Dec 31, 2010

வெள்ளிக் கதம்பம் - கோவை பயண நினைவலைகளுடன்...



சாய்ராம் (எ) பால நரசிம்மன்


டிசம்பர் சீசனில் மஹா பாகவத சிகாமணிகள் பங்குபெறும் கச்சேரிகளுக்கு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில்.... கோவையின் ஒரு கோடியில் இருந்து கொண்டு சத்தமே இல்லாமல் சங்கீதத்தை (தன்னுள்ளே) வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் கலைஞனைப் பற்றி.......

சாய்ராமுக்கு எப்போதும் உள்ளே இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இவனுடன் இருக்கும் நேரங்களில் இவன் பேசுவதைவிட இவன் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் ஆலாபனையைத்தான் நீங்கள் செவிபடக் கேட்க இயலும்.

"சங்கீதமே அமர சல்லாபமே" என இரண்டு வரிகள் நாம் பாடினால் "நட பைரவி" என்கிறான். இல்லையில்லை "சர்கம்" என்றால் "நான் ராகத்தைச் சொன்னேன்" எனச் சொல்லி அசர வைக்கிறான்.

இத்தனைக்கும் முறையாக இசை பயின்றவனில்லை சாய்ராம். எல்லாமே கேள்வி ஞானம்தான். கேள்வி ஞானத்திலேயே கமகங்களில் சொக்க வைக்கிறான்.

"கண்டிப்பா கிளாஸ் சேர்ந்து படி சாய்ராம்", என்றால் "என்னோட மானசீக குரு டி.எம்.கிருஷ்ணா இருக்கார் இப்போதைக்கு" என்கிறான். வெறித்தனமாக டி.எம்.கிருஷ்ணா பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறான். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வால்பேப்பராக ஜொலிக்கிறது. ஸ்க்ரீன் சேவரிலும் அவரே.



இரண்டு நாட்கள் முன் கோவையில் சாய்ராமை சந்தித்தது என் அதிர்ஷ்டமே. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவன் ஃபேஸ்புக்கில் நிறைய நட்புகள் சங்கீதம் சம்பந்தப்பட்டவர்களே.

திருவையாறில் தன் தாய்மாமாக்கள் இருவருடன் தங்கி சங்கீதம் பயின்றவாறே தஞ்சையில் பொறியியல் படிக்க வேண்டும் என்பது சாய்ராமின் இப்போதைய கனவு.


2010'ன் த்ரீ இடியட்ஸ் !


முதல் மூன்று இடங்களுமே ஒருத்தருக்கேதான். அது ஃபேஸ்புக்!

கீழே இந்த இரண்டு படங்களையும் பாருங்கள். முதல் படம் உலக மக்கள் ஒன்றரை வருடம் முன்பு எந்த சோஷியல் நெட்வொர்க்கின் பிடியில் கட்டுண்டு இருந்தார்கள் என்றும், அடுத்த படம் இப்போது இந்த மாத நிலவரப்படி எங்கே கட்டுண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

அந்த ஃ பேஸ்புக் நீல நிறத்தில் சாயம் பூசியிருக்கும் நாடுகள் அத்தனையும் ஃ பேஸ்புக் பைத்தியம் பிடித்துத் திரிகின்றன.






படங்களுக்கு நன்றி: நண்பர் அகங்கார வீரகடியன்

ரசித்த கவிதை!
இந்த வாரம் நான் ரசித்த கவிதை சத்தியமாக கோவைப் பெண்களின் கொஞ்சு தமிழ்தான் கொங்கு தமிழ்தான். தமிழகத்தின் அழகுத் தமிழ் என்றால் அது கொங்கு தமிழ்தான் என எங்கும் உரத்துச் சொல்வேன். கொங்கு தமிழை அங்கே சில பெண்கள் கொஞ்சிப் பேசிக் கேட்கையில்.... "செவிகள் ஆயிரம் வேணுமடா முருகா!".

சரி சரி... enough ஜொள்ளு அண்ட் ஓவர் டு பிசினெஸ்!



சில சினிமாக்கள்!


இப்படியெல்லாம் படங்கள் சென்னையில் ஓடுகின்றன என்று தினத்தந்தி / தினகரனின் சினிமா பக்கங்களை புரட்டினால்தான் தெரிகிறது. இங்கே சாம்பிளுக்கு ரெண்டு....இப்படி படம் பேரு கேள்விப் பட்டிருக்கீங்களா நீங்க?

அந்தத் தயாரிப்பாளர்கள் பெயரைப் படித்தாலே கண்ணில் ரத்தம் வருகிறது! பாவம் அவர்கள்!




மடிப்பாக்கம் மல்லி இட்லி!


கூட்ரோடைத் தாண்டி பஸ்ஸ்டான்ட் நோக்கி நீங்கள் உள்ளே வந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கும் ஒரு ஹோட்டல் துர்கா பவன்.

சென்ற முறை இட்லி பார்சல் வாங்கி வந்து அதை கடிக்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டம்மாவிடம் இட்லியாலேயே நான்கு வீச்சுகள் வாங்க வேண்டியதாயிற்று.

இருந்தும் என்ன இங்கே லோக்கலில் அவர்களே மோனோபோலி போல. அம்மா, வீட்டம்மா இருவரும் மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் படையெடுக்க மீண்டும் துர்கா பவன் வாசல் மிதிக்கலாயிற்று. 

"போன வாரம் இட்லி வாங்கி இப்படி ஆகிப் போச்சு சார்", என என் சோகக் கதையைச் சொன்னால்...

"அது ஆறிப் போன பின்ன சாப்டுருப்பீங்க சார். சூடா சாப்டுடணும்", எனக்கே அட்வைஸ்.

சரி, மெனுவில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் "மல்லி இட்லி" என்று ஏதோ மின்னிற்று.


"இட்லிக்கும் மல்லி இட்லிக்கும் என்ன வித்யாசம் சார்"

"ஒர்ரூவா சார்"

"அதில்லீங்க, எப்டி இருக்கும்"

"இது கும்முன்னு நல்லா சாஃப்டா இருக்கும்"

"அப்போ அது தட்டையா கெட்டியா இருக்குமில்ல"

"அப்டி இல்ல சார். அது சாஃப்டா இருக்கும். இது நல்லா சாஃப்டா இருக்கும்", நல்ல சமாளிப்பு.

"சரி நாலு கட்டுங்க".

வீடு வந்து தின்றேன். அடக் கஷ்டமே! சாதாவே தேவலாம் போலிருக்கு. இது ரப்பர் போலல்லா இருக்கு! இதுக்கு மல்லி இட்லி என்று வேறு ஒரு பேரு!

"அது சரி! மார்கழி மாசம். இது மல்லிக்கு சீசனில்லை. பொழியற பனிக்கு கொஞ்சம் நசிஞ்சு புசிஞ்சிதான் சார் இருக்கும் மல்லி", ஹோட்டல்காரரின் குரல் தன்னால் என் காதில் ஒலித்தது.
.
.
.


