ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது) ஏன் கிவிதை எழுதக் கூடாது?- ஹரன் பிரசன்னாவின் "மூன்று கவிதைகளை" முன்வைத்து.
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
முந்தைய இரு பதிவுகள்:
மொழிபு மூலம் அறிதல் முறை:
....தகவல்களை ஓர் உண்மை நிலை போலவே கற்பனை செய்தும் பார்க்கலாம். இது மேலே சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிதல்முறை. இதுவே இலக்கியத்தின் வழிமுறை. இவ்வாறு சொல்லிப் பார்த்தலை மொழிபு [Narration] என்கிறார்கள்.
ஆழ்தள அறிதலை நிகழ்த்த கலைகளே உள்ளன. கலைகள் நம்மில் நிகழ்த்துவது ஒரு வகை கனவின் வெளிப்பாட்டைத்தான்...
...இலக்கியம் ஓர் அறிவுத்துறை என்பதுடன் ஒரு கலையும் ஆகும் என்பதே அதன் முக்கியமான சிறப்பம்சம். ஓர் அறிவுத்துறையாக அது உண்மையை அறிய எத்தனிக்கிறது. ஓர் கலையாக அந்த உண்மையை மிக மிக ஆழத்துக்கு கலாச்சாரத்தின் தொடக்கத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கிறது. இப்படி சொல்லலாம். ஒரு பெரும் சிக்கலை நாம் சந்திக்கும்போது அதை அந்த தருணத்தை மட்டும் வைத்தல்ல, நம் இறந்த காலத்தின் கடைசி எல்லை வரை, பால்யம் வரை, கொண்டு சென்று பரிசீலிப்பது போல.
ஆக இலக்கியத்தின் ஒட்டுமொத்த பயன் என்ன ? அது ஓர் அறிதல் முறை. அறிந்தவற்றை மனிதனின் உணர்ச்சி சார்ந்த ஆழத்தால் பரிசீலனை செய்யும் கலை. இரு தளங்களையும் இணைத்து அது செயல்படும்போது எல்லா பிற அறிவுத் துறைகள் எதுவும் சென்று தொட முடியாத இடங்களை தொடுவதாக உள்ளது..."
- ஜெயமோகன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதைப் பேசியவரைப் பாரபட்சம் பார்க்காமல் நாவால் சுட்டு விடுவார். ரொம்ப கறாரானவர். ஒரு தடவை நான் ஒரு நண்பனின் திருமணத்துக்காக வெளியூர் சென்றிந்தபோது அவரை ஒரு விபத்தாக சந்திக்க நேர்ந்தது- ஆமாம், விபத்துதான்.
பார்த்தவுடனேயே நாலு எட்டில் நெருங்கி வந்து என் கையைப் பிடித்துக் கொண்டார், "என்னப்பா, நீ எங்க இங்கே? பெண் வீடா, மாப்பிள்ளை வீடா?"
எனக்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, நாக்கு மட்டும் நீள ஓடியது- "ஹி ஹி, நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். நாமல்லாம் கணியன் பூங்குன்றனார் கட்சி!-" என்று சொன்னேன்.
அவ்வளவுதான். உடனே அவர் முகம் மாறி விட்டது. கோபத்தில் என் கையை உதறி விட்டார், "யாதும் ஊரே யாவரும் கேளிர். சரி. அதுக்கு அடுத்த வரி என்ன?"
எவனுக்குத் தெரியும்! "அன்பே எங்கள் உலகத் தத்துவம்," என்று சொன்னால் நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்து விடுவார் மனுஷன். எதுவும் சொல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றேன்.
"இதோ பாரு பாசு, நான் உன் கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன்- தெரியாத விஷயத்தை எல்லாம் இடம் பொருள் ஏவல் தெரியாம சொல்லிக்கிட்டுத் திரியாதே. வீணா எதுக்கு உனக்கு இந்தப் பாசாங்கு? தொறந்த வீட்டுல நாய் நுழையற மாதிரி எங்க வேணா வருவேன் போவேன்னு வெளிப்படையா சொல்லேன். தேவை இல்லாம கணியன் பூங்குன்றனார் பேரை எல்லாம் இழுத்துக்கிட்டு உனக்கு ஏன் ஒரு புனித பிம்பத்தைத் தயார் பண்ணிக்கறே?" கேட்டு விட்டார்.
