Jul 31, 2010

வலைப்பின்னல் கனவுகள்....



நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த அர்த்த ஜாம இரண்டு மணியில் இப்போது நான் யார் கனவிலாவது நடமாடிக் கொண்டிருக்கிறேனா தெரியவில்லை. நான் தூங்கச் சென்றதும் என் கனவில் நடமாடுபவர்களுக்கு அது பற்றி நான் சொன்னாலேயன்றித் தெரியுமா எனவும் தெரியவில்லை.

இப்போது நான் இந்த விமரிசனத்தைத் தட்டச்சிக் கொண்டிருப்பது கனவா, நிஜமா, கனவினுள் கனவா எனும் மாயக் குழப்பங்கள் என்னுள். இத்தனைக்கும் காரணம் நான் பார்த்துவிட்டு வந்த இன்செப்ஷன் திரைப்படம்.

அலுவலகத்தில் மோகனின் நச்சரிப்பின் பயனாக நாங்கள் பத்து பேர் இரவுக்காட்சி போய் வந்தோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால்  மனதில் ஒரு நிறைவு என்பார்களே அது நிச்சயமாக இல்லை. படத்தின் முடிவில் ஏதேனும் கேள்விக்கு பதில் என்பார்களே அப்படியொன்றும் கிடைக்கவுமில்லை. குழப்பம் நிறையவே இருக்கிறது, கேள்விகள் எக்கச்சக்கமாகப் பிறக்கிறது. இருந்தும் இவையிரண்டும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.



மற்றவர்கள் கனவுக்குள் புகுந்து அதனுள்ளே மற்றோர் கனவை உருவாக்கி அதில் பயணித்து தகவல் திருட்டு நடத்தும் ஒருவன், அதே பாணியில் பயணம் செய்து ஒரு தொழிலதிபன் கனவினுள் புகுந்து எண்ணம் ஒன்றை விதைத்து அவன் தொழில் சாம்ராஜ்யத்தை சிதறடிக்கச் செய்யும் முயற்சியே இன்செப்ஷன்.

டைட்டானிக் படத்திற்குப் பிறகு (முன்னரும் கூடத்தான்) லியனார்டோ டி'காப்ரியோ படம் எதையும் நான் பார்க்கவில்லை. அந்த ரொமாண்டிக் மனுஷனா இந்த மனுஷன் என இருக்கிறது.


சிக்கலான கதைக்கு இடையே சில்லென்று எல்லன் பேஜ் படம் நெடுக வருகிறார். 


வழக்கமான படமாக இருந்தால் கதையைச் சொல்லிவிடலாம், இந்தக் கனவுப் பயணத்தை எப்படியும் எழுத்தில் கொண்டு வருவது கடினம். ரூம் போட்டு யோசித்து கதை அமைத்து தயாரித்து இயக்கி இருக்கும் க்றிஸ்  நோலனுக்கு ஒரு பெரிய வணக்கம் வைக்கலாம். மனுஷனாய்யா நீ?

படத்தின் இன்னொரு ஹீரோ "டோடெம்" என்ற பெயர் கொண்ட ஒரு  பம்பரம். இந்த பம்பரத்தை லியனார்டோ அவ்வப்போது சுற்றிவிட்டு  தான் இருப்பது கனவா நனவா என உறுதிப் படுத்திக் கொள்கிறார். பம்பரம் நில்லாமல் சுற்றினால் அது கனவு, சுற்றி நின்றால் அது நனவு. சரியாப் போச்சு போங்க என்கிறீர்களா?

கண்டிப்பாகப் படம் பாருங்கள். நீங்கள் சும்மாரான ஆங்கிலவாசி என்றால் "கனவு வேட்டை" என படத்தைத் தமிழில் பார்ப்பது உசிதம். ஆனால், கண்டிப்பாகப் பாருங்கள்.

நன்றி: படத்தின் இடையிடையே தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து எனக்குப் புரியும் தமிழில் மொழி பெயர்த்த மோகனுக்கு.
.
.
.

2 comments:

Senthil said...

//படத்தின் இன்னொரு ஹீரோ "டோடெம்" என்ற பெயர் கொண்ட ஒரு பம்பரம். இந்த பம்பரத்தை லியனார்டோ கையில் வைத்துச் சுற்றினால் அது நிஜம், இல்லையென்றால் அது கனவு எனப் புரிந்து கொள்ளவேண்டும். சரியாப் போச்சு போங்க என்கிறீர்களா?//
u r wrong. if totem stops its real, if it rotates without stop its dream

Senthil

Giri Ramasubramanian said...

@ Senthil

Good spot. thanks for this, will change it....

Related Posts Plugin for WordPress, Blogger...