Dec 30, 2010

எவன்டி உன்ன பெத்தான்...

"எவன்டி உன்ன பெத்தான்....... " இப்படி ஒரு பாடல் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் "வானம்" திரைப்படத்தில்.  பாடலைக் கேட்டு ரசிக்க காதுகள் ஆயிரம் வேண்டும். 

யப்பா யப்பா யப்பா... யுவன் ஷங்கர் ராஜா சார்.... அப்புறம் அந்தப் பாட்டை எழுதின ஏதோ ஒரு சார்.... பெறகு அதைப் பாடித் தொலைத்த சிம்பு சார்.... உங்களுக்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் காலத்துக்கும் கடமைப் பட்டிருக்கு.

"ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற டப்பாங்குத்து ரகப் பாடல்களிலும் கூட "ஷண்முகப்ரியா" என்னும் அற்புத ராகத்தைக் கலந்து அற்புதங்கள் தந்த அந்தப் பண்ணையபுரத்துப் பட்டிக்காட்டானின் மகனா இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைத்தான் என நினைத்தால் "நிஜமாவே வலிக்குது" சார்!

அந்தப் பாடல் உருவான விதத்தை இங்கே சாம்பிளில் பாருங்கள். இசை ஞானம், சுருதி ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்கள் மனதைத் திடப் படுத்திக் கொண்டு இந்தப் படுத்தல்களைக் கேட்கவும்.


பி.கு.: சென்ற வார வெள்ளிக் கதம்பத்தின் உள்ளே ஐந்தோடு ஒன்றாய் இந்தச் சரத்தைச் சொருகி இருந்தேன். கண்டும் காணாமலும் அடிக்கப்பட்டுவிட்டதோ என்ற கவலையில் தமிழ் கூறும் நல்லுலகம் பயனடைய இங்கே மறுபதிவாக...
.
.
.

Dec 26, 2010

மன்மதன் அம்பு - என் பார்வையும் சில எரிச்சல்களும்...



முதலில் கொஞ்சம் என் எரிச்சல்கள் பற்றி...


அப்படியொன்றும் அசாதாரண படம் இல்லை மன் மதன் அம்பு! கமல் படங்களுக்கே உரிய எல்லா பிளஸ் மைனஸ்'களுடன்தான் வந்திருக்கிறது படம்.

ஆனால் ஏதோ விஜய் படத்தையோ அல்லது விஜய.டி.ராஜேந்தரின் படத்தையோ பார்த்த கோலத்தில் இணையத்தில் வரும் விமரிசனங்களும் கீச்சொலிகளும் எனக்கு சிரிப்பு கலந்த எரிச்சலையே வரவழைக்கின்றன.

இந்தப் படத்தை எதற்கு கப்பலிலும் ஐரோப்பாவிலும் எடுக்க வேண்டும் வெறும் மேடை நாடகக் கதை இது, காமராஜர் அரங்கம் போதாதா என கமலுக்கு அறிவுரை சொல்கிறார் ஒருவர்.

உதயநிதி செலவில் கப்பல் ட்ரிப் அடிச்சிட்டாரு கமல் என்கிறார் இன்னொரு நண்பர்..

உங்கள் எல்லோரையும் விட சினிமா பற்றி நன்கு தெரிந்தவர் கமல்ஹாசன் என்பதால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை.... மறுபடி மறுபடி எழுத்தாளர் பா.ரா. அவர்களின் கோட்டையே அணிந்து கொண்டு பேசுகிறேன்...

நமக்குச் சரியென்று பட்டால் ஏற்பதும், தவறென்று தோன்றினால் ஏற்காமல் விடுவதும் நம் சுதந்தரம் சார்ந்தது. மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது குறைந்தபட்ச நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டுமென்பது ஆதார விதி.

அதே போல விமர்சனம் என்று எழுத வரும்போது அதை விமரிசனமாக எழுத வாருங்கள் என்பதுவும் தயவு செய்து பச்சை மிளகாயைக் கடித்துவிட்டு அடியில் பற்றி எரியும் நிலையில் ஏதும் எழுத வாராதீர்கள் என்பதுவும்தான் என் வேண்டுகோள்.

எந்திரன் திரைப்படம் வரும் முன்னரே ஒரு எழுத்தாளர் எழுதியது நினைவிற்கு வருகிறது. "படத்தின் பாடல்கள் குப்பை. அதைத்தான் இப்போதைக்கு சொல்ல இயலும். படம் வரட்டும், பார்த்துவிட்டு கிழி கிழியென்று கிழிக்கிறேன்", என படம் பார்க்கு முன்னரே எழுதியவர் அவர். இது போன்றோர் வழியில் வந்த நாம் இப்படி எதையேனும் திட்டித் திட்டியே "திட்டல் பேர்வழியாக" ஒரு நாள் உருவெடுத்துவிடப் போகிறோம் என்பதே என் வேதனை.

சரி! இப்போது படம் குறித்து...

நடிகைக் காதலி த்ரிஷா, தொழிலதிபர்க் காதலன் மாதவன், இருவரிடையே காதல், ஊடல், பிரிவு என ஆரம்பம். சில வருட இடைவெளியில் த்ரிஷா  தன் தோழி சங்கீதாவுடன் ஐரோப்பிய ஹாலிடே டூர் போக அவரைப் பின் தொடர டிடெக்டிவ் கமலை அனுப்புகிறார் மாதவன். இதனைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள், குழப்பங்கள், கலகலப்புகள், சலசலப்புகள், ஜோடி மாற்றங்கள் என இவற்றின் கோர்வைதான் மன் மதன் அம்பு.

படத்தின் பிளஸ்'கள் பற்றி - 

கனமான அழுத்தம் திருத்தமான டயலாகுகள். குறிப்பாக மாதவன், த்ரிஷா இடையே பிரிவைக் கொண்டுவரும் அந்த கொடைக்கானல் சாலையோர வசனங்கள்.  மேலும் "நேர்மையானவங்களுக்கு திமிர்தான் வேலி" என்பது போன்ற கமல்த்தனமான வசனங்கள் (தியேட்டரில் கைதட்டல்).

அதன் பின்னர் மாதவன் - த்ரிஷா இடையே மீண்டும் பிளவு ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி உரையாடல், அந்த உரையாடலில் மாதவன் வெளிப்படுத்தும் அற்புத வசன வெளிப்பாடுகள். 

அந்த பப் (pub) காட்சி வசனங்கள். அந்தக் காட்சியின் வசன நகைச்சுவைகளை நாம் கிரகித்துக் கொள்ள நமக்கு நாளாகும்.

சங்கீதாவின் கதாபாத்திரம். ஒரு டைவர்சியின் அசால்ட்'டான டயலாக் டெலிவரிகளை சங்கீதா வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் "நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா" என்கின்றன.

