Jan 17, 2012

பூக்கள் பூக்கும் தருணம்


பண்புடன்” ஆண்டுவிழா சிறப்பிதழில் நான் எழுதிய இந்தக் கட்டுரை வெளிவந்தது. இந்த இதழ் பொறுப்பாசிரியர் ஸ்ரீதர் நாராயணன் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல.


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நள்ளிரவில் மின்சாரம் போகிறது, மின்விசிறி நின்றுவிடுகிறது. காற்று இல்லை, அறை நிசப்தத்தினுள் உறைகிறது, நம் தூக்கம் தடைப்படுகிறது. நம் தூக்கத்தின் தடையானது அந்த மின்சாரம் பிடுங்கிச் சென்ற மின்விசிறிக் காற்றினாலா அல்லது மின்விசிறியின் ஓசை தடைப்பட்டதாலா என்று கேட்டால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மின்விசிறியின் அந்த ஓசையின்மையே நம்மை ஓங்கியறைந்து எழுப்பிவிடும் காரணியாகிறது. காற்றின் துணையின்றிக் கூட  தூங்கிவிட முடிகின்ற நம் உடலால், கேட்டுப் பழகிய ஒரு ஓசையின் துணையின்றி தூங்க முடிவதில்லை. 
 பகல் நேரத்தில் கூட பக்கத்து வீட்டின் மிக்ஸி ஓசை, எங்கோ யார் வீட்டிலோ ஓடும் தண்ணீர் மோட்டார்,  பக்கத்துத் தெருவில் மாவுமில் இயந்திரத்தின் கரகரக்கும் குரல், ”கோல மாவேய்” என்பவனின் குரலோடு சேர்த்து எண்ணெய் காட்டாத அவன் சைக்கிள் செயினின் கிரீச் கிரீச் சத்தம், நாய்க்குரைப்பு போல் தொடங்கி தேசியகீதத்தில் முடியும்  கார் ஒன்றின் ரிவர்ஸ் கியர் ஓசை  என இவற்றில் எந்தச் சத்தமும் நமக்குப் புதிதாய் இல்லை. 
இந்த இரைச்சல்கள் இப்படி இருக்க ”பூ உதிரும் ஓசை” என்று ஒன்று உண்டு; அதனை உணரும் புலனும் மனிதனாகிய நமக்கு உண்டு என்று ஒருத்தர் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் என நானறியேன்; நான் முதலில் நகைக்கத்தான் செய்தேன்.
Giri-Jeyamohan
 படம் - நன்றி: ஹரன்பிரசன்னா

