Oct 31, 2010

பொன்னியின் செல்வன் - வைரவிழா ஆண்டு

பொன்னியின் செல்வன் படைப்பு வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் 29.10.10
- கானா பிரபா (ட்விட்டர் வழியாக)

பொன்னியின் செல்வன் குறித்துச் சிலாகிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் ஒரு மூலை முடுக்கு வாசகனாக எனக்கு உண்டு.

வந்தியத்தேவன், நந்தினி, அருள்மொழிவர்மன், வானதி, குந்தவை, திருமலைநம்பி, பழுவேட்டரையர்கள், ஆதித்த கரிகாலன் மற்றும் இன்னபிற கதாபாத்திரங்கள், அவற்றின் குணாதிசயங்கள் குறித்த என் சிலாகிப்பைச் சொல்கிறேன் என தமிழ் இணைய உலகில் இங்குமங்கும் ஏகப்பட்ட சிலாகிப்புகள் பரவி விரவிக் கிடக்கின்றன. 

எல்லா சிலாகிப்புகளுக்கும் மகுடம் சூட்டுவது என நான் கருதுவது இதுவரை  பதிவு செய்யப்படாத என் சிலாகிப்பை. பொன்னியின் செல்வனில் மணிமேகலை பாடும் இந்தப் பாடல்... இந்தப் பாடல் மட்டுமல்ல, மணிமேகலையின் கதாபாத்திரம், வந்தியத்தேவன் மீதான அவளது அப்பழுக்கற்ற தூய்மையான காதல்... இதுவே பொன்னியின் செல்வன் என்றதும் என் மனதில் முதலில் கீற்றாய்ப் பாயும் மின்னல் நினைவு.

பொன்னியின் செல்வன் கதையில் மணிமேகலை இரண்டு இடங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறாள். இதில் உருக்கம் தருவது அவள் மடியும் வேளையில் வல்லவரையன் மடி சாய்ந்து இதனைப் பாடியவாறு மடியும் கணம்.... பொன்னியின் செல்வன் முடியும் கணம்....




இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம்
கனவுதானோடி சகியே நினைவுதானோடி!

புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி அவர் கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம்
சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி! 

கட்டுக்காவல் தான் கடந்து கள்ளரைப்போல் மெள்ளவந்து
மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம்
நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி!

இதனினும் இனிய தவழ்ந்து தாவிச் செல்லும் ஒரு கவிதையை, உருக்கமாய் உணர்வுகளைப் பரிமாறும் ஒரு பாடலை நான் இதுவரை படித்ததுமில்லை கேட்டதுமில்லை.

கல்கி கல்கிதானுங்களே?

Oct 27, 2010

லோ பீ.பி. ஹை பீ.பி. - சூப்பர் சிங்கர் எஃபெக்ட்

இந்த விடியோவைக் கண்டு ரசிக்க விளக்கம் ஏதும் தேவையில்லை


.
.
.

Oct 25, 2010

நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நலம் தரும் திங்கள் - முன்னுரை வாசிக்க...


நலம் தரும் திங்கள் - ரத்த தானம்!

நாம் ரத்த தானம் செய்வதால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே நமக்கும் ஒரு வகையில் உதவி செய்து கொள்கிறோம். ஒரு வகையில் என்ன, பற்பல வகைகளில் உதவி செய்து கொள்கிறோம்.


எப்படி என்கிறீர்களா? வாருங்கள்! ரத்த தானப் பலன்களையும், ரத்த தானம் குறித்த சில அடிப்படை விஷயங்களையும் பற்றி பார்ப்போம்.

னக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கணக்கு பார்க்காமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டார்.கணக்கு பண்ணிவிட்டு செலவு செய்வதற்கான தேவையே இல்லை என்று முடிவு பண்ணி விடுவார். ஆள் அந்த மாதிரி. கேரளாவில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் அகலக்கால் வைத்து விட்டார் போல- காலையில் ஒரு டீ, அப்புறம் கிளம்புவதற்கு முன் கொஞ்சம் கஞ்சி. பதினோரு மணி அளவில் நாள் தவறாமல் அவருக்கு என் செலவில் ஒரு டீ கிடைக்கும். அந்த டீ அவரது நாவடக்கத்துக்கு நான் கொடுக்கும் காணிக்கை. 

ஆனால் அவரிடம் ஒரு விசேஷம் என்னவென்றால் அடிக்கடி ரத்த தானம் செய்கிறார். ரொம்ப நாளாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், தொண்டையைத் தாண்டி நாக்கு வரை வந்து விட்டது கேள்வி. ஆனால் நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதில்லையா?

"நீங்கள் ஒவ்வொரு தடவையும் ரத்த தானம் செய்யும்போது எவ்வளவு காசு கிடைக்கும்?" என்று நான் கேட்க நினைத்த கேள்விக்கு அவரிடமிருந்து தானாகவே பதில் வந்தது ஒரு நாள். 

அன்று அவர் மிக சோகமாக இருந்தார். என்ன விஷயமென்று கேட்டேன்.

"எனக்கு அனீமியா இருக்காம், டாக்டர் சொன்னாங்க," என்றார்.

"நீங்க எதுக்காக சார், டாக்டர் கிட்ட போனீங்க? உடம்பு சரியில்லையோ?" என்று மேற்கொன்று விசாரித்தேன்.

"இல்லை பாஸ், ரத்தம் குடுக்கும்போது ஒரு வசதி என்னன்னா, அவங்களே நம்ம ரத்தத்தை நல்லா செக் பண்ணிடுவாங்க. ஆக்சுவல்லி நான் ரெகுலரா ப்ளட் டொனேட் பண்றதே அதுக்காகத்தான்!" என்றார் அவர்.

"அதுதானே பார்த்தேன்," என்று நான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் அவர் என் நண்பர்.

ரத்த தானம் செய்பவர்களுக்கு அதனால் பலனில்லாமல் இல்லை,  அதை சொல்ல வந்தேன்.

