May 30, 2017

திராவிடநாடு


கடந்த பதினைந்து தினங்களில் கிட்டத்தட்ட நான்கு அழைப்புகள் அல்லது எஸ்.எம்.எஸ்.கள் அல்லது வாட்சாப் தகவல்கள் அல்லது ஈமெயில்கள்.

"நான் திரும்பவும் நம்ம கம்பெனியிலேயே சேரணும். அதுக்கு உங்க உதவி வேணும்", இவைதான் அவை நான்கும் பரைந்தவை.

நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் முன் இப்போது வேலை செய்யும் இதே நிறுவனத்தில் பி.எம்.ஓ. பணியில் இருந்தேன். இல்லையில்லை ப்ரைம் மினிஸ்டர் ஆபீஸ் எல்லாம் இல்லை. இது "ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட் ஆபீஸ்". 

அட்மின் வேலை என்று சுருக்கமாகச் சொல்லலாம். அல்லது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் வேலை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். எவர் என்ன வேலை சொன்னாலும் - காலால் இட்டதைத் தலையாற் செய்து முடிக்கும் எடுபிடி வேலை என்றும் கூப்பிட்டுக் கொள்ளலாம்.

கிட்டத்தட்ட டி.ராஜேந்தர்-தனமான வேலை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம், போஸ்டர் ஓட்டுவது, டிக்கெட் விற்பது என்று எல்லாம் செய்யவல்ல டி.ஆர். போல ஒரு ரோல்.

எம்.ஐ.எஸ்., சீட் அலகேஷன், ப்ரொக்யூர்மென்ட், ஹெட்கவுண்ட்,  பீப்பிள் என்கேஜ்மென்ட், அக்சஸ் மேனேஜ்மென்ட், இன்போஸெக், காண்ட்ராக்ட் மேனேஜ்மென்ட் என்று எதுவென்றாலும் எங்கள் ப்ராஜெக்டில் ப.தி.கொ.போ.   பெரிய தலை முதல், நேற்று வேலைக்குச் சேர்ந்த சிறுசு வரை எல்லோரும் என் மேஜையில் வந்து நிற்பார்கள்.

இதில் எல்லாவற்றிலும் முக்கியச் சேவையாக நான் புரிந்து வந்தது எங்கள் ப்ராஜெக்ட்டிற்கு ஆள் சேர்க்கும் (ரெக்ரூட்மென்ட்) உன்னதப் பணியை. மூன்றாண்டுகளில் சுமார் 400 பேர் எங்கள் ப்ராஜெக்டில் சேர்ந்தார்கள் என்பதுதான் முந்தைய பத்தியில் நான் பெருமையாய்ப் பட்டியலிட்ட எல்லா வேலைகளையும் விட பெரியதாய் நான் சொல்லிக் கொள்ளத்தக்க விஷயம். 

ப்ராஜெக்டில் பணிபுரிபவர்கள் தத்தமது நண்பர்கள், சகோதர சகோதரிகள், உறவினர்களுக்கு வேலை விண்ணப்பிக்க என் உதவியைக் கோருவதும், தகுதி உடையோருக்கு அவ்வப்போது இயன்ற உதவிகள் உரிய நேர்காணல் வழியே நடப்பதுவும் வாடிக்கை. வேலையை விட்டு வெளியே சென்றவர்கள் கம்பெனிக்கே திரும்ப வர நினைக்கும்போது அவர்களுக்குக் கதவைத் தட்டத் தோன்றுகையில் முதலில் நினைவுக்கு வருபவன் பெரும்பாலும் நானே.

இப்போது எங்கள் ப்ராஜக்டிலேயே நான் வேறு வேலைக்குத் தாவி விட்டாலும், இன்னமும் சிலர் வேலை அமர்த்தல் சார்ந்த உதவிகளுக்கு என்னை நாடுவது குறையவில்லை.

அப்படி எனக்கு வந்தவைதான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட நான்கு விண்ணப்பங்களும். நால்வரில் ஒருவர் மட்டும் என் அணியில் ( Team ) பணி புரிந்தவர். மற்றோர் அனைவரும் எங்கள் பழைய ப்ராஜெக்டில் இருந்தவர்கள், அல்லது அங்கிருந்து இதர ப்ராஜக்டுகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டு அதன் பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டுப் போனவர்கள்.

