Jul 30, 2015

ஓர் எளிய(னின்) அஞ்சலி

பம்மல் சங்கர்நகரில் பார்த்த ஓர் எளிய மனிதர் செலுத்தியிருந்த அஞ்சலி.

இது நான் கடந்த இரு நாட்களாய்க் கடந்து வந்த கூக்குரல்களுக்கும் சச்சரவுகளுக்கும் எட்டாமல் உயரத்தில் எங்கோ எங்கேயோ அமர்ந்திருந்தது!

ஒரு தேசமே கண்ணீர் உகுக்க விடைபெரும் மற்றுமோர் மகானை தரிசிக்க இந்த பாரத தேசம் இன்னும்  எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கத் தலைப்படுமோ!

Jul 27, 2015

வெண்கடல் வாசிப்பு

அ - அம்மையப்பம்

ஆஆஆஆஆ!!!!!

Jul 21, 2015

மறு அரிதார ப்ராப்ளம்ஸ்

என்டிடிவி’யின் சென்னை மண்டல ரிப்போர்ட்டர் பெண்மணி ஒருவர் (பெயரை மறந்துவிட்டேன்) ஒரு பத்திரிக்கை பேட்டியில் குறிப்பிட்டார் இப்படி…
 
பிரணாய் ராய் ஒருமுறை அவருக்கு திடீரென்று ஃபோன் செய்து அழைத்து, “ஹேய், ஒரு மகா கேவலமான ஒரு டிவி நியூஸ் கவரேஜ்….. எப்படி ஒரு செய்தி அறிக்கை செய்யக்கூடாது என்பதற்கான ஒரு க்ளாஸ்ஸிக் உதாரணம்…. அப்படிப்பட்ட விடியோ ஒன்றை பார்க்க விரும்புகிறாயா?” என்றாராம்.
“சொல்லுங்க பாஸ்! நிச்சயம் உபயோகமா இருக்கும். கண்டிப்பா பாக்கறேன்”, என்றாராம் இந்தப் பெண்மணி.
“நீ இன்னைக்கு நம்ம நியூஸ் சேனலுக்கு செய்திருக்கியே ஒரு செய்தி அறிக்கை. அதான் இன்னைக்கு காலையில கூட நம்ம சேனல்ல ஒளிபரப்பாச்சே! அதேதான். மறக்காம பார்த்துடு”, டொக்.
இப்படித்தான் இருந்தது சென்ற வாரம் நான் நம் தளத்தில் எழுதிய “மழையும் நீயே வெயிலும் நீயே” பதிவை நானே படிக்கும்போது. அரிதாரம் பூசி நாளான வடிவேலுவின் சொதப்பல்கள் போல… எழுதி நாளான கைகளுக்கு எழுத வருவேனா என்று அடம்.
என் பதிவை என்னாலேயே படிக்க முடியவில்லை.
பிய்த்துப் பிய்த்து அப்படி என்னதான் எழுதியிருக்கிறேன் என்று மீண்டும் இப்போது வாசித்துப் பார்க்கையில்…. “அடச்சீ”, என்று எனக்கே வருகிறது. சாரி, நண்பர்காள்! (சப்போஸ் நீங்கள் தப்பித் தவறி அந்தப் பதிவைப் படித்திருந்தால்….)
 
நான் எப்போதுமே கவனித்திருக்கிறேன், எனக்குப் பாட வரும் அளவிற்கு (aahem...)  ஒரு பாட்டைப் பற்றி எழுத வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குணம் இருக்கிறது. அதுவும் இந்த வேளையில் இப்படி எழுதப்போக அப்படி வந்து விழுந்து விட்டது.
 
குறையொன்றுமில்லை பாடலைப் பற்றி நான் எழுதியே தீரவேண்டும் என்று ஒருமுறை நட்பாஸ் அடம்பிடிக்க, நானும் எனக்கு வந்து விழுந்ததை எழுதி வைக்க…..  அது ”பகடை உருட்டத் தெரியாதவன் பரமபதம் ஆடின கணக்கில்” இருந்து தொலைத்தது அந்தப் பதிவு.
நட்பாஸ் என்னை எப்படியெல்லாம் வைதார் என்று நான் சொல்லவும் வேண்டுமோ?
என்ன சொல்ல வருகிறேன் என்றால்…. எழுத எழுததான் எழுத்து. இடையில் விட்ட இடைவெளி சுமாராகக் கைக்குப் பழகின flow’வையும் நாஸ்தி செய்துள்ளது.
இதற்கு ஒரே அருமருந்து தொடர்ந்து எழுதுவதும்…. முடிந்தவரை சோமீ டமிலனாக மீண்டும் உருமாறாமல் இருப்பதுவும்தான்.
பார்ப்போம்…..

Jul 19, 2015

கமல் டச்

 
நன்றி: Filmbeat
 
 முத்தையாவுக்கு பிள்ளையார்பட்டி பக்கத்தில் ஊர். மனிதர் செட்டிலானது தஞ்சாவூரில். இப்போது வசிப்பது நாம் வசிக்கும் பகுதியில். ஊருக்குப் போகும்போதெல்லாம் பக்கத்தில் யாருக்காவது தஞ்சாவூர் ஸ்பெஷல் சந்திரகலாவும், சூர்யகலாவும் வாங்கித் தருவார், நினைவாக ரசீது தந்து பணம் வாங்கிக் கொள்வார்.
 
“பாம்பே ஸ்வீட்ஸ்காரங்கதான் சந்திரகலா, சூர்யகலா ரெண்டையும் கண்டு புடிச்சாங்க, தெரியுமுல்ல?”, என்று ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு வாடிக்கையாளரைப் பிடித்துவிடுவார். ஊர் சென்று வந்தால் ஐந்து கிலோவுக்குக் குறையாமல் பாம்பே ஸ்வீட்சுக்கு இவர் பயனில் கல்லா கட்டும்.
 
“அந்த ஸ்டேஷன் எதுர்ல இருக்கு பாருங்க, அதுதான் ஒரிஜினல். மொதல்ல வந்தது. அதுக்கு அப்புறந்தான் ஊர் ஃபுல்லா ப்ராஞ்ச்சுன்னு ஆச்சுது. வாங்கினா அங்க வாங்கணும். பளைய பஸ்டேண்டு பக்கமும் வாங்கலாம்”, என்பார்.
 
அடையார் ஆனந்த பவனில் சந்திரகலா, சூர்யகலா போடுவதற்கென்றே பாம்பே ஸ்வீட்சில் இருந்து ஒரு ஆளைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வார். நிஜமா என்று நாம் அறியோம்.
 
“என்னருந்தாலும் அதே ஆளு போட்டாலும் நம்ம ஊரு தண்ணி விட்டுப் பண்ணினா வர்ற டேஸ்ட்டு தனி பாருங்க”, அந்த சுவை எங்கும் வாராது என்று அடித்துக் கூறுவார்.
 
பழைய பஸ்டேண்ட் சமீபத்தில் உள்ள கிளையில் அவர் மாமா ஒருத்தர் மாமாங்கமாய் மானேஜர் வேலை பார்க்கிறார் என்று என் இல்லத்தாள் எப்படியோ கண்டுபிடித்து எனக்குச் சொல்லிய பிறகுதான் விஷய சூட்சுமங்கள் எனக்கு விளங்கியது. 
 