ரத்த தானம் செய்வதன் பயன்கள்-

ரத்த தானம் செய்வது என்பது படுத்துக்கொண்டே செய்கிற வேலை. மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் செலவாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ரத்த தானம் செய்கிறவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு மூன்றுக்கு ஒரு பங்கு குறைகிறதாம். அதாவது எனக்கு இதய நோய் வரும் வாய்ப்பு தொண்ணூறு சதவிகிதம் இருக்கிறது என்று சொன்னால், ரத்த தானம் செய்கிற உங்களுக்கு முப்பது சதவிகிதம்தான் (சான்று- ரோட்டரி ரத்த வங்கி,CNN)


உடலில் புது ரத்தம் பாய்கிறது. அதாவது, ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தி ஆகின்றன (விக்கிபீடியா)


முன் நான் சொன்ன மாதிரியான ரத்த சோதனைகள்- அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா- இவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று காசு வாங்காமலேயே சோதனை செய்து சொல்கிறார்கள். சொல்லுங்கள் நண்பர்களே, நீங்கள் ரத்த தானம் செய்யாதவர்களாய்  இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் கடைசியாக உங்கள் ரத்தத்தை சோதித்துக் கொண்டது எப்போது?


ரத்த தானம் குறித்து சில கேள்விகள்:

ரத்த தானம் செய்வதால் உடல் நலம் கெடுமா?
கெடாது.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். எந்த அபாயமும் இல்லை.

என் உடலில் இருந்து எவ்வளவு ரத்தம் எடுக்கலாம்?
ஏறத்தாழ பதினொன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் எடுக்கலாம். உங்கள் உடல் எடுத்த ரத்தம் அத்தனையையும் இரண்டு நாட்களிலேயே திரும்பச் சுரந்து விடும்.

ரத்த தானம் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அதிகபட்சம் ஒரு மணி நேரம். ரத்த தானம் செய்து விட்டு நேராக வேலைக்குப் போய் விடலாம். அச்சப்படத் தேவை இல்லை.

ரத்த தானம் செய்யும் முன் நான் என்ன செய்ய வேண்டும்?
நன்றாகத் தூங்குங்கள். காலையில் நன்றாக சாப்பிடுங்கள். ஜூஸ், பால் முதலான நீராகாரங்களைத் தேவையான அளவு உட்கொள்ளுங்கள். ரத்த தானம் செய்த பின் இட்லி, பிஸ்கட், ஜூஸ் போன்ற எதையாவது லைட்டாக சாப்பிடுங்கள்.


மேலும் தகவல்கள், ரத்த தானம் செய்ய அல்லது  உங்களுக்குத் தேவையான ரத்த வகையினரை தேட இந்த தளத்தில் -  India Blood.

தகவல்/ தொகுப்பு உதவி: நட்பாஸ்
.
.
.

Oct 24, 2010

நலம் தரும் திங்கள் - துவங்குமுன்...


அன்பு நண்பர்களுக்கு

"பேசுகிறேன்" தளத்தில் "நலம் தரும் திங்கள்" என்னும் மருத்துவத் தகவல் தொடரைத் துவங்குகிறோம்.

பல நேரங்களில் திரைப் பிரபலங்கள் இந்த வசனம் பேசக் கேட்டிருப்பீர்கள். "தமிழ் சினிமா ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியாது. எந்த படத்தை தாங்குவாங்க, எந்த படத்தை வாங்கு வாங்குன்னு வாங்குவாங்கன்னு சொல்லவே முடியறது இல்லை".

அதே மனநிலை தமிழ் இணைய வாசகர்கள் குறித்து எனக்கும் உண்டு. சூப்பர்ஸ்டார் பற்றி எழுதி சீந்தப்படாமல் போன பதிவுகளும் உண்டு. மொக்கைப் பதிவுகளுக்கு முன்னூறு பேர் வந்து சென்ற அனுபவங்களும் உண்டு.

இப்படித்தான், ஏதும் எழுத வேண்டுமே என்று தலையை நான் சொறிந்து யோசித்த வேளையில் "சரி எழுதலாம்" என்று "ரத்த சரித்திரம் - நிஜமான" என ரத்த சம்பந்த தகவல்களை எழுதினேன். 

அந்தப் பதிவிற்குக் கிடைத்த வரவேற்பு, அந்தப் பதிவின் வாயிலாக நிகழ்ந்த விவாதங்கள், பின்னூட்ட ஊக்குவிப்புகள் இவற்றைக் கண்ட பின் மருத்துவ சம்பந்தமான தகவல்களுக்கு நம் ஊரில் உள்ள மாறாத மவுசைப் புரிந்து கொண்டேன்.

என் இணைய உலக துரோணாச்சாரியார் "நட்பாஸ்" அவர்கள் தந்த ஊக்கம், தகவல் மற்றும் தொகுப்பு உதவிகள் இவற்றை  பலமாகக் கொண்டு "நலம் தரும் திங்கள்" என்னும் இந்த மருத்துவத் தகவல் தொடரைத் தொடங்குகிறேன்.

திங்கட்கிழமை தோறும் ஒரு மருத்துவத் தகவலை வெளியிட வேண்டும் என்பது எங்கள் இருவரின் அவா.

உங்கள் அனைவரின் வரவேற்பினை இத்தொடர் நிச்சயம் பெரும் எனும் நம்பிக்கையுடன் முதல் அத்தியாயத்தை நாளை தொடங்குகிறோம்...

மருத்துவத் தகவல்களுடன் நாளை சந்திப்போம்....
.
.
.

Oct 21, 2010

புத்தக வெளியீட்டு விழா அழைப்பு

நண்பர்களுக்கு,

செங்கை பதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள டாக்டர்.ஷ்யாமா அவர்கள் எழுதிய "மகப்பேறு மகத்துவம்" நூலின் வெளியீட்டு விழா வரும் 23.10.2010 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு சென்னை-மயிலை லஸ் சர்ச் சாலை "ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில்" நடைபெற உள்ளது.

