Jul 27, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦5

பேய்க் கதைகள் - தொடர்ச்சி....




நாய்கள் அனைத்தும் மரத்தின் அடிப்பாகத்தில் எதையோ பார்த்து ஆக்ரோஷமும் ஆனால் சற்றே பயமும் கலந்து ஊளையுடன் சேர்த்துக் குரைக்கின்றன. இப்படி ஒரு விநோதப் பெருங்குரலை நான் அதுவரை கேட்டதில்லை.


சினிமாவில் நள்ளிரவையும், நடுக்காட்டையும் கலந்து காட்டும்போது கிலி ஏற்படுத்த தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் ஒன்றைச் சேர்ப்பார்கள். அது போல அந்த நாய்களின் சத்தம் திடீரென ஓய்ந்து போக, தூரத்தில் எங்கோ ஒற்றை நாய் ஒன்றின் ஊளையிடும் சத்தம் கேட்டது. 

என் அடிவயிறு சில்லிடுவதைத் தெளிவாகத் தனியே உணர முடிந்தது. என் கவனம் எதையோ யோசித்து எங்கோ திரும்பிப் போக பட பட'வென என் முதுகைத் தட்டினான் உதயா. "என்ன" என நான் சத்தமில்லாமல் தலையசைத்துக் கேட்க, மரத்தைக் காட்டி "உங்களுக்கு சத்தம் கேக்கலையா", என்றான். 

"கேட்டதா என்ன? என்று நான் யோசிக்குமுன் மீண்டும் குரைத்தல் வேலையைத் தொடங்கின நாய்கள். இப்போது இன்னும் நான்கு பங்கு ஆக்ரோஷம் சேர்ந்த குரல்கள்.

திடுதிப்பென நாய்கள் அத்தனையும் சொல்லி வைத்தாற்போல் ஒரே கணத்தில் எங்கள் வண்டி நோக்கித் திரும்பின. இப்போது குரைப்பு எங்கள் வண்டியைப் பார்த்தவாறே நிகழ்கிறது. டிரைவர் இருக்கையிலிருந்து பாய்ந்து எட்டி மறுபுறம் இருந்த ஜன்னல் கண்ணாடியை அவசர அவசரமாக ஏற்றி விடுகிறான் உதயா.

குரைத்தலைத் தொடர்ந்தவாறே மெதுவாக தாம் நின்ற இடத்தை விட்டு இடம்பெயர்ந்து எங்கள் வண்டி நோக்கி வரத் தொடங்குகின்றன அத்தனையும். இதை எப்படிப் புரிந்து கொள்வது என எனக்குத் தெரியவில்லை. 

கதவை மூடிவிட வேண்டும் என மட்டும் புரிகிறது. படாரெனக் கதவைச் சாத்திவிட்டு பரபரவென ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விடுகிறேன். சந்தேகம் வேண்டாம் என சைட் லாக்கைப் பொருத்திவிட்டு என்ன நடக்கிறது எனப் பார்க்கிறேன்.

எதையோ தொடர்ந்து துரத்துவது போல அந்த ஒரு டஜன் நாய்களும் எங்கள் வண்டி வரை குரைத்தவாறே வருகின்றன. நான் கண்களை உருட்டி சுழற்றிப் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் தென்படவில்லை. என்ன இவை, மடத்தனமான நாய்களா என நினைத்துக் கொள்கிறேன். 





எங்கள் ஜன்னல் கண்ணாடி நோக்கிக் குரைத்தல் மேலும் தொடர்கிறது. எனக்குத்தான் ஒன்றும் தென்படவில்லையோ? இப்படி அப்படித் திரும்பவும் பயமாகத்தான் இருக்கிறது. எதையாவது பார்த்துவிடுவோமோ?

இப்போது எங்கள் வண்டியை இன்னும் நெருங்குகின்றன நாய்கள். சடாரென சொல்லிவைத்தார்போல அனைத்தும் இடது பக்கமாகத் திரும்பி எங்கள் வண்டிக்கு முன்னதாக ஓட ஆரம்பிக்கின்றன. குரைத்தல் இப்போதும் நிற்கவில்லை. 


