Feb 7, 2010

இறுதிப்பயணம், இனிமையாக!

"மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்குக் கிளை பாரமா?
கிளைக்கு காய் பாரமா? பெற்றெடுத்த......"

அதற்கு மேல் அந்த வயதான அம்மாவால் பாட முடியவில்லை. "எனக்கு அழுகைதான் வருது"  என வரும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நாற்காலியில் சென்று அமர்கிறார். யாருக்கு அவர் பாரமாய் இருந்ததன் நினைவோ தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த எங்கள் அனைவர்க்கும் நெஞ்சைப் பிசைந்தது.



"ஜீவோதயா" - புற்றுநோயின் (cancer) பிடியில் இறுதி நிமிடங்களை எண்ணிக்  கொண்டிருப்பவர்களுக்கு இயன்றவரை அமைதியான மரணத்தைத் தரும்  முயற்சியில் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம். சென்னை மாத்தூரில் (மணலி அருகில்), நகர சந்தடி சற்றும் இல்லாத ஒரு அமைதியான சூழலில் இயங்குகிறது "ஜீவோதயா".

உள்ளே நுழைகையிலேயே இருபுறமும் பூக்கள் சிரித்தபடி வரவேற்கின்றன, பூச்சிகளும் கொசுக்களும் அண்டாத பராமரிக்கப்பட்ட ஒரு சின்ன குளம், இதோ இன்னும் இருமாதங்களில் காய்த்துவிடுவேன் என இன்றோ நாளையோ பூக்கத் தயாராகிவரும் நான்கைந்து மாமரங்கள்,  மரங்களின் கீழே குட்டையாய் நீளமான பெஞ்சுகள்; இவையெல்லாம் கடந்தால் நாகரீகமாய் நிற்கிறது "ஜீவோதயா" கட்டிடம்.

வரவேற்பறைப் பலகையில் சென்ற வருடம் இதே மாதத்தில் இறந்தவர்கள் நினைவு கொள்ளப்படுகிறார்கள். சுமாராய் ஒரு மாதத்தில் இருபது மரணங்கள் இங்கே நிகழ்கின்றன (ஆரம்பம் முதல் இதுவரையில் இங்கு 2500-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன, நூற்றுக்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகள் நடத்திவைக்கப் பட்டுள்ளன).

எங்கள் நேரத்தை அங்கு இருப்பவர்களுடன் செலவிட எங்கள் அலுவலகத்திலிருந்து இருபத்தைந்து பேர் சென்றிருந்தோம். அவர்களுடன் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். ஒரு மருத்துவமனைக்கான எந்த அறிகுறியும் இன்றி, எந்தவொரு துர்நாற்றமும்  இல்லாத இடமாய் அவர்கள் அந்த இடத்தைப் பராமரிப்பதை நான் குறிப்பிட்டேயாக வேண்டும்.

சிலர் வெறித்த பார்வையுடன் அமைதியாய் இருந்தார்கள், சிலர் "இதைப் பாடு, அதைப் பாடு" என நேயர் விருப்பம் தெரிவித்தனர், ஒருவர் "சூப்பர் சிங்கர்" நடுவர்கள் போல எங்கள் பாடலுக்கு மதிப்பெண்கள் தந்தவண்ணம் இருந்தார், அவர்களில் இருவர் அந்த இடத்தில் தங்கள் இறுதிப் பொழுது இன்பமாய்க் கழிவதாய் குறிப்பிட்டனர்.  அதிலும் ஒருவர், தான் ஒரு புற்றுநோயாளன் என்பதையே மறந்து விட்டதாய் குறிப்பிட்டார். இதிலிருந்தே அங்கு இருப்பவர்கள் ஆற்றும் சேவை பற்றி நான் குறிப்பிடும் தேவை இல்லாமல் போகிறது.

எங்கள் அலுவலகம் சார்பாக சுமார் இருபதாயிரம் ரூபாய் மதிப்பில் மருந்துப் பொருட்களை தலைமை சிஸ்டரிடம் வழங்கினோம். ஆனால் தாங்கள் எதிர்பார்ப்பதாய் அந்த சிஸ்டர் குறிப்பிட்டது நாங்கள் செலவிட்ட பணத்தையல்ல, நாங்கள் அங்கு செலவிட்ட அந்தப் பொன்னான நேரத்தை. அந்த சில மணி நேரங்கள் அவர்களில் பலர் தங்களை மறந்திருந்தார்கள், தங்கள் வலியைபற்றி நினைக்காமல் இருந்தார்கள். ஒரு சக மனிதனுக்கு நாம் இதைவிட அதிகமாய் ஏதேனும் செய்ய முடியுமா? சொல்லுங்களேன்!

(அந்த இரண்டு மணிநேர அனுபவம் குறித்து எழுத இரண்டு புத்தகங்கள் அளவு விஷயங்கள் இருக்கின்றன..... அனைத்தையும் இங்கு திணிக்காமல், நேரம் கிடைக்கையில் பின்னர் எழுதுகிறேன்)

3 comments:

krishna said...

Kandippaga ezuthavum.

krishna said...

Kandippaga Ezuthavum

Giri Ramasubramanian said...

@ Krishna

கண்டிப்பா எழுதறேன்... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...