பெண்கள் நல மருத்துவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நூலினை வெளியிட மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்:

அருணோதயம் திரு.அருணன் அவர்கள்,
சுவாமி விமூர்த்தானந்த ஜி (ஆசிரியர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),
திரு ஏ.நடராஜன் அவர்கள் (சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர்),
திரு கவிதா சொக்கலிங்கம் அவர்கள் (உரிமையாளர் - கவிதா பதிப்பகம்).

செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்கள் சார்பில் தங்கள் அனைவரையும் இவ்விழாவில் தங்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் மற்றும் "மகப்பேறு மகத்துவம்" நூலாசிரியர் அறிமுகத் தகவல்களை இணைத்துள்ளேன்.





தமிழ்ப்பதிவர் திரட்டு


புதிதாக தமிழ் வலை வெளிக்குள் வருபவர்களுக்கு என உடனடி வழித்துணையாக இருக்க தமிழ்ப் பதிவர்களின் திரட்டு ஒன்றை ஓர் நிரந்தரப் பதிவாக வெளியிட நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஒரு வழியாக (வழக்கம்போல் நண்பர் பரிதியின் உதவியோடு) இதோ இங்கே உங்களுக்காக....

+ - + = + - + = +



நீங்கள் எந்த எந்த வலைத்தளங்களைப் படிக்கிறீர்கள் என்றுத் தெரியவில்லை. இருந்தாலும் நான் படிப்பதில் இவை சுவாரசியமாக இருக்கின்றன-

எஸ் ராமக்ருஷ்ணனைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை: கட்டாயம் படிக்கப்பட வேண்டியவர். மொழி நடையை வளர்த்துக் கொள்ள உதவக் கூடும்! :) http://sramakrishnan.com/

வசவசன்று பதிவிடுகிறார்- ஆனால் சுஜாதா, காஞ்சி ஸ்வாமிகள் இருவரைப் பற்றிய அறிய விஷயங்களை எங்கெங்கிருந்தோ தேடிக் கொண்டு வந்துக் கொடுக்கிறார். நான் விரும்பி வாசிப்பது http://balhanuman.wordpress.com/

கேபிள் சங்கர் தெரியாதவர்கள் இருக்க முடியாது http://cablesankar.blogspot.com/

எப்போதும் கொடுமை, சில சமயம் அருமைhttp://dondu.blogspot.com/

இது ரொம்ப முக்கியம் http://idlyvadai.blogspot.com/

இவர் இல்லா விட்டால் இணையம் வீண்http://www.jeyamohan.in/

இலங்கைக்காரர்- கிரிக்கெட் பற்றி நிறைய எழுதுகிறார் http://loshan-loshan.blogspot.com/

பதிவராக மாறிய எழுத்தாளர்- இவரைப் பற்றி நாமும் ஒரு பதிவு எழுத வேண்டும் http://www.maamallan.com/

ஜெயமோகனுக்குப் பிடித்தவர்- கண்ணதாசன் மரபுக் கவிதை உரைகள்- மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டும் http://marabinmaindanmuthiah.blogspot.com/

இலக்கியப் பேராசிரியை- வேண்டாமென்றால் விட்டு விடலாம் http://www.sekalpana.com/

இங்கே சில சமயம் நல்ல கட்டுரைகள் வருகின்றன - இதையும் வேண்டாமென்றால் விட்டு விடலாம் http://www.tamiloviam.com/site

போட்டோ காப்ஷன் எழுதி கலாட்டா பண்ணுவது இவரது சிறப்பு. இப்போதெல்லாம் உரைநடையும் அதிகமாகி விட்டது http://valaimanai.blogspot.com/

சினிமா நகைச்சுவைப் பதிவர் http://veliyoorkaran.blogspot.com/

முக்கியமானவர். பொறுமையாய்ப் படித்தால் மொழி வளம் கூடும் (அப்படி சொன்னால், கத்தி போடுவார், தலையை அசைக்காமல் இருந்தால், நல்ல மேக்கிங்கோடு வெளியே வரலாம் என்று அர்த்தம்!) http://ramasamywritings.blogspot.com/

இவரும் இந்தக் கேஸ்தான்- டிவிட்டரில் தொடரப்பட வேண்டியவர் http://andaiayal.blogspot.com/

ஹாலிபாலி சினிமா பதிவுகளில் தனிப் புகழ் பெற்றவர், இல்லையாhttp://www.hollywoodbala.com/

சீரியசான இலக்கியம், மாற்றுமொழி பார்வை, இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை http://angumingum.wordpress.com/

அதிஷா. இணையத்தில் எனக்குப் பிடித்தவர் http://www.athishaonline.com/

எதைப் படித்தாலும் படிக்காவிட்டாலும், இதைப் படிப்பதற்கென்று தினம் கால் மணி நேரம் ஒதுக்க வேண்டும்- மொழி ஆளுமை கூடும். நல்ல இலக்கியத்தின் முகவரி. http://azhiyasudargal.blogspot.com/


அகரம் அமுதா- இவர்களெல்லாம் பண்டை இலக்கியத் தீவிரவாதிகள். தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பில்லை http://ilakkiya-inbam.blogspot.com/

உண்மையான ஈழ உணர்வுள்ள தமிழர்கள். சிங்களக் கவிதைகளைக்கூட மொழிபெயர்த்து இடுகிறார்கள். என் தூர தேசத்து அலுவலக நண்பர் கான பிரபாவின் பதிவுகளும் அவ்வப்போது இங்கே வருகின்றனhttp://eelamlife.blogspot.com/

உண்மைத்தமிழன் வினவு-நர்சிம் விவகாரத்துக்கு அப்புறம் என் ஹீரோhttp://truetamilans.blogspot.com/

புத்திசாலி. டிவிட்டரில் நிச்சயம் தொடரவேண்டும்http://www.sridharblogs.com/

கர்நாடக சங்கீதத்தில் உங்களுக்கு இருக்கிற ஊக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்தத் தளத்தில் விஷயம் இருக்கிறது http://carnaticmusicreview.wordpress.com/ அண்மையில் ஷாஜி விவகாரத்தில் ஜெமொவிடம் மோதினார் 

காஞ்சி ரகுராம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எளிய, சரளமான நடை. கணிப்பொறித்துறையில் பெரிய ஆள் என்று நினைக்கிறேன் http://kanchiraghuram.blogspot.com/

