மனிதர்களுக்கானக் கடவுள்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
சொல்வனம் என்ற இதழில் மாயவன் இந்திரன் என்பவர் எழுதிய கவிதை ஒன்று வெளிவந்திருக்கிறது. கருத்து, வடிவம், மொழி என்ற மூன்று கூறுகளையும் தாண்டி உணர்வுத் தளத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டுகூட அதைக் கவிதை என்று எளிதாக சொல்லி விடலாம்.
கவிதைகளின் சில பகுதிகளை உங்களுக்குத் தருகிறேன் பாருங்கள்-
என் கனவொன்றில்
வண்ணத்துப் பூச்சிகள் தம்மிறகால் வானவில்லொன்றை நெய்கின்றன
ஒரு கணம் படபடத்த வானவில் பிரிந்து சிதறுகிறது
வானம் துடிக்கிறது வண்ணமயமாகி
...
உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.கவிதைகளில் ஏன் இந்த சோகம்? என்ன நடந்தது?
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்
...
தோற்றவன் கண்கள் நிலத்தை உழுதன.
வென்றவன் கண்கள் ஆகாயம் அளந்தன.
கரவொலி எழுப்பி ஆடிய கூட்டம் அடங்கிக் கலைந்தது
வெற்றி தோல்விச் சுவடுகள் அற்று கிடந்தது,
களம்
...
கதவுதிறந்தேன் நீ நிற்கிறாய்
உதடுகள் கிழிந்து வழிகிற ரத்தம் துடைக்க முடியாதபடி
முறிக்கப்பட்ட கைகள்
நிற்கமுடியாது சரிகிறாய்
விலகி வழி விடுகிறேன்
நீ விழ
...
இருள் மூலையில் சுவரோடொட்டி கால்களை மடித்து
நெஞ்சில் அணைத்து தலை கலைந்து முழங்காலில் முகம் புதைத்தபடி கண்ணீர் சுரத்தல் -
ஆற்ற ஆருமற்றவர்களின்
யோகாசனம்
முண்டியடித்து படகேறி இடமற்று அழ அழக் கரையில் தள்ளிப் பலரை கை விட்டு தப்பிஎன்ன ஒரு தீவிரமான எழுத்து பாருங்கள்.
ஏற்றி வந்த பாரமெலாம் இறக்கின
நடுக்கடலில் நாட்புறமும் வெடித்து சீறி வந்த
சன்னங்கள்
இந்த மாதிரியான அனுபவங்கள் நேரக் கண்டவர்,
மதியக் கொடுஞ்சூட்டில் தகரப் பந்தல்என்றுதானே எழுத முடியும்?
உள்ளே கொதிக்கிறது
எல்லோரும் வெளியே நிற்கிறார்கள்
சவத்தையும் அழுது கொண்டிருக்கும்
சம்சாரத்தையும் தவிர
நிராதரவாய் விடப்பட்டவர்களின் வலி, சமூகத்தில் ஏற்பட்ட விரிசலால் தனி மனித உள்ளத்தில் எதிரொலிக்கும் சிதைவு, அற்புதமாக வார்த்தைகளின் வடிவில் வெளித் தெரிகிறது மாயவன் இந்திரனின் களமும் ஐந்து கவிதைகளும் என்ற கவிதையில்.
முத்தாய்ப்பாய், மாயவன் இந்திரன் எழுதுகிறார்,
கத்தி இறங்க முன்பு பலி பீடத்திலிருந்து பார்க்க, என் இரத்தம் ஏந்த அண்டாவுடன் நின்றவனின் கால்களினூடே மனிதர்களுக்கான
கடவுள் தெரிந்தார்
யார் இந்த ரத்தம் குடிக்கும் கடவுள்? இவர் ஏன் மனிதர்களுக்கான கடவுள் ஆனார்? இவர் உண்மையில் இருக்கிறாரா அல்லது வெற்றுத் தோற்றம்தானா? எல்லாவற்றுக்கும் மேலே இவர் ஏன் பலி கொடுப்பவனின் கால்களினூடே காணப்படுகிறார்? என்னதான் அவன் பின் நின்று அவனை செலுத்தினாலும், பலி வாங்குபவன் என்ற முறையில் அவர் உயர்ந்து நிற்பதுதானே நியாயம்? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?
விடை தேட அவசியமில்லாக் கேள்விகளுடன் முடிகிறது இந்தக் கவிதை.
