கர்மா பற்றிய நட்பாஸ் அவர்களின் இந்தப் பதிவை "சிறப்புப் பதிவர்கள்" தலைப்பில் வெளியிடுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்கள், விவாதங்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கள் ஏதேனும் உண்டெனில் அவற்றையும் இங்கு வெளியட பெரு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.
________________________________
உங்களுக்கே தெரியும், நான் இந்த சிறப்புப் பதிவிடும் வாய்ப்பை எத்தனை போராடிப் பெற்றேன் என்பது. அதையும் வேண்டா வெறுப்பாகத்தான் கொடுத்திருக்கிறார் நண்பர் கிரி. "நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தால் அந்த நினைப்பை விட்டு விடு. இரண்டெழுத்து பெயர்களால் செல்லமாகக் கொண்டாடப்படும் அந்த இரு பிரபல எழுத்தாளர்களின் பக்தர்களைப் பார்த்துத் தொடை நடுங்குகிற நீயெல்லாம் அச்சுக்கோக்கிற வேலைக்குத்தான் லாயக்கு. இருந்தாலும் என் ஒவ்வொரு பதிவுக்கும் நீ பின்னூடிட்டிருக்கிறாய். அதை அனுமதித்த பாவத்துக்காக ஒரே ஒரு பதிவு போட்டுத் தொலைக்க உன்னை அனுமதிக்கிறேன்," என்று சொல்லிவிட்டார் கிரி. "அப்படியானால் என்ன எழுதட்டும்?" என்று கேட்டேன். "என்ன எழுதித் தொலைத்தால் என்ன? நானே என் தலைவிதியை நொந்துக் கொண்டிருக்கிறேன். பேசாமல் கர்மவினை குறித்து எழுதி விட்டுப் போ!"
கிடைத்த வாய்ப்பை விடுவானேன்? நமக்கா எழுதத் தெரியாது!
_______________________
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது- எங்கள சிறு வயதில் ஒரு நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் போயிருந்தோம். இரவு எல்லாரும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்த உறவினரின் பையன், சிறுவன், "அப்பா, நாம் மட்டும் ஏன் சொந்த வீடு கட்டிக்கொண்டு நன்றாக இருக்கிறோம்? இவர்களெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்?," என்று கேட்டான். அதற்கு அவர், "நாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறோம். இப்போது நன்றாக இருக்கிறோம். பாபத்தை செய்திருந்தால் நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்," என்று பதில் சொன்னார். எங்களைப் போய் பாவம் செய்தவர்கள், என்று இவர் சொல்லிவிட்டாரே, எனக்குக் கோபம வந்து விட்டது. ஒன்றும் பேசவில்லை, ஆனால், இந்த பாவ புண்ணியம், கர்மபலன் என்பதேல்லாம் பொய் என்று தோன்றிவிட்டது.
இது போன்ற நம்பிக்கைகள், நன்றாக இருப்பவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், கஷ்டப்படுபவர்களை அது உன் தலை எழுத்து என்று கைகழுவிவிடவும் மட்டும்தான் உபயோகப்படுமா? இனி வருவதையும் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.
நான் கர்மவினை குறித்து ஆராயும் முகமாக பகவத் கீதை, விவேக சூடாமணி வகையறாக்களுள் நுழையப்போவதில்லை (நுழைந்துதான் என்ன ஆகப்போகிறது- குருடன் யானையைத் தடவிப் பார்த்த கதைதான், விடுங்கள்). நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களைக் கொண்டே அதைப் பற்றி யோசிக்கலாம்.
இந்தத் தளத்தில் கடந்த வாரம் அதிரத்தக்க சில நிகழ்வுகள் நடந்தன. நாம் பாட்டுக்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டு போகிறோம், அப்போது வழியில் எதிர்படுகிறவர்களைப் பார்த்து விளையாட்டாகக் கமெண்ட் செய்வோமில்லையா? அந்த மாதிரி இந்த வலையேடு போய்க்கொண்டிருந்தது. சாத்வீகமானவர்கள், நல்லவர்கள், அவர்கள் காதில் நாம் பேசுவது விழுந்தால் அவர்கள் நின்று நம்மை முறைத்துப் பார்க்கக்கூடும்- அப்புறம் நம்மைக் கடந்து போய் விடுவார்கள். கொஞ்சம் விவகாரமான ஆட்கள் என்றால் என்ன செய்வார்கள்? "யாரைப் பற்றி என்னடா பேசறீங்க? டாடி மம்மி.." என்று வசவு மழை பொழிவார்களா இல்லையா? இரண்டும் நடந்தது.
இதைத்தான் கர்மவினை என்று சொல்லத் தோன்றுகிறது. நீ எது செய்தாலும்- இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, இவர் மூலம் நிகழாவிட்டால் வேறொருவர் மூலம், இப்படி இல்லாவிட்டால் வேறு வகையில்- அதற்கான பலன் கிடைக்கவே செய்யும், இல்லையா? யோசித்து பாருங்கள், கறிகாய் வாங்க ரங்கநாதன் தெரு செல்கிறீர்கள், ஒவ்வொரு கடையிலயும் ஒவ்வொரு விலை, எடை, தரம்- நீங்கள் அது குறித்து அந்த இடத்தில் நாட்டாமை பண்ணினால், ஒருத்தர் இல்லாவிட்டால் வேறொருத்தர் சட்டையைப் பிடிப்பார்களா இல்லையா? இதைப் புரிந்து கொள்ள மாய மந்திரம், மத நம்பிக்கை, சித்தாந்தம், வேதாந்தம் என்று எந்த "அது"வும் தேவை இல்லை.
