Aug 16, 2013

என்னத்த சொல்ல!

இரண்டு தினங்களுக்கு முன்.....

ஹேய்! பதினொன்ற ஆச்சு, இன்னும் நீ வீட்டுக்கு கெளம்பலியா? என் டெஸ்குக்கு வாயேன், அந்த பெண்டிங் டாஸ்க் முடிச்சிடுவோம்.

பாஸ், பொறப்பட்டுட்டேன் பாஸ். மதியம் பன்னண்டு மணிக்கு உள்ள வந்தது. வீட்லருந்து ரெண்டு போன் கால் வந்தாச்சு. நாளைக்கு பாக்கலாமே?

எங்க வீட்லல்லாம் என்ன தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்கய்யா. நீயும் உங்க வீட்ல சொல்லிடு. இந்த மாதிரி இந்த ப்ராஜக்ட்ல சேந்துட்டேன். இனி எல்லாம் இப்டித்தான்னு சொல்லிடு.

<மனசுக்குள்: இருந்தாலும், டெய்லி பன்னண்டு அவர்’ன்னா ரொம்ப ஓவர் பாஸ்.>

இன்று காலை:

கொஞ்சம் இருங்க தம்பி. வழுக்கி விடப் போவுது. தண்ணிய வெளிய தள்ளி வுட்டுடறேன். 

சரிங்க.

மழைய வாங்கறதா, போங்கறதான்னே புரியலை. கொஞ்சம் செருப்பை வெளிய விட்டுடறீங்களா? ஒவ்வொருத்தரா கொண்டுவர்ற சேத்தைத் தொடைச்சி தொடைச்சி மாளல.

நோ ப்ராப்ளம்.

ஐநூறு நோட்டுதான் வரும் தம்பி, பாத்துக்கங்க. இன்னைக்கு பப்ளிக் ஹாலிடே வேற. எப்போ பணம் கொண்டு வந்து ஃபில் பண்ணுவாங்களோ.

ஓ! சரி சரி. என்ன, காலை நாஸ்தாவா? வீட்லருந்தே கொண்டு வந்துடுவீங்களா?

பின்ன? நாம வாங்கற நாலணா சம்பளத்துக்கு ரெண்டு வேள வெளிய சாப்பிட முடியாதுங்களே.

ஓ... எத்தன அவரு ட்யூட்டி?

காலைல ஏழு மணிக்கு வந்தா, ராத்திரி ஏழு மணி வரைக்கும்.

பன்னண்டு மணி நேரமா?

ஆமாங்க தம்பி...

அட, நம்ம சாதி நீங்க..... என்னைக்கு வீக் ஆஃப்?

அப்டின்னா?

சனி, ஞாயிறு?

சனியுமில்ல, ஞாயிறுமில்ல. பொங்கலுமில்ல, தீவாளியுமில்ல. பதினஞ்சு நாளைக்கு ஒருதடவ டொண்டி ஃபோர் அவர் ப்ரேக் கெடைக்கும். அதான் நமக்கு லீவு.

புரியலியே?

புரியவேணாம் தம்பி. நம்ம கஷ்டக் கதை உங்களுக்கு எதுக்கு. இட்லி சாப்டறீங்களா? 

இல்லை இல்லை சாப்பிடுங்க. நான் வர்றேன்.

ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே தம்பி....

ஹ்ம்ம்ம்ம்..... ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே!

Aug 12, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள எண்டர்டெயினர் பார்த்த திருப்தி.

சாதாரணக் கதைதான். வடக்கத்தி வாலிபன் + தெக்கத்திப் பெண் மும்பை டு சென்னை ரயிலில் சந்திக்கிறார்கள். தெக்கத்திப் பெண்ணின் கிராமத்திற்கு சந்தர்ப்ப வசத்தில் வந்து சேர்கிறான் வடக்கன். க்ளைமாக்ஸுக்கு ஆறு சீன்களுக்கு முன் ஹீரோயினிக்குக் காதல் வருகிறது; அதற்கு நாலு சீன்களுக்குப் பிறகு ஹீரோவுக்குக் காதல் பிறக்கிறது. 

அப்போ, அதுக்கு மின்ன என்ன நடந்துச்சு? அதுதான் சென்னை எக்ஸ்ப்ரஸ்.

