May 4, 2015

உத்தம வில்லன்

‘குறியீடு’ எனும் வார்த்தை தமிழ் இணையத்தைப் பாடாய்ப் படுத்தித் தொலைக்கும் வார்த்தைகளுள் முதன்மையான வார்த்தை எனலாம்.
 
குறியீடு’ன்னா என்னய்யா என்பவர்களுக்கு மட்டும்: இத்த வெச்சி அத்த சொல்றது; அத்த வெச்சி இத்த சொல்றது; சொல்லாமலே சொல்றது; சொல்லிட்டு சொல்லாம இருக்கறது என்ற பல ரக சொல்லுதல்/சொல்லாததல்கள் வாயிலாக ரசிகனை படைப்பாளி ரேஞ்சுக்கு பக்கத்தில் கொண்டு சென்று சொல்லாமல் சொன்னதைப் புரிந்துகொள்ள வைப்பது (என்று நினைக்கிறேன்). புரியாதவர்கள் உவி என டைப் செய்து உங்கள் பெயர் வயது ஊர் விபரங்களை எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால் மேலும் விபரமாக குழப்பப்படும்.
 
உத்தமவில்லன்: ஒட்டுமொத்தப் படமும் குறியிடும் ஒரு மெகா குறியீடு “இது கமல் கதை” என்பதே. இது புரிந்தால் உவி உள் நீங்கள் புகலாம். இல்லாவிட்டால் காதல் படத்தின் க்ளைமாக்ஸில் தலையைப் பிராண்டும் பரத் போல இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்ததும் நீங்கள் படம் விட்டு வெளியே வர நேரிடும்.
 
மைமகாரா படத்தின் சுப்ரமணியராஜு அறிமுகக் காட்சியில்...
 
ராஜூ: ஒரு ஆர்ட்டிஸ்டோட கஷ்டம் இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டுக்குதான் தெரியும். நாங்கூட ஆர்ட்டிஸ்டுதா்ன்
 
குஷ்பு: ஆர்ட்டிஸ்ட்? யூ மீன், ஸ்கல்ப்ச்சர்ஸ், ட்ராயிங்?
 
ராஜூ: ச்சீச்சீ இல்லீங்கோ! ஸ்டேஜ் ட்ராமா ஆர்ட்டிஸ்ட்
 
அந்த ”ச்சீச்சீ” ரொம்பவும் உன்னிப்பாய் கவனிப்பவர்களுக்குத்தான் கேட்கும். அதே ரகம் இங்கேயும் சில வசனங்கள். இருபத்தி ஐந்து வருடமாகியும் கமல் மாறவில்லை.
 
இங்கே உதாரணம்: உத்தமன் கமல் - நாசரிடம்: “உங்களுக்கு இத்தனை அழகான மகளா?” என்று போகிற போக்கில் கேட்பது - how many of you noticed this?
 
By the way, படம் வெளிவந்த இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே  தமிழ் இணையத்தில் குறைந்தது இருநூறு பேர் உவி விமர்சனம் எழுதிக் குவித்துவிட்டதால், படத்தைப் பற்றி நான் சொல்லப் புதிதாய் ஏதுமில்லை. விமர்சனங்களில் குறிப்பிடிபட விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
 
அந்த உத்தமன் பார்ட் ரொம்ப நீளம் / boaring: எனக்குச் சத்தியமாய் அப்படித் தெரியவில்லை. படத்தின் most interesting aspect அந்த போர்ஷன் என எனக்குத் தோன்றியது. ரெகுலர் போர்ஷனில் ஒரு நல்ல கமல் ரசிகன் அவதானிக்கத்தக்க க்ளிஷேக்கள் நிறைய; அவற்றை சமன் செய்ய உத்தமன் போர்ஷன் நல்ல ஆசுவாசம் தந்தது.
 
