Mar 30, 2011

தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!


இன்று அலுவலகத்தில் ஒரு கான்பரன்ஸ் கால். கடந்த மூன்று மாதங்களில் செயல்பாடுகளில் சிறந்த அணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த அணியை "சாம்பியன்" என அறிவித்து மலர்க்கிரீடம் சூட்டுவார்கள். யார் சாம்பியன் என்பதை நாங்கள் பேசி அடுக்கடுக்காய் அடுக்கும் பாயிண்டுகள் தீர்மானிக்கும்.

"நான் இப்படி" என ஒருவர்  சொன்னால் "நான் அப்படி" என இன்னொருவர் சொல்லுவார். பேசிக்கொண்டிருக்கும்போதே "அது எப்படி" என குறுக்குக் கேள்விகள் வந்துவிழும். அத்தனையையும் சமாளித்து பேசிமுடித்துக் கவிழ்த்தால் பின்னொருநாளில் யார் சாம்பியன் என அறிவிப்பைத்தாங்கி மின்னஞ்சல் ஒன்று வரும். சாம்பியன்ஷிப்  வாங்கின அணி எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்.

இன்றைக்கு அந்த கான்காலுக்கு முன்னதாக நாங்கள் செய்து கொண்டிருந்த ஆயத்தங்களும், கான்காலின் போது எங்களைச் சூழ்ந்திருந்த அந்த சூழலின் அழுத்தமும் சொல்லி மாளாது.

இது இப்படி இருக்கையில், நம் இந்திய பாகிஸ்தான் அணிகளிடையேயான இன்றைய ஆட்டத்திற்கு இந்த பாரதமே ஆடுகிறது பாருங்கள் ஒரு ஆட்டம். அதிலும் குறிப்பாக நம் மீடியா செய்து கொண்டிருக்கும் நர்த்தனங்கள் பற்றி என்னத்த சொல்ல?


இத்தனை பிரஷர்'களுக்கு இடையே ஆடத் தயாராக இருக்கும் தோனி பாய்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!




படங்கள் - நன்றி: ஜெய் ஹிந்த்  

Mar 26, 2011

கார்பரேட் கனவுகள் - ஒரு சின்ன போஸ்டர்

காலை எழுந்ததும் செல்போனில் கண்விழிப்பது சமீப வருடங்களாக வழக்கம். இன்றும் அதே.

ஒரு எழுத்தாளனுக்கு (!!) நூற்று சொச்ச மிஸ்கால்களும் அதே சொச்ச குறுஞ்செய்திகளும் அந்த இரவில் வந்திருக்க வேண்டும். ஆனால் நான் மடிப்பாக்கத்தில் வாழ்ந்து தொலைப்பதால் (எத்தனை நாள்தான் இந்தியா, தமிழ்நாடு என்றெல்லாம் டேமேஜ் செய்வது. சொந்த லொகாலிடியையும் டேமேஜ் செய்வோம் தோழர்ஸ்) அப்படி பாக்கியம் ஏதும் எனக்கில்லை.

ஆனால் எண்ணி ரெண்டே ரெண்டு குறுஞ்செய்திகள். இரண்டுமே அலுவலகத் தோழி ஒருவரிடமிருந்து.

முதல் செய்தி - 01:32am ==> "Just started your book"


இரண்டாம் செய்தி - ௦2:26am ==> "Finished reading. Feedback in the morning"

அவ்வளவுதான்......!

Feedback வந்தவுடன் நான் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னமும் புத்தகம்  வாங்கவில்லை என்றால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
.
.
.

Mar 25, 2011

யுவராஜ சரிதம்!


இந்திய உலகக் கோப்பைகளில் இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.

நான்கு உலகக் கோப்பைகளாக இறுதிப்போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா காலிறுதியோடு வெளியேறுகிறது.

தொடர்ச்சியாக நான்காவது உலகக்கோப்பை வெல்லும் ஆஸ்திரேலிய கனவு பொய்த்திருக்கிறது.

கேப்டனாக தொடர்ந்து  மூன்றாவது உலகக் கோப்பை வெல்லும் பாண்டிங்கின் கனவும் பொய்த்திருக்கிறது.

1983'க்குப் பின் முதன்முறையாக அரையிறுதி விளையாடும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டுள்ளது.

