்கிறதா என்ன?

Sep 8, 2012

மூன்றாம்பிறை



கையால் எழுதித் தள்ளும் ஒரு எழுத்தாளனின் போக்கில் சீரற்று, ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கும் எழுத்துகள், வாக்கியங்கள். ஒரு சாதாரண வலைப்பதிவனுக்கும் வாய்க்கும் அந்த நேர்த்தி செய்யும் வேலை பற்றிய அக்கறையற்ற “ஜஸ்டிஃபை” செய்யப்படாத ட்ராஃப்டிங். இப்படியெல்லாம் யாரேனும் ப்ளாக் எழுதினால் எனக்கு எரிச்சலாக வரும்.

ஆனால், இங்கே மேற்கோள் காட்ட அங்கிருந்து காப்பி பேஸ்ட் அடித்தபோதுதான் அந்த ஒழுங்கின்மையை கவனித்தேன். ஒரு தேர்ந்த கலைஞனுக்கு ”சீர்” என்பது வெளிப்பூச்சில் இல்லை, ஆனால் அவன் படைப்பில் உள்ளது என்பதுதான் நான் கண்மூடிக் கடந்ததன் காரணம் போலும்.

எழுத்தில் பதிவு செய்யப் படவேண்டிய எனது வாழ்க்கையின் அத்தியாயங்களை- குறிப்பாக சினிமாவுக்கும் எனக்குமான உறவை
- இலக்கியத்திற்கும் எனக்குமான உறவை நான் சொல்லியாகவேண்டும்.... 
அவ்வப்போது அவைபற்றி எழுதலாமென்றிருக்கிறேன்...



இப்படி ஒழுங்கற்ற சீர் செய்யா பத்திகள். யார் அவர்?

தமிழ்த் திரையுலகை உலுக்கிய ஒரு கலைஞன்.  ஒரு இயக்குனராக, ஒரு ஒளிப்பதிவாளராக அவர் தன் அடுத்த தலைமுறைக்குத் தொட்டுக் காட்டிய உயரங்கள் எல்லாம் அசாதரணமானவை. மறுபடியும், மூன்றாம்பிறை, சதிலீலாவதி என்று மனதை ஆக்ரமிக்கும் இவர் படங்களை நம்மில் யார் மறப்போம்?

யெஸ், நம்ம பாலுமகேந்திரா சார் வலைப்பதிவு மூலமாக நம்முடன் பேச வந்திருக்கிறார்.

மூன்றாம்பிறை இயக்குனரின் புதிய வலைமனை முகவரி.

வெல்கம் சார்! உங்கள் அருகில் இருந்து கலை கற்கும் பாக்கியம் வாய்க்காத எம் போன்றோருக்கு இந்த இணையம் நிஜமாகவே ஒரு பெரும் வரப்பிரசாதம்தான்.

முகமூடி, குங்ஃபூ & டாஸ்மாக்




அலுவலக நண்பர் அருண் பிரசாத்திடம் பேசிக் கொண்டிருந்தேன். முகமூடி திரைப்படம் பார்த்ததாகவும், படம் மிகவும் அருமை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தைப் பற்றி கொஞ்சமேனும் நல்ல கருத்தைச் சொன்னவர் எவருமில்லா உலகில் இப்படி ஒரு தகவல் சொன்ன இந்த மனிதரைப் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தேன். 

சாரு நிவேதிதா தன்..முகமூடி(2) பதிவில் எழுதியிருந்ததை அவரிடம் குறிப்பிட்டேன்.  சாரு தன் பதிவில் இப்படிச் சொல்கிறார்.
படத்தின் ஹீரோ  குங்ஃபூவில் பயிற்சி எடுப்பவன்.  குங்ஃபூ தெரிந்தவர்கள் டாஸ்மாக்கில் போய் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று மிஷ்கினுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை.  உயிரே போனாலும் குங்ஃபூ விற்பன்னர்கள் தண்ணி அடிக்க மாட்டார்கள்.  குங்ஃபூ என்பது யோகத்தைப் போன்றது.  ஒரு யோகாச்சாரியார் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டிருப்பாரா?  
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். நீங்க ஜாக்கிசான் படமெல்லாம் பாத்ததில்லையா?ஏதோ ஒரு “ரிவென்ஜ்”ன்னு ஒரு படம் வருமே அதுல கூட ஜாக்கிசானோட குங்ஃபூ மாஸ்டரே..குடிச்சிட்டு..குடிச்சிட்டு..குங்ஃபூ..கத்துக் குடுக்கறாப்போல  ஒரு சீன் உண்டு", என்றார்.


