Sep 7, 2010

ஊட்டி சந்திப்பு

 சிறப்பு விருந்தினர் பக்கம்
சண்முகநாதன்

ஊட்டி இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வாழ்வில் மிகவும் ஒரு அரிதான அனுபவம்,  என்னைப் போன்ற ஒரு கடைநிலை வாசிப்பாளனுக்கு அமைந்தது.

மற்ற நன்றி நவில்தல்களை நான் செலவிடும் முன் என் முதல் நன்றி கிரிக்கு, தன் தளத்தில்
என்னை ஒரு விருந்தினர் பக்கம் எழுத அனுமதித்தமைக்காக.

நான் சண்முகநாதன், கிரியைபோல் நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணக்கியல் துறையில் பணி புரிகிறேன்..


சிறு வயது முதலே புத்தகங்களைப் புரட்டியபடி வளர்ந்த கைகள்தான் என் கைகள், எனினும் இதுதான் நான் எழுதும் முதல் கட்டுரை. எனவே, ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும். மேலும், ஊட்டிக் கூட்டத்தில் நான் பெற்ற அனுபவத்தை நான் பெற்றுக் கொண்டது போலவே அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு திறனாய்வோ அல்லது விமரிசனக் கட்டுரையோ அல்ல. என் அனுபவப் பகிர்வு, அவ்வளவே.

ஜெயமோகன் தன் இணையதளத்தில் ஊட்டி இலக்கிய சந்திப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.  உடனே கலந்து கொள்ள நானும் என் நண்பரும் அனுமதி கோரியிருந்தோம். இரண்டு வாரத்தில் அதற்கான அனுமதி கிடைத்தது.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிகழ்வு என்னவென்றால், சந்திப்பிற்கு சில தினங்களுக்கு முன் ஜெயமோகன் அவர்களே ஒரு முறை என்னை
த்  தொலைபேசியில் அழைத்து என் வருகையை உறுதி செய்தார். பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் கூடக்  கற்றுக் கொள்ள வேண்டிய எளிமையான பாடம் இது.

ஊட்டிக் கூட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் திரு.அரங்கசாமி அவர்கள்தான் செய்திருந்தார்.

எங்கள் ரயில் பயணச்சீட்டு உறுதி செய்யப்படாததால் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி வந்தது. எனவே, நாங்கள் சற்று
த்  தாமதமாக சென்று சேர நேர்ந்தது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன நிகழ்வு.

நாங்கள் உள்நுழைகையில் சிறில் அலெக்ஸ் பேசி முடித்திருந்தார். இந்திய
க்  கோட்பாடுகளைப் பற்றி ஜெயமோகன் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்து அந்தக் கூட்டத்துடன் ஒருவழியாக ஐக்கியமான வேளையில் இரண்டு மணியளவிற்கு மதிய உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பின் இந்திய சிந்தனை மரபில் நான்கு மையக் கருத்துக்கள் பற்றி ஜெமோ பேசினார்.

விடுதலை
பிரபஞ்சம்
ஊழ்
வாழ்க்கை சூழல்



பின்பு 5 .30 லிருந்து 7 .30 ஒரு நடை பயணம் சென்றோம். 07 .30 க்கு மேல் சங்க இலக்கிய பாடல்கள். விளக்கங்களை ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் இருவரும் அளித்தனர்.

10 மணிக்கு இரவு உணவு. பின்னர் உறக்கம் என முதல் நாள் முடிந்தது.

காலை மறுபடியும் நடைபயணம், பின்பு 9 மணிக்கு
க்  கூட்டம் ஆரம்பித்தது. கம்பராமாயணப்  பாடல்களை நாஞ்சில் நாடன் விளக்கினார். அவர் எப்படி கம்பராமாயணம் கற்றார் என்பது பற்றியும் சிலாகித்துக் கூறினார், மிகவும் சுவாரசியமாக இருந்தது. மதியம் சாப்பாடு வரை கம்பராமாயண பாடல்கள்தான்.

