May 31, 2011

ஒரு பிரார்த்தனை... ஒரு வாழ்த்து...பிரார்த்தனைகள்..... இவருக்காக!வாழ்த்துக்கள் இவருக்கு....
.
.
.

May 25, 2011

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - சேலையூர்


"என்ன சார் இது அநியாயம்! அஞ்சு கவுண்டர் இருக்கு மூணு பேர்தான் இருக்காங்க, யாரும் கேக்க மாட்டீங்களா?"

"நீங்கதான் கொஞ்சம் கேளுங்களேன் சார்? பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு யோசிச்சிட்டே எல்லாரும் இருந்தா எப்புடி?"

"அட, நான் ரீஜனல் ஆபீஸ் வரைக்கும் எழுதிட்டேன் சார். ஒரு நடவடிக்கையும் இல்லை"

"இந்த பிரான்ச் இப்படித்தான் சார். சண்டே வந்து பாருங்க, மெயின் ரோடு வரைக்கும் க்யூ நிக்கும்"

"ப்ரைவேட் பேங்க் எல்லாம் எப்படிக் கொழிக்கறாங்கன்னு இப்போ இல்ல புரியுது"

"சார் பென்  இருக்குமா"

"திருப்பி குடுத்துடுங்க நியாபகமா"

"இந்தாங்க சார், தேங்க்ஸ்!"

"குட் மார்னிங் மேடம்! ஏற்காடு டிடி எடுக்கணும், எந்த கவுண்டர்!"

"வெளியில போயி டோக்கன் ரிசீவ் பண்ணிட்டு வாங்க"

"வெளியில?"

"ஆமாம், வெளியில...."

"தேங்க்ஸ் மேடம்"

 "சார், டோக்கன் நம்பர் நூத்தி நாப்பத்தி அஞ்சு"

"ஒக்காருங்க! இப்போதான வந்தீங்க! எனக்கு தொண்ணூத்தி மூணு! ஒண்ணரை மணி நேரமா வெயிட் பண்றேன். இப்போதான் எழுவத்தி ரெண்டு போயிட்டு இருக்கு. கவுண்டர் தெறந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு. உங்களுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்"

"என்னது! எனக்கு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு டிடி எடுக்கணும் சார்! அவ்ளோதான். அதுக்கும் அதே கவுண்டர்தானா?"

"எல்லாம் சிங்கிள் விண்டோ'தான். ஒக்காருங்க"

"என்னங்க, அஞ்சு கவுண்டர்ல மூணுலதான் ஆட்கள் இருக்காங்க?"

"அதைத்தானே நாங்க இத்தினி நேரமா பொலம்பிட்டு இருக்கோம்!"

"ஹலோ மேடம்! அந்த ரெண்டு கவுண்டர்'ல சர்வீஸ் இல்லையா?"

"இல்லைங்க, இன்னைக்கு லீவு"

"ஸ்டாஃப்'தானே மேடம் லீவு, சர்வீஸ் எப்படி க்ளோஸ் ஆகும்? ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் நீங்கதானே பண்ணனும்"

"உள்ளே மானேஜரைக் கேளுங்க"

"சொல்லுங்க சார், என்ன வேணும்?"

"மானஜரை பாக்கணும்"

"வெயிட் பண்ணுங்க, வருவாரு"

"இன்னும் வரலையா"

"வந்துடுவாரு"

"இல்லை, நான் ஆபீஸ் வந்துட்டாரான்னு கேட்டேன்"

"ஆன் டியூட்டி'ல கஸ்டமர் யாரையாவது பாக்கப் போயிருப்பார். ட்வெல்வ் ஓ கிளாக்'குக்கு வந்துடுவாரு, வெயிட் பண்ணுங்க"

"வெளங்கிடும்! ஆணியே புடுங்க வேணாம். நான் வர்றேன்"

ஆன்லைன் ட்ரான்ஸ்பர் எல்லாம் இருக்கற கம்ப்யூட்டர் யுகத்துல டிடி எடுக்கறதே கிரிமினல் குற்றம். இதுல ஆயிரம் ரூபா டிடி எடுக்க ரெண்டு மணிநேரம் வெயிட் பண்ணனுமா? போங்கய்யா நீங்களும் உங்க கஸ்டமர் சர்வீசும்!

May 23, 2011

தூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்

சிறப்புப் பதிவர்: லலிதா ராம்

நான் நாடகங்கள் அதிகம் கண்டிராதவன். நான் பார்த்த நாடகங்கள் அனேகமாய் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்கள்தான். நுணுக்கங்கள் உணர்ந்து எழுதப்படுவதே விமர்சனம். நாடக நுணுக்கங்களுக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லாத நிலையில், இந்தக் கட்டுரையை ஓர் பார்வையாளனின் அனுபவ பகிர்வாகப் பார்ப்பதே சரியாக இருக்கும். 

தூஸ்ரா-வின் கதைக் களன் கிரிக்கெட். கிரிக்கெட்டே தன்னைப் பற்றிப் பேசுவதாக நாடகம் தொடங்குகிறது. கணேஷ் விஸ்வநாதனின் கிரிக்கெட் உலகப்பயணமே கதையாக்கப்பட்டிருக்கிறது. கமெண்ட்ரி காலத்தில் இருந்து கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் கதையுடன் சுலபமாக ஒன்றலாம். வசனம் ஆங்கிலத்தில் என்ற போதும், கேட்கும்போது அந்நியமாய் படவில்லை. காட்சியின் சூழலை உருவாக்க முன்னர் பதிவுசெய்த காட்சிகளை பின்னணியாக ப்ரொஜெகட்ரில் ஓடவிடுவதை இன்றுதான் முதலில் பார்த்தேன். சிறப்பாகச் செய்துள்ளனர். காட்சி மாறும் போது இடம்பெறும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. 
ஆனந்த் ராகவ்


முதல் காட்சி கணேஷின் தந்தையும், தாயும் பேசிக்கொள்வதில் தொடங்குகிறது. கணேஷின் தந்தையாக ஆனந்த் ராகவின் நடிப்பு ஏனோ எனக்கு சோ-வின் டயலாக் டெலிவரியை நினைவுறுத்தியது. ஆனந்தை எனக்கு எழுத்தாளராகத்தான் தெரியும். அவருக்குள் இருக்கும் நடிகரை இன்றுதான் அறிந்தேன். கிரிக்கெட் நுணுக்கங்களை விவரிக்கும் வசனங்களை அனுபவித்து எழுதியிருக்கிறார். அவர் பேச்சிலும் அது தெளிவாக வெளிப்பட்டது. கணேஷின் தாயார் பல நாடகங்களில் நாம் கண்டிருக்கக்கூடிய டிபிகல் தாயார். நகைச்சுவைக்காக சற்றே அதீதப் படுத்தப்பட்டாலும் நெருடலாக அமையாத பாத்திரம்.  ( உதாரணம்: “பௌலரை பேட்டிங் பண்ண சொல்றாங்க, ஆனால் பேட்ஸ்மனை பௌலிங் போடச் சொல்றதில்ல”). ஐ.பி.எல் போன்றதொரு லீகைத் தொடங்க, தொழிலதிபர்கள் கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசும் காட்சியில் தெரிந்த கச்சிதம் முதல் காட்சியிலும் இருந்திருக்கலாம். “கிரிக்கெட் விளையாடுவது ஹாக்கி, ஃபுட்பால் மாதிரி அல்ல. இதில் நுட்பமான திட்டங்கள் பல உண்டு.”, என்பது போன்ற அவசியமற்ற ஒப்பீட்டையும் தவிர்த்திருக்கலாம்.  நாடகம் முழுவதும் நகைச்சுவை இழையால் நிரப்ப ஆசிரியர் முனைந்து முயன்றுள்ளார். நிறைய காட்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக பி.சி.சி.ஐ சேர்மனாக நடித்த அரசியல்வாதி வரும் போதெல்லாம் அரங்கில் சிரிப்பலை பரவியது. கிரிக்கெட் வாரியத்தை தோசைக்கடை அனாலஜியில் விளக்கிய இடமும், பங்களதேஷின் பெயரை மறந்து, ஞாபகம் வரவேண்டி அதைப் பற்றி விவரித்த விதமும் படு பிரமாதம். நிறைய பணத்தைப் பார்த்து, “நான் டெலிகாம் மினிஸ்டர் இல்லை”, போன்ற பஞ்ச் லயாக் இடங்களில் அவரது டைமிங் கச்சிதமாய் அமைந்திருந்தது. ஒரே குறை அந்தப் பாத்திரத்தை வடக்கிந்தியர் என்று கூறியிருப்பது.  ‘ராகவன்’ என்ற பெயரை உச்சரிப்பதில் தொடங்கி, அவர் பேசும் ஆங்கிலத்தில் வடக்கிந்தியத் தாக்கம் சுத்தமாக இல்லை. தென்னிந்திய அமைச்சர் என்று கூறியிருந்தாலும் காட்சிக்கு கேடு ஏதும் வந்திருக்காது என்றே தோன்றியது. 