"உனக்கு ஏதாவது தெரியுதா", என்ற கேள்விக்கு "உங்களுக்கு ஏதாவது தெரியுதா?", என மறு கேள்விதான் பதிலாய்க் கிடைக்கிறது உதயாவிடமிருந்து.

ஒரே சீரான வேகம், ஜாக்கிங் செல்வது போல ஓடி ஓடி எதையோ தொடர்ந்து செல்லும் பாவனையில் இருட்டில் சென்று மறைந்தே விட்டன அத்தனை நாய்களும். குரைத்தல் காற்றில் கரைகிறது. கரைந்தே விடுகிறது.

அட ராமா என்னக் கொடுமைடா இது என ஒன்றும் புரியாமல் பெருமூச்சு விட்டுக் கண்ணை மூடினால் "கிளிக்" அதிரடியாக யாரோ கார் கதவைத் திறக்கும் ஓசை. தடதடக்கும் இதயத்துடன் திரும்பினால் ........ 

.....மெகா தொடர் நியாயப்படி இங்கே இன்னொரு "தொடரும்" போட்டிருக்க வேண்டும். ஆனால் உங்களில் நிறைய பேர் இப்போதே ஒரு "தொடரும்" போட்ட பாவத்திற்கு என் மீது பேய் வெறியில் இருப்பதால்.....


.......டிரைவர் பக்கத்து இருக்கையில் ஏறி அமர்கிறான் வெங்கட்.

"என்னப்பா ஏதோ சத்தம் கேட்டுச்சி", என ஏதோ கொசுவின் ரீங்காரத்திற்குத் தரும் ரீயாக்ஷன் தந்து கேள்வி கேட்கிறான் வெங்கட்.

அவனிடம் பொறுமையாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தேன். அவன் ஒரு பதில் தந்தான் பாருங்கள், "அட, அது எதுனா காத்து கருப்பா இருக்கும்பா"

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்றாலும், "திடுக், விலுக்" என என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அப்படி தூக்கி வாரிப்போட்டது எனக்கு. "அட, எங்க ஏரியாவுல இதெல்லாம் சகஜம்பா".

"எனக்கு உருவமா ஒண்ணும் தெரியலையே வெங்கட்"

"நீ சினிமா பார்த்து, கதை படிச்சிட்டுப் பேசறன்னு தெரியுது. அவங்களுக்கு எல்லாம் உருவம் இருக்காது. காத்தை என்னிக்காவது கண்ணுல பாத்துறிக்கியா?" 

"சரிதான், இங்கே ஒரு பிரளயமே நடந்திருக்கு. இப்படிப் பேசறியேய்யா!", என நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் நான்கு வாரங்களுக்கு எனக்கு என் வட்டத்தில் எல்லோரிடமும் இந்தப் பேய் பார்த்த (!) சம்பவத்தை சொல்லிச் சொல்லியே பொழுது போனது.

இந்த சம்பவத்திகுப் பின் வெங்கட்டிற்கும் எங்களுக்கும் இடையே ஒரு எழுதாத ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் வீட்டில் புறப்படுகையில் ஒரு மிஸ்டுகால் தந்தால் அவன் தயாராக இருக்க வேண்டும். பத்தாவது நிமிடம் அவன் வீட்டு வாசலில் வண்டி நிற்கும். காத்திருப்பு அல்லது காத்து-கருப்பு ஏதுமில்லாமல் வண்டி அந்த இடத்தை விட்டு உடனே நகர வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இதற்குப் பின்னர் நீண்ட நாட்களுக்கு எங்கள் ரூட்டில் உதயா வரவில்லை. "அட பயம் ஒண்ணும் இல்லை சார். நான் கொஞ்சம் வேற ரூட்ல செட் ஆயிட்டேன் அவ்வளவுதான்", என சமாளிப்பான்.