 “தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை” இந்த ஆண்டு சென்னையில் சில தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை, கங்கைகொண்ட சோழபுர வரலாறு,  ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை என தொடர்ந்து ஐந்து தினங்கள் “தமிழ் பாரம்பரியக் கச்சேரி” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள். இவற்றின் தொடக்க நிகழ்வாக எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையில் அவர் குறிப்பிட்டதே அந்தப் “பூ உதிரும் ஓசை”.
 ‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. பத்ரி சேஷாத்ரி அவர்கள்  இந்த அறக்கட்டளையின் ஓர் அறங்காவலர். பாரம்பரியம் என்று இவர்கள் பட்டியலில் இருப்பவை இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை.
 மாதாமாதம் முதல் சனிக்கிழமை அன்று பாரம்பரியம் தொடர்பாக ஓர் உரையை சென்னை தக்கர் பாபா பள்ளியில் தொடர்ச்சியாக கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.  இதுதவிர, விருப்பம் உள்ள சுமார் 20-25 பேர் சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய இடங்களுக்குப் போய் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்று வருகிறார்கள். மகாபலிபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்கள் கடந்த இரண்டாண்டுகளில் இவர்கள் சென்று வந்துள்ள இடங்கள்
 ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சென்னை இசைவிழாவின் போது கூடும் மக்களுக்கு இசையுடன் சேர்த்து பாரம்பரிய விஷயங்களையும் அறிமுகம் செய்ய இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டதுதான் ”தமிழ் பாரம்பரியக் கச்சேரி”.
 http://blog.tamilheritage.in என்ற இணைய முகவரியில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகள் குறித்த தகவல்களும், முந்தைய நிகழ்வுகளின்  ஒலி/ஒளிப்பதிவுகளும் கிடைக்கின்றன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகளில் / செயற்பாடுகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க சிறுவர்கள் / இளைஞர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனவும் இந்நிகழ்வுகள் குறித்து அறிந்தோர் தெரிந்தோருக்குக் கூறவும் எனவும் துவக்க உரையில் பத்ரி சேஷாத்ரி குறிப்பிட்டார்.
 சரி, பூ உதிரும் ஓசைக்குப் போவோம்!
 “வாசலில் மன்னா உன் தேர் வர; ஆடுது பூந்தோரணம்”, என்ற திரைப்பாடல் கேட்டிருக்கிறீர்களா? நெடுநாள் பிரிந்திருந்த தலைவன் வருகையை எண்ணித்  தவிப்பில் காத்திருக்கிறாள் தலைவி. தலைவன் திரும்பும் வேளையில் அவன் தேர் வருகையை அசைந்து உணர்த்துகிறது அவள் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பூந்தோரணங்கள். காற்றில் அசையும் பூந்தோரணத்திற்கும் காதலன் வருகை அறிவிக்கும் பூந்தோரணத்திற்குமான வித்தியாசத்தை உணரச் செய்வதுதான் நம் நுண்ணிய புலன்களின் சிறப்பு. தற்காலக் கவிஞனின் இந்தப் பாடலுக்கான கற்பனையை குறுந்தொகையின் இந்தப் பாடல் தந்திருக்கலாம்;
 மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்று வயிற் படரப் புறவில்
பாசிலை முல்லை ஆசில் வான் பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே
 - வாயிலான் தேவன்
 மேகம் விளையாடும் இந்தச் சிறு வீட்டில் கறவைப் பசுவை நினைத்து கன்று கத்திக் கொண்டே வருகிறது மாலை வெய்யிலின் சிவப்பு பட்டு முல்லை சிவந்த நிறம் பெறுகிறது, எனக்கு மீட்பு வரும்போலத் தெரிகிறது. தலைவன் வருகிறான் எனத் தலைவி சொல்வதாக வருகிறது இந்தப் பாடல். 