கிரிக்கெட் ரசிகராகத் தோன்றிவரின் நடிப்பே நாடகத்தின் சிறந்ததாக எனக்குப் பட்டது. புள்ளி விவரங்களை எடுத்து விடுவதாகட்டும், ரத்தத்தில் வரைந்ததை விவரிப்பதாகட்டும், ஹீரோ தோற்கும்போது பொங்கி எழும் காட்சியிலாகட்டும் அந்த இளைஞரின் நடிப்பு பாசாங்கற்று, பிரமாதமாய் வெளிப்பட்டது.  

நடுவில் ஒரு காட்சியில் கிர்மானி விடியோவில் பேசுகிறார். பார்வையாளர்களின் கவனத்தைக் கவர இது நல்ல உத்திதான் என்ற போதும், அந்தக் காட்சியில் ஏனோ ஏகப்பட்ட இரைச்சல். அவர் கேட்கும் கேள்விக்கு கதாநாயகனின் பதில் மிகமிகத் தட்டையாய் இருப்பது துரதிர்ஷ்டம்.  

அவுட் என்று தெரிந்தும் அம்பயர் கொடுக்காததால் தொடர்ந்து ஆடிய மகனோடு தந்தை விவாதிக்கும் காட்சியில் நிறைய கேவலுடன் ஆனந்த் ராகவ் பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் அவுட் என்றால் அம்பயர் கொடுக்காவிட்டாலும் ப்ளேயர்கள் கிரீஸை விட்டுக் கிளம்பியது போலவும், இன்றைய ஆட்டக்காரர்கள்தான் ‘வேல்யூஸ்’ ஏதுமின்றி ஆடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருப்பது சற்றே செயற்கையாக அமைந்திருந்தது. அன்றும், இன்றும், என்றும் மிக சொற்பமானவர்களே அவுட் ஆன அடுத்த நொடி அம்பயருக்கு காத்திருக்காமல் வெளியேறுவார்கள். இதற்காக தந்தை காட்சியின் முடிவில் உடைந்து அழுவது கொஞ்சம் அதீதமென்றால், தந்தை அழுவதைப் பார்த்து மகனும் அழுவது ரொம்ப அதீதம். இந்தக் காட்சியும், மகனுக்கு ஷூ வாங்க வேண்டி தன்னிடம் இருக்கும் ஒரே தங்கச் சங்கிலியை விற்பது போன்ற சம்பவங்களும் ஏனோ நான் சிறு வயதில் பார்த்த செவ்வாய்கிழமை தூர்தர்ஷன் நாடகங்களை ஞாபகப்படுத்தின. குடிக்கமாட்டேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்திருந்தவன், கடைசியில் ஒய்னை குடிப்பது போல காட்சியமைத்து, அவன் புக்கிகளிடம் விலை போவதை வசனமின்றி உணர்த்தியது போன்ற subtle காட்சிகளாகவே மற்ற காட்சிகளையும் அமைத்திருக்கலாம்.

கதாநாயகன் வரும் காட்சிகளில் முக்கால்வாசி நேரம் வேறு யாராவது பேசுகின்றனர். மௌனமாக இருக்கும் போதெல்லாம் ஹீரோவின் முகத்தில் ஒரு சங்கடப் புன்னகை தவழ்கிறது. தான் பேசாத போதும் காட்சியில் நடித்தாக வேண்டுமென்பதை அவர் உணரவேண்டும். தன் கேப்டன் குடித்துவிட்டுப் புலம்பும் போதும், அப்பா கோபப்படும் போதும்,  ரசிகன் உணர்ச்சிவசப்படும் போதும், புக்கி தன்னை விலை பேசும் போதும் ஒரே மாதிரியான பாவத்தை வெளிப்படுத்துகிறார்.  

தீவிர கிரிக்கெட் ரசிகனான எனக்கு, 1983-ல் ஸ்ரீகாந்த் அடித்த 38-ஐ 37 என்றது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் மாட்ச் கமெண்ட்ரிக்காக பாதி ராத்திரியில் விழித்தது (வெஸ்ட் இண்டீஸ் என்றால் சரியாக இருக்கும்), ஃபீல்டரை ஷார்ட் மிட் விக்கெட்டுக்கு போகச் சொல்லிய பின் ‘பீச்சே பீச்சே’ என்று டீப் மிட் விக்கெட் ஃபீல்டருக்குச் சொல்வது போல அணித் தலைவன் அர்ஜுன் காட்டிய பாவங்கள், போன்ற சில இடங்கள் நெருடலாக அமைந்தன. (இவை எல்லாம் nit-picking என்றறிவேன். ஆனந்த் ராகவ் மன்னிப்பாராக.) 


நன்றி: http://www.flickr.com/photos/shande/

மொத்தத்தில் நாடகம் சற்றே நீளமென்றாலும் அலுப்பு தட்டவில்லை. 2 மணி நேரத்தை 1.30 மணி நேரமாக்கி, கதாநாயகனின் நடிப்பையும் மேம்படுத்தினால் அடுத்த முறை நாடகம் அரங்கேறும் போது இன்னும் பல பாராட்டுகளைப் பெறும்.


_________________


லலிதா ராமின் வலைமனைகள்: கமகம் / கிரிக்கெட் தவிர

May 21, 2011

விமலாதித்த மாமல்லன் கதைகள்


விமலாதித்த மாமல்லன் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன்.

எட்டு சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் இதுவரை முடித்திருக்கிறேன். இந்தக் கதைகளின் வயது குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரை நீள்கிறது. தன் பத்தொன்பதாம் வயதில் முதல் சிறுகதையை எழுதியிருக்கிறார் மாமல்லன்.  அவ்வயதில் இப்படி யோசித்து எழுத முடியுமா என சில சிறுகதைகளைப் படித்ததும் வாய்பிளந்து வியக்கிறேன், குறிப்பாக "இலை" சிறுகதை படிக்கையில். சற்றும் மிகையற்ற சொல்லாடல்கள், நேர்த்தியான கதை சொல்லும் திறன் - எளிமையாகச் சொன்னால் இதுதான் "மாமல்லன்". போகிற போக்கில் உங்கள் கைபிடித்து அழைத்துச் சென்று கதை சொல்கிறார். தான் எங்கும் தனியே தெரிய அவசியமும் தேவையும் இல்லை என்பதில் பிடிவாதமாய் இருக்கிறார். 

