Dec 18, 2013

தமிழில் டைப்பலாம் வாங்க

  • Balu Ljbeppadippa tamila type panre athe solluppanna sollave mattengare
  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    மொதல்லயே ஒரு தபா சொன்னனே சித்தப்பா?
  • Balu Ljb


    enne sonneppa
  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    NHM Writer 2.0 | Indian Language Software Products & Services - New Horizon Media
    software.nhm.in
  • Balu Ljb
    ithe appadiye download pannanuma apparam enna seyya

  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    இந்த லின்க்’ல download'னு ஒரு icon இருக்கும் அதை க்ளிக் பண்ணி, இந்த சாஃப்ட்வேரை உங்க சிஸ்டத்துல இன்ஸ்டால் பண்ணுங்க. ஒவ்வொரு முறையும் உங்க சிஸ்டம் ஸ்டார்ட் ஆகும்போது இது ஆட்டோமேட்டிக்கா ஸ்டார்ட் ஆகிடும்
    எங்க தமிழ்ல டைப் பண்ணனுமோ அங்கே ஆல்ட்+2 அழுத்துங்க. தமிழ் மோடுக்கு உங்க கம்ப்யூட்டர் தயாராகிடும்
    மறுபடி இங்க்லீஷுக்குப் போக ஆல்ட்+2
  • Balu Ljb


    facebookla type panna commentla alt+2 panninaal tamilla type panna mudiyuma
    ille englishla type panna tamizha mariduma
    ithe mathiri g mailliyum tamilla type panna mudiyuma
  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    yes, முடியும்
    பாலு’ன்னு டைப் பண்ண... alt+2 போட்டுட்டு.... b a a l u'ன்னு டைப் பண்ணினா போதும்
  • Balu Ljb


    romba santhosham ithe naan use pannittu unakku thanks solren. enna parichyila pass pannanumilla
  • Balu Ljbதேங்ஸ் கிரி நான் ரொம்பவும் சந்தோஷமாய் இதை ட்ய்ப் செய்கிரேன்
  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    ஹ்ஹா. . . அயாம் ஹேப்பி
  • Balu Ljb
  • eppadi giri paravayillaiya
    en tamil typing ithai melum sirappakka sila tips koden
  • Giri Ramasubramanian

    Giri Ramasubramanian
    ஒரு டிப்ஸும் வேணாம். தொடர்ந்து டைப் பண்ணுங்க, தன்னால வந்துரும்.
    ஒவ்வொரு key'யா தனியாவும், ஷிஃப்ட் புடிச்சிக்கிட்டும், ஒரே key'யை ரெண்டு தபாவும் அழுத்திப் பார்க்கவும். என்ன ஏதுன்னு ஈஸியாப் புரிஞ்சிடும்.
    ka = க kaa = கா ki = கி kii = கீ ku = கு kuu = கூ ke = கெ kee = கே kai = கை ko = கொ koo = கோ kau = கௌ
    ng = ங் nj = ஞ் N = ண் r = ர் R = ற் l = ல் L = ள் z = ழ் q = ஃ w = ந் x = க்ஷ் sri = ஸ்ரீ
    அவ்ளோதான் விஷயமே....
  • Balu Ljb


    அதெல்லாம் சரி, முதல் எழுத்து ந வரணும்னா என்ன செய்யணும்
  • Balu Ljb

    யப்பா நீ சொன்னது சரியா புரிஞ்சது ஒகே.
  • Balu Ljb


    ரொம்ப சரியா சொன்னே. நீ ஏற்கனவே அனுப்புனதை பார்த்தே அதை தெரிந்து கொண்டேன். இருந்தாலும் நீ சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்

Nov 16, 2013

மங்கள்யான்

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா விண்கலத்தை அனுப்பினதை ஒட்டி இன்று ஃபேஸ்புக்கில் ஒன்றும் ட்விட்டரில் ஒன்றுமாக இரண்டு ‘துப்பல்களைக்” காண நேரிட்டது

ஒரு 10 லட்சம் செலவு செஞ்சு,சாக்கடைய அள்ள ஒரு மிஷின் கண்டுபிடிக்கலசெவ்வாய் கிரகத்துல என்ன வெங்காயத்த கண்டு பிடிக்க" மங்கள்யான் "
இது முதல் துப்பல்!

காவிரித்தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வக்கில்லை,செவ்வாய்க்கிரகத்துலே தண்ணீரை கண்டுபிடிக்க போகிறார்களாம் போக்கத்தவனுங்க! 
இது அடுத்தவருடையது!

எந்த விஷயத்தையும் எப்படி அணுகவேண்டும் என்று ப்ரீடிசைன் செய்து வைத்துக்கொண்டு சிந்தித்துச் சிந்தித்தே...... அப்டீ ஆயிட்டோம்.

அமேரிக்காக் காரன் செவ்வாய்க்கு ராக்கெட்டே வுட்டுட்டான்; நாம இன்னும் செவ்வாதோஷத்தப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோமுன்னு பேசறதுவும் நம்மோட இதே வாயிதானுங்களே!

ஒன்னியும் சொல்றதுக்கில்லே!

Nov 3, 2013

என்னத்த சொல்ல...

சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் உணவு இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தேன். நெருங்கிப் பழகியவரல்ல. அதுவரை சந்திக்கும் தருணங்களில் ஒரு ஹலோ சொல்லிக் கொண்டதோடு சரி. அன்றுதான் நான்கு வார்த்தைகள் பேசத் தோதாக மேஜை நாற்காலி கிடைத்தது இருவருக்கும்.

குசல விசாரிப்புகளுக்குப் பின்...

“கல்யாணம் ஆகிடுச்சா சார் உங்களுக்கு?”, கேட்டேன்.

“நல்லா ஆகிடுச்சி சார். ஹேப்பிலி மேரீட்”

“ஹேப்பிலி மேரீட்? அப்போ நீங்க ரொம்ப சமீபத்துல கல்யாணம் ஆனவரு, கரெக்ட்தானே?”

”ஆறு வருஷம் ஆச்சு சார்”

“அது சரி. ரெண்டு தகவலும் காண்ட்ரடிக்ட் ஆவுதே”

“அதெல்லாம் இல்லை சார். நீங்க? கல்யாணம் ஆனவரா?”

“அதே ஆறுவருஷம்தான் சார் நமக்கும்”

“அப்போ அங்கயும் ஹேப்பிலி மேரீட்’னு சொல்லுங்க”

“ஆங்! சொல்லிக்கலாம்”, சிரித்தேன்.

“பசங்க?”, கேட்டார்.

“மூணரை வயசு. பையன் இருக்கான்”

ஸ்கூல் போறானா, எந்த ஸ்கூல், இங்க்லீஷ் பேசறானா என்று ஒரு டஜன் கேள்விகள் தொடர்ந்தன. 

“உங்களுக்கு சார்?” என்று வினவினேன். 

”குழந்தையா?”,

”ஆ... ஆமா சார்”,  இந்த சென்சிடிவான கேள்வியை நான் பொதுவாக யாரிடமும் ரொம்ப யோசித்தே கேட்பது. இருந்தாலும் அன்று அவரது ஒரு டஜன் கேள்விகள் ஒண்ணரை டஜனாக நீட்டித்திடும் முன் அவரை நிறுத்திவிடவே அப்படிக் கேட்டே விட்டேன்.

“ஆங் ஆங்... இருக்காங்க சார். மூணு குழந்தைங்க”

“மூணு பேரா”, மில்லேனியத்தின் ஆச்சர்யம் இது என்பதால் கொஞ்சம் வாய் பிளந்தேன்.

“ஆமா சார். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்”

“ஹ்ம்ம்ம்.... பையன் கண்டிப்பா பொறந்திடணும்னு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்ய முயற்சியா?”

“அதெல்லாம் இல்லை சார். முதல்ல பொண்ணு, ரெண்டாவது பையன், மூணாவது மறுபடி பொண்ணு”

இது அடுத்த விநோதம்.

“ஆபரேஷன் பண்ண மறந்துட்டு பெறகு அவசரப் பட்டுட்டீங்களோ?, கேட்டுவிட்டு நாவைக் கடித்துக் கொண்டேன்.

”ஹிஹ்ஹிஹ்ஹீ! அதெல்லாம் இல்லை சார்”, சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.

கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு...

“சொந்தத்துலதான் சொன்னாங்க, ஒரு பையன்’தானே இருக்கான். எதுக்கும் ரெண்டு பையனுங்களா இருந்துட்டா எல்லாத்துக்கும் சரியா இருக்கும்ன்னு. அதான் மூணாவது குழந்தையும் பையனாப் பொறக்குமுன்னு ரெண்டு பொறந்த அப்புறம் ஆபரேஷனுக்கெல்லாம் போகாம முயற்சி பண்ணினோம். விதி வலியது; விளையாடிடுச்சி”, என்றார்.

என்னத்தச் சொல்வேன் நான்.....

Nov 1, 2013

ஆரம்பம்

”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” வகையறா குடும்பம், உயிர்த்தோழன், நட்புஅதிகாரம், வில்லனான ஊழல் அரசியல்வாதி, ஆருயிர் நண்பனின் மரணம், அவன் குடும்பத்தை அதே அரசியல்வாதி & கோ கூண்டோடு கொடூரமாக அழிப்பது, சொல்லத் தேவையின்றி அந்த நண்பனின் மனைவி நிறைகர்ப்பிணி, ஹீரோவும் ஹீரோயினும் (மட்டும்) விஷத்தைத் தின்று, துப்பாக்கிக் குண்டடி பட்டும் வில்லனை க்ளைமாக்ஸில் பழிவாங்குவதற்காகவே உயிர் பிழைப்பது......

வெய்ட் வெய்ட் வெய்ட்...! என்னய்யா.... இதைத்தானே காலாகாலமா தமிழ் சினிமாவுல பாக்கறோம் என்கிறீர்களா? படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்’தான் நாம் மேலே குறிப்பிட்ட உபகதையின் சுருக்கம். இதற்கு முன்னும் பின்னும் வெகு சுவாரசியமான படையலாக “ஆரம்பம்”.


’மாஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல எண்டர்டெயினர் “ஆரம்பம்”. தல ரசிகர்களுக்கு கொண்டாடத்தக்க தல-தீபாவளி ரிலீஸ் “ஆரம்பம்”. சராசரி சினிமா ரசிகனுக்கு ஒரு நல்ல எண்டர்டெய்னர்.

மங்காத்தாத்தனமான நாற்பதுகள் கெட்டப்பில் மீண்டும் அஜித். ஸ்டைலில் மனிதர் பின்னியெடுக்கிறார். குறிப்பாக கூலர்ஸை அவர் ஒவ்வொரு காட்சியில் அணியும் அழகும், டுக்காட்டியை துபையில் ஓட்டும் ஸ்டைலும்.... ஓஹ்ஹோ போங்கள். பை திவே, அயாம் நாட் அஜித் ஃபேன்; கேட்ச் மை பாய்ண்ட்?

முதல் பாதியின் ஒன்றேகால் மணிநேரம் ‘ஜிவ்’வென்று பறக்கின்றது. டிபிக்கல் விஷ்ணுவர்த்தன் ஹைஃபைத்தனம். சுபா’வின் திரைக்கதை ஜாலம் முதல்பாதியில் மிளிர்கிறது. அயன் அசத்தலுக்குப் பிறகு மாற்றானில் சறுக்கிய சுபா, ஆரம்பத்தில் மீண்டும் ‘திரைக்கதை” ராஜாக்கள் என நிரூபிக்கிறார்கள்.

ஆர்யா - தாப்ஸி ஜோடி படம் மொத்தமும் அடிக்கும் அலம்பல்... ஓஹோ! அந்த ஆர்யா ஃப்ளாஷ்பேக்கில் அவருக்கு மேக்கப் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

அப்புறம் அப்புறம்.... நயன் படம் முழுவதும் இருக்கிறார். அவர் அஜீத்துக்கு ஜோடியா இல்லையா என்ற பேச்சே படத்தில் இல்லை. ஒரு வில்லனை ஏமாற்ற அவனிடம் ஆடும் ரொமான்ஸ் நாடகத்தைக் கூட தல’விடம் நயன் ஆடுவதில்லை என்பதை நினைக்கையில் நமக்கு விம்மிப் புடைத்துக் கொண்டு கண்ணீர்க் கொட்டுகிறது. அய்யகோ!

அஜித், நயன், ஆர்யா, தாப்ஸியைத் தாண்டி... கிஷோர், அதுல் குல்கர்னி, தெலுகு “ராணா”, மஹேஷ் மஞ்ச்ரேக்கர் , ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, முரளி ஷர்மா என்று ஒரு டஜன் பாத்திரங்கள் படத்தில். எல்லோருக்குமான ரோலை குழப்பம் ஏதுமின்றி சரியாக இணைத்த இண்ட்டாக்டான திரைக்கதையை மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தொண்ணூறுகளில் தமிழில், தெலுகுவில், கன்னடத்தில் சக்கைப் போடு போடாத ‘சுமா ரங்கநாத்’ ஒரு சின்ன வில்லி வேஷம் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில்.

அப்புறம்....அப்புறம்.... நல்ல படம்! தீபாவளி பட்சணம் தின்றுவிட்டு, பட்டாசு வெடிக்கும் கேப்பில் ”ஆரம்பம்” ஒரு நல்ல தியேட்டரில் பார்த்துவிடுங்கள்!

வொர்த் வாட்சிங்குங்கோ!

Oct 30, 2013

சுட்டகதை



தமிழ் சினிமா உலகில் ஸ்டார் வேல்யூ ஏதும் இல்லாமல் சின்ன கல்லு; பெத்த லாபமு என்னும் வகையில் அவ்வப்போது சில பரீட்சார்த்த சினிமாக்கள் வருவதுண்டு. நான் பார்த்த உதாரணங்களாக இரண்டினைக் கூறினால் தமிழ்ப்படம், வ’க்வாட்டர் கட்டிங் இரண்டு படங்களையும் சொல்வேன். கிட்டத்தட்ட அந்த இரண்டு படங்களையும் கலந்து கட்டியடித்ததுதான் சுட்டகதை.

ஸ்பூஃப் வகைப்படம் என்ற வகையில் ‘தமிழ்ப்பட(ம்)’ வகையிலும், வித்தியாச கான்செப்டாக ‘வ’க்வாட்டர் கட்டிங்கையும்’ சுட்டகதை நமக்கு  நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.

மலையோர கிராம ஊர், போலீஸ் ஸ்டேஷன், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஹீரோக்கள் பாலாஜியும், வெங்கடேஷும்; தூங்குமூஞ்சி இன்ஸ்பெக்டர் நாசர், ஆதிவாசி இன ஹீரோயினி லக்ஷ்மிப்ரியா, அவளது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் துர்மரணமடைய அவரை யார் சுட்டார் என்கிற முடிச்சை அவிழ்க்கும் ‘சுட்ட’ கதைதான் ‘சுட்டகதை’.


படத்தின் பெரிய ப்ளஸ் படத்தின் பின்னணியிசையும் கான்செப்டின் தேவைக்கேற்ப ப்ரசெண்ட் செய்யப்பட்ட படத்தின் டோனிங்கும். படத்தின் பின்னணி இசையின் பெருமை சொல்ல படம் நெடூக வரும் அந்த பியானோவின் ‘’’ட்ட்ட்ட்ட்ட்டொய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்” ஒலியே போதும். வ’க்வாட்டர் கட்டிங்கின் ஃப்ரேம்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தவை. இடது மூலையிலிருந்து டேபிள் லேம்ப்பை வைத்து லைட்டிங் அடித்தாற்போல் “வ” படத்தின் லைட்டிங்கை அமைத்திருப்பார்கள். “சுட்டகதை” விஷயத்தில் object மீது மட்டும் பெரும்பாலும் லைட்டிங் படுகிறது; இன்னபிற விஷயங்கள் அவுட் ஆஃப் ஃபோகஸில். படத்தோடு ஒருவர் ஒன்றிவிட முயன்றால் பின்னணியிசையும், படத்தின் ஒளிப்பதிவும் நிச்சயம் அவருக்குத் துணை செய்யும். ஆனால் அப்படி ஒன்றிவிடச் செய்யத்தக்க ‘சுவாரசிய திரைக்கதை’ படத்தில் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்வி.  (இந்த இசை, ஒளிப்பதிவு டெக்னிக்காலிட்டிகளுக்கெல்லாம் டெக்னிக்கல் பெயர்கள் நமக்குத் தெரியாது. ஏதோ கவனித்ததைச் சொல்கிறோம், ஹிஹ்ஹீ)

படத்தின் இயக்குனர் சுபு’வுக்கு செம்ம க்ரியேட்டிவ் மைண்ட் என்பது படம் முழுவதும் தெரிகிறது. டீக்கடைப் பெயர்ப்பலகையின் சின்ன நையாண்டியில் தொடங்கி, காமிக்ஸ் பிரியர்களை ஏதோ பெரிய இலக்கிய வாசக தோரணையில் காட்டுவது வரை படம் முழுவதும் இவரது காமெடி தோரணங்கள். அந்தத் தோரணங்களை இணைக்கும் திரைக்கதை நூலினை சுபு ஸ்திரமாகப் பண்ணியிருக்கலாம் என்பதுதான் நம் ஆதங்கம்.

பாலாஜி, வெங்கி இருவருமே கிடைத்த ரோலை நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெங்கடேஷுக்கு வாய்ப்புகள் அமைந்தால் அவர் நல்ல காமெடியனாக தமிழில் வலம் வரலாம். நல்ல பாடி லேங்குவேஜ் மனிதரிடம். லக்ஷ்மிப்ரியா இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவர் என்பது உபதகவல்.

படத்தின் அடுத்த பெரிய ப்ளஸ் படத்தின் நீளம். ஜஸ்ட் ஒன்றே முக்கால் மணிநேரத்தில் முடிந்துவிடுகிறது படம். அந்த ஒன்றே முக்கால் மணிநேரம் மக்களை தியேட்டரில் உட்கார வைக்கத் தக்க சுவாரசியத்தை இயக்குனர் படத்தில் வைத்திருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

தனித்தனியே சூப்பர் திறமை வாய்ந்தவர்களாக அமைந்த இந்தப் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவருக்கும் அடுத்தடுத்த படங்களில் நல்ல ‘ப்ரேக்’ அமைய வேண்டுமென்று ஜக்கம்மாவை வேண்டிக் கொள்வோம்.

Sep 29, 2013

நாலு கர்ப்பிணிகளும் ஒரு டொக்டரும்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்.....


ரொம்பவே அழகான ஃபோட்டோக்ராஃபி, நான்கு அல்லது ஐந்தே ஐந்து ஷூட்டிங் ஸ்பாட்கள், தேவையான அளவு மட்டுமே நடிக்கும் நடிக நடிகைகள், ரொம்பவெல்லாம் அலட்டல் இல்லாத; நீட்டி முழக்காத ஸ்க்ரிப்ட், தேவைக்கு சில பாடல்கள், கொஞ்சம் நாடகத்தனம் - இதுதான் Zachariayude Gharbinikal. மகப்பேறு மருத்துவர் லால்’தான் படத்தினிண்ட வயசான ஹீரோவாணு. அவர் சந்திக்கும் நான்கு கர்ப்பிணிப் பெண்களின் கதைதான் இந்தப் படம்.

