Oct 30, 2011

இந்த வார புகைப்படம் - 2

சிக்கல்


இந்தப் படத்திற்கு விளக்கம் தேவை இல்லை என நம்புகிறேன். அப்படியே தேவையெனின், பின்னூட்டத்தில் குத்தவும். விளக்குகிறேன் :)


Oct 29, 2011

எல்.ஐ.சி. நரசிம்மன்நீதிபதி தேவை என்றால் தமிழ் சினிமா தேடியோடும் ஜட்ஜ் நடிகர்களில் முக்கியமானவர் நரசிம்மன். எண்பதுகளில் டிடி தமிழ் நாடகங்களிலும் இவர் தவறாமல் தோன்றுவார்.

நிறைய படங்களில் நடித்த ஆனால் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நடிகர்கள் எக்கச்சக்கமாக தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர். எல்.ஐ.சி. நரசிம்மன் அவர்களுள் ஒருவர்.

நரசிம்மன் அவர்கள் அமர்க்களப்படுத்தும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. டிவியில் எப்போது போட்டாலும் நான் ரசித்துப் பார்க்கும் நகைச்சுவை அது. 

பாலிருக்கி.... பழமிருக்கி..... ஆஆஆஆஆ...தன் நடிப்பால் நம்மை மகிழ்வித்தவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Oct 28, 2011

ஏழாம் அறிவு


இந்தப் படம் வெளியான இரண்டு நாட்களுக்குள்ளாகவே தமிழ்கூறும் இணையவுலகம் படத்தைப் பிரித்துக் க்ண்டமேனிக்கு மேய்ந்துவிட்டிருக்கிறது. ஓக்கே என் பங்கிற்கு நானும்....

கொஞ்சம் அங்கங்கே கடன் வாங்கி ஸ்டோரி டிஸ்கஷனில் நன்றாய் டிங்கரிங் செய்து நல்ல பூச்செல்லாம் பூசின ஒரு கதை. சைனா இந்தியாவை உயிரியல் போரில் (bio-war?) அழிக்கப் பார்க்கிறது. 1600 ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டு ஒரு தமிழேனும் தமிழேச்சியும் அதை முறியடிக்கிறார்கள். கதை அத்ரயே! 

திரைக்கதை புதுசாய் ஏதுமில்லை என்றாலும் தொய்வில்லாமல் பார்க்க வைக்குமளவிற்கு இருக்கிறது. எந்த இடத்திலும் நிற்காமல், இழுக்காமல் படம் நகர்ந்து கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.

ஆரம்ப பதினைந்து நிமிடங்களின் போதிதர்மர் வரலாறு பகரும் ஆவணப்படத்தனமான துவக்கம் சூப்பர். அங்கே நிறையவே மெனக்கெடல் தெரிகிறது. அந்தப் பின்னணிக் குரலின் narration'ல் சற்றே இயல்பைச் சேர்த்திருக்கலாம்.

படத்தின் பெரிய ப்ள்ஸ் சூர்யா. வழக்கம்போல் பார்வையிலேயே படம் முழுசும் அழகாய்ப் பேசுகிறார். போதிதர்மர் ரோலில் முகபாவம் தொடங்கி ஸ்டண்ட் வரை அத்தனையும் கனகச்சிதமாக பண்ணியதற்கு சூர்யாவுக்கு பாராட்டுகள். க்ளைமாக்ஸில் சூர்யா (ஃப்ரெண்ட்ஸ் விஜய் பாணியில்) தடாலென எழுந்து அடிப்பதெல்லாம் நல்ல ஜோக். இருந்தாலும் அங்கே ஸ்டண்ட் அனல் பறக்கிறது. ஆரம்ப ரொமான்ஸ் காட்சிகளில் தன் தம்பி கார்த்தியின் சாயலில் நடித்திருப்பது ஏனோ?

ஸ்ருதிஹாஸன் நடிப்பெல்லாம் ஓக்கே, முதற்படம் பொறுத்தருள்வோம். தமிழ்தான்.... தமிழ்தான் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொல்கிறார். 

