Jan 24, 2013

ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய


டேபிளைக் கடக்கையில் டாமினிக் அழைத்தான்.

”ஆழ் யூ கோயிங் டு டாக்டர்ழ்’ஸ் டெஸ்க்?”

“யெஸ் டாமினிக்”

”கென் யு ட்ழாப் திஸ் தேர்ழ்?”

ஃபைலை வாங்கிச் சென்று சீனியர் பாஸ் மேஜை மேல் வைத்துவிட்டு, அவர் கையொப்பமிட்டு அடுக்கி வைத்திருந்த நேற்றைய ஃபைல்களை அள்ளிக் கொண்டு சீட்டுக்கு வந்தேன்.

உட்கார்ந்த மறுநிமிடம் சீனியர்  பாஸ் இண்டர்காமில் அழைத்தார். "ஹூ ட்ராஃப்டட் திஸ்  லெட்டர்?"

”எது டாக்டர்?”

“நீங்க கொண்டு வந்து இப்போ வெச்சீங்களே அது”

"இட்ஸ் டாமினிக் டாக்டர்" 

"ஜஸ்ட் கம் டு  மை கேபின்"

"போச்சு! போச்சு! இந்த மனுஷன் சாதாரணமாவே சன்னதம் ஆடுவாரு இதுல சலங்கை வேற கட்டி விட்டாச்சா? இவரு டாக்டருக்குப் படிச்சாரா இல்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சாரா? ஒவ்வொரு லெட்டரா இப்படி நோண்டி நுங்கெடுத்து நம்மைப் படுத்தறாரு!"

இப்போதே நமக்கு ஆங்கிலம் ததிங்கினதோம். அப்போது இந்தத் ததிங்கினத்தோமே அரைகுறை.

"என்னய்யா பொலம்பல்? ", பக்கத்து சீட் ஈஸ்வரி கேட்டார். 

"நம்ம புதுப்பய எழுதின லெட்டர் தலைவர் டேபிள்ல வெச்சிருக்கேன் என்ன பிரச்னைன்னு தெரியலை கூப்பிடறார்"

"ய்யே! அந்த டாமினிக் ஆங்கிலோ இந்தியன்யா. என்னாமா இங்கிலீஷ் பேசறான். தப்பெல்லாம் எதுவும் இருக்காது. எப்படி லெட்டர் எழுதனும்னு அவன் எழுதின லெட்டரை வெச்சு உனக்கு பாடம் எடுப்பாரு, போ"

எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.

என் நம்பிக்கையை வீணாக்காமல் டாமினிக் அந்த லெட்டரை சொதப்போ சொதப்பு என்று சொதப்பி வடித்திருந்தான். இதற்கு மேல் தப்பு செய்ய இடமே இல்லை என்று எழுத்து, சொல், இலக்கணம், இத்யாதி, இத்யாதி என்று 360 டிகிரியிலும் தவறுகள்.

அப்போதுதான் முதல்முறையாக ஆங்கிலத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடைவெளி என்பது உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன்.

"ஜஸ்ட் த்ரோ இட் டு ஹிஸ் ஃபேஸ் ஐ சே. யூ கென் ரைட் பெட்டர் தேன்  திஸ்" 

அது பாராட்டா இல்லை இடுப்பில் இடிப்பா என்று புரியாமல் காகிதங்களைப் பொறுக்கி வந்தேன்.  

ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் சிலருக்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் தவறின்றி எழுத வராது. சிலர் மிக அருமையாக ஆங்கிலத்தில் கட்டுரைகளை  எழுதுவார்கள். ஆனால் அவர்களுக்கு சகஜமாக அல்லது சரளமாக  இன்னொருவர் எதிரில் ஆங்கிலத்தில் பேச வராது. முதல் வகையினராக  நம் டாமினிக் போன்றவர்கள்.   இரண்டாம் வகையினருக்குப்  பிரதான உதாரணமாக  அரசுத்துறையில் பணிபுரியும் சில நிர்வாக அலுவலர்களைச் சொல்லலாம்.

இரண்டு விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.


அட ஆங்கிலத்தை விடுங்கள்! அது அன்னியன் போட்டுவிட்டுப் போன மொழி!

தமிழில் உரைநடை, கவிதை எழுதுபவர்களும் இந்த வகையினர் தான். இது கை வருபவர்க்கு அது பிடிபடாது அது எழுதுபவர்களுக்கு இது சரிவராது அல்லது பிடிக்காது எனவும் சொல்லலாம்.

இரண்டையும் மனசைக் கவருமாறு எழுதவல்லவர்கள் வெகுசிலரே.

அந்த வெகுசிலரில் முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார். உரைநடை கவிதை இரண்டையும் பிரமாதமாகக் கையாளத் தெரிந்தவர். இவர் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் மற்றும் அ'னா ஆ'ன்னா  புத்தகங்களுக்கு ஆம்நிபஸ் தளத்தில் முன்னரே விமர்சனம் எழுதியிருக்கிறேன். என்னை அந்த இரண்டு புத்தகங்களையும் வாங்க வைத்த பெருமை “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்திற்கு உண்டு.