1) ரொம்ப நாளா ஒரே சம்பளம் ஜி. இன்க்ரிமென்டே போடலை. அதான் கோவத்துல பேப்பர் போட்டுட்டேன்.

2) நான் இப்போ வேலை பார்க்கற இந்த கம்பெனி இடம் பெயர்ந்து மும்பைக்குப் போகுது சார். எல்லாரையும் அங்க வர சொல்றாங்க. அது நமக்கு சரி வராது.

3) இந்த கம்பெனியில சேர்ந்து மூணு வருஷம் ஆச்சு சார். ஒரு ப்ரோமோஷனும் வரலை. அதுதான் அங்கேயே திரும்ப வந்துடலாமான்னு பார்க்கறேன்.

4) எங்க குடும்ப பிசினஸ் பாத்துக்கலாம்னுதான் பேப்பர் போட்டேன். ஆனா இப்போதைக்கு அப்பா மறுபடி வேலைக்குப் போகச் சொல்லறாரு.

இப்போதைக்கு வேலை தேடுவதற்கும், திரும்ப வர நினைப்பதற்கும் இவைதான் அவர்கள் நால்வர் சொல்லும் காரணங்கள். 

ஒரு வேகத்துல பேப்பர் போட்டுட்டேன். எங்க போனாலும் நான் வேலை பார்த்த லைன்ல இப்போ வேகன்ஸியே இல்லை - இது முதலாமவர்.

மார்க்கெட் ரொம்ப டல்லா இருக்கு போல ஜி. வெளியில எங்கயும் வேலைக்கு ஆகலை - இரண்டாமவரும், மூன்றாமவரும்.

நான்காமவர் எதற்காக போனார், என் திரும்ப வருகிறார் என்பதன் உண்மை அவருக்கு மட்டுமே தெரியும்.

இவர்களில் என் அணியை விட்டுப் போனவர் ஒரு அவசர முடிவில் வெளியே போனவர். 

ஒரு ப்ராஜக்ட் கைவிட்டுப் போன நேரத்தில், இரவுநேர வேலையில் இருந்த ஐவரில், நால்வரை வேறு அணிக்கு மாற்ற வேண்டும்; ஒருவரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தபோது - இவர் நல்ல வேலையாள் என்பதால் இவரைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற நால்வரை வேற்று அணிக்கு மாற்றினோம். அணி மாறினவர்களுக்கு பகல்நேர வேலை கிடைத்தது. அதிஷ்டம் எனலாம்.

உன் திறமைக்கு அங்கீகாரம்தாம் நாங்கள் உன்னைத் தக்க வைத்தது என்று என்ன சொல்லியும் அன்பர் சமாதானம் அடையாமல் "அவங்களை போலவே எனக்கும் டே ஷிப்ட் வேணும் ஜி" என்றார். எங்களால் தர இயலாத நிலை. வேலையை விட்டுப் போகிறேன் என்றார். சற்று பொறுத்தால், நேரம் பார்த்து ஆவன செய்கிறோம் என்றோம். அவர் கேட்கவில்லை.

இரண்டே மாதத்தில் இங்கே என்றால் இங்கேதான் வேலை வேண்டும் ஐயா என்று அரை டஜன் வாட்ஸாப் தகவல் அனுப்புகிறார் இன்று.

இதில் முதலாமவர் அவர் வீட்டின் ஒரே சம்பாத்தியர், பெண். ஒரு வீம்புக்கு வேலையை விட்டுப் போனவர் இன்று வெளியிலும் வேலை கிடைக்காமல், அவர் கடைசியாக வேலை பார்த்த ப்ராஜக்டிலும் திரும்பச் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருக்கு மட்டுமாவது உதவ இயலவேண்டும் என்பதுதான் என் இப்போதைய முனைப்பு எல்லாம்.

தாற்காலிகப் பிரச்னைகள் தரும் அழுத்தத்தில்,  ஏதோ உந்துதலில்,   ஏதோ ஒரு உணர்ச்சிவயத்தில் தாம் இருக்கும் இடம் விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு எல்லாம் என் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்....

...இந்தக் கட்டுரையை மறுபடி ஒருமுறை படித்துவிடுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...