Oct 25, 2011

தீபாவளி 1981

தருமபுரியில் ஒண்ணாம் கிளாஸில் படித்த பருவம். அன்று அந்த புத்தம்புதிய சிவப்பு நிற மேல்சட்டையை அணிந்து கொண்டிருந்தேன் நான். அதற்கான அதே நிறத்து அதே துணியினாலான கால்சட்டையும் கூட. துணியில் அங்கங்கே கருப்பு நிறத்தில் ஏதோ தீற்றல் தீற்றலாக இருந்தது.  இதுபோல் மெத்து மெத்தென்ற உடை நான் சமீபத்தில் அணிந்ததில்லை. ஏதோ திருப்பூர் பனியன் என்று பெயராம் அதற்கு. இப்போது முப்பது வருடம் ஆகியும்கூட இன்னமும் அந்த உடையிலிருந்து எழுந்த புத்தாடை மணம் என் நாசிக்கு நினைவிருக்கிறது. மூன்றாம் வகுப்பிலிருந்த அக்காவுக்கும் புதுசாக கருப்பு வெள்ளையில் ஜிகுஜிகுவென பாவாடை சட்டை. அண்ணனும் எங்களுடன் வந்தான். இரண்டு நாட்களில் தீபாவளி. பட்டாசு வாங்கப் போகிறோம். 

அப்பாவுக்கு போனஸ் வந்துவிட்டதாக வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். போனஸுக்கு மாக்ஸிமம் சீலிங் டீலிங் என்ற சங்கடங்கள் வந்தபின் இந்நாட்களிலெல்லாம் தீபாவளி போனஸுக்கு மக்கள் அந்த நாட்களைப் போல பெரிதாக சந்தோஷப்படுவதில்லை. 

நாங்கள் கடையுள் நுழைய அப்பாவின் அலுவலக நண்பர் தோத்தாத்ரி மாமா பெரிய பெரிய பைகளிலும், பெட்டிகளிலும் பட்டாசுகளை சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றிக் கொண்டிருந்தார். வண்டி கொள்ளாமல் அடைத்துக் கொண்டிருந்தன பட்டாசுகள்.

“என்ன தோத்தாத்ரி! இந்த வருஷமும் ஃபுல் போனஸுக்கும் பட்டாசா?”

“ஆமாப்பா! நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம், நேரமாச்சு”. நின்ற இடத்தில் குதூகலத்தில் குதித்துக் கொண்டேயிருந்த பையனை ரிக்‌ஷாவில் உட்கார வைத்துவிட்டு ரிக்‌ஷாவை ஓட்ட நடையில் தொடர்ந்த மாமாவை இப்போதும் நினைவில் இருக்கிறது.

“அந்த மாமாவுக்கு அவங்க அப்பா சின்ன வயசுல தீபாவளிக்கு ஒரு மத்தாப்பு கூட வாங்கினது இல்லையாம். அதனால அவனுக்கு ஒரு வைராக்கியம். தன் பையனுக்கு வாங்கற போனஸ் பணம் முழுசுக்கும் வருஷா வருஷம் பட்டாசு வாங்கிடுவான். இந்த வருஷம் நானூறு ரூவாய்க்கு வாங்கியிருக்கான்”

அப்போதைய நானூறு ரூபாய்க்கு இப்போதைய கணக்கில் சுமாராக ஒரு பதினைந்தாயிரம் என மதிப்பு தரலாம் என நினைக்கிறேன். அப்போது நானூறு என்றால் எவ்வளவு என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  எனக்கு அப்போது நூற்றுப் பத்து வரைதான் எண்ணத் தெரியும். நூற்றுப் பத்துதான் என் கணித அகராதியில் உலகின் மிகப் பெரிய எண். ஆக, என் கணித எல்லைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு பெரிய மதிப்பிற்கு தோத்தாத்ரி மாமா பட்டாசு வாங்கியிருந்தார்.

“பா.... நானூறு ரூவாயா! நான் என்னவோ சின்னதா கடை போடப் போறாருன்னு நெனைச்சேன்”, என்றாள் அம்மா.

“அப்பா! நீ எத்தன ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவ?”

“உங்க அப்பனுக்கு வைராக்கியம் எல்லாம் ஒண்ணுமில்லை. ஆறு பேருக்கும் ட்ரஸ் எடுத்தமில்ல? அதுலயே போனஸ் பணம் செலவாகிடுச்சு. பாத்து வாங்கித் தர்றேன் வாங்க”

“கடைல ரொம்ப ரஷ்ஷா இருக்கு நீங்க பாத்து வாங்கிட்டு வாங்க. நான் சின்னவனோட எதிர்ல நிக்கறேன்”, அம்மா என்னை வெளியே அழைத்து வந்து சாலை கடந்து கடை எதிரில் நின்று கொண்டாள்.