படத்தின் ஸ்பெஷல் மென்ஷன் ஃபாத்திமாவாக வரும் ரீமாவின் சௌந்தர்யமும், அவர் அனியனாக வரும் அந்த த்தடியனின் (அப்படித்தான் மலையாளத்தில் படிக்கணும்:) ) காமெடிகளும். ரீமாவின் காதலனாக வரும் அஜு வெர்கீஸ்.... வெய்ட் வெய்ட்.... அஜுவோ பிஜுவோ அவரை விட முக்கிய மென்ஷன் படத்தின் இசையமைப்பாளர். அந்த ஆல்பம்’தனமாக "வெயில்...ச்சில... கிளி”  என்ற வார்த்தைகள் கொண்டு வரும் பாடல் அள்ளிக் கொண்டு போகிறது.

சீட்டின் நுனிக்கெல்லாம் உங்களை டைரக்டர் எங்கேயும் எப்போதும் வர விடுவதில்லை. நன்கு ரிலாக்ஸ்டாக படத்தைப் பார்க்க வைக்கிறார். (படத்தின் க்ளைமாக்ஸில் வெளிப்படும் ஒரு நிஜம் நம் முகத்தில் அறைகிறது - அது மட்டும் ஒரு பெரிய விதிவிலக்கு). நான்கு பெண்களின் கர்ப்பங்களிலும் ஒவ்வொரு விதத்தில் ஏதோவொரு விதிமீறல் இருக்கிறது.  அவற்றின் பின்னணியில் புனையப்பட்ட கதைப் பின்னலில் காம்ப்ரமைஸும் இல்லை; க்ளிஷேவும் இல்லை; ‘ஸாரி கொஞ்சம் ஓவர்’த்தனமும் இல்லை. டைரக்டரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

ஸ்டார் வேல்யூ இல்லாமல், பன்ச் டயலாக் இல்லாமல், தளுக்கல்கள் குலுக்குகள் இல்லாமல், சந்தான சூரிகளின் சூர மொக்கைகள் இல்லாமல் எல்லாம் கூட நாமும் இங்கே படம் எடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் கமர்ஷியல் நிர்பந்தங்கள் புடைசூழ இந்தத் திரையுலகம் உலா வருவதால் Zachariayude Gharbinikal போல எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஏதும் செய்து கொள்ளாத படங்கள் இங்கே வரத் தொடங்கி விட்டனவா எனத் தெரியவில்லை.

அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களுக்கே “ஒன்னால தூக்கம் கெட்டுப் போச்சு” போன்ற பாடல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. எனிவேய்ஸ்.... இந்தப் படத்தினால் யாரேனும் நம்மவர்கள் ஈர்க்கப்பட்டு இதைத் தமிழுக்குத் தருவித்தால் லாலிண்ட கேரக்டரிலே நாமெல்லாம் பிரகாஷ்ராஜைக் காணத் நேரலாம். ”ஒன்னால தூங்கங் கெட்டுப் போச்சி” ஒன்றை ஏதேனும் ஒரு கர்ப்பத்தின் கொசுவத்திச் சுழற்றலில் திணிக்கத் தலைப்படும். அதிலே ஆரு நடிப்பா என்று நான் இப்போ யோசிச்சிங்.... ஹிஹ்ஹீ!

....and why I inserted "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு" in the beginning?  You watch the movie no...!

Sep 22, 2013

என்னத்த சொல்ல....


நண்பர் ஒருவர் வழக்கமாகத் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் நிறம் அன்று கொஞ்சம் மாறிப்போயிருந்தது.

“என்ன சார்? கலர் வேறயா இருக்கே?”

“என்னது?”

“உங்க நெத்தியில? ஏதோ நெறம் மாறிப்னாப்ல இருக்கே?”

“அது கொஞ்சம் அவசரத்துல இட்டுண்டு வந்துட்டேன் சார். கையில எடுத்த... இந்த....அது.... அது எதோ பழையசு போல., கொஞ்சம் நெறம் தப்பிடுத்து. ரொம்ப எல்லோயிஷ் ஆயிடுத்தா?”

“________ நெறமாட்டம் இருக்கே?”, என்றேன்.

“அப்படியா?”

“இப்ப அசப்புல பாத்தா உங்களை ___கலை’ன்னு சொல்லலாம்”

“என்னது?”, அடுத்த க்ஷணம் இடது கையால் தன் நெற்றியிலிட்டதைப் பரபரவென்று அழித்துக் கொள்கிறார்.

“சார்! லலாட ஷூன்யம் ஸ்மசான துல்யம்பா”

“என்ன சார் அது?”

“பாழும் நெத்தி மயானத்துக்குச் சமமாம்”

“அது பரவால்லை சார். இதுதான் படாது”

பிகு: என்ன செண்ட்ரல் கவர்மெண்ட்; என்ன ஸ்டேட் கவர்மெண்ட். சப்செக்ட்லேயே இன்னும் இந்த அடிதடி இருக்குதே....!

Sep 4, 2013

முயற்சித்தேன்! முடியவில்லை!

மூன்றே வரியில்
ஒரு கவிதை எழுதச்
சொன்னார்கள்

முயற்சித்தேன்
முடியவில்லை!

Aug 16, 2013

என்னத்த சொல்ல!

இரண்டு தினங்களுக்கு முன்.....

ஹேய்! பதினொன்ற ஆச்சு, இன்னும் நீ வீட்டுக்கு கெளம்பலியா? என் டெஸ்குக்கு வாயேன், அந்த பெண்டிங் டாஸ்க் முடிச்சிடுவோம்.

பாஸ், பொறப்பட்டுட்டேன் பாஸ். மதியம் பன்னண்டு மணிக்கு உள்ள வந்தது. வீட்லருந்து ரெண்டு போன் கால் வந்தாச்சு. நாளைக்கு பாக்கலாமே?

எங்க வீட்லல்லாம் என்ன தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்கய்யா. நீயும் உங்க வீட்ல சொல்லிடு. இந்த மாதிரி இந்த ப்ராஜக்ட்ல சேந்துட்டேன். இனி எல்லாம் இப்டித்தான்னு சொல்லிடு.

<மனசுக்குள்: இருந்தாலும், டெய்லி பன்னண்டு அவர்’ன்னா ரொம்ப ஓவர் பாஸ்.>

இன்று காலை:

கொஞ்சம் இருங்க தம்பி. வழுக்கி விடப் போவுது. தண்ணிய வெளிய தள்ளி வுட்டுடறேன். 

சரிங்க.

மழைய வாங்கறதா, போங்கறதான்னே புரியலை. கொஞ்சம் செருப்பை வெளிய விட்டுடறீங்களா? ஒவ்வொருத்தரா கொண்டுவர்ற சேத்தைத் தொடைச்சி தொடைச்சி மாளல.

நோ ப்ராப்ளம்.

ஐநூறு நோட்டுதான் வரும் தம்பி, பாத்துக்கங்க. இன்னைக்கு பப்ளிக் ஹாலிடே வேற. எப்போ பணம் கொண்டு வந்து ஃபில் பண்ணுவாங்களோ.

ஓ! சரி சரி. என்ன, காலை நாஸ்தாவா? வீட்லருந்தே கொண்டு வந்துடுவீங்களா?

பின்ன? நாம வாங்கற நாலணா சம்பளத்துக்கு ரெண்டு வேள வெளிய சாப்பிட முடியாதுங்களே.

ஓ... எத்தன அவரு ட்யூட்டி?

காலைல ஏழு மணிக்கு வந்தா, ராத்திரி ஏழு மணி வரைக்கும்.

பன்னண்டு மணி நேரமா?

ஆமாங்க தம்பி...

அட, நம்ம சாதி நீங்க..... என்னைக்கு வீக் ஆஃப்?

அப்டின்னா?

சனி, ஞாயிறு?

சனியுமில்ல, ஞாயிறுமில்ல. பொங்கலுமில்ல, தீவாளியுமில்ல. பதினஞ்சு நாளைக்கு ஒருதடவ டொண்டி ஃபோர் அவர் ப்ரேக் கெடைக்கும். அதான் நமக்கு லீவு.

புரியலியே?

புரியவேணாம் தம்பி. நம்ம கஷ்டக் கதை உங்களுக்கு எதுக்கு. இட்லி சாப்டறீங்களா? 

இல்லை இல்லை சாப்பிடுங்க. நான் வர்றேன்.

ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே தம்பி....

ஹ்ம்ம்ம்ம்..... ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே!

Aug 12, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள எண்டர்டெயினர் பார்த்த திருப்தி.

சாதாரணக் கதைதான். வடக்கத்தி வாலிபன் + தெக்கத்திப் பெண் மும்பை டு சென்னை ரயிலில் சந்திக்கிறார்கள். தெக்கத்திப் பெண்ணின் கிராமத்திற்கு சந்தர்ப்ப வசத்தில் வந்து சேர்கிறான் வடக்கன். க்ளைமாக்ஸுக்கு ஆறு சீன்களுக்கு முன் ஹீரோயினிக்குக் காதல் வருகிறது; அதற்கு நாலு சீன்களுக்குப் பிறகு ஹீரோவுக்குக் காதல் பிறக்கிறது. 

அப்போ, அதுக்கு மின்ன என்ன நடந்துச்சு? அதுதான் சென்னை எக்ஸ்ப்ரஸ்.

படத்தின் மூன்றாவது ரீலுக்குப் பிறகு, இடையில் இரண்டு காட்சிகள் வந்துபோகும் ஒரு சர்தார் போலீஸ்வாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், திரையில் ஹிந்தி பேசும் ஒரே கதாபாத்திரம் ஷாரூக்கான் மட்டுமே. துணைக்கு சந்தானம் வகையரா போல யாரையும் அச்சுபிச்சுவென சேர்த்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தப் படத்தின் எண்டெர்டெயின்மெண்ட்டையும் தன் தலையிலேயே சுமக்கிறார் ஷாரூக். ஷாரூக் ரசிகர்கள் நிச்சயம் தலையில் வைத்துக் கொண்டாடத்தக்க படம்.

