Jun 30, 2010

ரஜினி அரசியலுக்கு வரலாமா?

இப்படி ஒரு தலைப்பை இந்த இடுகைக்குத் தந்தமைக்கு முதலில் மன்னிக்கவும். இது "தலைப்புகள்" என்ற தலைப்பில் வந்திருக்க வேண்டிய பதிவு. எனினும், உங்கள் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ரஜினி அரசியல் நுழைவு பற்றி கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.



______________________

தலைப்புச் செய்திகளைப் பார்த்து தினசரி நாளிதழை வாங்குவதும், அட்டைப்படத் தலைப்பைப் பார்த்து வார இதழை வாங்குவதும் எவ்வளவு தவறு என்பதைப் பற்றியதே இந்த பதிவு.

சென்ற வார ஆனந்த விகடன் அட்டையில் "இனி தமிழ் படமே இயக்கமாட்டேன்" என இயக்குனர் கௌதம் மேனன் சொல்வதாக இருந்தது.

ஆனால் அவர் உண்மையில் சொன்னது, "தான் எதிர்பார்க்கும் சூழல் இல்லாவிட்டால் இனி தமிழ் படமே இயக்கமாட்டேன்"  என்றுதான். 

ஓரிரு வார்த்தைகளை நீக்கினால் எப்படி மாறுகிறது பாருங்கள் செய்தி.

சென்ற இரு வாரங்கள் முன்பு ஜூனியர் விகடனில் வந்த அட்டைப்படத் தலைப்பு, "நித்தியானந்த விவகாரம், கல்லால் அடிக்க மாட்டாங்களா? - பிரேமானந்தா பேட்டி".

என்னடா இந்த மனுஷனே இப்படி பேசறான்னு பார்த்தா..... அவரு ஊடகங்களைச் சாடிவிட்டு, இப்படியெல்லாம் செய்தி, விடியோ வெளிய வந்தா, நித்யனந்தாவை மக்கள் கல்லால் அடிக்க மாட்டாங்களா?, பாவமில்லையா அவரு". என்று கேட்டிருக்கிறார்.

எப்படி இருக்கு பாருங்கள் இந்தத் தலைப்புகள்.


சரி ரஜினி விஷயம் பற்றி.....???

சிலப்பல வருடங்கள் முன்பு குமுதத்தில் ஒரு கவர் ஸ்டோரி. அட்டையில் அடிக்கும் எழுத்துக்களில் "ரஜினி அரசியலுக்கு வரலாமா? - கமல் பேட்டி" என்று இருந்தது. முண்டியடித்து கியூவில் நின்று புத்தகம் வாங்கிப் புரட்டினேன்.

அது வழக்கம் போல ஒரு கமல் hi-fi பேட்டி. ஒரு இருபது கேள்விகள் கடந்த பிறகு கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

"ரஜினி அரசியலுக்கு வரலாமா?"

"வரட்டுமே", என்ற அவர் பதிலுடன் அந்தப் பேட்டி முடிந்திருந்தது.

<அது சரி, தலைப்புகளைப் பார்த்து இது போல் ஏமாந்த உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்களேன்!>
.
.
.
image courtesy: way2online.com

Jun 28, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦நுழையுமுன் - 1

உள்ளே நுழையுமுன்.... (1)



"கற்றதனால்  ஆய
பயனென் கொல்"
கந்தசாமி வாத்தியார் முன்
கொட்டாவி விடுகிறான்
கோவிந்தன்.

"படிக்காம போனா
பன்னி மேய்க்க 
வேண்டியதுதான்"
பாடமெடுக்கும்
அப்பா முன்
பல் குடைகிறான்
கோவிந்தன்.

"படிக்கலாம் வாடா"
அழைக்கும் பழனியை
படம் போகக் 
கூப்பிடுகிறான்
கோவிந்தன்

"படிக்கலன்னு வெய்யி
என்னைய மாதிரி
பி.பீ.ஓ'வுல
ஒதுங்க
வேண்டியதுதான்"
பையனுக்குப்
பாடமெடுக்கிறான்
கோவிந்தன்
.
.
.

Jun 27, 2010

இங்கிலாந்து - வடை போச்சே!

இந்த சீசனிலேயே நான் மிகவும் எதிர்பார்த்துக் கண்டுகளித்த ஆட்டம். ஒரு ஓரத்தில் நப்பாசை இருந்தது. ஏதேனும் செய்து இங்கிலாந்து அணி வரலாற்றைத் திருப்பிப் போடுமென. 

ஹூம்....முடிவு? அப்படியொன்றும் யாரும் எதிர்பார்த்திராத முடிவொன்றும் இல்லை, எனினும் இப்படி நான்கிற்கு ஒன்று என இங்கிலாந்து அணி தோற்றிருக்க வேண்டாம்.



எண்பத்தியோராவது  நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜான்சனுக்கு மஞ்சள் அட்டை தரப்படுகிறது. "அண்ணன் ஜான்சன் அடுத்த போட்டியில் விளையாட முடியாது" என தொலைக்காட்சியில் காண்பிக்கப் படுகிறது.

இங்கிலாந்து அணித்தலை கூவுகிறது: "ஏலேய், தீர்ப்ப மாத்தி எழுதுலே! கொஞ்சம் ஸ்கோர்போர்டு  பாத்துட்டு எதுனாச்சும் சொல்லுங்கலே.  அவிங்க நாலு கோலு அடிச்சுருக்கரானுவ, நாங்க ஒண்ணே ஒண்ணுதான்லே. நாங்க யாருமே அடுத்த ஆட்டம் ஆடப் போறது இல்லையல்லா"

ஒரு சில நிலைகளில் நல்ல ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள் இங்கிலாந்து அணியினர். ஆனால் அது ஜெர்மனி அணியின் நேர்த்தியான ஆட்டத்திற்கு எதிரில் போதுமானதாக இல்லை.

வூட்டுக்குப் போயி ஈ.பீ.எல்'லுக்கு அடுத்து எங்க பேரம் படியும்னு யோசிங்க கொழந்தைகளா!
.
.
.


Jun 26, 2010

கண்மூடிக் கரைதல்..

செப்டம்பர் மாதத்தில் தூவானம், தூறல் மழை என்று சில்சில்லென இருந்தது சீரடி. தரிசனம் முடிந்து விடுதிக்குத் திரும்புகிறோம். ஆட்டோ வேறு எதற்கோ நிற்கவும் விடுதி வாசலிலேயே இறங்கிவிட்டேன். உள்ளே இருநூறு மீட்டர் தூரம் நடக்க வேண்டும். நான் இறங்கியதை கவனியாது ஆட்டோ உள்ளே செல்கிறது. சரி போகட்டும் என நான் தூறலை ரசித்தவாறு உள்ளே நடக்கிறேன்.