நாசர் / பூஜாகுமார் ஓவர் ஆக்டிங்: I love Nasser more than Kamal. சம காலத்தில் கமலுக்கு நிகராக அல்லது சற்றே மேலாகவேயும் கூட இயங்கத் தெரிந்த தமிழ்க் கலைஞன் எனப் பார்த்தால் நாசர் ஒருவர்தான். பிரகாஷ்ராஜ் சிற்சில மார்க்குகளில் கமலுக்கு மூன்று படி கீழே இருப்பார். நாசருக்கு கதைக்குள் கதையில் மட்டுமே ரோல். அதற்கு வெளியே அவருக்குக் கொஞ்சமும் ரோல் இல்லை. So he does what is required for THAT role. அந்த ரோலுக்கு ஞாயமானதை மட்டுமே அவர் செய்கிறார். Exactly the same with Pooja Kumar. அவருக்கும் கதையினில்  கதையில் மாத்திரமே ரோல். அதன் வெளியே ஒன்றிரண்டு காட்சியில் மட்டுமே அவருக்கு வசனங்கள், அவையும் ஸ்கோப் அல்லாத (which exactly make sense for the movie).
 
ஞானசம்பந்தம் ஐயாவின் ஓவர் ஆக்ட்: Not at all.
 
 
And by the (one more) way, நம்ம நண்பர் கோகுல் ஃபேஸ்புக்கில் இந்தப் படத்திற்கு எழுதிய விமர்சனம் (!!!!), என் மனநிலையை ஒட்டியதாகத் தோன்றியதால் அவர் எழுதியதை இங்கே அப்படியே காப்பி பேஸ்ட் அடிக்கிறேன்:
 
 
 
//
 
உத்தம வில்லன்.
அன்பே சிவம் படத்தை Planes, Trains & Automobiles அப்புடீன்னு களுவிக்களுவி ஊத்துன நாம, தேவர் மகனை PC Sreeram/பரதன் இல்லாட்டி வேஸ்டுன்னு சொன்ன நாம, MMKRஐ அவ்ளோ பெரிய ஹிட்டாவெல்லாம் ஆக்காம, யூட்யூப்ல ஹிட்டாக்கி, bot வெச்சு கொண்டாடுற நாமதான் இதையும் விமர்சனம் பண்றோம்.

எனக்கென்னவோ இந்தப்படத்தை இப்போ ரெண்டே வாரத்துல ஊத்தி மூடிட்டு, தீவாளிக்கு டீவியில பாத்துட்டு, ஒரு நாலஞ்சு வருஷங்கழிச்சு மெதுவா warm up ஆகி புரிஞ்சிக்க ஆரம்பிப்போம் அப்புடீன்னு தோணுது. நம்ம டகால்டி எதுன...ா அறுவத்துநாலு பக்கத்துக்கு ஒரு slice/dice பண்ணுவாரு, புதுப்புது குறியீடு கண்டுபுடுச்சு, அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு கொண்டாடுவோமின்னு நெனைக்குறேன்.

நம்ம கார்த்திக் (ஹிந்து பேப்பர்க்காரருங்க) சொன்னா மேரி, சில விஷயங்களைக் கமலாலதான் பண்ண முடியும். தனக்குத்தானே ஓட்டிக்கிறது new wave டைரடக்கருங்களுக்கு வருதுன்னா, அதை செய்ய முடியிற ஒரே பழைய ஆளு நம்மாளுதான். ‘இது-எந்தப்-படத்துக்கு-ரெஃபரென்ஸ்’ game வெளையாடினிருந்தேன் படம் பாக்கறச்சே. ஆளவந்தான், தேவர் மகன், ஹே ராம், சிங்காரவேலன், விருமாண்டி (என்ற சண்டியர்) எல்லாம் நெம்ப obvious. மறைஞ்சு கெடக்குறதை மத்த அண்ணமார்கள் வெளீல கொண்டு வந்து நமக்கே அறிமுகப்படுத்துவாங்க. (ஐயோ… இது குருதிப்புனல்.)

நம்ம முனைவர் அ செ ஞானசம்பந்தம். அவரை சும்மாவே எனக்கு நெம்பப்பிடிக்கும். படத்துல வர்ற Sly remarks எல்லாம் இந்தாளே எழுதிக்கொடுத்த மேரி இருக்கு. சொல்ல மறந்துட்டனே? இந்தப்படத்துக்கு யாரும் வசனம் எழுதலை. அவங்கவங்க அப்பப்போ தோணுனதை பேசியிருக்காங்க. அதை, as usual, live recording பண்ணிருக்காரு கமல், err…., ரமேஷ் அரவிந்த். மறந்துட்டேன் பாருங்க அவரை. ஏங்க, படத்துக்கு இன்னார்தான் வசனம் எழுதுனாருன்னு சொன்னா என்னங்க கொறஞ்சு போகும்? ஒரு கட்டைய எடுத்து வெச்சா கிரேஸி வாசனை, இன்னோரு கட்டைய எடுத்து வெச்சா கமல் வாசனை, இன்னோரு கட்டைய எடுத்து வெச்சா…. you get the drift.