”உனக்குத் தமிழ் தெரியுமா?”, என சத்யராஜ் கேட்க... “ஏய் ஏய் ஏய்.... அம்மாவப் பத்தியெல்லாம் தப்பாப் பேசாத”, என்கிறார் ஷாரூக் < தமிழ் தேரி மா >.  படம் முழுவதும் கிச்சுக்கிச்சு மூட்டும் இந்தவகை நகைச்சுவைகள்.

ஹிந்தி - தமிழ் கலப்பினை ஜாக்கிரதையாகவே கையாண்டிருக்கிறார்கள் ஷாரூக்கும் ரோஹித் ஷெட்டியும். நையாண்டி நகைச்சுவை எதையும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ரெஃப்யூஜி, இந்தியன், ஸ்ரீலங்கன், டெர்ரரிஸ்ட் என்று விவரம் புரியாமல் சில அவைக்குறிப்பிலிருந்து நீக்கத்தக்க சீன்கள் தவிர்த்தால் நெருடல் இல்லாத படம் (அந்தக் காட்சிகளை தமிழ் இணைய புலாசுலுக்கிகள்* பார்க்காமல் இருக்கக் கடவது).
<*உட்கார்ந்த இடத்திலேயே குதிப்பவர்கள்>

ஏழரை அடி ரெஸ்லரை க்ளைமாக்ஸில் அடித்து வீழ்த்தும் ஐந்தரை அடி ஹீரோ, அடி வாங்கிவிட்டு, “நான் ஒடம்புல பலசாலி; நீ மனசுல பலசாலி”, என்று சொல்லும் அதே ரெஸ்லர், ’இந்தா எம்பொண்ணக் கட்டிக்கோ என்று க்ளைமாக்ஸில் மனம் மாறும் சத்யராஜ் என்ற க்ளிஷேக்களைத் தவிர்க்க வேறேதும் உத்தியைக் கையாண்டிருக்கலாம் ஷாரூக். இந்த காலத்து இளரத்தங்களைக் கதை டிஸ்கஷனில் சேர்த்திருந்தால் ஐடியா தந்திருப்பார்களே சார்?

சத்யராஜ் படத்தில் மற்றும் ஒரு கேரக்டராகவே வருகிறார். பில்டப்பிற்குத் தகுந்த கதாபாத்திரம் இல்லை அவருடையது. நம் எதிர்பார்ப்பிற்கு அவர் போர்ஷனில் தீனியில்லை எனலாம்.  

படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் ரயில் பிடிக்கும் அறிமுகக் காட்சியில் ‘தமிழ்ப்பெண்’ என்ற அறிமுகத் தேவையால் பாவாடை தாவணியில் வருகிறார் தீபிகா. அவர் ரயில் இறங்கும் வரை ஓவியர் ஜெயராஜின் ஓவியத் தனமாய் மாராக்கு  விலகியே இருக்க, என்னாடா இது வம்பாப்போச்சு டமில் பெண்களின் அறிமுகத்திற்கு என நாம் விசனப்பட, அதெல்லாம் அறிமுகத்துக்கு மட்டும்தான் என்று ஆசுவாசம் தருகிறார் இயக்குனர். படத்தின் இன்னபிற காட்சிகளில், பாடல்கள் தவிர்த்து, ரீஜண்ட்டாகவே வருகிறார் தீபிகா. 

ஆக, குடும்பத்துடன் பார்க்கத்தக்க குட்டும்ப்பச் சித்திரம்.

இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

கானாபிரபா சொன்னதைத்தான் நானும் சொல்லுவேன்:
தமிழ் உச்சரிப்பு, பல படங்களின் தழுவல் என குறைகளைப் பட்டியல் போடலாம் ஆனால் படம் முடிந்த பின் இரண்டரை மணி நேரம் கிடைத்த கலகலப்பான தருணங்களே மேலோங்கி நிற்கின்றன
பை தி வே, பதிவின் ஆரம்பத்தில் வரும்  பிரபந்தப் பாடல் இடைச்செருகல் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஹிந்திப் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகளாக வருகின்றது.

வாழ்க தமிழ்! வளர்க திராவிட வேதம்!

Jul 30, 2013

#365RajaQuiz

கடந்த ஒரு வருடமாகவே இணையத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறேன். இரவுநேர அல்லது அதிஅதிகாலை நேர வேலைக்குப் போகத் தொடங்கியதால் பர்சனல் விஷயங்களுக்கே சிலப்பல நேரங்களில் நேரம் ஒதுக்க முடியாமல் போக, சோஷியல் லைஃப்’க்கான ஒதுக்கல் சாத்தியமே இல்லாமற்போயிற்று. 

ஆம்னிபஸ் தளத்தில் வாராவாரம் எழுதியதுதான் இணையத்துடனான என் தொடர் தொடர்பு. ஆம்னிபஸ்சில் பிஸியாக இருந்ததுவும் ஒருவிதத்தில் இணையவிலகலுக்குக் காரணமாயிற்று.

இந்த விலகலிலும் ஆம்னிபஸ் பிஸினஸ்சிலும் நான் பெரிதும் இழந்தது என்று பார்த்தால் அன்பர் ரெக்ஸ் நடத்திய 365 ராஜா க்விஸ்களைத்தான்.

கடந்த ஞாயிறன்று சேகர்-சுஷிமா சேகர் இல்லத்தில் வெகுஜோராக இந்த க்விஸ் போட்டிகளின் ஃபைனல்ஸ் நடந்தது. அதாவது 365'வது கேள்வி - பதில் அரங்கேற்றம் அன்று நிகழ்ந்தது.

இரண்டு டசன் ராஜ பக்தர்கள் புடைசூழ அங்கு இல்லமே இசையால் நிரம்பியிருந்தது. பிரசன்னா என்ற அன்பர் அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். ஸ்ரீவத்சன், (இன்னொரு) பிரசன்னா, இவர் என்று எல்லோரும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இந்த நிகழ்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஜேயெம்மார் சாரின் டோலக்கு அடி அன்றைய ஸ்பெஷல். ஆர்.கோகுலின் பாடல்வரிகள் நினைவாற்றல் பேராச்சர்யம். 

திருவாசகமும் இளையராஜாவும் குறித்து சொக்கன் பேசினார். என் திருவாசக ஸிடி முழுக்க ராஜாவின் குரலே ஒலித்தது என்பதற்கு சொக்கனை விட்டால் வேறு யாரால் சரியான காரணத்தைச் சொல்ல முடியும்? 

என் பங்குக்கு நானும் ஒரு பாட்டு பாடினேன்.

செவிக்கு உணவு குறையாதபோதே வயிற்றுக்கும் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. என்னுடன் அகில் வந்திருந்தான். சமையலறையில் அவன் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தான்.

எது இருந்ததோ எது தெரிந்ததோ, என்னுள் அன்று ஒன்றேயொன்று நிகழ்ந்தது. கூட்டுத் தியானங்களின் போது ஒரு அதிர்வு (vibration) தோன்றும். அது உங்களை இருவேறு நிலைகளில் நிறுத்தும். ஒன்று மனதில் நிலையிலாதவொரு அலை அடித்துக் கொண்டேயிருக்கும், இன்னொன்று மனம் எப்போதும் காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறைவை, நிம்மதியை அந்த அதிர்வு உங்களுக்கு அந்தத் தருணத்தில் தரும். அன்றைய கூடலில் நான் இந்த அதிர்வை அனுபவித்தேன். 

அன்றைய நிகழ்வையொட்டி நிறைய பேர் பதிவுகள் எழுதிவிட்டார்கள். பலரும் இன்னமும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். எல்லாவற்றிலும் @amas32 எழுதிய ட்விட்லாங்கரின் ஒற்றைவரியொன்று எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது...

6. There are lots of good people. You just have to look for them.

Hats-off maa...

வயலின் வாசித்த அன்பருக்குத் தமிழ் தெரியாது என்றார்கள். ராஜாவின் பாடல்கள் மட்டுமல்லாமல் பிஜிஎம் எல்லாவற்றையும் அட்சரத்திற்கு அட்சரம் அத்துப்படியாக வைத்துக் கொண்டிருந்தார் அந்த அன்பர். நம்மூரில் நாம்தான் ராஜாவைக் (என்னையும் இதிலே கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறேன்) கிண்டலடிக்கிறோம்.

நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த ”தச்சிமம்மு” ஸ்ரீவத்சன், பிரசன்னா மற்றும் சேகர் தம்பதியினருக்கு நன்றிகள் ஆயிரம் :)


Jul 29, 2013

இன்னொரு டெலிகாலர்

நான் இண்டர்நெட்டுக்கு மட்டுமே உபயோகிக்கும், இதுவரை யாரிடமும் நம்பரைப் பகிராத என் மொபைலில் ஒரு இன்கமிங் அழைப்பு வந்தது. ஓகே, இது கண்டிப்பாக ஏதேனும் மார்க்கெட்டிங் அழைப்புதான் என்று தயாராக பச்சை பட்டனை அமுக்கினேன்.

”ஸாஆஆஆர்ர்ர்ர்ர்ர்....”, தேமதுரக் குரல்....

ஆஹ்ஹா! அத்தேத்தான்.... ரெடியாவுடா கொமாரு....

“ஹலோ”

”நான் பஜாஜ் அலியான்ஸ்லருந்து பேஸரன் ஸ்ஸார்....”

“பேசுங்க மேடம்”

“நாங்க random முறைல ஆயிரம் நம்பர்ஸ் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஆஃபர் தர்றோம்”

“ஓ! நல்ல விஷயமாச்சே!”

“உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இலவசமா தரப் போறோம் சார்”

“ஆஹா! சூப்பர். ஒரு லட்ச ரூபா எனக்கு எப்போ தருவீங்க?”

“ரூபா உங்களுக்குத் தர மாட்டோம் சார்”

“அப்போ யாருக்குத் தருவீங்க?”