பின்பு வயிற்றுக்கு சற்றே உணவு ஈந்தபின் ஆழ்வார் பாடல்கள். படித்துப் பாடம் சொன்னது ஜடாயு அவர்கள். சிறப்பாக இருந்தது. காதல்தான் உச்சத்தில் இருந்தது. கண்ணனின் ரசிகைகள் வந்திருந்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆண்டாளின் பாடல்கள்.

அதன் பின் சைவ
ப்  பாடல்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வராததால் ஜெயமோகனே விளக்கினார். உவமை குறைவாக இருந்தாலும் நன்றாகப்  புரிந்தது. எளிமையாக உச்சத்துக்கு கொண்டு சென்றது.

மாலையில் மழை குறுக்கிட்டதால் நடைபயணம் செல்லவில்லை.

பின்பு செல்வ.புவியரசன் நவீனக் கவிதைகளை விளக்கினார். பாரதி மற்றும் பாரதிதாசன் வழி வந்தவர்கள் கவிதைகளாகவே இருந்தன. கண்ணதாசன் கவிதை மற்றும் லெனின் தங்கப்பா போன்றோர் கவிதைகளை
த்  தவிர மற்றவை, என் பார்வையில்,  சுவாரசியமாக இல்லை.

இப்படி சுமார் 10 மணி நேரம் கவிதை கவிதை என கவிதை மட்டுமே. ஒரே நாளிலேயே நாங்கள் எல்லாம் செந்தமிழிலே பேசத் தொடங்கிவிடுவோம் போலத் தோன்றியது எனக்கு. அவ்வாறு இருந்தது கவிதைகளின் தாக்கம்.

ஜெயமோகன் எதை மனதில் கொண்டு சந்திப்பின்போது "மருந்தடிக்க" அனுமதியில்லை எனச் சொல்லியிருந்தார் என அப்போதுதான் விளங்கியது. நீண்ட நெடிய தமிழ்ப்பாலின் போதையைத் தொடர்ந்து சனிக்கிழமை சீக்கிரமே தூங்கச் சென்றோம்.

ஞாயிற்றுக்கிழமை 2 மணி வரைதான் கூட்டம் என்பதால் காலை 9 மணிக்கே கூட்டம் தொடங்கியது. வந்திருந்த கவிஞர்கள் தங்கள் சொந்தக் கவிதைகளில் வசித்தார்கள்.... மன்னிக்கவும் சொந்தக் கவிதைகளை வாசித்தார்கள். இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன், தனசேகரன், மற்றும் முத்தாய்ப்பாக தேவதேவனும் வாசித்தார்.


எல்லா கவிதைகளும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக இளங்கோவின் காஞ்சிரம் மற்றும் மோகனின் பிணவறை காவலன் கவிதைகள் என்னை மற்றும் சபையோர்களையும் மிகவும் கவர்ந்தன.

பின்பு உணவு, முடிந்த பின் போட்டோ செஷன் மற்றும் கை குலுக்கல்கள். அவ்வளவுதான், கிளம்பிவிட்டோம் அங்கிருந்து.

இதுதான் கூட்டத்தின் சாராம்சம். ஆனால் நான் எழுத விழைவது கூட்டத்தை
த்  தவிர்த்து மேலும்....

சந்திப்பு, ஏற்பாடுகள், உபசரிப்பு.

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். கவிஞர்கள், பதிப்பகத்தார், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், கணினி துறையைச்  சார்ந்தவர்கள். எல்லோருக்கும் ஒரே வித தங்கும் வசதி, ஒரே மாதிரியான உணவு, உபசரிப்பு. 