ஆட்டோவிலிருந்து என் மாமியாரின் குரல், "ஏமி சேஸ்தாடு ஆய்ன, வானல தடுசுகுனி, ஜுரம் பட்டுகோ போதுந்தி"  (என்ன பண்றான் இந்த மனுஷன் மழைல நனைஞ்சுக்கிட்டு, ஜுரம் ஏதாவது வரப்போவுது). தனக்கு வந்த கட்டளையை புரிந்து கொண்டு ஆட்டோவினுள் ஏறும்படி என்னைப் பணிக்கிறார் என் மாமனார். வேண்டா வெறுப்பாய் மழையிடமிருந்து என்னை மறைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறுகிறேன்.

பின்னொரு நாளில்....அலுவலகத்தில் வீடு திரும்ப வண்டி (cab ) பிடிக்க வெளியே வருகிறோம். லேசான தூறல். மோகன் கால்களை பின்னோக்கி இழுக்கிறான். "ஏய், நான் பில்டிங் உள்ளே போயி, சுத்திக்கிட்டு வெளிய வர்றேன்பா, எனக்கு மழைல நனைஞ்சா ஜலதோஷம் பிடிக்கும். ஏற்கெனவே லேசா தொண்டை கட்டிட்டு இருக்கு".

மோகனுக்கு மூக்கு இருக்கிறதோ இல்லையோ வருடம் முன்னூறு நாள் ஜலதோஷம் இருக்கும். இதில் மழையில் நனைந்தால் என்ன காய்ந்தால் என்ன?. சிரிப்புதான் வருகிறது.



சினிமாவில் மட்டுமே கதாநாயகனும் கதாநாயகியும் மழையில் ஆசை தீர நனைகிறார்கள். மழையில் ஐஸ் கிரீம் உண்கிறார்கள். நிஜத்தில் மழையில் ரசித்து நனைபவர்கள் எல்லாம் கிறுக்கர்கள்.

மழை தூற ஆரம்பிக்கும் அந்த வினாடிகளில் சாலைகளை கவனியுங்கள். நூற்றில் தொண்ணூற்றொன்பது பேர் அலறியடித்தபடி நிழல் (!!) தேடி ஒதுங்குகிறார்கள். மீதமிருந்த ஒருவர் நிதானமாக ஒதுங்குவார், அதையும் கவனியுங்கள்.


"எனக்கு மழைல நனைறது ரொம்ப புடிக்கும்", என சில சின்னப் பெண்கள் சொல்லக் கேட்பேன். அவர்கள் கூட சின்னத் தூறலுக்கு ஓடி ஒதுங்கி விட்டு, "அடுத்த தடவை நனையறேனே", என்கிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது அவர்கள் சொன்னது ஒரு ஸ்டைல் டயலாக் என்று.

நம் ஊரில், நனைந்தவுடன் அனைவருக்கும் ஜலதோஷம் வந்து விடுகிறது. அடுத்தநாள் உடல் வலி வருமாம். நான்கு நாட்களுக்குக் காய்ச்சலும் சேர்ந்து கொள்கிறது. வரவில்லை என்றாலும், எப்பாடுபட்டாவது வரவழைத்து தன கூற்றை நிரூபிக்க சிலரால் முடிகிறது.  "ஹச்சு..... அது ஒண்ணும் இல்ல, நேத்து கொஞ்சம் மழைல நனைஞ்சுட்டேன்.....ஹச்சு....."

நனைவதை வாடிக்கையாய்க் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றும் வராது என்பேன் என் நண்பர்களுக்கு. "இவனுக்கு ஏதோ சரியில்லை", என்னும் பார்வை வரும். அல்லது அடுத்த முறை இந்தத் தலைப்பில் பேச்சு வராது அவர்களிடமிருந்து.



நீங்கள் நனையாமல் விட்டு விட்டுத்தான் வருணதேவன் வர மறுக்கிறான் என்றும் சொல்லிப் பார்ப்பேன்.  "ஒரு வேளை இவனுக்கு எதாவது பிரச்னையோ" எனப் புருவங்கள் உயரும்.

இன்னமும் யாருக்கும் பயம் விட்டபாடில்லை.

மழையில் நனைதல் பற்றிய இந்தப் பாடலைக் கேளுங்கள்....

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி யாரும்
கதவடைக்க வேண்டாம்.


இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம்...
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்


அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்.



மழையில் நனைய வருகிறீர்களா?
.





.

ஆப்ரிக்காவில் விஜய T ராஜேந்தர்

அடடே..... சினிமா பாஷைல சொல்லணும்னா நம்ம "ஸஸரிரி" வெள்ளிவிழா கண்டுடுச்சிங்கோ! நூற்று எழுபத்தைந்து பதிவுகள் தாண்டிடுச்சி. இதை காமெடியா கொண்டாடணுமே...!! சரி இங்கே உங்களுக்காக ஒரு சீரியஸ் காமெடி!

_________________

அடடா.....ஆப்பிரிக்க இசை நம்ம விஜய டி. ஆர் அவர்கள் கை வண்ணத்துல என்னம்மா இருக்கு சார். (இந்த விடியோவில் 4:30 நிமிஷத்துல வருது பாருங்க) 

எனக்கு எதிரில் பேசற மனுஷன் பத்தி கூட இல்லை, எதிர்ல நின்னு இதைப் படம் பிடிச்சானே..... அவனை நினைச்சுத்தான்.....

சரி...சரி....நோ பீலிங்க்ஸ்....வாட்ச் தி விடியோ!



இவர் தமிழனாகப் பிறந்தது இவர் செய்த தவறா?

"ஒரு தலைக் காதல்" படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

Jun 24, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - முன்னுரை


"என்னைப்பற்றி" ஏற்கெனவே தனியே எழுதியிருப்பதால் தனியே இங்கே அதிகம் பேசாமல் உள்ளே நுழைகிறேன்.

இந்த பி.பீ.ஓ. வாழ்க்கைக்குள் நான் எப்படி ஒட்டிக் கொண்டேன் என்பது எனக்கே இன்னமும் விளங்காத விஷயம். ஏழெட்டு இடங்களில் வேலை பார்த்துவிட்டே இங்கே  வந்து சேர்ந்தேன்.

நயாகரா சிண்ட்ரோம் என்பார்கள், அதுபோலத்தான் போகிறது வாழ்க்கை. அது இழுத்த இழுப்பிற்குச் போய்க் கொண்டிருக்கிறேன். முந்தைய இடங்களில் வேலை பார்த்த போது கம்பெனி பஸ்களிலும்,  கம்பெனி கார்களிலும் அலுவலக அடையாள அட்டையை கழுத்தில் சுமந்து பயணம் செய்யும் வாலிப வாலிபிகளைக் காணும்போது சற்றே ஏக்கமாக இருக்கும். இது போல நாமும் பட்டை கட்டிக் கொண்டு உயரமான பஸ்களிலும், கார்களிலும் வேலைக்குப் போக வேண்டும் என்று. அவர்கள் கண்களில் தெரிந்த தூங்காத இரவுகள், உண்ணாத பொழுதுகள் மற்றும் இன்னபிற கஷ்டங்களை நான் அப்போது பார்க்கவில்லையோ என்னவோ.