நாக்கைப் பிடிங்கிக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டார். ரோஷப்பட்டால் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது? மையமாய் சிரித்துக் கொண்டு நின்றேன்.
"இதுக்குப் பேர்தான் credentialism. சொந்த சரக்கு விலை போகும்னு நம்பிக்கை இல்லாதவன்தான் பேரையும் பட்டத்தையும் வெச்சுக்கிட்டு பிழைப்பு நடத்துவான். உனக்கு இது தேவையா?"
தேவையில்லைதான். ஆனால் தேவைதான். சொந்த சரக்கு தயார் ஆகும்வரை அதைவிட நன்றாக இருக்கும் சரக்கைப் பயன்படுத்திக் கொள்கிறேனே, தப்பா? கேட்கவில்லை.
எனக்கு இங்கே ஜெயமோகன் அவர்களின் பெயரும் அவர் சொல்லியிருக்கிற மேற்கண்ட விஷயமும் தேவைப்படுகிறது- நான் எவ்வளவு சொல்லியும் விளங்க வைக்க முடியாத ஒரு விஷயத்தை மேலே இருக்கிற மேற்கோள் சுருக்கமாக, அழகாகச் சொல்கிறது. சில பேர் கம்யூனிஸ்டாக இருக்கிறார்கள், நான் இப்போதைக்கு, சொந்த சரக்கு தயாராகும் வரை க்ரடென்ஷியலிஸ்டாக இருந்துவிட்டுப் போகிறேனே, வேறு வழியில்லை என்கிறபோது என்ன தப்பு?
நான் ஜெயமோகன் அவர்கள் கலை குறித்து எழுதியிருக்கிற விவரணையைதான் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். அவர் அது குறித்து எழுதியிருக்கிற காரணிகளை, அடிப்படைகளை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அதை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நம் பதிவைப் படித்தவுடன், திண்ணைக்குச் செல்லுங்கள்.
ஆடிசம் (autism) என்று ஒன்று இருக்கிறது. அது ஒரு மாதிரியான எந்திரன் சிட்டி நிலை- "அந்த டிவியைப் போடு," என்றால் போட்டு விடுவார்கள். அவர்கள் அறிந்த மொழியின் ஆழம் அவ்வளவுதான்- அதன் பரப்பில் இருப்பதை மட்டுமே அவர்கள் பொருட்படுத்திக் கொள்வார்கள். உவமை, முரணி, இரட்டுற மொழிதல், உயர்வு நவிற்சி அணி இத்யாதி விவகாரமெல்லாம் அவர்களுக்குக் கை வராதது- வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள் என்றால் அது அவர்கள்தான்.
மொழி என்று இல்லை. நாம் முகத்தை வைத்துக் கொண்டு செய்கிற சேட்டைகள் அவர்களுக்குப் பிடிபடாத ஒன்று. சிரிப்புக்குப் பொருளே சொல்லித் தந்தால்தான் தெரியும். அதிலும் ஏளனச் சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, திமிர் சிரிப்பு, வெட்கச் சிரிப்பு, வேதனைச் சிரிப்பு என்று எத்தனை வகைகள்!- அதுவெல்லாம் இவர்களால் புரிந்து கொள்ள முடியாதது. சுருக்கமாக சொன்னால், அடுத்தவர்கள் மனதில் இருப்பதை மட்டுமல்ல, மற்றவர்களுக்கு மனம் என்று ஒன்று இருப்பதையே 'உணர' இயலாதவர்கள் அவர்கள்- தனக்கு உணர்வுகள் இருந்தாலும், அடுத்தவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தடுமாருகிரவர்கள் அவர்கள். தர்க்க நியாயம் மட்டுமே அவர்களால் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒன்று.
டெம்பிள் க்ராண்டின் என்று ஒருவர். மிகவும் பேசப்படுகிறவர்- அவரும் ஆடிஸ்டிக்தான். அவர் தனது சிந்தனையின் போக்கைக் குறித்து சொல்கிறார், படித்துப் பாருங்கள்- "படங்களால் சிந்தித்தல் - ஆடிசமும் கண்வழிச் சிந்தனையும்", விலங்குகளைப் போல் சிந்தித்தல்"- படித்துப் பாருங்கள். நிறைய சொல்லியிருக்கிறார், அதில் நான் முக்கியமாக சுட்ட விரும்புவது அவர் தன்னால் சொற்களைக் கொண்டு சிந்திக்க முடிவதில்லை என்று சொல்வதைத்தான். அது மட்டுமல்ல- நம்மைப் போன்றவர்கள் வார்த்தைக் கோர்வையாக நினைப்பதை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லையாம்: கல்லூரிக்கு வரும்போதுதான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே பிடிபட்டது அவருக்கு!