ஆனால் விதி யாரை விட்டது? நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் மேலும் அதேபோல் ஒரு சம்பவத்தை தரிசிக்க, அதே உதயா அதேபோல் ஒரு அதிகாலை அழைப்பிற்கு வந்து சேர்ந்தான்.

வழியில் வருபவர்களெல்லாம் மாறிப் போயிருந்தார்கள். வெங்கட் வேலையை விட்டே சென்றுவிட்டிருந்தான். வழக்கம் போல நானே முதலில் ஏறினேன். நெடுங்காலமாக மறந்திருந்த பழைய பேய்க்கதையைப் பேசியவாறே போய்க் கொண்டிருந்தோம். தைரியமாகப் பேசுபவன்போல இருந்தாலும் உதயா முகத்தில் "அட இந்த ரூட்ல வந்து மாட்டிக்கிட்டோமே" என்னும் பதற்றம் தெரிந்தது.

வெங்கட் இருக்கும் அதே ஏரியாவில் அடுத்த பிக்கப். அந்தத் தெருவிற்குள் வேகமாகத் திரும்பும் வேளையில் எங்கள வண்டியில் மோதிவிடுவது போல ஒரு உருவம் எதிரில் தடாலென வந்து இடித்து நின்றது. முழுக்க முக்காடிட்டு இருந்த அந்த உருவம் ஆணா பெண்ணா எனக் கூட எங்களால் ஊகிக்க முடியவில்லை. 

உதயாவிற்கு லேசாக உதற ஆரம்பித்ததை ஸ்டியரிங் மீதிருந்த கை காட்டிக் கொடுத்தது. நல்ல வேளை என் உதறலை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒன்றும் நடவாதது போல அந்த உருவம் எங்கள் வண்டியைக் கடந்து பின்னால் சென்று மறைந்தது. எங்கே மறைந்தது எப்படிப் போனது என ஒன்றும் புரியவில்லை.

"என்னா சார், இதுக்குதான் சார் மாதவரம்னாலே நான் வர்றது இல்ல".

"அட நாங்க இங்கேயே வாழறோம் தலைவா, வண்டிய ஓட்டு நீ", என முதுகில் தட்டினேன்.

இங்கேயும் பழைய கதை போலவே மாடியில் விளக்கு, இரட்டை விரல் செய்கை, அதன்பின் காத்திருப்பு என்றானது. ஐந்து நிமிடக் காத்திருப்பிற்குள்ளாக நாங்களிருவரும் தலா நான்கு பேய் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுவிட்டோம்.

பேசிமுடித்த களைப்பில் நான் சற்றே பின் சாய்ந்து அயர்கிறேன். "என்னா சார் லேட்டாவுது", என்றவாறே தன் இருக்கையை பின்சாய்த்து ஒரு குட்டித் தூக்கம் போடத் தயாராகிறான் உதயா. 


சந்தரமுகி படம் பார்த்திருக்கிறீர்களா சந்திரமுகி? அதில் வருவது போல் 'சல் சல்" எனச் சலங்கை ஒலி எங்கோ கேட்கிறது. எட்டுத் திசையிலும் திரும்பிப் பார்க்கிறேன், இருட்டைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. சாய்ந்திருந்த உதயா தன்னிச்சையாக நிமிர்ந்து அமர்கிறான். என்னைப் பார்த்து தலை சாய்த்து உதடு பிரிக்காமல் ஒரு புன்னகை புரிகிறான், "நான் சொன்னேனில்ல?".


திடும் என என் அருகில் கதவிற்கு வெளியே ஒரு வெள்ளை உருவம் முளைத்தது. வெளிச்சமாக வெள்ளைச் சேலை, ஷாம்பூ விளம்பரம் போல நீண்டு விரித்த அடர்த்தியான கூந்தல், அதில் கனமாக ஒரு நான்கு முழ மல்லிகைப் பூச்சூடல். சொல்லத் தேவையில்லாமல் அது ஒரு பெண் உருவம்.


சப்த நாடியும் சிலிர்த்துக் கொள்ள "ப்ப்ப்ப்ப்ப்பே........" என  நான் அலறிய அலறல் எட்டு ஊருக்குக் கேட்டிருக்கும்.