எங்கள் பயணச் செலவைத் தவிர வேறேதும் நாங்கள் செலவிடும் அவசியம் ஏற்படவில்லை. இது எல்லாம் அந்தக்  கூட்டத்தை நடத்தியவர்கள் தாங்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றும் கடமையாகச் செய்ததை நான் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். பொதுவாக இது போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்வதிலிருந்து ஐம்பது முதல் அறுபது வரையிலான பங்கேற்பாளர்களுக்கு வசதிகளை செய்து தருவதில் உள்ள பொதுவான சவால்கள் நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தடைகள், தடங்கல்கள் ஏதுமின்றி இந்தச் சந்திப்பு இனிமையாக அரங்கேறியது மிகவும் நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது.



ஜெயமோகன்

இத்தனை விஷயங்களை இவர் எப்படித்தான் பழகினாரோ என எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் இவரால் விளக்கம் சொல்ல இயல்கிறது, குறிப்பாக, கேட்பவர்களுக்குப் புரிவதுபோல.

கூட்டத்திற்கு வெளியில் பழகிய நேரங்களில் மட்டும்தான் அவர் ஜெயமோகன் எனத் தெரிந்தார். மற்றபடி கம்பனையும், ஆழ்வாரையும் , அப்பரையும் மட்டும் தான் நாங்கள் அவருள் கண்டோம். அவரைப் பற்றியோ அல்லது அவர் நூல்களைப்  பற்றியோ அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மற்றவர்கள் தான் சில மேற்கோள்களைக் காட்டினார்கள்.




அந்தப்  பகுதியிலிருந்த சில சிறுமிகள் அவரைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் அங்காடித் தெரு ரசிகைகள் போல. தீவிர சினிமா ரசிகர்களின், குறிப்பாக அந்தச் சின்னஞ்சிறுமிகளின் புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அங்கே ஜெமோ பேசியதைக் கண்டேன். என்னைப் போன்ற ஒரு அடிப்படை இலக்கிய வாசகனா? கவலையில்லை, எனக்கேற்றவாரும் அவரால் பேச முடிகிறது. ஜெமோவின் வாசகர் ஒரு வழக்கறிஞரா? அங்கும் ஒரு வக்கீல் நகைச்சுவையை மேற்கோள் காட்டி அவரால் பேச முடிகிறது.  வியப்பாய்த்தான் இருக்கிறது.


தன்மயனந்தா

இவர்தான் இந்த நாராயண குருகுலத்தின் தற்போதைய நிர்வாகி என்று நினைக்கிறேன். இவர் ஒரு மருத்துவர். பல நாடுகளின் மருத்துவ முறைகள் 
பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். நிறைய மருத்துவத் தகவல்கள் சொன்னார். இவர்தான் எங்களுக்கு காப்பி எல்லாம் கூடப் போட்டுத் தந்தார். இவர் போல் ஒரு எளிமையாவரை நான் பார்த்ததே இல்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்தவர். நிறைய பேரை தன் எளிமையால் கூசச் செய்தார்.




நாஞ்சில் நாடன்

இவரின் கம்பராமாயணப் பாடல் விளக்கங்கள்தான் கூட்டத்தின் உச்சம் என்பேன். கம்பராமாயண பாடல்களுக்கு மட்டுமே தனிக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகக் கூறுமளவிற்கு இருந்தது இவரின் கம்பராமாயணப் பிரவாகம். கூட்டத்தைத் தாண்டியும் வெளியில் இவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும் சிறுதெய்வங்கள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றியே அதிகமாகப்  பேசினார்.. அதையே அவரிடம் எல்லோரும் கேள்வியாக கேட்டார்கள் என்று நினைக்கிறேன். இவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.



சுற்றுப்புறம்

அவ்வளவு அழகாக இருந்தது சுற்றுச்சூழல். எங்களுக்கு அந்த இடம் தாண்டி எதைப்பற்றியும் ஞாபகம் வரவிடவில்லை. அலுவலகம் மற்றும் குடும்பத்தை மறந்தது போல இருந்தது.. நாங்கள் தங்கியிருந்த குடிலும் அப்படிதான், மிகவும் ரம்மியமாக இருந்தது. நாங்கள் நன்றாக அனுபவித்தோம் அந்தச் சூழலை என்றுதான் சொல்லவேண்டும்.




