Dec 28, 2023

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3

 காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3


Most happening day: காசி விஸ்வநாதர் கோயில், காசி விசாலாட்சி கோயில், அன்னபூரணி கோயில் சென்ற திவ்ய அனுபவங்கள் ஒருபுறம், சாரநாத் சென்ற இனிய அனுபவம் மறுபுறம்.


காசியில் வரவேற்பு: காலை நாலரைக்கு பனாரஸ் ( காசி, வாரணாசி, பனாரஸ் - மூன்றுமே ஒரே ஊர்தான் ) வந்திருக்க வேண்டிய ரயில் மூன்று மணிநேர தாமதத்தில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 


வந்தவர்கள் அனைவருக்கும் உ,பி. அரசின் சார்பில் பலமான சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டது. மாநில பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அமைச்சர் அனில் ராஜ்பர் எங்களை வரவேற்க வந்திருந்தார். உள்ளூர் பாஜக அபிமானிகளும் ரயில் நிலையத்தை தங்கள் வரவால் நிரப்பியிருந்தனர். சிவப்புக் கம்பளமிட்டு, மாலை சூட்டி, பூக்கள் தூவி என நம் வாழ்வில் காணா ஒரு தடபுடல் வரவேற்பு. அரசின் விருந்தினர் என்றால் யார் என்பது இந்தப் பயணத்தில் ஓரளவு விளங்கியது.


காசி மாநகரில் அடுத்த இரு தினங்களுக்கான எங்கள் திட்டப் பயணத்திற்கு என எட்டு எலக்ட்ரானிக் பேருந்துகள் காத்திருந்தன. காசியில் வந்து இறங்கி விட்டோம் என்பதை உலகிற்கு அறிவிக்க பனாரஸ் ரயில் நிலைய வாசலில் நின்று சில செல்ஃபிக்கள் எடுத்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்துவிட்டு எங்கள் காசி பயணத்தைக் துவக்கினோம்.


முதலில் காலை உணவு. இரண்டு நாட்கள் ரயிலில் ரொட்டி - சப்ஜி தின்று களைத்த நாவுகளுக்கு இட்லி-பொங்கல்-இடியாப்பம்-சட்னி-சாம்பார் அமிர்தமெனக் கிடைத்தது. பின் ஹோட்டல் அறை நோக்கி ஒரு சிறு பயணம். குளியல் முடிந்த பின் புறப்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம்.


கோயில் நுழைவாயிலில் ஒரு விவிஐபி வரவேற்பு எங்கள் குழுவுக்கு - தந்தவர்கள் கோயிலின் வேத பண்டிதர்கள் அறுவர். கோயிலின் உள் நுழைவாயிலின் உள்ளே நுழைந்ததும் மற்றுமொரு வேத பண்டிதர்கள் குழு வேத முழக்கத்துடன் மலர் தூவி எங்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். சிறப்பு தரிசனம், வெகு சிறப்பாக.


தரிசனம் முடித்து மணிகர்ணிகா காட் படித்துறையில் அமர்ந்து மணிகர்ணிகா அஷ்டகம் சொன்னது நல்லனுபவம்.


என் அப்பா வழிப் பாட்டியின் பெயர் விசாலாட்சி. அம்மாவின் அம்மா பெயரும் விசாலாட்சி. இவர்களுள் முதல் விசாலாட்சிப் பாட்டியை நான் பார்த்ததில்லை. அம்மாவிடம் இதை பெரும்குறையாக ஒருதரம் சொன்னபோது காசி விசாலாட்சியை தரிசித்தால் உனக்கு அந்தக் குறை தீரும் என்று சொன்ன நினைவு. அம்மாவின் வார்த்தை இன்று பலித்தது மெய்யாகவே. குட்டியூண்டு கருப்பு தேவதை. நம்மூர் தெருமுனை விநாயகர் கோயில் பிரகாரங்களின் அளவிற்கே கோயிலின் மொத்த அளவுமே. நம்மூர் நகரத்தார் பராமரிக்கும் கோயில் - தென்னிந்திய கட்டிடக் கலையை ஒட்டிய கோபுர அமைப்பு.. சுற்றி வர ஒரு நிமிடம் போதும். பெரும் கெடுபிடி, கூட்டங்களும் இல்லாத சிம்பிள் தேவதை.


அடுத்து அன்னபூரணி. விஸ்வநாதருக்கு இணையாக மக்கள் கூட்டம் கூடும் கோயில். சிவபெருமான் கூறியதன்படி பார்வதி தேவி அன்னபூரணியாக உருவெடுத்து வந்து வாரணாசியின் பசி தீர்த்ததாக ஒரு வரலாறு உண்டு. மற்றொரு நம்பிக்கையின்படி சிவனுக்கே அன்னம் படைத்த பூரணி இவள் என்போரும் உண்டு. இதன் காரணமாக, காசியில் அன்னபூரணி தட்டு வாங்கி அதில் அரிசி படைத்து வணங்க வாழ்க்கையில் அன்னத்திற்கு குறை இராது என்பது நம்பிக்கை, குறிப்பாக நம்மூர் மக்களுக்கு. காசியில் தடுக்கி விழுந்தால் அன்னபூரணித் தட்டுகள் மேல்தான் விழ வேண்டும். தமிழிலேயே நாலு நூரு றூபா, மூணு நூரு றூபா என்று விற்கிறார்கள்.


விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி என மூன்று கோயில்களும் கிட்டத்தட்ட ஒரே வளாகத்தினுள் நடை தூரத்திலேயே இருந்தன.


மதியம் ஒரு ராயல் தென்னிந்திய அன்னதானம் விஸ்வநாதர் அருளினார். நல்ல சாம்பார், அருமையான கூட்டு, பொரியல், அற்புதமான ரசம் + அப்பளம் + மோர் - வேறென்ன வேண்டும்? 







உணவுக்குப் பிறகு சாரநாத் சென்றோம். கோயில் பகுதியில் இருந்து ஒரு எட்டு கிமீ தொலைவு பயணம். சாரநாத் அனுபவம் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதுகிறேன்.


காசி மாநகரின், நகர மக்களின் traffic sense நம் சென்னை மாநகர மக்கள்தம் traffic sense'க்கு சற்றும் குறைவில்லாதது. அது குறித்தும் தனியே எழுதலாம் தான். எனினும் நம் பயணமும், அதன் நோக்கமும் அதை கவர் செய்யவல்ல என்பதால், 

இப்போதைக்கு... (தொடரும்) 


Dec 26, 2023

காசி தமிழ் சங்கமம் - நாள் 2

 






நாள் 1


இரண்டாம் நாள் முழுக்க ரயில் பயணத்திலேயே கடந்தது.

 

காலை ஒன்பது மணிக்கு வந்தடைய வேண்டிய நாக்பூரை ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தடைந்தது ரயில். ஆகவே, சற்றே தாமதமான காலை உணவு. ஆனால், அதற்கு முன்னதாக சுமாரான ஒரு நல்ல தேநீரும், நல்லதாய் நாலு வெரைட்டி பிஸ்கட் பாக்கெட்டுகளும் உபசரிப்பில் ஒரு பகுதியாய்க் கிடைத்த புண்ணியத்தில் பசி தாங்க இயன்றது.

 

 பயணத்தில் சந்தித்த சிலர் பற்றி:

 

நிர்மால்யா: பிரபல எழுத்தாளரும், அகாதமி விருது பெற்றவருமான நிர்மால்யா இந்தப் பயணத்தில் இருந்தார்.     அவர் வந்திருந்ததை ஓவியர் ஜீவா ஃபேஸ்புக்கில் சொல்ல, நிர்மால்யா இருந்த இடத்திற்கே சென்று அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு வந்தேன்.

 

பேராசிரியர் லஷ்மி: இந்து கல்லூரியில் பேராசிரியரும், எழுத்தாளருமான லஷ்மி. இன்றைய கல்விமுறை குறித்து இவரிடம் நிறைய உரையாட முடிந்தது.

 

ஆசிரியர் பாரதி சதிஷ்ராஜ்: ஏற்காட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான சதிஷ் ராஜ். இளரத்தம் தாங்கிய, புதிய சிந்தனைகளுடனான ஒரு துள்ளல் மனிதரை அரசு ஆசிரியராகப் பார்த்த மகிழ்வை என்னவென்று சொல்ல. தான் சார்ந்த வேதியியல் துறை சார்ந்து புனைவுகளும், அபுனைவுகளும் எழுதுகிறார். இவரை வாசிக்க வேண்டும்.

 

மதுரை முரளி, இதயம் கிருஷ்ணா, கவிதாயினி கோமளா என இன்னமும் பல கவிதை ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

 

நாஞ்சில் நாடன் முதல் கண்மணி குணசேகரன் வரை, அகாதமி விருது முதல், கவிஞர் இசை வரை விரிவாகப் பேசும் ரவிக்குமார் எனும் சீனியர் சிட்டிசன் ஒருவர் என் அடுத்த இருக்கையில் இருந்தார். வளரும் எழுத்தாளர்கள் + சினிமாக் கனவில் அதற்கு எழுதிக் கொண்டிருப்பவர்கள் சிலரும் வந்திருந்தனர்.

 

இங்கே இவர்கள் தாண்டி ஆச்சர்ய சந்திப்புகள் சில: சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள், சின்னஞ்சிறு தமிழ் ஸ்காலர்கள், எம்.ஏ.தமிழ் மாணவர்கள். மிகவும் ஆச்சர்யம் தந்த சந்திப்பு பண்பரசன் என்ற அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

 

இவர்கள் நான் அமர்ந்திருந்த பெட்டியின் ஒரு பகுதி மக்கள். மற்றோர் அறிமுகம் அடுத்த நாட்களில் கிடைக்கும் என நம்புகிறேன்.