ஜிப்ரான் பின்னிட்டாருங்க. பின்னிட்டாரு. ஒரு ம்யூஸிக்கலா இந்தப்படம் நல்ல்ல்ல்லா தேறும். இப்போவரை Career best இந்தாளுக்கு. கமல் (ஆஹ். ரமேஷ் அரவிந்த்), ஒவ்வொரு பயலையா எடுத்து, சக்கையாப் புழிஞ்சு, நல்லா வேலை வாங்கிட்டு, அப்புறம்… அப்புறம்… சக்கையை தூற எறிஞ்சிருவாரு. பாக்கலாம்.

கூட நடிக்கிறவங்க எல்லாம் மெதுவ்வ்வ்வ்வா, கமலோடயே வயசாகுறவங்க. சிங்காரவேலன்ல அடி வாங்குற அஜய் ஆகட்டும், சித்ரா லட்சுமணன் ஆகட்டும், ஊர்வசி ஆகட்டும், நாசர் ஆகட்டும், நம்ம விருமாண்டி (கெட்ட) இன்ஸ்பெக்டர் ஆகட்டும், பூஜா/ஆண்ட்ரியா (ஹிஹி) ஆகட்டும்… ஏங்க கமல் ஸார் (ஸாரி, ரமேஷ் அரவிந்த் ஸார்), புதுமுகங்களை நம்ப மாட்டீங்களா?
ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். ரமேஷ் அரவிந்த். இருக்காரு. போதுமா?

எப்புடியும் பொறுமையா, கூட்டம் கொறஞ்சோடனே, அடுத்த வாரமே, இன்னோரு தபா பாத்தா….. போறேன்.
//

Apr 15, 2015

தந்தனை.... கேட்டேன்....

சுஜாதா ரஹ்மானுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ராஜாவுக்குப் பாடிய ‘ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே’ எனக்கு ரொம்பவும் மனசுக்கு நெருக்கமான பாடல்.

அப்படித்தான்.... சித்ரா ராஜாவுக்கு எத்தனை பாடியிருந்தாலும் அவர் ரஹ்மானுக்குப் பாடிய ‘தொடத் தொட மலர்ந்ததென்ன’வில் அவர் குரல் அவர் பாடிய அத்தனை பாடல்களினும் ஓர் உச்சத்தைத் தொட்டிருப்பதாக எனக்குப் படும். குறிப்பாக முதல் சரணம் நிறைந்ததும் அவர் தொடங்கும் பல்லவியில்.

சற்றே ஓர் இடைவெளிக்குப் பிறகு சித்ரா ரஹ்மானுக்காய் ஓகே கண்மணியில் இப்போது “மலர்கள் கேட்டேன்” என்று பாடியிருக்கிறார்.

ரஹ்மான், வைரமுத்து, ஸோலோ, மெலடி, சித்ரா - வேறென்ன வேணும்?



முதல்முறை கிள்ளிப் பார்த்தேனில் ரஹ்மானிடம் கேட்டு முடியாத கஞ்சிராவின் மிச்சப் போதையை இரண்டாம் சரணத்திற்கு முந்தைய இண்டர்லூடில் கேட்கலாம். 

பழைய ரஹ்மான காணோம் சார் என்ற கம்ப்ளைனர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் இந்தப் பாடல். பாட்டைப் பத்தி நிறைய பேசலாம்; இப்போ பாட்டைக் கேளுங்க. நேரமிருந்தா நேர்ல வாங்க... அந்த நிறையவையெல்லாம் பேசலாம்.