இதில் வருந்தத்தக்க விஷயம், நாங்கள் இருமுறைதான் நடைபயணம் செய்ய வாய்ப்பு அமைந்தது. மழையின் குறுக்கீடால் அதற்கு மேல் வாய்ப்பு அமையவில்லை.

கடைசியாக....

தேவதேவன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன் போன்ற கவிஞர்களோடு பேசவும், பழகவும், பொழுதுகளை கழிக்கவும் வாய்ப்பளித்த ஜெயமோகன் அவர்களுக்கும் மற்றும் அவர் நண்பர்களுக்கும் எனது நன்றியையும் மற்றும் அன்பையும் இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
சண்முகநாதன்








Sep 6, 2010

ஊட்டி சந்திப்பு......

ஊட்டி சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஜெயமோகன் தளத்தில் வந்தவுடனேயே சண்முகநாதனிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "என்ன சார், நான் ரொம்ப ஆவலா ஆர்வமா இருக்கேன், கலந்துக்க இருக்கேன். நீங்க எப்படி?" என்றார்.

நான் இதுவரை எந்த இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொண்டவனில்லை. இந்த முறை கலந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அகில் வருகை, மடிப்பாக்க மாற்றம், தனிக்குடித்தனக் கொள்முதல்கள் என நாட்கள் பரபரப்பாக இருந்ததால் ஒரு புறம் முடியுமா என யோசனையாய் இருந்தது.

கூட்டம் பற்றின ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் பற்றி ஜெயமோகன் தளத்தில் இரண்டாம் கடிதம் படித்ததும், "சரிதான், இது நமக்கில்லை! கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டு எதற்கு வீணே கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும்", என முடிவு செய்து சண்முகத்திடம், "இல்லைப்பா, நீ போயிட்டு வா" என்றேன்.



தான் சென்று வந்த, கலந்து கொண்ட, பெற்று மகிழ்ந்த அனுபவத்தை விழிகள் விரிய சண்முகம் விவரித்ததும் (தொலைபேசியில்தான்), அடடே மிஸ் பண்ணிட்டோமோ எனத் தோன்றியது. சரி அடுத்த வருஷம் பார்ப்போம் என முடிவு செய்து "ஒரு விருந்தினர் பதிவு நமக்காக எழுதறது", என சண்முகத்திடம் கேட்டுக் கொண்டேன்.

தந்திருக்கிறார்.

அது....நாளை!

Sep 3, 2010

சௌந்தர்யா ரஜினி - சௌந்தர்யா அஸ்வின் ஆனப்போ.....


பதிவுலகில் அயாம்



இத்தொடர்ப் பதிவை எழுத என்னை தினந்தோறும் தொலைபேசியிலும் கடித வாயிலாகவும் தொடர்பு கொண்டு நிர்பந்தித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அங்கும் இங்கும் எங்கும்.... "கிரி"

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?



முப்பத்தி சொச்ச வருஷமா அதுதானுங்க என் பெயர். பதிவுக்காக ஒரு பூனைப் பெயரை....அயம் சாரி...புனைப் பெயரை சூட்டிக்கலாம்'னு பாக்கறேன். என்னோட பேர்லயே ஒரு புண்ணியவான் (கிரிப்லாக்.காம்) எழுதறாரு. அவரோட நல்ல பேரை நான் எந்த விதத்துலயும் கெடுத்த மாதிரி ஆகிடக் கூடாது பாருங்க, அட் லீஸ்ட் அதுக்காகவாச்சும்.

