Oct 14, 2010

ஓர் இரவில் ஒரு ரயிலில்...








அந்த ஒருவனை ஏற்றிவிட ஏழெட்டு பேர் வந்திருந்தனர். ஏனோ "நீங்க கலங்காதீங்க ", என்றுகொண்டே அவன் கண்கலங்கிக் கொண்டிருந்தான். அவர்களெல்லாம் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். "நீங்க எல்லாமும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்", என்றான். அவர்களில் யாரும் பெரிதாகக்  கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பாண்டியன் தாமதமாக வந்த யாருடைய அனுமதியையும் கோராமல் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுவிட்டது.

அந்த ஏழெட்டு பேர் திரும்பித் திரும்பி திரும்பத் திரும்ப "பாத்துக்கோ ராஜா, பாத்துக்கோ ஆல் தி பெஸ்ட்" எனச் சொல்லிக்கொண்டு தடதடவென வண்டி ஓடுகையிலேயே இறங்கி கடைசி நேர ஏற்றக்காரர்களிடம் கெட்ட வசவுகள் வாங்கிக் கொண்டார்கள். இறங்கிய  பின்னும் கூட இரண்டு பேர் வண்டியோடு கிட்டத்தட்ட சேத்பட் வரை கையசைத்துக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

டிக்கெட் பரிசோதகர் வந்து போக, தாம்பரமும் கடந்து போக "இந்து மகா சமுத்திரத்தில்" மூழ்கியிருந்த என்னை ஏதோ குறுகுறு பார்வை தொடர்வது உள்ளுணர்த்த, திரும்பிப் பார்த்தால் நம்ம ராஜா எதிர் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்தவாறு லேசாய் ஒரு அசட்டுச் சிரிப்பு. நானும் சிரித்து வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் தலை நுழைக்க, மீண்டும் பார்வை என்மேல் தொடர்வது போல்... திரும்பினால் "அதே ராஜா, அதே புன்னகை". நான் கொஞ்சம் தீவிரமாக அவனைப் பார்க்க

"படுத்துக்கலாமா சார்?"

"டேய், இது என்ன கேள்வி", என்பதாய் நான் அவனைக் கலவரமாய்ப் பார்த்தேன்.

"இல்லை, லைட் எரிஞ்சா எனக்குத் தூக்கம் வராது".

"லைட் அணைச்சா எனக்கு படிக்க வராது", என சொல்ல வேண்டும் போலிருந்தது.

"ரெண்டு நிமிஷம் சார்", என அனுமதி பெற்று புத்தகத்திற்கு முகம் தந்தேன்.

"அய்யிய்யோ.... சார்'ன்னு எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு உங்கள விட அஞ்சாறு வயசு கம்மியா இருக்கும். என் பேரு ராஜா". அவன் பேசி முடித்ததும் அவன்புறம் ஒரு வெற்றுப் பார்வையை வீசிவிட்டு மீண்டும் புத்தகத்தில்....

சரியாக நூற்றியிருபது வினாடிகள் கடந்திருக்கும் போல. "படிச்சிட்டீங்களா சார்"

புத்தகத்தை பைக்குள்  எறிந்துவிட்டு ஒன்றும் பேசாமல் லோயர் பெர்த்தில் படுத்துக் கொண்டேன். அவன் கரும சிரத்தையாக மிடில் பெர்த்தை ஏற்றி வைத்துவிட்டு, "சார் செங்கல்பட்டுல யாராவது ஏறினா உங்களை தூக்கத்துல எழுப்பிடுவாங்க. இப்பவே மிடில் பெர்த்தை ஏத்தி விட்டுட்டு படுங்க" , என டிப்ஸ் தந்துவிட்டு படுத்துக் கொண்டான்.

வேண்டா வெறுப்பாக அவன் சொன்னதை செய்து விட்டுப் படுத்தேன்.

"
இப்பல்லாம் இன்டர்நெட்டுல டிக்கெட் புக் பண்ணிடறாங்க. பொது ஜனங்களுக்கு டிக்கெட் கெடைக்கறது கஷ்டமாகிடுச்சு சார்"

நான் படுத்து பதினைந்து எண்ணுவதற்குள் தூங்கும் ரகம். "ம்ம்ம்ம்", என்று தூக்கத்தினூடே குரலாட்டினேன்.

"
தூங்கிட்டீங்களா சார்?"

பக்கவாட்டில் அவன்புறம் திரும்பி விழி விரித்து அவனைப் பார்த்து, "சொல்லுங்க", என்றேன்.


"
நீங்க என்ன நெனைக்கறீங்க இது பத்தி?"

"
எது பத்தி?"

"
இந்த இன்டர்நெட் புக்கிங் பத்தி?"