“பாலிசி உங்களுக்குத் தருவோம் சார்., அதோட ஸம் அஷ்யூர்ட் ஒன் லாக் ருப்பீஸ்”

“புரியுது புரியுது. சூப்பருங்க. கலிகாலத்துல காலடிச்சு ஒரு லச்ச ரூவா இனாமாத் தர்றீங்கன்னா ஊர்ல ஏதோ சுனாமிதான் வரப்போவுது”

“கரெக்ட் சார். இல்லை இல்லை சார். இது ஒரு ப்ரமோஷன் ஆஃபர் சார்”

“ஏதோ ஒண்ணு. நல்லது நடந்தா சரி. பாலிஸி எப்போ எனக்கு தருவீங்க?”

“இதுக்கு உங்களுக்கு மூணு தகுதி இருக்கணும் சார்”

“மூணு படம் நான் பாத்திருக்கேனுங்க”

“இல்லை சார். த்ரீ எலிஜிபிலிடி க்ரைடீரியன்ஸ்”

“ஓ... ஓகே சொல்லுங்க....”

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மனைவி அருகில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு... “இல்லியே.... இன்னும் ஒரு தபாகூட ஆவலைங்க”

“ஓ.... உங்க அப்பாவுக்கு என்ன வயசு?”

“அவர் போவும்போது அவருக்கு அம்பது. இப்போ இருந்திருந்தா எழுபது”

“ஆ.... உங்க வீட்ல கல்யாணமானவங்க வேற யார் இருக்கா”

“பையனுக்கு மூணுவயசுதான், இன்னும் கல்யாணம் ஆகலை. அது தவிர்த்து பை டீஃபால்ட் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் ஆனவங்க”

“பையனா? கல்யாணம் ஆகலைன்னு சொன்னீங்க?”

“கல்யாணம் ஆகலைன்னுதானேங்க சொன்னேன். பையன் இல்லைன்னா சொன்னேன்”

“சார், நீங்க என்னை கலாய்க்கறீங்களா”

“அடடே! புரிஞ்சிடுச்சா உங்களுக்கு..... சூப்பர் போங்க”

“சார், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?”

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு சொல்லுங்க. அப்ப நானும் சொல்றேன்"

"சார், நாங்க எங்க பர்சனல் டீடைல்ஸ் எல்லாம் ரிவீல் பண்ணக் கூடாது சார். நேம் கூட ஸ்யூடோ நேம்லதான் பேசுவோம்”

”ஆ... நெல்லாக்குதே கத.... நாங்க எங்க டீட்டேல் எல்லாம் சொல்லுவோம். நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?”

“ஓகே சார். இந்த பாலிஸி உங்களுக்கு வேணுமா வேணாமா?”

“வேணாம்”

“ஓகே சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது இருந்தா ரெஃபர் பண்ணுங்களேன்”

“எனக்கு இருக்கற ஒரே ஃப்ரெண்ட் என் வைஃப்தான். அவங்க நம்பர் தரவா?”

க்கூங் க்கூங்....க்கூங் க்கூங்....

Jul 21, 2013

பாமாலை.... வாலிக்கு....


Jul 12, 2013

தோ னி டா..............

Thanks: ESPNCricinfo

Jul 1, 2013

இண்டர்வியூ எக்ஸ்பிரஸ்

பதினைந்து வருடங்களுக்கு முன் வேலை தேடியலைந்த காலகட்டத்தில் ஒரு இண்டர்வியூவில்...

“பர்ச்சேஸ் ஆஃப் டேபிள். இதுக்கு ஜர்னல் எண்ட்ரி சொல்ல முடியுமா உங்களால?”

“டேபிள் அக்கவுண்ட் டெட்டார் டு கேஷ்”

“டேபிளை எதுக்கு டெபிட் பண்ணினீங்க?”

“ஏன்னா டேபிள் ஈஸ் என் அஸெட் சார்”

“நான் அஸெட் பர்ச்சேஸ்ன்னே சொல்லலியே”

“பட், ஃபர்னிச்சர் ஈஸ் அஸெட் சார்”

“என்னோட பிஸினஸே டேபிள் வாங்கி விக்கறதுன்னா?”

“ஓ! யூ ஆர் ரைட் சார்”

“தென், ஹவ் டிட் யூ க்ரெடிட் கேஷ்?”

“அது ரியல் அக்கவுண்ட் சார். வெளிச்செல்வதற்கு வரவு - க்ரெடிட் வாட் கோஸ் அவுட்”

“நான் கேஷ் பர்ச்சேஸ்ன்னும் சொல்லலியே”

“ஓ ரியல்லி?”

“ஸீ, கேள்விக்கு பதில் தர்றதுக்கு முன்னாடி அந்தக் கேள்வியைப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்றது ரொம்ப அவசியம். கேள்வி புரியலைன்னா நாலு எதிர்க்கேள்வி கேட்டு தெளிஞ்சிக்கிட்டு பதில் சொல்லுங்க. திஸ் ஈஸ் மை ஃபீட்பேக் டு யூ. தேங்க்ஸ். ஆல் தி வெரி பெஸ்ட்”

“தேங்க்ஸ் சார்”

பத்து வருடங்களும் நான்கைந்து கம்பெனிகளும் கடந்துவிட்ட பின்னர், பெஞ்சில் அமர்ந்திருந்த பொன்னாள் ஒன்றில் என் அப்போதைய காபந்து மேனேஜர்,

“கிரி, போய் கிருஷ்ணாவைப் பாருங்க. அவர் டீம்ல ஏதோ ஓபனிங் இருக்காம்”

எந்த டீமிலும் “நோ வேகன்ஸி, நோ வேகன்ஸி” என்று துரத்தப்பட்ட விரக்தியில் ஓரமாய் ஒதுங்கி எக்ஸெலில் ஏதோ கலர் கலராய் டிசைன் வரைந்து கொண்டு வரைந்து முடித்தது குரங்கா கழுதையா என்று யோசித்துக் கொண்டிருந்தவன் வாரிச் சுருட்டிக் கொண்டு கிருஷ்ணாவைப் பார்க்க ஓடினேன்.

இந்த டீம்லயாவது ஒரு இடம் கிடைச்சிடணும் ஆண்டவா என்று உச்சப் பதட்டத்தில் தடதடத்துக் கொண்டிருந்தது இதயம்.

“இப்போ என்ன லெவல்’ல இருக்கீங்க?”

“ப்ராஸஸ் அனலிஸ்ட்”

“இதுக்கு முன்ன எந்த டீம்ல இருந்தீங்க?”

“யூ.எஸ். மார்ட்கேஜ் டீம் கிருஷ்ணா”

“ஓ... அப்போ நீங்க அக்கவுண்ட்ஸ் பேக்-க்ரவுண்ட் இல்லையா? எனக்கு அக்கவுண்ட்ஸ் பர்ஸன்தான் வேணும்”

”நான் காமர்ஸ் க்ராஜுவேட்தான் கிருஷ்ணா. ப்ராபர் அக்கவுண்டிங்ல வேலை பார்த்ததில்லை. ஸ்டில், ஐ கேன் மேனேஜ்.

“ஓ! ஓகே, அப்போ... பர்ச்சேஸுக்கு ஜர்னல் எண்ட்ரி சொல்லுங்க பார்ப்போம்”

உள்ளே மணியடித்தது.... கேள்வி கேள்வி...

“என்ன பர்ச்சேஸ் கிருஷ்ணா?”

“எனிதிங். ஜஸ்ட் கிவ் மி ஜர்னல் எண்ட்ரி ஃபார் பர்ச்சேஸ்”

“நோ நோ! ஐ வாண்ட் டு நோ வாட் ஈஸ் பர்ச்சேஸ்ட்”

கொஞ்சம் சிரித்தவாறே, “இதோ.... இந்த டேபிள்ன்னு வெச்சிக்கங்களேன்”

மீண்டும் அதே டேபிள்.... ஹ்ம்ம்ம்ம்

“டேபிள் வாங்கினது அஸெட்டாவா இல்லை ரீசேலுக்கா?”

“டேபிள் எதுக்கு வாங்கி விக்கப் போறீங்க? அது அஸெட்தானே?”

“ஓகே ஓகே! அது கேஷ் பர்ச்சேஸா இல்லை க்ரெடிட் பர்ச்சேஸா கிருஷ்ணா?”

ஆர் யூ க்ரேஸி என்ற பார்வையைத் துப்பியவாறே...” எதுவானாலும் பரவால்லை சொல்லுங்க”, கடினமாக வந்து விழுந்தது குரல்.

நான் கேட்டு முடித்த கேள்விகளிலும், கிருஷ்ணாவின் உஷ்ணப் பார்வையிலும் இப்போது எனக்கு கணக்குப்பதிவியலின் அத்தனை அக்‌ஷரங்களும் திடீரென மறந்து போக....

“ம்ம்ம்ம்ம்ம் வந்து.... க்ரெடிட், டெபிட்.... ஹ்ம்ம்ம்ம்”

“சொல்லுங்க.... வாட் ஈஸ் டெபிட். வாட் ஈஸ் க்ரெடிட்”

“பர்ச்சேஸ்.... கேஷ்.... ”

“பர்ச்சேஸ் டெபிட்டா? இல்லை க்ரெடிட்டா?”

கேஷ்.... க்ரெடிட்.... பர்ச்சேஸ் கேஷ்....அயாம் சாரி கிருஷ்ணா.... அயாம் ஸ்டக்....“

“நான் ஏதும் கஷ்டமான கேள்வியே கேக்கலியே. ரேஷியோ அனலைஸிஸ், ப்ரொவிஷன் ஃபார் டவுட்ஃபுல் டெட்ஸ்’ன்னு போனேனா என்ன? பர்ச்சேஸ் அக்கவுண்ட் டெபிட் டு வெண்டார் அக்கவுண்ட்.... தட்ஸ் தி எண்ட்ரி. ஆம் ஐ ரைட்”

வெட்கம் பிடுங்கித் தின்றது என்னை. ச்சே..... எத்தனை எளிமையான கேள்வி. இதைப் பதட்டத்தில் கோட்டை விட்டோமே என்று.