கீழ இருக்கறது எல்லாம் என் மனசுல இருக்கற யோசனைப் பெயர்கள். எது சரிவரும்'னு நீங்கதான் சொல்லுங்களேன்!?

"மாதவரம்" கிரி (என்னோட இருவது வருஷ சென்னை வாசம் அங்கதான், மாதவரம்  என் அடையாளம்)

கிரி கிருஷ்ணா (கிருஷ்ணகிரி நான் பிறந்த ஊரு)

"சங்கமம்" கிரி (சங்கமம் நான் சார்ந்த இசைக் குழுவோட பேரு)

"அகில்" கிரி (அகில் என் பையன் பேரு)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


அட, நான் ருச்தாவ் பஸ்தூகி, யாகிவ் சோரதேன் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் மாகிவ் சிம்மசோ, பாலமு யாதினே ஆகிய இத்தாலிய எழுத்தாளர்களை இரண்டு ஜென்மங்களாகப் படித்து வளர்ந்தவன். முதல் ஜென்மத்தில் இருபது வருடங்களும், இரண்டாம் ஜென்மத்தில் பதினைந்துமாக ஆக மொத்தம் முப்பத்தைந்து வருட வாசிப்பு அனுபவம் எனக்கு இருக்கிறது. 

நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.... பே...பெப்பேப்பே...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


தமிழ்மணம், தமிழிஷ் என்கிற இன்ட்லி வாழ்க வாழ்க....!!!


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


இல்லைன்னு சொல்லலாகாதுங்க. ஏன்னா ஆம் அப்படின்னு சொல்றதுதான் சரியான பதில். ஆனா இதுவரைக்கும் இல்லைன்னு சொன்னா என்னவாகியிருக்குமோ அதுதானுங்க விளைவா ஆகியிருக்கு. 

இப்போ நான் என்ன சொல்லணும்க? ஆமாவா, இல்லையா? 




6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாத்தியம்? எதுனா வலைப்பதிவு வழியா ஒரு வழி இருந்தா சொல்லுங்க சாமி.

எங்க ஆபீஸ்ல கூட நெறைய பேரு என்னைப் பார்த்து சொல்றாங்க. அவரு வெப்சைட்டு நடத்தி சம்பாதிக்கறாருன்னு. ஓங்கி அப்பணும் போல இருக்கும். சரி என்ன பண்ண, பழகித் தொலச்சுட்டாங்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ரெண்டுங்க. 

இது ஒண்ணு. 
எப்பவும் பொண்ணுங்களப் பத்தி எழுத ஒன்ணு (http://eppodhumpenn.blogspot.com).

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


ரெண்டுமே உண்டுங்க. 

கோபம் பத்தி இங்க வேணாமுங்க. ஏன்னா, இந்த பதிவுக்கு கீழ கெட்ட வசவு எதுவும் வேணாம்னு பாக்கறேன்.

துளசிதளம் (http://thulasidhalam.blogspot.com/) / Think Loud (http://arvindsdad.blogspot.com) போன்ற தளங்களை பராமரித்து வரும் சீனியர் சிடிசன்களைக் கண்டு கன்னா பின்னாவென்று பொறாமை வரும். 

நட்பாஸ் அவர்களின் வாசிப்புத்திறன் குறித்தும் பொறாமை உண்டு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..



என் அருமைத் தம்பி ரகுபாஸ்கர் லண்டன்'ல இருந்து லெட்டர் எழுதியிருந்தான். அதுக்கும் முன்னால, பின்னால, நடுவுலன்னு எனக்கு ஊக்க மருந்து திரு.நட்பாஸ் அவர்கள். அவரைப் போல பாராட்டவும் முடியாது, திட்டவும் முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


புதுசா ஒண்ணுமில்லை சார். எல்லாமே கிட்டத்தட்ட எழுதியாச்சு. அப்படியும் வேணுமின்னா இங்கிட்டு (http://www.sasariri.com/p/blog-page.html) போயி படிச்சிக்கங்க.