சந்திர, சூரிய கலாக்களைத் தாண்டி அவ்வப்போது முந்திரிப் பருப்பும் சப்ளை செய்வார் மனிதர். பண்ருட்டி மட்டுமில்ல சார், தஞ்சாவூரும் முந்திரிக்கு ஃபேமஸ் என்பார். நாம் எங்கும் படித்தும், கேட்டும் அறிந்திறாத சேதி என்றாலும் அவர் வாங்கித் தரும் விலைக்கும், அதற்குக் கிடைக்கும் தரத்திற்கும் அவர் சொல்வதை நம்புவதாய்த்தான் இருக்கும்.
 
“இங்க மார்க்கெட்ல நானூறு. நம்மூர் வெல முன்னூறு. எத்தன கிலோ வேணும் சொல்லுங்க”, நம்மைக் கேட்பார்.
 
அடுத்த முறை, “பாத்தீங்கல்ல? மார்க்கெட்ல ஐநூறு ஆகிப்போச்சுது. நம்மூர்ல நானூறுதான் வெல. சொல்லுங்க, ஒரு ரெண்டு கிலோ புடிச்சிட்டு வந்துடறேன்”, ஒவ்வொரு தடவை ஊர் போகும்போதும் நம்மைக் கேட்க மறக்க மாட்டார்.
 
“அட நமக்கு எதுக்கு சார் கிலோ கணக்குல. எப்பமாச்சும் முந்திரி அல்வா பண்ணறாப் போல இருந்தா சொல்றேன். அப்போ புடிச்சிட்டு வாங்க”, என்றுவிடுவேன்.
 
அலுவலகத்தில் பேச்சுவாக்கில் இப்படி ஒரு மனிதர் இருக்கிறார் என்றும் நானூறுக்கு ஒரு கிலோ முந்திரி என்றும் நான் சொல்லப் போக, “கொழந்தைகளுக்கு டெய்லி குடுக்கறேன், நமக்கு ஒரு ரெண்டு கிலோ வாங்கித் தாங்க”, என்று கேட்டார் அலுவலக நண்பர்.
 
ரெண்டு கிலோ வாங்கி வரச் சொன்னதோடு நின்றிருக்கலாம். ரொம்பவும் விலை வித்தியாசம் இல்லை என்றால் எதற்கு வாங்க வேண்டும் என்ற நினைப்பில்... அவர் ஊருக்குப் போன கையோடு, ”விலை ஏறி இருந்தா நமக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டு வாங்குங்க சார்”, என்று ஒரு தகவலை அவர் மொபைலுக்கு அனுப்பினேன்.
 
“விலை கூடியிருந்தா எவ்ளோ தூரம் வரைக்கும் போகலாம்?”, என்று பதிலுக்கு ஒரு கேள்வி வந்தது மொபைலில்.
 
நண்பரிடம் கேட்டுவிட்டு “நானூத்தம்பது வரைக்கும் போகலாம்”, என்று பதில் அனுப்பினேன்.
 
அன்று மாலை மொபைலில் எனக்கு மெசேஜ் வந்தது. “ இரண்டு கிலோ வாங்கி விட்டேன். மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய்”.
 
வாய்விட்டுச் சிரித்தேன் என்றால் அப்படிச் சிரித்தேன் நான்.
 
து கமலின் பங்களிப்போ அல்லது ஜெயமோகன் பங்களிப்போ இல்லை ஜித்து ஜோசப் கொடுத்த கூடுதல் பங்களிப்போ; பாபநாசம் குறித்த விவாதம் ஒன்றில் சுகா இப்படிக் குறிப்பிடுகிறார் - “ இது வேற படம்ங்க”.
 
சென்ற வாரம் ராஜா-ஜாம்மின் நிகழ்வில் சந்தித்தபோது நண்பர் விஜய் (@tekvijay), “அது எப்படி சார் கமலோட கூடுதல் பங்களிப்பு இல்லாம? அது நிச்சயம் உண்டு, இருந்திருக்கும்”, அடித்துக் கூறுகிறார்.
 
த்ரிஷ்யத்தையும் பாபநாசத்தையும் ஒப்பிடுவதை பலர் விரும்புவதில்லை என்று அறிகிறேன். இளையராஜாவின் சில பாடல்களை ஒரே படத்தில் இரண்டு/மூன்று பாடகர்கள் வெவ்வேறு வகையாகப் பாடியிருப்பார்கள்.  ஒரே பாடலை இரண்டு பாடகர்கள் பாடும்போது அவரவர் காட்டும் குறிப்பிட்ட சங்கதிகள் அவரவரது திறமையின் வெளிப்பாடு. அதைத்தான் சுகா, “இது வேற”, என்கிறார்.
 
அது நல்லாருக்கு இது நல்லால்லை என்னும் ஒப்பீடு இல்லை அது. அங்கே என்ன சிறப்பு, இங்கே என்ன சிறப்பு என்னும் ஒப்பீடு. லாலேட்டன் யேசுதாஸ் என்றால்; கமல்ஹாசன் எஸ்பிபி - ச்சொயம்புலிங்கம்ல!
 
ஜித்து ஜோசப் இரண்டு படங்களுக்கும் பொதுவானவர் ஆனாலும், லாலேட்டனுக்கும்-கமலுக்கும் இடையேயான ‘சங்கதி’ வித்யாசங்களை யாரேனும் மிக விரிவாக நிச்சயம் எழுதுவார்கள். விரிவாக எழுதும் ஆள் நான் இல்லை என்பதால், நான் கவனித்த ஒரேவொரு கூற்றை மட்டும் இங்கே எழுதுகிறேன். அதை எழுதுமுன் நினைவுக்கு வந்த முன்னுரைதான் முத்தையாவின் கதை.
 
ச்சொயம்புலிங்கத்திற்குள் இருக்கும் அந்தச் சிக்கனவாதி, வியாபாரி தெறித்துத் தாண்டவமாடும் ஒரு நிகழ்வை விரிவான, விளக்கமான காட்சியெல்லாம் வைத்து விளக்காமல் கமல் காட்டும் ஒரேயொரு புருவ உயர்த்துதலில் பாபநாசம் சொல்கிறது.
 
அந்தக் காட்சியில் கதாநாயகனின் புருவ உயர்த்தல் நிச்சயம் மலையாள வெர்ஷனில் இருக்காது என்று எனக்குத் தோன்றியது.
  
தென்காசி வந்து செகண்ட் ஹாண்ட் மொபைல் வாங்குவார் கமல். அது ஒரிஜினல் வெர்ஷனிலும் நிச்சயம் இருந்தாக வேண்டும். மறுப்பதற்கில்லை.
 
கமல் செல்ஃபோன் கடைக்குள் நுழைகிறார்....
”என்ன வேணும் சார்?”
“ஒரு செல்ஃபோன்..... செகண்ட் ஹேண்ட்..... ஆயிர ரூவாக்குள்ள....”
“இதைப் பாருங்க...”
“எவ்ளோ ரூவா?”
“தொள்ளாயிர ரூவா...”
ஒரு அர்த்த புஷ்டியோடு கமல் அந்தக் கடைக்காரரை ஒரு பார்வை பார்ப்பார்.... எனினும் அந்த இடத்தில் பேரம் பேசும் மனநிலையில் அவர் இல்லை என்பதால் காசை எண்ணிக் கொடுத்துவிட்டு நகர்ந்து கொண்டே இருப்பார். இந்த வியாபாரி கமல் காட்டும் அந்த ஒரு புருவ உயர்த்தல் கமலுக்கே கமலுக்கான டீட்டெய்லிங் விஷயத்தின் பலனாய்ப் பிறந்தது என்றே நான் முழுசாய் நம்பினேன்.
 
த்ரிஷ்யத்தை நானூறு முறை பார்த்த பெருமை வாய்ந்த நண்பருக்கு ஃபோனைச் சுற்றினேன். “ஏய்யா.... அந்த செல்ஃபோன் சீன் மலையாளத்துல எப்படி வரும் சொல்லு”, என்றேன்.
 