இத்தனை நிகழ்ந்ததும் இன்னமும் நிறையவும்
அத்தனையும் செய்தான் இவன்


....இன்றைய புகைப்படம்....
ஒரு மாறுதலுக்கு டிவிட்டருக்குப் பதிலாக இங்கே!
பின்னூட்ட வெண்பாம்கள் படையுங்கள் தோழர்ஸ்.... 

Mar 21, 2011

புத்தக வெளியீடு - "சுகப்பிரசவம்"

அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது! 

மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.

ஐந்து மணிமுதல் மண்டபம் நிறையத் தொடங்கியது.  சிலம்பொலி ஐயா அவர்கள் முதலில் வந்தார், அடுத்து சொக்கன் அவர்கள், சற்றே இடைவெளி விட்டு லேனா தமிழ்வாணன் அவர்கள், இனியவன் அவர்கள் என ஐந்து பதினைந்திற்கு முன்னதாகவே முக்கிய விருந்தினர்களில் சரி பாதி அரங்கத்தில் இருந்தனர். சரியாக ஐந்தரைக்கு மண்டபம் நிறைந்துவிட்டது.

வருபவர்களுக்கு சமோசா தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால்..................................... பின்னர் அது ஸ்வீட் காரம் காபி வழங்க என ஏற்பாடானது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுடன் முந்திரி பக்கோடா. நூற்று ஐம்பது பேரை எதிர்பார்த்தோம். கடைசியில் வந்த நாற்பது பேருக்கு ஸ்வீட்டும் இல்லை காரமும் இல்லை என்றாகும் அளவிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் விழாவிற்கு அதிக ரெஸ்பான்ஸ்.

ஆறு மணிக்கு சற்று முன்னே டாக்டர் ஷ்யாமா அவர்களும் வந்து சேர, ஐந்தரை மணியளவில் நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தாலும் இந்திய காலநேர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு ஆறு மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கியது. ஆறு ஐந்திற்கு பி.கே.பி. அவர்களும் வந்து சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் பாக்யம் ராமசாமி அவர்கள் வர இயலவில்லை.

முதலில் பதிப்பாளர் செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்களின் வரவேற்புரை அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கும், புத்தகம் வெளிவரப் பின்னணியில் பணி புரிந்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புத்தகம் வெளியிடப்பட்டது. என் வாழ்வின் முக்கிய மைல் ஸ்டோன்! ஒரு மாபெரும் தருணம்! சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட செங்கை பதிப்பகத்தின் அரு.சோலையப்பன் அவர்களின் தந்தை "அருணோதயம்" அருணன் அவர்களின் நட்பினைப் பாராட்டி இந்த விழாவில் சிலம்பொலியார் கலந்து கொண்டார்.

நான் ஆதிநாள் தொட்டு திரு பி.கே.பி. அவர்களின் தீவிர வாசகன். எனவே பதிப்பாளரிடம் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதியை பி.கே.பி. அவர்கள் பெற்றுக் கொண்டால் அது பெருமைக்குரியதாக இருக்கும் என குறிப்பிட்டேன். திரு. அருணன் அவர்கள் வாயிலாக அதுவும் சாத்தியமாயிற்று. (பி.கே.பி.அவர்களின் முதல் புத்தகம் அருணோதயம் வாயிலாகவே வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

பின்னர் முக்கிய விருந்தினர்கள் புத்தகத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை நான் இங்கே சொன்னால் இது சுயதம்பட்டப் பதிவு ஆகிவிடும். ஆகவே அதனைத் தவிர்க்கிறேன். எனினும், இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேசிய எல்லோருமே புத்தகத்தை அட்டை டு அட்டை படித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று பதிவுகள் குறித்து குறிப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கென அவர்கள் ஒதுக்கிய நேரத்தை நினைத்து மிகவும் பெருமிதமாக இருந்தது. 

சிலம்பொலியார் அவருடைய களம் இதுவல்ல என்றாலும் புத்தகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினது ஏதோ விழாவிற்கு வருகிறோம், எதையோ பேசுவோம் என்றில்லாது சிறியவிழா எனினும் அதற்கும் தயாராக வந்த நேர்மையை பறைசாற்றியது.  பேசி முடித்தபின் அவர் சபையினில் எனக்கு பொன்னாடை போர்த்தியபோது "நான் சரியாகத்தான் பேசினேனா?" என என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒரு தமிழ் இலக்கிய சூழலின் ஒரு மாபெரும் ஆளுமை என்னைப் போன்றவனிடம் அதைக் கேட்கும் தேவை இல்லை எனினும் அவரின் அந்தப் பண்பை மிகவும் வியந்தேன்.