கடைசியாக நானே சேர்த்துக் கொண்ட ஒரு கேள்வி.


11) பதிவுலகிற்கு வந்திராவிட்டால் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்? (என்ன ஒரு கேள்வி?)


உருப்படியாக இன்னும் நான்கைந்து சுஜாதா புத்தகங்களையும், அலை ஓசை  முதலான இதுவரை நான் படிக்காத பத்து இருபது நல்ல புத்தகங்களை படித்திருப்பேன்.




இதைத் தொடர நான் அழைப்பது: ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா., நாஞ்சில் நாடன் ஆகியோர் மட்டும்.

Sep 2, 2010

ஒரு கிரிக்கெட் வீரனின் டைரியிலிருந்து...




நேற்று தொலைக்காட்சியில் உள்ளம் கேட்குமே திரைப்படம் பார்க்க நேர்ந்தது.
ஆரம்பக் காட்சியில் ஆர்யா விறுவிறுப்பான ஒரு கிரிக்கெட் மாட்சில் ஆடி 
ஜெயித்துவிட்டு வர, கடுப்படிக்கும் அந்த அணிப் பயிற்சியாளன்  "ஈசியா 
ஜெயிக்க வேண்டிய மாட்ச தேவைல்லாம கடைசி பால் வரைக்கும் இழுத்து 
டென்ஷன் பண்ணிட்ட", என கோபப்படுவார்.

என் நினைவலைகள் என்னை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த 
ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு அழைத்துச் சென்றன.

நான் என் கோச்சிடம் திட்டு வாங்கியது எளிமையாக ஒரு மேட்சை எங்களுக்கு 
சாதகமாக நான் ஜெயிக்க வைத்துக் கொடுத்ததற்காக.

ஜெயிக்க வெச்சதுக்கு திட்டா? என்னக் கொடுமைன்னு கேட்கறீங்களா? எல்லாம் 
இந்த பாழாப் போன மேட்ச் பிக்சிங்தான் காரணம். சரி வாங்க... மதுரைக்குப் 
போகலாம்...


தொண்ணூறுகளின் மத்தியில்...
 மதுரை.....டி.வி.எஸ். கிரிக்கெட் மைதானம். எங்கள் கல்லூரி அணிக்கும் மதுரையின் அந்தப் பிரபல கார்ப்போரேட் அணிக்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி ஒன்று. 


அடிக்க வேண்டிய ரன்கள் நான்கு. கடைசி மூன்று பந்துகள் மீதம் இருக்க, கையில் இருந்த விக்கெட்டுகள் இரண்டு. பவுண்டரி லைனில் நின்றிருந்த எங்கள் அணியின் மானேஜரும் பயிற்சியாளருமான  அச்சு சார் பேட்ஸ்மேனைப் பார்த்து ஏதோ சைகை செய்தார். 

ஏதோ கொஞ்சம் நல்லா போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் பழம் போல ஒரு கேட்ச் கொடுத்துவிட்டு பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்பினான். அடுத்து களம் இறங்க வேண்டியது நான். 

கவுண்டமணி பாணியில் "ஏய்...நான் அப்படி, நான் இப்படி" என்று உதார் விடுவேனே ஒழிய எனக்கு அப்படியொன்றும் கிரிக்கெட் ஆடத் தெரியாது. அணியில் சேர்க்க பதினோராவது நபன் கிடைக்காத நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த நான் எங்கள் கல்லூரி அணியின் பத்தோடு பதினொன்றானவன்.

"பாத்துக்கோடா தம்பி", என அச்சு சார் என்னை நோக்கி ஆரம்பிக்கும்போதே "ஒண்ணும் கவலைப்படாதீங்க சார், ரெண்டு பந்து இருக்குல்ல. ஏதாவது ஒண்ணு மீட் ஆகிடும். பவுண்டரிக்கு அனுப்பிடறேன். பைனல்ஸ்'ல நாமதான் ஆடறோம்", என்றேன்.