ஹரன் பிரசன்னாவின் கவிதைகளைப் பற்றி சொல்ல வந்தவன் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறேன்? மொழி என்பது நாம் நம் உணர்வுகளை இதயம் விட்டு இதயம் பகிர உதவும் பாலம் என்று சொல்லப் போகிறேன். வாய்மொழி வார்த்தைகள் சீராக, கோர்வையாகப் பயணிக்கிறதே, இந்த மொழிபு (narration) தகவலையும் அதன் உட்கிடக்கையான உணர்வையும் கடத்திச் செல்கிற வாகனம் என்று சொல்லப் போகிறேன். ஆடிசம் இருக்கிறவர்கள் மொழியை சுலபமாகப் பழகிக் கொள்வதில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அவர்களின் மொழிபு, உதாரணமாக ஒரு ஆடிஸ்டிக் சிறுவன் சொல்கிற கதை, அவனது கதையாடல், தகவல்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறதே தவிர அவனது மொழி உணர்வுகள் செறிந்த ஒன்றாய் இருப்பதில்லை. சொல்லப்போனால் அதை தர்க்கமும் தகவல்களும் மட்டுமே எஞ்சிய, உணர்வுகள் வரண்ட, மொழியின் சாத்தியங்கள் உலர்ந்த, ஒற்றைப் பரிமாண வெற்று மொழிபு என்று சொல்லலாம்- வெறும் பேச்சு என்று சொல்கிறோமே, ஆழமில்லாத, மேலோட்டமான தகவல் பரிமாற்றம்.
கதைகளை விடக் கவிதை மொழியின் உச்ச சாத்தியங்களை விரித்துத் தருகிறது, இல்லையா? மொழியின் நுட்பங்கள் கைவராதவனது கற்பனை கவிதைக்கு உதவாத ஒன்று. கலைகளில் கவிதை, மொழியின் உயிர். மொழி நம் பகிரப்பட்ட, நமக்குப் பொதுமையாய் இருக்கிற உணர்வுகளின் கருவூலம். ஒரு நல்ல கவிஞன், தன் அறிவின் பிரகாசத்தை மட்டும் வெளிப்படுத்துபவனல்ல, தன் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் நாடகக்காரன் மட்டுமல்ல- அவன் நாம் அறிந்ததில் ஒரு காலும் அறியாததில் மறு காலும் ஊன்றி நிற்கும் ராட்சதன்: சொல்லப்பட்ட சொல்லில் சொல்லப்படாத பொருளைப் புகுத்தக்கூடிய மந்திரவாதி, புற உலக 'மெய்ம்மையை' சொற்களால் வார்த்தெடுத்து அகவுணர்வில் கரைக்கக்கூடியவன், சொல்லின்றி அகவுணர்வாய் ஊறும் உண்மையை அறியப்படக்கூடிய வகையில் வடிவமைத்து வெளிப்படையாய் மொழியக்கூடியவன்.
எனக்கே மூச்சு வாங்குகிறது! நீங்கள் எதற்கும் திரும்பவும் ஒரு தடவை ஜெயமோகன் அவர்கள் எழுதிய விவரணையைப் படித்து விட்டுத் தொடருங்கள்- நான் இது வரை சொன்னதை விட, அவர் எழுதியிருப்பது ஹரன் பிரசன்னாவின் கவிதைகளுக்குப் பொருத்தமாக இருக்கக் கூடும்!
-------
இந்தப் பதிவை எப்போதோ எழுதி முடித்திருக்க வேண்டும் நான்- ஹரன் பிரசன்னாவின் கவிதைகள் என்னைத் தோற்கடித்து விட்டன. விபரமாக சொல்கிறேன். ஏதோ விளக்கம் தருகிறேன் என்று கிளம்பி விட்டேனே தவிர எனக்கும் அவரது கவிதைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரிவதாயில்லை. முதலில் ஒரு மாதிரியாக பிடிபடுவது போல் இருந்தது- நாம் சொல்வது முட்டாள்தனமாக இருந்து தொலைக்கப் போகிறது, எதற்கும் அவரது கவிதைகளைப் பற்றி யார் என்ன சொல்லியிருக்கிறார்கள், அவரேதான் என்ன சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேடினேன்- குழப்பம் அதிகமானதுதான் மிச்சம். வேறு வழியில்லை, என் மனதுக்குத் தோன்றியதை சொல்லிக் கொண்டு போக வேண்டியதுதான், வேறு வழியில்லை.