இங்கே வாழ்க்கை கஷ்டமானது இல்லை. ஆனால் உங்களை எளிதில் மூழ்கடித்துத் தொலைக்க வைக்கும் திறமை இந்தத் துறைக்கு உண்டு. நீங்கள் இங்கே கிடைக்கும் அத்தனை அற்ப சந்தோஷங்களிலும் மூழ்கி உண்மையான சந்தோஷங்களைத் தொலைத்துக் கொண்டே இருப்பீர்கள். எனினும் வாழ்க்கை செல்கிறது.

நான் இந்தக் கார்ப்பரேட் ஓட்டத்தை இன்னமும் முழுசாய்க் கற்றுக் கொள்ளவில்லை. என் போன்றவன் கற்றுக் கொள்ள இயலுமா எனவும் தெரியவில்லை. இருந்தாலும், வந்த புதிதிற்கு இன்றைக்குத் தேவலை எனலாம். வந்த புதிதில் இங்கு எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது. 

பல்லவன் பஸ் ஏற பதினைந்து நிமிடம் நடந்தவனுக்கு, வீட்டு வாசலில் கார் வந்து நின்று ஆபீஸ் அழைத்துச் சென்றது. "டேய், நீ வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா" என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

வென்டிங் மெஷின் வைத்து அதில் இலவசமாக காபி, டீ, சாக்லேட் பானம்  தருவது எனக்கு பலரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்தியாக இருந்தது. எங்கே நுழைய வேண்டுமானாலும் சரி, வெளியேற வேண்டுமென்றாலும் சரி ஒரு ஆக்சஸ் அட்டை வேண்டும் இங்கு, கழிப்பறை உட்பட. அடக் கடவுளே என்று இருந்தது முதல் சில நாட்களுக்கு.

வயது பதவிகளைத் தாண்டி இங்கே எல்லோரையும் பெயர் சொல்லியழைக்கும் கலாச்சாரம். சாரும் கிடையாது, "மிஸ்டர் மிசஸ்" அது கூட கிடையாது. நேரிடையாக "முதல் பெயர்" சொல்லி அழைத்தல், இது பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருந்தாலும் பழகிக்கொள்ள நாள் பிடித்தது.

என்னைச் சுற்றி எல்லோரும் மிக புத்திசாலிகளாகத் தெரிந்தார்கள். எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது. அறிவுக்கும் திறமைக்கும் வித்தியாசம் கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்குப் புரிந்தது.

இப்படியாக நான் திறந்த வாயை மூடிக் கொள்ள எனக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடித்தன.

இந்தச் சூழல், வாழ்க்கை எனக்குப் பழகி விட்டது. இங்கே நான் காணும் சக மனிதர்கள்? இந்த அனுபவங்கள்? 


அவர்களை....அவற்றைப் பற்றிய என் நாட்குறிப்புகள்தான் இந்தத் தொடர்.

தொடங்கலாமா?
.
.
.

Jun 23, 2010

தமிழுக்கு மாநாடு!

தம்பி மனோஜுக்கு,
மாநாடு பத்தி நான் ஒண்ணும் எழுதலை, அப்படின்னு சொன்னியே! இதோ எழுதிட்டேன்.

உலகச் செம்மொழி மாநாடு கோவையில் இதோ இப்போது தொடங்கியுள்ளது.

வெளி வந்த விளம்பரங்கள், செய்திகள், புகைப்படங்கள், ஒளிப்படங்கள் அனைத்திலும் அய்யா கலைஞர் அவர்களே தமிழையும் தாண்டி முன்னிறுத்தப் பட்டிருந்தார். இதோ கலைஞர் செய்திகள் தொலைகாட்சி நேரிடையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத் துளிகளில் பேசும் அனைவரும் தமிழைக் குறித்துப் பேசுவதை விட கலைஞரைப் பற்றித்தான் அவர் செய்யும் சாதனைகள் பற்றித்தான் அறை  கூவுகிறார்கள்.

யதேச்சையாக நண்பர் செந்தில் தொலைபேசியில் வந்தார். மாட்டினாண்டா இந்த கழகச் செம்மல் என்று கேட்டேனே ஒரு கேள்வி.

"யோவ், இது என்னய்யா, தமிழுக்கு மாநாடா இல்லை உங்க தலைவருக்கு மாநாடா?"

"ரெண்டும் வேறயா நண்பரே?", என எதிர்க் கேள்வி வந்தது.

மேற்கொண்டு நான் பேசியிருப்பேன் என நினைக்கிறீர்களா?
.
.

Jun 22, 2010

ராவணன் - சில கேள்விகள்

என் ராவணன் விமரிசனப் பதிவைப் படித்துவிட்டு, கிராண்ட் ஸ்லாம் என்ற பெயரில் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். 




மணிரத்தின ரசிகருக்கு,
உங்கள் பிடித்த பத்து பட்டியலில் மணிரத்னம் இருக்கும்போதே நினைத்தேன், நீங்கள் ராவணன் படத்திற்கு ஜல்லியடித்து ஒரு விமரிசனம் எழுதுவீர்கள் என்று. என் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் எழுதியிருக்கிறீர்கள், நன்றி. 

என்னிடம் ராவணன் குறித்த பல கேள்விகள் உள்ளன, அவற்றில் சில இங்கே. இதில் ஒன்றிரண்டிற்காவது உங்களால் பதில் தர முடிகிறதா பார்க்கிறேன். 

- சீதைக்கு ராவணன் மீது காதல் வந்ததா இல்லையா என்பதை உங்கள் குருநாதர் தெளிவாகக் கூறவில்லையே, ஏன்? பயமா? (கடைசிக் காட்சியில் சீதை "பக் பக் பக்" என்னும்போது நமக்கு "பக் பக் பக்" என்கிறது) 

- படம் முழுக்க மழையினூடே எடுக்கும் அவசியம் என்ன? படம் பார்த்த பலருக்கு ஜலதோஷமாமே? 

- கார்த்திக் ஆஞ்சநேயராக இருக்கட்டும், அதற்கென அவர் வரும் காட்சியெல்லாம் குதித்துக் குதித்து வெறுப்பேற்றுவது எதையும் சிம்போலிக் ஆகக் காட்டுவதாகத் தெரியவில்லை. எரிச்சலே படுத்துகிறது. 

- தன் மனைவி வீராவிடம் இருக்கும்போது எந்த தைரியத்தில் வீராவின் தம்பியை தேவ்  கொல்கிறான்? 

- ஹேமந்தை வீரா கொல்லாதது ஏன்? அவர் லக்ஷ்மணன் என்பதலா? (வரலாற்றை மாற்ற உங்கள் குருவுக்கு மனமில்லையா? - லக்ஷ்மனைனை அம்மணப் படுத்தியதைக் காட்டிலும் கொன்றிருக்கலாம்)

 படத்தில் நான் காணும் சில க்ளீஷேக்கள்: 

- ஆதிவாசி காலனியை மழைக்கு நடுவே ரெய்டு செய்து அடித்து உதைக்கிறது போலிஸ், திண்ணையில் ஒரு அம்மணக் குழந்தை அழுகிறது.
- போலீஸ்காரன் மனைவி சொல்லி வைத்தாற்போல் ஒரு நடனமணி.
- கிளைமாக்சில் ஒற்றைக்காலில் குதிக்கும் ராவணனுக்குக் கை கொடுக்க வருகிறார் சீதை, நம்மவர் ராவணனாக இருந்தாலும் அவர் தமிழ் ராமணன் (!!!) அல்லவா, கையைப் பிடிக்காமல் அந்தண்டை குதிக்கிறார். கொடுமைடா ராமா!
- மணிரத்ன க்ளீஷேக்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.
- மெல்லிசான குரலில் யாருக்கும் புரியாமல் அல்லது "ஜெயமுண்டு பயமில்லை" போன்ற பாரதி பாடல்களை உரக்கப் பாடும் கதாநாயகி, மேலும் மழைப் பாடல்(கள்).