படித்துப் பாருங்கள், சொல்வனத்தில். முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடிக்கிற மாதிரி, முதல் படைப்பிலேயே தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிற மாதிரியான எழுத்து பிரசுரமானதும் படிக்கக் கிடைப்பது என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் அனுபவம் என்கிறார்கள்.
இந்தக் கவிதையின் இறுதிப் பகுதி "முரண்நகை- மனிதர்களுக்கான கடவுள்," என்று முடிகிறது. இது குறித்து ஒன்று சொல்ல வேண்டும்.
நாம் முரண்நகை என்பதை, "சொம்பு நசுங்கிடிச்சு போல?" என்கிற மாதிரியான நக்கல் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம். ஆனால் முரண்நகை என்பது விளையாட்டுத்தனமான கேலிக்கும் அப்பாலுள்ள ஒன்று.
பிளாட்டோவின் டயலாக்குகளில் காணப்படும் சாக்ரடீய பயன்பாட்டில் முரண்நகை என்பது சிந்திக்கும் ஜீவன் தன்னைத்தானே கண்டு திகைத்து, ஒரு மென்சிரிப்புடன் தன் திகைப்பைக் கடந்து செல்வதை சுட்டுகிறது. இந்த மென்சிரிப்பு, தன் புன்முறுவல் பூத்த நகைமுகத்தின் ஆழத்தில் பொருள் பொதிந்த ஒரு காத்திரமான உணர்வை ஒளித்து வைத்துக் கொண்டதாய் இருக்கிறது- முரண்நகையின் உட்பொருள் உன்னதமான ஒரு உண்மைக்கு இணையான ஆழ்ந்த, சொல்லுக்கடங்காத, சிந்தித்தறிய வேண்டிய கருத்தாழம் கொண்டது, என்கிறார் ஷ்லேகல்.
நல்ல கவிதை என்று ஒன்றைப் பாராட்டும்போது சொல்லாழம், கருத்தாழம் என்று அழகின் செறிவை மெச்சும் நிலைக்குப் போய் விடுகிறோம், அந்தக் கவிதை துக்கத்தை, அவலத்தை விவரிக்கும்போது இப்படி செய்வது தவறாகாதா? என்று கேட்கலாம். எல்லாம் கடைசியில் அழகியல், நுண்ணுணர்வு, ரசனை, கவிஞனைப் பாராட்டுதல், புகழுரை என்றுதான் முடிகிறதா?
நினைத்துப் பாருங்கள்- எவ்வளவு நாளைக்குத் துக்கம் கொண்டாட முடியும்?
இதே சொல்வனத்தில் சுகா எழுதியுள்ள பந்தி இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகவே சுட்டுகிறேன், சொல்வனம் கோபித்துக் கொள்ளாது என்ற நம்பிக்கையில்.
"‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.
படுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல்லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.
அடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.
‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’
மரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.
‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா? ஒங்க அம்மைய எங்கெ? சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’
மறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.
சமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.
‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.
‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.
‘சுப்ரமணிப்பய சரியா சாப்புடுதானா? மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.
சுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்."
இது வாழ்க்கை- கதை, கவிதைகள், கட்டுரைகள் மூலம் ஒரு சித்தாந்தத்தை, ஒரு வரலாற்றை, ஒரு உணர்வை உறைய வைத்துக் கொடுக்க வேண்டியத் தேவை இல்லை. என்னைக் கேட்டால், தவிப்போ இழப்போ, எதுவாயினும் சரி- அவற்றை உண்மை உணர்வுடன், நியாயமாகப் பெசுகிறவனின் சொற்களில் வெற்றுப் புலம்பல் இருக்காது- தன் சோகத்தை முரண்நகையின் மூலம் அவன் கடந்து சென்று விடுவான்: ஆனால் அந்தக் கடந்து செல்தல் என்பது சோகத்தின் காரணத்தை மறுப்பதாக இருக்காது- அதை இன்னும் ஆழ்ந்த உணர்வைப் பதிப்பதாக இருக்கும்.
இதுவே கோபம், அறச்சீற்றம் என்று அனைத்துக்கும் கொள்ளலாம். நாம் பழிவாங்குதல் பற்றிப் புதுசு புதுசாய்ப் பேசுகிறோம். யூரிப்பிடீஸின் மெடியா படித்துப் பாருங்கள். விக்கித்துப் போய் விடுவோம்.