 வாழ்க்கையின் நுட்பங்களை நம் புலன்களுக்கு உணர்த்துவதில் இயற்கை வகிக்கும் பங்கினை சங்கப்பாடல்கள் வெறும் கற்பனைகளின் வாயிலாகவே அல்லாமல் இது போன்ற நுட்பமான அனுபவங்கள் வாயிலாக உணர்த்துவதை அன்று ஜெயமோகன் தான் எடுத்துக் கொண்ட எட்டு குறுந்தொகைப் பாடல்கள் வழியாகவும் தன் உரையில் கூறினார்.
 ”பூவுதிரும் ஓசை கேட்கும் புலனும் மனிதனுக்கு உண்டு. அதை மீட்டெடுக்கும்  நம் முயற்சியே சங்கப்பாடலை நாம் சுவைக்கும் திசை நோக்கி நம்மைக் கொண்டு செல்லும்”, என்கிறார் ஜெயமோகன்.
 ஜெயமோகனின் ‘சங்க சித்திரங்கள்” நூலின் கட்டமைப்பு இப்படி இருக்கும்; தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம், அதனோடு தொடர்புடைய ஒரு சங்கப்பாடல், அந்தப் பாடலுக்கான கவிதை போன்ற ஒரு எளிய மொழிபெயர்ப்பு, பாடலுக்கும் தன் வாழ்வின் அந்த சம்பவத்திற்கும் இடையேயான தொடர்பு என்று அழகாய் நெய்யப்பட்ட ஒரு நூல் அது. இதுபோல உரை சொல்லும் உத்தி ஜெயமோகன் அந்த நூலுக்காக அவர் குறிப்பாகக் கையாண்ட விதம் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்.
 கவிதைக்குக் காலகட்டம் இல்லை, அது நித்தியமானது. நல்ல வாசகனுக்கு கவிதை என்பது இறந்த காலத்தில் இல்லை. அது வரலாறு இல்லை, ஒரு அனுபவம் என்று அவர் குறிப்பிட்ட போதுதான் இது சங்கப்பாடல்களை அவர் அணுகும் முறை என்றும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திற்காக கையாளப்பட்ட உத்தி இல்லை என்றும் புரிந்தது. 
 ”கடந்தகாலத்தில் வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கையை அறிவதற்காக இந்தப் பாடலைப் படிக்காதீர்கள்; தன்னுடைய வாழ்க்கையை அறிய இவற்றைப் படியுங்கள். தமிழகத்தை அறியவேண்டி அல்ல தன் அகத்தை அறிவதற்காக இந்தப் பாடல்களைப் படியுங்கள்” என்று ஜெயமோகன் சொல்கிறார்.
 சுருங்கச் சொன்னால் கவிதையிலிருந்து அதன் அர்த்தத்திற்குப் போகாமல் வாழ்க்கைக்கு வாருங்கள் என்பதுதான் அன்று ஜெயமோகன் தந்த மொத்த உரையின் சாராம்சம்.
 வந்த இடத்தில் மலை முழுக்க அழகழகாய்ப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த குறிஞ்சிப் பூக்கள் ஒருத்தனின் தேனிலவுக் கொண்டாட்டங்களை எப்படித் தொந்தரவு செய்தன என்ற நிஜ வாழ்வு சம்பவம் ஒன்றின் வாயிலாக இந்தப் பாடலுக்கான உரை சொன்னார் ஜெயமோகன்.
 பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.
                                     - சிறைக்குடி ஆந்தையார்
 பிரிவின் துயரை விளக்குகிறது இந்தப் பாடல். தங்கள் கூடலின் இடையில் வந்தமரும் ஒரு சிறுமலர் தரும் திசைதிருப்புதலின் கணநேரப் பிரிவும் கூட ஓர் வருடத்துப் பிரிவின் வலியைத் தர வல்லது என்பது இப்பாடலின் முதல் வரி தரும் பொருள்.  
 இந்தப் பூவிடைப்படுதலை உவமையாக, உதாரணமாகப் பாராமல் நிஜமாகக் காண்பது சாத்தியமா என்ற கேள்வி எழக்கூடும். நம்மில் ஒவ்வொருவரும் காதலின் நெருக்கத்தில் இத்தகைய தீவிரமான உச்சத்தை வாழ்வின் ஏதேனும் சில கணங்களில் உணர்ந்துவிட்டே வாழ்க்கையைக் கடக்கிறோம் எனில் இது நிஜமே.
 மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமையை நீங்கள் பார்க்கலாம். இரண்டு பாடல்களிலும் மலர்களின் பங்கு உண்டு. இவையிரண்டு மட்டுமல்ல அன்று ஜெயமோகன் எடுத்துக் கொண்ட எட்டு பாடல்களுக்கும் பூக்களுடனான தொடர்பு இருந்தது.  