Mar 15, 2015

ஒரு வாய்ப்பு குடுங்க சார் ப்ளீஸ்



இந்த அனுபவத்தை எழுதியே தீரவேண்டும் என்று எழுதுகிறேன். உங்களுக்கு அசுவாரசியமான விஷயமாக இது தோணலாம். மேலும் இங்கே முதலில் சில கேள்விகள். போரடிக்கும் என்றால் நீங்கள் நேரடியாக ஐந்தாம் பத்திக்குத் தாவலாம். ரொம்பவும் போரடித்தால் அடுத்த ப்ளாகுக்கு நீங்கள் தாவலாம். ஓகே, ரைட்.... ஹியர் யூ கோ!

ஒரு உண்மையான கலைஞனின் அங்கீகாரத்திற்கான ஏக்கத்தை நேரடியாக தரிசித்திருக்கிறீர்களா? அவன் தன் திறமையைக் காட்ட மேடையேறி வருகையில் நிறைந்த அரங்காக இருந்த ஒரு அரங்கு ஒரு சலசலப்புடன் கலைந்து போவதைப் பார்த்திருக்கிறீர்களா? கலைந்த அரங்கைக் கண்டவன் ஒரு தடுமாற்றத்துடன் தன் நிகழ்வைத் தொடங்கக் கண்டிருக்கிறீர்களா?

கைத்தட்டலுக்காக ஏங்கியிருக்கிறீர்களா? முதுகில் தட்டிக் கொடுத்து யாரேனும், “ஷோக்கா செஞ்சபா நிய்யீ”, என உங்களை உற்சாகப் படுத்துவார்களா என்று காத்திருந்தது உண்டா? அப்படி ஏதும் கைத்தட்டல், முதுகுத்தட்டல் கிடைத்தது உண்டா? இல்லையா? கிடைத்தும் கிடைக்காமற் போனதும் உண்டா?

நாம் எல்லாருமே ஒருவகையில் இந்த உணர்ச்சிகளைத் தாண்டாமல் வந்ததில்லை. சரி விஷயத்திற்கு வருகிறேன்....

வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் ஒரு ஐந்து மணிநேரம் அலுவல் இல்லாத அலுவல் செய்யத் தலைப்பட்டேன். 

அமெரிக்கா ஹேஸ் காட் டேலண்ட் (America's Got Talent) அல்லது ”இந்தியா’ஸ் காட் டேலண்ட்” போல எங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தப் பிரியப்பட்டோம். கடந்த மூன்று - நான்கு மாத நேர கடின உழைப்பில், வேலை நேரம் போக மீத நேரத்தில் அல்லது வேலை நேரத்தின் இடையேவே கூட கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதற்காகத் திட்டமிட்டு, கான்கால்கள் அட்டெண்ட் செய்து, இங்கே ஓடி, அங்கே ஆடி, பல விஷயங்களை அப்படியிப்படி ஒருங்கிணைத்து ஒருமாதம் முன் prelims நடத்தி ஒருவாறாக வெள்ளியன்று Grand Finale அமோகமாக நடந்தேறியது.

எங்கள் கம்பெனியின் மூன்று அலுவலகங்களில்  (facilities என்று எங்கள் பாஷையில் சொல்வோம் - சோழிங்கநல்லூரில் இரண்டு, போரூரில் ஒன்று என்று எங்கள் BPO’வுக்கு மூன்று அலுவலகங்கள் சென்னையில் உண்டு) prelims என்கிற முதற்சுற்று நடந்தது. மூன்று இடங்களிலும் இருந்து இறுதிப் போட்டிக்கு 22 பேரைத் தேர்வு செய்தோம். சோழிங்கநல்லூரின் தாய் அலுவலகத்தில் இறுதிப் போட்டி நடந்தேறியது.

ஆட்டம், பாட்டம், MIME, மிமிக்ரி, flash mob என நிகழ்வுகள் நடந்து முடிந்து முடிவுகளை அறிவிக்க நடுவர்களின் ஸ்கோர்ஷீட்டுகளை நாங்கள் எடுத்துக் கொண்டு லாப்டாப் தேடியோடி, மூன்று நடுவர்களின் மார்க்குகளையும் ஆள்மாறாமல் வரிசை மாறாமல் பட்டியலிட்டு என்று நாங்கள் உழன்ற வேளையில் - stop gap arrangement அல்லது filler அல்லது ஏதோ ஒன்று செய்ய வேண்டுமே என்று இறுதிப்போட்டியில் பங்கேற்காத ஒரு பயலை மிமிக்ரி பண்ண அழைத்து வந்திருந்தோம். இறுதிப் போட்டியிலேயே  கூட ஒரு போட்டி நிகழ்வாக மிமிக்ரி இருந்திருந்தாலும் முடிவு அறிவிப்பிற்கு முன் நேரக்கொலைக்கு பயல் தேவைப்பட்டான்.

