"True life is stranger than fiction" என்பார்கள். நிஜக் கதைகள் strange ஆனவைகள் மட்டுமல்ல. சில நேரங்களில் புனைவுகளைக் காட்டிலும் மிக சுவாரசியம் தருபவையும் கூட. அப்படி தன் வாழ்வின் நிஜ நிகழ்வு ஒன்றை மும்பையிலிருந்து ராம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த வருடம் கோடை விடுமுறையில் என் சொந்த ஊர்ப்பக்கம் போக நேர்ந்தது. சின்னசேலம் ஸ்டேஷனை அடைந்ததும் முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவில் நிழற்படமாக ஓடத் தொடங்கியது.
அந்தநாள் இப்போதும் என் நினைவில் பசுமையாக உள்ளது. நான் தொலைந்து போன நாள் அது...! தொலைந்து மீண்டும் என் குடும்பத்தாருக்கு கிடைத்த நாள் அது...!!
முப்பத்தி மூன்று வருடங்களா என்று பெருமூச்செய்தினேன்
எனக்கு நான்கரை வயது அப்போது. என் தந்தையின் அத்தை காலமாகிவிட்டதால் என் அம்மா, இரு அக்காக்கள், தம்பி (கைக்குழந்தை) மற்றும் மாமா என நாங்கள் எங்கள் சொந்த கிராமத்திற்கு ரயில் வண்டியில் செல்கிறோம்..
சின்ன சேலம் ஸ்டேஷனில் இறங்கி வேறு ரயிலில் ஐந்து கிலோ மீட்டர் திரும்ப பிரயாணம் செய்ய வேண்டும். இரண்டு ரயில்களும் அங்கே கிராசிங். இரவு ஒன்பதரை மணி. என் மாமா சின்ன சேலம் ஸ்டேஷனில் டிக்கெட் வாங்க கவுன்டருக்கு ஓடுகிறார். சிறு பிள்ளைகளுக்கே உரிய அசட்டுத் தைரியத்துடன் என் அம்மா கையை உதறி விட்டு மாமா பின்னால் ஓடுகிறேன் நான்.
கூட்டம் அதிகமாதலால் யாரும் என்னை கவனிக்கவில்லை, மாமா உட்பட. மாமா மிக விரைவாக வண்டிக்குத் திரும்பி வந்து அனைவரையும் ஏற்றிவிட பேசஞ்சர் புறப்படுகிறது...வண்டி புறப்பட்ட இரண்டு நிமிடங்கள் கழித்துதான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது நான் அவர்களுடன் இல்லை என்று. அனைவரும் ஓவென்று அழ தொடங்குகிறார்கள்.
இதனிடையே நான் பிளாட்பாரத்தில் அழுது கொண்டே ஒன்றும் புரியாமல் நாங்கள் வந்த பெங்களூர் செல்லும் ரயிலை வெறித்தவாறு நிற்கிறேன். ஒரு வாட்ட சாட்டமான ஆள் என்னை தூக்கி விசாரிக்க ஆரம்பிக்கிறார்..அந்த சிறு வயதில் நான் என்னை பற்றியும் என் குடும்பத்தார் பற்றியும் நான் அறிந்ததை ஒப்பிக்கிறேன். அந்த நபர் (அவரை நான் இன்றும் கடவுளாகத்தான் நினைக்கிறேன்) என்னை பெங்களூர் ரயிலுக்குள் ஒவ்வொரு கோச்சாக கொண்டு சென்று அனைவரிடமும் "இது உங்கள் குழந்தையா?" என விசாரிக்கிறார். எல்லோரிடமிருந்தும் "இல்லை" என்றே பதில் வருகிறது.