 புதுவை ஸ்ரீஅரவிந்த ஆசிரம பக்தர்களை கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்று புரியும். அவர்களின் வழிபடுதல் முறைகள் பெரும்பாலும் பூக்களைச் சார்ந்தே இருக்கும். மலர்களால் தட்டுகளில் அலங்காரம் செய்து அரவிந்தர், அன்னை படங்களின் முன் வைப்பார்கள், மலர்களால் தரையில் சின்னங்களை வரைந்து அலங்கரிப்பார்கள். வாழ்க்கையின் பிரச்னைகள் அனைத்திற்கும் பூக்கள் மூலமாக தீர்வு சொல்வார்கள். மலர்களும் அதன் மகிமைகளும் என்பது போன்ற தலைப்பில் புத்தகங்களைச் சுமந்து திரிவார்கள்.
 Spiritual Significance of Flowers என்ற ஸ்ரீஅன்னை அவர்கள் எழுதிய நூல் பற்றி ஜெயமோகன் குறிப்பிட்டு இந்த உலகில் ஒவ்வொரு மலருக்கும் பின்னால் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்று ஸ்ரீஅன்னை சொல்வதாகக் குறிப்பிட்டார். அந்த பக்தர்களின் செயற்பாடுகளின் பின்னணி அப்போதுதான் நமக்குப் புரிகிறது. 
 நம் ஐந்திணைகளுமே கூட ஒவ்வொன்றும் மலர்களின் பெயர் சுமந்து அந்த மலர்களின் தன்மையை ஒத்த வாழ்நிலையை பேசுவனதானே என்பதை தன் உரையில் குறிப்பிட்ட ஜெயமோகன் நம் சங்கக்கவிதைகளையும் அதுபோல மலர்களைக் கொண்டு அணுகுவதன் அவசியத்தை குறிப்பிட்டார்.
 அடுத்த பாடலும் மலர் கொண்ட பாடல்தான் எனினும் இந்தப் பாடலின் உள்ளுறைப் பொருள் பற்றி ஜெயமோகன் தந்த விளக்கம் கவனிக்கத்தக்கது:
 கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே
                            -  குன்றியனார்
 கடல்நிலத்துத் தலைவன் மேல் காதல் கொண்டுள்ள தலைவி, அவள்  தாய் காதலை விரும்பாதவள். இவள் நிலை குறித்து ஊர் முணுமுணுக்க, தன்னைத் தலைவனுடன் சேர்த்திட தன் தந்தையின் அருள் வேண்டுகிறாள் தலைவி. 
 நேரடிப் பொருள் இதுவெனினும், இப்பாடல் கொண்ட உள்ளூறைப் பொருள் நோக்கினால், தாயை அந்த நீர்முள்ளிச் செடியின் முள்ளோடும், ஊர்பேசும் வார்த்தைகளை நூலறுந்த முத்தின் சிதறலாகவும் தலைவி குறிப்பிடுகிறாள்.
 ஒரு பொறியாளனின் பணிபோல சொல் பிரித்து அசை பிரித்து அர்த்தம் கூறுதலுக்கும் இதுபோல வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து பாடல்களை உள்வாங்குதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்து செயல்படுவதில்தான் சங்கப்பாடல்களை நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் வாய்ப்பு அமர்ந்துள்ளது. அந்த விதத்தில் ”தமிழ் பாரம்பரியக் கச்சேரி” ஏற்பாட்டில் நடந்த ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ நிகழ்ச்சி ஒரு நல்ல ஆரம்பம் எனலாம். நம் நிகழ்கால வாழ்வுடன் இணைந்து சங்கப்பாடல்களைப் பார்க்கும் உத்தியை நம் முன்வைக்கும் ஜெயமோகன் நிச்சயம் நன்றிக்கு உரியவர். 
 மார்கழி மாதம் வந்தாலே சென்னை சபாக்கள் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்காய்க் களைகட்டும். இதற்கென கூடும் கூட்டத்தினை கருத்தில் கொண்டு தமிழ் பாரம்பரியக் கச்சேரியை அதே நேரத்தில் நடத்திடும் முயற்சி சிறப்பானது. இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி இந்நிகழ்வுகளின் ஒலி, ஒளி வடிவுகளைப் பதிவு செய்து வலையேற்றும் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் பெரும் பாராட்டிற்கு உரியவர்கள். இந்நிகழ்வுகளை அவர்கள் வருடாவருடம் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைப்போம்.