முந்தைய prelims ரவுண்டில் இந்த மிமிக்ரி செய்த பயல் பங்கேற்று ஏனோ இறுதிக்குத் தேர்வாகவில்லை. ஒருவாரம் முன் இந்த நிகழ்ச்சிக் கமிட்டியின் இன்னொரு மெம்பர் ஸ்ரீ என்னை எங்கள் கேண்டீனில் பார்த்தபோது, இந்தப் பயல் தான் ஏன் தேர்வாகவில்லை என்று கேட்கிறான். குறைந்தபட்சம், இறுதிப் போட்டியின் போது ஒரு guest appearance'ஆக தான் ஒரு ஐந்து நிமிடம் மிமிக்ரி செய்ய விரும்புவதாகச் சொல்கிறான், அனுமதிக்கலாமா” என்று கேட்டார். எங்கள் facility'க்கு இந்த நிகழ்வுக்கு நான்தான் lead. ”இல்லை வேண்டாம், இது மற்ற participants இடையே தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும், வேண்டாம்” என்று முடிவு செய்து விட்டோம்.

மறுநாள் ஸ்ரீ’யிடம் இருந்து ஒரு மெயில். இந்தப் பயல் அவருக்கு எழுதியிருந்தான். “சான்ஸ் ப்ளீஸ்”, என்பதுதான் மெயிலின் சாராம்சம். நிகழ்வின் சீனியர் தலைவரை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மீண்டும், “நோ”, என்று அந்த மெயிலுக்கு பதில் எழுதினேன்.

வெள்ளியன்று மாலை இறுதிப் போட்டிகள். வியாழன் இரவு ஒன்பதேமுக்காலுக்கு எனக்கு அலுவலகம் நிறைந்து cab ஏற வேண்டும். ஒன்பதரைக்கு என் project தேடி, என் சீட்டினைக் கண்டுபிடித்து பயல் நேரில் வந்து நிற்கிறான். கூட துணைக்கு ஒரு தோழன்.

தோழன்தான் பேசினான். ”சார், ஒரு சான்ஸ் குடுங்க. எப்படி என்ன குரல்’லாம் பேசறான்’னு மட்டும் பாருங்க”.

“இல்லைங்க. குடுக்கக்கூடாதுன்னு இல்லை. இது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். blah blah blah” என்று பேசினேன். Cab பிடிக்க வேண்டும். நேரமாச்சு, ஓட வேண்டும். “ஓகே, லெட் மீ செக். ஐ வில் கெட் பேக்”, என்று விட்டு, பயலுக்கு என் மொபைல் நம்பரைத் தந்துவிட்டு cab பிடிக்க விரைந்தேன்.

Cab பயணத்திலேயே ஒருவழியாக தாய் அலுவலகத்தின் உபதலைவனைப் மொபைலில் பிடித்து அவனிடம் அனுமதி வாங்கி (stop gap, filler என்று காரணங்கள் சொல்லி), இவனுக்கு ஃபோன் செய்து, “ஓகேப்பா. நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு அந்த ஆஃபீசுக்கு வந்துடு” என்றேன். நமக்கு இறுதியில்தான் இவன் தொட்டுக் கொள்ளத் தேவைப்படுவான்.

நிகழ்ச்சிகள் நான்கு மணிக்குத் துவங்கின. ஆறுமணிக்கு வரச் சொன்னவன், ஐந்து மணிக்கு வந்து நின்றான். அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உட்கார்ந்தவர்களுக்கு போட்டிருந்த நாற்காலிகள் அனைத்தையும் சுற்று வளைத்துக் கட்டி மக்கள் நின்றபடி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லா நிகழ்ச்சிகளும் நிறைந்து எங்கள் கூட்டல் கழித்தல் நேரம் வந்தது. பயல் மேடை ஏறினான். இது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் என்று அறிவித்தோம்.