என்ன நிர்ப்பந்தமோ.... ஸ்ருதிஹாஸனும் சூர்யாவும் காதுகள் புளிக்கப் புளிக்க நிறைய நிறைய தமிழன் பெருமை பேசுகிறார்கள். வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்யாசம் தெரிஞ்சிக்கோ என்னும் இடைச்செருகல் ஆவேசங்கள் படத்திற்கு ஏன் எனப் புரியவில்லை.

வில்லன் டெர்மினேட்டர் - 2 வில்லன் பாணிய்ல் கிய்யா-மிய்யா என இந்தப்பக்கம் அந்தப்பக்கம் தலை சாய்த்துச் சாய்த்து சைனீஸ் பரதநாட்டிய நடை நடக்கிறார். நல்லவேளையாக அவருக்கு வசனங்கள் குறைவு.

இசை ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு மேல் ஏதும் சொல்லவேண்டுமா என்ன? யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடலுக்குத் தனியேதான் ஒரு பதிவு வரைய வேண்டும். :)

மீடியா ஹைப் அளவிற்கு சூப்பரோ சூப்பரும் இல்லை. இணையவாசிகள் துவைக்கும் அளவிற்கு குறைவாகவும் இல்லை. ஏழாம் அறிவு - பார்க்கலாம் ரக சினிமா.

Oct 26, 2011

இனிய தீபாவளி வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைவர் வாழ்விலும் நன்மைகள் பூக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


Oct 25, 2011

தீபாவளி 1981

தருமபுரியில் ஒண்ணாம் கிளாஸில் படித்த பருவம். அன்று அந்த புத்தம்புதிய சிவப்பு நிற மேல்சட்டையை அணிந்து கொண்டிருந்தேன் நான். அதற்கான அதே நிறத்து அதே துணியினாலான கால்சட்டையும் கூட. துணியில் அங்கங்கே கருப்பு நிறத்தில் ஏதோ தீற்றல் தீற்றலாக இருந்தது.  இதுபோல் மெத்து மெத்தென்ற உடை நான் சமீபத்தில் அணிந்ததில்லை. ஏதோ திருப்பூர் பனியன் என்று பெயராம் அதற்கு. இப்போது முப்பது வருடம் ஆகியும்கூட இன்னமும் அந்த உடையிலிருந்து எழுந்த புத்தாடை மணம் என் நாசிக்கு நினைவிருக்கிறது. மூன்றாம் வகுப்பிலிருந்த அக்காவுக்கும் புதுசாக கருப்பு வெள்ளையில் ஜிகுஜிகுவென பாவாடை சட்டை. அண்ணனும் எங்களுடன் வந்தான். இரண்டு நாட்களில் தீபாவளி. பட்டாசு வாங்கப் போகிறோம். 

அப்பாவுக்கு போனஸ் வந்துவிட்டதாக வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். போனஸுக்கு மாக்ஸிமம் சீலிங் டீலிங் என்ற சங்கடங்கள் வந்தபின் இந்நாட்களிலெல்லாம் தீபாவளி போனஸுக்கு மக்கள் அந்த நாட்களைப் போல பெரிதாக சந்தோஷப்படுவதில்லை. 

நாங்கள் கடையுள் நுழைய அப்பாவின் அலுவலக நண்பர் தோத்தாத்ரி மாமா பெரிய பெரிய பைகளிலும், பெட்டிகளிலும் பட்டாசுகளை சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டிருந்தார். வண்டி கொள்ளாமல் அடைத்துக் கொண்டிருந்தன பட்டாசுகள்.

“என்ன தோத்தாத்ரி! இந்த வருஷமும் ஃபுல் போனஸுக்கும் பட்டாசா?”

“ஆமாப்பா! நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம், நேரமாச்சு”. நின்ற இடத்தில் குதூகலத்தில் குதித்துக் கொண்டேயிருந்த பையனை ரிக்‌ஷாவில் உட்கார வைத்துவிட்டு ரிக்‌ஷாவை ஓட்ட நடையில் தொடர்ந்த மாமாவை இப்போதும் நினைவில் இருக்கிறது.

