Oct 31, 2010

பொன்னியின் செல்வன் - வைரவிழா ஆண்டு

பொன்னியின் செல்வன் படைப்பு வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் 29.10.10
- கானா பிரபா (ட்விட்டர் வழியாக)

பொன்னியின் செல்வன் குறித்துச் சிலாகிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் ஒரு மூலை முடுக்கு வாசகனாக எனக்கு உண்டு.

வந்தியத்தேவன், நந்தினி, அருள்மொழிவர்மன், வானதி, குந்தவை, திருமலைநம்பி, பழுவேட்டரையர்கள், ஆதித்த கரிகாலன் மற்றும் இன்னபிற கதாபாத்திரங்கள், அவற்றின் குணாதிசயங்கள் குறித்த என் சிலாகிப்பைச் சொல்கிறேன் என தமிழ் இணைய உலகில் இங்குமங்கும் ஏகப்பட்ட சிலாகிப்புகள் பரவி விரவிக் கிடக்கின்றன. 

எல்லா சிலாகிப்புகளுக்கும் மகுடம் சூட்டுவது என நான் கருதுவது இதுவரை  பதிவு செய்யப்படாத என் சிலாகிப்பை. பொன்னியின் செல்வனில் மணிமேகலை பாடும் இந்தப் பாடல்... இந்தப் பாடல் மட்டுமல்ல, மணிமேகலையின் கதாபாத்திரம், வந்தியத்தேவன் மீதான அவளது அப்பழுக்கற்ற தூய்மையான காதல்... இதுவே பொன்னியின் செல்வன் என்றதும் என் மனதில் முதலில் கீற்றாய்ப் பாயும் மின்னல் நினைவு.

பொன்னியின் செல்வன் கதையில் மணிமேகலை இரண்டு இடங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறாள். இதில் உருக்கம் தருவது அவள் மடியும் வேளையில் வல்லவரையன் மடி சாய்ந்து இதனைப் பாடியவாறு மடியும் கணம்.... பொன்னியின் செல்வன் முடியும் கணம்....




இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி சகியே நினைவுதானோடி!

புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர் கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி! 

கட்டுக்காவல் தான் கடந்து கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி!

இதனினும் இனிய தவழ்ந்து தாவிச் செல்லும் ஒரு கவிதையை, உருக்கமாய் உணர்வுகளைப் பரிமாறும் ஒரு பாடலை நான் இதுவரை படித்ததுமில்லை கேட்டதுமில்லை.

கல்கி கல்கிதானுங்களே?

5 comments:

எல் கே said...

அருமையான பாத்திரப் படைப்பு. என் நபர் ஒருவர். மணிமேகலையின் கதையை மட்டும் கவிதை வடிவில் எழுதினார். தேடி பார்கிறேன். எங்கிருக்கிறது என்று தெரியவில்லை

Giri Ramasubramanian said...

நன்றி LK

இவரைச் சொல்கிறீர்களா?

http://itzforher.blogspot.com

test said...

நல்லா இருக்கு கிரி! என்றும் மறக்க முடியாது...எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காத காவியம்..நன்றி! பொன்னியின் செல்வன் பற்றிய எனது பதிவு..
http://umajee.blogspot.com/2010/08/blog-post_4136.html

dondu(#11168674346665545885) said...

//பொன்னியின் செல்வன் படைப்பு வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் 29.10.10//
60 ஆண்டுகள்னு சொல்ல வேண்டாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Giri Ramasubramanian said...

நன்றி டோண்டு சார்!

உங்களுக்கு இது சமீபத்தில் நடந்த நிகழ்வு என்பதால் கணக்கு பிறழாமல் சரியாகச் சொல்லி விட்டீர்கள். :)

திருத்தியமைக்கு நன்றி. என் இடுகையின் தலைப்பை மாற்றிவிட்டேன். 50 ஆண்டுகள் என்பது கானா பிரபா அவர்களின் டுவிட்டர் அப்டேட். அதில் கை வைக்க எனக்கு உரிமையில்லை. அவருக்கு அப்டேட் செய்துவிடுகிறேன்.
மீண்டும் நன்றி...... முக்கியமாக என் தளத்தில் தங்கள் முதல் கருத்தினைப் பதிவு செய்தமைக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...