இருபத்தி இரண்டு போட்டி நிகழ்வுகளும் நிறைந்து விட்டதால் கூட்டம் கலையத் துவங்கியது. பார்வையாளர்களில் பலருக்கு யார் பரிசை வாங்குகிறார்கள் என்பது அநாவசியம். நிகழ்ச்சி முடிந்ததா போகலாம் எனும் மனோபாவம்.

மக்களின் கலைதல் பயலின் முகத்தில் இருட்டைக் கொணர்ந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இருந்தாலும் பேசத் துவங்கினான். இரண்டாவது மிமிக்ரியில் ஒரு ஜெர்க் தெரிந்தது. இருந்தாலும் சுதாரித்துத் திறமை காட்டிப் பேச கலைந்த கூட்டம் மீண்டும் சேரத் துவங்கியது.

அதன் பின் அங்கே நிகழ்ந்ததெல்லாம் ஒரு மேஜிக். ஆயிரம் வாலா பட்டாசு, வாண வேடிக்கை போல மிமிக்ரியில் சபையை அப்படியே கட்டிப் போட்டான் பயல். ஆரவாரம், உற்சாகம், கரகோஷம், ஆர்ப்பரிப்பு - ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான். 

ஸ்கோர் டோட்டலிங் முடிந்து முடிவுகளை அறிவிக்க நடுவர்கள் தயாராகிவிட்டார்கள். இரண்டு நிமிடம் போல் தெரிந்தாலும், நிச்சயம் பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் கைகளை உயர்த்திக் காட்டி நேரமாச்சு நேரமாச்சு எனச் சொல்ல ஒருவழியாக தன் மிமிக்ரியை முடித்துக் கொண்டான் பயல்.

“இத்தோட முடிச்சிக்கறேன். ரொம்ப நன்றி”, என்று அவன் சொன்னபோது ஏதோ தோன்ற முன்வரிசையில் உட்கார்ந்திருந்த நான் நாற்காலியை விட்டு எழுந்து நின்று கைத் தட்டினேன்.

திரும்பிப் பார்க்கிறேன், அரங்கம் முழுவதும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது. அத்தனைக் கைத்தட்டல், அத்தனை உற்சாகம். அப்படி ஒரு பாராட்டுதல். அதன்முன் நிகழ்ந்த அந்த இருபத்தியிரண்டு போட்டிப் பங்களிப்புகளுக்கும் கூட கிடைக்காத அங்கீகாரம். கிட்டத்தட்ட அவன் கண்களில் நீர்.

”நான் மிமிக்ரி ஆரம்பிச்சப்ப நீங்கல்லாம் கலைஞ்சு போனதப் பாத்ததும் நான் வெக்ஸ் ஆயிட்டேன். ஆனா இப்போ மிமிக்ரி முடிஞ்சதும் எல்லாரும் கை தட்டுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றான். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு.

வெள்ளி இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை தெரியுமா உங்களுக்கு? அது என்ன உணர்வு என்றே புரியவில்லை. சந்தோஷமா, அந்த சந்தோஷம் தந்த அதீத மனவெழுச்சியா.... என்னவென்று தெரியவில்லை. 

நான் ஏன் இத்தனை உணர்ச்சி வசப்பட வேண்டும் என்கிறீர்களா?


நிகழ்ச்சி, கைத்தட்டல், ஆரவாரம் எல்லாம் அடங்கினபின், “இந்த சான்ஸை எனக்குத் தந்த கிரி சாருக்கும் ஸ்ரீ மேடத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்று அவன் தழுதழுக்கக் கூறியபோதுதான் நான் எத்தனை பெரிய விஷயத்தைப் பண்ணியிருக்கிறேன் என்று எனக்கே புரிந்தது. 


அதன் தொடர்ச்சியாகத்தான் இத்தனை விஷயங்களையும் ரீவைண்டில் ஓட்டி ஒரு பெரிய சினிமாவையே கிட்டத்தட்ட நிகழ்த்தியிருக்கிறோம் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

”சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” என்று வைரமுத்து இந்தியன் படத்தில் எழுதியிருப்பார். சின்னச்சின்ன அங்கீகாரங்களில்தான் வாழ்க்கையுடன் நம்மை ஒட்ட வைக்கும் பசை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

பை தி வே, விக்னேஷ் என்பது பயலின் பெயர்.