“அந்த மாமாவுக்கு அவங்க அப்பா சின்ன வயசுல தீபாவளிக்கு ஒரு மத்தாப்பு கூட வாங்கினது இல்லையாம். அதனால அவனுக்கு ஒரு வைராக்கியம். தன் பையனுக்கு வாங்கற போனஸ் பணம் முழுசுக்கும் வருஷா வருஷம் பட்டாசு வாங்கிடுவான். இந்த வருஷம் நானூறு ரூவாய்க்கு வாங்கியிருக்கான்”

அப்போதைய நானூறு ரூபாய்க்கு இப்போதைய கணக்கில் சுமாராக ஒரு பதினைந்தாயிரம் என மதிப்பு தரலாம் என நினைக்கிறேன். அப்போது நானூறு என்றால் எவ்வளவு என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  எனக்கு அப்போது நூற்றுப் பத்து வரைதான் எண்ணத் தெரியும். நூற்றுப் பத்துதான் என் கணித அகராதியில் உலகின் மிகப் பெரிய எண். ஆக, என் கணித எல்லைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு பெரிய மதிப்பிற்கு தோத்தாத்ரி மாமா பட்டாசு வாங்கியிருந்தார்.

“பா.... நானூறு ரூவாயா! நான் என்னவோ சின்னதா கடை போடப் போறாருன்னு நெனைச்சேன்”, என்றாள் அம்மா.

“அப்பா! நீ எத்தன ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவ?”

“உங்க அப்பனுக்கு வைராக்கியம் எல்லாம் ஒண்ணுமில்லை. ஆறு பேருக்கும் ட்ரஸ் எடுத்தமில்ல? அதுலயே போனஸ் பணம் செலவாகிடுச்சு. பாத்து வாங்கித் தர்றேன் வாங்க”

“கடைல ரொம்ப ரஷ்ஷா இருக்கு நீங்க பாத்து வாங்கிட்டு வாங்க. நான் சின்னவனோட எதிர்ல நிக்கறேன்”, அம்மா என்னை வெளியே அழைத்து வந்து சாலை கடந்து கடை எதிரில் நின்று கொண்டாள்.

அண்ணனும் அக்காவும் இது வேணும் அது வேணும் என கையை உயர்த்தி உயர்த்தி எதையெதையோ அடுக்கிக் கொண்டிருந்தனர். போனமுறை வாங்கின பட்டாசுகளை விட இந்தமுறை அதிகம் போலத்தான் தெரிந்தது எனக்கு.

அக்கா திடீரென ”வீஈஈஈஈஈஈஈஈஈஈஈர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என சந்தோஷக் கூக்குரல் தந்துகொண்டு கடையிலிருந்து எங்களை நோக்கி ஓடிவந்தாள். “யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! அப்பா நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்காரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ”, என்ற அவள் குரல் அந்த ஊருக்கே கேட்டிருக்கும்.  என் கணிதப் பெருவெண்ணிற்கு மிக அருகில் நூறு இருந்ததால் நானும் ரொம்பவே குதூகலமடைந்தேன். அந்த நூறு ரூபாய்ப் பட்டாசுகள் தந்த சந்தோஷ கணங்களை அதன் பின் வந்த எந்த தீபாவளியின் கணங்களும் தரவில்லை என்பேன் நான்.

 ”ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....” என்று எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவளை திடீரெனக் காணோம். “துளுப்” என்ற சத்தம் மட்டும் கேட்டது.

“ஏ யாருங்க இந்த பாப்பா? பாருங்க டிச்சில விழுந்துடுச்சி”, குரல் கொடுத்தவர் அத்தோடு நில்லாமல் உடனே அந்த சாக்கடையில் இறங்கி அக்காவை வெளியே ஏற்றிவிட்டார். ஆடை எது அக்கா ஏது எனப் புரியாமல் முழுக்க முழுக்க கருத்தம்மாவாக நின்றிருந்தாள் அக்கா. அப்பாவும் அண்ணனும் ஓடி வந்தார்கள். சாலையோரம் இருந்த அடி பம்ப்பில் அக்காவைக் குளிப்பாட்டினார்கள். 