இஷ்டப்படி எழுதுகிறார்- என்னைப் போன்றவர்களின் மனப்போக்குக்கு ஏற்றவர் என்றுத் தோன்றுகிறது :) http://selventhiran.blogspot.com/

இவருக்கு அறிமுகம் தேவையில்லை http://www.gnanakoothan.com/

தமிழ் ஹிந்து. பிடிக்கிறதோ பிடிக்கலையோ, படிக்க வேண்டிய விஷயங்கள் www.tamilhindu.com

நாஞ்சில் நாடன் http://nanjilnadan.wordpress.com/

பாலகுமாரன் http://balakumaranpesukirar.blogspot.com/

ஜெமோவின் நண்பர் சிறில் http://cyrilalex.com/

ஜெமோவை குரு என்று சொல்லிக் கொள்கிறார், கர்நாடக இசை குறித்து தெளிவாக எழுதுபவர் http://ramachandras.wordpress.com/

இவரும் இசை குறித்து எழுதுகிறார்- பெரும்பாலும் மேற்கத்திய இசை http://beyondwords.typepad.com/beyond-words/

தமிழ்ப் பதிப்பகத்துறையின் புதிய முகவரி இவர்தான்- பத்ரி http://thoughtsintamil.blogspot.com/

இந்த அம்மணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பயம் என்பதே கிடையாது. வினவை இவர் போல் கேலி செய்பவர் யாரும் இல்லை. புதுமைப் பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் http://kavithavinpaarvaiyil.blogspot.com/

வாரம் ஒருவர் தனக்குப் பிடித்த பதிவு மனைகளை அறிமுகம் செய்கிறார். உங்கள் ரீடரில் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றுhttp://blogintamil.blogspot.com/

டெக்னிகல் தகவல்களைத் தமிழில் அள்ளித்தரும் இவர்கள் தமிழ் டெக்னோ உலகின் முடி சூடா மன்னர்கள்.


http://www.gouthaminfotech.com


இங்கே அதி முக்கியமாக:


சிலிகான் ஷெல்ப் வெளியிட்ட எழுத்தாளர்களின் வலைமனைகளுக்கான சுட்டி இங்கே முக்கிய இடம் பெறுகிறது அது இங்கே 

கடைசியாக.... இந்த லிஸ்டில் இலவச இணைப்பாக என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்....

(நல்ல தளமுங்க..நம்பிப் படிக்கலாம்)

+ - + = + - + = +

டிஸ்க்ளைமர்: யோவ் இன்னாய்யா என்னோட பதிவைக் காணோம் / எங்க தலீவர் வலைமனைய இருட்டடிப்பு செஞ்சிட்டன்னு கேட்பவர்களுக்கு: மிஸ்ஸிங் வலைப் பதிவு விவரங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். எனக்கு ஒப்புதல் உள்ளவற்றை இணைத்துவிடுகிறேன்.
.
.
.

பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும்...

பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நான் சின்னதாக ஏதும் சொல்லுமுன்,  ஒரு ப்ளாஷ்பேக்.


ஒரு கொலை.... ஒரு தற்கொலை....!! இரண்டுமே நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. 


அவன் திருச்சியைச் சேர்ந்தவன். அவள் சென்னைப் பெண். இருவரும் படித்தது தஞ்சை அருகில் இருந்த ஒரு அறிவியல், கலை, பொறியியல் என எல்லாவற்றிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு கல்லூரியில். இருவரும் அந்தக் கல்லூரியின் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள். 
பத்திரிக்கைகளில் படித்தவைகள் நிஜமானால் இருவரும் படித்த வேளையிலேயே பருவச் சலனத்தின் அத்தனை கதவுகளையும் திறந்து மிச்சம் மீதமின்றி அத்தனை தவறுகளையும் செய்திருக்கிறார்கள். (அவர்கள் செய்த காரியங்களை சரி / தவறு எனச் சொல்ல நான் யார் என்கிறீர்களா? ஸாரி, என்னிடம் பதிலில்லை)

ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட சில காரணங்களால் அவள் அவனை விட்டு விலகிச் செல்ல... மற்றொரு சக மாணவனுடன் நட்பு பாராட்ட....

வன்மம், பகை, கோபம், இது, அது என அவன் கனலில் உழன்று அவளை தன் வீட்டிற்கு யாருமில்லாத நேரத்தில் வரவழைத்து, ஒரு வேகத்தில் அவளைக் கொலையும் செய்து தன் வீட்டிலேயே கட்டிலின் அடியில் அவள் இறந்த உடலை மறைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி...



....வீட்டில் மகனைக் காணோம் என்று யோசித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு மகனிடமிருந்தே தொலைபேசியில் அழைப்பு வந்தது. தம் வீட்டுக் கட்டிலடியில் தான் செய்த கொலையின் சாட்சி இருப்பதாகவும், மேலும் தான் தற்போது தற்கொலை செய்து கொள்ள விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் அவன் சொல்ல....

....சென்னை செல்லும் ரயிலில் அவன் ஏறி உளுந்தூர்பேட்டை அருகே ரயிலில் இருந்து குதித்துத் தற்கொலையும் செய்து கொள்ள....

இப்படிப்பட்ட அவனையும் அப்படிப்பட்ட அவளையும் பெற்றெடுக்க அவனவளின் பெற்றோர்கள் "என்ன தவம் செய்தனரோ...".

ஓகே, கதை முடிந்தது. இங்கே நான் ஏதும் பாடம் எடுக்க அவசியம் இல்லை எனினும் நான் சொல்ல விழைவது....

அந்த அவனோ அந்த அவளோ எங்கோ திரைக்குப் பின்னால் அல்லது கதைப்புத்தகத்தின் உள்ளோ இருக்கும் பாத்திரங்கள் இல்லை என்பதே இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.

அந்த அவன் உங்கள் சகோதரனாகவோ, உங்கள் பிள்ளையாகவோ இல்லை உங்கள் நண்பனாகவோ அல்லது நீங்களாகவோ கூட இருந்துவிட வாய்ப்பு உண்டு.