காட்சி அதுவேதான். ஆனால், ஆயிர ரூவாக்குள்ள என்பதும் புருவ உயர்த்தலும் மலையாளத்தில் இல்லை என்றார் நண்பர்.
 
நான் ஒரு அதிதீவிர கமல் ரசிகன்தான். சந்தேகமேயில்லை.

Jul 18, 2015

விச் விட்ச்

எந்த மகாபாரத கதாபாத்திரத்துடன் பொருந்துகிறது உங்கள் பர்சனாலிடி?

எந்த ராமாயண கதாபாத்திரத்துடன் பொருந்துகிறது உங்கள் பர்சனாலிடி?

எந்த செலிப்ரிடியுடன் பொருந்துகிறது உங்கள் முகவெட்டு?

இப்படியெல்லாம் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது ஏதேனும் அப்டேட் போடுகிறார்கள். இடது பக்கம் அவரவர் படம்; வலப்பக்கம் அந்த மாபாரத, ராமாயண, செலிப்ரிட்டியின் படம்.

இன்றைக்குத் தென்பட்ட அப்டேட் - எந்த ஐபிஎல் கிரிக்கெட்டருடன் பொருந்துகிறது உங்கள் பர்சனாலிட்டி?

ஃபேஸ்புக்குள் பூந்து இன்ட்ரூட் செய்யும் அந்த ஆப்பக்காரன் இந்த பர்சனாலிட்டி விஷயங்களை எப்படி எடை போடுகிறான் என்பதுதான் நமக்கு விளங்குவதில்லை

போகிற போக்கில், "எந்த மலையாக கில்மா ஹீரோயின் பர்சனாலிட்டியுடன் பொருந்துகிறது உங்கள் அந்தவெட்டு" என எந்த ஆப்பக்காரனும் வந்துவிடக்கூடாது என்பது நம் வேண்டுதல்.

என்னது? அப்படி ஒரு ஆப்(பம்) முன்னமே இருக்குதா?

Jul 10, 2015

தீராவலி

இதை என் அம்மா சொல்வார்:

முனிவர் ஒருவர் முன் ஒரு மனிதர் போய் நின்றார்.

"சாமி, என்னை ஆசிர்வாதம் பண்ணனும் நீங்க", என்றிருக்கிறார்.

"பண்ணிட்டாப் போச்சு. கிட்டக்க வா"

"வந்தேன் சாமி"

"மொதல்ல உங்க தாத்தா சாகட்டும், அப்புறம் உன் அப்பா சாகட்டும். அதன் பிறகு நீ சாவு, அப்புறம் உன் பிள்ளை சாகட்டும். போயிட்டு வா", என்றாராம் முனி.

"என்ன சாமி? வாழ்த்து கேக்க வந்தா சாபம் தர்றீங்க?, சுர்றெனக் கோபம் ஏறியது நம்மவருக்கு.

"ஏன் கோபப்படறே? இப்போ நான் சொன்ன வரிசை அப்படியே தலைகீழா நடந்தா அதுதாண்டா மகனே சாபம்.  அப்பன் சாவை மகன் பாக்கறது சாபம் இல்லைடா, மகன் சாவை அப்பன் பாக்கறதுதான்டா சாபம். யோசிச்சு பாரு, புரியும். இப்போ எடத்தை காலி பண்ணு", என்று முடித்துக் கொள்கிறார் முனிவர்.

எவ்வளவு உண்மை!

நேற்று நான் கேள்வியுற்ற ஒரு துர்மரணச் சேதி இன்னமும் என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளையை இழந்து தவிக்கும் அந்த நல்ல மனிதரை நினைக்க நினைக்க கண்ணீர் பெருகி விக்கித்து நிற்கிறேன்.

பூ வாங்கி வா என மனைவி கேட்டார். வண்டியை எடுத்துக் கொண்டு மூன்றுமுறை கடைவீதிக்குப் போகிறேன் திரும்புகிறேன், போகிறேன் திரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் எதற்கு கடைக்குப் போகிறோம் என்றே மறக்கிறேன். துக்கம் கரைந்து ஜீரணிக்க மறுக்கிறது. இழப்பில் இருப்பவர்களின் நிலையை நினைக்கவே நடுங்குகிறது.

எல்லாம் வல்ல இறைவனின் இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான விளையாடல்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எனக்கு வேண்டுகிறேன்.

இழப்பில் தவிக்கும் குடும்பத்தாருக்கு என்னத்த ஆறுதல்  சொல்ல எனப் புரியவில்லை. ஃபோனை எடுத்து அந்த நண்பரை அழைக்கவும் மனதில் உறுதி இல்லை.

இதையும் என் அம்மாதான் சொல்லுவார். படித்தால் உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம்.....

இருந்தாலும்....

பிள்ளைகளுக்கு தயவுசெய்து மீரா என்று பெயரிடாதீர்கள். இதில் பெயரியல் சார்ந்த உதாரணங்களை நான் அறியேன், எனினும் நிதர்சன உதாரணங்களாக அரை டஜன் மீராக்களை நான் அறிவேன்.

#RIP மீரா

Jul 7, 2015

மழையும் நீயே வெயிலும் நீயே

பதின்ம வயதினில் உள்வாங்கின பாடல் என்பதாலோ என்னவோ அழகன் படத்தின் இந்தப் பாடல் என் ‘all time favorite" லிஸ்டில் இருக்கும்.
 
எஸ்பிபியின் தேமதுரக் குரல் (இந்த வர்ணனை அவர் குரலைப் பற்றி பத்தாயிரம் முறை நாம் குறிப்பிட்டுவிட்டது என்றாலும்), பாடலின் நெளிவு சுளிவுகளில் அவர் காட்டும் மந்திர ஜாலம்.... இதற்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் மென்ஷன் உண்டு.
 
ஒரு தேர்ந்த பாடகனிடம் மட்டுமே சாத்தியப்படுகிற பாடல் மொத்தத்தையும் அடக்கியாளும் தன்மை இந்தப் பாடலில் வெளிப்படும். எத்தனைப் பாடகர்கள் வந்தாலும், அவர்கள் என்னதான் நன்றாய்ப் பாடினாலும் எஸ்பிபி, யேசுதாஸ், ஹரிஹரன் போன்றவர்களுக்கு இது ஒரு சிறப்புத் தன்மை.
 
பாட்டு நல்லா பாடியிருக்காரு, சங்கதியெல்லாம் அருமையா இருக்கு, உச்சரிப்பு நச்சுன்னு இருக்கு, பாட்டுக்குப் பொருத்தமான குரல், பாவம் (bhaavam) எல்லாம் ஓஹோ, ஸ்ருதி பெசகாம, தாளத்து மேல சவாரி செஞ்சுக்கிட்டு என்னமா பாடியிருக்கான் மனுஷன் - இவ்வளவுதான் ஒரு பாடலுக்கு நாம் ஒரு பாடகருக்குத் தரவியலும் உச்சபட்ச பாராட்டு. இவை தாண்டி ஒரு பாடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் திறமை கொண்டவன் ஃப்ரண்ட்லைன் பாடகன் ஆகிறான் என கணிக்கிறேன். அந்த ஆளுமைத் திறன் தான் இந்தப் பாடலின் முக்கியக்கூறு.
 
அது பாடும் பாடகரிடமிருந்து மட்டும் வெளிப்படும் கூறு இல்லை. பாடலினூடே கேட்கும் தபேலாவைக் கேளுங்கள். யார் அதை வாசித்த கலைஞன் என்று தெரியவில்லை. பாடலைக் கட்டி ஆக்ரமிக்கும் இன்னொரு ஆளுமை அந்த தபேலா இசை.
 