வீடு திரும்பும்போதுதான் கவனித்தேன். அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்தார். அண்ணன் கைகள் பட்டாசுகள் சுமக்க, அக்கா கையில் அவள் அணிந்திருந்த ஈர உடைகள் இருந்தன. கொஞ்சம் இருட்டினூடே உற்றுப் பார்த்ததில் சிவப்பு நிறத்தில் திருப்பூர் பனியன் துணியில் கால்சட்டையும் மேல்சட்டையும் அவள் அணிந்திருந்தாள்.

Oct 24, 2011

படித்ததில் சிரித்தது

படித்ததில் பிடித்தது :)Oct 23, 2011

அர்ச்சனை

ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது!
பி.கு.: தமிழனுக்கு எப்போதும் தனிக்குணம் உண்டு! மீண்டும் மீண்டும் அது ஊர்ஜிதம் ஆகிறது! தமிழேண்டா!!!

Oct 22, 2011

இந்த வார புகைப்படம் - 1

தமிழ் இணைய உலகில் நிறைய ப்ரொஃபஷனல் புகைப்படக் கலைஞர்கள் வளைய வருகிறார்கள். தினம் ஒரு புகைப்படம் ப்ரோஜக்ட் எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு நமக்குள் இருக்கும் புகைப்படக் கலைஞனை சீண்டுகிறார்கள். நமக்குள் இருக்கும் கலைஞனுக்கு டெய்லி ஃபோட்டொவெல்லாம் எடுக்கும் சுறுசுறுப்பு இல்லை என்பதால் “வாரம் ஒரு படம்” எனும் ரேஞ்சுக்கு போனால் போகிறது என இறங்கி வருகிறோம்.

இதோ இந்த வாரப் படம்.


இடம்: சென்னை காசிமேடு 

Oct 18, 2011

ஜான்னி இங்க்லீஷ் - ரீபார்ன்

ரோவன் அட்கின்ஸன் படம் என்றாலே இது 007 படங்களை ஸ்பூஃப் செய்த படம்தான் எனத் தெரிந்து கொண்டே தியேட்டர் உள்ளே நுழையலாம்.


நம்ம மிஸ்டர்.பீன் நம் எதிர்பார்ப்பிற்கு எந்தக் குறையும் வைக்காமல் நம் ஒண்ணரை மணிநேர கலகலப்பிற்கு கேரண்டி தருகிறார். நான் இப்படத்தின் முந்தைய வெர்ஷனைப் பார்த்ததில்லை. அதனால் பார்ட்-2 சுமார்தான் எனச் சொல்பவர்கள் கருத்தை என்னால் சொல்ல முடியாது. என் பார்வையில் படம் “டக்கர்”

சைனீஸ் ப்ரீமியரைக் (சீனப் பிரதமர்?) கொலை செய்ய திட்டமிடும்  உளவாளியை கண்டறியும் பிரிட்டிஷ் இண்டெலிஜன்ஸ் ஏஜண்ட்டான ஜான்னி இங்க்லீஷ் செய்யும் சாகசங்கள்தான் படம். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக உலகின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் விமானத்தில் பறக்கிறார், உள்ளூரிலேயே ஹெலிகாப்டரில் பறக்கிறார், பாராசூட்டில் பறந்து வந்து சரியாக பைக்கில் குதிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக திபெத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கிறார். 

மேலும் படத்தைப் பற்றி இந்த ட்ரைலர் பேசட்டும்!
மீண்டும் சொல்கிறேன்: உங்கள் ஒண்ணரை மணிநேர கலகலப்பிற்கு ரோவன் கேரண்டி தருகிறார். அவசியம் தியேட்டரில் பாருங்கள்:

Oct 12, 2011

இண்டி ப்ளாக்கர் மீட் 2011


கடந்த ஞாயிறன்று சென்னையில் இண்டி ப்ளாக்கர் தளத்தினர் சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்ற ஆண்டைப் போலவே இருந்தன ஏற்பாடுகள். டாடா மோட்டார்ஸ் ஸ்பான்சர்ஷிப்பில்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்தது எனவே,  இந்தமுறை கூடுதலாக ”டாடா க்ராண்டே”வுக்கு விளம்பரம் கனஜோராக நடந்தது. சுமார் 250 பேர் கூடின நிகழ்வில், ஒரு சில பதிவர்களுக்கு ரேண்டமாக சுயஅறிமுக வாய்ப்பு தந்தனர். 