"இருபது வயதுகள்" இப்போது எழுதும் கதைகள் எல்லாம் துள்ளல் துடிப்புகளோடு வார்த்தை "ஜெர்க்'குகளை வைத்து உங்களைப் படிக்கச் சொல்பவை. மாமல்லன் இருபதில் எழுதியதில் வார்த்தை ஜால ஈர்ப்புகள் ஏதுமில்லை. நேரே கதை தொடங்குகிறது, நேரே சொல்ல வந்ததைச் சொல்லிப் பயணிக்கிறது, திடீரெனத் தொங்கலில் ஓரிடத்தில் உங்களை விட்டுவிட்டு "புரிஞ்சுதா" என உங்கள் பின்னந்தலையில் தட்டிவிட்டு நிறைகிறது. ஒவ்வொரு கதையை முடித்த பின்னும் என் பின்னந்தலையில் ஒரு தட்டு. வாழ்க்கை, யதார்த்தம், முரண், விகாரம் என்ற தளங்களில் பயணிக்கின்றன  இவர் கதைகள்.

முதல் சில சிறுகதைகளை வாசிக்கும்போதே உள்ளே நமக்குப் பரபரவென்கிறது. கதைகள் கொண்ட கருக்கள் அப்படி. இவ்வாறு நான் சொன்னதும் அவர் ஏதோ வானிலிருந்து உருவிக் கொண்டுவந்த கருக்களைக் கொண்டு கதைகள் புனைந்தார் என்றில்லை. எல்லாமே நாம் அக்கம் பக்கத்தில் அன்றாடம் பார்ப்பவை அல்லது நம்முள்ளேயே நாமே நிதமும் தரிசிப்பவை, அவ்வளவே. கதைக்கான தீம் தேர்வில் மாமல்லன் பெரும் பிரயத்தனம் எல்லாம் செய்யவில்லை. 

கதை சொல்லும் விதத்திலும் அப்படியொன்றும் அலங்காரத் தோரணங்களோ அல்லது சிலாகித்துச் சூள் கொட்ட வைக்கும் வருணனைகளோ இல்லை. அதனையும் "சிம்பிள்" என்றே வைத்திருக்கிறார் மனிதர். ரொம்பவெல்லாம் ஆரவாரமில்லாமல் நேரிடையாகவே கதை சொல்கிறார்.

அப்படியென்றால் இவர் கதைகளை நம்மைப் படிக்கவைக்கிறது எது?  சுகுமாரனின் முன்னுரையையே துணைக்கு அழைக்கிறேன்: மிகையற்ற சொற்கள், நுட்பமான தகவல்கள், பராக்குப் பார்க்காமல் இலக்கை நோக்கி நகரும் வேகம், பாத்திரங்களின் உருவாக்கம், அவர்களின் பின்னணி சார்ந்தே அமையும் உரையாடல், கதையாடலின் நம்பகத்தன்மை ஆகிய இலக்கிய இயல்புகள்; இவைதான் நம்மை இவர் கதைகளின் பக்கம் ஈர்ப்பவை."போர்வை" சிறுகதை உங்களுக்குக் காட்டுவது வேறு தரிசனம். காலையில் பல் விளக்குதலில் தொடங்கி இரவில் போர்வைக்குள் அடங்கியுறங்கும் ராவ்ஜியின் ஒரு நாளைய சுயநல சுழற்சியை அவரோடு பயணித்து நமக்குக் காட்டுகிறார் மாமல்லன்.

கணையாழி குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற "பெரியவர்கள்" படித்தபின் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏதேனும் எழுதுவதென்றால் புத்தகத்தை முழுதும் படித்துவிட்டு எழுத வேண்டும் என்று இருந்தவன்,இதற்குமேலும் பொறுமையில்லை என எழுதுகிறேன். மேற்கொண்டு அத்தனை கதைகளையும் படித்து முடிக்கும் அவசரம் எனக்கு இப்போது இல்லை. இத்தனை படித்ததில் இருந்து என்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தேவை இருக்கிறது.

"பெரியவர்கள்" கதையில் வரும் சக்குபாய்கள் பலரை நம் சுற்றத்திலும் நட்பிலும் இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிவதால் கதையின் போக்கும், முடிவும் நம்மைத் தைக்கிறது. பெரியவர்களைக் கடந்து செல்ல இயலாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் இன்னமும்.

ஏதேனும் எழுதணும் என்னும் உந்துதல் உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமையும், சந்தேகமேயில்லை.

பதினாறு ஆண்டுகள் கடந்து மீண்டும் எழுத வந்திருக்கும் மாமல்லன் இன்னமும் நிறைய கதைகள் எழுதி என்போன்ற கடைக்கோடி வாசகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே என் அவா!

முழுப் புத்தகத்தையும் வாசித்துவிட்டு விரிவாக இன்னுமோர் பதிவு எழுதுகிறேன். அதற்குள் நீங்கள்....

புத்தகம் வாங்க:
உயிர்மை பதிப்பகம். 
11/29, சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம், சென்னை 600018.
போன்:: 91-44-24993448
மின்னஞ்சல்: sales@uyirmmai. com
விலை ரூ.180/-

ஆன்லைனில் வாங்க: உயிர்மை / கிழக்கு / உடுமலை
.
.
.

May 18, 2011

கோவை கிருஷ்ணமூர்த்தி - மேலும் சில தகவல்கள்கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி நான் இங்கே எழுதின பதிவு "மனதைத் தொட்டது" என சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இரண்டு விஷயங்களை அங்கே சேர்க்கத் தவறிவிட்டேன். அவற்றை இங்கே இந்தப் பதிவில் செய்து விடுகிறேன்.

அதற்குமுன் முதலில் பாலாஜி அவர்கள் தன் நினைவலைகளை மீட்டி எழுதின பின்னூட்டம்...

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேராக சந்திக்கவும் அவரது முழு நேர கச்சேரியை கேட்க்கும் பாக்கியமும் எனக்கு அமைந்தது. நான் கேட்ட முதல் கர்நாடக இசை கச்சேரி அது. இன்று வரை  அதுவே எனது கடைசி நேரடி கச்சேரி கேட்க பெற்ற அனுபவமும். 

அவர் எங்கள் வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள கோவிலுக்கு அன்று பாட வந்திருந்தார். சிறுவனான எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது அவரது உருவம். இவர் எப்படி உட்கார்ந்து பாடுவார்? உருன்டு விட மாட்டாரா என்றெல்லாம்  மனதில் கேள்விகள் எழுந்தன. சற்று நேரத்தில் அவர் பாட ஆரம்பித்தார். பெரிய இசை ஞானம் இல்லாவிட்டாலும் அந்த கச்சேரியை என்னால் ரசிக்க முடிந்தது. மிகவும் அருமையாகவும் ஜனரஞ்சகமாகவும் பாடினார். இன்றும் அவரது குரல் என் நினைவலைகளில் நீங்காமல் உள்ளது. 
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மேல்நிலை பட்டதாரியும் ஆவார். அவர் தன் வாயால் பேனாவை பிடித்து எழுதி, தேர்வு பெற்று பட்டம் பெற்றார். He truly is an inspiration to one and all.
நன்றி பாலாஜி!


இரு சேர்க்கைகள்:

கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இணையதள முகவரி: http://srkrishnamurthy.com


அவர் பாடிய பாடல் ஒன்றின் காணொளி இணைப்பு.


.
.
.

May 16, 2011

ரஜினி நலமாக உள்ளார்: ராமச்சந்திரா மருத்துவமனை


<நம்புங்கப்பு! ஹீ இஸ் டூயிங் வெல்! சும்மா ரூமரைக் கெளப்பாதீங்க!>

நன்றி: தினமணி <இன்று மாலை ஆறு மணி அப்டேட்>

சென்னை, மே 16- நடிகர் ரஜினி நலமாக உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டி.ஜி. நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 13-ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி நலமாக உள்ளார்.

பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகிறது.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
.
.
.