"அது இல்லடா தம்பி, பைனல்ஸ் நாம ஆடப்போறது இல்லை. எதிரணிதான் நுழையணும். பாத்துக்கோ", என்றார். 

"என்னது, அப்போ இது என்ன பிக்சிங்'கா?", எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.


மாவட்ட ரீதியான ஆட்டங்கள், மண்டல ரீதியான ஆட்டத் தொடர்கள் என எங்கு வந்தாலும் அந்த கார்ப்பரேட் அணிக்கு அப்படி ஒரு மரியாதை. ஏனென்றால் அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பில்தான் மதுரை கிரிக்கெட்டே நிமிர்ந்து நின்று கொண்டிருந்த நேரம் அது. எங்கு எந்த ஆட்டம் என்றாலும் இறுதி ஆட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும், அங்கும் ஜெயிக்க வேண்டும். அது மட்டுமல்ல "அசைக்க முடியாத" அணி என்ற பெயருடன் மதுரையை வலம் வர வேண்டும்.

ஓ...!! இதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா?, எனக்கு இப்போதுதான் விளங்கியது.

"சார், என்ன சொல்றீங்க. நான் மாட்ச முடிச்சிட்டு வந்துடறேன். நீங்க கொழப்பாதீங்க"

"நீ சின்ன பையன், உனக்கு ஒண்ணும் புரியாது. நான் சொன்னத மட்டும் செய்யி நீ"

கடுப்புடன் களமிறங்கினேன். எதிரே பந்து வீச வந்தவன் "இந்தக் கால" மலிங்கா போல "அந்தக் காலத்திலேயே" இருந்தான். என்னைப் பார்த்து பூச்சியைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தான். "என்னத்துக்கு நீ களம் எறங்கின? எப்படியும் ஆட்டம் எங்களோடது", என்றது அவன் ஏளனப் பார்வை.

வந்ததே கோபம் எனக்கு. அவன் போட்ட அந்த "ஆப் வாலியோ" "ஆப் பாலியோ" ஏதோ ஒன்று.... அதை "ஜெய் ஆஞ்சநேயா" என்று சொல்லி சாத்தினேன் ஒரு சாத்து. விவியன் ரிச்சர்ட்ஸ் கூட அப்படி ஒரு சிக்ஸ் அடித்து நான் பார்த்ததில்லை. நான் அடித்து நானே அதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். விர்ரென்று பறந்து பறந்து பந்து காணாமலே போனது.

பவுண்டரி லைனில் அச்சு சார் என்ன செய்வது எனப் புரியாமல் "கண்களை விரித்து" என்னை ஒரு வில்லப் பார்வை பார்த்தார். என் அணியின் ஓரிரு சீனியர் ஆட்டக்காரர்கள் "என்னடா பண்ணின?" என அங்கிருந்தே கையுயர்த்திக் கேட்டார்கள். மிச்ச மீதம் இருந்த அனைத்து ஜூனியர் ஆட்டக் காரர்களும் "ஓ"வெனக் கூவிக்கொண்டு வந்து என்னைத் தூக்கிச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

அந்த ஒயிட் ஆண்டு ஒயிட் அம்பயர், "இப்போ என்ன செய்யலாம், நான் வேணும்னா நோ பால் தந்துரட்டுமா", என எதிரணி கேப்டனிடம் "தத்துபித்திக்" கொண்டிருந்தான்.

ஆகவே அன்பர்களே, இந்த மேட்ச் பிக்சிங் என்பது தெருமுனை கிரிக்கெட் தொடங்கி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது. ஆங்கில நியூஸ் சேனல் அனைத்தையும் அணைத்து வைத்துவிட்டு வேறு வேலை ஏதேனும் இருந்தால் பாருங்கள்.



Related Posts Plugin for WordPress, Blogger...