அருண் சினிமா மோகம் மிகக் கொண்டவர். கலைஞர் டிவியின் நாளைய இயக்குனருக்காக நாலு குறும்படங்களை இயக்கியவர். எனினும், அவர் நம்ம சாருவுக்கு ஈடாகுவாறா? இல்லை நாம்தான் நம்மவரை விட்டுத் தந்திடலாகுமா?

"யோவ்! சினிமாவுல ஆயிரம் சொல்லுவான்யா. அதெல்லாம் நிஜமாகுமா? சாரு தமிழின் முதுபெரும் எழுத்தாளர், அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்", என்றேன் நான்.

சினிமாக்காரர் விட்டுத்தருவாரா? இதோ ட்யூட்டி முடிந்து இன்று காலை வீடு சேர்ந்ததும், ”இதைப் படித்துவிட்டுச் சொல்லவும்”, என்று ஒரு இணையக் கட்டுரைக்கான லின்க்கை எனக்கு மெயிலில் அனுப்பியிருக்கிறார்.

Meat, Wine, and Fighting Monks என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படித்தால் ஒன்று தெரிகிறது. நிஜத்தில் மார்ஷியல் ஆர்ட் குருக்கள் எப்படியோ, ஆனால் கற்பனைப் பாத்திரங்கள் (கதை, நாவல், நாடகம்) காலாகாலமாய் ஒயின் விரும்பிகளாக இருக்கிறார்கள்.

முகமூடி திரைப்படம் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் பற்றியதுதானே? அந்த டாஸ்மாக் குங்ஃபூ வீரன் ஒரு கற்பனைப் படைப்புதானே? 

படம் பார்த்தவர் யாரேனும் கூறுங்களேன்....

Sep 7, 2012

ஆம்னிபஸ் 50

ஆம்னிபஸ் தளம் துவங்குமுன் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்
365 நாள்கள் ப்ராஜக்டாக அல்லாமல் 365 புத்தகங்கள் பற்றிப் பேசும் தளமாக இந்தத் தளம் அமையும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் குறித்த பதிவுகள் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும்.

சொன்னதற்கு மாறாக...... நெகட்டிவ் ஸைடில் அல்ல... ஆனால் பாஸிட்டின்வ் ஸைடில்.... ஆம்னிபஸ் தளம் தொடங்கிய 37’வது நாளான நேற்று (செப் 6) தன் ஐம்பதாவது பதிவை வலையேற்றினோம். ஏதோ இரண்டு பேர் கஷ்டப்பட்டு ஓட்டவேண்டிய பஸ் என்று நினைத்திருந்தது இப்போது தொடர்ந்து எழுத எட்டு பேருடனும் வாரம் ஒன்று அல்லது இரண்டு சிறப்புப் பதிவர்களின் பதிவுடனும் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆம்னிபஸ்.
.
பைராகி, சத்யா, நட்பாஸ், சுநீல் கிருஷ்ணன், பாலாஜி, அர்ஜூன், நடராஜன் என்று இங்கே தொடர்ந்து எழுதும் அனைவரின் வாசிப்பு இச்சையும், வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் கொண்ட தொடர் ஆர்வமும் பெரும் பாராட்டிற்கு உரியது. அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.

அரசு, நவீன், ரவி, ’ஜில்’ ராஜன் ஆகியோர் தங்கள் சிறப்புப் பதிவுகளை ஆர்வமுடன் ஆம்னிபஸ்சுக்கு அளித்தமை பெருமகிழ்ச்சிக்கு உரிய விஷயம். நன்றி நண்பர்களே.

இதோ இன்றைக்கு 10000’ஆவது ஹிட்டையும் தொடப்போகின்றது ஆம்னிபஸ்.

இந்த ஐம்பது, பத்தாயிரம் என்பதெல்லாம் இன்னும் சில மாதங்களில் மிகச் சிறிய இலக்க எண்களாக மாறப்போவது உறுதி என்றே தோன்றுகிறது.