படத்தின் மூன்றாவது ரீலுக்குப் பிறகு, இடையில் இரண்டு காட்சிகள் வந்துபோகும் ஒரு சர்தார் போலீஸ்வாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், திரையில் ஹிந்தி பேசும் ஒரே கதாபாத்திரம் ஷாரூக்கான் மட்டுமே. துணைக்கு சந்தானம் வகையரா போல யாரையும் அச்சுபிச்சுவென சேர்த்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தப் படத்தின் எண்டெர்டெயின்மெண்ட்டையும் தன் தலையிலேயே சுமக்கிறார் ஷாரூக். ஷாரூக் ரசிகர்கள் நிச்சயம் தலையில் வைத்துக் கொண்டாடத்தக்க படம்.

”உனக்குத் தமிழ் தெரியுமா?”, என சத்யராஜ் கேட்க... “ஏய் ஏய் ஏய்.... அம்மாவப் பத்தியெல்லாம் தப்பாப் பேசாத”, என்கிறார் ஷாரூக் < தமிழ் தேரி மா >.  படம் முழுவதும் கிச்சுக்கிச்சு மூட்டும் இந்தவகை நகைச்சுவைகள்.

ஹிந்தி - தமிழ் கலப்பினை ஜாக்கிரதையாகவே கையாண்டிருக்கிறார்கள் ஷாரூக்கும் ரோஹித் ஷெட்டியும். நையாண்டி நகைச்சுவை எதையும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ரெஃப்யூஜி, இந்தியன், ஸ்ரீலங்கன், டெர்ரரிஸ்ட் என்று விவரம் புரியாமல் சில அவைக்குறிப்பிலிருந்து நீக்கத்தக்க சீன்கள் தவிர்த்தால் நெருடல் இல்லாத படம் (அந்தக் காட்சிகளை தமிழ் இணைய புலாசுலுக்கிகள்* பார்க்காமல் இருக்கக் கடவது).
<*உட்கார்ந்த இடத்திலேயே குதிப்பவர்கள்>

ஏழரை அடி ரெஸ்லரை க்ளைமாக்ஸில் அடித்து வீழ்த்தும் ஐந்தரை அடி ஹீரோ, அடி வாங்கிவிட்டு, “நான் ஒடம்புல பலசாலி; நீ மனசுல பலசாலி”, என்று சொல்லும் அதே ரெஸ்லர், ’இந்தா எம்பொண்ணக் கட்டிக்கோ என்று க்ளைமாக்ஸில் மனம் மாறும் சத்யராஜ் என்ற க்ளிஷேக்களைத் தவிர்க்க வேறேதும் உத்தியைக் கையாண்டிருக்கலாம் ஷாரூக். இந்த காலத்து இளரத்தங்களைக் கதை டிஸ்கஷனில் சேர்த்திருந்தால் ஐடியா தந்திருப்பார்களே சார்?

சத்யராஜ் படத்தில் மற்றும் ஒரு கேரக்டராகவே வருகிறார். பில்டப்பிற்குத் தகுந்த கதாபாத்திரம் இல்லை அவருடையது. நம் எதிர்பார்ப்பிற்கு அவர் போர்ஷனில் தீனியில்லை எனலாம்.  

படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் ரயில் பிடிக்கும் அறிமுகக் காட்சியில் ‘தமிழ்ப்பெண்’ என்ற அறிமுகத் தேவையால் பாவாடை தாவணியில் வருகிறார் தீபிகா. அவர் ரயில் இறங்கும் வரை ஓவியர் ஜெயராஜின் ஓவியத் தனமாய் மாராக்கு  விலகியே இருக்க, என்னாடா இது வம்பாப்போச்சு டமில் பெண்களின் அறிமுகத்திற்கு என நாம் விசனப்பட, அதெல்லாம் அறிமுகத்துக்கு மட்டும்தான் என்று ஆசுவாசம் தருகிறார் இயக்குனர். படத்தின் இன்னபிற காட்சிகளில், பாடல்கள் தவிர்த்து, ரீஜண்ட்டாகவே வருகிறார் தீபிகா. 

ஆக, குடும்பத்துடன் பார்க்கத்தக்க குட்டும்ப்பச் சித்திரம்.

இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

கானாபிரபா சொன்னதைத்தான் நானும் சொல்லுவேன்:
தமிழ் உச்சரிப்பு, பல படங்களின் தழுவல் என குறைகளைப் பட்டியல் போடலாம் ஆனால் படம் முடிந்த பின் இரண்டரை மணி நேரம் கிடைத்த கலகலப்பான தருணங்களே மேலோங்கி நிற்கின்றன
பை தி வே, பதிவின் ஆரம்பத்தில் வரும்  பிரபந்தப் பாடல் இடைச்செருகல் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஹிந்திப் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகளாக வருகின்றது.

