Sep 21, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


காமெடி என்றால் காமெடி அப்படி ஒரு காமெடி... ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது. 


திடீரென பரபரப்பாக ரொம்பவே சீரியஸ் ஆவது போல்....அடுத்து முன்னைக்கு நாற்பது மடங்கு அதிகமாக காமெடி. 


அடிக்கடி அடிக்கடி "நண்பேன்டா" "நண்பேன்டா" என வசனங்கள்....


காமெடியாகட்டும் சீரியஸ் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அது "செவென்-அப்" சிப்புவது போல் சிலிர்க்கிறது.


பாஸ் (எ) பாஸ்கரன்..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........


"ஏய் தம்பி....நில்லு நில்லு... பாஸ் (எ) பாஸ்கரன் பத்தி சொல்லுன்னா நீ என்ன இலக்கியம், வாசிப்புன்னு பீலா வுடற...?"


என்னது...அட, நீங்க என்ன பா.எ.பா படத்தைப் பத்தி நான் இங்க எழுதறேன்னு நெனச்சீங்களா? 


ச்சே ச்சே... இல்லீங் சாமி! நம்ம நட்பாஸ் (எ) பாஸ்கரன் ஆதி நாள் தொட்டு சிரத்தையா என் தளத்துல பின்னூட்ட ஊக்கு வெச்சு குத்தற.... ஓவ் ஸாரி...  பின்னூட்ட ஊக்குவிப்புகள் செய்யறதப் பத்தி நான் சொல்லறேன். இப்போ மேல படிங்க...



..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........

ஏய்...டுபுக்ஸ்....கொஞ்சம் நிறுத்தறியா...


ஹலோ ஹலோ....சேனல் மாத்தாதீங்க... வர்ற வெள்ளிக்கிழமை சாய்ங்காலமா பாஸ் என்கிற பாஸ்கரன் பாக்கறேன். அதன் பின்னால விமரிசனம். ஓக்கேவா... ?
.
.
.

Sep 17, 2010

உன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)

"அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறது இப்போ ரொம்ப கஷ்டம். அதுக்குன்னு வடபழனி, திருவல்லிக்கேணியில நாலு லட்சம் பேரு மேன்சன் எடுத்து தங்கி தவம் செஞ்சிட்டு இருக்காங்க. நீ மொதல்ல பாட்டு எழுதற வழி பாரு. இந்த டைரக்டர் ரொம்ப இல்லன்னாலும் கொஞ்சம் பிரபலம். நமக்கு ஒருவகைல வேண்டப்பட்டவரு. நான் சொன்னா ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. கதவை தட்டிப் பாப்போம்" என என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான் மணி.

மணி எங்கள் ஊர்க்காரன். என்னைவிட இரண்டு பள்ளி வருடங்கள் பெரியவன். பள்ளி காலத்திலேயே நான் கவிதைகளில் புகுந்து விளையாடுவேன். பின்னர் கல்லூரியில் அது கொஞ்சம் மெருகேறி இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்ட அளவிற்கு இன்று எங்கள் ஊரில் நான் பிரபலம்.


சினிமாவில் என் எழுத்து, பாடல் ஒலிக்கவேண்டும் என்று என் சுற்றமும் நட்பும் வேண்டி விரும்பி சென்னையில் சினிமாவில் ஏதோவாக இருக்கும் மணி வசம் என்னை ஒப்படைத்து, கடந்த இரண்டு மாத காலமாக அங்கு இங்கென்று திரிந்து இப்போது இந்த டைரக்டர் வாசற்படியில் காத்திருக்கிறோம்.


"வணக்கம் சார்!"

என்னுடன் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை சொன்னார்கள். நானும் சம்பிரதாயம் மாற்றும் எண்ணமில்லாது எழுந்து நின்று அவரை வணங்கினேன். எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கள் வணக்கங்களை அறை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்றார்.  

இங்கு அமர்ந்திருந்த இந்த அரை மணிநேரத்தில் ஐம்பது முறை என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அந்த குறுந்தாடிக்காரன், அவர் பின்னே சென்றவனைத் தட்டி அழைத்து, "டைரக்டர் மூடு இன்னைக்கி எப்படி?", எனக் கேட்க உதடு பிதுக்கி, தோள்களைக் குலுக்கி "ஒன்றும் சரியில்லை", என சைகையில் பதில் வந்தது.