இப்படிக்கு,
கிராண்ட் ஸ்லாம்
.
.
திரு / திருமதி / குமரி கிராண்ட் ஸ்லாம் அவர்களுக்கு,

உங்களுக்கு முதலில் என் சலாம், என்னை வாசித்தமைக்கு. அடுத்து இன்னும் ஒரு சலாம், இப்படி அதிரடியாக என்னை நம்பி முழ நீளத்திற்கு ஒரு மடல் வரைந்தமைக்கு. 

இந்த மாதிரி கேள்விகளுக்கு விடையளிக்க நான் கதை விவாதக்குழுவில் பங்கு பெற்றவனில்லை. நான் ரசித்தவைகளை மட்டுமே பதிவிட்டிருக்கிறேன். படத்தில் குறைகள் உண்டு எனவும் சொல்லியிருக்கிறேன். அதைப் படிக்காமல், எங்கேயோ கேட்கவேண்டிய கேள்விகளை நீங்கள் என்னை பார்த்து கேட்பதில் என்ன நியாயம். இதில் சில கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க இயலும். ஆனால் நீங்கள் இன்னமும் கேள்விகளை வைத்திருக்கிறேன் என்று சொல்லி பயமுறுத்துவதால், என் பதில்களுக்குப் பலனோ பயனோ ஏதும் இருக்காது என்று உறுதியாக நம்பி பதிலளிப்பதைத் தவிர்க்கிறேன்.

நன்றி,
கிரி

FIFA 2010 - அட்டகாச அட்டவணை



என் சகோதரி ஒருத்தி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தாள். (விளக்கம் கீழே ஆங்கிலத்தில்)








This one is really amazing. Just go to this link and you can drill down the entire competition to team wise, group wise, date wise and ground wise matches on a single screen just by navigating your mouse around. (IST=Local time+3.5 hrs)


“Even if you are not a soccer fan, just have a look at the way the calendar is designed!!!!” 
.
.
.

Jun 21, 2010

FIFA 2010 பார்வைகள் - II

வினோஸ் கார்னர்
உலகக்கோப்பை கால்பந்து விமரிசனங்கள் - II
சிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்


நான் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டாலும் நீங்கள் உலகக்கோப்பை பார்ப்பதில் இடைவெளி ஏதும் வந்திருக்காது என நம்புகிறேன். இதுவரை வந்த முடிவுகள் அப்படி ஒன்றும் தலையெழுத்துகளைப்    புரட்டிப் போடுமாறு அமையவில்லை என்றாலும்.....



....நம் எதிர் பார்ப்பிற்கு மாறாக இன்னும் எத்தனை ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ எனத் தெரியவில்லை. சுவிஸ்சுக்கு எதிரான ஸ்பெயினின் தோல்வி நிச்சயம் எல்லோரைப் போலவும் எனக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று. ஆனால், அதன்பின் வந்த மெக்சிகோவிற்கு எதிரான பிரான்சின் தோல்வி, செர்பியாவிடம் ஜெர்மனியின் தோல்வி ஆகியவை அடுத்த ரவுண்டுக்கு யாருடா போகப் போறீங்க என நம்மை நகம் கடிக்க வைத்துள்ளன.

மேலும் இதில் நகைப்புக்கு உரிய விஷயம் என்னவென்றால் பங்கு பெற்ற மற்ற ஜாம்பவான் அணிகள் ஜெயிக்கக் கூடியவைகளாக நாம் நினைத்த ஆட்டங்களைக் கூட டிரா செய்து சமரசம் செய்து கொண்டன.



உருகுவே, அர்ஜென்டினா, ஸ்லோவேனியா, கானா, நெதர்லாந்த், பராகுவே, பிரேசில், சிலி மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் இப்போதைக்கு அந்தந்த பட்டியல்களில் முதலிடம் பெற்றுள்ளன. எங்கும் தோற்காமல் ஒரே போக்கில் அடுத்த ரவுண்டில் ரவுண்டு கட்டிடுவோம் சார் என உத்திரவாதம் தருகின்ற அணிகள் இவை.

அடுத்து நான் சொல்லும் லிஸ்டில் நான்கு நாடுகள் இப்படித் தத்தளிக்கும் என நான் என்றுமே கனவில் கூட நினைத்ததில்லை. இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், காமெரோன், ஐவோரி கோஸ்ட் இவை அனைத்துமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள். எதிர்பார்த்த ஆட்டத்தை இவர்களிடம் காண இயலவில்லை (இது வரை)



இருந்தாலும் பாருங்க....எங்க இன்னிங்க்ஸ் இன்னும் முடிஞ்சிடலை பாஸ் என அந்த அணி கேப்டன்கள் இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதால், மிச்சமுள்ள முதல் சுற்று லீக் ஆட்டங்களையும் பார்த்துவிடுவோம் என்பதுதான் நான் இன்று சொல்லிக் கொள்வது.

மீண்டும் விரைவில் சந்திப்போம்,
நட்புடன்,
வினோத்.
.
.
image courtesy: http://blogs.indiewire.com
.

Jun 19, 2010

பெயரின்றி அமையாது உலகு

ஸஸரிரிக்கு மற்றுமோர் சிறப்புப் பதிவர். இந்த முறை எழுதுபவர் என்னை எழுதியவர் - என் அம்மா!
__________

சத்தியப்பிரியன் எழுதிய
"பெயரின்றி அமையாது உலகு" (சிறுகதை)
சிறப்புப் பதிவர்: ஆர்.சுசிலா



ஜூன் 2'ஆம் தேதியிட்ட விகடனில் வந்த இந்தச் சிறுகதை மனதைத் தொட்டது.

வயதானவர் ஒருவர் தன பெயரை யாராவது கூப்பிட மாட்டார்களா என ஏங்குகிறார். தான் பிறந்து வளர்ந்த ஊருக்கே வருகிறார். ஒவ்வொரு நண்பராகத் தேடுகிறார். ஒருவர் அமெரிக்காவில், ஒருவர் சந்தன மாலையுடன் போட்டோவில் எனப் பார்த்து மனம் நோகிறார்.

தன்னை யாராவது பேர் சொல்லிக் கூப்பிடமாட்டார்களா என அவர் எங்கும் ஏக்கம்தான் கதையின் கரு. 