Feb 8, 2015

2015 உலகக்கோப்பையும் இந்தியாவும்


2015 உலகக்கோப்பையின் warm-up ஆட்டங்கள் இன்று துவங்கின. முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் மோதல். இந்திய அணியின் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த ஆட்டத்தில் இந்தியா அசத்தும்; அது பூஸ்ட் குடித்தாற்போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு. 

இன்று காலை எட்டேமுக்காலுக்கு மேட்ச் துவங்கியது. ஆட்டத்தின் முடிவில் ஸ்கோர்போர்டு இப்படி இருந்தது:

ஆஸ்திரேலியா - 371/10        < === > இந்தியா - 265/10

இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியா தோற்றால் என்ன. இருக்கவே இருக்கின்றன மற்றைய பதிமூன்று அணிகள். அவற்றைப் பற்றிப் பேசலாம். நம் கிரிக்கெட் ப்ளாகில் < http://batballstump.blogspot.in/ > . சென்ற உலகக்கோப்பையின் போது துவங்கிய ப்ளாக்.. இந்த உலகக்கோப்பைக்கு தூசிதட்டி எடுத்திருக்கிறேன்.

 

இன்று பாட்டியாலாவில் நடந்த தில்லிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டி இடைவேளையில் நம் அணியின் முன்னாள் சிங்கங்கள் என்னத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று நாம் உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்

Jan 11, 2015

பிசாசும் லிங்காவும்

இந்த இரண்டு படங்களைப் பற்றியும் இணைய ஜாம்பவான்கள் தொடங்கி, குஞ்சுக் குளுவான்கள் வரைக்கும் அனைவரும் அலசிப் பிழிந்து காயப்போட்ட பின் நான் இரண்டு படங்களையும் பார்க்கப் போனேன்.

வழக்கம் போல் இணைய மொண்ணைகள் (be it ஜாம்பவான்ஸ் or be it குகுs), என்னை ஏமாற்றவில்லை; ஏனென்றால் வழக்கம்போல் அவர்களது அலசலுக்கு நேர்மாறாய் இருந்தன இரு படங்களும்.

பிசாசு - எனக்குப் பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை

லிங்கா - எனக்கு ஒரு மிக நல்ல ரஜினி படமாகப் பிடித்திருந்தது.

பிசாசு:



அச்சுப் பிச்சுத் தனமாக இருந்தது படம், என் பார்வையில்.

May be, கலைப் பார்வை, கொலைப் பார்வை, கலைஞனின்  பார்வை, படைப்பாளியின் பார்வை எல்லாம் கொண்டு பார்த்தால் நமக்குப் படம் பிடிக்கலாம். சராசரி ரசிகப் பார்வையில் படம் என்ன சொல்ல வருகிறது எனப் புரியவில்லை.

என் கஸினுகள் இருவருடன் படம் பார்க்கப் போயிருந்தேன். ஆளாளுக்கு என்ன சொல்ல வருகிறார் மிஸ்கின் என்பதில் ஒவ்வொரு கருத்து கொண்டு தியேட்டர் விட்டு வெளியே வந்தோம்.

அச்சுப் பிச்சு என நான் குறிப்பிட்டதன் காரணம் - பிச்சுப் பிச்சுப் பார்த்தால் படம் நன்றாகவே இருக்கிறது. பிசாசுப் படத்தை வித்தியாசமாகத்தான் காட்டித் தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு (பேய்ப் படம் இதுவரியும் சொல்லாத வித்தியாசமான கோணத்துல சொல்லியிருக்காங்கன்னு ரசிகன் சொல்லணும்) எடுக்கப்பட்டிருக்கிறது.

But at the end of the day what are you trying to tell....???

சொல்லப்படும் விஷயமல்ல; சொல்லப்படும் முறையே ஒரு படைப்பை...... என்னும் சால்ஜாப்புகளுக்குள் எல்லாம் என்னைப் போன்ற ரசிகன் நுழைய முடியவில்லை. படத்தின் ப்ரசண்டேஷன் கலைப்படைப்புக்கு சமானம் எனக் கொண்டால், அச்சுப்பிச்சுத்தனமாக வரும் பிசாசின் விளையாட்டு சமரசங்கள் ஏன் எனப் புரியவில்லை.