”ஓகே.....  வெண்டாருக்கு அமவுண்ட் ரீபே பண்ணினா அதுக்கு என்ன எண்ட்ரி?

மீண்டும் பதட்டம். மூளையினுள்ளே ப்ரோட்டானோ, எலக்ட்ரானோ அல்லது நியூட்ரானோ அது என்ன எழவோ, அது அணுவளவும் நகர மறுத்தது. ஏனோ தெரியவில்லை அவர் சொன்னதை அப்படியே ரிவர்ஸ் அடித்தேன்....

”வெண்டார் அக்கவுண்ட் டு பர்ச்சேஸ் அக்கவுண்ட்”

“ஓ மை காட். இப்படிப் பண்ணினா பர்ச்சேஸ் அக்கவுண்ட் நல்லிஃபை ஆகிடுமே. பேங்க் அக்கவுண்ட் இல்லை நீங்க க்ரெடிட் குடுக்கணும்?”

“ஓ ஸாரி கிருஷ்ணா. அயாம் டோட்டலி ஸ்டக்”

“தட்ஸ் ஃபைன். நீங்க போகலாம். நான் உங்க மேனேஜர் கிட்ட ஃபீட்பேக் தந்துடறேன்”

இங்கே முதல் சொதப்பலில் வேலை கிடைக்காமல் போனது. இரண்டாவது சொதப்பலில் பெஞ்சில் மேலும் சில வாரங்கள் அமர நேர்ந்தது. இவை ஜஸ்ட் இரண்டே இரண்டு உதாரணங்கள்தான். இண்டர்வியூவில் நான் செய்த சொதப்பல்களை எழுதினால் அதற்கு ஒரு புத்தகம் போதாது.

இப்படிப்பட்ட சொதப்பல் பார்ட்டியான என்னிடம் நான் இப்போது வேலை செய்யும் டீமின் ரெக்ருட்மெண்ட் ரெஸ்பான்ஸிபிலிடி தரப்பட்டிருக்கிறது என்பதுதான் சுவாரசியத்திலும் சுவாரசியம்.

இப்போது ப்ரொஃபைல்களை நான் ஷார்ட்லிஸ்ட் செய்கிறேன். வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை முதல் ரவுண்ட் இண்டர்வியூ செய்கிறேன் அல்லது ஆபரேஷன் மேனேஜர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டு ஃபைனல் லெவல் இண்டர்வியூக்களை நடத்துகிறேன்.

அதே அக்கவுண்டிங் ப்ரொஃபைல்கள். நான் வேலை செய்வது அக்கவுண்ட்ஸ் பேயபிள் (P2P) டீம் என்பதால் நான் ஒவ்வொரு இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளிலும் தவறாமல் வந்து விழும் ஒரு கேள்வி உண்டு...

அது....

“வாட் ஈஸ் தி ஜர்னல் எண்ட்ரி ஃபார் பர்ச்சேஸ்?”


Jun 18, 2013

ட்ராஃப்டில் தூங்கிப்போன டெல்லி கேஸ்...

முன்குறிப்பு: இந்தப் பதிவை எழுதி ட்ராஃப்டிலேயே வைத்துவிட்டு தூங்கிவிட்டேன் போல.... இப்போதுதான் பார்த்தேன். காசா பணமா, அமுக்குடா பப்ளிஷ் பட்டனை...!

அலுவலக கேண்டீனில் ஏதோவொரு ஆங்கில செய்தி சேனல் ”டெல்லி ரேப் கேஸ் டெல்லி ரேப் கேஸ்” என்று கூவிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவெளியில் பிரகாஷும் பாலாவும் எனக்கு இடவலமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலிய முதலாளிகளுக்கு உழைக்கத் துவங்கிய பின் நள்ளிரவோ அதிகாலையோ...  ஏதோவொரு மூன்று மணிக்கு எழுந்துத் தொலைய வேண்டியிருக்கும் சோக நிகழ்வை அசைபோட்டவாறு, ”இப்பிடி ஆகிப் போச்சே நம்ம பொழப்பு?” என்றபடி கொட்டாவியை மென்று கொண்டு தூக்கத்தைக் கொன்ற வண்ணம் அவர்களிருவருக்குமிடையே இரண்டு காதுகளையும் வேறு வழியின்றி கொடுத்துக் கொண்டிருந்தேன்.

“இந்த மீடியாவுக்கு இது இன்னொரு செல்லிங் ப்ராடக்ட் ஆகிடுச்சி இல்ல?”

“ஏ அப்டி சொல்லாதப்பா”

“பின்ன எப்டி சொல்லணும்?”

“இந்த சம்பவத்துக்கு முன்ன டெல்லில 2012’ல எத்தனை ரேப் நடந்துச்சாம் தெரியுமா?”

“எத்தனை”

“நூத்தி இத்தனாம் சொச்சம்”, ஏதோ ஒரு எண்ணைச் சொல்கிறார் பாலா. நான் அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

“அதுக்கு என்னப்பா இப்போ?”

இப்படியே இன்னமும் பத்து நிமிஷம் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

கடைசியாக மறக்காமல் கரெக்டாக பாய்ண்ட்டுக்கு என்னிடம் வருகிறார்கள்.

“சார், நீங்க இதுபத்தி எதுவும் எழுதலையா?”

”எது பத்தி?”

“இந்த டெல்லி ரேப் கேஸ்”

“இல்லைங்க! இப்பல்லாம் சரியா எழுத ஒக்கார்றதில்லை”

“ஒக்காரணும் சார். எழுதணும். தட்டிக் கேக்கணும். மீடியான்னா என்னான்னு காட்டணும்”

"யாருது மீடியா?”

“நம்மள்துதான் சார்?”

“இங்க யாரு நம்மளுன்றது?”

“நீங்க எழுதறீங்கன்னா நீங்களும் மீடியாதான் சார்”

“நான் எழுதினா நாப்பது பேர் படிச்சா அதுவே ரொம்ப அதிகமப்பா”

“அந்த நாப்பதுல ஒரு பாரதி இருந்துட்டா? ஒரு மரப்பொந்துக்கு அக்கினிக் குஞ்சைத் தர்றதா உங்க எழுத்து இருந்துட்டா? வெந்து வேக்காடாகிடும் சார் நாடே!’ 

”அது சரி!”, மீண்டும் அசுவாரசியம். மறுபடி கொட்டாவி. 

”அத்தனை வீரியமெல்லாம் கொண்டு எழுத நமக்கு வாராதப்பா”

“வரும் சார்! வரும்! எனக்கு கோவம் வருது சார்! இப்போ ஓங்கி அடிச்சா இந்த மேஜையே ஒடைஞ்சிடும். அவ்ளோ ஆத்திரமா வருது. எனக்கு எழுத வந்தா உங்களைக் கேப்பேனா? நானே சரசரன்னு எழுதிட மாட்டேன்?”

”சரி! என்ன எழுதணும்னு சொல்லு...  அப்படியே எழுதிடறேன்”

“உங்ககிட்ட சொன்னனே! வாங்க எந்திரிங்க போகலாம். யோவ் பாலா! எந்திரிய்யா”

அந்த அத்தியாயம் முடிந்தது. அவரவர் அவரவர் வேலையை வழக்கம்போல் பார்க்கப் போய்விட்டோம்.

அதன்பிறகு அன்று முழுக்க பாலா சொன்ன அந்த நூற்று சொச்ச எண்களே என் மனசில் ஓடிக் கொண்டிருந்தது. நம் நாட்டின் தலைநகரில் மட்டும் இப்படி இத்தனை அநியாயங்கள் நடக்கிறதென்றால்? இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாத்திரமே. பதிவு செய்யப்படாமல் போனவை, பதிவு செய்ய வேண்டாம் என்று விடப்பட்டவை என்று எத்தனை எத்தனை இருக்கும்?  இந்த சம்பவத்திற்கு முன்பு நடந்த அந்த மற்ற நூற்று சொச்சத்தில் இதைவிடக் கொடூரக் கதைகள் இருந்திருக்கக் கூடும். 

நாம் தவறு செய்த அந்த ஆறு பேரைத்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு அவசர அவசரமாக ஏதும் கொடூர தண்டனை கொடுத்து ஒரு சராசரி மனிதனின் பழிக்குப்பழி மனோபாவத்திற்குத் தீனி போட்டுவிடத் துடிக்கிறது நம் மனது. 

நூற்று சொச்சம், கூடவே இந்த ஒன்று. இத்துடன் முடிந்துவிடுவதில்லை விஷயம். இது இன்னமும் தொடரும். தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?

Jun 14, 2013

கிழக்கு வாசல்

நன்றி: B.Ramesh <http://www.flickr.com/people/9219615@N03>


உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.

காலவெள்ளம்

தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
(தண்ணீர் தேசம் - வைரமுத்து)


நகர நெரிசலில் அரை வாளி, கால் வாளி நீரைப் பார்த்துப் பழகிய ஒரு சின்னஞ்சிறுவன் ஒருநாள் முதன்முறையாக கடற்கரைக்கு வந்திருந்தான். தன்னெதிரே பரந்து விரிந்த நீர்ப்பரப்பைப் பார்த்து இரண்டு நிமிடங்கள் வாய்ப்பூட்டி நின்று விட்டு அடுத்து என்ன தோன்றியதோ ஐந்து நிமிடங்களுக்கு பி.எஸ்,வீரப்பா தொனியில் பகபக’வென சிரித்துக் கொண்டேயிருந்தான். ”அத்தனை நீர்” என்பது அந்தச் சின்னக் கண்களுக்கு மட்டுமல்ல உலகில் ஒவ்வொருவருக்குமே அப்படி ஒரு அதிசயம்.

பொதுவாகக் கடலும் யானையும்தான் இந்த உலகின் தீராத அதிசயங்கள் எனச் சொல்வார்கள்.