கடைசியாக ஒரு வீட்டின்முன் நிற்கிறார். அவர் பள்ளித் தோழன் சுந்தரேசன் வீடு. பள்ளி நாட்களில் சுந்தரேசன் சேகரித்த அழகிய ஸ்டாம்புகளில் சுவிட்சர்லாந்த் ஸ்டாம்ப் இவர் கைக்கு வந்து விடுகிறது. இதை அறிந்த சுந்தரேசன் கோபம் கொண்டு உன்னை இனி பெயர் சொல்லியே கூப்பிடமாட்டேன் என சூளுரைக்கிறார். அந்த சுந்தரேசனைத்தான் பார்க்க வருகிறார்.

அவர் மகன் உள்ளே அழைத்துப் போகிறார். சுந்தரேசன் தொண்டையில் முற்றிய கான்சரால் பேச முடியாதவராக இவரைப் பார்க்கிறார். குழறியபடியே அவர் சொல்லும் அவர் வகுப்புத் தோழர்களின் பெயர்களை (அகர வரிசைப்படி) மகன் மொழி பெயர்க்கிறார். சற்றேறக்குறைய சுந்தரேசன் அனைவருடனும் தொடர்பு கொண்டு விட்டாராம். பெயர் சொல்லி அழைக்க முடியாத வண்ணம் அனைத்து நண்பர்களும் முதுமை காரணமாக இறந்து கொண்டேயிருக்க, அவருடைய தேடுதலில் அகப்படாமல் இருந்தது  'இந்தப் பெரியவரின்' பெயர் மட்டும்தானாம். 

உங்களை சந்தித்ததில் அப்பா மிகமிக மகிழ்ச்சி அடைகிறார் என மகன் மொழி பெயர்க்கிறார். முதுமையின் பெருமையே சக வயசாளியின் இருப்பை அறிவதுதான் என நம் கதாநாயகன் நெகிழ்கிறார்.

கான்செர் செல்கள் மூச்சுப் பாதையை அரித்து விட்டன. எதன் காரணமாக அவர் உயிருடன் இருக்கிறார் என்பது மருத்துவ அதிசயம் என மகன் கூற, அது என் பெயரை உச்சரிப்பதற்காகத்தான் என பெரியவர் கூறுகிறார். மகனுக்குப் புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வந்தால், பேச்சுப் பயிற்சி  தருபவர் பயிற்சி கொடுத்த பின், அவர் பேசலாம் என மகன் கூறுகிறார்.

சுந்தரேசனோ முதலில் பற்றிய பெரியவரின் கையை விடவேயில்லை. இன்னமும் இறுகப் பற்றிக் கொள்கிறார்.

ஒரே கணம்தான், தன் சுவாசம் முழுவதையும் நிலைப்படுத்தி கான்சரால் வலிக்கும் தொண்டையைச் சரிப்படுத்து பலத்த முயற்சியுடன் சுந்தரேசன் வாயிலிருந்து கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருந்த அவர் பெயர் பொங்கி வழிகிறது....

"சஹஸ்ர நாமம், டேய் சஹஸ்ர நாமம்"

பெயர் அங்கேயே உயிர் பெற்றது எனக் கதை முடிகிறது.

கதையின் கரு சாதாரண மனித ஆசையைப் பற்றியதாக இருந்தாலும், அதைச் சுற்றிய சிலந்திவலைப் பின்னல் போன்ற அழகிய சம்பவங்களும் அழகான நெஞ்சை நெகிழ வைக்கும் முடிவும் அற்புதம்.
.
.
.Image Courtesy : http://teriberi.files.wordpress.com

ராவணன் - என் பார்வை

Image Courtesy: http://movies.rediff.com

வழக்கம்போல ரொம்பவும் ரிஸ்க்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மணி. ராவணன் நல்லவன், ராமன் (கிட்டத்தட்ட) நல்லவனில்லை எனும் "ராவண காவியம்" சொல்லியிருக்கிறார் இந்தமுறை.

இராமாயணத் தொடர்புகளைத் தாண்டிப் பார்த்தோம் என்றால் படத்தில் பேச பல விஷயங்கள் உண்டு. 


மக்களுக்கு நல்லவன், போலீசுக்குக் கெட்டவன் என்று ஒரு ரிபெல் கதாபாத்திரம் விக்ரமுக்கு. அம்பை, வி.கே.புர சுற்றுவட்டாரக் காடுகள் அவரது வாசஸ்தலம். விக்ரமை வேட்டையாட வருகிறார் எஸ்.பி. பிருத்விராஜ். 

தன் தங்கை முடிவிற்குக் காரணமான பிரித்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்துகிறார் விக்ரம். பிரித்விராஜ் மனைவியைத் தேடுகிறார். காட்டிலே அந்தப் பதினான்கு (!!) நாட்களில் விக்ரமுக்கு ஐஸ் மேல் ஈர்ப்பு ஏற்பட, அது கொஞ்சம் கொஞ்சமாய் டெவலப் ஆக....அதன் பின் யார் யாருக்கு என்ன ஆச்சு, எப்படி போச்சு என்பதுதான் படம்.

மணியிடமிருந்து விக்ரமுக்கு இது டூ லேட் சான்ஸ். இருந்தால் என்ன? தந்த கதாபாத்திரத்தை பிரித்து மேய்ந்திருக்கிறார் விக்ரம். கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, வையாபுரி, இவர்களும் உண்டு படத்தில்.

ரொம்பவெல்லாம் சிக்கலாக்காமல், விக்ரமின் ஐஸ் மீதான இந்த விவகார ஈர்ப்பை ரொம்பவும் நீட்டி முழக்காமல், குறிப்பாய் அவர் விரகதாப உணர்வுகளை நுண்மையாகப் பதிவு செய்யாமல் படம் தந்திருப்பது ராவணனின் குறிப்பிடத்தக்க பிளஸ். "கோடு போட்டா" பாடல் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களும் படத்துடன் பின்னிப் பிணைந்து வருவது நல்ல  திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டில் இருந்ததை  விடவும் திரையரங்குகளில் தனியே ஈர்க்கிறது. குறிப்பாக பாடகர் கார்த்திக் "உசுரே போகுதே" என்னும்போது நமக்குத் தலை சுழல்கிறது.


ஆரம்ப காலம் தொட்டு மணியின் படங்களில் கேமரா எப்போதுமே தனிக் கவனம் பெற்றிருக்கும். ராவணன் மட்டும் விதிவிலக்கா என்ன? முழுக்க முழுக்க அவுட்டோரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ்சிவனின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.

சுஹாசினியின் வசனங்கள்  படத்தின் மற்றுமொரு பலம்.  (எய்யா இப்பிடி முந்திக்கிட்டீறேன்னு கேக்கணும், என்னக் கொல்லப் பெறந்த பெரிய ஆசாமி யாருன்னு இப்பல்லா புரிஞ்சுது, நான் SP கட்சிதான் ஆனா ஓட்டு உனக்குத்தான்).சிக்கலான சில இடங்களில் கூட நாசூக்காக அல்லது நுணுக்கமாக வசனம் கையாளப்பட்டுள்ளது.