முதலில் என் குழப்பம் ஏன் அதிகமானது என்பதை சொல்லி விடுகிறேன். ஹரன் பிரசன்னா கிழக்கு பதிப்பகத்தில் பணி புரிகிறார் என்பது டிவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் பேப்பர் கிழக்குப் பிரசுரம் என்பதும் ரகசியமில்லை. அங்கு தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்பவர் கவிதைகிவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். சொல்வனத்தில் தன் கவிதைகள் வந்திருக்கின்றன என்ற செய்தியை சொல்கிற ஹரன் பிரசன்னா தன் தளத்தில், கிவிஞர்களை விரட்டுவோம்-1 என்று அதற்குத் தலைப்பிடுகிறார். இதுவே அவர்தான் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோ என்ற ஐயத்தை வரவைக்கிறது. போதாக்குறைக்கு அவர் வா மணிகண்டனின் தளத்தில் ரொம்ப நாள் முன்னமேயே எப்படி கவிதை எழுதுவது என்று வழி காட்டுவது மாதிரி கவிதைகிவிதை எழுதி இருக்கிறார்- இங்கே.. அது என் கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டபின் என்னால் ஹரன் பிரசன்னாவை சீரியசான கவிஞராகக் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் கவிஞனின் அடையாளத்தோடேயே விளையாடுவது போல் தெரிகிறது, ஆபத்தான விளையாட்டு.
இருந்தாலும் அவர் இந்தக் கவிதைகளை சீரியஸாக எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொண்டு படிக்கிறேன்- இதோ அவர் எழுதியுள்ள மூன்று கவிதைகளில் மூன்றாவது-
வாயின் வழியாக
பாம்புக் குட்டிகள்
வந்த வண்ணம்
எவனோ ஊதும்
மகுடிக்கு என் ஆட்டம்
ஊரெங்கும்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
கண்ணாடியில் என் முகமேகூட
வரைகலையில் மாற்றிவிட்ட மனிதன்போல
பத்தியாகவும் வாலாகவும்
மொழு மொழு உடலாகவும் தெரிகிறது
பாம்பிலிருந்து பாம்புக்குட்டிகள்
தோன்றுவது இயற்கையே
என்கிறது ஓர் அசரிரீ
மகுடிக்காரன் நிறுத்தினால்
என் பத்தி சுருங்கலாம்
பாம்புக்குட்டிகள் வீடடையலாம்
ஆனால்
நிற்பதே இல்லை மகுடிக்காரனின் இசை
நான் புரிந்து கொண்ட வரை ஹரன் பிரசன்னாவை உடைத்தெறிய முனைகிற கவிஞர் என்று சொல்லலாம். உணர்வுகள் உடைத்துக் கொண்டு வெளிவர முனைகின்றன, அல்லது வெளிவர வழியில்லாமல் அடங்குகின்றன. கண்ணாடிகள் உடைகின்றன, அல்லது ஏதேனும் சொல்கின்றன. அசாதாரணத்தின் நிழல் ஏறத்தாழ எப்போதும் அவர் கவிதைகளில் தலை காட்டுகிறது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடு தெரிவதில்லை. இயற்கை நிறைய இடங்களில் வருகிறது, ஆனால் அதற்கும் மானுட சாயம் பூசப்பட்டிருக்கிறது- மிருகமாயிருக்கிறது மானுடம். இவரது இந்த மூன்று கவிதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் முழுமையான ஒரு தொகுதியைப் பற்றிப் பேசுவது இது போல் எழுதுவதற்கு இன்னும் சிறப்பாக உதவக்கூடும்- ஆனால் அதற்குமுன் இவரது கவிதைகள் எவ்வளவு சீரியஸாக எழுதப்பட்டன என்பது குறித்து ஒரு தெளிவு வேண்டும். அது இல்லாதபோது நாம் சொல்வது அபத்தமாக இருந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