முரண்நகை என்பது வெறும் கேலி, கிண்டல், கோபமாய் செய்கிற நக்கல் என்ற அளவோடு நின்று விடுவதில்லை. அது அவலத்தை அழகியலோடு சேர்த்து வைக்கிறது. நினைவுகளின் தடத்தை திசையின்றித் திரும்பும் வாழ்க்கையின் போக்குக்கு நெகிழ்த்தித் தருகிறது. இறுகிய மனங்களைத் தளர்த்துகிறது, ஆதிக்க உணர்வுகளை எள்ளி நகையாடுகிறது.
நம் நகர்ப்புற சாலைகளின் நடைபாதைகளில் கான்க்ரீட் விள்ளைகளின் விளிம்புகளில் அத்தனை கால்கள் மிதித்தும் வளர்ந்து நின்று புதிதாய் சிரிக்கும் சிறு புற்களின் மலர்ச்சி- இது உயிர்ப்பின் முரண்நகை. இது எளியதாய் இருக்கலாம், ஆனால் இதனினும் வலியது இல்லை.
தோற்றவன் கண்கள் நிலத்தை உழுதன.
வென்றவன் கண்கள் ஆகாயம் அளந்தன.
கரவொலி எழுப்பி ஆடிய கூட்டம் அடங்கிக் கலைந்தது
வெற்றி தோல்விச் சுவடுகள் அற்று கிடந்தது,
களம்
வென்றவனும் சரி, தோற்றவனும் சரி தன்னுடன் கொண்டு செல்ல முடியாதது களம், உண்மையை சொன்னால் களம் இருவரையும் தன்னுட் கொள்ளும்.
மாயவன் இந்திரனின் கவிதைகள் முரண்நகையை, நான் சொன்ன சாக்ரடீய பொருளில், தன் ஜீவனாய்க் கொண்டுள்ளன. இதில் இருப்பது உயிர்ப்பின் ஜீவன். வெறும் புலம்பலாகவோ, பிரசாரமாகவோ, வரலாற்று ஆவணமாகவோ, துக்கப் பகிர்தலாகவோ இவை எனக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தை, அங்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை இவை பாடினாலும், மொத்த மனித சமுதாயத்தின் மைய உணர்வுகளை நோக்கி எழுப்பப்பட்ட அழைப்பாகவே நான் இவரது கவிதைகளைக் காண்கிறேன்.
கவிஞருக்கு வாழ்த்துகள்.
கவிதையைப் பிரசுரித்த சொல்வனம் இதழுக்கு நன்றி.
2 comments:
கவிதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.கவிதைகளை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் ஆழமான
கருத்துக்களால் கவிதைக்கு ஆழங்கூட்டுகிறீர்கள்.
‘எழுத்து பிரசுரமானதும் படிக்கக் கிடைப்பது என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் அனுபவம் என்கிறார்கள்’’
இது கொஞ்சம் ஓவராக தென்படுகிறது.கவிதை அனுபவம் என்பது ஆளாளுக்கு வேறுபடும் அல்லவா.
விமர்சனம் என்பதை விட ஒரு அறிமுகம்/அனுபவப்பகிர்வு என்பதுபோலத்தொனிக்கிறது.
வாசிப்பதற்கு சுவையாக ஆழமாக எழுதியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
மரணமொக்கைப்பதிவுகளில் சொல்வனம் பற்றிக்கறாரான பதிவுகள் வந்தன.அவை நிறுத்திவிட்டீர்களா?
ஐயா, இந்தக் கவிதைகளை மாயவன் இந்திரன் என்பவர் எழுதி இருக்கிறார். கருத்துகள் மட்டுமே நான். பாராட்டுகள் அவரையே சேர வேண்டும்.
உண்மைதான், விமர்சனம் என்று எழுதுவது நியாயமில்லையே? அவர் இன்னும் பத்து வருடம் எழுதட்டும். விமரிசனம் போன்ற சங்கதிகளை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது அவருக்குத் தேவை ஊக்கம் ஆதரவு போன்ற சமாசாரங்கள்தான் என்று நினைக்கிறேன்.
சொல்வனம் குறித்த பதிவுகள் தேவைதானா என்றுத் தோன்றியது. நிறைய எழுதினால் அதில் ஒன்றாய் இதையும் செய்யலாம். ஆனால் இதை மட்டும் வாரா வாரம் செய்வதானால் எப்படியோ இருக்கிறது. அதுதான் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டேன்.
நீங்கள் புதிதாய் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா? நீங்கள் அண்மையில் பதிவு செய்த இரு கதைகளும் உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது.
Post a Comment