என்னை அழைத்து வந்திருந்த மணி, "நீ ஒண்ணும் கவலைப்படாதே", என அவன் பங்கிற்கு தலையசைத்து சைகை செய்தான். இங்கே எல்லாம் சைகை மொழிதான் எனப் புரிந்தது.

மணியிடம் பேசியதில் அவன் இங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களுக்கு "பணிவிடைகள்" பல செய்பவன் எனத் தெரிந்தது. யாரிடமும் அவனுக்கு பெரிய மரியாதை இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் தேவை இருந்தது.

மாடியில் இருந்து டைரக்டரின் ஓங்கிய குரலில் ஏதேதோ கெட்ட வார்த்தை வசவுகள் கேட்ட வண்ணம் இருந்தன. எனக்கு சங்கடமாய் இருக்க, குறுந்தாடி அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தவண்ணம் இருந்தான். "இவங்க எல்லாம் இப்படித்தான்", மீண்டும் சைகை மொழியில் சொல்லிக் கண்ணடித்தான்.

சில மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் டைரக்டரை சந்திக்க மேலே சென்றோம். சுற்றி மூன்று துணைகள் அமர்ந்திருக்க. தரையோடிருந்த அந்த சின்ன ஸ்டூலில் ரொம்பவும் சாவகாசமாக அமர்ந்திருந்தார் டைரக்டர். 

"மணி உங்களைப் பத்தி போன்ல சொன்னாப்போல. சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன?"

திடீரென இன்டர்வியு போல என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்பார்த்திராத கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறினேன்.

"சரி ஒண்ணும் பிரச்னை இல்லை, உங்களுக்கு என்ன ஊரு?", என மணியைப் பார்த்தார்.

"ராஜபாளையம் பக்கம் வாசுதேவநல்லூர் சார்", என்றேன் நான்.

"அட, நம்ம சூர்யா ஊரு. அவரு பழக்கமா உங்களுக்கு?", மீண்டும் மணியைப் பார்த்த கேள்வி. 

"இல்லை சார், பார்த்ததுண்டு பழக்கமில்லை", இது நான்.

"நமக்கு இங்க பழக்கமுண்டு சார்", நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மணி. மூன்று துணைகளும் ஏதோ புரிந்து விழுந்து விழுந்து சிரித்தன. 

"சரி, நீங்க எழுதின எதாவது கொண்டு வந்திருக்கீங்களா?" எனக் கை நீட்டினார். 

நான் கொடுத்ததைப் பார்த்தவிட்டு அதை பக்கத்திலிருந்த ஒரு துணையிடம் கொடுத்தவாறே, "நல்லா இருக்கு, இருந்தாலும் எனக்கு இது போல தளை தட்டாத கவிதை அவ்வளவு பரிச்சயம் இல்லை. அது இங்க நம்ம சினிமாவுக்குத் தேவையும் இல்லை. அது ஒண்ணும் பிரச்னை இல்லை, நீங்க வர்ற சனிக்கிழமை வடபழனி ராதா ரெகார்டிங்குக்கு வாங்க. யோவ் மணி, அழைச்சிட்டு வந்துடுய்யா", என்றுவிட்டு என்னைப் பார்த்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை பார்த்துக்கலாம்", உதடு விரித்து நீண்ட புன்னகை செய்து ஒரு வணக்கம் சொல்லி நீங்க இப்போ போகலாம் என்று சைகையால் சொன்னார்.

புறப்படுமுன், "சார், என்னோட லட்சியம் தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும் சார், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும்", என்றேன். சொன்னது தவறோ என எனக்குத் தோன்றி மறையுமுன்....

"அப்போ நாங்க எல்லாம் தமிழ் சினிமாவை சீரழிக்கறோம், நீங்க வந்து எல்லாத்தையும் மாத்தப் போறீங்களா", ஒரு துணையிடமிருந்து எகத்தாளக் கேள்வி வந்தது.

"டேய்", என்று அந்தத் துணையை முறைத்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை, இருக்க வேண்டியதுதான். எல்லாரும் அப்படித்தான் வர்றாங்க. உங்களையும் உபயோகிச்சிக்க என்னோட இந்த ஸ்கிரிப்டுல இடம் இருக்கு. சனிக்கிழமை பாக்கலாம்", மீண்டும் உதடு விரித்த புன்னகை வணக்கம்.