Jan 12, 2012

நண்பன்

Image courtesy: http://www.progarchives.com

விஜய்க்கு ரொம்ப நாளாகவே உடம்பைக் குறைக்க ஆசையோ ஆசை. ஆசை அதன் பல்வேறு பரிமாணங்களில் உருவெடுத்து வெறியில் நிலைகொண்டு நின்ற தருணத்தில், “காலைல ஓட்ஸ் சாப்பிடு, ஒடம்பு கொறையும்”, என்ற அறிவுரையை யாரோ வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு முனிவனின் தவத்தோடு மூன்று மாதங்கள் இடைவிடாது பிடித்ததோ பிடிக்கவில்லையோ தினப்படி ஓட்ஸ் கஞ்சி குடித்துக் கரைத்தாயிற்று. கஞ்சி கரைத்ததும் காசு கரைந்ததும்தான் நடந்ததே தவிர உடம்பு கரைந்தபாடில்லை.

எடை மெஷின் முன் போய் நிற்பதற்கு முன்னரே தெரிந்துவிட்டது; அதன் முள் இன்னமும் நான்கு கிலோகிராம்கள் அதிகம்தான் காட்டும் என்று. எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை எடைமெஷின்.

கூப்பிட்டு விசாரித்ததில்தான் தெரிந்தது, காலை ஏழுமணிக்கு ஒண்ணரை சொம்பு ஓட்ஸ் கஞ்சியும், அதன்பின் எட்டரை மணிக்குப் பசிக்கிறதே என்று வழக்கம்போல் இரண்டரை ப்ளேட் நாஸ்தா தின்பதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் நம்ம விஜய்.


”யோவ்...........”, என்றால்


“என்னா சார் பண்றுது யாரும் தெளிவா சொல்லலையில்ல”, என்று பதில் வருகிறது.


இப்போது அந்த எக்ஸ்ட்ரா நான்கு கிலோவையாவது குறைக்க விஜய் ஓட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்திருப்பதாகக் கேள்வி


------------------

லோகேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருநாள் மாலை அரக்கப்பரக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

“என்னா சார்?”

“வைஃப் வீட்ல இல்லை சார். பசங்களை டியூஷன்ல கொண்டு விடணும்”

“எதுக்கு சார் டியூஷன் எல்லாம். வீட்லயே படிக்க சொல்லுங்க”

“அட நீங்க வேற, சிலபஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சார். நம்மால சமாளிக்க முடியாது”

“என்ன படிக்கறாங்க?”

“பெரியவன் யூகேஜி, சின்னவன் எல்கேஜி”


------------

கண்ணனுக்கு நல்லவேளை ராமன் என்று அவனைப் பெற்றவர்கள் பெயர் வைத்திடவில்லை. கண்ணன் கதை கண்ணனின் கதையேதான்.

“மச்சி”

“சொல்லு சந்தீப்”

“உங்க அப்பா இந்த வீக்-எண்ட் ஊருக்குப் போறாரா?”

“ஆமாம்”

“இல்ல, நானும் என் கேர்ள்ஃப்ரெண்டும் பேசிப்பழகி நாளாச்சு, ஒரு அரைநாள் உங்க வீடு கெடைச்சா கொஞ்சம் நாங்க சொந்த விஷயம் எல்லாம் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு, பண்ணிக்குவோம்”

“சொந்த விஷயம் டிஸ்கஷன் அப்டின்னா?”

“ஏ, சொன்னா வெளங்காதா உனக்கு?”