திரும்பிப் பார்த்த உதயா, ஒரு கணமும் யோசிக்கவில்லை. டாப் கியரில் வண்டியைக் கிளப்பி விட்டிருந்தான். ஐந்தே நிமிடங்கள்தான். எதையும் யோசிக்காமல், எங்கு செல்கிறோம் எனக்கூட புரியாமல் சந்து பொந்தெல்லாம புகுந்து எங்கெங்கோ சுற்றி சுற்றி கடைசியில் எப்படியோ ஒரு முக்கியச் சாலைக்கு வந்து சேர்ந்தான்.

நான்கைந்து பேர் அந்தச் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்த பின்தான் என் இதயமே இயங்க ஆரம்பித்தது.

என் செல்போன் சிணுங்க, "டிரான்ஸ்போர்ட் டெஸ்க்" என்றது திரை.

"சார், கிரி சார்! என்ன சார்? லேடி எம்ப்ளாயி வண்டியில ஏற வர்றாங்களாம், நீங்க வண்டி மூவ் பண்ணி வேகமாப் போயிட்டீங்களாம். அவங்க அங்கேயே வெயிட் பண்றாங்க சார். போயி பிக்கப் பண்ணிட்டு வந்துடுங்க சார்", என்றது மறுமுனைக் குரல்.


எங்கள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
.
.
.
image courtesy: planetsview.blogspot.com / photo.net / 

10 comments:

natbas said...

முகத்தில் பேயாடவில்லைன்னு முடிங்க பாஸ். என்னா கதை!!!

கலவரமா எழுதறீங்க. பேய்க்கதை மன்னன் பி டி சாமிக்கு இளவல் நீங்கதாங்க.

Rams said...

முதல் பகுதி படிச்ச போதே நைட்ல பேய்க் கனவு வந்து அலறினேன்..ஹி...ஹி...ஹி...சூப்பரா எழுதறப்பா கிரி..keep it up

Breeze said...

Though it looks like fabricated story, you have really done well.

Giri Ramasubramanian said...

@ Natbas / Ramnarayan
உங்க ஊக்குவிப்பிற்கு ரொம்ப தேங்க்ஸ்!

@ Breeze
Thanks very much for your visit. Long time no see?
By the way, the story outline in both the experiences are true. I took the liberty to narrate it in my own way. Meaning, both are real stories, not reel.

எல் கே said...

hahahahah

thina said...

மிக அருமையான கதை. முதலில் திகிலாகவும் பின்னர் நகைச்சுவையாகவும் முடிந்தது. தனியா சிரிக்க வெச்சிட்டிங்க பாஸ்.

skishor said...

Giri,

my question is 'yaar sir avanga...white sari???'

பவள சங்கரி said...

நல்லாயிருக்கு நண்பரே, தொடருங்கள்.

varasiththan said...

சம்பவமும் விபரிப்பும் நன்றாக சுவையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
அது சரி அந்ததெருவில் வசித்த ஒருவர் போட்ட பதிவு பார்க்கவில்லையா?
நான் அந்த வீட்டுக்கு குடியேறி சிலநாட்களில் அதை அவதானித்தேன்.
நடு இரவில் ஒரு கார் வந்து நிற்கும்.காரில் சிலர் இருப்பார்கள்.. நாய்கள் குரைக்கும்......

Giri Ramasubramanian said...

@LK
ரொம்ப நன்றி சகா...

@ தினா
நன்றி. உங்களை திகிலூட்டவும் சிரிக்க வைக்கவும் முடிந்தது மகிழ்ச்சி.

@ skishor ஜி
அந்த வைட் சாரி நீங்கதான். ஹா ஹா ஹா....

@ நித்திலம்
உங்க ஊக்கத்திற்கு ரொம்ப தேங்க்ஸ் சார்.

@ வரசித்தன்
நீங்க எப்பவும் thinking from the other direction அப்படிங்கறது சரியாத்தான் இருக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...