Mar 6, 2016

கன்னையா

அதாகப்பட்டது.... இந்த உலகம் பலநேரங்களில் சில பேரின் பேரில் தவறான நம்பிக்கையை வைத்து விடுகிறது.

அட இருங்க சார்..... நான் கன்னையா பத்தி சொல்லலை. இன்னும் அந்த ஸ்டோரிக்கே நாம போகலை. ஏதும் முன்முடிவோட இந்தப் பதிவைப் படிக்கத் தொடங்காதீய.

”இப்பல்லாம் நீங்க முன்ன போல எழுதறது இல்லை சார்”, என்றார் அலுவலக நண்பர்.

“ஏன்? இப்போ நல்லா எழுத ஆரம்பிச்சிட்டனா?”, என்றேன்.

“அட.... அது இல்லைங்க. முன்னப் போல இப்போ எழுதறது இல்லை நீங்கன்னு சொன்னேன்”.

“அதையேதான திருப்பி சொல்றீங்க..... ஓ... ஒரு வேளை இப்போ இன்னும் கேவலமா எழுதறனோ?”.

“அட ராமா..... இப்போல்லாம் முன்னப்போல எழுதறது இல்லை. அதாவது நீங்க எழுதறதே இல்லைன்னு சொல்ல வந்தேன்”, என்றார்.

“அது நல்ல விஷயம்தானே”

நண்பருக்கு நம் மீது பாசம் மிகவும் ஜாஸ்தி. தமிழில் எழுதுபவன் அத்தனை பேரும் கவிஞன் என்றும், எழுதத் தெரிந்தவன் எல்லாம் என்ஸைக்ளோபீடியா என்றும் நம்புபவர். தி.நகரில் இருந்து மேற்கு மாம்பலத்திற்குப் போக வேண்டும் எனும் நேரத்தில் ஏதும் ரூட் சந்தேகம் வந்தாலும் எனக்குத்தான் ஃபோன் அடிப்பார்.

“கிரி, உங்களைக் கேட்டாத்தான் தெரியும். இந்த ரங்கநாதன் தெருவுல இருந்து வெஸ்ட் மாம்பலத்துக்கு எப்படிப் போகணும்? நான் சரவணா வாசல்ல இருக்கேன். லேக் வ்யூ ரோடு போகணும்”. 

”ஒரு நிமிஷம் சார். ட்ரைவிங்ல இருக்கேன். கட் பண்ணுங்க, நானே கூப்பிடறேன்”. 

நமக்குத் தெரிந்த உண்மையான என்ஸைக்ளோபீடியா ஒருத்தர் இருக்கிறார். மேடவாக்கம் டேங்க் ரோடு மேடவாக்கத்தில் இல்லை என்பதான தகவல்களையெல்லாம் இவரிடம்தான் நான் தெரிந்து கொண்டவன். அவருக்கு ஃபோனைச் சுற்றினேன்.

“சார், இந்த ரங்கநாதன் தெருவுல இருந்து மாம்பலத்துக்கு எப்படிப் போகணும். இது.... வெஸ்ட்டு மாம்பலம்”.

“தம்பி, ரங்கநாதன் தெருவே மாம்பலத்துலதான் இருக்கப்பா”, என்றார்.

”ஆ! அப்போ அது டி.நகர்’ல இல்லியா?”, அலறினேன். இந்த மனுஷன் வேற நடுரோட்ல நம்மை நம்பி நிக்கறானே? சட்டென்று நினைவுக்கு வந்தது. “அங்கருந்து லேக்வியூ ரோடு போவணும் சார்”.

“ஓ! அப்படி சொல்லுய்யா. அந்த ரயில்வே ப்ரிட்ஜ் ஏறு. லெஃப்ட்டு ரைட்டு ரைட்டு லெஃப்ட்டு”, என்று அவர் சொன்ன வழியை நண்பருக்கு மறுசுழற்றல் செய்து சொல்லி நான் நம்பத்தகுந்த என்ஸைக்ளோதான் என்று மறுநிறுவிக்கொண்டேன்.


