Aug 16, 2011

ஸ்ருதி யு.கே.ஜி.


கிருஷ்ணாவின் டெஸ்க் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அரை டஜன் பேர் அவனைச் சூழ்ந்திருந்தனர். மற்றவர்களும் அங்கே வந்து போய்க் கொண்டும், எட்டிப் பார்த்து "என்ன கெடைச்சிட்டாளா?", என்று கேட்டுவிட்டு, "இன்னும் இல்லை", என்ற பதிலுக்கு, "நோ வொரீஸ், நீங்க வேணா வீட்டுக்குப் போங்க", என்றும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.

கான்-காலில் இருந்ததால் எனக்கு என்ன ஏதென்று புரியவில்லை. இந்தப்புற அல்லோலகல்லோலம் லண்டன் வரை கேட்கச் செய்ய, "வாட்ஸ் தி ப்ராப்ளம், ஸோ மச் நாய்ஸ் தேர்?" என மறுமுனையில் "லண்டன் துரை" மார்ட்டின் வினவ, "டோன்ட் நோ, நீட் டு செக்", என்றேன்.

இப்போது காதில் செல்போனைப் பொருத்திக் கொண்டு ஏதோ பதட்டமாகப் பேசினபடி ஃப்ளோரில் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. ஏ.சி. குளிரை மீறி அவனுக்கு வியர்த்து ஒழுகிய வண்ணம் இருந்தது. மிகத் தீவிரமாக ஏதோ பிரச்னை எனப் புரிந்தது.

மார்ட்டினிடம் "பிறகு பேசுவோமே" என மன்னிப்பு கோரிக்கொண்டு கான்-காலை கட் செய்தேன். கிருஷ்ணா நடை பயின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தேன்.

என்னைவிட இரண்டு வயது பெரியவன் கிருஷ்ணா. வேலையில் இரண்டு லெவல்கள் சீனியரும் கூட. எனினும் நான் அவனைப் பெயர் சொல்லி அழைப்பதும் அவன் என்னை சார் என்று அழைப்பதும் விசித்திரம்.

நான் வந்ததைக் கவனித்து, பேசிக்கொண்டே ஒற்றைக் கண்மூடி கெஞ்சும் தோரணையில் ஒரு விரல் காட்டி "கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றான். "சரி, இரு நான் போன் பண்ணிப் பாத்துட்டு உனக்கு திரும்ப கூப்பிடறேன்", என்று போனை வைத்தான். மீண்டும் எனக்கு ஒரு நிமிஷம் என சைகை செய்துவிட்டு போனில் யாரையோ அழைத்தான்.

"ராஜி, கிருஷ்ணா பேசறேன். ஸ்ருதி அங்க வந்திருக்காளா? இல்லை, ஒரு மணிநேரமா அவளைக் காணலை. வீட்ல பத்மா பயப்பட்டுட்டு  இருக்கா. இல்லை, பக்கத்துலதான் எங்கயாவது வெளையாடிட்டு இருப்பா. எல்லா எடத்துலயும் தேடிட்டாளாம். காணலை. சரி அங்க வந்தா எனக்கு கூப்பிடு"

செல்போனைப் பையில் எறிந்துவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"சின்னவளை ஒரு மணிநேரமாக் காணலியாம் சார்"

"யாரு, ஸ்ருதி'யா? ஸ்கூல்லருந்து வந்த அப்புறமா?"

"ஆமாம், வந்து ட்ரெஸ் மாத்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வரை இருந்திருக்கா. அப்புறம் காணலையாம்"

கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் ஷ்ரவன் மூன்றாம் வகுப்பிலும், சின்னவள் ஸ்ருதி யு.கே.ஜி.யும் படிக்கிறார்கள். 

"வீட்டுக்குப் போலாமே. ?"