சங்கீதாவின் பையனாக வரும் அந்தப் பொடியன். "பையன் கெடச்சிட்டான், ஆனா புருஷனைத் தொலச்சுட்டியே", என அவன் சங்கீதாவிடம் சொல்லும்போது தியேட்டரே அலறுகிறது.

இயக்குனர் பிரியதர்ஷனின் குரூப்பு (Kuroop) பாத்திரம். மனுஷர் அசரடிக்கிறார்.

"நீலவானம் பாடல்" - இப்படி தலைகீழாக அந்தப் பாடலின் படமாக்கத்திற்கு யோசித்தது மட்டுமல்ல, தலைகீழ்ப் பாடலில் நேரான உதட்டசைப்புக்குப் பின் இருக்கும் பிரமாத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இந்தப் பாடலின் படமாக்கம் குறித்து ஸ்ரீதர் நாராயணன் என்ன சொல்கிறார் பாருங்கள்:
சாதாரண ஷாட்டுகளுக்கு விநாடிக்கு 24 ஃப்ரேம்கள் செட் செய்தால் ஸ்லோமோஷனுக்கு 60 ஃப்ரேம்கள் செட் செய்து கொள்வார்கள். நாகராவில் பாட்டை வேகமாக ஓட வைத்து நடிகர்களை நடிக்கவைத்து பட்மெடுத்து விடுவார்கள். இதை ஸ்லோமோஷனில் ஓட்டும்போது பாடலின் சாதாரண வேகத்துக்கேற்ப உதடசைவுகள் பொருந்தும்… ஆனால் உடல் / அங்க அசைவுகள் மெதுவாக நிகழும்.
நீலவானம் பாடலில் கிட்டத்த்ட்ட அந்த முறை என்றாலும் இதில் காட்சிகளை நாம் காண்பது ரிவர்ஸ் ஸ்லோமோஷனில். அப்பொழுது பாடல் வரிகள் உதட்டசைவிற்கு பொருந்த வேண்டுமென்றால் எப்படி படம்பிடித்திருப்பார்கள் என்பதுதான் கேள்வி.
நடிக்கும்போதே பின்புறமாக நடிப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஏகபட்ட நடிகர்கள் ஷாட்டில் தெரிகிறார்கள். பாடலை ரிவர்ஸில் ஓடவிட்டு உதட்டசைப்பது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். அதுதான் அந்த விஷயத்தில் பிரமிப்பானது.
(நன்றி: தமிழ் பேப்பர்)


மனுஷ நந்தன் - ஒளிப்பதிவில் இத்தனை அற்புதத்தை தன் ஆரம்பப் படங்களிலேயே காட்ட இயலும் இவரின் ஒளிமய எதிர்காலம் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள் சார்! கப்பல் சார்ந்த காட்சிகள் கலக்குகின்றன. 

ரமேஷ் அர்விந்த் - ஒரு அரதப் பழசு கதாபாத்திரம் என்றாலும் அதிலும் நேச்சுரலாக கலக்கியிருக்கும் ர.அ. அசர வைக்கிறார்.

ஒரே காட்சியில் வந்தாலும் நறுக்குத் தெறிக்கும் அந்த இலங்கைத் தமிழ்ப் பெண்.

கொடைக்கானலில் பறவைகள் பறப்பதை முதலில் கிராபிக்சில் காட்டினாலும் அதன் பின்னணியில் இருக்கும் விஷயத்தை பின்னால் மற்றொரு கோணத்தில் காட்டி கமல், த்ரிஷா என இருவர் மன ஓட்டத்தையும் யோசிக்க வைக்கும் எக்ஸலன்சி!

படத்தின் மைனஸ்கள்:

கமல் நடிப்பு, வெளிப்பாடுகள் குறித்து நாம் தனியே சர்டிபிகேட் தரும் அவசியம் இல்லை. எனினும், நாக்கை துருத்திக் கொண்டு அவர் அழாமல் அழும் பழைய ரகக் காட்சிகள், 

பொண்டாட்டி செத்துட்டா என அவர் சொல்வதுவும், எப்படி செத்தாங்க என த்ரிஷா கேட்பதுவும் "வே.வி" படத்தை நினைவு'படுத்துகின்றன'.

காதலைக் கலைக்கும் வில்லி அம்மாவாக உஷா உதுப் (அவர் நடிப்பு ஓகே என்றாலும்), தேவையில்லாத அந்த அத்தை பொண்ணு கேரக்டர்.

ஊர்வசி - நடிப்பில் ராட்சசி என செல்லமாக கமலால் அழைக்கப் பட்ட ஊர்வசியின் கே.ஆர்.விஜயாத்தனமான நடிப்பு. கடைசி வரை ஆஸ்பத்திரியில் அழுது வடியும் இவர் கடைசியில் சுபம் எனும்போது அதே ஆஸ்பத்திரி பின்னணியில் முழு மேக்-அப்பில் சிரித்து வடிவது... 

கிளைமாக்ஸ் சொதப்பல்கள். என்னடா நடக்குது இங்க என சொல்ல வைக்கிறது.

கடைசியாக....

படமாக்கப்பட்ட விஷயத்திலும், வழக்கமான கமலின் பிளஸ்'சான கதாபாத்திர சிறப்புகளிலும் அசாதாரண நேர்த்திகளைக் கொண்டிருக்கிறது படம். கொஞ்சம் பழைய க்ளிஷேக்களையும் கமல் தவிர்த்திருக்க வேண்டிய சற்றே மிகைப் படுத்தப் பட்ட மேதாவித்தன காட்சிகளையும் தவிர்த்திருந்தால் படம் ஏ-ஒன் என சொல்லியிருக்கலாம்.

இருந்தாலும் என்ன....படம் ஏ-டூ என சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
.
.
.

Dec 25, 2010

ஒரு செஞ்சுரியனின் நிழலில்....


இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை பாக்சிங் டே மேட்ச் என அழைக்கப்பட்டு துவங்குகிறது. அதற்கு முன், முடிந்து போன முதல் போட்டியின் சில அம்சங்களைக் கவனிக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.


சரி....நான் சொல்ல வந்ததை நான் சொல்லத் தொடங்குமுன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு உதரணங்களைப் பாருங்கள்....

உ.ம். 1 :

1999'ஆம் வருடம் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. வியாபார ரீதியாக படம் வெற்றி பெறாவிடினும் அந்தப்படத்தின் பாடல்கள் ஆண்டுகள் கடந்து இன்றும் பிரபலமானவை. அந்தப் படத்தின் பாடல்கள் எவை என நான்கு பேரிடம் கேட்டால் பதில் என்ன தெரியுமா?

"வராக நதிக்கரையோரம் - அதுதானே அருமையான பாட்டு அந்தப் படத்துலையே. ஷங்கர் மகாதேவன் அறிமுகப் பாட்டு இல்லையா அது? பட்டிதொட்டியெல்லாம் கலக்கி எடுத்துச்சி இல்லை அந்த பாட்டு."