படத்தை சிலாகித்து எழுதப்பட்ட விமர்சனங்களை ஒரு ரவுண்டு படித்தும் பார்த்தேன். கலாய்ப்பதற்காகவே விஜய் படங்களைப் பார்த்து விமர்சனங்கள் வரையும் ஒரு கூட்டத்தின் எதிர்க்கூட்டமாகத்தான் எனக்கு அவை தோன்றின. (தமிழ் இணைய உலகின் சீனியர் ஒருத்தர் அழுகாச்சி அழுகாச்சியா ஒக்காந்துட்டு வரணும்னு சில படங்களுக்குப் போய் வருவது போலவும் - சாரி அண்ணேய்ய்ய் :) )

படத்தின் இரண்டு விஷயங்கள் ஓஹோ! ஒன்று பின்னணி இசை; இரண்டு ஒளிப்பதிவு.

படத்தின் இரண்டு குறியீடுகள் எனக்கு விளங்கவில்லை. யாரேனும் பெரியோர் விளக்கினால் தேவலாம்.

1) அது ஏன் (கிட்டத்தட்ட) எல்லா காட்சிகளிலும் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்”என டைரக்டர் கூவி முடித்து ஐந்தரை செகண்டுக்குப் பிறகே நடிக நடிகையர் நடிக்கத் துவங்குகின்றனர்? இதே போல் அஞ்சாதே படத்திலும் பார்த்த நினைவு,

2) அந்த பிரியாணிக் கடை காட்சிக்கு முன் காட்டப்படும் கும்பலான வளையல் அல்லது ரயில் பூச்சிகளுக்கு என்ன அர்த்தம்?


லிங்கா:

தமிழ் கூறும் நல் இணையவுலகம் லிங்கா படத்தை ஏன், எதற்கு, வொய், எந்துகு கய்வி கய்வி (yeah, I mean it... கய்வி கய்வி) ஊற்றுகிறார்கள் என எனக்குப் புரியலை.

லிங்கா ஒரு, நல்ல, ரஜினி படம் - தட்ஸ் இட். இரு தினங்களுக்கு முன் ஒரு ட்விட்டர் அரட்டையின் போது இதைத்தான் சொன்னேன்.

அன்னை ஓர் ஆலயம் நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த ரஜினி படம். எந்திரன் கடைசியாய்ப் பார்த்தது. இத்தனை டிகேடுகள் ரஜினி படம் பார்த்துப் பழகியவனுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எதையும் நிறைவேற்றாப் படமாக லிங்கா வந்திருந்தால் அந்தக் கய்வியூற்றலில் அர்த்தமுண்டு என்பது மட்டும் என் சிம்பிள் ஹம்பிள் கருத்து.

நிறைய பேர் லிங்காவானது படையப்பாவை விட சுமார் என்றார்கள். என் பார்வையில் படையப்பாவை விட பெட்டர் மூவி இது - என் பார்வையில்.

படம் ஆக்சுவல்லி சொல்லவரும் நடு செண்டர் மையக் கருத்து மெய்யாலுமே அற்புதமானது.

“பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாதே”, என்று படத்தின் ஒரு பாடலினூடே வைரமுத்து சொல்வதுதான் அது. I am really touched. May be, எல்லாவற்றையும் இழந்துவிட்டு ஒரு காலத்தில் நடு ரோட்டில் ஓட்டாண்டிகளாக குடும்பத்துடன் நின்ற அனுபவம் இருந்தமையால் படம் என் மனசுக்கு நெருக்கமாகிவிட்டதா எனத் தெரியவில்லை.

பை தி வே, கே.எஸ்.ரவிக்குமாரின் இந்தப் பேட்டி எனக்கு முற்றிலும் ஏற்புடையதாகவே பட்டது. குறிப்பாக அந்தக் கடைசிக்கு முந்தின கேள்வி:

https://www.youtube.com/watch?v=qge65LahC3Q

Related Posts Plugin for WordPress, Blogger...