அங்கே இங்கே குறைகளும் உண்டு. எனினும் படத்தின் பிளஸ்களுக்கு   எடை   அதிகம். வியாபார ரீதியாகப் பார்த்தால் இப்படம்...... அட அதை விடுங்க, அது எதுக்கு நமக்கு. அதை மணி சார் பார்த்துப்பார்.

பி.கு: இராமாயண ஒற்றுமைகளை இணைய உலகில் எல்லோரும் கவனித்து பிரித்து மேய்கிறார்கள். இந்த ஒரு ஒற்றுமையையும் மணி விட்டு வைக்கவில்லை. லக்ஷ்மணன் (ஹேமந்த்) சூர்ப்பனகை (ப்ரியாமணி)மூக்கைத் திருகுகிறார். அடடா...என்ன சொல்ல.
.
.
.

Jun 18, 2010

மணிரத்ன தினம்



பத்துத் தலைகள்
பத்து மனதுகள்
ஒரு நூறு குரல்கள்
ஒரு மனிதன்.


அப்படிப்பட்ட ஒரு மனிதன் எப்போதும் இருந்துள்ளானா?
அவன் ஒரு கதைதானா....இல்லை இப்போதும் எங்கேனும் வாழ்கிறானா?
நல்லதையும் அல்லதையும் பிரிக்கும் அந்த ஒற்றை வரிதான் எது?
நாம் எதிராளியின் பார்வையில் காணத் தொடங்குகையில் நம் புரிதல் நிலையிலும் மாறுதல் ஏதேனும் ஏற்படுகிறதா?
........
...........


இந்த ஒற்றையைக் காட்டிலும் அந்தப் பத்துத் தலைகள் சிறந்தனவா என்ன?
அந்த ராவணனுள் ராமனின் பண்பு வாழ்ந்ததா?
இங்கே நம் ஒவ்வொருவருள்ளும் ஒரு ராவணன் இருக்கிறானா?


இப்படி மணிரத்னம் அவர்கள் எழுப்பும் கேள்விகளுடன் ராவணன் இன்று வெளிவருகிறது. காலை சிறப்புக் காட்சி பார்க்கப் போய்க்கொண்டேயிருக்கிறேன். 


மாலையில் அலுவலகத்தில் விழா ஒன்றில் மணிரத்னம் படத்தில் இடம் பெற்ற காதல் ரோஜாவைப் பாடவிருக்கிறேன்.


இன்று மணிரத்ன தினம் எனக்கு!
.
.
.

Jun 17, 2010

என்னாச்சு ஸ்பெயினுக்கு?

முன்னுரை: வினோத் தந்த நம்பிக்கையில் ஒரு ஆர்வக் கோளாறில் இந்தக் கன்னி முயற்சி. இது விமரிசனம் அல்ல. ஸ்பெயின் தோற்றுப் போச்சே என்கிற புலம்பல்.




Spain0:1Switzerland-


ன்ன சார்... ஏதோ கோப்பைய வெல்லப் போறாங்க அப்படி இப்படின்னு பெருசா பில்ட் அப்பு எல்லாம் குடுத்தாங்க? இப்படி சுவிஸ் வந்து ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாங்களே ஸ்பெயினை?


இந்த உலகக் கோப்பையின் முதல் பெரும் அதிர்ச்சி இதுவாகத்தானிருக்கும்.


சுவிஸ் நாட்டின் பெர்னான்டெஸ் இன்னும் எத்தனை நூறு கோல்கள் அடித்தாலும், இன்று அடித்த அந்த கோலை நிச்சயம் மறக்க மாட்டார். ஒன்றா இரண்டா சார்...? கஜினி போல இந்த ரெண்டு அணிகளுக்கு இடையேயான பதினெட்டு ஆட்டங்கள்ல  ஸ்பெயின் அணிக்கு எதிராக சுவிஸ்சுக்கு வந்திருக்கும் முதல் வெற்றி இது.


சுவிஸ் நாட்டின் மிட் பீல்டர் பெஞ்சமின் ஹக்கல் என்ன சொல்றாரு பாருங்க
"This has to be counted as the biggest night in our country’s football."
இல்லையா பின்ன?

Goalscorer Gelson Fernandes (L) of Switzerland celebrates victory with team mate Benjamin Huggel


கடைசியா ஸ்பெயின் கோச்சுக்கு ஒரு கேள்வி - ஆட்டத்தோட அறுபதாவது நிமிஷம் வரைக்கும் டாரஸ் உள்ள உட்கார்ந்திருந்த ரகசியம் என்ன?
.
.
.

Jun 16, 2010

சஹானா



ராகம், தாளம், பல்லவி இவற்றில் நீங்கள் விற்பன்னரா? அப்படியென்றால் இந்தப் பதிவு ஒரு கத்துக் குட்டியின் கிறுக்கல்கள்.

தோ அரைகுறையாய்ப் பாடுவேனே தவிர்த்து, எனக்கு ராகங்களை கண்டறியும் இசை ஞானம் ரொம்பவும குறைவே. கல்யாணி வகையறா ராகங்களை கொஞ்சம் கண்டறிவது சுலபம். காரணம், நான் இசையை நன்றாய் ரசிக்கத் துவங்கிய என் பதின்பருவத்தில் ராஜா அவற்றை தன் இசையில் அதிகம் பயன்படுத்தியதால். உ.ம். அம்மா என்றழைக்கத, கலைவாணியே, யமுனை ஆற்றிலே, ஜனனி ஜனனி, சிறு கூட்டுல, சுந்தரி கண்ணால் ஒரு சேதி. (சரிதானா?), 


எனினும் நான் முதன்முதலில் ராகம் என்னும் விஷயம் பற்றித் தெரிந்து கொண்டது "சஹானா" ராகம் கேட்டபோதுதான். 

சஹானா அதிகம் பயன்படுத்தப்படாத ராகம் என்றாலும், இசை ஆர்வலர்கள் பலருக்கு இது மிகப் பிடித்த ராகம்.

ரஹ்மான் அவர்கள் கூட சஹானா அல்லது சஹானாவைத் தழுவிய ராகங்களை அடிக்கடி அவர் இசையில் பயன்படுத்தி இருக்கிறார். ஒரு சிறப்பான உதாரணம் "அன்பே சுகமா (பார்த்தாலே பரவசம்).

பிரபலமாக சஹானாவில் அமைந்த திரைப்பாடல்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்....

பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யு)
ருக்கு ருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி)
சஹானா (சிவாஜி) - இது சஹானாதானா?

இந்தப் பழைய "ரயில் சிநேகப்" பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சஹானா ராகத்திற்கு என் நெஞ்சில் நீங்கா இடம் தந்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடல் பற்றி  பேச நிறைய உண்டு, எனினும், இப்போது இந்தப் பாடல் உங்களுடன் பேசட்டும்.







சஹானா ராகம் குறித்த யுடியூப் தேடல்களில் கிடைத்த இன்னொரு முத்து இங்கே.....