ரயிலுக்கும் இந்தத் தீரா அதிசயப் பட்டியலில் ஒரு காலத்தில் இடம் இருந்தது. ஊரெங்கும் நீராவி எஞ்சினின் புகைமணத்தைப் பரப்பி விட்டபடி நம்மைக் கடக்கும் ரயில்களின் கருப்புவெள்ளை நினைவுகளை மின்ரயில்களின் வருகையில் தொலைத்து வருடங்கள் ஆயிற்று. அதன் பின்னர் ரயில் மீதான காதல் மக்களுக்குக் கரைந்து கொண்டே வந்து, இப்போது அந்த ரயில் நம்மூரில் கண்டா முண்டாவென விபத்துகளை ஏற்படுத்திக் கடலுக்கும் யானைக்கும் அடுத்ததாக அந்தப் பட்டியலில் இருந்த தன் பெயரைத் தானே நீக்கிக் கொண்டது.

கான்க்ரீட் காடாகிப் போன சென்னையில் நான் அறிந்த வரையில் யானையை பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பார்க்க முடியும். அல்லது எப்போதாவது புறநகர்ப் பகுதிகளில் உலாவரும் ”பிச்சை நடை” நடக்கும் யானைகளைப் பார்க்கலாம்.

ஆக, ரயிலையும் யானையையும் தவிர்த்தால் மிச்சமிருக்கும் மற்றொரு மாபெரும் தீராத அதிசயமான சமுத்திரத்தைத் தன்பால் கொண்ட பெருமை சென்னையைச் சேரும். 2004’ன் சுனாமியின் பேரழிவுகளைக்  கொஞ்சம் கஷ்டப்பட்டு மறந்தோம் என்றால் சென்னையின் கடல் புராணத்தைப் பேசிக் கொண்டே போகலாம்.

மெரினா திரைப்படத்தில் சென்னைக் கடற்கரையின் வாழவைக்கும் / ஓட வைக்கும் கதைகளைச் சொல்லியிருப்பார் பாண்டிராஜ். அது சினிமாவின் ஃப்ரேம். நிஜத்தின் ஃப்ரேம் இன்னும் அழகாகப் பல இடங்களிலும், பயங்கர விகாரமாகச் சில இடங்களிலும் இருக்கலாம். இருக்கிறது.

அண்ணாவும், எம்ஜிஆரும், உழைப்பாளர் சிலையும், பீச் ரோடில் இருந்து கடலலை வரை கால் புதைய ரசனையோட நம்மை நடைநடக்க வைக்கும் மணற்பரப்பும், மதுரைப் பயல்களின் தெற்கத்தித் தமிழில் "நைநைநை” நச்சரிப்பில் கிடைக்கும் சுண்டலும் கைமுறுக்கும், வெயில் வேளைகளில் படகு மறைவுகளிலும் வெயில் சாய்ந்தால் வெட்டவெளி மணல்வெளியிலும் அங்க அடையாளங்களைச் சரிபார்த்தபடியும் இருக்கும் காதலர்களும், ”ஸ்ஸோஸியே” என்று கையில் இரும்புக் குச்சி தாங்கிய கைரேகை ஜோசியம் பார்க்கும் பெண்மணிகளும், பலூன் சுடும் கடைகளும், நான்குநாள் விற்காத சமோசா சுண்டலைச் சுடச்சுட உங்கள் தலையில் கட்டத் தயாராய் இருக்கும் பயல்களும், வாங்கும்போது பத்து ரூபாய் சொல்லிவிட்டு தின்றுமுடித்தபின் ஐம்பது ரூபாய் பிடுங்கும் ஐஸ்வண்டிக்காரர்களும்,   கார்க் ஓபனர் வைத்து கிலீர் ஜிலீர் சத்தத்துடன் கூல்ட்ரிங்க் விற்கும் தள்ளுவண்டிகளும், சோழி விற்கும் கடைகளும், மீன்படத்துடன் மீன்வாசமும் காற்றினில் ஆடவிடும் மீன்பஜ்ஜிக் கடைகளும், ரஜினி கமல் த்ரிஷாவுடன் உங்களை நிற்கவைக்கவல்ல திறந்தவெளி ஃபோட்டோ ஸ்டுடியோக்களும், மணற்கேணி தோண்டி  நீரிறைத்து விற்பவர்களும் என மெரினா பீச்சில் சொல்லவல்ல சுவாரசியங்கள் ஆயிரம் உண்டு.


இந்தக் காரணம் அந்தக் காரணம் என்றல்ல, என்னத்துக்காகவேனும் கடற்கரை வரலாம். தண்ணியடிக்கக் காரணமா தேவை? சந்தோஷம், கொண்டாட்டம், துக்கம், வெறுமை, சும்மா ஜஸ்ட் லைக் தட், அப்புறம்.... அது இருக்கு ஆயிரம் காரணங்கள். அதுபோலத்தான் பீச்சாங்கரை விஜயங்களும்.

காதலியுடன் கடலை போடும் காரணங்கள் பொதுவாக இங்கே முன்னிலை பெறுகின்றன. டீஸண்டான காதல்கள் கடற்கரைப் பக்கம் ஒதுங்குவதாக நாம் அறிவதில்லை. க்ளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்து அரங்கேற்றங்களும் இங்கே ம்ம்ம்ம்ம். பங்குனி மாதத்தின் மட்டமதியச் சூரியச்சுடர் இவர்களுக்கு மட்டும் மார்கழி மாதத்து இரவின் குளிர் நிலவு. ஒரு துப்பட்டாவின் நிழல் போதுமானதாயிருக்கிறது வெயில் மறைக்கவும் அதன் மறைவில் மறைத்தவைகள் பகிரவும்.

கல்யாணம் ஆன புதுசுகளின் விஸிட்டிங் லிஸ்டில்  சினிமாவுக்கு அடுத்ததாக பீச் உண்டு. கூட்டுக் குடும்ப அன்பர்கள் தலைமுடிபற்றி இளம்மனைவியர் உலுக்கப் பழகும் இடம் இதுவே.

நண்பர்களுடன் வரும் இளந்தாரிகள் சட்டை கழற்றி இவனை அவன் தூக்கிப்போட்டு அவனை இவன் தூக்கிப் போட்டு தெரியாத நீச்சலை அடித்து முடிக்கச் சிறந்த இடம்.

குழந்தைகள், மாலைச் சிற்றுண்டி வகையறாக்கள் மற்றும் பெரிய பெட்ஷீட், சகிதம் வரும் ஐந்து வருடங்கள் கடந்தக் கல்யாணஸ்தர்கள். பாதுகாப்பான இடைவெளியில் பெற்றெடுத்தவைகள் பாதுகாப்பான இடைவெளியில் பந்து, பட்டம் என ஏதோ ஆடிக்கொண்டிருக்க ஒரு சிக்கனமான தொட்டுக்கோ தொடைச்சிக்கோ வகையில் இருபத்தியிரண்டாம் சின்ன ஹனிமூன் அரங்கேற்றலாம்.

தனிமைத் தண்ணியடி பார்ட்டிகள் தீர்த்தவாரி முடிந்தபின் தனிமையில் வந்து நெட்டுக்குத்தல் பார்வையுடன் முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீருடன் சிலப்பல மணிநேரங்கள் அமர்ந்திருக்கும். பேசாத் தனிமை சிலது. பேச்சுடன் தனிமை சிலது.




கடலலை தீண்டாத நிலப்பரப்பின் தமிழ்மக்கள் பஸ் கட்டிக்கொண்டு சென்னை வந்தால் மதியத்திற்குப் பின் மாலை கவியும் வேளை வரை கொண்டு வந்த பஸ்சை எங்கேனும் ஓரத்தில் பார்க்கிவிட்டு நேரம் செலவிட வருவது மெரினாவிற்கே.

நமக்குத்தான் சங்கூதுதல் சாயுங்காலச் சடங்கொலியாகவும் அபசகுணமாகவும் ஆகிவிட்டது.சங்கு காற்றின் நுண்கிருமிகளை அழிக்க வல்லது என்பது அறிவியற்பூர்வ உண்மை. வீட்டு வாசலில் நம் வீடுகளில் சங்கைக் கட்டித் தொங்கவிடும் வழக்கு இப்போது ஒழிந்துவிட்டது.  வடஇந்தியர்களுக்கு சங்கின் ஒலி பூஜை மணியோசை. வெற்றி முழக்க ஒலி. மெரினா வந்தால் மறக்காமல் அவர்கள் ஷாப்பிங் லிஸ்டில் சங்கு இருக்கும். விரல்களுக்கிடையே கச்சிதமாய்ப் பொருத்தி அமர்த்தி, ஊதிப்பார்த்து, விலைபேசி இவர்கள் வாங்கும் அழகே அழகு.

உபி, மபி, ஹிபி என வடக்கத்தியர்கள் இங்கே வந்தால் கடல்மாதா தரிசனம் காணாமல் திரும்புவது இல்லை. நாற்புறமும் நிலத்தால் சூழ்ந்த பகுதியிலிருந்து வருபவர்களுக்கு கடல் என்பது ஒரு பேரதிசயம். நீரில் இறங்கினதும் சமுத்திரத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள் நம்மவர்களில் ஒண்ணேமுக்கால் சதம் என்றால் வடக்கத்தியர்களில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதத்தினர்.

அடடே! இத்தனை சொன்னவன் அந்த உப்பும் மிளகாய்த் தூளும் தூவின கீறல் விழுந்த ஒட்டு மாங்காய்களை மறந்தனனே! விடு ஜூட்! நான் கடல்மாதாவை தரிசிக்கப் போய் வருகிறேன், மெரினாவோடான உங்கள் சுவாரசிய அனுபவங்களை எனக்கு எழுதுங்களேன்....