"பிறகு?"

"அப்புறம் ரெண்டு மூணு பாட்டு சுமாரா இருக்கு.ஆனாலும் வராக நதிக்க்காயயோரம்தான் அருமை. தெரியுமில்ல?"

"கவிஞர் வைரமுத்து தேசிய விருது வாங்கின பாட்டு?"

"அது வராக நதிக்கரையோரம்"

"இல்லை! ஸ்ரீநிவாஸ், சுஜாதா பாடின முதல் முறை சொல்லிப்பார்த்தேன், கேட்டதில்லையா நீங்க?"

"அந்தப் படத்துல அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?"

ஒரு தேசிய விருது பெற்ற பாடல் பற்றின விபரத்தை எளிமையாக மறக்கடித்துவிட்டது அல்லது கவனிக்க அனுமதி மறுத்துவிட்டது அந்த "வராக நதிக்கரை".

Overshadowing!

உ.ம். 2:

2008'ஆம் வருடம் மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது அத்தனை தொலைக்காட்சி சேனல்'களும் லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ் என்று ஒரு மாத காலத்திற்கு அலறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, இடையில் இறந்து போன ஒரு முன்னாள் பிரதமரின் மரணம் ஒரு வரிச் செய்தியாக மட்டுமே மக்களுக்குக் கிடைத்தது. தினசரிகள் போனால் போகிறதென்று இருபதாம் பக்கத்தின் ஈசானி மூலையில் ஒரு பத்தி செய்தி வரைந்தன.

அவர் வி.பி.சிங்

விகடன் போன்ற சில பத்திரிக்கைகள் மாத்திரம் "ஆக்கிரமிப்பது அவமானம் பின்வாங்குவது பெருமை" என அவரின் அமைதிப்படை வாபஸ் நிகழ்வின் பெருமையினை  நினைவுறுத்தி கட்டுரை வரைந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தின.

ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தை அத்தனை எளிமையாக மறைத்து வைத்துவிட்டது ஒரு தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்தியின் தொடர் ஒளிபரப்புகள்.

வராக நதிக்கரையும் தீவிரவாதத் தாக்குதல் குறித்த நேரிடைச் செய்திகளும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவைதான், யாரும் மறுக்கவில்லை. எனினும் இதர முக்கியப் படைப்புகளை / செய்திகளை அவை விழுங்கும் வண்ணம் இருப்பின்....?

மற்றும் ஒரு Overshadowing!

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்....

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்டின் சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து இந்தப் போட்டியில் இருபது விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா ஆடியது ஒரே இன்னிங்க்ஸ். இழந்தது மொத்தம் நான்கே விக்கெட்டுகள். ஆடியவர்கள் ஐந்தே பேர். ஆடிய ஐவரில் இருவர் அரை சதம், இரண்டு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். ஒற்றை இலக்கத்திலோ அல்லது அரை சதத்திற்குக் குறைவாகவோ யாரும் ஆட்டமிழக்கவில்லை.

இத்தனை மோசமான தோல்வியிலும் இந்திய அணியின் சார்பில் மூன்று பேர் அரை சதம் கடந்தனர்.

இங்கே நான் சொன்னதெல்லாம் சாதாரண புள்ளி விவரங்கள். கொஞ்சம் முக்கியமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாமா?

மார்க்கேலும் ஸ்டெயினும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தலா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வெற்றிக்கு வித்திட்ட கனவான்கள்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரத்து அறுநூற்று ஐம்பது ரன்களை இதுவரை எடுத்திருக்கும் காலிஸ் அடித்த முதல் இரட்டை சதம் இது. முதல் இரட்டை சதத்திற்கு முன்னரே இத்தனை ரன்களைக் கடந்த ரன் மெஷின் காலிஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது இன்னிங்க்சில் ஓரிருவரின் ஆட்டங்களும், சச்சின் - தோனியின் கூட்டணியில் வந்த நூற்று சொச்ச போராட்ட ரன்களும் கவனிக்கத்தக்கவை எனினும் இந்தியா அப்படியொன்றும் கண்ணியமான ஒரு தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் இருபத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு அடித்தது சம்மட்டி அடி.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பிரயன் லாராவைக் கடந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார் ராகுல் டிராவிட். இவருக்கு முன்னால் ரிக்கி பாண்டிங், அவருக்கு முன்னால் சொல்லத் தேவை இல்லாமல் நம் லிட்டில் மாஸ்டர்.

அது மட்டுமல்ல பன்னிரண்டாயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றார் டிராவிட். எழுந்து நின்று கைதட்ட வேண்டாமா நாம்?

இத்தனை புள்ளி விவரங்களையும், முக்கிய நிகழ்வுகளையும், ஓரிரு சாதனைத் தருணங்களையும் நம்மைக் காணவிடாமல் நம் கண்ணை மறைக்கின்ற ஒரே செய்தி அந்த "ஐம்பதாவது சதம்".

சச்சினின் ஐம்பதாவது சதம் ஒரு செய்திதான். சாதாரண செய்தி அல்ல முக்கியச் செய்தி. முக்கியம் மற்றுமல்ல ஒரு மாபெரும், சிறந்த, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் கொண்டாடத்தக்க ஒரு நிகழ்வு. யாரேனும் மறுக்க இயலுமா?

சர்.பிராட்மேன் அவர்களுக்குப் பின் உலக கிரிக்கெட் அரங்கிற்குக் கிடைத்த மாபெரும் கிரிக்கெட் ஆட்டக்காரன் சச்சின். இதை நாம் சொல்லிக் கொள்ளவில்லை. உலக கிரிக்கெட் ஜாம்பவான்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சொல்லி மகிழ்கிறார்கள்.


எனினும், நான் இங்கே மேலே குறிப்பிட்ட அத்தனைத் தகவல்களையும் சச்சினின் ஐம்பதாவது சதம் என்ற மாபெரும் செய்தியின் நிழலில் மறைத்துவைத்து இரண்டு நாட்கள் அனைத்து ஊடகங்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தன.

சச்சினின் சதம் ஒரு மாபெரும் கொண்டாடத்தக்க செய்தி. ஆனால் அது ஒன்று மட்டுமே செய்தியல்ல ஊடகங்களே.
.
.
.

Dec 24, 2010

வெள்ளிக் கதம்பம்


டிசம்பர் சங்கீத சீசனை முன்னிட்டு...

சங்கீத சீசனுக்கு ஓரிரு கச்சேரிகளுக்கு ரெவியு எழுத நினைத்தேன். இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். சரி இருக்கட்டும், சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு பழைய ஜோக்கை சொல்கிறேன்.

பாகவதரின் சிஷ்யகோடி: நம்ம பாகவதர் பாடினார்ன்னா அது பாட்டு. மனுஷர் ஒரு சமயம் புன்னாகவராளி ராகம் பாடினார், மேடையை சுத்தி சர்ப்பங்கள் சாரிசாரியா படமெடுத்து ஆடத் தொடங்கிடுத்து...