"
இன்டர்நெட்' புக் பண்றவங்களும் பொதுஜனம்தான்னு நெனைக்கறேன்"

"
நான் அப்படி சொல்ல வரலை சார்..."

"
உங்களுக்கு தூக்கம் வரலைன்னா நான் லைட் போட்டுக்கவா, கொஞ்சம் படிக்கணும்?"

"
ம்ம் சரி...இல்லை வேணாம் சார். தூங்கலாம்"

ஓரிரு நிமிட இடைவேளைக்குப் பின், "சார், மதுரைக்கு முன்னால ட்ரெயின் எங்க நிக்கும்?"
"கொடை ரோடு"
"எத்தனை மணிக்கு சார்"

"ம்ம்ம், ஒரு அஞ்சரை மணிக்குன்னு நெனைக்கறேன்"

"
தேங்க்ஸ் சார். அங்கருந்து போன் பண்ணிட்டா, அவங்களுக்கு வண்டி அனுப்ப சரியா இருக்கும் அதுதான். நான் அலாரம் வெச்சுக்கறேன்"

எத்தையோ பண்ணித்தொலை என்றவாறு நான் திரும்பிப் படுத்தேன்.

அடுத்து..... வேறென்னவாக இருக்கும்? நானும் நீங்களும் நினைத்தவாறே சிம்ம கர்ஜனை எழுந்தது. மவனே என்னமா கொறட்டை வுடறான் சார்காலை மூன்று மணி வரை ராஜ கர்ஜனை புண்ணியத்தில் தூக்கம் சுத்தமாக அவுட்.

லால்குடி அருகே வண்டி ஒரு வனாந்திரத்தில் நீண்ட நெடு நேரம் நின்றுகொண்டே இருந்ததுகடந்து சென்ற போலீஸ்காரம்மாவிடம்  செய்த விசாரணையில் முன்னே சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் இரண்டு பெட்டிகளைத் தடம் புரள விட்டதால் தாமதம்  எனத் தெரிந்தது.


லால்குடியில் காட்டுக் கொசுக்கள் கொலைப்பசியில் இருந்துத் தொலைத்த வேளையில் நாங்கள் அங்கே சிக்கிக் கொள்ள, அப்போதுதான் மடிப்பாக்கக் கொசுமார்கள் எத்தனை நல்லவர்கள் என எனக்குப் புரிந்து தொலைத்தது. ஒரு ரவுடிக் கொசுக்கூட்டம் கிட்டத்தட்ட என்னை ஜன்னலுக்கு வெளியே வலுக்கட்டாயமாக வலித்தது.

மணி ஐந்தரை. பல் கழுவி, முகம் துலக்கி, கடன் கழித்து, மிச்ச மீதமிருந்த பெப்சியை குடித்து முடித்து என நான் என்ன செய்து பார்த்தும் வண்டி அங்கிருந்து புறப்படுவதாகத் தெரியவில்லை.

அப்போது....

நம்ம ராஜா ஒரு ராஜ கம்பீர சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தான்.

"
என்ன ஸ்டேஷன் சார்?", ஆரம்பமாயின அவன் கேள்விக் கணைகள்.

"
லால்குடி பக்கத்துல ஏதோ காடு சார். வண்டி மூணு மணி நேரமா இங்கதான் நிக்குது".

"
என்னது, வண்டி லேட்டா?"

"
ஆமாங்க. இப்ப வரைக்கும் மூணு மணி லேட்டு?"

"
அப்போ மதுரைக்கு எப்போ போவும்?"

"
கொறஞ்சது மூணு மணி நேரம் லேட்டா போவும்"

"
அய்யய்யோ....."

அவன் புலம்பல்கள் அலம்பல்கள் என ஒரு அரை மணிநேரம் கடந்த நிலையில் வண்டி மெல்லப் புறப்பட்டு நகர ஆரம்பித்தது.

ஹப்பா....வண்டி புறப்பட்டது. இவன் புலம்பல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி என நான் நினைக்க இதற்கு மேல்தாண்டா ஆரம்பம் என மாறியது சூழல்.


அவன் ஸ்டாண்டர்டாக ஐந்து கேள்விகளை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் அந்த கேள்விகளை வரிசை மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்தான்.

"
சார் கண்டிப்பா ஒன்பதரை மணிக்கு வண்டி மதுரைக்கு போயிடுமா?"

"
மதுரைக்கு முந்தின ஸ்டேஷன் எது"

"
அந்த ஸ்டேஷனுக்கு வண்டி எப்போ போவும்?"

"
இந்த வேகத்துல போனா எப்போ மதுரை வரும்?"

"
இப்போ இந்த வேகத்துல வண்டி போனா மதுரை எப்போ வரும்?"