“சரி அப்போ அந்த டிஸ்கஷன்ல என்னையும் சேத்துக்கோ, எடம் தர்றேன்”

”டேய்! அவ என் கேர்ள் ஃப்ரெண்டுடா”

“இருக்கட்டும்! நான் எவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த ஹெல்ப் பண்றேன்”

“இதுல என்னடா ரிஸ்கு” 

”எங்க வீட்ல, இல்லை அக்கம்பக்கத்துல இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும் யோசி, அது ஒண்ணும் பெரிசில்லை”

“போடா! பேமானி!”

அந்த டிஸ்கஷன் நடக்காமல் போன காரணத்தால் சந்தீப் சமீபத்தில் தன் காதலியை இழந்து தாடி வளர்க்காமல் தவிப்பதாகக் கேள்வி.

-----------

இப்படிப்பட்ட அற்புதமான மூன்று நண்பர்களுடன் கடந்த மூன்று மாதங்களாக ஆபீஸ் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். தடாலடியாக ஒரு ப்ராஜக்ட்டைக் காட்டி அதில் இப்போது என்னை அமர வைத்திருக்கிறார்கள்.

ஐ மிஸ் யூ மை டியர் த்ரீ இடியட்ஸ்!
.
.
.

Jan 10, 2012

கார்பரேட் கனவுகள் - ஒரு கடிதம்


ட்விட்டரில் அறிமுகமான அன்பர் பி.வி.ஆர். கார்பரேட் கனவுகள் புத்தகத்தை வாசித்துவிட்டு எழுதிய கடித்தத்தின் சில பகுதிகள் இங்கே...

Dear Giri

.....I liked your describing the holiday activities of BPO employees -  not just pubbing or rolling, it has serious CSR also - compassion, coupled with concrete, tangible action.

Likewise you have described the 'cultural differences'  that exist with clients and how one should recognise and manage them.  Accompanying diagrams and apt language helped very well in this. 

I saw you have taken care to bring out the unfair attitude that the society shows towards even good human beings & competent workers, just because they work for a BPO.  Essential Tips for Success - 'Vetiyin Ragasiyam' (page 83-92) has come out well. Succint and focused.  

And so is the chapter on BPO Girls; and why good rest is important because of odd duty hours.  Well, to round it off, it is a must read.

Also, as I suggested, a version 2 is required. And you can do it better. You should use a wider canvas and should bring in more information. 

With Best Wishes & Regards,
PVR

மிக்க நன்றி பிவிஆர் :)
Jan 6, 2012

அறிவாலயத்தில் நம் புத்தகம்

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று கோலாகலமாய்த் துவங்கியுள்ளது.

ஸ்டால்களின் எண்ணிக்கை, வருகை புரிவோர், புத்தகங்களின் விற்பனை என அனைத்திலும் இந்த முறை சென்ற ஆண்டைவிட சாதனைகள் இருக்கும் என நம்புவோம்.

நான் எழுதி சென்ற மார்ச் மாதம் வெளிவந்த கார்பரேட் கனவுகள் புத்தகம் கீழ்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.அறிவாலயம் - ஸ்டால் எண் 308 - 309

ஸ்ரீ செல்வ நிலையம் - ஸ்டால் எண் 399மறக்காமல் வாங்கிப் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி!
35ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி

செயிண்ட் ஜார்ஜ் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
சென்னை.
வார தினங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 வரை.
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 வரை.


Jan 5, 2012

ஏடிஎம் (அ) வாடிக்கையாளர்

வீட்டு விசேஷத்திற்கு ஆடைகள் எடுக்க இரு தினங்களுக்கு முன் சென்னை தி.நகரின் புகழ்பெற்ற துணிக்கடைக்குப் போயிருந்தோம். மாடிக்கு மாடி தாவிச்சென்று வேண்டிய ஆடைகளை அள்ளிக்கொண்டு வேட்டி எடுக்க வேண்டிய பகுதிக்கு வந்தோம். சாதாரண வேட்டியாக இல்லாமல் ஜரிகை போட்ட நல்ல வேட்டியாக எடுக்க வேண்டும்.. எங்கள் மனதில் இருந்த பட்ஜெட் ஐநூறுக்கு மேல் ஆனால் ஆயிரத்திற்கு மிகாமல். 

