Aug 1, 2016

உன்னுதும் என்னுது - 2முன்குறிப்பு: இந்தப் பதிவை என் முந்தைய அச்சுப்பிச்சுக் கவிதையுடன் ஒப்பிட்டும் கொள்ளலாம்

ங்கள் ஊர் கணேஷ் திரையரங்கில் கபாலி திரைப்படம் வெளியான மூன்றாம் நாளான சென்ற ஞாயிறன்று படம் பார்க்க சீட்டு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம் என்று ஐந்து  பேர் நின்று கொண்டிருந்த அந்த வரிசையில் போய் நின்றேன். முதலாம்  நபர் சீட்டு வாங்கியவுடன் வெளியே நகரத் துவங்க அவரைத் தொடர்ந்து அவர் பின்னால் நின்ற மற்ற நால்வரும் வெளியே அவருடனேயே நகர்ந்தனர். ஒரே குடும்பம் போல. ரொம்பவும் கட்டுக்கோப்பாய் ராணுவ கதியில் வளர்ந்த குடும்பம் போல. எங்கும் கலைந்து நில்லாது வரிசை என்றால் வரிசையில் நின்றிருந்தார்கள்.

சௌராஷ்ட்ராவோ, கொங்கணியோ ஏதோவொரு மேற்கத்திய மொழியைப் பேசிக் கொண்டே அதே வரிசையில் வடம் பிடித்து வெளியே போனார்கள்.

”மதியம் ரெண்டரை மணிக்காட்சிக்கு மூணு சீட்டு கெடைக்குமாங்க?”

“ஜி1, ஜி2 எந்த ஸ்க்ரீன்ல வேணும்?”, டிக்கெட் கவுண்டர் அம்மணி கேட்டார்.

“என்னங்க வித்தியாசம்?”

“அது 250 ரூபா, இது 200 ரூபா”

“மூணும் சேர்த்தே அவ்வளோதான் விலையா?”, வேண்டுமென்றேதான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

ஒரு கனத்த மௌனம்..... ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறே அம்மணி ஏனோ தன்  உதட்டை முப்பத்து மூன்று திசைகளிலும் சுழற்றினார்.

என் முதுகுக்குப் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என எட்டிப் பார்த்தார் அம்மணி.

யாரும் இல்லை.

“நீங்க யார்னா வீட்ல கேக்கணும்னா கேட்டுட்டு வந்துடுங்க. ஒரு டிக்கெட் வெலதான் நான் சொன்னது”, என்று சிரிக்காமல் சொன்னார். உதட்டிற்குள்ளே வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

”சரிங்க”, என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

கையில் எடுத்து வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை பர்ஸுக்குள் செருகிவிட்டு வண்டியை உதைத்தேன்.

“அண்ணா....”, பதினைந்து வருடம் முன் என்னைப் பார்த்தாற்போல் தோற்றம் கொண்ட ஒரு அம்மாஞ்சி அழைத்தான்.

“இது உங்க துட்டா பாருங்கண்ணா....”, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். “இங்கதான் கீழ இருந்துது”.

என் பர்ஸில் ஒரு ஐநூறும் இரண்டு நூறுகளும் இருந்த நினைவு. திறந்து பார்த்தால் ஐநூறும், ஒரேவொரு நூறும் இருந்தன. காசை வெளியே எடுத்தபோதோ அல்லது உள்ளே செருகின போதோ வெளியே விழுந்திருக்குமோ? ஆனால் அது என் பணம்தான் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. வீட்டம்மணி ஏதும் செலவுக்கு நூறு ரூபாயை எடுத்திருக்கவும் கூடும். 

ஒன்றரை செகண்ட் யோசித்தவன், “தெரியலைம்மா. சரியாத் தெரியலைம்மா”, என்றேன்.

என்னையும் விட அப்பாவி போல அவன், “இப்போ இதை என்னண்னா பண்ணட்டும்?, என்றான்.

சுற்றிமுற்றிப் பார்த்தால் யாரும் காணோம். “நீயே வெச்சுக்கம்மா. வேறென்ன செய்ய?”, என்றேன். தயக்கமாகவே நின்றான்.

“அதோ அந்த அண்ணன் கிட்ட கேக்கறேன்” - பத்தடித் தொலைவில் ஒரு சுவரோரமாக நின்று யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த ஒரு நீலச்சட்டையனை நோக்கிப் போனான்.

மொபைலில் பேசிக்கொண்டே பையனை நிமிர்ந்து பார்த்த நீலச்சட்டை, விழிகள் விரித்து தலையை மேல்நோக்கி அசைத்து என்ன என்று கேட்டு, “இது உங்குள்தாண்ணா”, என்ற கேள்விக்கு எதிர்முனையுடன் பேசுவதை நிறுத்தாமல் ஆமாம் ஆமாம் என்ற வகையில் தலையாட்டி,  கையை நீட்டி “குடு குடு” என்னும் பாவனையில் விரல்களை உள்நோக்கிப் படபடத்து சைகை செய்து பணத்தை வாங்கிக் கொண்டு சட்டைப் பையில் செருகிக் கொண்டான்.

எதிர்முனையுடன் பேசுவதை இன்னமும் நிறுத்தாமல் பையனுக்கு ஒரு சலாம் போட்டு, “நீ போயிட்டு வா”, என்று சொல்லாமல் சொல்லி பையனை அனுப்பி வைத்தான்.

பையன் ஏதோ சாதித்துவிட்ட சந்தோஷத்தில் என்னை நோக்கி சிரித்துக் கொண்டே வந்தான். “குடுத்துட்டண்ணா.... அவர்துதானாம்”.

”சூப்பர் தம்பி. குட் பாய்”, என்று நான் சொல்லி முடிக்க அந்த சௌராஷ்ட்ரக் கொங்கணிக் குடும்பத்திலிருந்து இரண்டு பெண்மணிகள் வெளியே வந்து தலை குனிந்து தரையில் எதையோ தேடத் துவங்கினார்கள்.

“^&&^%$$%^& ஆட்டோ %$$^^^^$$ பர்ஸ் ஓபன்”, என்று அவர்கள் பேசியதில் இருந்து. இங்கேதான் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் பர்ஸைத் திறந்தேன்  என்று முதல் பெண்மணி சொல்லியது விளங்கியது.

பையனுக்கும் ஏதோ விளங்கியது. மௌனமாக என்னைப் பார்த்தான்.

“இப்போ என்னண்ணா பண்ணட்டும்?”, மறுபடி என்னையே கேட்டான்.

நான் முகம் திருப்பி நீலச்சட்டையைப் பார்த்தேன். அவன் இன்னமும் தொலைபேசிக் கொண்டே இருந்தான்.

“வீட்டுக்குப் போயிடு தம்பி”, என்றேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...