ஒரு நிலையில் பொறுக்க மாட்டாமல், "சார் உங்களுக்கு என்ன ப்ராப்ளம்? எதுக்கு என் உயிரை எடுக்கறீங்க? ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா?. வண்டி மூணரை  மணி நேரம் லேட்டு. ஆக்சுவலா வண்டி ஆறேகாலுக்கு போயிருக்கணும். இப்போ ஒன்பதே முக்காலுக்கு மதுரை போகும். ஒன்பது மணிக்கு கொடை ரோடு வரும். நீங்க உங்க சமூகத்துக்கு அப்போ தகவல் சொல்லலாம். நான் இதை ஒரு பேப்பர்ல எழுதித் தரணுமா?" எனக் கடுமையாகக் கேட்டேன்.

ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே "கப் சிப்" என ஆகிவிட்டான்.

"
ஸாரி சார். எனக்கு இன்னைக்கு காலைல பதினோரு மணிக்கு நிக்காஹ்", என்றான்.


எனக்கு அப்படியே தலை கிர்ர்ரென்றது. அவன் சொன்னது தெளிவாக என் மண்டையில் உரைக்க எனக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தது

"
பதினோரு மணிக்குக் கல்யாணம்"  என்பதை பதினோரு மணிக்கு எந்திரன் படம் பார்க்கப் போகிறேன் என்பது போல் கூடச்  சொல்ல முடியுமா என்ன?

"
என்னது? நிக்காஹ் உங்களுக்கா இல்லை நீங்க ஏதாவது நிக்காவுல கலந்துக்க போறீங்களா?"

அவன் போன் மணியடிக்க, "ஒரு நிமிஷம் சார்", என என் அனுமதி பெற்றுக் கொண்டு, "சொல்லுங்க அத்தா. இல்லை. வண்டி மூணு மணி தாமதமா வருது. நான் இங்க இப்போதான் திருச்சியில இருக்கேன். நீங்க ஒன்பது மணிக்கு மேல அவங்கள வண்டி அனுப்பச் சொல்லுங்க. கடைசி நேரத்துக்காவது வந்துடுவேன்னு நெனைக்கறேன். நான் என்ன செய்ய.....", என்று ஒரு பத்து நிமிடங்கள் விவர சுபரங்களைச் சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"
டேய்நேத்து ராத்திரி அவ்ளோ பேசின . உனக்கு கல்யாணம்னு சொல்லலையேடா நீ?", என்பதாய் நான் பார்ப்பதை அறிந்து...


"கோடியில ஒருத்தருக்குத் தான் சார் இப்படி ஆகும். வேலைல சில சிக்கல், போன வாரம் லீவ் கான்செல் ஆச்சு. அட்லீஸ்ட் நேத்து ஊர்ல இருந்திருக்கணும், வந்த வழியில ப்ளேன்  கான்சலாகி லேட்டு, சரி இன்னைக்கு காலைலயாவது ஆறு மணிக்கு போயிருக்கணும். இப்பவும் லேட்டு..."
நான் என் கைகளை கன்னத்தில் தாங்கி கைகளால் வாய் மூடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"
பர்ஸ்ட் நைட்டுக்காவது கொண்டு விட்டுடுவான்னு நெனைக்கறேன்", என ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் சொன்னான்.

எனக்கு லேசாய்ச் சிரிப்பு வந்தது, எனினும் இன்னமும் பேச்சு வரவில்லை. "அடப்பாவி மக்கா" என பரிதாபமாக இருந்தது.

இப்போது மீண்டும் ஆரம்பித்தான்...

"
சார் கண்டிப்பா ஒன்பதரை மணிக்கு வண்டி மதுரைக்கு போயிடுமா?"

5 comments:

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கதுங்க....

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

Anonymous said...

தலைப்ப பார்த்துட்டு ஒரு பயங்கர திரில்லா இருக்கும்னு நினைச்சேன் அண்ணா...
கடைசில ப்ளாக் க்யூமர்ல முடிச்சிட்டீங்க.. நைஸ்..

//நான் என்ன செய்து பார்த்தும் வண்டி அங்கிருந்து புறப்படுவதாகத் தெரியவில்லை//
ஹா ஹா..

natbas said...

பாவம் சார் அவர். அப்பறம் எத்தனை மணிக்கு மதுரை போய் சேந்தது? என்ன ஆச்சு...

Giri Ramasubramanian said...

@ ம.தி.
நன்றி...

@ பாலாஜி சரவணா
உங்களுக்கும் மிக்க நன்றி.

@ நட்பாஸ்
அதன் பிறகு ஒன்பதரைக்கு மதுரை போயிட்டோம். அதுக்கு அப்புறம் ஏதாவது ஆட்டோ, டாக்சி பஞ்சர் ஆச்சான்னு நமக்குத் தெரியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...