பி.கே.பி. அவர்கள் பதினைந்து நிமிடங்கள் பேசினார். நான் மேடையில் அமர்ந்திருக்க.... என் குரு என்னைப் பாராட்டிப் பேசினார். இதுவன்றோ வாழ்வின் தலைசிறந்த தருணம்? தொட்டால் தொடரும், பின்னிரவில் நதியருகில், நாயகி நாளை வருவாள், மன்மதப் புதிர், ஒரு நிஜமான பொய் , டிசம்பர் பூ டீச்சர் என பி.கே.பி. அவர்களின் கதைகளைத் தேடித்தேடிப் படித்த தருணங்களில் நான் நினைத்தும் பார்த்திருக்க மாட்டேன் இப்படி அவர் வாயால் என் படைப்பிற்கு வாழ்த்துக்கள் கிடைக்கும் என. 

சொக்கன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் (சற்றே பதட்டத்துடனும் கூட) புத்தகத்தை அறிமுகம் செய்தார். ஒரு அறிமுக எழுத்தாளன் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியதுடன் அழைப்பை ஏற்று நேரிலும் அவர் கலந்து கொண்டது நிச்சயம் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயம். காலத்திற்கும் அவருடனான நட்பு தொடரவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ஷ்யாமா மற்றும் "இலக்கியவீதி" இனியவன் அவர்கள் இருவரும் தங்கள் உடல் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. இவர்கள் இருவருமே அவரவர் சார்ந்த சூழலில் சத்தமில்லாமல் படைத்து வரும் சாதனைகளைப் பட்டியல் இடுதல் சிரமம். 

லேனா அவர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சியின் ஹைலைட் என்றால் அது மிகையில்லை. தான் பேசவேண்டியதை எல்லாம் பி.கே.பி. அவர்கள் பேசிவிட்டதாக லேனா அவர்கள் குறிப்பிட்டுவிட்டுப் பேசத் துவங்கினாலும் சரியாக முப்பது நிமிடங்கள் என்றால் முப்பது நிமிடங்கள் பேசினார் லேனா. அவருக்காகவே என நிகழ்ச்சியைக் காண வந்தவர்களை அவர் ஏமாற்றவில்லை. எத்தனை நிமிடங்கள் பேசினாலும் கேட்பவர்களை பேச்சால் எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்பதை அவரிடம் நிச்சயம் கற்க வேண்டும்.

விழாப் பிரபலங்கள் அனைவருமே அவரவர் துறையில் இப்படியப்படி நகர நேரமில்லாமல் உழன்று கொண்டிருப்பவர்கள். இருந்தும் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுதை என் புத்தக வெளியீட்டிற்கென ஒதுக்கியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன்.


இறுதியாக நான் ஆற்றிய ஏற்புரை / நன்றியுரை அதனைத் தொடர்ந்த நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.


நேரில் வந்து விழாவைச் சிறப்பித்த என் அலுவலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்க வருகை தந்த கோவை திரு.ஜெயராமன்-சரஸ்வதி, திருவனந்தபுரம் திரு.அசோக்-ரமா ஆகியோருக்கும், என் "பி.பீ.ஓ குரு"   பெங்களூரு அர்விந்த் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள்!

இதுவரை ஆயிரத்தி இருநூறு புத்தகங்கள் விற்றுள்ளன என சொல்ல ஆசைதான், இருந்தாலும் அதற்கு ஒரு ஆயிரம் புத்தகங்கள் குறைவாக விற்றுள்ளதால் அப்படிச் சொல்ல இன்னமும் நாளாகும்.

புத்தகத்தை இணையத்தில் பெற ==> உடுமலை டாட் காம்


விழாவில் நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
(புரொபஷனல் கலைஞர் எடுத்த படங்கள் பின்னர்...)

 தமிழ்த்தாய் வாழ்த்து

எழுத்துலக அ'னா ஆ'வன்னா கற்றுத்தந்த என் குருவுக்கு


இந்தப் புத்தகம் எழுதத்தூண்டிய சொக்கனுக்கு 

 புத்தகம் வெளியான அந்த அருமையான தருணம் 

சிலம்பொலியார் இந்தச் சிறுவனுக்கு செய்த சபை மரியாதை


 என் குரு என் எழுத்தைப் பாராட்டி பேசினபோது...

லேனா அவர்களின் அந்த ஹைலைட்டான முப்பது நிமிடங்கள்! 