அண்ணனும் அக்காவும் இது வேணும் அது வேணும் என கையை உயர்த்தி உயர்த்தி எதையெதையோ அடுக்கிக் கொண்டிருந்தனர். போனமுறை வாங்கின பட்டாசுகளை விட இந்தமுறை அதிகம் போலத்தான் தெரிந்தது எனக்கு.

அக்கா திடீரென ”வீஈஈஈஈஈஈஈஈஈஈஈர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என சந்தோஷக் கூக்குரல் தந்துகொண்டு கடையிலிருந்து எங்களை நோக்கி ஓடிவந்தாள். “யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! அப்பா நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்காரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ”, என்ற அவள் குரல் அந்த ஊருக்கே கேட்டிருக்கும்.  என் கணிதப் பெருவெண்ணிற்கு மிக அருகில் நூறு இருந்ததால் நானும் ரொம்பவே குதூகலமடைந்தேன். அந்த நூறு ரூபாய்ப் பட்டாசுகள் தந்த சந்தோஷ கணங்களை அதன் பின் வந்த எந்த தீபாவளியின் கணங்களும் தரவில்லை என்பேன் நான்.

 ”ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....” என்று எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவளை திடீரெனக் காணோம். “துளுப்” என்ற சத்தம் மட்டும் கேட்டது.

“ஏ யாருங்க இந்த பாப்பா? பாருங்க டிச்சில விழுந்துடுச்சி”, குரல் கொடுத்தவர் அத்தோடு நில்லாமல் உடனே அந்த சாக்கடையில் இறங்கி அக்காவை வெளியே ஏற்றிவிட்டார். ஆடை எது அக்கா ஏது எனப் புரியாமல் முழுக்க முழுக்க கருத்தம்மாவாக நின்றிருந்தாள் அக்கா. அப்பாவும் அண்ணனும் ஓடி வந்தார்கள். சாலையோரம் இருந்த அடி பம்ப்பில் அக்காவைக் குளிப்பாட்டினார்கள். 

வீடு திரும்பும்போதுதான் கவனித்தேன். அப்பா என்னைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்தார். அண்ணன் கைகள் பட்டாசுகள் சுமக்க, அக்கா கையில் அவள் அணிந்திருந்த ஈர உடைகள் இருந்தன. கொஞ்சம் இருட்டினூடே உற்றுப் பார்த்ததில் சிவப்பு நிறத்தில் திருப்பூர் பனியன் துணியில் கால்சட்டையும் மேல்சட்டையும் அவள் அணிந்திருந்தாள்.

9 comments:

natbas said...

அட்டகாசம். Speechless.

கானா பிரபா said...

கலக்கல்ஸ், ஆரம்பமும் முடிவும் தொடுகிறது :)

Rams said...

superb...

கிரி ராமசுப்ரமணியன் said...

நன்றி நட்பாஸ்! எல்லாம் உங்க ஆசி!

தேங்க்ஸ் ராம்ஸ்! :)

கிரி ராமசுப்ரமணியன் said...

கானா பிரபா அண்ணனுக்கு நன்றிகள்!

Pulavar Tharumi said...

சுவாரசியமான பதிவு. பள்ளியில் படிக்கும் காலங்களில் தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கவுண்டவுனை ஆரம்பித்துவிடுவோம். அதெல்லாம் இப்போது இல்லை. ஊரிலிருந்து வரும் அத்தை, மாமா, சித்தாப்பாக்களை வரவேற்க தெரு முனையில் இரவில் காத்திருப்போம். அதெல்லாம் உங்கள் பதிவை படித்தவுடன் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

நீங்கள் மனோகர் தேவதாஸ் அவர்களின் 'எனது மதுரை நினைவுகள்' புத்தகம் படித்து இருக்கிறீர்களா? அருமையான புத்தகம். அதில் அவர் தனது மூன்று நண்பர்களுடன் சிறுவயதில் இருந்து எவ்வாறு மதுரையில் வாழ்ந்தார்கள் என்று எழுதியிருப்பார். இது போன்ற மலரும் நினைவுகள் கொண்ட புத்தகம்.

கிரி ராமசுப்ரமணியன் said...

@ புலவர் தருமி

சுவாரசியமான பின்னூட்டதிற்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் வாசித்த பிறகுதான் என் பதிவில் நிறைய விஷயங்களை எழுத மறந்ததை உணர்ந்தேன் :)

என் மதுரை நினைவுகள் வாசித்ததில்லை. வாங்குகிறேன்!

breeze said...

பட்டாசு கிரி.Sema

Rathnavel said...

நல்ல பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...