May 14, 2011

நல்லாக் க்கீதே நாயம்
நியாயமாகப் பார்த்தால் இதை நான் டிவிட்டரிலோ பேஸ்புக்கிலோ ஸ்டேட்டஸாகப் பதிவு செய்ய வேண்டும்- ஆனால் எதையாவது சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே வருவது பழகிப்போய் விட்டது.
அது தவிர சொந்தமாக சிந்தித்து எதையும் எழுதுவதில்லை என்ற குறை எனக்கே இருக்கிறது- எதற்கெடுத்தாலும் நாலு தரவுகளைக் கொடுத்து அங்கே அப்படி சொல்லியிருக்கிறார்கள்,  இங்கே இப்படி சொல்லியிருக்கிறார்கள் ஆனால் நான் இப்படி நினைக்கிறேன், அதற்காக அது அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு பிழைப்பா?
அதனால்- ரூம் போட்டு யோசித்தேன் என்று சொல்ல முடியாது, மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்- ஏனென்றால் இது அவ்வளவு குட்டியான சிந்தனை- அதை இங்கு ஒரு பதிவாகப் பகிர்ந்து நண்பர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-ஒருத்தர் நம்மைப் புகழ்கிறார் என்றால் அவர் நம்மை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் <ஏன்னா நமக்குத்தான் நம்ம பவுசு தெரியுமே>. அதனால் அவர் மேல் நமக்குப் பரிவு வருவது ரொம்பவே நியாயம்தான். எட்டரை மாத்து பித்தளையை ஒருத்தன் புகழ்ந்தா பித்தாளி பல்லு இளிக்கறது தப்பா என்ன?

ஆனால் திட்டுபவர்கள் நம்மை சரியாகப் புரிந்து கொண்டு  பேசுகிறார்கள்- அதனால்தான் அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. "கஸ்மாலம் கைதே, நம்மளைப் பத்தின உண்மையை ஊரறியப் புட்டு புட்டு வெக்குதே"  என்பதால் நம் கோபமும் <ஒரு வகையில்> நியாயமே. அதே எட்டரை மாத்து பித்தாளியை எட்டி ஒதச்சுப் பாருங்க "டங்"குன்னு சத்தம் வரும். அது கோபத்தின் வெளிப்பாடு. ரொம்ப நியாயமான, இயற்கையான சவுண்டு.


பின்னூட்டங்களில் தஞ்சாவூர் கல்வெட்டு என்ற சொற்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

May 11, 2011

கோவை கிருஷ்ணமூர்த்தி

ராமநவமி'க்கு நரசிங்கபுரம் சென்றிருந்தபோது "கம்போசர் அண்ட் சிங்கர்", என்று சக பாகவத பெரியவர்களிடம் என்னை நடராஜ பாகவதர் அறிமுகம் செய்தார்.

இதென்ன வம்பாப் போச்சு என நினைத்து "அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா, ஜஸ்ட் கொஞ்சம் ஸ்ருதியோட அங்கங்கே தாளம் பெசகி பாடுவேன் அவ்ளோதான். கொஞ்சம் நல்லாப் பாடற பாத்ரூம் சிங்கர்",  இடுப்பிலிருந்த அங்கவஸ்திரத்தை இன்னமும் இறுக்கமாக்கிக் கொண்டு அடக்கவொடுக்கமாகப்  பெரியவர்கள் முன்னிலையில் கூறிக்கொண்டேன்.

நடராஜ பாகவதர் என்னை அப்படி அறிமுகம் செய்து வைத்ததில் காரணம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் கொசுவத்தி சுழற்றி அது ஏன் என்று சொல்கிறேன், ஜாக்கிரதையாக என்னுடன் வாருங்கள்....

சரியாக நான்கு வருடங்களுக்கு முன் என் ஆஸ்திரேலிய மாமா தன் குடும்ப சகிதம் பாரத விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் மகனும் மகளும் அங்கே ஆஸ்திரேலியாவில் "மார்கழிப் பூவே" புகழ் ஷோபா சேகர் அவர்களிடம் பல வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார்கள். அங்கேயே ஆஸ்திரேலிய அரங்கேற்றம் முடிந்துவிட்டிருந்தாலும் இந்த விஜயத்தில் கோவையில் ஒரு இந்திய அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. வரலாற்று நிகழ்வு என்பதால் இந்தியா முழுவதிலுமிருந்து சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் என்று வண்டி கட்டிக்கொண்டு கோவை நோக்கி கும்பல் கும்பலாகப் படையெடுத்திருந்தோம். 

கோவையில் இறங்கினதும் அரங்கேற்ற அஜெண்டா என் கையில் தரப்பட்டது. அரங்கேற்றத்திற்கு கோவை கிருஷ்ணமூர்த்தி தலைமை என்றும் சிறப்பு விருந்தினராக நடராஜ பாகவதர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் சொல்லியது அஜெண்டா. நடராஜ பாகவதர் நாங்கள் நன்கு அறிந்த எங்கள் உறவினர். கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதுவரை  நான்  சந்தித்ததில்லை. அந்த அஜெண்டாவில் மிக முக்கியமாக அதன் தலைக்குமேலே என்பெயர் முதலில் இருந்தது. இதென்னடா வம்பு என அவசர அவசரமாகப் படித்தால், "கடவுள் வாழ்த்து - கிரி" என்றது அந்த அஜெண்டா. "நீ பாடறே அவ்ளோதான்", என அன்பாக மிரட்டல் உத்தரவு வந்தாயிற்று. என் அனுமதி கேட்காம நீங்க எப்படி இதெல்லாம் பண்ணலாம் என்றெல்லாம் கேட்க நேர அவகாசம் இல்லை. நமக்கு பந்தா பண்ணும் அவசியமும் இல்லை.

மறுநாள் காலையில் நிகழ்ச்சி. எனக்கு புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும், ஆயர்பாடி மாளிகையும், குறையோன்றுமில்லையும் கொஞ்ச கொஞ்சம் தெரியும். ஆனால் ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு முன்னால் இந்தப் பாடல்கள் ஆப்ட் ஆக இருக்காதே. இரவு பதினொரு மணிவரை யோசித்தும் என்ன பாடுவது என ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

"வக்ரதுண்ட மஹாகாய" பாடுங்க என என் கஸின் ஒருவன் சொல்ல, லேசாய்ப் பொறி தட்டியது. அங்கே இருந்த மற்ற கஸின்களுடன் கலந்து ஆலோசித்து எப்போதோ நான் பொழுதுபோகாத ஒரு வேளையில் போட்டு வைத்த ஒரு அம்மன் பாடல் டியூனுக்குள் அதே கஸின்கள் உதவியுடன் ஒரு விநாயகர் துதியைப் புனைந்து நுழைத்து ஒரு மணிநேரத்தில் சுமாரே சுமார் பக்காவாக ஒரு பாடல் தயார்.

மறுநாள் அப்பாடலை இரவல் வாங்கிய மெரூன் பைஜாமாவெல்லாம் அணிந்து நான் பந்தாவாக மேடைக்கு ஒரு ஓரமாய் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆளுயர மைக்கின் முன் நின்று வழக்கமான சுருதி, தாள பேதங்களுடன் பாடி முடிக்க, அந்த திருஷ்டிப் பரிகாரத்துடன் என் மாமன் மகளும் மகனும் பங்கேற்ற அந்த அரங்கேற்றம் இனிதே துவங்கியது. 

என் சுயதம்பட்டம் முடிந்துவிட்டாலும், நான் கொசுவத்தி சுழற்றி இங்கே சொல்ல வந்தது என் கதையல்ல..... மேலே படியுங்கள்.

நிக் என்கிற Nicholas James Vujicic பற்றி நீங்கள் ஃபார்வர்ட் மெயில்கள் மூலம் நிறைய அறிந்திருக்கலாம் அல்லது நிக் எழுதிய "லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்" (Life Without Limits) புத்தகம் பற்றி குமுதத்தில் என்.சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் வாயிலாக அறிந்திருக்கலாம்.அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நிக்'கிற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. ஆம், தோற்றத்தில் நிக்'கை ஒத்தவர் கிருஷ்ணமூர்த்தி மாமா. இவரும் இரு கைகளும் இரு கால்களும் இல்லாமலேயே வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டு நமக்கு இன்ஸ்பிரேஷனாக இயங்கிக் கொண்டிருப்பவர்.

கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி அவர்கள், எங்கள் உறவினர் நடராஜ பாகவதரின் நெடுநாளைய நண்பர். அறுபத்தி ஐந்து வயதாகும் இவர் அருமையான கர்நாடக சங்கீதப் பாடகர். சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள் ஏறி கச்சேரிகள் செய்திருப்பவர். சில வெளிநாடுகளிலும் இவர் மேடை ஏறியது உண்டு. மாநில அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை மிக்கவர்.

"நான் கடவுள்" படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் கோவை கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார் என்பது உப தகவல்.

சென்ற வாரம் "விகடன் மேடை" பகுதியில் அப்துல் கலாம் அவர்கள் அளித்த கேள்வி பதில் பகுதியிலிருந்து....

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

இப்படிப்பட்ட பெருமைமிக்கவர் முன்னிலையில் சுருதி பேதமோ அல்லது தாளப் பிசகோ.... ஏதோ ஒன்றுடன் பாடி முடித்த பெருமை மட்டுமே எனக்கு உண்டு.

.
.
.


May 9, 2011

1166/1200சென்ற வருடம் +2  ரிசல்ட் வந்த வேளையில் என் கசின் ஒருத்தி 1200 'க்கு 1166 எடுத்திருந்தாள். +2'வில் அறுபத்து சொச்ச சதவீத  மதிப்பெண்கள் எடுத்த என் போன்றவர்களுக்கு அது சூப்பர் டூப்பர் மார்க்தான். அவளை வாழ்த்த தொலைபேசியை எடுத்தேன். எதிர்முனையில் கேட்ட அவள் குரலில் ஒரு சுரத்தே இல்லை. 

ம்ம்ம்... சொல்லுங்க

ஹேய்.... வாழ்த்துக்கள்.

ஆ.... தேங்க்ஸ்!

என்ன இப்பிடி டல் அடிக்கற? யு காட் நைண்டி செவன் பர்சன்ட் மார்க்.

எஸ்..... ஆமாமாம்...!

ஹல்லோ. வாட்ஸ் ராங் வித் யு?

நத்திங். அயம் ஆல்ரைட். இருங்க அம்மா கிட்ட தர்றேன்.

ஹல்லோ. சாதனையாளரின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

ஆ.ஆ... தேங்க்ஸ் பா  ....

என்னாச்சு உங்களுக்கு ஒரு சாதனையாளர் தாயார் மாதிரி பேசுங்க.

என்ன பெரிய சாதனை பண்ணிட்டா? கம்மியாத்தானே மார்க் எடுத்திருக்கா? ஸ்கூல் ஃபர்ஸ்ட் கூட வரலையே. இவளோட படிச்ச பொண்ணுங்கல்லாம் 1180 க்ராஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா?

ச்சே... இதுதான் விஷயமா?

எங்கள் குடும்பத்தில் எங்கள் பாட்டன், பூட்டன், அப்பா, அப்பத்தா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்சினி என்று யாரும் இப்படி மதிப்பெண்கள் எடுத்ததில்லை. இருந்தும் 97%'ற்கு மகிழ்ச்சியில்லை நமக்கு. இதற்கு யாரை நோவது?

எ.கொ.ச. என நினைத்துக் கொண்டு போனைச் சாத்தினேன்.
.
.

May 8, 2011

எங்கேயும் காதல் - விமர்சனம்Storify என்று ஒரு தளம். யூட்யூப், பிலிக்கர், டிவிட்டர், பேஸ்புக், பஸ், ப்ளாக், அது இது என்று எல்லா இடத்திலேயும் யார் யாரோ பேசுவதை கிளிக் செய்து கிளிக் செய்து ஒரு கதை மாதிரி விஷயத்தை சொல்லலாம். நல்ல கான்செப்ட்.

நாம் "எங்கேயும் காதல்" திரை விமரிசனத்தை அப்படி முயற்சி செய்திருக்கிறோம்.

தள அறிமுகம்: நம்ம தல நட்பாஸ்


May 5, 2011

வெய்யிலுக்கு ஏற்ற மோர்க்கஞ்சி


"ஹப்பாப்பா.... என்னா வெயிலு...என்னா வெயிலு...! போன வருஷத்தவிட மோசமால்ல இருக்கு!", இந்த வசனம் எல்லோர் வாய்களிலும் வருகிறது, எல்லோர் காதுகளிலும் கேட்கிறது. வெயிலை நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் கடுமையிலிருந்து நம்மை சில வழிமுறைகளில் காத்துக் கொள்ள முடியும். 

தமிழ் பேப்பர் கத்திரிக் குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

மங்கையர்மலர் இதழ் இந்தமுறை (மே இதழ்) கோடையை வெல்ல சில உணவு வகைகள், பானங்கள் தயாரிக்கும் வழிமுறைகள் அடங்கிய "கூல் சமையல் 64" என்ற இலவச இணைப்பு ஒன்றைத் தந்துள்ளது. கைவண்ணம்: சமையல் மகாராஜா செஃப் தாமு.

ஒரு சாம்பிள் இந்த மோர்க்கஞ்சி. செய்முறையைப் பாருங்கள். வீட்டில் குழந்தைகளைக் குளுமைப்படுத்த ஏற்றது.


மோர்க்கஞ்சி - தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி நொய் - 1 கைப்பிடி, மோர் - 3 கப்,
சாம்பார் வெங்காயம்- 3 (வெட்டியது), பச்சை மிளகாய் - 1 துண்டு, உப்பு -தேவைக்கு.
செய்முறை:
ஒரு அளவு நொய்க்கு இரண்டு அளவு தண்ணீர் என்கிற கணக்கில் நொய்யை நன்றாகக் குழைய வேக விடவும். வெந்த கஞ்சியில் கீறிய பச்சை மிளகாயை கசக்கிவிட்டு, உப்பு, வெட்டிய சாம்பார் வெங்காயம் சேர்த்து மோர் கலந்து குளிரவைத்துக் குடிக்கவும்.

குக்கும்பர் சாலட், ஆரஞ், மாங்கோ க்ரஷ் வகையறாக்களைத் தாண்டி இப்புத்தகத்தில் சுவாரசிய செய்முறைகள் ஜிஞ்சர்-ஹனி டிரிங்க், மோர் ஆகாரம், மேங்கோ - கோகனட் டிலைட், ராகி டிரிங்க்,பெரிய நெல்லி தயிர்ப்பச்சடி, ஃப்ரூட் லஸ்ஸி ஆகியவை.

மங்கையர் மலர் வாங்கி நீங்களும் தினம் ஒரு கூல் ரெசிபி வீட்டில் செய்து வீட்டைக் குளுமை செய்யுங்கள்.
.
.
.