Mingling / High Tea அற்புதமாக இருந்தது.  ஹை டீ என்றார்களே தவிர அது ஹை டிஃபன் ரேஞ்சுக்கு இருந்தது. Mingling’கின் போது வாங்கிய ஆட்டோக்ராஃப்கள் சுவாரசியமானவை. மற்றபடி, தமிழ் பதிவுச்சூழலில் இப்போதைய பரபரப்பு “டாபிக்”கான அந்த க்ரூப் டிஸ்கஷன் தவிர்த்து வேறேதும் சுவாரசிய கண்டெண்ட் இருந்ததாக நான் உணரவில்லை. 

டோண்டு ராகவன், ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், பிலாசபி பிரபாகரன், கேஆர்பி.செந்தில் போன்றோரை முதன்முறையாக சந்தித்தேன். அன்பர்கள் டாக்டர்.ராஜ்மோகன், கார்க்கி, யுவா, அதிஷா, கோகுல், ராஜேஷ் பத்மன் ஆகியோரும் வந்திருந்தனர். நண்பர் நட்பாஸை முதன்முதலில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சிகரமான தருணம். என்னைப் பொறுத்தவரையில் இந்த சந்திப்புகள்தான் இண்டிப்ளாக்கர் மீட்டின் சிறப்பம்சம்.

நண்பர் கோகுல் ஆழ்சிந்தனாவசத்தில் சிக்குண்டிருந்தபோழ்து. 

நட்பாஸ் என்னும் களிமண்கலயம் என்னும் நன்_ட்ரி அவர்கள்

மறக்காமல் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். டீ.ஷர்ட் ஒன்று இலவசமாக எல்லோருக்கும் தரப்பட்டது. விடை பெற்றுக் கொண்டோம்.

கடைசியாக, அந்தப் பரபரப்பு விவாதம் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில்....

 “நாம் நம் தனிக் குணத்தை இதேபோல் காட்டிக் கொண்டிருந்தால், அடுத்தமுறை இண்டிப்ளாக்கர் போன்றோர் இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது சாத்தியம் இல்லை. பிரச்னை எழுப்பும் நமக்கு அதுதான் குறிக்கோள் என்றால், யெஸ்! நாம் ஜெயித்தாற்போல்தான்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பதிவின் நான்காம் பத்தியை நான் மிஸ் செய்வேன். வேறேதும் நட்டமில்லை”


Oct 10, 2011

பாரதியார் கவிதைகள் வாசிக்கலாம் வாங்கபாரதியார் எழுதிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”வை அடித்துக் கொள்ள பாடலேதும் உண்டா எனக் கேட்கிறார் ”ஓடி விளையாடு பாப்பா” ரசிகர் பேரவைத் தலைவர் அகில்.
Oct 8, 2011

காட்டில் ஒரு பிரேதம்போல நான் என்றும் மிதப்பேன்

சினிமாப் பாட்டுப் புத்தகங்களை இன்னும் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? எட்டே எட்டு பக்கங்கள், நைந்து போன அழுக்கான காகிதம், முன்னட்டையில் படத்தின் பெயர், பின்னட்டையில் அச்சிட்டவரின் சுய பிரஸ்தாபம். முன்பக்க உள் அட்டையில் படத்தில் நடித்த நடிக நடிகையர்கள் பெயர்ப் பட்டியல். பின்பக்க உள் அட்டையில் படத்தின் கதைச் சுருக்கம் வரைந்து "மற்றவை வெள்ளித் திரையில்" என்ற இலவச விளம்பரத்துடன் மீதமுள்ள பக்கங்களில் படத்தின் பாடல்கள் இருக்கும்.

என் பள்ளிப் பருவத்தில் பத்து பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் புத்தகம் கிடைக்கும். பின்னர் அது விலை ஏறி ஐம்பது பைசாவுக்கு விற்றது வரையில் நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அவை வருவதில்லை என நினைத்திருந்த வேளையில் மடிப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் ஒரு கடையில் சரம் சரமாக பாட்டுப் புத்தகங்கள் தொங்கக் கண்டேன்.“எவ்ளோண்ணா?”