பெர்முடாஸ் பனியனில் வந்திருந்தார் டைரக்டர்.

"இங்க பாருங்க தம்பி, சிச்சுவேஷன் இதுதான் இது ஒரு முதலிரவுப் பாட்டு. கொஞ்சம் பெப்பியா ஏதாவது யோசிங்க. மியூசிக் டைரக்டர் இன்னைக்கு வரலை. அவர் அசிஸ்டன்ட் கிட்ட டியூனைக் குடுத்து விட்டிருக்காரு, அவரோட உட்காருங்க", உத்தரவு தந்துவிட்டு உள்ளே மறைந்தார்.

என்னுடன் இரண்டு துணைகள் முகாமிட்டன. அந்த டியூனை புரிந்து கொள்ள எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. கொஞ்சம் நிறையவே நேரம் பிடித்தது.



"அத்தையின் மகளே மெத்தையில் நிலவே", என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதினேன். அங்கங்கே தளை தட்டுகிறதா என சரி பார்த்துக் கொண்டேன். துணைகள் இரண்டும் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தன. அந்தப் பாடலின் வேகத்திற்கு என் வரிகள் பொருந்தியதாய்த் தெரியவில்லை.

"நல்லா இருக்கு சார் நல்லா இருக்கு, ஆனா இது கொஞ்சம் பெப்பி பாட்டு பாருங்க, நாம கொஞ்சம் வரிகளை இங்க அங்க மாத்தி முயற்சி பண்ணலாமே", ஒன்றாய்ச் சொல்லின டைரக்டர் துணையும், மியூசிக் டைரக்டர் துணையும்.

அத்தைப் பொண்ணு வாடி
மச்சான் என்னை நாடி
மெத்தை அது மேல
வித்தையெல்லாம் தாடீ...

இப்படிப் பாடலின் ஆரம்ப வரிகள் மாறிப்போக, இதை எழுதினது நான்தானா என நான் யோசித்து முடிக்குமுன் மேலும் இலைமறை காய் மறையாக நான் எழுதிய அனைத்தும் உடைத்துச் சொல்லப்பட்டன.

"சார், அங்கங்கே கொஞ்சம் பச்சை பச்சையாய் வருதே..." என நான் இழுக்க...,

"அட அதெல்லாம் யாருப்பா பார்க்கறாங்க, இப்போ எல்லாம் சத்தம் போதும் சார், சந்தம் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. மொதல் பாட்டு அமைஞ்சி இருக்கு. கொஞ்சம் வளைச்சி நெளிச்சி எழுதுங்க. கொஞ்சம் பேரு வாங்கிட்டா அப்புறம் நீங்க சொல்றதுதான்", என்றது காத்திருந்த அடுத்த துணை.  சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் மொத்தப் பாடலும் முடிவானது. மகேந்திரன் என்ற என் பெயர் தமிழ்மதி ஆனது. இரண்டு மாதங்களில் பாடல் வெளிவந்து, அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எதுவும் நான் எதிர்பாராதது. படம் வெளிவரும் முன்னரே பாடல் எழுதிய என் பேட்டி இரண்டொரு பிரபல பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது.

அப்படி இப்படி ஒன்றரை வருடங்களை சென்னையில் ஓட்டியாயிற்று. என் பெயருக்குப் பின்னால் இப்போது ஐம்பது பாடல்கள் எழுதிய கவிஞன் என்ற தகுதி ஒட்டிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா கூறும் நல்லுலகில் இன்று நானும் ஒரு பெயர் சொல்லும் பாடலாசிரியன். என்னிடமும் இப்போது இரண்டு துணைகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

டைரக்டர் அழைத்திருந்தார். அவர் அடுத்த படத்திற்கு எல்லாப் பாடல்களும் நானே எழுதுகிறேன்.

அன்று அமர்ந்திருந்த அதே நாற்காலியில் இன்றும் அமர்ந்திருக்கிறேன். அதே குறுந்தாடி இன்று எனக்கு வணக்கம் வைத்தது.

மேலிருந்து குரல் கேட்டது, 

"அப்புறம், சொல்லுங்க உங்க லட்சியம் என்ன?"