அதே போல்தான் அவளும்.... உங்களில் ஒருவராக அல்லது நீங்களாக இருக்க....


கல்லூரிக் காலங்களில் சலனங்களும் நாய்க்குட்டிக் காதல்களும் சகஜகஜம். அது வேணாம், இதை செய்யாதே என முட்டாள்தனமாக நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் சலன சஞ்சலங்களை இத்தனை தூரம் அழைத்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என மட்டும் யோசியுங்கள்.

"அது சரி அது என்ன ரெண்டு வருஷம் கழிச்சி இதை எழுதற?" என்று கேட்பவர்களுக்கு....

அந்த இருவரில் ஒருவரின் நெருங்கிய நட்பு ஒன்றை கடந்த வாரம் சந்திக்க நேர்ந்தது. நடந்த சம்பவங்களின் விலகாத அதிர்ச்சியும் சோகமும் அவர் கண்களில் இன்னமும் மிச்சம் இருந்தது.
.

.
.

Oct 19, 2010

பற்றி எரிந்த பணம்!! - என்னக் கொடுமை சார் இது?

நன்றி: தினமலர் நாளிதழ்


இறந்தவரின் சடலத்தோடு எரிந்தது மூன்று லட்ச ரூபாய்


சென்னிமலை:சுடுகாட்டில் இறந்தவரின் மெத்தையில் இருந்த மூன்று லட்ச ரூபாய், தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவரின் தந்தை, இரண்டு மாதத்துக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள மணிமலைகரடு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் பயன்படுத்திய மெத்தை, தலையணையை, உடல் புதைத்த இடத்தில் குடும்பத்தினர் போட்டு விட்டு வந்து விட்டனர்.

சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாததால், அந்த இடத்தை சென்னிமலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், கடந்த 15ம் தேதி தீ வைத்து எரித்தனர். அங்கிருந்த மெத்தை, தலையணையையும் அவர்கள் எரித்தனர்.இறந்தவரின் வீட்டில், ஆயுத பூஜைக்காக சுத்தம் செய்த போது அவரது டைரி கிடைத்தது. அதில் யாருக்கு எல்லாம் பணம் கடன் கொடுத்துள்ளார்; வட்டி வரவு வந்தது; பணம் வரவேண்டியது; எங்கெங்கு பணம் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

தான் படுத்திருந்த மெத்தையின் உள்ளே 500 ரூபாய் நோட்டு தாளாக மூன்று லட்சம் ரொக்கத்தை வைத்துள்ளதாக அதில் எழுதியிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் மயானத்துக்கு ஓடிச் சென்று தேடினர். அங்கு மெத்தை எரிக்கப்பட்டு சாம்பலாகி கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மூன்று மாதமாக சுடுகாட்டில் அனாதையாக கிடந்தும், அது யாருக்கும் கிடைக்காமல் தீயில் எரிந்து நாசமானது, சென்னிமலை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னிமலை பகுதியில் இச்சம்பவத்தால் சுடுகாட்டில் உள்ள மற்ற மெத்தை, தலையணைகளை சிலர் கிழித்து பார்த்து வருகின்றனர். 

Oct 18, 2010

மனிதர்களுக்கானக் கடவுள்

மனிதர்களுக்கானக் கடவுள்
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

சொல்வனம் என்ற இதழில் மாயவன் இந்திரன் என்பவர் எழுதிய கவிதை ஒன்று வெளிவந்திருக்கிறது. கருத்து, வடிவம், மொழி என்ற மூன்று கூறுகளையும் தாண்டி உணர்வுத் தளத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டுகூட அதைக் கவிதை என்று எளிதாக சொல்லி விடலாம்.

கவிதைகளின் சில பகுதிகளை உங்களுக்குத் தருகிறேன் பாருங்கள்-


என் கனவொன்றில்
வண்ணத்துப் பூச்சிகள் தம்மிறகால் வானவில்லொன்றை நெய்கின்றன
ஒரு கணம் படபடத்த வானவில் பிரிந்து சிதறுகிறது
வானம் துடிக்கிறது வண்ணமயமாகி
...
உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்
...

தோற்றவன் கண்கள் நிலத்தை உழுதன.
வென்றவன் கண்கள் ஆகாயம் அளந்தன.
கரவொலி எழுப்பி ஆடிய கூட்டம் அடங்கிக் கலைந்தது
வெற்றி தோல்விச் சுவடுகள் அற்று கிடந்தது,
களம்
...
கதவுதிறந்தேன் நீ நிற்கிறாய்
உதடுகள் கிழிந்து வழிகிற ரத்தம் துடைக்க முடியாதபடி
முறிக்கப்பட்ட கைகள்
நிற்கமுடியாது சரிகிறாய்
விலகி வழி விடுகிறேன்
நீ விழ
...

இருள் மூலையில் சுவரோடொட்டி கால்களை மடித்து
நெஞ்சில் அணைத்து தலை கலைந்து முழங்காலில் முகம் புதைத்தபடி கண்ணீர் சுரத்தல் -
ஆற்ற ஆருமற்றவர்களின்
யோகாசனம்
கவிதைகளில் ஏன் இந்த சோகம்? என்ன நடந்தது?

முண்டியடித்து படகேறி இடமற்று அழ அழக் கரையில் தள்ளிப் பலரை கை விட்டு தப்பி
ஏற்றி வந்த பாரமெலாம் இறக்கின
நடுக்கடலில் நாட்புறமும் வெடித்து சீறி வந்த
சன்னங்கள்
என்ன ஒரு தீவிரமான எழுத்து பாருங்கள்.

இந்த மாதிரியான அனுபவங்கள் நேரக் கண்டவர்,

மதியக் கொடுஞ்சூட்டில் தகரப் பந்தல்
உள்ளே கொதிக்கிறது
எல்லோரும் வெளியே நிற்கிறார்கள்
சவத்தையும் அழுது கொண்டிருக்கும்
சம்சாரத்தையும் தவிர
என்றுதானே எழுத முடியும்?