வேட்டிகள் பகுதியில் இருந்த சிப்பந்தி வரவேற்றார். 

“என்ன ரேஞ்சுலருந்து இருக்குங்க?”

“2500’லருந்து தொடங்குது சார்?”

“ரெண்டாயிரத்தி ஐநூஊஊறாஆஆஆ?”

”ஆமாம் சார், பட்டு வேட்டிங்க”

“இல்லை பட்டு வேணாம், ஆனா கொஞ்சம் க்ராண்டா வேணும் நல்ல வேட்டியா”

“அங்க வஸ்திரம் இல்லாம ரெண்டாயிரத்தி நூறுக்கு வரும் சார்”

“அது என்ன வகையறா?”

“இதுவும் பட்டுதான் சார்”

”இல்லை சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

“உங்க பட்ஜெட் என்ன சொல்லுங்க சார்?”

”ஐநூறுலருந்து ஆயிரம்”

”பட்டு மிக்ஸ்ல இருக்கு பாருங்க, ஆயிரத்தி அறுநூறு”

“சார், பட்ஜெட்....”

”இது ஆயிரத்தி முன்னூறு”

“ஐயா பட்ஜெட்”

“நல்லா இருக்கு சார் பாருங்க. ஜம்முன்னு இருக்கும் உங்களுக்கு”

”இருக்கும்தான், இருந்தாலும் கைல பணம் இருக்கணுமே”

“கார்டு வாங்கிப்போம் சார்”

“அடுத்த மாசம் அதை நான்தான் கட்டணும் சார்”

”அதெல்லாம் பார்த்தா முடியுமா சார். வாங்கறது ஒருமுறை,  நல்லா க்ராண்டா வாங்குங்க சார்”

“ஐயா, நான் பட்டு வேட்டி வாங்கவே வரலை. ஜரிகை போட்ட நல்ல வேட்டியா நான் கேட்ட விலையில தாங்களேன்?”

”இது பாருங்க, இது பட்டு மிக்ஸ். ஒன்பதுக்கு அஞ்சு வேட்டி. எண்ணூறு ரூபா வரும். இதே மாடல் அடுத்த குவாலிடி எழுநூறு அதுக்கும் அடுத்து அறுநூறு. எண்ணூறு ரூபாய்ல வெள்ளி ஜரிகை வரும். மத்த ரெண்டும் சாதா ஜரிகை”

“சரி, அந்த எண்ணூறு பேக் பண்ணிருங்க”

இங்கே நான் குறிப்பிட விரும்புவது அந்த சிப்பந்தியின் மனதில் முன்னணியில் நிற்கும் மாதக்கடைசியில் அவர் கைக்குக் கிடைக்கப் போகும் சேல்ஸ் போனஸ். எத்தனை அதிக விலைக்கு நம் தலையில் சரக்கைக் கட்டுகிறாரோ அத்தனை அதிகம் போனஸ் அவர் வங்கியில் கிரெடிட் ஆகும். ஆக, தன் ஏடிஎம் ஒன்று எதிரில் நிற்பதாகத்தான் அந்த சிப்பந்தி எங்களைக் காண்கிறார்.

இது துணிக்கடை என்றல்ல, எல்லா வியாபார இடங்களிலும் பார்க்கும் காட்சிதான். வியாபாரம் செய்பவர்கள் மட்டும் என்றல்ல இந்தக் கலியுகத்தில் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். நீங்கள் முதலாளி (அல்லது மேனேஜர் அல்லது டீம் லீடர்)  என்றால் உங்களிடம் இருந்து எந்தெந்த வகையில் எல்லாம் சம்பள, இதர படிகள், போனஸ், சினிமா-டிராமா பாஸ், பர்ஃபார்மன்ஸ் பாயிண்ட்டுகள்*, எக்ஸட்ரா, எக்ஸட்ரா எனக் கறந்துவிட முடியும் என்று உங்க்ள் ஊழியர் பார்க்கிறார், நீங்கள் அதே பார்வையை உங்கள் மேலதிகாரியைப் பார்க்கிறீர்கள். உலகமே இப்படித்தான் இயங்குகிறது.