வாழ்க தமிழ்! வளர்க திராவிட வேதம்!

Jul 30, 2013

#365RajaQuiz

கடந்த ஒரு வருடமாகவே இணையத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறேன். இரவுநேர அல்லது அதிஅதிகாலை நேர வேலைக்குப் போகத் தொடங்கியதால் பர்சனல் விஷயங்களுக்கே சிலப்பல நேரங்களில் நேரம் ஒதுக்க முடியாமல் போக, சோஷியல் லைஃப்’க்கான ஒதுக்கல் சாத்தியமே இல்லாமற்போயிற்று. 

ஆம்னிபஸ் தளத்தில் வாராவாரம் எழுதியதுதான் இணையத்துடனான என் தொடர் தொடர்பு. ஆம்னிபஸ்சில் பிஸியாக இருந்ததுவும் ஒருவிதத்தில் இணையவிலகலுக்குக் காரணமாயிற்று.

இந்த விலகலிலும் ஆம்னிபஸ் பிஸினஸ்சிலும் நான் பெரிதும் இழந்தது என்று பார்த்தால் அன்பர் ரெக்ஸ் நடத்திய 365 ராஜா க்விஸ்களைத்தான்.

கடந்த ஞாயிறன்று சேகர்-சுஷிமா சேகர் இல்லத்தில் வெகுஜோராக இந்த க்விஸ் போட்டிகளின் ஃபைனல்ஸ் நடந்தது. அதாவது 365'வது கேள்வி - பதில் அரங்கேற்றம் அன்று நிகழ்ந்தது.

இரண்டு டசன் ராஜ பக்தர்கள் புடைசூழ அங்கு இல்லமே இசையால் நிரம்பியிருந்தது. பிரசன்னா என்ற அன்பர் அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். ஸ்ரீவத்சன், (இன்னொரு) பிரசன்னா, இவர் என்று எல்லோரும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்த நிகழ்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஜேயெம்மார் சாரின் டோலக்கு அடி அன்றைய ஸ்பெஷல். ஆர்.கோகுலின் பாடல்வரிகள் நினைவாற்றல் பேராச்சர்யம். 

திருவாசகமும் இளையராஜாவும் குறித்து சொக்கன் பேசினார். என் திருவாசக ஸிடி முழுக்க ராஜாவின் குரலே ஒலித்தது என்பதற்கு சொக்கனை விட்டால் வேறு யாரால் சரியான காரணத்தைச் சொல்ல முடியும்? 

என் பங்குக்கு நானும் ஒரு பாட்டு பாடினேன்.

செவிக்கு உணவு குறையாதபோதே வயிற்றுக்கும் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. என்னுடன் அகில் வந்திருந்தான். சமையலறையில் அவன் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தான்.

எது இருந்ததோ எது தெரிந்ததோ, என்னுள் அன்று ஒன்றேயொன்று நிகழ்ந்தது. கூட்டுத் தியானங்களின் போது ஒரு அதிர்வு (vibration) தோன்றும். அது உங்களை இருவேறு நிலைகளில் நிறுத்தும். ஒன்று மனதில் நிலையிலாதவொரு அலை அடித்துக் கொண்டேயிருக்கும், இன்னொன்று மனம் எப்போதும் காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறைவை, நிம்மதியை அந்த அதிர்வு உங்களுக்கு அந்தத் தருணத்தில் தரும். அன்றைய கூடலில் நான் இந்த அதிர்வை அனுபவித்தேன். 

அன்றைய நிகழ்வையொட்டி நிறைய பேர் பதிவுகள் எழுதிவிட்டார்கள். பலரும் இன்னமும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். எல்லாவற்றிலும் @amas32 எழுதிய ட்விட்லாங்கரின் ஒற்றைவரியொன்று எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது...

6. There are lots of good people. You just have to look for them.

Hats-off maa...

வயலின் வாசித்த அன்பருக்குத் தமிழ் தெரியாது என்றார்கள். ராஜாவின் பாடல்கள் மட்டுமல்லாமல் பிஜிஎம் எல்லாவற்றையும் அட்சரத்திற்கு அட்சரம் அத்துப்படியாக வைத்துக் கொண்டிருந்தார் அந்த அன்பர். நம்மூரில் நாம்தான் ராஜாவைக் (என்னையும் இதிலே கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறேன்) கிண்டலடிக்கிறோம்.

நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ”தச்சிமம்மு” ஸ்ரீவத்சன், பிரசன்னா மற்றும் சேகர் தம்பதியினருக்கு நன்றிகள் ஆயிரம் :)


Jul 29, 2013

இன்னொரு டெலிகாலர்

நான் இண்டர்நெட்டுக்கு மட்டுமே உபயோகிக்கும், இதுவரை யாரிடமும் நம்பரைப் பகிராத என் மொபைலில் ஒரு இன்கமிங் அழைப்பு வந்தது. ஓகே, இது கண்டிப்பாக ஏதேனும் மார்க்கெட்டிங் அழைப்புதான் என்று தயாராக பச்சை பட்டனை அமுக்கினேன்.

”ஸாஆஆஆர்ர்ர்ர்ர்ர்....”, தேமதுரக் குரல்....

ஆஹ்ஹா! அத்தேத்தான்.... ரெடியாவுடா கொமாரு....

“ஹலோ”

”நான் பஜாஜ் அலியான்ஸ்லருந்து பேஸரன் ஸ்ஸார்....”

“பேசுங்க மேடம்”

“நாங்க random முறைல ஆயிரம் நம்பர்ஸ் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஆஃபர் தர்றோம்”

“ஓ! நல்ல விஷயமாச்சே!”

“உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இலவசமா தரப் போறோம் சார்”

“ஆஹா! சூப்பர். ஒரு லட்ச ரூபா எனக்கு எப்போ தருவீங்க?”

“ரூபா உங்களுக்குத் தர மாட்டோம் சார்”

“அப்போ யாருக்குத் தருவீங்க?”

“பாலிசி உங்களுக்குத் தருவோம் சார்., அதோட ஸம் அஷ்யூர்ட் ஒன் லாக் ருப்பீஸ்”

“புரியுது புரியுது. சூப்பருங்க. கலிகாலத்துல காலடிச்சு ஒரு லச்ச ரூவா இனாமாத் தர்றீங்கன்னா ஊர்ல ஏதோ சுனாமிதான் வரப்போவுது”

“கரெக்ட் சார். இல்லை இல்லை சார். இது ஒரு ப்ரமோஷன் ஆஃபர் சார்”

“ஏதோ ஒண்ணு. நல்லது நடந்தா சரி. பாலிஸி எப்போ எனக்கு தருவீங்க?”

“இதுக்கு உங்களுக்கு மூணு தகுதி இருக்கணும் சார்”

“மூணு படம் நான் பாத்திருக்கேனுங்க”

“இல்லை சார். த்ரீ எலிஜிபிலிடி க்ரைடீரியன்ஸ்”

“ஓ... ஓகே சொல்லுங்க....”

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மனைவி அருகில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு... “இல்லியே.... இன்னும் ஒரு தபாகூட ஆவலைங்க”

“ஓ.... உங்க அப்பாவுக்கு என்ன வயசு?”

“அவர் போவும்போது அவருக்கு அம்பது. இப்போ இருந்திருந்தா எழுபது”

“ஆ.... உங்க வீட்ல கல்யாணமானவங்க வேற யார் இருக்கா”

“பையனுக்கு மூணுவயசுதான், இன்னும் கல்யாணம் ஆகலை. அது தவிர்த்து பை டீஃபால்ட் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் ஆனவங்க”

“பையனா? கல்யாணம் ஆகலைன்னு சொன்னீங்க?”

“கல்யாணம் ஆகலைன்னுதானேங்க சொன்னேன். பையன் இல்லைன்னா சொன்னேன்”

“சார், நீங்க என்னை கலாய்க்கறீங்களா”

“அடடே! புரிஞ்சிடுச்சா உங்களுக்கு..... சூப்பர் போங்க”

“சார், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?”

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு சொல்லுங்க. அப்ப நானும் சொல்றேன்"

"சார், நாங்க எங்க பர்சனல் டீடைல்ஸ் எல்லாம் ரிவீல் பண்ணக் கூடாது சார். நேம் கூட ஸ்யூடோ நேம்லதான் பேசுவோம்”

”ஆ... நெல்லாக்குதே கத.... நாங்க எங்க டீட்டேல் எல்லாம் சொல்லுவோம். நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?”

“ஓகே சார். இந்த பாலிஸி உங்களுக்கு வேணுமா வேணாமா?”

“வேணாம்”

“ஓகே சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது இருந்தா ரெஃபர் பண்ணுங்களேன்”

“எனக்கு இருக்கற ஒரே ஃப்ரெண்ட் என் வைஃப்தான். அவங்க நம்பர் தரவா?”

க்கூங் க்கூங்....க்கூங் க்கூங்....

Jul 21, 2013

பாமாலை.... வாலிக்கு....


Related Posts Plugin for WordPress, Blogger...