பாற்கடல் என்ற கவிதையைப் பாருங்கள்-
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
இந்தக் கவிதையில் குதிரைகள் பாய்ந்தோடுகின்றன; அலையடிக்கிறது, அதில் ஆயிரம் மலர்கள் மட்டுமல்ல கட்டிலும் மிதக்கிறது- ஏதோ வெள்ளம் வந்துவிட்டது போலில்லை? அம்மா கூட என்ன நீர்ச்சத்தம் என்று கேட்கிறாள். ஆனால் இந்த காட்சியிலும் ஒரு அமைதி தெரிகிறது- கனவின் நிறத்தில் மலர்ந்த மனைவி, புரண்டு படுக்கிற மகனின் முகத்தில் புன்னகை. (வாயிடுக்கில் ஒழுகும் நீர் அவனது ஆழ்ந்த அமைதியான உறக்கத்தை மிக சுலபமாக காட்சிப்படுத்துகிறது- விஷ்ணுவின் புன்னகை என்பது போனஸ். ஒரு சமயம் கவிதையின் முடிவில் மலர் ஒன்று விஷ்ணுவுக்கு வைக்கப்படுவதற்கு அச்சாரமாக வருகிறதோ என்னவோ!) புற அமைதியும் அதன் ஆழத்தில் அது உடைபட்டுக் கொண்டிருக்கிற நிகழ்வும். வேறு சில சமயங்களில் இந்த உடைபட்ட நிஜம் அசாதாரணமான வகையில் வெளிப்படுகிறது. அதற்காக வெளிக்காட்சிக்குத் தெரியும் அமைதி பொய்யாவதில்லை. அதுவும் நிஜம்தான். இரண்டு வெவ்வேறு உலகங்களை இவரது கவிதைகள் சமதளத்தில் வைத்துப் பேசுகின்றன.
இந்தக் கவிதையைப் பொருத்தவரை, "கனவின் நிறத்தில்/ மலர்ந்த மனைவி/.." என்பதையும் "அந்த இரவில்/ அப்போது மலர்ந்த/ தாமரை மலர்கள்/..." என்பதையும் "புரண்டு படுக்கிறான் மகன்/ விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி/..." என்பதையும் "ஒரு மலரை எடுத்து/ விஷ்ணுவுக்கு வைத்தேன்/..." என்பதையும் தொடர்பு பண்ணிப் பேசக் கூடாது. அது எவ்வளவு அழகான, நெகிழ்வைத் தருகிற அன்பு கூடிய ஒரு இன்டிமேட்டான காட்சியை சுட்டுகிறது என்றாலும் இதையெல்லாம் ஒரு கவிஞனின் மனநிலையை உணர்த்துவதாக வைத்துப் பேசுவது நம் பண்பாடல்ல.
ஒளி என்ற கவிதையிலும் அசாதாரணமும் சாதாரணமும் இணைந்தியங்குகின்றன- காசைக் கடன் வாங்குகிற மாதிரி சூரியனின் ஒளியைக் கவிஞர் பைக்குள் போட்டுக் கொண்டு நடக்கிறார்- அவர் போகிற இடமெல்லாம் ஒளி அவரைச் சூழ்கிறது, "மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ எங்கோ ஓட/": மனமெங்கும் சூழ்ந்திருந்த/ திசையறியா வேதனை/ என்பது எவ்வளவு அழகான பிரயோகம்- வேதனையின் இயல்பை, அதன் உக்கிரத்தை மிக எளிமையான சொற்களில் சுட்டிக் காட்டி விடுகிறார் ஹரன் பிரசன்னா. அப்புறம் அடுத்த நாள் காலை சூரியன் வந்து இந்த வெளிச்சத்தைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான்- "நான் குளிரத் தொடங்கினேன்/ என் வெளிச்சத்தில்/ இன்னும் பிரகாசமாக சூரியன்" என்று முடிகிற கவிதையில் யாருடைய வெளிச்சத்தில் இப்போது யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, இல்லையா? இந்த வெளிச்சம் பார்க்கப் போனால் யாருக்கும் சொந்தமில்லை என்று தோன்றுகிறது- யாரைத் தொடுகிறதோ, அவர்களுக்கு அது சொந்தமாகி விடுகிறது, இருந்தாலும் போனாலும்.