ஆனால் பாருங்கள், மருத்துவர்கள் தங்கள் ஏடிஎம்’கள் என தங்கள் நோயாளிகளைப் பார்ப்பது மட்டும் உலகில் யாரும் செய்தே இராத குற்றமாகக் காணப்படுகிறது#.

காரணம் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள். இன்னும் அந்த ஆராய்ச்சியை நான் பண்ணவில்லை. 

-   x  -

* இவை எம்.என்.சி. நிறுவனங்களில் ஊழியர்களுக்குத் தரப்படுபவை. இவற்றை வைத்து ஆன்லைனில் பாயிண்ட்டுகளின் அடிப்படையில் பொருள்கள் வாங்கலாம். உ-ம்: நூறு பாயிண்ட்டுக்கு அயர்ன் பாக்ஸ் கிடைக்கும்,. ஆயிரம் பாயிண்ட்டுக்கு ஃபிரிட்ஜ் கிடைக்கும்.

 மூன்று வருடங்கள் முன் நானும் இதே தொனியில் ஒரு பதிவு எழுதினேன் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் :)

Jan 1, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்

அனைவருக்கும் நம் புத்தாண்டு 2012 வாழ்த்துகள்!இந்தப் பாடல் நம் பாடல் தளத்தில் வெளியாகவேண்டியது. தவறுதலாக இங்கே பதிந்துவிட்டேன். இருந்தால் என்ன... இருந்துவிட்டுப் போகட்டுமே :)

மடிப்பாக்கத்தில் புதுவை அரவிந்தர் ஆசிரமம்


என் அம்மா ஒரு தீவிர அரவிந்தர் அன்னை பக்தை. முடிந்த மட்டிலும் வருட ஆரம்ப நாளில் புதுவையில் அன்னையை தரிசிக்க தன் தியான மைய அன்பர்கள் கூட்டத்துடன் சென்று விடுவார்.  இந்த வருடம் புதுவையில் புயல் மழை காரணமாக அந்தப் பயணத்தைத் தவிர்க்கும் நிலை.

மடிப்பாக்கம் பாலையா தோட்டத்தில் ஒரு அன்பர் அரவிந்தர் அன்னை தியான மையம் அமைத்துள்ளார். அங்கு அழைத்துச் செல்ல என்னைக் கேட்டார், சென்று வந்தோம்.

நம்பினால் நம்புங்கள்... புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று வந்த உணர்வு இருந்தது. என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உங்களுக்கு இருக்குமானால் இங்கு ஒருமுறை வந்து சென்றால் உங்களுக்கே தெரியும். பொதுவாக தியான மையங்களில் நான் இதுவரையில் பார்த்தது அரவிந்தர் அன்னை படங்களும், பூக்களும், கூட்டுத் தியானங்களும்தான். இங்கே மடிப்பாக்கம் அன்பர் அமைத்திருப்பது கிட்டத்தட்ட புதுவை ஆசிரமத்தின் ரெப்ளிகா.

நீங்கள் சென்னையைச் சேர்ந்த அரவிந்த அன்னை பக்தர் எனில் அவசியம் இங்கே விஜயம் செய்யுங்கள். புதுவை சென்ற புத்துணர்வு நிச்சயம் இருக்கும்.

முகவரி: 1, சர்மா லே அவுட், பாலையா கார்டன் (ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் எதிர் சந்து), மடிப்பாக்கம், சென்னை - 91.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Related Posts Plugin for WordPress, Blogger...