 பதிப்பாளரிடம் என்னை அறிமுகம் செய்த பழனிக்கு மரியாதை
இனியவன் ஐயாவுடன் ஒரு இனிய தருணம் 

Mar 16, 2011

பி.பீ.ஓ'க்களின் எதிர்காலம்




அவர் ஒரு பிரபல மனிதர். வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள நம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேரில் அழைக்கச் சென்றிருந்தோம்.

புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்தவர் இன்டர்வியூக்களில் கேட்பது போல் கேட்ட முதல் கேள்வி, "பி.பீ.ஓ.'க்களோட எதிர்காலம் எப்படிங்க இருக்கு?", நான் எனக்குத் தெரிந்த பதிலைச் சொன்னேன்.

அடுத்த கேள்வி, "உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கறதுல அல்லது வெளிநாட்டுல இருந்து வேலை இங்க வர்றதுல ஒரு saturation point அப்படின்னு ஏதும் இருக்கா?". இந்த கேள்வி இதுவரை பி.பீ.ஓ. துறைக்கு வெளியே என் வட்டத்தில் யாரும் கேட்டதில்லை. தயாராக என்னிடம் இருந்த பதிலைச் சொன்னேன்.

அவர் விடவில்லை, "வெளிநாட்டுக்காரன் ஒரு தீர்மானம் போடறான் சார், அவுட்சோர்சிங்'ல வேலை கொடுக்கக்கூடாது அப்படின்னு. அப்போ உங்க எதிர்காலம் பத்தி என்ன சொல்லுவீங்க?". அட.... இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது. அதையும் சொன்னேன்.

 இவை நேரிடையான தகவல் அறியும் பொருட்டு கேட்கப்படும் கேள்விகள். இது போன்ற கேள்விகள் நம்மை பயமுறுத்தாது. நான் சொன்ன  பதில்களனைத்தும் இந்த நான்கரை ஆண்டுகளில் இந்த பி.பீ.ஓ. உலகத்தில் நான் கற்றவைகள் வாயிலாகச் சொன்னவை.

இவை தவிர்த்து,  "என்ன சார், ஒபாமா உங்களுக்கு வேலை தரமாட்டாராமே?",  என்பதான கேள்விகள். "ஜெர்மனில புதுசா அவுட்சோர்சிங்'ற்கு  எதிரா பில் பாஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா சார்? இனிமே அங்க இருந்து பிசினஸ் வராது", இது போன்ற சுய தீர்மான தகவல்கள்.

இவ்வகைக் கேள்விகள் / அரைகுறைத் தகவல்கள் இந்தத் துறையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருக்கும் இருப்பதே. சரியான தகவலை அல்லது பதிலை, சரியான நபர்கள், சரியான இடத்தில் பகிர்ந்து கொள்ளாததே இங்கே பிரச்னை. வணிக நாளிதழ்களைப் புரட்டி இந்தத் துறையின் போக்கு குறித்து சரிவர புரிந்து கொள்ளும் ஆர்வமும் இங்கே பலருக்கு இல்லை. கேள்விகளை எழுப்பிவிட்டோ அல்லது தகவல்களை அள்ளித் தெளித்துவிட்டோ போய்க்கொண்டே இருக்கவேண்டும். 

இவர்களுக்காக கார்பரேட் கனவுகள் புத்தகத்தில் நான் எழுதின அத்தியாயம்தான் "ஒபாமா மசோதாக்கள்". இந்த அத்தியாயத்தில் அமெரிக்க தேர்தல் நேரத்தில் ஒபாமா தந்த வாக்குறுதிகளைக் குறித்தும் ஆட்சிக்கு வந்தபின் எந்த விதத்தில் அவர் அவுட்சோர்சிங் துறை மீது கை வைத்தார் என்பது குறித்தும் எழுதியிருக்கிறேன். 

அவர்கள் வேலையை இங்கே கைமாற்றிவிட செய்யும் அடங்கள் எதற்காக? இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் அரசியல், ஒபாமா வருகைக்குப் பின் இந்தத் துறையின் போக்கு இவை குறித்து விவாதிக்கிறது இந்த அத்தியாயம்.

மேலும்.....         

.....மேலும் தகவல்கள் புத்தகத்தில்....!

வரும் சனிக்கிழமையன்று சென்னையில் கார்பரேட் கனவுகள் புத்தக வெளியீட்டு விழா. அங்கு சந்திப்போம் நண்பர்களே!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...