இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. எதற்கு என்று கேட்கும் ஆளா நீங்கள்? ஓகே, சொல்கிறேன். பிப்ரவரி 14 இன்னும் பத்து நாட்களில்...
ஸ்பென்சர்ஸ், சிட்டி சென்டர் வளாகங்கள் போன்ற இளசுகள் வளைய வரும் இடங்களில் வண்ணம் கூடும்.. வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்புப் பொருட்களும் கடைகளில் முன்னிலைப் படுத்தி விற்கப்படும்.
தொலைக்காட்சிகளில்"காதலர் தினம்" தேவையா என முடிவில்லா விவாதங்கள் வழக்கம் போல் நடக்கும், அங்கே இங்கே என சில வாழ்த்து அட்டைக் கடைகள் அடித்து நொறுக்கப்படும். " நாங்க காதலர்தினம் கொண்டாடினா இவங்களுக்கு என்ன சார்", என சன் செய்திகளில் மீசை முளைக்காத ஒரு சட்டை கிழிந்த சிறுவன் கடற்கரையிலிருந்து கதறுவான். (அவனருகில்துப்பட்டாவில் முக்காடிட்டு ஒரு சிறுமி இருப்பாள்).
இது சார்ந்த வடஇந்திய வரவேற்பையும், அடிதடிகளையும், ஆங்கில / ஹிந்தி சேனல்களின் கூக்குரல்களையும் நான் தனியே சொல்லத் தேவையில்லை.
காதலர் தினம் உண்மையோ இல்லையோ.... காதல் முற்றிலும் உண்மையானது. அதன் அர்த்தமென்னவோ என்றும் ஒன்றாகவேஇருந்திருக்கிறது / இருக்கிறது. வயதிற்கும் பக்குவத்திற்கும் ஏற்றாற்போல் நாம்தான் அதைப் பொருள் மாற்றிப் புரிந்து கொள்கிறோம், எல்லோர் வாழ்விலும் சொல்லாமல் கேட்காமல்நுழைந்து ஏதேனும் இனிப்பியோ கசப்பையோ விதைத்து விட்டே அது நிலைக்கிறது.
விகடன் பவள விழாக் கவிதைப் போட்டியில் 'சரவணன்' எழுதிய இந்த அட்டகாசமான கவிதை, என்னால் என்றும் மறக்க இயலாதது.
காதல்
இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்
இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல்
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்
பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்
இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்
இன்னொரு பெயர் காதல்
No comments:
Post a Comment