”அமெரிக்காவுல வெள்ளைக்காரன் எச்சிவுட்டான்னா அது அமிஞ்சிகரக்காரன் மூஞ்சில பட்டுத் தெறிக்குது”, என்றவகையில் கவுண்டர் ஒரு படத்தில் வசனம் ஒன்றைச் சொல்வார். ஒலக மார்க்கெட்டில் குரூடாயிலின் விலை ஏகத்துக்கும் விலை குறைந்ததன் பயனால் நொந்து நூடூல்சான தொரைசாமி ஒருத்தருக்குச் சேவை செய்யத் தலைப்பட்டதன் பயனால் அலுவலக வாழ்க்கை சமீப காலமாய் எந்தத் திசையில் எப்படிப் போகிறது என்பதே புரியாமல் மேகி நூடூல்ஸ் சிக்கலாய்ச் சிக்கிக் கொண்டு படுத்தியெடுக்கிறது. 

”அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் என்றும் வாழ்க்கை நிலையற்றதுதான் என்றாலும்.....” என்றெல்லாம் தொடங்கி நாம் எல்லோரும் தத்துவம் பேசத்தான் செய்கிறோம். என்றாலும் இந்த அதுவான வாழ்க்கையானது நொடிக்கு நொடியெல்லாம் ஏதும் ஆச்சர்யங்களை ஆக்சுவலாக ஒளித்து வைத்திருப்பதில்லை. எப்படியும் அந்த ஆச்சர்யத்தை அளிக்க ஒரு வருடம், ஒரு மாதம் அல்லது ஒரு வார இடைவெளியாவது விடுகிறது.

ஆனால் பாருங்கள், நம் இன்றைய நிலைமையில் when, what, why, how என்ற வாழ்க்கையின் தலையாயக் கேள்விகளுக்கான விடைகள் எந்த கணத்திலும் மாறிப்போகும் என்பதுவும் அப்படி இருப்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பதுவுமான ஒரு நிலையில் வாழ்வது அத்தனை எளிதில்லை பாருங்கள்.

ஒண்ணும் புரியலையா?

சொந்த வாழ்க்கையில் நெலமை ஒண்ணும் சரியில்லீங்க என்பதுவே நான் சொல்ல வந்தது.

இதுவும் இதற்கு மேலுமான இன்னபிற பிரச்னைகளையும் சமாளிக்க நமக்கு இருபத்து நான்கு மணி நேரமே போதாமல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் முதலான சோஷியல் மீடியாக்களில் எல்லாம் “நன்றி! மீண்டும் வருவேன்” என்ற போர்டைத் தொங்கவிட்டு விட்டு ஒதுங்கி வாழும் இந்தச் சூழலில்தான் நம் நண்பர் என்னை எழுதுவதில்லை என்று சொல்ல வந்திருக்கிறார்.

”இந்த கன்னையா ப்ராப்ளம் என்ன ப்ராப்ளம் சார்?”, ஆரம்பித்தார்.

ஆஹ்ஹா.... நண்பருக்கு பொது அறிவு விஷயத்தில் டாக்டரேட் வாங்கும் ஆர்வம் சட்டாரென வந்துவிட்டது போல. நம்மை நெருங்கி வந்து ஏதோ கேட்கிறார்.

மனிதர் ஒருவேளை என்னத்த கன்னையா குறித்து ஏதோ கேட்கிறாரோ? சீச்சீ இருக்காது.

“யாருங்க? நம்ம சென்ட்ரல் ஸ்டேஷன் தொடங்கி குப்பம் ஸ்டேஷன் வாசல் வரைக்கும் ரயில்வே செவுத்துல எல்லாம் சிரிச்சிக்கினே இருப்பாரே அவரா?, என்று நான் கேட்டிருக்கக் கூடாதுதான்.

“ரொம்பத்தான் கிண்டல் சார் உங்களுக்கு. அவரு ஆண்ட்டி-நேஷனலா இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க. அவருக்கு பெயில் தந்தது சரியா இல்லையா?”

சத்தியமாக எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ரென்றது. இத்தனை விஷயங்களை இவரே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த ப்ராப்ளம் என்ன ப்ராப்ளம் சார் என்று ஏன் தொடங்க வேண்டும்?