நிராதரவாய் விடப்பட்டவர்களின் வலி, சமூகத்தில் ஏற்பட்ட விரிசலால் தனி மனித உள்ளத்தில் எதிரொலிக்கும் சிதைவு, அற்புதமாக வார்த்தைகளின் வடிவில் வெளித் தெரிகிறது மாயவன் இந்திரனின் களமும் ஐந்து கவிதைகளும் என்ற கவிதையில்.

முத்தாய்ப்பாய், மாயவன் இந்திரன் எழுதுகிறார்,

கத்தி இறங்க முன்பு பலி பீடத்திலிருந்து பார்க்க, என் இரத்தம் ஏந்த அண்டாவுடன் நின்றவனின் கால்களினூடே மனிதர்களுக்கான
கடவுள் தெரிந்தார்

யார் இந்த ரத்தம் குடிக்கும் கடவுள்? இவர் ஏன் மனிதர்களுக்கான கடவுள் ஆனார்? இவர் உண்மையில் இருக்கிறாரா அல்லது வெற்றுத் தோற்றம்தானா? எல்லாவற்றுக்கும் மேலே இவர் ஏன் பலி கொடுப்பவனின் கால்களினூடே காணப்படுகிறார்? என்னதான் அவன் பின் நின்று அவனை செலுத்தினாலும், பலி வாங்குபவன் என்ற முறையில் அவர் உயர்ந்து நிற்பதுதானே நியாயம்? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

விடை தேட அவசியமில்லாக் கேள்விகளுடன் முடிகிறது இந்தக் கவிதை.

படித்துப் பாருங்கள், சொல்வனத்தில். முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடிக்கிற மாதிரி, முதல் படைப்பிலேயே தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிற மாதிரியான எழுத்து பிரசுரமானதும் படிக்கக் கிடைப்பது என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் அனுபவம் என்கிறார்கள்.

இந்தக் கவிதையின் இறுதிப் பகுதி "முரண்நகை- மனிதர்களுக்கான கடவுள்," என்று முடிகிறது. இது குறித்து ஒன்று சொல்ல வேண்டும்.

நாம் முரண்நகை என்பதை, "சொம்பு நசுங்கிடிச்சு போல?" என்கிற மாதிரியான நக்கல் நிலைக்குக் கொண்டு வந்து விட்டோம். ஆனால் முரண்நகை என்பது விளையாட்டுத்தனமான கேலிக்கும் அப்பாலுள்ள ஒன்று.

பிளாட்டோவின் டயலாக்குகளில் காணப்படும் சாக்ரடீய பயன்பாட்டில் முரண்நகை என்பது சிந்திக்கும் ஜீவன் தன்னைத்தானே கண்டு திகைத்து, ஒரு மென்சிரிப்புடன் தன் திகைப்பைக் கடந்து செல்வதை சுட்டுகிறது. இந்த மென்சிரிப்பு, தன் புன்முறுவல் பூத்த நகைமுகத்தின் ஆழத்தில் பொருள் பொதிந்த ஒரு காத்திரமான உணர்வை ஒளித்து வைத்துக் கொண்டதாய் இருக்கிறது- முரண்நகையின் உட்பொருள் உன்னதமான ஒரு உண்மைக்கு இணையான ஆழ்ந்த, சொல்லுக்கடங்காத, சிந்தித்தறிய வேண்டிய கருத்தாழம் கொண்டது, என்கிறார் ஷ்லேகல்.

நல்ல கவிதை என்று ஒன்றைப் பாராட்டும்போது சொல்லாழம், கருத்தாழம் என்று அழகின் செறிவை மெச்சும் நிலைக்குப் போய் விடுகிறோம், அந்தக் கவிதை துக்கத்தை, அவலத்தை விவரிக்கும்போது இப்படி செய்வது தவறாகாதா? என்று கேட்கலாம். எல்லாம் கடைசியில் அழகியல், நுண்ணுணர்வு, ரசனை, கவிஞனைப் பாராட்டுதல், புகழுரை என்றுதான் முடிகிறதா?

நினைத்துப் பாருங்கள்- எவ்வளவு நாளைக்குத் துக்கம் கொண்டாட முடியும்?


தே சொல்வனத்தில் சுகா எழுதியுள்ள பந்தி இருக்கிறது. கொஞ்சம் அதிகமாகவே சுட்டுகிறேன், சொல்வனம் கோபித்துக் கொள்ளாது என்ற நம்பிக்கையில்.

"‘எப்பிடியும் நாளைக்கு ராத்திரி தாண்டாது கேட்டியா. பெரியவ பாம்பேல இருந்து வரணும். ரெண்டு மூணு நாளைக்குத் தேவையானத வாங்கிப் போடணும். மொதல்ல வெறகுக்கு சொல்லிட்டு வா’.

படுக்கையில் கிடப்பவர் உயிருடன் இருக்கும் போதே அவரை வழியனுப்பும் வேலைகள் தீவிரமாக நடக்கும். பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் என எல்லாவற்றிற்கும் தயாராகச் சொல்லி வைத்திருப்பார்கள். மரணப் படுக்கையில் இருப்பவரின் தலைமாட்டில் திருவாசகம் படித்துக் கொண்டிருப்பார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்து முடிந்த செய்தி வந்தவுடன், மெல்ல ஒருவர் லேசாக விசும்பிக் கொண்டே படுக்கையில் கிடப்பவரின் தலையைப் பிடித்துத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு வெள்ளி தம்ளரில் உள்ள பாலை அவர் வாயில் ஊற்றுவார். வாசலில் புதிதாகப் போடப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில் மாலைமுரசு படித்துக் கொண்டிருப்பவரின் கவனத்தை, வீட்டுக்குள்ளிருந்து வரும் ‘எளா, என்னப் பெத்தா, என்னைய விட்டுட்டு போயிட்டியெ, இனிமெ நான் என்ன செய்வென்’ என்னும் கதறலொலி கலைக்கும்.