கேட்பவர்: ஓ சபாஷ்? 

சிஷ்யகோடி: இன்னொரு சமயம் அமிர்தவர்ஷினி  பாடினார். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுத்து.

கேட்பவர்: ஓ பலே! அப்போ போன வார கச்சேரில பாகவதரைப் பார்த்து கல்வீச்சு மழை சாரி சாரியா நடந்ததே  அப்போ என்ன ராகம் பாடினார் உம்ம பாகவதர்?

சிஷ்யகோடி: %*&*(&))*)(*)*)(*%


ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ்:

புதிய ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் உள்ள முக்கியப் பிரச்னை அவற்றின் பிரவுசர்கள் யுனிகோட் எழுத்துருக்களை ஆதரிப்பதில்லை. எனவே தமிழ் எழுத்துக்கள் வெறும் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன.

இந்தப் பிரச்னைக்கு உதவிக்கு வருகிறது ஓபெரா மினி பிரவுசர். 

முதலில்: ஓபெரா மினி உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழ்கண்டவற்றை செய்து உங்கள் செட்டிங்'குகளை மாற்றுங்கள்.

1)  ஓபெரா மினி அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து "GO" பட்டனை ஹிட் செய்யுங்கள்.

2) கீழே ஸ்க்ரோல் டவுன் செய்து 'Use bitmap fonts for complex scripts' என்பதை தேடிப்பிடித்து "Yes" செலக்ட் செய்யுங்கள்.

3) Save செய்யுங்கள்.

மெல்லத்தமிழ் இனி உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் வாழும்.

ரசித்த கவிதை:


நிச்சலன சிதிலம்


நிச்சலன சிதிலத்தில் நகர்கிறேன்
பேரண்டம் பிளக்கும் ஞாபக வேர்கள்
எஃகின் எதிர்த்தண்மைக்குள் உருண்ட
நீயும் நானும் நாமென நின்ற நிலை
காற்றில் உராயும் ஒய்யாரமும் நீயென
ஊடாடும் கோட்டோவியம்
இதயநரம்புகள் இறுகிப் பிடிக்க
நொறுங்கி அகலும் பாறைத்துகள்
இயங்கும் தேகசுக நீட்சியாய்
நாளை வரும் மொட்டு
பூவின் பொக்கையிலோ
அதரத்தின் ஓரத்திலோ
சுட்டுப்போகும் ஈரம்.

 (இக்கவிதையின் மற்றொரு பரிமாணத்தை வாசிக்க ==> தமிழ் பேப்பர்)


எவன்டி உன்ன பெத்தான்:
இப்படி ஒரு பாடல் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் "வானம்" திரைப்படத்தில். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க காதுகள் ஆயிரம் வேண்டும். யப்பா யப்பா யப்பா... யுவன் ஷங்கர் ராஜா சார்.... அப்புறம் அந்தப் பாட்டை எழுதின ஏதோ ஒரு சார்.... பெறகு அதைப் பாடித் தொலைத்த சிம்பு சார்.... உங்களுக்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் காலத்துக்கும் கடமைப் பட்டிருக்கு.

"ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற டப்பாங்குத்து ரகப் பாடல்களிலும் கூட "ஷண்முகப்ரியா" என்னும் அற்புத ராகத்தைக் கலந்து அற்புதங்கள் தந்த அந்தப் பண்ணையபுரத்துப் பட்டிக்காட்டானின் மகனா இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைத்தான் என நினைத்தால் "நிஜமாவே வலிக்குது" சார்!

அந்தப் பாடல் உருவான விதத்தை இங்கே சாம்பிளில் பாருங்கள். இசை ஞானம், சுருதி ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்கள் மனதைத் திடப் படுத்திக் கொண்டு இந்தப் படுத்தல்களைக் கேட்கவும்.





மடிப்பாக்கம் சபரி சாலை:


மடிப்பாக்க மாடுகளும், குப்பைகளும், குண்டும் குழியுமான தெருக்களும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயம். கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு விஷயத்தில் ஜனநாயக நாடு என நம்மை நாமே மார்தட்டிக் கொள்ள இவையெல்லாம் அடிப்படை உதாரணங்கள். எனினும் சில முக்கியச் சாலைகளும் கூட பிரயாணம் செய்யத்தகா வண்ணம் இருக்கையில் அடக்கமாட்டாமல் கோபம் வருகிறது.

சபரி சாலை என்னும் இந்தப் புகழ் பெற்ற சாலை மடிப்பாக்கம் வாழ் மக்களை கீழ்கட்டளை, நங்கநல்லூர், மவுன்ட், வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர்  என அனைத்து புறங்களிலும் இணைத்து வைக்கிறது. 

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலை தொடர் மழைகளில் சிதிலமடைந்து போக்குவரத்து இல்லாத சமயங்களில் கூட அந்த இரண்டு கிலோ மீட்டரைக் கடக்க பத்து நிமிடங்கள் வரை செலவு பிடிக்க வைக்கிறது. போக்குவரத்து நெரிசல் நேரங்களில் சொல்லவே வேண்டாம்.

சாலைகள் அமைக்கும்போதே சரிவர அமைக்காத காண்ட்ராக்டர்களுக்கு கடுமையான தண்டனைகள் அமல்படுத்தினாலே ஒழிய இது போன்ற பிரச்னைகள் தீராது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சட்டம் அமைப்பவர்களும், காண்ட்ராக்ட் எடுப்பவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் என்பதே.

வாழ்க ஜனநாயகம்!




Dec 23, 2010

மன்மதன் அம்பு - ஹை ஃபை டிராமா



மாதவன் - த்ரிஷா காதல். இடையில் வரும் சந்தேகம். மாதவனால் நியமிக்கப்பட்டு த்ரிஷாவைத் தொடரும் டிடெக்டிவ் கமல். இடையே பொய்கள், குழப்பங்கள், காமெடிகள், கமல்த்தனமான கொஞ்சம் மிகையான  க்ளிஷேக்கள், த்ரிஷாவின் தோழியாக சங்கீதா, அவரின் இரண்டு வாண்டுக் குழந்தைகள், இயக்குனர் ப்ரியதர்ஷனின் குருப்பு வேட அலம்பல்கள் என படம் பஞ்சாமிர்தக் கலக்கல். அங்கங்கே ஏதோ பல்லில் சிக்கும் இடைஞ்சல்கள்.


மொத்தத்தில் வழக்கமான கே.எஸ்.ரவிக்குமார், கமல் கூட்டணிக் கலக்கலாக வந்திருக்கிறது மன்மதன் அம்பு. நல்ல என்டர்டைனர். ஏ, பி செண்டர் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடலாம். இது என் ரெகமண்டேஷன்.


இப்போ அலுவலகம் போகணும். விரிவான அலசல் நாளை!
.
.
.

Dec 20, 2010

நலம் தரும் திங்கள் - தொப்புள்கொடி உறவு!