Jun 12, 2013

வெஸ்டின்’டீஸர்’கள்

நேற்றைய ஒருநாள் போட்டியில்....
”எலே! தர்ட் அம்பயரயா ரெஃபரல் கேட்ட? அவரும் அவுட்டுன்னுட்டாருலே” என்று ரோஹித்தைக் கிண்டலடிக்கும் வெஸ்ட் இண்’டீஸர்கள்

நன்றி: படத்தைப் பிரசுரித்த ஈஎஸ்பிஎன்-க்ரிகின்ஃபோ & லின்க் தந்த அண்ணன் கணேஷ் சந்திரா

Jun 10, 2013

ரோஸ்டட் ரைஸ் பேஸ்ட்

தமிழ் இணைய ஜாம்பவான்கள் சிலர் அவ்வப்போது ஏதேனும் ஆங்கில வார்த்தையைக் கற்பழிக்கிறேன் பேர்வழி என்று தமிழ்ப்’படுத்தி’த் தொலைக்கிறார்கள். அப்போதெல்லாம் நறநறவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும். என்னய்யா வேலையத்த வேலை என்று. 

ஆனால் யோசித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் என்ன ஏது என்றே புரியாத ஒரு வார்த்தையைக் கண்டு துள்ளிக் குதித்து தப்பித்து ஓடிவிடும் ஒருத்தர், எந்த ஒரு வார்த்தையையும் புரிந்து கொள்ளத் தலை வணங்காத ஒருத்தர், தமிழ் என்று சொன்னால் ஒருவேளை... எத்தனை கடினமான, புதுசான, புதுமையான, விநோதமான வார்த்தையாக இருந்தாலும் அதற்கு அர்த்தம் தேட முயலலாம். 

“லாம்....” என்றுதான் சொல்கிறேன். ஆகவே தமிழ்ப்படுத்தல் எதிர்ப்புக் குழு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டாம். நான் இன்னமும் உங்க பக்கந்தான் இருக்கேன்.

சரி, விசியத்துக்கு வாரேன். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால்....  இந்தப் ‘படுத்தல்’ அன்பர்கள் தங்கள் ஆங்கிலம் டு தமிழ்ப் படுத்தலோடு சேர்த்து நல்ல சில தமிழ்ப் பெயர்ச் சொற்களையும் ஆங்கிலப் படுத்த உதவலாம்.

ப்ரைம் உதாரணங்கள் இரண்டை முன் வைக்கிறேன் - 

ஒன்று: “இட்லி”
இரண்டு: ”தோசை”

வொய் இட்லி அண்ட் தோசை ஸடன்லி?

காரணம் இருக்கே...

கெர்ரி இன்வுட் என்றொரு அன்பர். எங்கள் அபிமான வெள்ளைக்கார கிளையண்ட். நல்லவர் வல்லவர்; சமீபத்தில் பாரத நாட்டிற்கு ஒரு திக் விஜயம் மேற்கொண்டார். தாங்கள் தந்த வேலைகளெல்லாம் செவ்வனே செய்யப்படுகின்றனவா என செக் செய்ய அவர் மேற்கொண்ட விஸிட்.

முதல்நாள் வேலைகள் இனிதே நிறைவடைந்து இரவு உணவுக்கு ’மல்ட்டி கஸின்” ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றோம். அங்கே பெரிதாக ஒரு பிரச்னையும் இல்லை. பெரும்பாலான ஐட்டங்கள் அவர் ஏற்கெனவே சுவைத்துப் பார்த்ததாகவே இருந்தன. 

“டோண்ட் மேக் இட் ஸ்பைஸி. தட்ஸ் தி ஒன்லி ரிக்வெஸ்ட்” (காரமா சமைச்சிடாதே! அது மட்டுந்தான் என் வேண்டுகோள்) என்று ஒவ்வொரு தட்டு அவர் பக்கமாக வரும்போதும் அங்கே வேலை செய்த கஸினிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டாவதுநாள் மதிய உணவுக்கு ஒரு அசட்டுத் தைரியத்தில் நம்ம ‘சரவணபவனுக்கு’ அவரை தள்ளிக்கொண்டு போயிருந்தோம். 

நானும், என் சகாக்களும், எங்கள் பாஸும் அவருக்கு வெரைட்டி ரைஸ் வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தோம்.

”சார்! அந்தாளெல்லாம் சோறு துன்ன மாட்டான் சார்”, இது நான்.

“ஏன்யா? நீ அந்த ஊருக்குப் போனா பீட்ஸாவும் பர்கரும் தின்னலை?”

“டூ யூ வாண்ட் டிஃபன்? ஆர் டூ யூ மைன்ட் ஈட்டிங் ரைஸ்?”

“விச் ஈஸ் ஸ்பைஸி?” - என்னா கேள்விய்யா!?

“வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ் ஸார்”, என்றார் சப்ளை அன்பர்.

“ஓகே! வாட்ஸ் தி டிஃபரன்ஸ். வாட் ஈஸ் டிஃபன்?”, என கேள்வி வந்தது கெர்ரி’யிடமிருந்து

இதென்னடா வம்பாப் போச்சி என யோசிக்கையில்...

“ரைஸ் ஈஸ் சிம்ப்ளி ரைஸ், வாட் எவர் எல்ஸ் குக்ட் ஹியர் ஈஸ் டிஃபன்”, என்றொரு அற்புத பதிலை சகா ஒருத்தன் தந்தான்.

அந்த நேரம் பார்த்து ”பெத்த பாஸு” என்று ஒருத்தர் இருக்கிறாரே, அதாங்க எங்க எல்லாருக்கும் பாஸ், அவர் அங்கே பிரசன்னமானார்.

”கெர்ரி, டூ யூ வாண்ட் டு டேக் தோஸா?”

அது என்ன என்று கேட்பதற்கு முன்னால், “ஈஸ் இட் ஸ்பைஸி?”, என்ற கேள்விதான் மறுபடியும் வந்து விழுந்தது.

அதாகப்பட்டது வெள்ளை அன்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த பச்சை/சிவப்பு மிளகாய் வகையராக்களுடன் பரிச்சயம் கிடையாது. அதன் ஒரேயொரு விதையைத் தெரியாமல் விழுங்கி விட்டாலும் மறுநாள் முழுக்க “ரெஸ்ட் ரூமில்” குடித்தனம் செய்ய நேரிடும் என்னும் பயத்தை இந்தியாவிற்குள் நுழையும்போதே போர்த்திக் கொண்டுதான் உள்நுழைகிறார்கள் அவர்கள்.

”நோ சார், ஐ ரிபீட். வீ டோண்ட் குக் எனிதின் ஸ்பைஸி ஃபார் அவர் ஃபாரின் விசிட்டர்ஸ்”



இப்போது, வரலாற்று சிறப்பு மிக்கக் கேள்வி வந்து விழுந்தது.

“வாட் ஈஸ் தோஸா?”

பெத்த பாஸு முதலில் வாயைத் திறந்தார்.

“இட்ஸ் எ கைண்ட் ஆஃப்...”

“ஃப்ரைட் ஐட்டம்?”

“நாட் ஃப்ரைட்... ஓகே.... யூ கேன் டெல் இட் ஈஸ் கைண்ட் ஆஃப் ஃப்ரைட்...”

“பாஸ், வி மே கால் இட் ரோஸ்டட்”, பக்கவாட்டில் சகா ஒருத்தனின் குரல்.

“யா... பெட்டர் வி கால் இட் ரோஸ்டட்”

“ரோஸ்டட் ஆஃப் வாட்?”, இது கெர்ரி

“யூ நோ ரைஸ்... இட் ஈஸ் க்ரைண்டட் அண்ட் மேட் லைக் எ பேஸ்ட்”

“யூ மீன் குக்ட் ரைஸ்..?” (அடடே... வாட்டே கொஸ்சின். இப்படியும் ஒருக்கா இட்லி பிழிந்து பார்க்கவேணும்)

“நோ நோ.... வித்தவுட் குக்கிங் வீ க்ரைண்ட் இட்...”

“ஓ... மேகிங் இட் பவுடர் அண்ட்....”

“அய்யோ ராமா.... சார்... சர்வர் சார்... அந்த தோசையைக் கொணாந்து காட்டுங்க சார். அந்த படம் போட்ட புக்கெல்லாம் உங்ககிட்ட இல்லியா?”

”நோ சார். வீ டோண்ட் ஹேவ்....மே ஐ ப்ரிங் ரோஸ்டட் வெஜிடபிள் தோஸா சார்?”

“நோ ஸ்பைஸி. ஓகே”

“டேய்... மறுபடியுமாடா...” தீனமாக ஒரு குரல் பின்னணியில் கேட்டது.

“பெட்டர் ப்ரிங் இட் அஸ் ரோஸ்டட் கீ வெஜிடபிள் தோஸா.... நல்லா நெய் ஊத்தி வாசமா இருக்கட்டும்”, இது மீண்டும் பெத்த பாஸு.

பதினைந்து நிமிட அவகாசத்தில் சுருட்டிய நியூஸ் பேப்பரென இரண்டு தட்டுகளில் தோசை வந்து சேர்ந்தது.

தோசை ஒன்றைக் கைகளில் அள்ளிக் கொண்டு அதன் இந்தப்புற சுருட்டல் துவாரத்திலிருந்து மறுதுவாரம் வழியாக அந்த அறை முழுதும் இருந்த எங்களைப் பார்த்துக் கண்ணடித்தார் கெர்ரி.

“கெர்ரி, தட் வில் ப்ரெக் இஃப் யூ டூ லைக் தட். ஸ்டார்ட் ஈட்டிங்”

“தட்ஸ் ரைட்...! ஓ இட்ஸ் ஸோ நைஸ்...கூல்.... ஹவ் டூ யூ மேக் திஸ்...??”, சர்வரைப் பார்த்த கேள்வி இப்போது.

மறுபடி மொதல்லேர்ந்தாஆஆஆஆஆஆ..........!


Related Posts Plugin for WordPress, Blogger...