அடுத்த சில நிமிடங்களில் ஆக்குப்புறையில் அடுப்பு பற்ற வைக்கப் படும். சுடச்சுட இட்லி அவித்துத் தட்டப்பட, சாம்பார் கொதிக்கும், தேங்காய்ச் சட்னி தயாராகும். விடிய, விடிய காபி கொதித்துக் கொண்டே இருக்கும். துட்டிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கவனமாகப் பார்த்து கணிப்பவர் தவுசுப்பிள்ளைதான்.

‘ராமையா, கூட ரெண்டு படி அரிசிய போடு. எக்ஸ்ட்ரா எலை சொல்லிட்டெல்லா.’

மரணவீட்டில் அழுது கொண்டு இருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் குழந்தைகளின் பசியை முன்பின் தெரியாதவர்கள் கூட போக்குவார்கள்.

‘ஏட்டி, நீ யாரு சங்கரி மகளா? ஒங்க அம்மைய எங்கெ? சரி சரி இங்கெ வா. அளாத. இட்லி திங்கியா. பெரியம்ம தாரென். இந்தா.’

மறுநாள் சாம்பல் கரைத்த பிறகு சுடுகாட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் பந்தி பரிமாறுவார்கள். அன்றைய சாப்பாட்டில் கண்டிப்பாக அகத்திக் கீரை உண்டு. முதல் நாள் சரியாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடந்த வயிறைச் சரி செய்வதற்காகவே அகத்திக்கீரை. மற்றபடி வழக்கமான விசேஷச் சமையல்தான்.

சமையலின் ருசி மெல்ல மரணத்தின் சோகத்தை மறக்கடிக்கும் தருணமது.

‘மருமகனே, அவியல் நல்லாருக்கு. கூட கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்க’.

‘நான் நாலு மட்டம் வாங்கிட்டென் மாமா’.

‘சுப்ரமணிப்பய சரியா சாப்புடுதானா? மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டுருந்தான்’.

சுப்ரமணியை எட்டிப் பார்த்தால் அவர் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தபடி, வாளிக்குள் தலையை விட்டுக் கொண்டிருப்பார்."

இது வாழ்க்கை- கதை, கவிதைகள், கட்டுரைகள் மூலம் ஒரு சித்தாந்தத்தை, ஒரு வரலாற்றை, ஒரு உணர்வை உறைய வைத்துக் கொடுக்க வேண்டியத் தேவை இல்லை. என்னைக் கேட்டால், தவிப்போ இழப்போ, எதுவாயினும் சரி- அவற்றை உண்மை உணர்வுடன், நியாயமாகப் பெசுகிறவனின் சொற்களில் வெற்றுப் புலம்பல் இருக்காது- தன் சோகத்தை முரண்நகையின் மூலம் அவன் கடந்து சென்று விடுவான்: ஆனால் அந்தக் கடந்து செல்தல் என்பது சோகத்தின் காரணத்தை மறுப்பதாக இருக்காது- அதை இன்னும் ஆழ்ந்த உணர்வைப் பதிப்பதாக இருக்கும்.

இதுவே கோபம், அறச்சீற்றம் என்று அனைத்துக்கும் கொள்ளலாம். நாம் பழிவாங்குதல் பற்றிப் புதுசு புதுசாய்ப் பேசுகிறோம். யூரிப்பிடீஸின் மெடியா படித்துப் பாருங்கள். விக்கித்துப் போய் விடுவோம்.

முரண்நகை என்பது வெறும் கேலி, கிண்டல், கோபமாய் செய்கிற நக்கல் என்ற அளவோடு நின்று விடுவதில்லை. அது அவலத்தை அழகியலோடு சேர்த்து வைக்கிறது. நினைவுகளின் தடத்தை திசையின்றித் திரும்பும் வாழ்க்கையின் போக்குக்கு நெகிழ்த்தித் தருகிறது. இறுகிய மனங்களைத் தளர்த்துகிறது, ஆதிக்க உணர்வுகளை எள்ளி நகையாடுகிறது.

நம் நகர்ப்புற சாலைகளின் நடைபாதைகளில் கான்க்ரீட் விள்ளைகளின் விளிம்புகளில் அத்தனை கால்கள் மிதித்தும் வளர்ந்து நின்று புதிதாய் சிரிக்கும் சிறு புற்களின் மலர்ச்சி- இது உயிர்ப்பின் முரண்நகை. இது எளியதாய் இருக்கலாம், ஆனால் இதனினும் வலியது இல்லை.
தோற்றவன் கண்கள் நிலத்தை உழுதன.
வென்றவன் கண்கள் ஆகாயம் அளந்தன.
கரவொலி எழுப்பி ஆடிய கூட்டம் அடங்கிக் கலைந்தது
வெற்றி தோல்விச் சுவடுகள் அற்று கிடந்தது,
களம்

வென்றவனும் சரி, தோற்றவனும் சரி தன்னுடன் கொண்டு செல்ல முடியாதது களம், உண்மையை சொன்னால் களம் இருவரையும் தன்னுட் கொள்ளும்.

மாயவன் இந்திரனின் கவிதைகள் முரண்நகையை, நான் சொன்ன சாக்ரடீய பொருளில், தன் ஜீவனாய்க் கொண்டுள்ளன. இதில் இருப்பது உயிர்ப்பின் ஜீவன். வெறும் புலம்பலாகவோ, பிரசாரமாகவோ, வரலாற்று ஆவணமாகவோ, துக்கப் பகிர்தலாகவோ இவை எனக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தை, அங்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை இவை பாடினாலும், மொத்த மனித சமுதாயத்தின் மைய உணர்வுகளை நோக்கி எழுப்பப்பட்ட அழைப்பாகவே நான் இவரது கவிதைகளைக் காண்கிறேன்.

கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிதையைப் பிரசுரித்த சொல்வனம் இதழுக்கு நன்றி.

Oct 16, 2010

எந்திரன் - ஒரு தென்றலின் சூடான விமர்சனம்

ஏற்கெனவே இரண்டு நேர்மறை விமரிசனங்கள் நம் தளத்தில் எந்திரன் படத்திற்கு வெளியிட்டாயிற்று. இப்போது நம் தொடர் வாசகர் ஒருவர் ஒரு எதிர்மறை விமரிசனம் வரைந்துள்ளார். உள்ளது உள்ளபடி அவர் தந்ததை அப்படியே வெளியிட்டுள்ளேன். அவர் சொல்வது சரியா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


நான் நேற்று எந்திரன் படம் பார்க்க நேர்ந்தது. அந்த அதிர்ச்சியில்தான் இதை எழுதுகிறேன்.