"சார், தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும் சார்"


சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். குறுந்தாடி இப்போது என்னைப் பார்த்து பலமாய்ச் சிரித்தது.

.
.
.

Sep 14, 2010

போனாளே பொன்னுத்தாயி....!!

பதின்மூன்று வயதில் தமிழ்த்திரையில் முதற்பாடல். இசைஞானியின் இசையில், கே.ஜே.யேசுதாசுடன் டூயட் பாடும் வாய்ப்பு. படம் "நீதிக்குத் தண்டனை". படத்திற்கு வசனகர்த்தா கலைஞர் அவர்கள். மீசைக்கவிஞனின் பாடல் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா". எத்தனை பேருக்கு இப்படியொரு பாக்கியம் வாழ்க்கையில் இத்தனை சீக்கிரம் அமையும்?


இருபத்தைந்து வயதிற்குள் தேசிய விருது பெரும் வாய்ப்பு. பாரதிராஜா படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல். இந்தியப் பாடகிகளில் எத்தனைப்பேர் இளம் வயதில் இச்சாதனை புரிந்துள்ளனர்?


எல்லாமே சீக்கிரம்தான் ஸ்வர்ணலதாவுக்கு! மரணமும் கூட அவரை நீண்ட நாள் காத்திருக்க விட்டு வைக்கவில்லை.


பி.சுசிலா அவர்களுக்கு ஒரு எஸ்.ஜானகி போல, அடுத்த தலைமுறையில் கே.எஸ்.சித்ரா அவர்களுக்கு ஸ்வர்ணலதா. ஒரு அற்புதமான வெர்சடைல் பாடகி. தமிழில் ஒரு பாடகிக்கான அத்தனை இலக்கணங்களும் பெற்று நுழைந்த கடைசிப் பாடகி. குரல், உச்சரிப்பு, பாவம் (bhavam) என அத்தனையையும் தமிழில் ஒரேயோருவரிடம் பார்ப்பது மிக அரிது. ஸ்வர்ணலதா Queen of all sorts of music.

"மாலையில் யாரோ" போன்ற மெலடிகளாகட்டும், "முக்காலா முக்காப்லா" போன்ற மேற்கத்திய பாணிப் பாடல்களாகட்டும், ஆர்ப்பாட்டமான "ஆட்டமா தேரோட்டமா" போன்ற பாடல்களாகட்டும் அல்லது உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற ஐட்டம் நம்பர் பாடல்களாகட்டும் தன் தனி முத்திரையை அவற்றில் பதித்தவர் ஸ்வர்ணலதா.



தேசிய விருது பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாடலை ஒலிப்பதிவில் ஸ்வர்ணலதா அவர்கள் பாடி முடித்ததும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கதறி அழுதாராம். அத்தனை உருக்கமும் உணர்ச்சிப் பூர்வமும் நிறைந்த பாடல். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.

இவர் பாடினதில் என் பட்டியலில் டாப் 3 - "என்னுள்ளே என்னுள்ளே, எவனோ ஒருவன், என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட" ஆகியவை. இப்படிப்பட்ட பாடல்கள் இனி ஒலிப்பேழைகளில் மாத்திரமே கேட்க சாத்தியம் என்பது தமிழ்த் திரையிசை உலகின் துரதிருஷ்டம்.

ஸ்வர்ணலதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
.
.
.

Sep 12, 2010

facebook - காமெடி கலந்த சோகங்கள்...

கிட்டத்தட்ட What the f..k is farmville என்ற என் முந்தைய பதிவு ஒன்றின் தொடர்ச்சியே இது. கீழே உள்ள இந்தப் படத்தை சற்றே பாருங்கள்.



சமீபத்தில் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மறைவு குறித்த செய்தியையும் தன் இரங்கலையும் facebook'ல் தெரிவித்திருந்தார் சின்னத்திரை நடிகர் திரு.மோகன்ராம் அவர்கள்.

படத்தில் நான் வட்டமிட்டிருக்கும் பகுதியைப் பாருங்கள். இருபத்தி ஏழு பேர் இதை "லைக்" செய்திருக்கிறார்கள்.

என்னக் கொடுமை சார்!
.
.
.