Jun 15, 2010

FIFA 2010 பார்வைகள்

வினோஸ் கார்னர்
உலகக்கோப்பை கால்பந்து விமரிசனங்கள்
சிறப்புப் பதிவர் ௦ - வினோத் கோவிந்தன்


நான் ஒரு அதிதீவிர இங்க்லீஷ் பிரிமியர் லீக் ரசிகன். பெரும்பாலான மேட்ச்களை அங்கு பார்த்துவிட்டு நான் வேண்டிக் கொண்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் ஆதர்ச ஆட்டக்காரர்கள் யாரும் எந்த காயம் காரணமாகவும் உலகக் கோப்பையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் அது. இறுதியாக இந்த நான்கு வருடக் காத்திருப்பிற்குப் பின் அந்த ஜூன் பதினொன்றாம் தேதி வந்தே விட்டது. தென் ஆப்பிரிக்காவில் உதய நேரத்தில் அன்று கால்பந்தைப்போல் சூரியன் காட்சியளித்தானாம்.

ஒரு சின்ன அறிமுகம் தரவேண்டுமென்றால்.... இங்கே முப்பத்தி இரண்டு அணிகள் FIFA அங்கீகாரம் பெற்று உள்ளே நுழைந்துள்ளன. எட்டு குரூப்புகள், ஒவ்வொரு குரூப்பிலும் நான்கு அணிகள். முப்பத்தி இரண்டில் ஒன்றாய்த் தானுமிருக்க உலக அணிகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய்த் தகுதிச் சுற்றுகள் விளையாடின. அர்ஜென்டீனா அணி பிரயத்தனப் பட்டு உலகக் கோப்பைக்குள் நுழைந்தது எனக்கு மெத்த மகிழ்ச்சி.

பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது ஒரு தனி ரெகார்ட். இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் முறையே 4, 3 மற்றும் 2 முறைகள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொருமுறை வென்று தம் கணக்கைத் துவக்கின.

பிரேசில் மட்டுமே இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கோப்பைப் போட்டிகளிலும் பங்குபெற்ற தகுதி பெற்ற ஒரே அணி. அவர்கள் இந்த முறை கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதா? பார்ப்போம்!




சரி, இதுவரை நடந்த போட்டிகள் பற்றி கொஞ்சம் அலசலாம்.

மூன்று நாட்கள் முழுதாக முடிந்துள்ளன. ஒரு சில முதல் வரிசை அணிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துள்ளன. உள்ளதில் சிறந்ததாய் ஜெர்மனி - ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை சொல்லலாம். ஆஸ்திரேலியாவை உதை உதையென உதைத்து ஆரோக்கியமாக 4-0 என வென்றுள்ளது ஜெர்மனி.

இதர அணிகள் இதுவரை நல்ல ஆட்டத்தைக் கொடுத்திருந்தாலும் ஒரு பலமான திடமான ஆக்ரோஷ ஆட்டம் இன்னும் நம் கண்ணில் படவில்லை.

ராபர்ட் கிரீன் செய்த ஒரு சில்லித் தவறால் அமெரிக்க அணி இங்கிலாந்தை டிரா செய்தது. இங்கிலாந்தின்  கோல்கீ புண்ணியத்தில் அமெரிக்க டெம்ப்சி தன் கணக்கில் ஒரு கோலைச் சேர்த்துக் கொண்டதுதான் இந்த உலகக்கோப்பையின் ஆரம்பக் காமெடி.

அர்ஜெண்டினாவின் மெஸ்சி எப்போதும் எல்லோருக்கும் ஸ்பெஷல்தான். நைஜீரியாவுக்கு எதிராக அவர் கொடுத்த ஒவ்வொரு அடியும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி எனலாம். என்றாலும் அவரை மென்று விழுங்கும் வண்ணம் அவருக்கு எனிமா தந்தார் நைஜீரிய கோல்கீ எனியேமா (Enyeama). மேட்ச் முடியும்வரை எனிமா தன் கட்டுப்பாட்டில் மெஸ்சியை வைத்துக் கொண்டார்.

கால்பந்தில் தலைசிறந்த எதிரிகளான உருகுவே பிரான்ஸ் அணிகளின் ஆட்டம் எதிர்பார்த்தபடி டிராவில் முடிந்தது.

ரொனால்டோ, காகா, வான் பெர்ஸி மற்றும் இன்னபிற முன்னணி ஆட்டக்காரர்களின் ஆட்டங்களைக் காண ஆடுகளங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

விரைவில் சந்திப்போம்.....

நட்புடன்,
வினோத்
.
.
.
.

விரைவில்...

ஸஸரிரியில் நமது நண்பர் வினோத் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் குறித்த விமரிசனங்கள் எழுதவிருக்கிறார்.

காத்திருந்து படியுங்கள்.





வினோத் ஒரு தீவிர கால்பந்து விசிறி. நான் கால்பந்து விஷயத்தில் லாலுஜி போல. அட எல்லாருக்கும் தனித்தனியா ஒவ்வொரு பந்து வாங்கி ஒதைக்க சொல்லுப்பா. ஒரே பந்துக்கு எல்லாரும் சண்டை போடறானுவ என்பேன் நான்.

வினோத்திடம் கால்பந்து பற்றி நாள்முழுக்க விவாதிக்கலாம். மேலும் அவர் ஒரு சிறந்த சினிமா விமரிசகர். எல்லாப் படம்களும் பார்த்துவிடுவார். என் எண்ணத்தில் சொல்லவேண்டுமென்றால், இன்னும் பத்து வருட காலத்திற்குள் இவர் கைவண்ணத்தில் ஒரு திரைப்படம் வரத்தான் போகிறது..
.
.
.
.

Jun 14, 2010

காதலில் சொதப்புவது எப்படி

இந்த விடியோவைப் பாருங்கள்.

ஓ... வாவ்! அழகான குறும்படம். காஸ்டிங், நடிப்பு, பின்னணி இசை என அனைத்திலும் கலக்கி எடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக அந்தப் பேருந்துக் காட்சி, அங்கே fade ஆகி வரும் ஜனனியின் குரல், அடடா அற்புதமான இயக்கம். ஆதித்தின் இயல்பான நடிப்பும் அவர் குரலும் இப்படத்திற்கு உயிர் கொடுக்கிறது.

பாலாஜி மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்.




நன்றி: Open Window Creations

Jun 11, 2010

மாவோக்கள் அல்ல?

மாவோக்கள் அல்ல, பயங்கரவாதிகள் என்ற என் பதிவில் கீழ் கண்ட கேள்வியை எழுப்பியிருந்தேன்.


சிவப்பு சித்தாந்தத்தை தவறு தவறாக போதித்தவாரும், இப்படிப்பட்ட கோரமுகம் கொண்ட பயங்கரவாத மாவோக்களை ஆதரித்துக் கொண்டும் இருக்கும் அருந்ததி ராய் மற்றும் இதர அதிமேதாவிகள் இதற்கு என்ன சப்பைக்கட்டு  சொல்லப் போகிறார்கள்?

இந்த வார ஆனந்த விகடனில் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் பேட்டி வெளி வந்துள்ளது. இது குறித்த இரு கேள்விகளும் அவர் தந்த விடைகளும் கீழே.

