தமிழகத்தில் சமீபமாக பரவிவரும் விதவிதமான விஷக் காய்ச்சல்கள், நான்கு நோய்களின் கூட்டணி என நண்பர் ஒருவர் சொன்னார். டெங்கு, சிக்குன்குனியா, டைபாய்டு மற்றும் எலி ஜுரம் அவை. இந்த பாதிப்புகளில் சிறு பங்கு எலிக்கும், பெரும் பங்கு கொசுவிற்குமே உள்ளது.
தமிழகம் முழுவதும் முன்பு எப்போதும் இல்லா வண்ணம் இந்த காய்ச்சல்கள் மக்களைப் பாடாய்ப் படுத்தினாலும், இந்த காய்ச்சல்கள் குறித்த செய்திகள் மக்களை சென்றடையா வண்ணம் ஊடகங்கள் (media) வாய்ப் பூட்டப்பட்டுள்ளன. அது சரி, இதுல இலவச தொலைக்காட்சி எங்க வந்துச்சின்னு கேக்கறீங்களா? திரு.ஜெயமோகனின் இந்தக் கட்டுரையைப் படிங்க.
கட்டுரையிலிருந்து சில துளிகள்-
தமிழகத்தில் இந்த ஐந்து வருடங்களில் சாலைபோடுதல், சாக்கடை வசதி செய்தல் உட்பட எந்த விதமான உட்கட்டுமான வசதிகளும் செய்யப்படவில்லை. சேவைகள் பலமடங்கு பின்னகர்ந்தும் இருக்கின்றன. ஆகவே கழிவுநீர், குப்பை அகற்றம் என்பது அனேகமாக செயலிழந்த நிலையில் இருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் குப்பைமலைகளாலும் சாக்கடையாலும் நாறிக்கொண்டிருக்கின்றன.
ஆகவே கொசுக்கள் பலமடங்கு பெருகி இப்போது பகலிலும் கொசுவர்த்தி இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள் கடைகள் எங்கும் மதியத்தில்கூட கொசுவர்த்தி தேவைப்படுகிறது. சிக்குன்குனியா போல இன்னும் பல கொசுவழி பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்கள் பல இடங்களில் பரவி வருகின்றன. செய்திகள் அமுக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லையில் கடந்த ஆறுமாதங்களாக கடுமையான காய்ச்சல்கள் பரவி மக்கள்பாதிக்கப்படுகிறார்கள். சில உயிரிழக்கவும் செய்கிறார்கள். உள்ளூர் பதிப்பு நாளிதழ்களில் மட்டுமே இச்செய்தி வெளியாகிறது.
இந்நிலைக்குக் காரணம் இலவசத் தொலைக்காட்சி என்றார் நண்பர். இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தின் மிகக் கடுமையான நிதிச்சுமையால் மாநில நிதிநிர்வாகம் விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது. பிற அனைத்து துறைகளில் இருந்து நிதி அதற்கு கொண்டுசெல்லப்படுகிறது. ஆகவே எல்லா சேவைகளுமே செயலிழந்துபோயிருக்கின்றன என்றார்.
ஏஸி அறைகளுக்கு வெளியே உயிர்வாழ்வதே பெரும் சவாலாக ஆகிவிட்டிருக்கிறது இந்த நாட்டில்!
No comments:
Post a Comment