தமிழில் மரகதமணி ஒரு சூப்பர் ஹிட் இசையமைப்பாளராக ஆகாதது நிச்சயம் தமிழ் இசை ரசிகர்களுக்கு நஷ்டம்தான். மனுஷர் பின்னிப்பெடலெடுத்த பாடல்களில் இந்தப் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மரகதமணி எஸ்பிபி’யை சங்கதிகள் விஷயத்தில் எப்படி வேலை வாங்கியிருப்பார் என்று அறிய ஆவல் மிகுகிறது.
 
இந்தப் பாடலின் அடுத்த முக்கியஸ்தர் புலமைப்பித்தன்
 
”ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்?” - இப்படியெல்லாம் வேறு யாருடைய பேனா எழுதியிருக்கிறது? பாடலுக்கு இசையா, இசைக்குப் பாடலா என்று வியக்கும் வண்ணம் அந்த இசையும் இந்த வரிகளும் நச்சென்று பொருந்திப் பயணிக்கும் வரிகள்..... அதற்கு எஸ்பிபி தரும் பாவ (bhava) நேர்த்தி பாடலின் அதியுன்னதச் சிறப்பு.
 
இவர்கள் அனைவரையும் தாண்டி இந்தப் பாடல் வெளிவர முக்கியக் காரணகர்த்தா ஒருவர்.....  பாடல்களைக் கேட்டு வாங்குவதில் எமகாதகரான பாலசந்தர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் பாடும் என்றால்.... பாலசந்தருக்காக மரகதமணியும், புலமைப்பித்தனும், எஸ்பிபியும் என சக எமகாதகர்கள் பிய்த்து உதறியதில் ஆச்சர்யந்தான் என்ன? 





Jul 6, 2015

அந்திப்போதின் ஆதர்சங்கள் - 1

நூறு நாற்காலிகளில்இந்த களசமும் சட்டெயும் வேண்டாம்லே.. நீ தம்றான்மாருக்க கசேரியிலே இருக்காதே... என்னோட வா! வந்துடு”, என்பாள் தர்மபாலனின் (கலெக்டரின்) அம்மா.

அந்தப் பைத்தியக்காரக் கிழவியின் இரைஞ்சுதலை வாசித்தபோது அன்று ஒருநாள் நண்பனின் வீட்டிற்குப் போயிருந்த வேளையில் அவன் தாத்தா தன் பிள்ளையிடம் கிசுகிசுத்தது ஏனோ நினைவுக்கு வந்தது.

நூறு நாற்காலிகள் தர்மபாலனுக்கும் நண்பன் வாசுவின் அப்பாவுக்கும் ஏதும் தொடர்பில்லை என்றாலும், இரண்டு பெருசுகளின் இரைஞ்சுதல்களுக்கும் ஏதும் தொடர்பு இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றும்.

தும் அசாதாரண சந்தர்ப்பங்களிலேயே வாசு வீட்டிற்கு நான் செல்வது முறை என்றாகிவிட்டது. போனவன் போன கதியில் புறப்படவும் முடியாமல், அங்கே உட்காரவும் இயலாமல் சங்கடமாகிப் போனது. நல்லவேளையாக இன்று பாபுவும் வந்திருந்தான். சுஜாதா புத்தகம் இரவல் கேட்க வந்தவன். வாசு வீட்டில் நிலைமை சரியில்லாததால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் வாடா என்ற பாவனையில் ஒருவித வலி பரவிய முக பாவத்தில் என்னை வரவேற்றான்.

வாசுவும், பாபுவும் என் பள்ளித் தோழர்கள். வருடங்கள் கடந்தும் நான்கைந்து தெரு வித்தியாசத்தில் ஒரே ஊராகிவிட்டபடியால் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இப்போது அங்கே எதற்காகப் போனேன் என்பதையும் மறந்து வாசுவின் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”ஒத்த நாடிதான் கேக்குது. மதியத்துக்குத் தாங்காதுன்னு தோணுது”, ஃபிர்தோஸ் அண்ணன் சொல்லியது.

வாசுவின் அப்பா ஃபிர்தோஸ் அண்ணனைப் பரிதாபமாகப் பார்த்தார். வரட்வரட் என்று தன் வெற்று மார்பில் நான்குமுறை தானே பிராண்டிக் கொண்டு, “ஆஸ்பத்திரிக்கி வேணா இட்டுனு போயி பாத்தா என்ன ஃபிர்தோஸு”

“ஆஸ்பத்ரிலருந்துதான கைவுட்டாங்கன்னிட்டு இட்டாந்த? இன்னா ஏதுன்னு புரிஞ்சுதுன்னா வைத்தியம் பாக்கலாம். ஒன்னியும் புரியாம நீட்டிக்கினு பட்த்துனு கெட்ந்தா இன்னானு பாத்துக்குவ?”, இது வாசு அம்மா. 
 
வாசுவின் அப்பா தன் மனைவியை ஒரு முறைப்பு கலந்த பார்வையோடு பார்க்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல், "எவ்ளோ நேரம் தாங்குன்னு சொல்லு ஃபிர்தோஸு. மேல நடக்கறத பாக்கணும்”.

"மொதலியார்.... மொதலியார்!”, ஃபிர்தோஸ் அண்ணன் தாத்தா தாடையைத் தட்டிப் பார்த்தது. ஒரு அசைவையும் காணோம். “மொதலியாருக்கு புடிச்சாப்போல விஷயம் என்னது?”

“அப்பாவுக்கு நண்டுன்னா உசுரு. மிச்சம் வெக்காம துன்னும்”

“ஆமாம், பங்குனி மாசத்துல நண்டு கொணாந்து விக்கறான் உம் மாமனாரு”,  மீண்டும் வாசுவின் அம்மா.

“அண்ணே! நாடியே ஒத்தைதானண்ணே? அதுக்கும் மேல எதான கேக்குமா என்ன?”, பாபு அண்ணனைக் கேட்டான். அண்ணனுக்குக் கேட்டதா; இல்லை பொடியனுக்குப் பதில் சொல்ல அண்ணனுக்கு விருப்பமில்லையா என்று தெரியவில்லை. தாத்தாவின் தாடையையே பிராண்டிக் கொண்டிருந்தது அண்ணன்.

”டேய்! நீயான சொல்றா”, வாசு காதில் கிசுகிசுத்தான் பாபு.
”இப்பிடிக் ஊருக்கே கேக்குறாப்புல காதுல கிசுக்காதேன்னு எத்தினி தரவடா உன்ட்ட சொல்றது? சாதாவா எல்லாருக்கும் ரெண்டு நாடி சத்தம் கேக்கும்னு நெனைக்கறண்டா”

“அண்ணன் ஆட்டோதானடா ஓட்டும், நாடில்லாம் பாக்குது?” கேட்டவனை வாசு முறைத்தான்.

“ஏண்டா, எதான சாப்பிட்டாரா தாத்தா?”

“தண்ணி ஊத்தினா கூட உள்ள போவல. ஒரு உம் ஊஹூம் சத்தம் கூட இல்லைடா அவராண்டருந்து. முழுசா ஒருநாள் ஆச்சு. அப்டியே கெடக்கறாரு”

“அப்போ ட்ரிப்ஸாவது ஏத்தணும்டா.  டேஞ்சரில்ல?”