 

நிற்க, காலையில் நாக்பூர் ரயில் நிலையத்தில் மஹாராஷ்டிரா பாஜக அன்பர்கள் காத்திருந்து இனிய தேநீர் உபசரிப்புடனான வரவேற்பு தந்தனர். இட்லி, வடை, சட்னி என ஒரு ஓகே ஓகே காலை உணவு. சப்பாத்தி-சாவல்-சப்ஜி என மதிய உணவு, அதே-அதே இரவுணவு. இடையே ஒரு தேநீர். இதோ தூங்கப் போக வேண்டும். காலையில் எழுந்தால் காசி வந்திருக்கும்.

 

காசி தமிழ் சங்கமம் - நாள் 1

இந்த வருடம் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கு கொள்ள வாய்ப்பு அமைந்தது. இன்று இரண்டாம் நாள் பயணத்தில் இருக்கிறோம். 

காசி தமிழ் சங்கமம் (KTS) - இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் என அறியப்படும் வாரணாசியில் சென்ற வருடம் முதல் நிகழ்ந்து வருகிறது காசி தமிழ் சங்கமம். மத்திய அரசின் ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்னும் முன்னெடுப்பின் கீழ் இந்த சங்கமம் நிகழ்வு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்/கைவினைஞர்கள், நிபுணர்கள், வணிகர்கள், ஆன்மிகம், எழுத்தாளர்கள் என்ற ஏழு பிரிவுகளில் இந்த வருடம் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. சுமார் 60000 விண்ணப்பங்கள், அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட 1500 பேர் இந்த வருடம் பயணப்படுகிறோம். 

ஆறாவது பிரிவான எழுத்தாளர்கள் பிரிவில் எனக்கு ஒரு இருக்கை கிடைத்தது. ஐஐடி மெட்ராஸ் முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்திய கல்வித்துறை இந்நிகழ்வை நடத்துகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயண ஏற்பாடுகளைச் செய்கிறது. அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். 

இதோ இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் நாள் காலையான இப்போது வரை ஏற்பாடுகள் பிரமாதமாக உள்ளன. நிகழ்வுக்கான நம் விண்ணப்பப் பதிவை உறுதிசெய்து தகவல் அனுப்பியதில் தொடங்கி, ரயில் பயணச்சீட்டு உறுதி செய்ததில் இருந்து, ரயில் நிலைய வரவேற்பு / வழியனுப்பல், ரயிலில் இதுவரை உணவு உபசரிப்பு என so far so good.


எழுத்தாளர் என்ற அடையாளத்தில் செல்வதால், பிரிவு சார்ந்த கல்வி நிகழ்வுகள் அல்லது அமர்வுகளில் பேச / வழங்க ஒரு சிறு தயார் நிலையில் செல்கிறேன். எப்படி வாய்ப்பு அமைகிறது எனப் பார்க்கலாம். மற்றபடி காசி உலாத்தலும், ஒரு பிரதான திவ்யதேச தரிசனம் செய்துவிட்டு என் பர்சனல் லிஸ்டில் பெருமகிழ்வுடன் ஒரு பெரிய டிக் அடித்துக் கொள்வதுவும் தான் இந்தப் பயணத்தில் என் எதிர்பார்ப்பு என்று தான் புறப்பட்டு வந்தேன்.

இதுவரையிலான பயண நேர அறிமுகங்களில் பலப்பல பின்னணிகளில் இருந்து வந்திருக்கும் மக்களை சந்தித்தது தான் இந்தப் பயணத்தின் முக்கியப் பயனாக இருக்கும் என்று ஒரு மதியம் + மாலை நேர பயணத்தில் புரிகிறது. அவர்களில் சிலர் பற்றி நாளை பார்ப்போம்.

பயணத்திட்டம் இப்படி இருக்கிறது. முதல் இரு தினங்கள் காசி நோக்கிய ரயில் பயணம்.

மூன்றாம் மற்றும் நான்காம் தினங்கள் காசியில்:

நாள் 3:
காசி விஸ்வநாதர் கோவில், காசி உலாத்தல், சாரநாத் பயணம், கங்கை படகு சவாரி, படித்துறைகள், கங்கா ஆரத்தி.

நாள் 4:
உள்ளூர் கோவில்கள், பாரதி இல்லம், ராம்நகர் கோட்டை, லால்பகதூர் சாஸ்திரி அருங்காட்சியகம், பாரதமாதா கோயில். 
மதியம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கல்விசார்ந்த நிகழ்ச்சி 
கலாச்சார மாலை  

நாள் 5:
பிரயாக் சங்கம், அயோத்தியில் தங்குதல்.

நாள் 6:
அயோத்தி சுற்றிபார்த்தல், வாரணாசிக்கு திரும்புதல், தமிழ்நாட்டிற்கு திரும்புதல்

நாள் 7 & 8: பயணம். 

நன்றி: https://kashitamil.iitm.ac.in/ 







Related Posts Plugin for WordPress, Blogger...