அவர் பதில்கள் உங்களுக்கு சமாதானம் அளிக்கிறதா எனச் சொல்லுங்கள்!



மாவோயிஸ்ட்டுகள் ரயில்களைக் கவிழ்ப்பதையும், அப்பாவிகளைக் கொல்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

"நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை, அதை யார் செய்தபோதிலும் ஒருபோதும் ஆதரிக்கப் போவது இல்லை. ஆனால், ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே 'இதை மாவோயிஸ்ட்டுகள்தான் செய்தார்கள்' எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூர மான முறையில் கொல்லப்படும்போதும், காடுகளைவிட்டுத் துரத்தப்படும்போதும் எங்கு போயிருந்தனர்? போராடும் மக்களின் சாதிப் பிரிவினையை அதிகப்படுத்தி 'சல்வா ஜூடும்' என்ற பெயரில் அரசக் கூலிப் படைகளை உருவாக்கி, சொந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கிறது அரசு. இந்த சல்வா ஜூடும் என்கிற கூலிப் படை, இதுவரை சுமார் 700 கிராமங்களைத் தீயிட்டு அழித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்களைக் காடு களுக்குள் துரத்தி இருக்கிறது. எதற்காக? அந்த மக்களை அங்கே இருந்து துரத்தி, நிலத்தை அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக. இந்த அரசக் கூலிப் படையை உருவாக்கியவர் அந்தப் பகுதியின் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திர கர்மா என்பவர். சல்வா ஜூடுமுக்குச் சம்பளம் தருவது டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். இப்படி சொந்த அரசாங்கத்தால் எல்லா வகையிலும் கைவிடப்பட்ட மக்கள், வேறு வழியின்றிதான் மாவோயிஸ்ட்டுப் படையுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.
நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் காடுகளுக்குள் போராடுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. நிஜத்தில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணா மல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர்கள் நம்புகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது?"

" 'ஆமாம், நான் ஒரு மாவோயிஸ்ட்டுதான்' என நீங்கள் பேசியதாகச் செய்தி வந்ததே?"
"நான் சொல்லாத ஒன்றை ஏன் திரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் எதிர்ப்பியக்கம் பக்கம்தான் நிற்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறேன். இது வெளிப்படையான ஒன்று. ஆனால், ஏன் நான் சொல்வதை மாற்றுகிறார்கள்? இதன் பின் னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசை எதிர்த் தால்... முத்திரை குத்தப்படுவீர்கள் என்ற மிரட்டல் இருக்கிறது. நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங் களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று சொல்வதே சட்ட விரோதமாக இருக்கிறது.


நீங்கள் காட்டுக்குள் இருந்தால், உங்கள் நெஞ்சில் ஒரு தோட்டா பாயலாம். நாட்டுக்குள் இருந்தால், சிறையில் அடைக்கப்படலாம். இதற்குத் தயாராக இருந்தால், நீங்கள் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தயாராகலாம்!"

Jun 8, 2010

வாழ்க ஜனநாயகம் - follow up

ஆம் உண்மைதான்.!!

பரபரப்பாக அங்கங்கே ஒட்டுப் போடப்பட்ட திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை தயார். கொஞ்ச இடங்களில் நன்றாக, கொஞ்ச இடங்களில் சுமாராக, கொஞ்சம் மோசமாக, இன்னும் கொஞ்சம் போடப்படாமல் என சாலை தயாராகியுள்ளது.

கேட்டதற்கு, அய்யா அது வரைக்கும்தானுங்க வந்தாரு. அப்படியே அங்க நிகழ்ச்சியில கலந்துட்டு அப்படியே திரும்பிட்டாருங்க என்று பதில் வந்தது.. 


சரிதான், ஜனநாயகம்னா இப்படித்தான் இருக்கோணும்!


இதில் கவனிக்கத்தக்க விஷயம் இந்தச் சாலை நம் புதிய தலைமைச் செயலகத்திற்குக் கூப்பிடு தொலைவில் உள்ளது என்பதுதான்.

Jun 7, 2010

பதிவர் உலகம் என்றோர் உலகம்







பதிவர் உலகக் கத்துக்குட்டி நான். எல்லோரும் பதிவர் உலகக் கலகங்கள் குறித்துப் பேசி முடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  பலர் குதிக்கிறார்கள், சிலர் கதறுகிறார்கள், நிறையப்பேர் சிரித்து எக்காளமிடுகிறார்கள், நானும் கடந்த சில தினங்களாக அழவா சிரிக்கவா எனப்புரியாமல், ஆனால் ஒரு அதிர்ச்சியோடு இவற்றைப் பார்த்த வண்ணம் இருக்கிறேன். அனானித் தாக்குதல்களும், வசவுகளும் நான் பாராததில்லை. எனினும் இப்போது பதிவர் உலகில் நான் கேட்கும் கெட்ட வசவுகள் முன்னெப்போதும் இல்லா வண்ணம் எல்லை (அப்படி ஏதும் இருக்கிறதா என்ன?) மீறி இருக்கிறது.

இது நர்சிம் மற்றும் சந்தனமுல்லை ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட பிரச்னையாக மட்டுமே நான் காண்கிறேன். இடையில் பலர் ஊடாட ஒன்றுமில்லை. அப்படியே நான் ஊடாட விரும்பினாலும் இதில் நான் கருத்து கூற ஏதுமில்லை. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட குழுக்கள் எதிலும் நானில்லை. அந்த அளவிற்கு நான் இன்னும் வலையுலகில் வளரவில்லை (நல்ல வேளையாக). ஆகவே என் தளத்தில் கருத்து கூறும் அவசியமற்றுப் போகிறது.

இதையும் மீறி நான் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் விசா பக்கங்களில் வாசியுங்கள் . அங்கே படித்த பதிவு உள்ளதில் சிறந்ததாய்ப் படுகிறது எனக்கு. 

நண்பருடன் இதுகுறித்துப் பேசுகையில், தன் தளத்தில் பின்னூட்ட வசதியையே நீக்கவிருப்பதாகக் கூறினார். அத்தனை அதிர்ச்சி கலந்த பயம் அவரிடம் தெரிந்தது.  நிகழ்வுகள் அப்படித்தானிருக்கின்றன. சிலவற்றைப் படிக்கையில் எனக்கு நரகலை மிதித்த உணர்வே மேலிடுகிறது. பெரியார் சரியாய்த்தான் தமிழர்கள் குறித்துச் சொன்னார். 

நண்பர் எப்போதும் ஒன்றைச் சொல்வார், "இதுவும் கடந்து போகும்", என்று. அவரோடு இது தொடர்பாகப் பேசியபோது அவர் இது பற்றி அவருக்குத் தோன்றுவதாகச் சொன்னது...

....the darkest hour is before the dawn ...

நானும் இந்த விஷயத்திற்கும் இந்த வார்த்தைகள்தான் பொருந்துமோ என முதலில் எண்ணினேன். ஆனால் விஷயம் மென்மேலும் தீவிரமடைவதைக் காண்கையில் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்....

.........THE WORST IS YET TO COME ...........
.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...