ரயில் முழுவதும் தேடிவிட்டு அவர் கீழே இறங்கியதும் ரயிலுக்குள் இருந்து ஒரு குரல், "அண்ணே அந்த குழந்தையை என்னிடம் கொடுத்துங்க, நான் பெங்களூர் கொண்டு போய் நல்லா வளர்க்கிறேன். உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தர்றேன்" என்றது. (அந்தக் காலத்து பத்தாயிரம் என்பது ஒரு சராசரி இந்தியன் ஒருவனின் ஒருவருட சம்பளம்)
"நீங்க ஒரு லட்சம் கொடுத்தாலும் இந்த குழந்தையை தர மாட்டேன், குழந்தைக்கு உரியவங்ககிட்ட மட்டுமே சேர்ப்பேன்" என்கிறார் இவர். இந்த வசனங்கள் இன்றும் என் காதில் ஒலிக்கிறது, காட்சி என் கண் முன்னால் நிற்கிறது.
அந்த ரயிலும் புறப்பட்டு விட, அந்த நபர் என்னை பிளாட்பார்மில் இருக்கும் அறைக்கு கொண்டு சென்று மேலும் விசாரிக்க, என் பெரியப்பா பக்கத்துக்கு ஊரில் போஸ்ட் மாஸ்டர் என்றும் அவர் அக்கம் பக்க கிராமங்களில் ஒரு மரியாதைக்கு உரிய பிரபலமான மனிதர் என்றும் தெரிந்து கொள்கிறார். அந்த காலத்தில் தொலைபேசி வசதி இல்லை. எனவே தகவல் உடனடியாகத் தெரிவிக்க இயலாத நிலை.
ஊர் சென்றடைந்த என் மாமா உடனே என் பெரியப்பா மற்றும் ஊர்க்காரர்கள் சிலருடன் சைக்கிளில் ஐந்து கிலோ மீட்டர், இறந்த அந்தப் பாட்டியை எரித்த அதே மயானம் வழியாக, சின்னசேலம் நோக்கி வந்தார்.
என்ன தோன்றியதோ, வழியில் என் பெரியப்பா அவர் அத்தையை எரித்த இடத்தில் நின்று கூவுகிறார்.."நம் குழந்தை கிடைக்காவிட்டால் உனக்கு மேற்கொண்டு காரியங்கள் எதுவும் செய்ய மாட்டேன்" என்று.
என்னை காப்பாற்றிய புண்ணியவான் என்னை அவரது என்பீல்ட் புல்லட் மீது அமர்த்தி..பிஸ்கட், பால் போன்றவைகளை தருகிறார். நான் எதுவும் வாங்க மறுக்கிறேன்.
இரவு பதினொரு மணிக்கு அனைவரும் ஸ்டேஷன் வந்தடைகிறார்கள். என் பெரியப்பாவை பார்த்ததும் நான் ஓடிச்சென்று அணைத்துக் கொள்கிறேன்.
அனைவர் முகத்திலும் ஒரு புன்னகையுடன் கூடிய நிம்மதி. அந்தப் புண்ணியவானுக்கு பெருமிதம், ஒரு குழந்தையை அதன் குடும்பத்தாருடன் சேர்த்ததில்.
நான் என் பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் பிறந்த தவப்புதல்வன். என் தந்தையாரின் உடல் நிலை காரணமாக, டாக்டர்கள் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஏதும் தெரிவிக்க வேண்டாம் என சொல்லியிருந்ததால், இந்த நிகழ்வுகள் குறித்து யாரும் அவரிடம் மூன்று நாட்களுக்குச் சொல்லவில்லை. சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. மூன்று நாட்களுக்குப் பிறகே நிதானமாக இந்த சம்பவங்கள் அவருக்கு விவரிக்கப்பட்டன.
அதன் பிறகு அந்த புண்ணியவானை நான் விவரம் தெரிந்து சந்திக்க இயலவில்லை. ஒரு நிமிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு, மனிதாபிமானம் இல்லாமல் அவர் என்னை அந்த ரயிலில் இருந்து ஒலித்த குரலுக்கு விற்றிருந்தால்? நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.
இன்று சின்ன சேலம் ஸ்டேஷனில் இந்தக் கதை கேட்டதும், என் ஏழு வயது மகள் அந்த புண்ணியவானை வாயார வாழ்த்துகிறாள்.
- ராமநாராயணன், மும்பை
.
.
.