தொடர்ந்து வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றிகள்.


ர்ரை..... ர்ர்ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்...............!
.
.
.

Sep 6, 2012

ஒரு சின்ன பரிசு


இந்தத் தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் கோடானுகோடி அன்புச் செல்வங்களுக்கு ஏதோ என்னாலான சிறுபரிசு இதோ - http://goo.gl/9Poy2

இந்த திடீர்ப் பரிசுக்கான காரணம்? அதை நிதானமாய்ப் பிறகு சொல்கிறேனே....


Sep 5, 2012

நீதானே என் பொன் வசந்தம்

பகுஜன் சமாஜ் எம்.பி ஒருத்தரும் சமாஜ்வாதி எம்.பி ஒருத்தரும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பார்லிமெண்டில் கட்டிப்புரளும் தனமாய் சண்டைபோடும் இதே பொன்வேளையில் அதற்கு சற்றும் சளைத்தது அல்ல எனும் தனமாய் ”டமில்”.......... ம்ம்ம்ம்ம்க்க்க்கும்....  மன்னிக்கவும் ”தமிழ்” இணையத்தில் ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கும் ராஜாவின் அ’ரசிகர்களுக்கும் இடையே குடுமிப்பிடி நடந்து கொண்டிருக்கிறது. 


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஜீவா - சமந்தா நடித்த “நீதானே என் பொன்வசந்தம்” (சுருக்கமாக நீஎபொவ) படத்திற்கு இளையராஜா இசை. இது அரதப் பழைய சேதி.

இதோ இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த க்ஷணத்தில் இரண்டாவது முறையாக நீஎபொவ பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கேட்கக் கேட்க பாடல்கள் பற்றி என் மனதில் ஓடுவதை எழுதுகிறேன். இது என் இந்த க்ஷண சிந்தையோட்டம். அது காலம் மாற தானும் மாறலாம்.  ரசிக / அரசிகர் எவராயினும்.... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் என்னைச் சேரட்டும். யாரும் என் குடும்பத்தை சந்திக்கு இழுக்க வேண்டாம்.

சாய்ந்து சாய்ந்து

யுவன் பாடினார் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ள முடியாத பாடல். நல்ல மயக்கும் ட்யூன். அந்த ஆரம்ப கிடார் இசையும், இடையில் BGM'ல் வரும் பியானோவின் இனிமையும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன. யுவனுக்கு இழுத்த இழுப்பிற்குக் குரல் வரவில்லை என்பதறிந்தும் இத்தனை நல்ல ட்யூனை அவருக்கு இந்தப் பாடலை ராஜா தந்தது “காலத்தின் கட்டாயம்”, வேறென்ன சொல்ல.

நரேஷ் ஐயர் இந்தப் பாடலுக்கு apt’ஆக இருந்திருப்பாரோ?

காற்றைக் கொஞ்சம்

எப்படிப்பட்ட ட்யூனாக இருந்தாலும் அந்தப் பாடலைத் தூக்கி நிறுத்தும் திறன் எஸ்பிபி’க்கு அடுத்து ஒருத்தருக்கு உண்டு என்றால், என்னைப் பொருத்தமட்டில் அது “கார்த்திக்” தான். இப்படிப்பட்ட நல்ல ட்யூன் கிடைத்து விட்டால் சொல்லவும் வேண்டுமோ?

ஒரு துள்ளலான நல்ல மெலடி. யோசனை ஏதுமின்றி நம் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்கிறது பாடல். பெரிய குறை இல்லை என்றாலும் ரொம்பவே மெனக்கெடாத சாதாரண பாடல்வரிகள். (உம்: நேற்று இரவு கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே :) )

முதன்முறை பார்த்த ஞாபகம்

இந்த ஆல்பத்தில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ட்யூனில் ராஜா கலக்கியிருக்கிறார் என்றால், ”மேரீ ஆவாஸ் சுனோ” புகழ் சுனிதி சௌஹான் பாடின விதத்தில் கிறக்குகிறார் நம்மை. தமிழ் தெரியாத ஒரு பெண்ணை ழ,ள,ல,ண,ன’களை அட்சரம் பிசகாமல் உச்சரிக்க வைக்க ராஜாவைத் தவிர வேறு எவனால் முடியும்.