ஸ்டெம் செல் குறித்து சில தகவல்கள்

கடந்த ஏப்ரலில் ஷைலஜாவின் பிரசவ நேரத்தில் மருத்துவமனையின் காரிடார்களில் நகங்கடித்தபடி இங்குமங்கும் நான் உலாத்திக் கொண்டிருந்தேன். லேபர் அறைக்குள் ஷைலஜா சென்று ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன.

"எக்ஸ்க்யூஸ்மி சார், மிஸ்டர் கிரி?", விற்பனைப்பெண்  தோற்றத்தில் ஒரு யுவதி. 

"நான் ஜீவன் ப்ளட் பேங்க்'ல இருந்து வர்றேன். ஸ்டெம்செல் சேமிப்பு வங்கி  மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்"

"சொல்லுங்க"

"இப்போ உங்க மனைவியின் பிரசவத்திற்கு பின்னால் நீங்க தூக்கி எறியப்போகும் நஞ்சுக்கொடியில் இருந்து ரத்த சாம்பிள் சேகரிக்க உங்க அனுமதி வேணும்"

இதுபற்றி மோகன் முன்னமே சொல்லியிருந்தான்.

"இதுக்கு ஏதேனும்...."

"இல்லை நீங்க இதுக்கு ஏதும் கட்டணம் தர அவசியம் இல்லை. நாங்க சேகரிப்பது எங்கள் ஆராய்ச்சிக்கு மற்றும் எங்களுக்காக சேமித்து வைக்க. உங்களுக்காக நாங்கள் இதை பாதுகாக்க பராமரிக்க வேணும்'னு நீங்க விரும்பினால் அதற்கு தனி கட்டணங்கள் உண்டு. அதுக்கு இப்போ அவசரம் இல்லை. எங்க எக்சிக்யூடிவ் ரெண்டு நாட்களுக்கு பிறகு உங்களை வந்து பார்ப்பார். அவர்கிட்ட நீங்க பேசிக்கோங்க. இப்போ உங்க அனுமதி மட்டும் வேணும்", என அந்தப் பெண் ஏதோ பேப்பரில் கையொப்பம் வாங்க கொண்டார். 

பிரசவ நேரத்தில் குழந்தை பிறந்ததும் குழந்தையை அன்னையிடம் இருந்து பிரிக்க அதன் தொப்புள் கொடி இரு முனைகளிலும் பாதுகாப்பான முறையில் கத்தரிக்கப்படுகிறது. அன்னையின் கருப்பைப் பகுதி மற்றும் குழந்தையின் தொப்புள் பகுதி என இரு முனைகளிலும் உணவு பகிர்விற்காக இணைப்புக் குழாயாக செயல்பட்ட அந்தக் குழாய்கள் இப்போது இரு முனைகளிலும் பாதுகாப்பாக சீலிடப்படுகிறது (முன்பெல்லாம்  முடி போடுவார்கள்). இடையில் இருக்கும் பகுதி எதற்கும் உபயோகம் இல்லாமல் குப்பைக் கூடைக்குச் செல்கிறது. அந்தப் பகுதியில் இருந்துதான் ரத்தம் சேகரிக்கப்படுவதாக அந்தப் பெண்மணி சொன்னார். 

அந்த ரத்தத்தை சேமித்து வைத்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.

அப்படி என்ன பயன்கள்? அது என்ன ஸ்டெம்செல்? 

பத்தே வார்த்தைகளில் இதன் பயனைச் சொல்லவேண்டுமென்றால் "எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு சில சிக்கலான நோய் சிகிச்சைகளுக்கு இந்த ஸ்டெம்செல்  உதவலாம்"

இப்போது விரிவாய் இதுபற்றிப் பார்ப்போம்! வாருங்கள் சில அடிப்படைக் கேள்விகளில் இருந்து செல்வோம்.

ஸ்டெம் செல் என்றால்?

உடலின் எந்த ஒரு அணு /செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான அனுக்களாகவும் தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறனும் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது உயிரியல்/அறிவியல்.
இது தமிழில் குறுத்தணுக்கள் அல்லது பலுக்கல் என்னும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது! (தாவரங்களில் குருத்துக்களிலும், மனிதர்களின் வளரும் தன்மையுள்ள சில உடல் பாகங்களிலும் இருப்பவையாதலால் இப்பெயர்!)
நன்றி: மேலிருப்பான் <http://padmahari.wordpress.com>




தொப்புள் கொடியிலிருந்து எவ்வளவு ரத்தம் கிடைக்கும்?

ஏறத்தாழ ஐந்து டீ ஸ்பூன். கொஞ்சம் கூட வலிக்காது. சில நிமிடங்களில் எடுத்து விடுவார்கள்.

தொப்புள் கொடி ரத்தத்தின் சிறப்பு என்ன?

அது பிராண வாயுவை உடலுக்குக் கொண்டு செல்லும் சிவப்பு உயிரணுக்கள் மற்றும் நோயை எதிர்க்கக்கூடிய வெண் உயிரணுக்கள் என இரு வகை உயிரணுக்களையும் உற்பத்தி செய்யவல்லது. அதில் ஸ்டெம் செல் ( முதல்நிலை உயிரணு) இருக்கிறது. இதிலிருந்துதான் ப்ளட் செல்கள் (ரத்த உயிரணுக்கள்) உற்பத்தியாகின்றன.

தொப்புள் கொடி ரத்தத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

எதிர்காலத்தில் நீரிழிவு, முடக்கு வாதம் (ரூமாடோய்ட் ஆர்த்ரிடிஸ்) போன்ற நோய்களை குணப்படுத்த உதவும். அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த ரத்தத்தில் உள்ள முதல்நிலை உயிரணுக்களைக் கொண்டு கல்லீரல், சிறுநீரகம், அவ்வளவு ஏன் இதயத்தையே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இப்போதே பற்களை வளர்த்து விட்டார்கள்.

இப்போது எதற்குப் பயன்படுகிறது?

இரத்தப்புற்றுநோய் (லுகீமியா) வந்தவர்களது எலும்பு மஜ்ஜையை (போன் மேரோ) வேதிச் சிகிச்சை (கீமோதெரபி) மூலம் அழித்து விட்டு இரவல் வாங்கிய முதல்நிலை உயிரணுக்களை அங்கு இட்டு நிரப்புகிறார்கள். இது இரவல் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தொப்புள் கொடி ரத்தத்தைப் பயன்படுத்தலாம்.

என் மகனின் தொப்புள் கொடி ரத்தம் எதிர்காலத்தில் அவன் உயிரைக் காப்பாற்றுமா?

அது தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. அப்படித் தேவைப்பட்டாலும் அது பயன்படுத்தப்படுவது உறுதியில்ல- எனக்குப் புற்று நோய் வரக் காரணமாக இருந்த முதல்நிலை உயிரணுக்கள் என் தொப்புள் கொடி ரத்தத்திலும் இருக்கலாமில்லையா? ஆனால் என் தொப்புள் கொடி ரத்தம் என் உடன் பிறந்தவர்கள், சுற்றம் மற்றும் நட்பு வட்டத்துக்குக் கை கொடுக்கலாம்.