“ரெண்டு ரெண்டு ரூபா”

“ஒண்ணு தர மாட்டீங்களா?”

“ஒண்ணு ஒர்ரூவா”

வித்தியாசமான கடைக்காரராக இருக்கிறாரே என “கோ”வும் “தெய்வத் திருமகள்’ இரண்டையும் எடுத்து பேக் செய்யச் சொன்னேன்.

ஸ்கூல் தினங்களில் கட்டுக்கட்டாய் சேர்த்து வைத்த நூற்றுக்கணக்கான பாட்டுப் புத்தகங்கள் எங்கே போயின எனத் தெரியவில்லை. பரணில் ஏதும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். உண்மையில் சொன்னால், குரலை முன்னணியில் வைத்து வாத்தியங்களைப் பின்னணியில் வைத்த பழைய பாடல்களுக்கு பாட்டுப் புத்தகங்களே தேவையில்லை. பின்னணியிசை எப்போது முன்னணியிசை ஆனதோ அப்போதுதான் இவற்றின் தேவை இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் புத்தகங்களின் நம்பகத்தன்மை (!!) பற்றித் தனியே பேசலாம். இவற்றை அச்சிடுபவர்கள் கையில் கிடைத்தால் சில நேரங்களில் ஒரிஜினல் கவிஞர்கள் அவர்களைப் பந்தாடும் சாத்தியம் இருக்கிறது. வடக்கத்திப் பாடக பாடகிகள் பண்ணும் பிழைகளுக்கு இணையாக அத்தனை பிழைகள் நிறைந்திருக்கும் இப்புத்தகங்களில்.

பாட்டுப் புத்தகங்கள் ஆன்லைன் பாடல்வரித் தளங்களாக  உருவெடுத்துவிட்டிருந்தாலும் இப்பிழைகள் காலத்தோடு, டெக்னாலஜியோடு சேர்ந்து தொடர்வது தனிக்கதை. ஒரு உதாரணம் இங்கே:


இப்படி வரும் பிழைகளில் என்னால் மறக்கவியலாத ஒரு பிழை முன்பு நான் வாங்கிய “மே மாதம்” பாட்டுப் புத்தகத்தில் இருந்தது.

”மார்கழிப் பூவே” பாடலை எல்லோரும் அறிவீர்கள். அதில் வரும் ஒரு வரி, “காற்றில் ஒரு மேகம் போலே நான் என்றும் மிதப்பேன்”. அது தவறுதலாக எப்படி வந்திருந்தது என்றால்.....

இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்கள்! அப்படி வந்திருந்தது.Oct 6, 2011

வி மிஸ் யூ ஸ்டீவ்


'You've got to find what you love,' Steve Jobs 

தான் சாதித்தவைகள் போதும் என நினைத்துவிட்டாரோ என்னமோ! மரணத்தின் மீது காதல் கொண்டு புறப்பட்டுவிட்டார் ஜாப்ஸ்!

அவர் மறைவால் வாடித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு நாம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Good bye Steve! We miss you!

Oct 3, 2011

பத்து மலையான்

நம் மலேசிய நண்பர் பெருமாள் அனுப்பிய புகைப்படங்கள் இவை.
இந்தப் படத்தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்போது இவர் யாரெனத் தெரிகிறதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


இப்போது நிச்சயம் உங்களுக்குத் தெரிய வேண்டும்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.யெஸ்! நம்மவர்தான்! மலேசியாவில் “பத்துமலை” அல்லது Batu Caves சுப்ரமணியர்தான் இவர். சமீபத்தில் இவர் முகத்தில் தேன்கூடு ஒன்று உருவாகி இவர் லேட்டஸ்ட் ஸ்டைலாக தாடி வைத்த தோற்றத்தில் தென்பட்டாராம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை.

இவர் தாடி ரகசியம் என்ன என்று நண்பர் @kryes கூறுவாறாக!


Related Posts Plugin for WordPress, Blogger...