May 3, 2011

பிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808


இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயினின் மீதான பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது வெடித்த புரட்சியைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினரால் புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் ஓவியம் இது. சரியாக இருநூற்று மூன்று ஆண்டுகள் முன் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வைச் சித்திரம் ஆக்கியிருக்கிறார் பிரான்சிஸ்கோ கோயா. தாக்குதலில் மேலோங்கியிருப்பவனின் அழிக்கும் கோரமுகம் இந்த ஓவியத்தில் பதிவு செய்யப்படாமலேயே; இந்தக் கொடூரத்திற்கு இரையானவர்களின் மன்றாடுதல்களையும், ரத்தத்தையும் வைத்துப் பேசியிருப்பது ஓவியத்தின் சிறப்பு.
மாடர்ன் ஆர்ட்'டின் தந்தை எனக் கருதப்படும் பிரான்சிஸ்கோ கோயா (Francisco Goya) ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பதினெட்டாம் நூற்ற்றாண்டின் ஓவியர். கோயா ஸ்பானிய அரண்மனை ஓவியராக இருந்ததுடன் ஒரு வரலாற்று எழுத்தாளராகவும் இருந்தார். இவர் பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. இவ்வாறாக இவருடைய ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களில் மனே, பிக்காசோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். <நன்றி: விக்கி>"மே 3 1808" சம்பவம் குறித்த விரிவான விக்கி பக்கம்  

பிரான்சிஸ்கோ கோயா குறித்த எஸ்.ரா.வின் பதிவு: கோயாவின் நிழல்கள்

May 1, 2011

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை


சிறப்புப்பதிவர் : நட்பாஸ் 

நேற்று என்னால் தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்த "வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குப் போக முடிந்ததென்றால் அதற்கு நான் என் நண்பர் கோபி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஏடிஎம் அட்டை எப்போதோ காலாவதியாகி விட்ட நிலையில், வீட்டில் வெறும் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்ற என் கையறு நிலையை இரவுதான் நான் உணர்ந்த்திருந்தேன். அதனால் ஐஓபி வங்கி கிளை திறப்பதற்கு அரை மணி நேரம் முன்னமேயே அங்கு போய் காசு எடுப்பதற்காக க்யூவில் நிற்க வேண்டிய அவசர நிலை. காஷியர் வந்தார், சன்னலைத் திறந்தார், "காசு கட்டறவங்க முதல்ல வாங்க," என்றார். நியாயம்தானே? பணம் நம்முடையது என்றாலும் வாங்குபவனை விட எப்போதும் கொடுப்பவனைக் கூடுதல் மரியாதையுடன் வரவேற்பதுதானே வணிக பண்பாடு? 

அப்போது முன்னால் வந்தவர்தான் கோபி. என்னைக் கண்டு, "இங்கேயும் நம்மாளுங்களைப் பாக்காம இருக்க முடியாதா?" என்று அலுத்துக் கொண்டாலும், நான் பஸ்ஸில்தான் வீடு திரும்பவிருக்கிறேன் என்ற என் நிலையை அனுதாபத்துடன் அவதானித்தார். 

"க்யூவில் எவ்வளவு நேரம் நிப்பே? நான் பைக்கில் போறேன், என்கூட வந்துடேன், " - அடியேனின் பொருளாதார நிலை அதற்கு இடம் தருவதாயில்லை என்பதை அவருக்குத் தெரிவித்தேன்.

"உனக்கு எவ்வளவு வேணும்?"  என்று என் கையிலிருந்த பணமெடுப்புப் படிவத்தை வாங்கிப் பார்த்தார், "ஐயாயிரம்தானே? நான் தரேன், வா"

அவர் என்னை என் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு அப்புறம்தான் தன் வீட்டுக்குப் போனார், இத்தனைக்கும் அவருக்குத் திருமணமாகி குழந்தைகளெல்லாம் இருக்கிறார்கள்.

("மாமா, நீ மாமியைக் கல்யாணம் செஞ்சப்புறம் எவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தே?"

"ரெண்டு வருஷம்"

"எல்லாரும் ஒரு வருஷம்னுதானே சொல்லுவாங்க. நீ மட்டும் எப்படி ரெண்டு வருஷம் சந்தோஷமா இருந்தே? அந்த ரகசியத்தை சொல்லுங்க. ப்ளீஸ்"

"அந்த ரெண்டு வருஷம் அவ ட்ரான்பர் ஆகி திண்டுக்கல்லில் இருந்த வருஷங்கள்"

கோபி வழியில் சொன்ன நிகழ்வு)

நண்பரின் புண்ணியத்தில் அதிகாலையிலேயே உச்சி சூரியனின் உக்கிரத்துடன் புலரும் சென்னையின் இளங்காலை வெயிலைத் தவிர்த்தேன். நன்றி கோபி, நல்ல உதவி, இதுபோன்ற அற்புதங்கள் என்றோ ஒருமுறையே நிகழ்வதுண்டு. அவற்றின் நினைவுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

---------------------------------------------------------------வெங்கட் சாமிநாதன் தன்னை ஒரு அசாத்திய திறமைகள் கொண்ட சிந்தனையாளராகக் காட்டிக் கொள்வதில்லை. "பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட எதையும் நான் சொல்லிவிடவில்லை. நான் எழுத்தாளன்கூட இல்லை. என் கட்டுரை "எழுத்து" இதழில் வெளிவந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் என் நண்பர் ஒருவர், "முதலில் சாமிநாதனை ஒழுங்கா தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளச் சொல்லு. அப்புறம் அவன் எழுதப் போகட்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அன்னா கண்ணனைக் கேளுங்கள்.  நான் எழுதுவதில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை அவர் சொல்வார். வெறுமே ஐம்பது வருஷமா பொதுபுத்திக்குப் புலப்படக்கூடியதைச் சொன்னதுக்காக இப்படி விழா எடுத்துப் பாராட்டுவார்களா?" என்ற கேள்வியை முன்வைக்கிற வெங்கட் சாமிநாதன்  தன் புகழுக்கான அத்தனை பெருமையும் தமிழ்ச் சூழலையே சேரும் என்கிறார்.

""கட்டுமரத் துடுப்பைப் போல ஆடுதடி இடுப்பு" என்று லட்சக்கணக்கில் செலவு செய்து படமெடுக்கிறார்கள். இதிலுள்ள அபத்தம் பொதுபுத்திக்குத் தெரியாததா? எல்லாரும் இதை மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாருக்கும் தெரிந்த இதன் அபத்தத்தை, அழிவை யாரும் அதிகம் பேசுவதில்லை.  ஆனால் நான் பெரிதாக சொல்கிறேன்.  மற்றவர்களுக்கு ஏதேதோ சார்புகள் இருக்கின்றன. எனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. அதனால் நான் சொல்லும் சாமானிய, பொதுபுத்திக்குத் தெரிந்த விஷயங்கள், துணிச்சலாக முன்வைக்கப்பட்ட சிந்தனைகளாக தமிழ்ச் சூழலில் தெரிகிறது," என்கிறார் வெசா. 

"இங்கு நான் மூன்று கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை போல் இருக்கிறேன்," என்று நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டாலும் அதில் உள்ள உண்மையைதான் நேற்றைய விழாவில் பேசிய அனைவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து சுட்டிக் காட்டினார்கள் என்று எனக்கு தோன்றியது- சிலர் மறைமுகமாக சொன்னார்கள், சிலர் வெளிப்படையாக சொன்னார்கள், கடந்த எண்பது ஆண்டு கால திராவிட இயக்க சிந்தனையின் தாக்கத்தின் விளைவுகள் குறித்து நேற்று பேசிய அனைவருக்கும் கோபமும் வருத்தமும் இருந்தது.  தமிழ் மரபின் வேர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் வெகுசன ரசனையின் வெற்றி,  பரப்பியல் சார்ந்த சிந்தனைகளின் மயக்கம்- இவை தந்த பெருமிதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றிப் பாதுகாத்த செல்வங்கள் அத்தனையும் மக்களால் அலட்சியபடுத்தப்பட்டு குப்பையோடு குப்பையாய் மட்கிப் போவதில் நேற்றுப் பேசிய அனைவருக்கும் துயரும் தாபமும் இருந்தன. இதற்கு எதிராக இயங்கி, தமிழ் மரபின் வேர்களைப் பாதுகாத்து, அதன் முக்கியத்துவத்தை பண்பாட்டின் மையத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களில் முக்கியமானவராக இவர்கள் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கிறார்கள். 