எல்லாரும் எந்திரன் கதை, ஹாலிவுட் ஸ்பெஷல் எபக்ட்ஸ், ஐஸ்வர்யாவின் அழகு என்று நிறைய விஷயங்களைப் பேசி விட்டார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை

நீங்கள் இந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லையானால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படம் பார்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போகாதீர்கள். இது இன்னொரு ஷங்கர் படம், அவ்வளவுதான். இதற்கு முந்தைய படங்களில் செய்த அதே தவறுகளையே இதிலும் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்கள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போய் என்ஜாய் பண்ணுங்கள், அவ்வளவுதான் சொல்ல முடியும். ஸி ஜி எபக்ட் எல்லாம் பிரமாதம், இந்த மாதிரியான கிராபிக்ஸை நீங்கள் எந்தத் தமிழ் படத்திலும் பார்த்திருக்க முடியாது.

ஆனால் இந்தப் படத்தில் அபத்தமாய் இருக்கிற சில விஷயங்களைப் பேசியே ஆக வேண்டும்.

நான் இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்கப் போனேன். ஆனால் முதல் சீனிலேயே ஷங்கர் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. அவர் சந்தானத்தையும் கருணாசையும் விஞ்ஞானிகள் என்று அறிமுகப்படுத்துகிறார்- ஆனால் பைக் மெக்கானிக்குகள் மாதிரி அவர்கள் டிரஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்துக்கும் கருணாசுக்கும் ஏன் ஒழுங்கான உடை கொடுக்கவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

ஷங்கருக்கு காஸ்ட்யூம் பற்றித் தெரியாதா என்ன? இல்லை அவர் வேண்டுமென்றுதான் அவர்களை இந்த சீனில் இப்படி வேடம் கட்டி விட்டிருக்கிறாரா? குறும்படம் எடுப்பவர்கள், பிலிம் காலேஜில் படிக்கும் மாணவர்களுக்கும் கூட இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான அபத்தங்கள் இருந்தால் படத்தை எப்படி ரசிப்பது? இதெல்லாம் சின்ன விஷயமாக இருக்கலாம், ஆனால் படம் பற்றிய பீலையே இத்தகைய தவறுகள் முழுதுமாக மாற்றி விடுகின்றன. உலகத்தில் இருக்கிற சகல விஷயங்களைப் பற்றிய அறிவும் இருக்கக்கூடிய ரோபோவை உருவாக்குகிற விஞ்ஞானி இப்படிப்பட்ட பைக் மெக்கானிக் மாதிரியான காமெடி ஆட்களையா உதவிக்கு வைத்திருப்பார்?





வசனங்கள் கூட அங்கங்கே அபத்தமாக இருக்கின்றன. வசனங்களை யார் எழுதியது என்றுத் தெரியவில்லை- டைட்டிலில் சுஜாதாவையும் சேர்த்து மூன்று பேர் பேரைப் போடுகிறார்கள்

ஒரு சீனில் வில்லன் ரோபோக்கள் ஒரு ஊரையே அழித்து அதில் உள்ள ஆட்களை துவம்சம் செய்கின்றன. அதற்கடுத்த காட்சியில் ஒரு போலீஸ்காரர் ஆர அமர அந்த விஞ்ஞானியிடம் வந்து மெல்லக் கேட்கிறார், "என்ன ரோபோ பண்ணி வெச்சுருக்கிங்க? இப்படி பண்ணுது?" என்று.

 ஒரு ரோபோ பல பேர கொலை செய்த பிறகு, ஊரையே நாசம் பண்ணின பிறகு இப்படித்தான் ஒரு போலீஸ் ஆபிசர் சாப்டா கேட்பாரா? சிரிப்புதான் வருது.


அப்புறம் இன்னொன்று, தீவிரவாதி ஒருவன் வில்லன் விஞ்ஞானியிடம் நான் ரோபோ செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தோம், அது என்ன ஆச்சு என்று கேட்கிறான். வில்லன்  விஞ்ஞானி சொல்கிறார், இன்னும் ரெடியாகலப்பா, எனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் குடு என்று.  இவர் சொல்றது எப்படி இருக்கு தெர்யுமா ,என் கிட்ட இப்ப காசு இல்ல ஒரு மாசம் டைம் குடு அடுத்த மாசம் திருப்பி தரேன் என்று சொல்ற மாதிரி இருக்கு . இப்படியா ஒரு சயின்டிஸ்ட் பேசுவாரு?
இந்த வகை அபத்தம் மாதிரியே இன்னும் பல அபத்தங்கள். சரி செய்திருக்கலாம் ஆனால் இந்தத் தவறுகள் ஸ்டோரி லைனில் எல்லா இடத்திலும் வருகின்றன.

என்னுடைய முக்கியமான கேள்வி என்னவென்றால் சன் க்ரூப் ஒன்றரை பில்லியன் பட்ஜெட் போட்டு செலவு பண்ண குடுத்திருக்கு. சூப்பர் ஸ்டார் உங்க படத்துல நடிக்கிறார். இதை வெச்சுக்கிட்டு ஒரு நல்ல, நிஜமான சயின்ஸ் பிக்ஷனா, ஆங்கிலப் படங்களின் தரத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதி எடுக்கும் தைரியம் உங்களுக்கு ஏன் இல்லை? ஏன் இது உங்களால் முடியாமல் போனது

இத்தனைக்கும் ஷங்கர் புது இயக்குனர் இல்லை. அவரே ஒரு நட்சத்திர இயக்குனர், அவருக்கு என்று ஒரு வால்யூ இருக்கு. இத்தனையும் இருந்தும், அவரே, தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்ல பயப்படுகிறார் என்றால், அது யாரால்தான் முடியும்?
.
.
.



Related Posts Plugin for WordPress, Blogger...