ரொம்ப சிரமமான “ஹைநோட்” ட்யூன் எனக் கேட்கையில் புரிகிறது. அநாயசமாகப் பாடியிருக்கிறார் சுனிதி. 

வானம் மெல்லக் கீழிறங்கி

சிம்ஃபனி’த்தனமாய்த் உள்ளே அழைக்கிறது ப்ரீலூட். ஆல்பத்தின் பெஸ்ட் மெலடி இதுதான். முதல் BGM ராஜாங்கம். கண்கள் மூடிக் கேட்டால் கிறக்கும் நோட். உருகிப்போகலாம்.

ஆகச்சிறந்த மெலடி ஆயினும் என் லிஸ்டில் மேலிடம் இந்தப் பாடலுக்குக் கொடுக்காத காரணம் இந்தப் பாடலையும் தேர்ந்த ஒரு பாடகரிடம் தந்திருக்கலாம் ராஜா என்பதுவே. அவருக்கு சில ரேஞ்ச்களைத் தொட முடியாதது தெளிவாய்த் தெரிகிறது. கார்த்திக் சரியாக இருந்திருப்பார்.

புடிக்கல மாமு

படத்தின் ஐட்டம் நம்பராக இது இருக்கக்கூடும். துள்ளலாக நன்றாகவே இருக்கிறது. இளைஞர்களின் டெம்பரரி தேசியகீதம் ஆகவேண்டிய பாடல் என மனதில் கொண்டு போடப்பட்ட பாடலாக இருக்கலாம். ஆனால் அந்த அளவு ரீச் இருக்குமா எனச் சொல்லமுடியவில்லை. எனினும், விஷுவலில் கெத்து காட்டினால் பாடல் சூப்பர் ஹிட் ஆகக்கூடும். 

என்னோடு வா வா

டிபிக்கல் ராஜா ட்யூன். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஹெட்செட்டைக் காதில் மாட்டிக் கொண்டு நீங்கள் கேட்க வேண்டியதுதான். \உங்களைக் காற்றில் மிதக்க வைக்கும் பொறுப்பை ராஜாவும் கார்த்திக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.  கேட்கக் கேட்க உடலெல்லாம் மின்சாரம் பரவுகிறது எனக்கு.

ராஜா ஈஸ் க்ரேட். கார்த்தில் ஈஸ் சூப்பர் சூப்பர் க்ரேட்.

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா

யுவன் பாடியிருக்கிறார். என்னைக் கேட்கவே விடவில்லை அவர். அதனால், அயாம் ஸாரி.

சற்று முன்பு பார்த்த

ரொம்பவே ஸ்லோவான ஒரு வெஸ்டர்னைஸ்ட் மெலடி. பாடியவர் பெயராக ரம்யா என்று புதுப்பெயரைப் பார்க்கிறேன். கேட்கக் கேட்கப் பிடிக்கலாம். இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்.


ராஜாவின் தபேலா சத்தத்தை எதிர்பார்த்து எந்தப்பாடலிலும் காணாமல் ஏமாந்தேன். எல்லாப் பாடல்களும் மாடர்ன் ட்யூனில் ஒலிக்கின்றன.

நம்ம ஃபேவரிட் நா.முத்துக்குமார்’தான் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார். கேட்கக் கேட்கத்தான் வரிகளின் பின்னணி எனக்குப் புரியும். இப்போதைக்கு வரிகளில் புதிதாய் வித்தியாசமாய் எதையும் நான் கேட்கவில்லை.

கடைசியாக..... இன்றைய பாடல்களில் இருந்து எந்த வகையில் நீஎபொவ வித்யாசம்  காட்டுகிறது? ஒன்லி ஒன் சிம்பிள் திங். பாடல்களை முழுக்க முழுக்க ஆர்க்கெஸ்ட்ராவை கொண்டே சமைத்திருக்கிறார் ராஜா . கம்ப்யூட்டரின் துணை அங்கங்கே ஒப்பேற்றல்களுக்குத்தான் பயன்பட்டிருக்கிறது.

நீதானே என் பொன் வசந்தம் நல்ல இசை ரசிகர்களுக்கு ஒரு “கெத்து” ட்ரீட், சந்தேகமேயில்லை. 
Related Posts Plugin for WordPress, Blogger...