Sep 10, 2010

புரசையில் சரவணா - தீதும் நன்றும்

சரவணா ஸ்டோரின் புரசை வருகை பற்றி "சூப்பர் சூப்பாராக" நம்ம சூர்யா விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

சரவணாவின் தொழில் விரிவாக்கம் அவர்களுக்கு நன்மை. வடசென்னை மக்களை தி.நகர் வரை அலைய விடாமல் கொஞ்சம் அருகிலேயே கொள்முதல்களுக்கு அலைய வைப்பது வடசென்னைக்கு நன்மை. தி.நகரின் வழக்கமான திருவிழாக் கூட்டநெரிசலில் கொஞ்சம் குறையவிருப்பது தி.நகருக்கு நன்மை.

புரசை ஜனத்திரள் மீது மேலும் வலுக்கட்டாயத் திணிப்பு நேர்வது முதல் பிரச்னை. போக்குவரத்து போலீசார் பாவம்; போக்குவரத்துச் சிக்கல்கள் புரசைக்கு அடுத்த பிரச்னை. "அங்காடித் தெரு" பார்த்துப் பதறிய உள்ளங்களுக்கு அடுத்த பிரச்னை என்னவெனப் புரியும். மேலும் ஒரு அங்காடி, மேலும் பலப்பல ஜோதிகளும் கனிகளும்.

ஆனால் இங்கே முக்கியப் பிரச்னை என சிலர் பார்ப்பது "மதார்ஷா, ரஞ்சனாஸ், கிருஷ்ணா" என புரசைவாக்கம், டவுட்டன் பகுதிகளில் காலம்காலமாக கோலோச்சிவரும் ஜவுளி சாம்ராஜ்ய பெருந்தலைகளின் வணிகம் பற்றி. இவர்களின் வணிகத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்பது சிலப்பலரின் ஆரூடம்.

அந்த ஆரூடங்கள் எத்தனை தூரம் உண்மையாக வாய்ப்புள்ளது?

என் பார்வையில் ஒரேயொரு சதவிகிதம் கூட இல்லை. உண்மையில் பார்த்தால் புரசைவாக்கத்தில் இந்த பழைய பெருந்தலைகள் தவிர்த்து சின்னச் சின்ன வணிகர்கள் கூட இனி செழித்து வளர அமோக வாய்ப்பு உள்ளது.

எப்படி என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், ஒரு சின்ன ஒப்பீட்டிற்கு வரும்படி உங்களை அழைக்கிறேன்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வருகை (பஜாஜ் அலையன்ஸ், ஐ.என்.ஜி.வைஸ்யா, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்றோர்) மற்றும் அவர்கள் தந்த கவர்ச்சிகர காப்பீட்டுத் திட்டங்கள் எந்த விதத்தில் எல்.ஐ.சி. செய்து வந்த வணிகத்தை பாதித்தது? 

எந்த விதத்திலும் இல்லை என அடித்துச் சொல்கிறார் எல்.ஐ.சி.யில் பழம் தின்றுக் கொட்டை போட்ட என் தோழர் ஒருவர். உண்மையைச் சொல்லணும்னா மத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரப் பலன்கள் பல நேரங்களில் எங்களை வந்தடைகின்றன என்கிறார் அவர். காப்பீட்டின் தேவையை அவர்கள் எங்களுக்கும் சேர்த்து மக்களுக்கு உணர்த்துகிறார்கள். காப்பீடு என வரும்போது மக்கள் தன்னாலே எங்களைத் தேடி வருகிறார்கள் என்பது அவர் வாதம்.

அதே போலத்தான்! நான் ரஞ்சனாஸ்'ல மட்டும்தான் ரவிக்கைத் துணி எடுப்பேன் என்று இருப்பவர்களை நீங்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் காரியமாகாது. அட, சரவணாவா? நான் இது வரைக்கும் அங்கே என் காலை வெச்சதே இல்லையப்பா, வைக்கவும் மாட்டேன் என்பவர்களை சரவணா ஸ்டோர்ஸ் கவரப்போவதும் இல்லை.

உண்மையில் தி.நகர் சென்று கொண்டிருந்த வடசென்னை மக்களை சரவணா ஸ்டோர்ஸ் புரசைக்கு வரவழைத்து அங்கிருக்கும் மற்ற வணிகர்களின் வணிகங்களையும் செழிக்கச் செய்யப் போகிறது.

வாழ்க சரவணா ஸ்டோர்ஸ்! வளர்க வடசென்னை!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...