ஆங்கிலத்தில் சொல்வார்கள், கோலின ஒரு முனையைப் பற்றுகிறவன், அதன் மறுமுனையை ஏற்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று. ஒரு வேலை செய்கிறோம், அதற்குண்டான பலன் கிடைக்கத்தானே செய்யும்?
"என்ன சார் பேத்தலா இருக்கு! தினமும் ரெண்டாளு செய்யற வேலையை நான் ஒழுங்கு மரியாதையா ஒத்தை ஆளா செய்யறேன், அதை எவனும் கண்டுக்கக் காணோம்... என்னத்துக்கு கர்மபலன்னு கதை பண்ணி என்னை ஏமாத்தறீங்க?" அப்படின்னு சில பேர் கேட்கலாம்.
அதற்கு என் பதில் என்னவென்றால், செய்கிற வேலைக்கு ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் தக்க பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையானது உங்கள் உழைப்பை ஊக்குவிக்கும், உள்ளத்துக்கு உரமூட்டும், உயர்வான சிந்தனைக்குக் களமாக இருக்கும்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி, மறுஜென்மம் போன்ற கோட்பாடுகளில் எள்ளளவும் ஆர்வம காட்டாதவர். ஆனால், அவரே ஒரு உரையாடலின்போது, "கர்மா கர்மா என்று பேசுகிறீர்களே, நீங்கள் நிஜமாகவே கர்மபலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்ன? அப்படி உண்மையிலேயே பாவ புண்ணியம் இருக்கிறது, அதற்கான பலன் பிறவிகள் தோறும் கிடைக்கிறது என்று நினைத்தால், ஐயா, நீங்கள் இந்த மாதிரியா அக்கறையில்லாமல் இருப்பீர்கள்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் அந்த எண்ணம இருக்குமா இல்லையா? உங்கள் வாழ்க்கை எத்தனை உன்னதமானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டாராம்.
ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்: இந்த நிமிடம் நீங்கள் செய்கிற செயல் உங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றத்தை உண்டாக்கப் போகிறது என்றால்- நீங்கள் நற்செயல்கள் செய்வீர்களா, இல்லை எவன் எக்கேடு கேட்டால் என்ன என்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருப்பீர்களா?
அட, ஒரு பேச்சுக்கு நாம் உழைப்பது நமக்காகத்தான் என்று வைத்துக்கொண்டாலும், இந்த கர்மபலன் கிடைக்கும் என்ற எண்ணம ஊக்கத்தைத்தானே கொடுக்கிறது: இப்போது எனக்கு ஃபோர்ட் , அதுதான் அந்த கார் கம்பனிக்காரர், அவர் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது:-
"எனக்கு இருபத்தாறு வயது இருக்கும்போது நான் மறுபிறவி இருக்கிறதென்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டேன். எது தேவைப்பட்டதோ அதை என் மத நம்பிக்கையால் கொடுக்க முடியவில்லை. வேலை கூட எனக்கு முழுநிறைவு தருவதாயில்லை. ஒரு பிறவி முழுதும் சேகரித்த அனுபவத்தை அதற்கப்புறம் பயன்படுத்த முடியாதென்றால் வேலை செய்வது வீண் செயலே ஆகும். நான் மறுபிறவி பற்றி அறிய வந்தபோது... அதன் பின் காலம் ஒரு எல்லைக்குட்பட்டதாய் இருக்கவில்லை. ஒரு கடிகாரத்தின் கைகளில் இனியும் நான் அடிமையாய் இல்லை... வாழ்க்கை முடிவில்லாமல் நீண்டு நிற்கிறது என்பதை நினைக்கும்போது எனக்குக் கிடைக்கிற நிம்மதியை மற்றவர்களுக்கு அறிய வைக்க ஆசைப்படுகிறேன்"
கதை எப்படி போகிறது பார்த்தீர்களா?
நான் இந்தப் பதிவில் கர்மா என்றால் என்ன, கர்மபலன் எப்படி கிடைக்கிறது என்பது போன்ற விளக்கங்களைத் தவிர்த்துவிட்டேன். அந்த ஆராய்ச்சி பெரிதாய் பிரயோசனப்படாது என்பது என் எண்ணம. ஆனால் செய்கிற வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கும், நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் போன்ற நம்பிக்கைகளை நாம் நம் வாழ்க்கையை மேம்படுத்த எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஓரிரு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இது உங்களுக்கு உதவுமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
இப்பொது நானும் கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்: ஓட்டுப போடலையோ ஓட்டு!
இருட்டில் விளக்கேற்றுகிற மாதிரி, முடங்கிப்போன சரித்திரத்துக்கு முன்னேறும் பாதையைக் காட்டுகிறார், புண்ணான உள்ளங்களுக்கு அருமருந்திடுகிற மருத்துவர் ஐயா (ஐயே, இது வேற மருத்துவர்)- வாழ்வை மேம்படுத்தும் எண்ணங்களைக் கைகொண்டு, நல்வாழ்வு வாழ நீங்கள் ஆசைப்பட்டால்- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் வாழும் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க நினைத்தால்-
வரசித்தன் பக்கங்களுக்கு தினமும் போய் அவர் எழுதுவதைப் படித்துவிட்டு அங்கே போடுங்க ஓட்டு: நீங்களும் நன்றாக இருப்பீர்கள், தமிழர்களும் நலமாக இருப்பார்கள்.
முடிவாக இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; போர்ஹே சொன்ன மாதிரி, "காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று"- நீங்கள் செய்யும் எதுவும் வீணாய்ப் போவதில்லை. உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.
இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், கலைஞர் எழுதி ரகுமான் இசையமைத்த பாடலைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்-
"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
.
.
.