இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களை ஒன்று விடாமல் கிண்டலடித்து வந்திருக்கும் படமே இந்தத் தமிழ்ப்படம். தன் முதல் படத்திலேயே இப்படி தன் குலதெய்வங்களை போட்டுப் புரட்டி எடுக்க இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு நிறையவே தைரியம் வேண்டும்.
சிவா பிறக்கும் காட்சியாக கருத்தம்மா கள்ளிப்பாலில் ஆரம்பிக்கிறது கிண்டல் உற்சவம். அங்கு தொடங்கும் காமெடி சரவெடி அதன்பின் ரவுடிகளை துவம்சம் செய்யும் ஹீரோ; பரதமாடி காலால் ஹீரோயின் முகம் வரையும் காதலன்; அந்நியன், அபூர்வ சகோதரர்கள் ஸ்டைலில் வில்லன்களைக் கொலை செய்வது; ஒரே பாடலில் கோடீஸ்வரனாவது என காமெடிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவரையும் விட்டுவைக்காது கமல், ரஜினி, விஜய், இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம், TR என எல்லோரும் புரட்டி எடுக்கப்படுகிறாகள்.
"ஓ மகசீயா" பாடல் அற்புதமான டியூனுக்குள் நுழைந்த காமெடியின் உச்சம். அதேபோல் அந்தக் குடும்பப்பாடல் நம்மை சீட்டை விட்டு எழுந்து நின்று சிரிக்க வைக்கிறது. முடியலடா சாமி.
படம் எங்கே பயணிக்கிறது என நமக்கு தெரிந்து விடுவதால், சில இடங்களில் நமக்கு லேசாக அலுப்பு ஏற்பட்டாலும், அங்கங்கே வெடித்துச் சிரிக்க நக்கல் காட்சிகளை வைத்து அதை ஈடு கட்டியிருக்கிறார்கள். படம் முழுக்க சிவா ராஜ்ஜியம் தான். மனிதரின் டயலாக் டெலிவரியும் ஹீரோத்தனமான பார்வைகளும் 'ஏ ஒன்'.
முற்றிலும் வித்தியாசமான முயற்சி. இயன்றவரை நேர்த்தியாகச் செய்திருக்கிறது திரைப்படக் குழு.
"தமிழ்ப்படம்" - காமெடிக் கலக்கல்!
No comments:
Post a Comment