ஸ்டெம்செல் என்னும் சொல் மருத்துவத்துறையில் ஆச்சர்யங்களையும், நம்பிக்கைகளையும், வரவேற்பினையும் மட்டுமே பெற்ற ஒரு சொல் அல்ல, சமீப காலமாக பல கருத்து மோதல்களையும் சர்ச்சைகளையும் கூட உள்ளடக்கிய சொல் இது.

இது பற்றி அறிவியற்பூர்வ தகவல்களைத் தர நான் ஒரு மருத்துவனல்ல. எனினும் என் அனுபவத்தில் அறிந்ததைச் சொன்னேன்  சற்றே பின்னணித் தகவல்களை இணைத்து.


தொடர்புடைய சுட்டிகள்-

அமெரிக்காவில் முதல்நிலை உயிரணு ஆய்வு (ஸ்டெம் செல் ரிசர்ச்)- http://www.physiciansforlife.org/content/view/215/38/
.
.
.

Dec 19, 2010

சச்சின் - செஞ்சுரியனில் செஞ்சுரி அரை செஞ்சுரி

ஐம்பதாவது சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சகாப்தம் படைத்திருக்கும் சாதனை மன்னன் சச்சினுக்கு வாழ்த்துக்கள்!


இந்தச் சாதனை யாராலும் ஈடு செய்ய இயலாத ஒன்றல்ல எனினும் இதனை இன்னொருவர் எட்டுவதற்கான நிகழ்தகவு (probability) எந்த மகா கிரிக்கெட் வீரனுக்கும் மிகவும் குறைவு.

எதிரில் ரன்னராக நின்று அந்த ஐம்பதாவது செஞ்சுரியை தரிசித்த தோனி மிகவும் பாக்கியம் செய்தவர். 

டெஸ்ட் போட்டிகளில் நூறுகளில் ஐம்பதை எட்டியிருக்கும் சச்சின் ஒரு நாள் அரங்கில் இன்னமும் ஏழு ஐம்பதுகளை எடுத்தால் ஐம்பதுகளில் நூறை எட்டிய பெருமை அவருக்குக் கிடைக்கும்.



பொறுத்திருந்து பார்ப்போம் நம் சாதனை மன்னனின் வரலாற்றுப் பதிவுகளை....

சச்சினின் ஐம்பது சதங்களின் அணிவகுப்பை நிழற்பதிவு ரூபத்தில் தரிசிக்க இங்கே

நன்றி: cricinfo , மண்குதிரை, nchokkan


இசைக் கோலங்கள் - உயிரும் நீயே உடலும் நீயே


தமிழ்சினிமா உலகமானது அம்மா செண்டிமெண்ட் படங்களுக்கு மட்டுமல்ல அம்மா செண்டிமெண்ட் பாடல்களுக்கும் பிரபலமானது. இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த சப்ஜெக்டை ஒரு காலத்தில் தானே குத்தகைக்கு எடுத்து கோலோச்சி வந்தார்.

ரஹ்மானின் வரவிற்குப் பின் தமிழ் சினிமா இசை டிஜிட்டல் மயமாகிப் போனது. ருக்குமணியே ருக்குமணிகள் மற்றும் நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத்தான் பாப்பீங்க என வலித்து வலித்து பாடப்பட்ட பாடல்களின் புண்ணியத்தில் பழைய க்ளிஷேக்கள் சற்றே மறக்கப் பட்டிருக்க, திடுமென இடையில் புகுந்தது இந்தப் பாடல்.



மறுபுறம் மெலடி ரசிகர்கள் ரஹ்மானின் மெலடிகளாக புதுவெள்ளை மழை, கண்ணுக்கு மையழகு, பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ போன்ற பாடல்களின் இனிமையில் முயங்கிக் கிடக்க, இந்த மெலடிகள் எல்லாம் தான் இசையமைத்த "உயிரும் நீயே" பாடலுக்கு கட்டியம் கூற வந்த பாடல்கள் தானேயன்றி  வேறில்லை எனச் சொல்லாமல் சொன்னார் ரஹ்மான்.

முந்தைய பாடல்கள் அவர் மெலடித் திறமைக்கு நிரூபண முத்திரை பதித்திருந்தாலும் இந்தப் பாடல் ரஹ்மானின் மெலடி மகுடத்தில் ஒரு மயிலிறகு.

ஆரம்பத்தில் சுண்டியிழுத்து ஆரம்பிக்கும் பியானோ கிடாரின் கலவை ஆகட்டும், "சாமி தவித்தான்....." என்ற இடத்தில் பெரிதாக மாயஜாலம் காட்டாமல் ஃபில்லர் வேலையை ஜஸ்ட் பியானோவிற்கு மட்டும் தந்தது ஆகட்டும், ரஹ்மான் தன் ஜீனியஸ்'தனத்தை பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே நிரூபணம் செய்துவிட்டார். சரணம் முடிந்து "உயிரும் நீயே" என உன்னி ஆரம்பிக்கையில் பின்னணியில் இழைந்தாடும் வயலின் சூப்பர் ஸ்பெஷல் எஃபெக்ட்..

ரஹ்மானைத் தாண்டினால் இந்தப் பாடலில் பளிச்சென்று தெரிபவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். பாடலுக்கு அர்த்தம் தந்து உயிர் தந்தவரல்லவா? சரி, அப்படி என்னதான் பெரிதாய் எழுதிவிட்டார் வைரமுத்து?
உயிரும் நீயே...

உடலும் நீயே...
உணர்வும் நீயே.... தாயே....
இந்த வரிகளை எழுதித் தர உங்களுக்கு பெரும் கவிஞன் யாரும்  தேவையா என்ன?

தன்  உடலில் சுமந்து 

உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே 
அப்படி என்ன மாயஜால வரிகளா இவை? உடலில் சுமப்பதும் உயிரைப் பகிர்வதும் அம்மா என நம் யாருக்கும் தெரியாதா என்ன எனக் கேட்டால் "இருடா தம்பி, சரணத்தைக் கேள். நான் சொல்ல வந்தது தெரியும்", என்கிறார் வைரமுத்து.

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்......
 ...........சாமி தவித்தான்......
தாயைப் படைத்தான் 
தேனி மாவட்டம் தந்த அந்தத் தேனினும் இனிய கவிஞன் கவிப்பேரரசு என கொண்டாடப்படுவதன் காரணம் சொல்ல இந்த ஒரு பாடல் போதும்.

பவித்ரா படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலிப்பதிவு முடித்து வெளியே வந்த பாடகர் உன்னிகிருஷ்ணன்  கரம் பற்றிக் கண்ணீர் உகுத்துச்  சொன்னாராம் வைரமுத்து, "இந்தப் பாடலுக்கு நீங்கள் நிச்சயம் தேசிய விருது வாங்குவீர்கள்" என. 