அதிகம் யோசிக்காமல் சுயசார்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒற்றைப் பார்வையின் மேலாதிக்கத்தின் காரணமாக நம் பண்பாடு தன் பன்முகத்தன்மையை இழந்து தன் தொன்மைக்கு துரோகம்  செய்கிறதே என்ற வருத்தம் விழாவில் பேசிய அனைவரின் உரையிலும் வெளிப்பட்டது. நாஞ்சில் நாடன் மட்டும்தான் வழக்கம் போலவே தன் இயல்புப்படி இதை வெளிப்படையாக, ஆணித்தரமாகச் சொன்னார், "எனக்குப் பிடிக்காத வார்த்தை, இந்த 'பார்ப்பான்' என்பது. அதை சொல்லி விட்டால், எதிர்த்து எதுவும் பேச முடியாது என்று ஆகிவிட்டது.  இதைச் சொல்லும் என்னைப் பார்ப்பன அடிவருடி என்பார்கள். ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்," என்றார் நாஞ்சில் நாடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் உரக்கவே. தன் வழக்கப்படி அவர் ஆவேசமாக தமிழ்ச் சூழலை சாடிக் கொண்டிருக்கும்போது சீட்டு அனுப்பி தடுத்து  விட்டார்கள்.  அவருக்கு இருக்கிற கோபத்துக்கு ஊர் ஊராய்ப் போய் நாள் கணக்கில் கோபப்படுவார் நாஞ்சில் என்று தோன்றுகிறது.

நாஞ்சிலைத் தவிர்த்துப் பார்த்தால் நேற்று பேசியவர்களில் அனுபவப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பேசத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அவரவர் தமக்கிருந்த ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் தொடர்ந்து நாலு வாக்கியம் பேசவே சிரமப்பட்டார்கள். "இந்தப் புத்தகம் போடுவதற்கான எண்ணம் எங்களுக்கு ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருக்கும்போது வந்தது." என்ற பின்நவீனத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தகவலுடன் இந்த விழா துவங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் யார் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்களை நான் பதிவு செய்யப்போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு நினைவுத் திறனும் கிடையாது. ஒவ்வொருத்தரும் தன் துறை, அல்லது தன் களம் சார்ந்த பார்வையில் வெங்கட் சாமிநாதனை அணுகினார்கள் என்று சொல்லலாம்.  நாஞ்சில் நாடன் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் அது சார்ந்த சமூக சூழல்,  வெளி ரங்கராஜன் நாடகம் மற்றும் நுண்கலை விமரிசனத்தில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு- குறிப்பாக அவரால் நவீன தமிழ் நாடகத் துறையில் ஏற்பட்ட படைப்பூக்கம் பற்றி பேசினார். ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை குறித்தும் அது எதிர்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பேசினார் (இது பற்றி நண்பர்கள் விரும்பினால் தனி குறிப்பு பிற்சேர்க்கையாக இப்பதிவில் இணைக்கப்படும்). செங்கதிர் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசினார், அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை சரியாக சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி தனித்துவம் குறித்து ஆழ்ந்த ஒரு கருத்தை அவர் முன் வைத்தார் , ஆனால் அவருக்கு அதை அழகு செய்து சொல்லத் தெரியாததால், இவ்வளவுதானா என்று எனக்குத்  தோன்றியது. பொதுவாக ஆழமான உண்மைகள் ஆரவார அலங்காரங்கள் இல்லாமல் வந்தால் சாதாரணமாகத்தான் இருக்கும்- வெங்கட் சாமிநாதன் கூறும் பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மிக அரிதாகவே புலப்படுகின்றன, பேரரசனின் புத்தாடைகளைப் போல.

இவர்கள் தவிர கவிஞர் திலகபாமாவும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினார்கள். கவிஞர் திலகபாமா எழுத்தாளர்களே விமரிசகர்களாக இருப்பதில் உள்ள ஒரு அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்- அவர்கள் தங்கள் எழுத்தைப் போன்றதாக இல்லாத படைப்புகளை தோல்வியடைந்தனவாக ஒதுக்கி விட நேர்கிறது, என்றும், தங்களைப் போன்று எழுதுபவர்களை ஒரு இன்செக்யூரிட்டி காரணமாக நசித்துவிட நேர்கிறது என்றும் சொன்னார். இது எந்த அளவுக்கு சரியான கருத்து என்று தெரியவில்லை. இருந்தாலும் படைப்பூக்கத்தில் செயல்படுகிறவர்களுக்குத் தங்களுக்குப் படைப்பூக்கம் அளிக்காத எதுவும் படைப்பு என்ற அளவில் தோற்றுப் போனதாகவே தெரியும் என்பது ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.  மற்றபடி நசிப்பது, நசிக்காமல் இருப்பது போன்றவை தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயங்கள்.  இந்த மனப்போக்கைக் கைகொள்பவர்கள் நம்மிடையே எங்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனின் பேச்சு விளையாட்டு போல அவருக்கு காவி சாயம் பூசும் பா ராகவன் போன்றவர்களுக்கும் அதை வினையாகவே செய்பவர்களுக்கும் அநீதி செய்வதாக இருந்தது. நான் நினைத்த மாதிரி இல்லாமல்,  நீல கலர் முழுக்கை சட்டை போட்டு வந்திருந்தார்- அவர் அரங்கில் அமரத் தேர்ந்தெடுத்த இருக்கைகள் பெரியாரின் உருவப்படத்தை ஒட்டியிருந்தன.  பெரியாரின் உருவப்படத்தின் கீழ் சிஷ்யப் பிள்ளைக்குரிய அடக்கத்துடன் அரவிந்தன் நீலகண்டன் யாரோ ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியை காவிப் படைக்கு பயந்து நான் புகைப்படமெடுக்கத் துணியவில்லை. அவரும் தன் பேச்சில், மரபுகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்குபவர்கள் அடிப்படைவாத அடையாளங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்த்து, மரபை மீட்டு முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதை நாம் யோசிக்கும்போது, அங்கு வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று பேசியது அரவிந்தன் நீலகண்டனின் பிம்பத்துக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி, கடன் வாங்கிய காசில்தான் விழாவுக்கே போயிருந்தேன்.  போகும்போதே என்ன ஆனாலும் புத்தகத்தை வாங்கிவிடக் கூடாது என்று முடிவு செய்துகொண்டுதான் போயிருந்தேன்- என் நிலைப்பாட்டுக்குரிய கடப்பாடுகள் நியாயமானவை என்று நான் இப்போதும் நினைக்கிறேன். இதுவரை பேசியவர்கள் இலக்கியம், இசை, ஓவியம், நடனம், நாடகம், நாட்டாரியல் மற்றும் காண்பாரியம் குறித்து வெங்கட் சாமிநாதன் தன் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக முன்வைத்தார் என்று பேசியிருந்தார்கள்.  அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் சொல்லியிருந்தார்கள்.  ஆனால் வெங்கட் சாமிநாதன் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் புத்தகத்தை வாங்கக் கூடாது என்ற என் முடிவை மாற்றிக் கொள்ளப் போதுமானதாக யார் பேசியதும் இருந்திருக்கவில்லை- இவர்களின் உரை அறிவு சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்திருந்த காரணத்தால்.

வெங்கட் சாமிநாதன் கால காலத்துக்கும் மதிக்கப்பட வேண்டிய மனிதராக இருந்துவிட்டுப் போகட்டும், அவரது எழுத்து நம் பண்பாட்டின் வெவ்வேறு நரம்புகளைத் தாக்கித் தூண்டி எழுச்சியுறச் செய்திருக்கட்டும். ஆனால் அதனால் எனக்கென்ன வந்தது? கைக்காசு போட்டு ஒரு புத்தகத்தை வாங்கப் போதுமான காரணங்களா அவை? நான் என் காசை செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை. எனவே ஒரு மாதிரி விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோதுதான் தன் முடிவுரையைப் பேச அகிலன் வந்தார்.