“எல்லாம் ஏத்தினாங்க. ஒண்ணும் தேறாதுன்னுதான் அனுப்பி வெச்சுட்டாங்கடா”

மூன்றுக்கு எட்டு அகலத்தில் நீள்வாக்கில் இருந்தது அந்த இருண்ட அறை. வீட்டிற்கு வெளியே திண்ணையை ஒட்டி உள்ளே ஒடுங்கியபடிக்கு இருந்த அறை. ஒற்றைப் பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள் தாத்தாவை. ஆறரை அடி மனிதருக்கு ஐந்தரை அடி பெஞ்ச். கணுக்காலுக்குப் பிறகான மிச்சம் பெஞ்சுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அழுக்கு வேட்டியும், ஷேவ் செய்யாத தாடையுமாக இருந்தார் தாத்தா.

“தம்பி வூட்டுக்கு, சம்பந்தி வூட்டுக்கெல்லாம் சொல்லி வுட்டுடு வாசப்பா”

“இன்னா ஃபிர்தோஸு இப்டி பேசிக்கின”, தேம்பலாகக் கேட்டார் வாசு அப்பா.

“வந்தவங்கல்லாம் போறவங்கதான். வா வா! இப்டி குந்து. நான் சட்டை எட்த்தாறன். பொறப்படுவியா பாரு. அடுத்தடுத்த வேலையப் பாக்கணும், பொறப்புடு”

“ஏண்டி, கொஞ்சமான நெஞ்சத்துல ஈரத்தோட எண்ணிக்கித்தாண்டி பேசுவ நியீ”

“நெஞ்சத்துல ஈரத்தோடதான் என்னை வாழ வெச்சாங்க இந்த வூட்டுல உன் அப்பனும் ஆத்தாளும். அந்த ஈரத்த தொட்ச்சி திருப்பித் தர்றாங்க வா”

”முப்பது வர்சமா கேட்டுட்டண்டி. இன்னைக்கு பட்த்துங்குறான் மனுசன். இங்கயும் அத்தையே பேசாத. இன்னா ஃபிர்தோஸு, சீரிசாதான் சொல்லிக்கினியா?”

“என்ன வாசப்பா, இதுலல்லாம் விளையாடுவாங்களா யாராது? பல்ஸு சுத்தமா டவுனு வாசப்பா. மதியத்துக்கு தாங்கமாட்டாரு”

”சரி நீங்க பொறப்படுங்கடா. எதானன்னா நான் சொல்லுவுடறேன்”, எப்போது சொல்வான் என்று காத்திருந்தது போல், “வாடா”, எழுந்துவிட்டான் பாபு. ஒரு அரை நிமிட யோசனைக்குப் பின் நானும் நிதானமாக எழுந்து புறப்பட்டேன்.
 
மாலையில் எதேச்சையாக அந்தப்பக்கம் போவது போல் வாசு வீட்டைக் கடந்து போனேன். இருளும் அமைதியும் கவிந்து கிடந்தது வீடு. ஐந்து நிமிடம் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தேன். வீட்டில் ஏதும் சலனமில்லை..... ஏதும் சேதியில்லை எனத் தெரிந்து. திரும்பிவிட்டேன்.
 
இரவு தூங்க வெகுநேரம் பிடித்தது. தாத்தாவின் யோசனையாகவே இருந்தது.
 
வாசு அப்பா வீட்டுக்குப் பெரியவர். அவராந்டன் பிறந்தது இரண்டோ மூன்றோ தம்பிமார்கள். எல்லா வீட்டுக் கதைகளையும் போல் அண்ணன் தம்பிகள் கல்யாணம் முடிக்கும்வரை ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்கள். புளியந்தோப்பில் வீடு. தாத்தா பிஎன்சி’யில் வேலை பார்த்தவர். காலத்தின் போக்கில் அண்ணன் தம்பிகள் நகரின் ஒவ்வொரு மூலையில் செட்டிலானார்கள். மில் நிர்வாகத்திடம் கோர்ட் கேஸ் என்று மன்றாடி தங்கியிருந்த வீட்டையும் விட்டு தாத்தா வெளியில் வந்த வேளையில் பாட்டி காலமானார்.
 
பிள்ளைகள் தாத்தாவை இங்கும் அங்கும் என பந்தாடி, அவர்களுக்குள் சண்டைகள் போட்டுக் கொண்டு கடைசியில் அவரை வாசு வீட்டில் நிரந்தரமாகத் தள்ளிவிட்டனர். வாசுவின்  அம்மா எவ்வளவு பேசினாலும் வீட்டு வாசலின் கொட்டகை அறையில் வைத்தாவது மாமனாருக்கு மூன்று வேளை கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தாள். அண்ணன் தம்பிகளுக்குள் நிரந்தரச் சண்டை என்றாகிப் போனது. சித்தப்பன்கள் பல வருடங்களுக்கு வந்து பார்த்தார்கள் இல்லை.
 
சென்றமுறை வாசு வீட்டிற்குப் போனபோது தாத்தா நடமாட்டம் தளர்ந்து பேச்சு குழறி என அப்போதே ஏதோ தயாராகி விட்டிருந்தார்.  “ராகவா! என்னை புளியாந்தோப்பு கோட்டார்சுக்கு இட்டுனு போய்டேம்பா”, தன் மருமகள் பக்கத்தில் இல்லை என்பதை ஊர்ஜித்துக் கொண்டு கிசுகிசுப்பாய் மகனிடம் கேட்டார்.
 
“அங்க யார் வூடு இருக்கு உனுக்கு? எங்க தங்குவ? யாரு சோறு போடுறா? அதான் மேனேஜ்மெண்ட்டு ஆப்பு வெச்சி அனுப்பிட்டான்ல. சொம்மா படுப்பா”,
 
”நீயும் என்னோடியே வந்துடு ராகவா.... புள்ளைங்க மூணும் உம் பொண்டாட்டிய பாத்துக்கும்”
 
“அதெல்லாம் கண்டுக்காத தம்பி. பெருசுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. என்னா பேசறதுன்னே தெரியாம பேசுது”, என்னைப் பார்த்து ஏதோவொரு வலியோடு அன்று சிரித்தார் வாசுவின் அப்பா.
 
காலையில் வீட்டுக்குப் பால் ஊற்றும் அண்ணன் வழியே செய்தி வந்து சேர்ந்தது.

”தம்பி இங்க வாப்பா. ஏய் உன்னத்தாய்யா திலக்! ஏ திலக்!”, வாசுவின் சித்தப்பா என்னைப் பார்த்து கை அசைத்தது.

”என்னையா கூப்டறீங்க” என்று நின்ற இடத்தில் கேட்டேன்.

“அட வாய்யா. திலக்தான உம்பேரு?”

“இல்ல. ஹரி... ஹரிராம்.”

”ஆங், ஹரி. வாய்யா. வாசு க்ளாஸ்மேட்தான நீ? நீதான இந்த கவிதையெல்லாம் எழுதுவ. புக்குல்லாம் போட்டுருக்க”

அவரிடம் வம்படியாக எனக்குக் கவிதையெல்லாம் வராது என்று சொல்ல மனமின்றி தலையை ஒரு உருட்டு உருட்டி ஆமாம் என்றேன். ஆனால் பல வருடமாக இந்த வீடு வாராதவருக்கு என்னைப் பற்றின தகவல் எப்படித் தெரியும் என்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம்....
 
”டேய்.... நாந்தாண்டா நீ வந்தா ப்ரூஃப் பாத்து குடுப்பன்னு சொன்னேன்”, என்றான் வாசு.
 
”இந்தா, இரங்கலுக்குப் போட்டுருக்கேன் போஸ்டரு. எப்டி இருக்கு பாரு”, என்றார் சித்தப்பா.