கவிப்பேரரசர் சொன்னபடியே நடந்தது.


உன்னி அவர்கள் தவிர்த்து இப்படியொரு ஜீவனை இந்தப் பாடலுக்கு வேறு யாராலும் தந்திருக்க முடியாது. "சாமி தவித்தான்....." என்னுமிடத்தில் உன்னி அவர்கள் தரும் ஸ்ட்ரெஸ், அடுத்த வார்த்தை பாடுமுன் அவர் வெளிப்படுத்தும் மௌனம்....அப்படியே உயிரைப் பிய்த்து எடுக்கிறது.


யு டியூபில் இந்தப் பாடலைத் தேடும்போது அங்கே இந்தப் பாடலுக்கு இப்படியொரு பின்னூட்டம் கிடைத்தது.

I dedicate this song to my mother and hearing this song my eyes is flooded. thanks to unni for such a nice song to day is my mothers death day
இதைவிட என்ன சொல்ல வேண்டும் நான்?


பாடலுக்கான இணைப்பு இங்கே உங்களுக்காக.

Dec 18, 2010

இணையவெளியில் மெட்ராஸ் தாதா



மாமல்லனின் ஜெமோ நிலைப்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பிதொநிகு என் கற்பனை என விமா சொன்னது ஜெமோ-விமா இடையேயான விஷயமே. இடையே ஊடாடி அடிதடியில் ஈடுபட நாமொருவருமில்லை. எனினும், விமா'வின் தொடர் ஜெ தாக்குகள் அவரது புது புத்தக ரிலீசொடு அதை முடிச்சுப் போடசொல்கிறது.

எப்படியோ... இப்படியப்படி உணர்ச்சிவசப் பட்டு எழுதுகிறாரேயோழிய... சிலப்பல நேரங்களில் மனிதரின் ஜீனியஸ்தனம் பட்டுத் தெறிக்கிறது...

தன் தளத்தில் அவர் வடிக்கும் விஷயங்களை விடுங்கள்,ஒரு பின்னூட்டத்தில் மனிதர் எழுதிய கவிதை படித்து மிரண்டேனேன்றால் மிரண்டேன் அப்படி மிரண்டேன். இதுவும் ஜெமோ தாக்கு எனினும் இதில் உள்ள அனாயாசமான அதேசமயம் ஆழ்ந்த கவித்திறனை ரசித்தேன்.

அறம்

எதற்கும் அசையாத
எம்பெருமான் விஷ்னு
கருவறை துறந்து
உற்சவ மூர்த்தியாய்
உலா வருதல்
உனக்காக அல்ல தனக்காக

ஸ்வாமி ஏள்றார் என
தரைவீழும் மனுஷா கேள்

பொன்முலாமின் உள்ளிருக்கும்
காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

இங்கே டார்கெட் ஜெமோ'தான் என்றாலும் மோதிரக்கைக் குட்டு வாங்கினது என் நெருங்கின நண்பர் ஒருவர். இப்படி நான் எழுதுவதை அவர் க்ஷமிக்கணும்.

இத்தனை நாள் கழித்து இதுபற்றி நான் இங்கே எழுதக் காரணம், தலைவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் தன் தளத்தில் இன்று ஒரு கவிதை வடித்திருப்பதுதான். இப்போ டார்கெட் நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும் இப்போதைய சூழலில்  பரிதாபத்திற்கும் உரிய தேக எழுத்தாளர் அவர்கள்.

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு


.
.
.

Dec 17, 2010

வெள்ளிக் கதம்பம்


சூடிக் கொடுத்த சுடர்க் கொடி...

சக பதிவர் ஒருவர் தன் வலைப்பூவில் திருப்பாவையின் முதல் பாடலை மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் நேற்று வெளியிட்டிருந்தார். அங்கே இரண்டாவதாக அன்பர் ஒருவர் தந்த கமெண்ட்டைப் பாருங்கள்.


இந்துத்துவா அமைப்புகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி, அழைப்பு மணி அல்லது ஏதோ ஒரு மணி. தயவு செய்து உங்கள் மத மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரங்களின் வீரியங்களை சற்றே குறைத்துக் கொண்டு இங்கே இது போன்ற அடிப்படை விஷயங்களை நம் இந்து அன்பர்களுக்கு எப்படிக் கொண்டு செல்வது எனப் பாருங்கள். 

பாவை நோன்பின் இரண்டாம் பாடல் மற்றும் பாசுரச் சிறப்புகள் பற்றி வாசிக்க


ஃபேஸ்புக் எப்படி கூகுளை விழுங்க முடியும்?

இந்தப் படத்தை கிளிக் செய்து பார்க்கவும். வாஷிங்க்டன் போஸ்ட் எத்தனை இடங்களில் தன் ஒற்றைப் பக்கத்தில் ஃபேஸ்புக்கை துணைக்கு அழைக்கிறது எனத் தெரியும்.



ரசித்த கவிதை...


சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.
(நன்றி: செல்வராஜ் ஜெகதீசன் - சொல்வனம் வழியே..


ரஜினியின் தில்லுமுல்லு....

டிசம்பர் ஆரம்பத்தில் நான் தந்த இரு வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நான் நிறைவு (எ) ஆரம்பம் செய்யவில்லை.

அதற்குப் பிராயச்சித்தமாக ரஜினியின் தலைசிறந்த படமொன்றின் தலைசிறந்த காட்சி ஒன்று இங்கே உங்களுக்கு...







மடிப்பாக்கம் குப்பை 

ஒரு குப்பை பெறாத மேட்டர் சார்:

தீபாவளி சமயத்தில் பத்து ரூபாய் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் தெருவில் குப்பை அள்ளும் பெண் ஒருவர் ஒன்றரை மாதமாக குப்பை வண்டியை எங்கள் தெருவினுள் திருப்பாமல் அஜிடேட் செய்து வருகிறார்.

உள்ளூர் அரசியல் அமைப்பில் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரைப் பார்த்துப் பேசினபோது....

"சார்அவங்க பெர்மனன்ட்டு நாங்கல்லாம் டெம்பரரிதான்பாத்து நீங்களே பத்தோ இருவதோ குடுத்துங்க சார்"என்றார்.

ஒன்றரை மாத காலமாக எங்கள் வீடுகள் நாறுகின்றன. அரசின் ஒரு நான்காம் நிலை கடைநிலை ஊழியை ஒரு தெருவின் குப்பை விதியை ஆள முடிகின்றதுஎங்களால் ஒன்றையும் pluck'க்க முடியவில்லை என்றால்..... நீங்க என்னத்த ராஜா கிட்டயும் மு.க. கிட்டயும் ஒரு சனநாயக சட்ட முறைய  வெச்சுக்கிட்டு பண்ணப் போறீங்களோ எசமான்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...