"ஆறு மணிக்கு கால் இருக்கு"

"நாசமாப் போச்சு வேலை, அதுவா முக்கியம்?   ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட், நீ பொறப்படு"

"அது ஆவாது. முப்பது நிமிஷம் முடிச்சிட்டுப் போயிடறேன். காம்பவுண்ட் உள்ளேதான் எங்கயாவது இருப்பா. வாட்ச்மேன் இருக்கான், அவனைத் தாண்டி போகலை. வெளிய போக வாய்ப்பில்லை. நோ வொர்ரீஸ் தேங்க்ஸ்!"

"எமர்ஜன்சி'க்கு வீட்டுக்குப் போக முடியலைன்னா என்ன வேலை இது"

"சரி, இரு வீட்டுக்குப் பேசிடறேன். ஒரு நிமிஷம் உட்காரேன்"

அவன் அருகில் இருக்கையில்  அமர்ந்தேன். கைப்பேசியில் எண்ணை அழுத்தி, எதிர்முனையின் பதிலின்மையில் எரிச்சலாகி கைப்பேசியை சட்டைப்பையில்  கடாசி எறிந்தான். மீண்டும் பொறுமையிழந்தவனாக அருகிலிருந்த லேண்ட்லைன் தொலைபேசியைக் கையிலெடுத்து எண்கள் சுழற்றினான். இந்தமுறை எதிர்முனை பதில்தந்தது.

"என்னாச்சு, கெடைச்சாளா? "

"_______"

"எங்க இருந்தா?", குதித்து எழுந்து நின்றுவிட்டான்.

சுற்றியிருந்த அத்தனை இருக்கைகளும் பரபரப்பாக கிருஷ்ணா முகம் கவனித்தன.

"_______"

"குடு அவகிட்ட"

"_______"

"ஷ்ருதீ .......", விட்டால் அழுதுவிடுவான் போல குரல்.

ரவி எழுந்து கிருஷ்ணாவின் இருக்கையருகே வந்து சுட்டுவிரலை தொலைபேசியின் ஸ்பீக்கர் பட்டன் அருகே கொண்டு சென்று, "கிருஷ்ண, மே ஐ?", என்றான். கிருஷ்ணா தலையசைக்க...

"அப்பா.... சொல்லுப்பா"

"எங்க போன இவ்ளோ நேரம்? அம்மா உன்ன ரொம்ப தேடிண்டு இருந்தாளாமே"

"அப்பா, பக்கத்தாத்துல என் கிளாஸ்மேட்  அஸ்வத் இருக்கான் இல்லப்பா..."

"ஆமா இருக்கான். அவனோட எங்க போன"

"எங்கயும் போலப்பா, இங்கதான் நம்ம அபார்ட்மன்ட் ஸ்டோர்ரூம்ல லவ் பண்ற வெளையாட்டு வெளையாடிட்டு இருந்தோம்ப்பா"

கிருஷ்ணாவின் விரல்கள் அனிச்சையாய் ஸ்பீக்கரை ஆஃப் செய்தன.


6 comments:

Rathnavel Natarajan said...

ஏன் உலகம் இப்படிப் போகிறது? தொலைக்காட்சியா?

natbas said...

என்னத்தச் சொல்ல :(

வேதாளம் said...

பசங்களோட பெற்றவர்கள் நேரம் செலவிடா விட்டால் இப்படித்தான் ஆகும்.

Giri Ramasubramanian said...

@ ரத்னவேல் சார்

அப்படி சொல்றதுக்கு இல்லை. பழைய தங்கவேலு காமெடி ஒண்ணுலயே பாத்தீங்கன்னா அவரோட குழந்தைகள், “அப்பா - அம்மா” விளையாட்டு விளையாடும். அம்மா அப்பாவை அதிகாரம் பண்றதா போகும் கதை. அதன் அட்வான்ஸ்ட் வெர்ஷன் இப்போதைய குழந்தைகள். அத்ரயே.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்
@ வேதாளம்

ம்ம்ம்ம்ம்

Unknown said...

நிச்சயம் இதை தடுக்க வேண்டும் !!

Related Posts Plugin for WordPress, Blogger...