இந்தப் புத்தகம் பதிப்பாகக் காரணமாக இருந்தவர்களில் இவரும் சனாதனன் என்பவரும் இலங்கைத் தமிழர்கள். அண்மையில் இலங்கையில் நடந்த யுத்தத்தில் இங்குள்ள தமிழர்கள் அக்கறை காட்டவில்லை என்ற ஏமாற்றத்தின் காரணமாக சனாதனன் தமிழகம் வருவதில்லை என்றிருக்கிறாராம். அகிலன் ஒரு மிக எளிமையான விஷயத்தைச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாடு குறித்து பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை உண்டு- அகிலன் அங்கு படித்த காலத்தில் இலக்கியம் நீங்கலாக, தமிழ் நாடகம், நடனம், இசை, நாட்டாரியல் என்று எந்த நுண்கலையைத் தொட்டாலும் அதில் வெங்கட் சாமிநாதன் நீங்கலாக வேறு எவரும் பொருட்படத்தக்க வகையில் எந்த ஆய்வு நூலையும் எழுதியிருக்கவில்லை என்றார் அவர். படித்தால் அவர் எழுதியைதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்று அகிலன் சொன்னதும், எனக்கு ஏறத்தாழ தமிழர்கள் அனைவரும் ஒரு நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. வெங்கட் சாமிநாதன் தனியொருவராக அதன் மரபுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றிருக்கிறார். தமிழ் மரபின் தொன்மையை தமிழ் அறிவுச் சூழலின் மையத்துக்குத் தன் வாதங்கள் மற்றும் விவாதங்கள் வழியாக கொண்டு வர ஐம்பதாண்டுகளாக பாடுபட்டிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர் குறித்த வாதங்கள் விவாதங்களைத் தொகுத்து அவற்றின் வழியாக வெங்கட் சாமிநாதனை அறிவதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக முடிவு செய்தோம் என்றார் அவர்.

உண்மையாகவே சொல்கிறேன், அவரது பேச்சு என்னுள் ஒரு மனவெழுச்சியைத் தூண்டுவதாக இருந்தது- பாக்கெட்டில் ஒரு பகடை உருண்டது. முன்னூறு ரூபாய் காலி. ஒரு நிமிடம்தான் நினைத்துப் பார்த்தேன்-  அகிலனையும், இங்கே வருவதில்லை என்று முடிவு செய்திருக்கும் சனாதனையும் வெங்கட் சாமிநாதனைக் குறித்து ஒரு புத்தகம் போடத் தூண்டியது எது? மொழி. மொழி அவர்களுக்கு தவிர்க்க முடியாத வாழ்வாகவும் வீழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழியும் அதன் வரலாற்றைத் தன்னுள் அடக்கித் திரண்டிருக்கும் மரபும். இதைக் காக்க வெங்கட் சாமிநாதன் நேர்மையுடன் இயங்கியிருக்கிறார். அதை பெருமைப்படுத்தி இவர்கள் பணத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து ஒரு புத்தகம் போடுகிறார்கள், அதன்முன் என் காசு பிச்சைக் காசு, இல்லையா?

மொழியும், அதன் பண்பாடும் மரபும் நம் யாருக்கும் தனியுடைமை அல்ல. நம் சார்புகள் எவையாய் இருந்தால் என்ன? நாம் எங்கிருந்தால் என்ன, என்ன சாதியாய், என்ன சமயமாய் இருந்தாலென்ன? நம் மொழியே வேறாக இருந்தால்தான் என்ன?- இப்புத்தகம் வெளிவர உழைத்த திலிப் குமார் ஒரு குஜராத்தி என்கிறார்கள் (பெண்ணைப் பெற்ற அப்பா போல் அவர் அரங்கில் இங்குமங்கும் நடந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது).

இதுதான் நாம்.  இதை நேர்மையுடன் சுட்டிக்காட்டியதால்தான் வெங்கட் சாமிநாதன் மீது இன்றும் கவனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இறுதியில் பேசும்போது வெங்கட் சாமிநாதன் சொன்னார், வீட்டில் அமர்ந்து பேசுவது போன்ற நெருக்கம் அவர் பேச்சில் இருந்தது. "நியாயமாகப் பார்த்தால் நான் எழுத்தாளன் அல்ல. என் எழுத்து இவ்வளவு கவனம் பெற்றிருக்கக் கூடாது. என் முதல் தொகுப்பு எங்கோ ஒரு சிற்றூரில் இருந்த விவசாயத் துறை சார்ந்த மூவரால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது இது இங்கே டெல்லியில் ஒருவர், வெளிநாட்டில் ஒருவர், சென்னையில் ஒருவர் என்று வெவ்வேறு நபர்களின் தனிப்பட்ட முயற்சியால் தொகுக்கப்பட்டு இங்கு இந்த விழா நடக்கிறது. ஒரு அகாதெமி அல்லது பல்கலைக் கழகம் போன்ற அமைப்பு செய்ய வேண்டிய வேலை இது.  ஆனால் எனக்கு இப்படி நடக்கிறது. இந்த மாதிரி கவனம் பெறுவது என்பது மிக அதிசயமான ஒன்று - மூன்று கைகளுடன் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு அதிசயமான ஒன்றோ அதைப் போன்றதுதான் நான் இந்த தமிழ் சூழலில் கவனிக்கப்படுவதும்," என்றார் அவர். தன் பொதுபுத்தி பற்றி அவர் சொன்னதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

தனி மனிதர்கள் எதற்காக இப்படி வெங்கட் சாமிநாதனை கவனிக்கிறார்கள்? அவரிடம் அப்படி என்ன இருக்கிறது? அது அவரது பார்வைதான் என்று நினைக்கிறேன்.  நேர்மையாய் வெளிப்படும் அவரது தனிக்குரல்.  "இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் எழுதியதில் ஏதாவது பயனிருக்கிறது என்று நினைக்கிறேனா? நான் எதையாவது உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேனா? நான் எழுதியதில் எதற்காவது வால்யூ இருக்கிறது என்று நினைக்கிறேனா என்று கேட்டால் எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்," என்று சொல்லி விட்டு நிறுத்தினார் வெங்கட் சாமிநாதன்.

"ஆனாலும் ஒன்று இருக்கிறது  என்று சொல்வேன். ஒரு சிறு வால்யூ. அதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேன். நேர்மையாக, நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருவன் மட்டும் நேர்மையாக இருந்தால், அவனை ஏதாவது செய்யலாம்.  ஆனால் நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நேர்மையாக இருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நேர்மையாக இருங்கள்," என்றார் அவர்.  இந்த சத்தியம்தான் அவர் தனியொரு மனிதனாக இயங்கியபோதும் அவரைக் காப்பாற்றி வெவ்வேறு மனிதர்களின் முயற்சியின் மூலமாக அவரை நம் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உண்மையில் வெங்கட் சாமிநாதன் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைதான். இந்த தமிழ் சூழலில்,  அமைப்பின் ஆதரவைப் பெறாமல் தனி மனிதர்களின் முயற்சியால் அவரது தவிர்க்க முடியாத கேள்விகள் தொடர்ந்து கவனத்தைப் பெறுகின்றன. அதனால் அவரும் ஒரு பேராளுமையாக நிலை பெறுகிறார். இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் சீர்கேட்ட சூழலை அவர் காரணமாக சொன்னாலும் உண்மை அதுவல்ல. 

வெங்கட் சாமிநாதனின் முதல் புத்தகத்தை தம் முயற்சியில் பதிப்பித்த முதல் மூவர். இப்போது இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கும் மூவர். ஆமாம், இந்தக் குழந்தை மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை. ஆனால் இதுவல்ல அதிசயம் - அது ஐம்பது ஆண்டுகளாக ஒற்றை நாக்கில் பேசி வருகிறது, அதுதான் அதிசயம்.
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...