இது எல்லாம் நடக்கிற காரியமல்ல. ஆனால் ஒரு அசாதாரண நிகழ்வை எவ்வளவு சுலபமாக சாதாரண நிகழ்வுகளாகக் காட்டி விடுகிறார் பாருங்கள். அதுவும் எந்தவிதமான அதீத வார்த்தைப் பிரயோகமுமில்லாமல் சாதாரண நிகழ்வுகள் அசாதாரணத்தைத் தொடுகின்றன. இது சுலபமான விஷயமில்லை. சாதாரண நிகழ்வுகள், அசாதாரண நிகழ்வுகள், இரண்டும் ஒரே தளத்தில் இயங்குகின்றன, ஒன்றோடோன்று ஊடாடுகின்றன- இவை விவரிக்கப்படுவது எளிய சொற்களால், ஏறத்தாழ அன்றாட நிகழ்வுகளால். அதி அற்புதமான, பிரமிப்பைக் கூட்டக்கூடிய சொற்களாலும் காட்சிகளாலும் இதை இவர் செய்திருக்கலாம், அதுதான் இம்மாதிரியான கவிதைகளுக்கு இயல்பான, உஷாரான குரல். ஆனால் துணிந்து ஹரன் பிரசன்னா அதைத் தவிர்க்கிறார். ஜெயித்தால் ஜாக்பாட், தோற்றால் சட்டை கூட மிஞ்சாது.
மகுடியிலும் இந்த மாதிரி அசாதாரண விஷயங்கள் சாதாரணமாகப் பெசப்படுவதையும், சாதாரண விஷயங்கள் அசாதாரணத்தின் தளத்தைத் தொடுவதையும் பார்க்கலாம்- ஆனால் இன்னும் வேறு ஓரிரு விஷயங்களைப் பேசவிருப்பதால் இந்தக் கவிதையின் வாசிப்பை உங்களுக்கேவிட்டு விடுகிறேன். என்னைக் கேட்டால் நான் மேற்சொன்ன விஷயங்கள் ஹரன் பிரசன்னாவின் கவிதைகளின் பொதுத் தன்மையாக இருக்கிறது என்று சொல்வேன்- இந்த மாதிரி எழுதுகிற எல்லாரது கவிதைகளிலும் இது இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது.
----
நீங்களெல்லாம் எப்படியோ தெரியாது, நான் நாமனைவரும் நம் அக மற்றும் புறவுலகங்களின் இயல்பைக் கதைகள் வழியாக பாவித்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதற்கு நம் தலைக்குள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் குரலே சாட்சி. நாம் அனைவரும் நம் சுயசரிதையை நினைவில் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதை சரியாக எழுத முடியாதபோது, அல்லது நம் வாழ்வின் நிகழ்வுகளை அந்தக் கதையில் பொறுத்த முடியாதபோது உளச்சிக்கல்கள் வருகின்றன என்றும்கூட சில உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கதையை விட கவிதை கூடுதல் செறிவுடன் உணர்வையும் நிகழ்வையும் ஒரே தளத்தில் வைத்துப் பேசுகிறது. தீவிர உளக் குமுறலில் இருப்பவர்களுக்கெல்லாம் அதனின்று விடுபட்டதன் பின்னணியில் ஏதோ ஒரு நிகழ்வு அவர்கள் வாழ்க்கைக் கதையில் திருப்பு முனையாக உட்கார்ந்திருக்கும். ரொம்ப அதிகமாக எழுதி விட்டதால் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றுத் தோன்றுகிறது- வேறோரு சமயம் இது குறித்தெல்லாம் எழுதுகிறேன்!
நான் சொல்ல வருவது என்னவென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற காற்று மாதிரி கதைகள் நம்மை உருவாக்கிக் காப்பாற்றி வைக்கின்றன. கதையை விட கவிதைகள் அதன் அழகாலும் அடர்த்தியான வடிவாலும் மறக்க முடியாத சொற்களாகவும் காட்சிகளாகவும் மனதில் நிலைத்து நின்று விடுகின்றன. பிரமிளின் எழுதிச் செல்கிற இறகு பல பேருக்கு வாழ்க்கையின் இயல்பின் குறியீடாகக்கூட இருக்கும், இல்லையா? கவிதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. மொழியின் வேரில் கிளைத்து, அதற்கு வளம் சேர்ப்பது கவிதை.
