பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர்...
அப்போது எங்கள் அலுவகக சுற்றுலாவாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றுவிட்டு இந்திய எல்லை ரக்சாலில் (Raxaul) இருந்து பேருந்து மூலம் பீகார் தலைநகர் பாட்னாவிகுத் திரும்பினோம். இன்னும் சில நிமிடங்களில் சென்னைக்கு ரயில் ஏற வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் ஓரிரண்டு கிலோமீட்டர் தொலைவு.
பேருந்திலிருந்து இறங்குகையிலேயே எங்கள் மேலாளர் ஒரு கூக்குரலிட்டார், "ஏ மக்களே! ரயிலைப் புடிக்க நமக்கு அவகாசம் குறைச்சலா இருக்கு. எல்லாரும் இறங்கின உடனே சைக்கிள் ரிக்ஷா கிடைக்கும், ரெண்டு ரெண்டு பேரா ரயில் நிலையத்துக்கு போயிடுங்க".
நானும் டோமினிக்கும் இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே நெருக்கமாயிருந்தோம். காரணம், சென்றிருந்த முப்பத்து சொச்ச பேரில் என்னையும் அவனையும் சேர்த்து நான்கு பேர் மட்டுமே கல்யாணமாகாத கன்னிப்பையங்கள். எனக்கும் டோமினிக்கிற்கும் தங்கும் வசதி ஒன்றாய் செய்யப்பட்டிருந்தது.
நான் பேருந்திலிருந்து இறங்கியதும், பெட்டி பைகளை இறக்கும் அவசரத்தில் இருக்க, டோமினிக் சைக்கிள் ரிக்ஷாக்காரனிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான். நான் அங்கே மறந்துவிட்டிருந்த ஒரு விஷயம், அவனுக்கு ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராது என்பது. எனக்கு கொஞ்சம் சுட்டுப்போட வரும்.
"சரி வா மச்சி, பேசிட்டேன் போலாம்" என்றாம். ரிக்ஷா ஏறி நான்கு மிதி மிதித்ததும் ரயில் நிலையம் வந்துவிட்டது. சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து, "தேகோ", என்று சொல்லி ரிக்க்ஷா பெரியவரிடம் தந்தான் டோமினிக்.
நான்கு எட்டு நடந்ததும் எனக்கு ஏதோ உறைக்க, "டேய், எப்டிடா பேரம் பேசின?", என்றேன்.
"இது என்னடா பெரிய விஷயம், அவன் பதினஞ்சு ரூபான்னு சொன்னான், நான் பத்து ரூபாய்க்கு வர்றியான்னேன் அவன் வந்தான்", என்றது பதில்.
"எப்படி சொன்னான்"
"நான் ரயில்வே ஸ்டேஷன்-னு சொன்னேன், அவன் "பாஞ்ச்" அப்டின்னான், நான் "நோ நோ, ஒன்லி டென்" அப்படின்னேன், அவன் சரின்னு வந்துட்டான்.", ஹிந்தியில் பேரம் பேசிய பெருமை அவன் முகத்தில் ஒளிர்ந்தது.
"பாஞ்ச்" அப்படின்னா தமிழ் பதினைஞ்சு இல்லடா, ஹிந்தியில அஞ்சு ரூபான்னு அர்த்தம், நீ அவன் கேட்டதுக்கு மேலே அஞ்சு ரூபாய் குடுத்துட்டே", என சொல்லவேண்டும் போலத்தான் இருந்தது. ஆனால் அவன் முகத்தில் ஒளிர்ந்த ஹிந்திப் பெருமிதம்...... அதை அங்கே உடனடியாக பொசுக்கென்று அணைக்க எனக்கு மனம் வரவில்லை.
அந்த நேபாளப் பயணம் என் வாழ்வின் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க அனுபவங்களுடன் வாய்த்த ஒன்று. நேரம் கிடைக்கையில் அந்த அனுபவங்களை அசை போடுகிறேன்.
2 comments:
நயமான பதிவு. இந்த மாதிரி படிச்சு ரொம்ப நாள் ஆச்சு! :)
@ natbas
ஹூம்...புரியுது உங்க ஆதங்கம்...
Post a Comment