”துணையாய் இருந்தாய்;
துணிவாய் இருந்தோம்.
உதிர்ந்து போனாய்’
அதிர்ந்து போனோம்”

என்றது போஸ்டர். வாசு அண்ணனின் கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோவை வெட்டி எடுத்தது என நினைக்கிறேன், ஃபோட்டோவில் தாத்தா அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

Jul 5, 2015

முப்பத்தியேழு டிகிரி செல்ஷியஸ்

 
 
 
தகிக்கிறது சென்னை என்றால் .அது மிகையில்லை.
 
மே, ஜூன் தாண்டி ஜூலை பிறந்து நான்கு-ஐந்து நாட்கள் ஆகியும் நிலைமை இப்படி இருப்பதுதான் படுத்துகிறது. தேவை ஒரு அவசர மழை. அவசரமாகப் பெய்து ஓயும் மழை இல்லை. நின்று நிதானித்து ஒரு நான்கு-ஐந்து மணிநேரம் பெய்யும் மழை. வருணா..... வா வா!
 
நேற்று மாலை ஏழு மணிக்கு சென்னையின் வெப்பநிலை 37* சி'யாக இருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 
டெல்லி வெப்பநிலை இப்படிக் கொடூரமாக  இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாலை ஆறு மணிக்கு மேலே டெல்லியில் 35*’க்கு மேல் வெப்பநிலை கண்டால் இங்கிருந்து பஞ்சம் பிழைக்கப் போன நம்மூர் நண்பர்களை ஆன்லைனில் பிடித்து “ என்னங்க சிவாஜி, இப்பிடி ஆகிப்போச்சி”, என்று சீண்டிக் கொண்டிருப்பேன்.
 
அன்புச் சகோதரர் மனோஜகுமாரர் பெங்களூரில் இருந்து நேற்று மாலை தொலைபேசியழைத்து - "ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா! ரொம்ப வெயில் அண்ணா பெங்களூரு! ஜூன் மாசம் கொஞ்சம் பரால்ல மாறி இருந்துச்சு. இப்போ 33* மாக்ஸிமம்..... கொளுத்துது இங்க”, என்றார்.
 
தம்பியார் சென்னையில் எட்டு வருஷம் குப்பைக் கொட்டியவர் என்பது பின் குறிப்பு.
 
"டேய்! நேர்ல பாத்தேன், மவனே கொண்டேபுடுவேன்", என்று போனை கட் மாடினேன்.
 
 
இதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையின் கலவர நிலவரம். பாத்து பதவிசா நடந்துக்கிடுங்க. நான் இதோ பப்ளிஷ் பட்டனை அமுக்கிவிட்டு எழுந்ததும் 108 சூர்யநமஸ்காரம் பண்ணலாம் என்று போய்க் கொண்டிருக்கிறேன்.
 
சூர்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!!
 
  

Jul 4, 2015

சர்வ நாசம்

 
"அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!"
 
"இல்ல அண்ணே! படத்துல அவரு என்ன பேசுதாருன்னு நீங்க பாக்கோணும்...."
 
அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!
 
"இதை புரிஞ்சிக்கிட்டா உங்க கேள்வியே வீண் அண்ணே!"
 
"அதைவுடு நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு!", "
 
இப்படி கமல் செய்த ஒரு கேரக்டரின் தீவிரத்தை, தேவையை, வீரியத்தை எல்லாம்  புறந்தள்ளிவிட்டு முழுக்க முழுக்க அவரது அவுட்லுக்கை வைத்து அவரை டேமேஜ் செய்வதாய் எண்ணி அவர் ரசிகசிகாமணி ஒருத்தரை ஒரண்டு இழுத்துக் கொண்டிருந்த ஒரு சில்லறைக் கூட்டத்தின் கான்வோ ஒன்றைப் படித்து நகைத்துக் கொண்டிருந்த போது......
 
......இந்த புத்திசாலியைவிட அதிபுத்திசாலி இன்னொருத்தரின் தளத்தில் தெரியாமல் கால் வைத்துவிட்டேன்.....
 
பாபநாசம்: சைவம் அசைவமாக மாறிய கதை" என்ற பதிவு அது.
 
இப்படியெல்லாம் போகிறது அந்தப் பதிவு......
 
//திர்ஷ்யம் நாயகன் மோகன்லால், ஜார்ஜ் என்ற கிறிஸ்துவராக நடித்திருந்தார். பாபநாசத்தில் நிச்சயம் நாயகனை இந்துவாக மாற்றி முதல் ‘நாசம்’ நடந்திருக்கும். சாட்சி கமல் நெற்றியில் வழியும் திருநீர்.//
 
மனிதர் பெரியார் வழி வந்தவர் போல. கிறிஸ்துவராக இருப்பது அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. நெற்றியில் திருநீறு வழிந்தால் அதுதான் பிரச்னை. செம்ம பகுத்தறிவு இல்ல?
 
//கத்தோலிக்க தேவாலயத்தை சாட்சியாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை, ஏராளமான இந்துக்கள் விரும்பி பார்த்து மாபெரும் வெற்றி படமாக்கினார்கள்//
 
அண்ணே! விண்ணைத் தாண்டி வருவாயா இங்க எப்டி பிச்சிக்கிட்டு ஒடுச்சுன்னு உங்களுக்கு நான் சொல்லோணுமாண்ணே?
 
//ஆனால், பாபநாசத்தில் நாயகன் இந்துவாக வருவதால், வீட்டிற்குள் இந்துக் கடவுள் படங்கள், இந்துக்கோயில், குருக்கள் (அய்யர்) என்று இந்து அடையாளத்தோடே இந்தப் படம் சுற்றிவரும். //
 
மலையாளத்தான் புத்திசாலிவே! சர்ச் வெச்சி பகுத்தறிவோட படம் எடுப்பான். இந்த கமல் பாப்பானுக்கு குருக்களும் அய்யரும்தான் தெரியும் - படத்தை பாக்காமலே என்னவொரு முன்முடிவோடவொரு பதிவு...... வார்ரேவா!
 
//தமிழில் இவர்களாக உருவாக்குகிற படத்தில்தான் நாயகனை கிறிஸ்துவராகக் காட்டுவதில்லை; அடுத்த மொழி படத்தை எடுக்கும்போதும் அதில் முதல் மாற்றம் நாயகனை இந்துவாக மாற்றுவதுதான் என்பது எவ்வளவு பெரிய மோசடி.//
 
இது நிச்சயமா இந்த உலகின் மாபெரும் மோசடி.
 
டேய் கமல்! எதுக்குடா இப்டில்லாம் மோசடி பண்ணி அண்ணனோட வயித்தெரிச்சலை கொட்டிக்கற? அண்ணன் பொங்குறாருல்ல ?
 
//திர்ஷயம் படத்தில் பிரியாணி (அசைவம்) மிக முக்கிய சாட்சியாக வரும். பாபநாசத்தில் தயிர் சாதமோ? புளியோதரையோ?//
எங்க அட்ச்சாம் பாரு எங்கண்ணன்....
என்னண்ணே! தயிர் சாதம் புளியோதரையோட நிறுத்திட்ட? அக்காரவடிசில், அகங்கார அடிசில்'ன்னு பாப்பார பதார்த்தர்மா இன்னும் நாலு எடுத்து வுடக்கூடாதா?
 
பை தி வே அண்ணே! பாபநாசம் படத்துலயும் அது பிரியாணி'தானாம்ணே! என்ன சிவாஜிண்ணே! இப்டி ஆகிப்போச்சு?
 