சமகால கவிதையின் கணிசமான அளவில் உரத்து ஒலிக்கும் குரல்களின் ஒரு போக்கு குறித்து ஒரு வார்த்தை, சண்டைக்கு வராதீர்கள்- தூசுகூடப் பட்டுவிடக் கூடாதென்று தன் சட்டையின் பளபளப்பைப் பாதுகாத்து எப்போதும் தன்னைப் புதுசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டே வேலைக்குப் போகிற புது மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் அலுப்பு தட்டிப் போய் விடுவானோ, அது போலவே தன்னைக் கவிதையாகக் காட்டிக் கொண்டு கவிதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிற கவிதைகளும் ரொம்ப சீக்கிரம் அலுப்பு தட்டி விடும், இல்லையா?
நல்ல வேளை, ஒரு ஈர்ப்பிருந்தாலும் ஆன மட்டும் அதை எதிர்த்துப் போராடுகிறார் ஹரன் பிரசன்னா. ஆனால் இந்த மொழிப் போரில் கவிதைகிவிதை எழுதி பேரைக் கெடுத்துக் கொண்டு கவிஞனாக தன் நம்பகத்தன்மையை இழந்து அவர் தியாகி ஆகி விடும் ஆபத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
======================
டிஸ்கி: இந்தப் பதிவை எழுதிய பிறகு இன்றுதான் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் திரு ஹரன் பிரசன்னா அவர்கள் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதால் இப்போது இதில் நிறைய உளரல் என்று தெரிய வருகிறது. எனவே வாசக அன்பர்கள் உயர்த்திய புருவமும் ஏளனச் சிரிப்புமாய் இந்தப் பதிவைத் தாண்டிப் போய் விடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிஸ்கி: இந்தப் பதிவை எழுதிய பிறகு இன்றுதான் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் திரு ஹரன் பிரசன்னா அவர்கள் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதால் இப்போது இதில் நிறைய உளரல் என்று தெரிய வருகிறது. எனவே வாசக அன்பர்கள் உயர்த்திய புருவமும் ஏளனச் சிரிப்புமாய் இந்தப் பதிவைத் தாண்டிப் போய் விடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
7 comments:
நட்பாஸ்
’’சொல்லப்பட்ட சொல்லில் சொல்லப்படாத பொருளைப் புகுத்தக்கூடிய மந்திரவாதி, புற உலக 'மெய்ம்மையை' சொற்களால் வார்த்தெடுத்து அகவுணர்வில் கரைக்கக்கூடியவன், சொல்லின்றி அகவுணர்வாய் ஊறும் உண்மையை அறியப்படக்கூடிய வகையில் வடிவமைத்து வெளிப்படையாய் மொழியக்கூடியவன்’’
அழகாய்ச்சொல்லியிருக்கிறீர்கள்.கவிதை வாசிப்பதில் இவை நிகழவேண்டும் இல்லையா.
உங்கள் எழுத்து கவிதையோடு பல தகவல்களையும் தொட்டு தந்திருக்கிறது
நன்றி
இவ்ளோ பெருசா நீட்டி முழக்கி எழுதினதுக்கு ஏதோ நீங்களாவது ஆறுதலா நாலு வரி சொன்னீங்களே, மிக்க நன்றி.
ஆட்டிசம் பற்றி இங்கே எழுதியிருப்பதில் பிழை ஏதேனும் இருக்கிறதா? ஆடிசம்- மொழி உணர்வு குறைவு- மற்ற மனங்களை உணர இயலாமை, இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முக்கியமாக ஜெமோ எழுதியிருக்கிற மொழிபு (narration) ஒரு அறிதல் முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆடிஸ்டிக் நபர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளுக்கு பல காரணிகள் இருக்கலாம், அதில் இந்த மொழிதல் இயலாமையையும் ஒன்றாக சொல்ல முடியுமா? டெம்பிள் க்ராண்டின் சொல்வதை எந்த அளவுக்கு இதில் பொருத்திப் பார்க்கலாம்?
:)
"மொழிதல் இயலாமை"- மொழிய இயலாமை என்று படிக்கவும்!