ஒருவேளை இந்த ஜேயென்யூ ஜேயென்யூ என்று ஏதோவொரு நியூஸ் சமீப காலமாக அடிபடுகிறதே. அது சம்பந்தமான ஆளாய்த்தான் இருப்பார் இவர் என்று நினைத்துக் கொண்டேன். ”அஞ்சே நிமிஷத்துல குடுக்கணும்னு மேனேஜர் கேட்ட ஒரு ரிப்போர்ட்டோட கடந்த நாலு மணிநேரமா மல்லுக்கு நின்னுட்டு இருக்கேன். இதை நாளைக்கு கதைக்கலாம் சார்.”, என்று அவரை அனுப்பி வைத்தேன்.

இன்றைய மூணரை மணிநேரத் தூக்கத்தை இன்னுமொரு அரைமணி நேரம் குறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என யூட்யூபிடம், “கன்னையா, சிறுகுறிப்பு வரைக”, என்று கேட்டேன்.

இந்தக் கன்னையா என்பவர் கே.ஜி.ஜாவர்லால்...... சீச்சீ இல்லையில்லை.... அவர் பெயர் அது இல்லை. இந்த தில்லி மாநிலத்தின் முதல்வர் ஏ.கே.குஜ்ராலும் இல்லை அவர் பெயர்...... ஆ.... ரைட்டு.... அரவிந்த கேஜ்ரிவால்..... அந்த அரவிந்த கேஜ்ரிவாலைப் போலவே அத்தனை விடியோக்களிலும் ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக நான் பார்த்த விடியோவில் ஒரு பெரிய கூட்டத்திற்கு இடையே கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு நடனம் ஆடுவது போல் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார். நம்ம ஊர் பச்சையப்பா பயலுகள் 29ஈ பஸ்சில் பாடுவதற்கு மாற்று எனக் கருதத்தக்க ஹிந்துஸ்தானி கானா வகையில் பாடி முடித்தபின் ஏதோ பேசத் துவங்கினார். ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் அவர் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு அது என பலர் புளகாங்கிதப் பட்டவண்ணம் இருந்தது அந்தப் பேச்சுதான் எனப் புரிந்தது. 

ஏக் காவோ மேன் ஏக் கிஸான் வகையிலான நம்ம காம்ரேடுகள் என்னத்தைப் புரிய வைத்துக் கொண்டு புளகாங்கிததுக்குள் புகுகிறார்கள் என்ற கேள்வியையெல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்ளாமல் விடியோ பார்த்தலைத் தொடர்ந்தேன்.

மனிதர் பனியனும் ஓவர் கோட்டும் அணிந்து ஸ்டைலாகவே இருந்தார். May be, நம்மூர் சினிமாவுக்கு வந்தால் பிரபுதேவா விட்ட இடத்தைப் பிடிக்க ஏலுமோ என்னவோ. காம்ரேடுகள் கையில் சிக்கி விட்டார். பாவம் மனிதர். அந்த விடியோ 59 நிமிடங்கள் ஓடுவது என்பதால் நாம் ஒதுக்கிய 30 நிமிடத்தில் ஏற்கெனவே செலவான 14 நிமிடங்களையும் கழித்துப் பார்த்துவிட்டு 5 நிமிடங்கள் எனச்சொன்ன அடுத்த விடியோவிற்குத் தாவினேன்.

“நான் மாத்திரமல்ல இந்த ஜேயென்யூவின் எந்தப் பயலும் தேஷ்த்ரோஹி நஹீ”, என்று அவர் ஆரம்பித்தது மட்டும் புரிந்தது. அதன் பின்னர், காலா ஹை, லால் ஹை, நீல் வான் ஹை என்று அவர் கலர் கலராக ஏதோ உணர்ச்சிமய ரீல் விட்டுக் கொண்டிருந்தார்”, வந்த கொட்டாவியை அடக்கிக் கொண்டு மொபைலை அணைத்து விட்டேன்.

நண்பருக்கு ஃபோன் செய்தேன், “கன்னையா தேஷ்த்ரோஹி நஹீ”, என்றேன்.

”எப்படி சார் சொல்றீங்க”, கேட்டார் நண்பர்.

“அவரே சொன்னார் சார்”, ஃபோனைக் கட் செய்தேன்.Related Posts Plugin for WordPress, Blogger...