//இந்த இந்து மனோபாவம் ஒரு ஜாதிய மனோபாவம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிற கதையாகக் காட்டினால் கிறிஸ்த்துவரை கண்டிப்பாகச் சி.எஸ்.ஐ நாடாராகத்தான் காட்டவேண்டும். பார்ப்பனராகவோ அல்லது சைவ பிள்ளையாகவோ காட்ட முடியாது. கிறித்துவ நாடாராக வருவது நாயகனுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால்..? அதனால்தான் இந்து. இந்து என்றால்… அய்யரா?//
 
ஜாதி இல்லைன்னு சொல்ற ​​​​​​​ ​​​​​​ ---------ங்கதான்யா ஜாதி, உபஜாதி, உபஉப ஜாதின்னு எல்லா தகவலும் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க....
 
//விளம்பரங்களில் கமல் பேசுகிற வசனத்தைப் பார்த்தால் அப்படித் தெரியல. எந்தக் காலத்தில் வட்டார வழக்கை அவர்கள் பேசியிருக்கிறார்கள்?
அப்போ சைவப் பிள்ளையாகதான் இருக்க வேண்டும். நல்ல வௌங்கும் தமிழ்நாடு.//
 
அண்ணே!! நீ இன்னும் படமே பாக்கலையா? வெளம்பரத்தப் பாத்துட்டே இப்பிடி ஒரு பொங்கலா? ஒரு வெங்கலப்----  பதிவைத்தான் படிச்சுப்புட்டனா நான்?
 
கமல் சார்..... நெஜமாவே அயம் வெறிறிறிறிறி  ப்ரௌட் ஆஃப் யூ! உங்க மேலதான்..... உங்க தன்னிகரில்லா திறமையால்தான்.... எத்தனை ஜென்மங்களுக்கு உங்க மேல காழ்ப்புணர்ச்சி.....
 
ஆனா அண்ணனுகளா ! அந்த காழ்ப்புணர்ச்சி தர்ற ப்ரஷர்லையே செத்துப் போயிடப் போறீங்கய்யா....! அதான் நடக்கப் போவுது!
 
சரி விடுங்கய்யா! நான் புள்ள குட்டிங்கள படிக்க வெக்கப் போறேன்.

Jul 3, 2015

பாபநாசம் - ப்ரீவியூ

 
நன்றி: பாலிவுட்லைப்.காம் 
 
1) மோகன்லால் ஒரு ராட்சசன். அவர் நடிப்புக்கு கால் தூசிக்கு வருவாரா கமல்ஹாசன்? எதுக்கு த்ரிஷ்யம் படத்தை எல்லாம் தமிழ்ல எடுக்கற வேலை அவருக்கு?
 
2) த்ரிஷ்யம் படத்துல மோகன்லாலுக்கு ஸ்கோப்பே இல்லாத ரோல். அதுல என்ன கிழிக்கப் போறாராம் கமல்ஹாசன்?
 
3) கிறுக்குப் பய புள்ள மாதிரி அது என்னய்யா பாபநாசம் படத்துல வர்ற காருக்கு மஞ்சள் கலர்?
 
4) ஒட்டு மீசை அசிங்கமா இருக்கு கமலுக்கு.
 
5) இப்போ என்னத்துக்கு கெளதமிக்கு ஹீரோயின் ரோல் குடுக்கறாரு, அதுவும் மீனா நடிச்ச ரோல்ல?
 
6) தி வெட்னெஸ்டே ரீமேக்ல நடிச்சாரே அதுவே மொக்கை, படம் பாக்கலை நான். என் ப்ரெண்டு சொன்னான். 
 
இதெல்லாம் சில குஞ்சுக்குளுவான்கள் பாபநாசம் பட பூஜை அறிவிப்பு வந்த நாள் முதல் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் குப்பைகளின் சில  சோற்றுப்பதம்.
 
மணிரத்னம் படமா? அது புட்டுக்கும். ரஹ்மான் ம்யுசிக்கா? அது நட்டுக்கும். என்று பட அறிவிப்புகள் வந்த உடனேயே கூவத் தொடங்குவோரைக் கண்டால் ஆயாசம்தான் மிகுகிறது.
 
எப்படியோ! பாபநாசம் இதோ இன்று ரிலீஸ் ஆகிறது (டச் வுட்)!
 
கமல் + ஜெமோ வசனம் + சுகா தந்த நெல்லைத் தமிழ்ப் பயிற்சியில் கமல் தரும் உச்சரிப்பு. ஆஹா! ஆஹா! இந்த வார இறுதிவரை எப்படியும் காத்திருக்க வேண்டும்.
 
ஒரிஜினல் பாபநாசத்தை விட டப்பிங் பாபநாசம் பத்து பதினைந்து நிமிடங்கள் கூடுதலாம்..... வாவ்!!!!
 
தில்லு முல்லு - தமிழின் தன்னிகரற்ற ஒரு காமெடி படம், அந்தப் படத்தைப் பற்றி எப்போது பேசவிழைந்தாலும், "தில்லுமுல்லு என்னங்க படம்ங்கறீங்க? அதோட ஒரிஜினல் வெர்ஷன் கோல்மால் பாக்கணும் நீங்க. அதுக்கு கால் தூசுக்குக் கூட பெறாது தில்லுமுல்லு" என்பார் என் முன்னாள் அலுவலகத் தோழி.
 
அந்த ஒரு கருத்திற்காகவே பழைய கோல்மால் படத்தை என் வாழ்நாளில் பார்த்துவிடக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன். முன்னாபாய் படத்தையும் நான் பார்த்ததில்லை. பார்க்கவும் மாட்டேன்.
 
Same thing goes with மலையாள த்ரிஷ்யம்.
 
அதனால் மலையாள த்ரிஷ்யத்திற்கு ஏதும் நஷ்டமில்லை என்பதையும் நானறிவேன். 
 
 
 
 
 
 
 
  
 
 
 

Jul 2, 2015

பல்பு கதைகள் - 1

உலகத்தில் நமக்கு ரொம்பவும் பிடித்த விஷயங்களை ஒன்று, இரண்டு, மூன்றுக்குள் வகைப்படுத்தி விடலாம்.

1) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (நேராக)
2) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (மறைமுகமாக)
3) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (வேறெப்படியாவது)

இதற்கு எதிர்த்திசை ஒன்று உண்டு. யாரேனும் ஏதேனும் அறிவுரை சொன்னால்,அது எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்....”அடடே! எவ்ளோ பெரிய மகான் சொல்றாரு. அப்படியே கடைபுடிக்கணும்! யாவாரம் பண்ணனும்”, என ஒரு வெறித்தனமான உந்துதல் ஏற்படும்.

அலுவலகத்தில் ’ப்ரஸண்டேஷன் டைனமிக்ஸ்’ என்றொரு பயிற்சிப் பட்டறை. அங்கே வகுப்பு எடுக்க வந்த மகான் தான் வகுப்பு எடுத்த நேரம் போக மிச்ச மீதி நேரத்தில் நிறைய நிறைய எதிக்ஸ் அண்ட் கம்ப்ளையன்ஸ் சார்ந்த அறிவுரைகள் வழங்கத் துவங்கினார்.

“யூ நோ ஸம்திங்? ஒரு நாள்ல உலகத்துல இருக்கற ஏடிஎம் மெஷின்கள்ல இருந்து உருவப்படற ’ப்ரிண்டட் ரெஸிப்ட்’களைக் கொண்டு இந்த உலகத்தையே ஒரு ரிப்பன் போல சுத்திடலாம். அதுக்காக வெட்டப்படற மரங்களோட எண்ணிக்கை ஒரு வருஷத்துக்கு xxxxx ஆயிரங்கள். ஆகவே மக்களே! அடுத்த தடவை ஏடிஎம் போனீங்கன்னா காசு மட்டும் எடுங்க. உங்களுக்கு அவசியமா தேவைப்பட்டாலே ஒழிய “ப்ரிண்டட் ரெஸிப்ட்”  எடுக்காதீங்க.