ஒரு கவிதையை பல கண்ணோட்டத்தில் காணலாம். ஆடிஸ்டிக் நபர்கள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு. கவிதையே மன வெளிப்பாடுதானே. மொழிதல் இயலாமை என்பதை விட சொற்களில் வெளிப்படுத்த இயலாமை என்பதே பொருந்தும். சொற்களில் வெளிப்படுத்தும்போது மட்டும் எதுவும் கவிதையாகிவிட இயலாது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி போன்ற உணர்ச்சிகளை உள்ளடக்கி படிக்கும் / கேட்கும் / பார்க்கும் / உணரும் எவருக்கும் அந்த உணர்ச்சிகளை அழகுற வெளிப்படுத்தும் எந்த படைப்பும் கவிதை என்றுதான் நான் சொல்வேன்.
நன்றி வீரராகவன். நான் சரியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
சொற்களைக் கொர்வையாகத் தொகுத்து அதில் தகவல்களையும் உணர்வுகளையும் உள்ளடக்கமாய்க் கொள்ள இயலாததுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன். அது நமக்கு இயல்பாக நிகழ்வதால் நமக்கு அந்த சிக்கலைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.
நட்பாஸ்
ஓடிஸம் என்பது வெளிப்படுத்த முடியாததால் வரும் சிக்கல் அல்ல.
அது பலதன்மைகளைக்கொண்ட ஒரு அசாதாரண இயல்பு.
வெளிப்படுத்தாததன்மை மொழிச்சிக்கல் ,மற்றவர்களோடு சேர முடியாமை,உடல் மொழியில் கூட வெளிப்படுத்தாத தன்மை, கண்ணைப்பார்த்து பேசமாட்டார்கள் , குறுகிய ஆர்வம், சில சொற்களைப்பேசுதல,சில செயல்களை மீண்டும் மீண்டும் செய்தல்(social interaction ,communication,no eye to eye contact, stick to one interest - numbers,stereotype behavior) பலர் அறிவுவளர்ச்சியும் குறைந்த வர்கள்.
மொழிபற்றிய குறைபாடு இந்தத்தன்மையின் ஒரு இயல்பு; காரணியாகச்சொல்லப்படுவதில்லை.அதாவது அவர்கள் மொழிவதில்லை.மொழிவதற்கு இன்னொரு மனிதர் தேவை.அவர்கள் இன்னொரு மனிதர் இருப்பதை கவனிப்பதில்லை
அவர்களுக்கு வெளிப்படுத்த, பேச மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தோன்றுவதில்லை.ஏதாவது ஒன்றிற்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் செய்துகொண்டேயிருப்பார்கள்.
அஸ்பேஜர் என்கிற இன்னொரு தன்மையில் அவர்கள் அறிவு சாதரணமாய் இருக்கும் பழகும் தன்மை இருக்காது. மை நேம் இஸ் கான் இல் சாருக்கான் இந்த தன்மை என்று படித்தேன்.
expressive/receptive disorders ,reading disorders,writing disorders, என தொடர்பாடல் தொடர்பான வேறு குறைபாடுகள் தனியே இருக்கின்றன.வாசித்தறியும் தன்மை குறைந்தவர் படிக்கமுடியாது.பேச்சில் வெளிப்படுத்த முடியாதவர்கள் இருக்கிறார்கள்.
மூளையில் பேச்சு உணர்வுப்பகுதி, பேச்சு செயற்பாட்டுப்பகுதி என்று இரண்டு இருக்கின்றன.இரண்டும் சரியாக இருந்தால் தான் நினைப்பதைப்பேச முடியும். பேனையைக்காட்டினால்
ஆடு என்பார்கள்.பேனை என்று சொல்லமுடியாது.
நினைத்தேன், இப்படி ஏதாவது இருக்கும் என்று.
நான் நினைத்ததை சரியாக சொல்லவில்லை என்பது தெரிகிறது- தேவையே இல்லாமல் ஆடிசத்தை இங்கே இழுத்து விட்டிருக்கிறேன். பதிவும் நீண்டு போய் விட்டது அதன் மையக் கருத்தும் நீர்த்துப் போய் விட்டது. ரொம்ப லேட்டாகத் தெரிகிறது.
ஆடிசம் பற்றி விளக்கியதற்கு நன்றி டாக்டர். அதை மொழிபு விஷயத்தில் எப்படி இணைக்க முடியும் என்பதைத் தனியாகத்தான் பார்க்க வேண்டும்.
பயனுள்ள தகவல்கள், நன்றி.
Post a Comment