Dec 7, 2008

வி.பி. சிங்

மும்பை தாக்குதல்களின் பரபரப்பில் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் முக்கியமானது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மறைவு குறித்த செய்தி.

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இந்தியாவிற்குத் தந்த பிரதமர்களுள் ஒருவர், மண்டல் கமிஷன் பரிந்துரைத்தவர், ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து ஆட்சியை இழந்தவர், புற்றுநோயோடு போராடி வாழ்ந்தவர் என இவர் பற்றி சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் உண்டு. இவர் மறைந்த ராஜீவ் காந்தியின் சிறந்த நண்பர் என்பது நான் அறியாதது. விகடனில் வந்த அவர் பற்றிய ஒரு article உங்கள் பார்வைக்கு.


ஆக்கிரமிப்பது அவமானம்... பின்வாங்குவது பெருமை!

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றால் பலருக்குத் தெரியாது. அனைவருக்கும் அவர் வி.பி.சிங்!
திடீரென்று அரசியலில் அவரைப் போல உச்சத்தில் போனவரும் இல்லை. சத்தமில்லாமல் ஒதுங்கியவரும் இல்லை. 'காற்றைப் போல எளிமையானவர். வானத்தைப் போல சுத்தமானவர்' என்று இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பெயர் வாங்கிய தலைவர், சமீப காலச் சரித்திரத்தில் இவர்தான்.
கேன்சருக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 'நாட்களை எண்ணி வாழ்பவன் நான்' என்று சொல்லி, கவலை இல்லாமல் நாட்களைக் கழித்தவர் இந்த ராஜ குடும்பத்துக்காரர். மாண்டோ சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங் இவரின் சித்தப்பா. அவருக்கு வாரிசுகள் இல்லாததால், வி.பி.சிங்கைத் தனது வளர்ப்பு மகனாக எடுத்து வளர்த்தார்.
உ.பி. முதல்வராக இருந்தவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தவர் இந்திரா. ராஜீவுக்கு நெருக்கமான நண்பரானார் சிங். ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் ஆனார். 'நண்பன் என்ற எல்லையைத் தாண்டி, ராஜீவ் என் துறையில் அதிகமாகத் தலையிடுகிறார்' என்று வெளிப்படையாகவே குற்றம் சொன்னவர் வி.பி.சிங். அதன் பிறகு, அவருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அதில் போபர்ஸ் பூதம் கிளம்பியது. சுமார் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதப் பரிமாற்றத்துக்கு 68 கோடி கமிஷன் தரப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் ராஜீவைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் சொல்லின. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் வி.பி.சிங் பதவி விலகினார். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி தனது நண்பனுக்கு எதிராகவே தேசிய முன்னணியை ஆரம்பித்து, அதிரடியாக ஆட்சியிலும் அமர்ந்தார் சிங்.
341 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மூன்று காரியங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அமல்படுத்தினார்.
அடுத்ததாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை செய்ய பாரதிய ஜனதா, வி.ஹெச்.பி. கிளம்பியபோது, ராணுவத்தை வைத்து அடக்கினார். இத்தனைக்கும் பி.ஜே.பி. தயவில்தான் வி.பி.சிங் பிரதமர் நாற்காலியில் இருந்தார். 'எனக்கு நாற்காலியைவிட தத்துவம்தான் முக்கியம்' என்று அறிவித்தார்.
இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்தது. அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கைவைத்தன. 'வாபஸ் வாங்கினால் இந்தியாவுக்கு அவமானம்' என்றார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். 'ஆக்கிரமிப்பதுதான் அவமானம். பின்வாங்குவது பெருமைதான்' என்று சொல்லி, அமைதிப் படையை வாபஸ் வாங்கினார்.
பதவி நாற்காலி பற்றி கவலைப்படாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர்களில் வி.பி.சிங்குக்கு ஓர் இடம் உண்டு!
Related Posts Plugin for WordPress, Blogger...