என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் சுழன்றது. அந்த வேதவாக்கு என் மூளைக்குள் இறங்கியது.

ட்ரெய்னிங் முடித்து பைக்கை உதைத்து நேராக அடுத்த நிறுத்தத்தில் இருந்த ஏடிஎம்’மில் இதற்காகவே நிறுத்தி க்யூவில் நின்ற நால்வரிடமும், “சார் நான் ப்ரிண்ட் ரெஸிப்ட் எடுக்காம காசு எடுக்கப் போறேன். நான் முன்னால போலாமா?”, எனக் கேட்டு தர்ம அடி தவிர மற்றவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு என் டர்ன் வரும்வரை லைனில் காத்திருந்து ஏடிஎம்’மில் கார்டைச் சொருகினேன்.

Sorry you have only 55 rubees balance, get lost! என்றது இயந்திரம்.

அப்போ நான் உலகின் உன்னத மனிதன் என நிரூபிக்க சம்பளம் வரும்வரை காக்க வேண்டும் என்றாகி விட்டது.

ஓகே. காத்திருந்து சம்பளம் வந்ததும் முதல் வேலையாக மீண்டும் பைக்கை உதைத்து....ப்ளா ப்ளா ப்ளா.....! “ப்ளீஸ் கிவ் மீ ஃபைவ் தவ்ஸண்ட் ருபீஸ்” என்றேன் இயந்திரத்திடம். ”ப்ரிண்ட் ரெஸிப்ட் வேணுமா?” என்றது இயந்திரம். ‘நோ நோ நோ’, என்று மூன்று முறை சொடுக்கியதில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். அது உடனடியாக நம் மூளைக்கு உறைக்கவில்லை.

“கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர!”

ஒன்றரை நிமிடம் விடாமல் மாவு மெஷினின் சத்தம் மட்டும் கேட்டது ஏடிஎம் மெஷினில். காசு வரவில்லை. “தேங்க்ஸ் ஃபார் யூஸிங் மன்னாரன் கம்பேனி பேங்க் ஏடிஎம்”, என்று பெண்மணியின் குரல் முடித்துக் கொண்டது. முதுகுக்குப் பின்னால் பெரிய க்யூ முறைத்துக் கொண்டு நின்று கொண்டு.....

மொபைல் ஒளிர்ந்தது! 5000 ரூபாய் அபேஸ் என்று சந்தோஷ டெக்ஸ்டை மொபைல் ஸ்க்ரீன் துப்பியது.
 
"அடேய்! காசே இன்னும் வரலைடா" என்று என்னை மறந்து அலறினேன்.
 
"சார்! என்ன பிரச்னை? இனி ஹெல்ப்?", முதுகுக்குப் பின்னால் குரல். அந்த மாதிரி இந்த மாதிரி சார் என்று அவருக்கு விளக்கினேன்.
 
"ஐயோ! பணம் வரலியா? சரி ரெசிப்டை குடுங்க, பேங்க்குக்கு போன் பண்ணலாம்"
 
"ரெசிப்ட் வேணான்னுட்டேன் ஸார்"
 
"கிழிஞ்சுது கிருஷ்ணகிரி"
 
"கரெக்ட் சார் அதான் நான் பொறந்த ஊரு. அதனாலதான் எனக்கு கிரின்னு பேர் வெச்சாங்க", என்று வெள்ளந்தியாய் அவரைப் பார்த்தேன். ஏடிஎம், பணமெடுத்தல், பேங்க்குக்கு போன் செய்தல், இழந்ததை ரெகவரி செய்தல் என்னும் சூட்சுமங்கள் அறியாத core industry'யில் இருந்து எம்மென்சி உலகிற்கு வந்து சேர்ந்த புதிது.
 
"கஷ்டம்தான் சார். பேங்க்காரன் ஒத்துக்கணுமே. உங்ககிட்ட சாட்சியே இல்லியே"
 
"ஹலோ ஹலோ ஹலோ ஹலோ", என்று வெளியிருந்து கூக்குரல்கள்.
 
"சரி, பேங்க்குக்கு போன் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்"
 
"எந்த பேங்குக்கு சார் போன் பண்ணனும்?"
 
"உங்க பேங்குக்குதான்"
 
"நம்பர் இல்லியே சார்"
 
"வீட்டுக்கு போயி பேங்க் காரன் ஒரு கிட் குடுத்துருப்பான். அதுல பாருங்க. இல்லைன்னா கூகிள் சர்ச் பண்ணுங்க கெடைக்கும். எதுக்கும் ஒன் அவர் வெய்ட் பண்ணுங்க பணம் க்ரெடிட் ஆகிடும். ஆகலைன்னா பேங்க் போன் பண்ணுங்க", என்று அனுப்பி வைத்தார்.
 
ஒன்றரை மணியாகியும் பணம் அக்கவுண்டில் க்ரெடிட் ஆகவில்லை. வீடு வந்து வங்கிக்காரன் எண்ணைத் தேடி எடுத்து.....
 
"எந்த ஏடிஎம் மிஸ்டர் ராமசுப்ரமணியன்?"
 
"என் பேரு கிரி. என் அப்பா பேரு ராமசுப்ரமணியன். யூ மே கால் மீ கிரி"
 
"ஓகே மிஸ்டர் சுப்பிரமணியன். எந்த ஏடிஎம்'ல உங்களுக்கு பணம் வரலை"
 
"ஹெச்டிஎப்சி"
 
"எந்த ஏரியா?"
 
"துரைபாக்கம்"
 
"ஏடிஎம் நம்பர் சொல்லுங்க. நான் கம்ப்ளைன்ட் எடுத்துக்கறேன். நிஜமாவே பணம் வரலைன்னு ஊர்ஜிதம் ஆச்சுன்னா நாலு பிஸினஸ் டேஸ்'ல உங்க பணம் உங்க அக்கவுன்ட்டுக்கு க்ரெடிட் ஆகும்"
 
"ஏடிஎம் நம்பர் தெரியாதே"
 
"பிரிண்ட் ரெசிப்ட் எடுத்து பாருங்க. அதுல இருக்கும்"
 
"இல்லையே! நான் பிரிண்ட் ரெசிப்ட் எடுக்கலை"
 
"என்னது பிரிண்ட் ரெசிப்ட் எடுக்கலையா?" அந்தப் பெண்மணி அலறின அலறலுக்கு அவரது  கால் சென்டர் மொத்தமும் அவரை திரும்பிப் பார்த்திருக்கும்.
 
அடுத்த மூன்று நாட்கள் அலுவலகம் விடுமுறை. நான்கு பிசினஸ் டேஸ் கழித்துதான் போன பணம் வரும் - நிஜமாகவே கிழிந்தது கிருஷ்ணகிரி.
 
பின்னர் ஒருவாறாக மாதவரத்தில் இருந்த நான் வேறொருவர் மூலமாக அந்த ஏடிஎம் எண்ணைக் கண்டுபிடித்து மீண்டும் வங்கியை அழைத்து தகவல் சொல்லி..... அவர்கள் எத்தையோ எப்படியோ கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஐந்தாவது பொன்னாளில் என் பணம் எனக்குக் கிடைத்தது.
 
ஆகவே மக்களே! நல்லவனா இருங்க! ஆனா ரொம்ப நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்ணாதீங்க. It's too bad to be too good!
 
 
 
 
 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...