அந்தப் புத்தகத்திற்கு ஆம்னிபஸ்சில் நாம் எழுதிய விமர்சனம் ===>>> இங்கே

பிகு: இந்தப் பதிவின் தலைப்பு நா.முத்துக்குமார் எழுதிய “கண்பேசும் வார்த்தைகளி’ல் வருவது :))

Jan 21, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா

ஒரு படத்தை எதை வைத்து நல்ல படம் என்று சொல்ல வேண்டும்?

இந்தக் கேள்விக்கு சரியான பதில் நமக்குத் தெரிவில்லை. ஆனால் பாருங்கள்.... ஒரு கத்துக்குட்டி ஹீரோ, கூடவே நெகடிவ் இமேஜில் மிகவும் பிரபலமான ஆனால் ரொம்பவே சொதப்பலான ஒரு நடிகர், விளம்பர மாடலாக இருந்துவிட்டு ஹீரோயினி ப்ரமோஷன் பெற்ற எஃபெக்டில் விளம்பரத்திற்கும் சினிமாவிற்கும் இடையே நடித்து வைத்திருக்கும் ஒரு சுமாரான நடிகை, கிச்சுக் கிச்சு மூட்ட அரை டஜன் துணை சிரிப்பு நடிகர்கள், இரண்டு மணிநேரத் திரைக்கதைக்கு இடையிடையே ஃபில்லராக அரைமணிநேரம் ஓடும் டமடமடுமிடுமி பாடல்கள்.... இவை எல்லாவற்றோடு தானும் என்றபடி சந்தானம். அவ்ளோதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான எண்பதுகளின் க்ளாஸிக்கான பாக்யராஜின் இன்றுபோய் நாளைவா’வின் முன் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத படம்தான் இது. எனினும் இரண்டரை மணிநேரத்தை ரொம்பவெல்லாம் சிரமமில்லாமல் உங்களால் தியேட்டர் உள்ளே கழித்துவிட்டு வரமுடிகிறது.

பவர்ஸ்டார் அறிமுகம் ஆகும்போதே தியேட்டர் ஆர்பரிக்கிறது, ஏதோ ரஜினி படத்தின் ஓபனிங் போல. ஒரு மனிதர் நெகடிவ் பப்ளிசிடியை வைத்து இத்தனை பெரிய ஆள் ஆக முடிவது நம்மூரில் மட்டுமே சாத்தியம் எனத் தோன்றுகிறது. இம்மியளவும் நடிப்பு வராத அந்த மனிதருக்கு ஷங்கரும் தன் அடுத்த படத்தில் சான்ஸ் தந்திருக்கிறாராம். ஏடுகொண்டலவாடுதான் தமிழ் சினிமாவை ரட்சிக்க வேண்டும்.

திருப்பதி லட்டு, மோதி லட்டு, வீட்டில் செய்யும் பூந்தி லட்டு எல்லாம் கிடைக்காத வேளையில்.... எலிமெண்ட்ரி ஸ்கூல் வாசலில் விற்கும் ஈ மொய்த்த லட்டு போல. எத்தையோ தித்திப்பாய்த் தின்னலாம். தட்ஸிட்.

Jan 20, 2013

என்னவோ போங்க....

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கு அடுத்த நிலைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!

எதிரணி தன் முட்டாள்தனத்தை உதறாமல் இருக்கும்வரை காங்கிரஸ் இப்ப்டிப்பட்ட பிம்பிலாக்கி வேலைகளைச் செய்து மக்கள் கண்களில் மண்தூவி அடுத்தமுறையும் ஆட்சிக் கப்பல் ஏறி நம்மைக் கவிழ்ப்பது உறுதி என எனக்குத் தோன்றுகிறது.

புதிய பதவி குறித்த செய்தி வந்த நிமிடம் தொட்டு, வழமை மாறாது சிலப்பல உறுதிகளை, கனவுகளை, சூளுரைகளை ராகுல் விடுத்தபடி இருக்கிறார். 

மேலும், தான் தன் சீனியர் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்று தேறியிருப்பதாகவும், இன்னும் நிறைய கற்றவாறே இருப்பேன் என்றும் கூட சொல்லியிருக்கிறார். 

இதைக் கேட்டால்தான் நமக்கு உதறல் எடுக்கிறது.

------------------

நேற்று இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை ஜெயித்ததன் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. வாழ்த்துகள்.

நேற்றைய வெற்றிக்குப் பிரதான காரணம் ரவீந்திர ஜடேஜா. அவர் நன்றாக ஆடினதை இந்தத் தேசம் தரிசித்து மாமாங்கங்கள் முப்பத்தியிரண்டு கடந்திருக்க அவரின் நேற்றைய சூப்பர் டூப்பர் ஆட்டம் கண்டு புளகாங்கிதமடைந்து தலைவர் தோனி அவருக்கு சுற்றியிருக்கும் புகழாரம் காண்கையிலும் ராகுல் காந்தி விஷயத்தில் நாம் கண்ட அதே உதறல் மறுபடி நம்மைப் பீடிக்கிறது.

---------------

நேற்று முன் தினம் மீண்டும் ஒரு பள்ளி விபத்து. மேலும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மரணம். 

இந்தமுறை கிருஷ்ணகிரி அருகே பள்ளி ஒன்றில் மூடாமல் விட்ட செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றுவயது பெண் குழந்தை பலி. சம்பிரதாய நிமித்தம் பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது யாரது அஜாக்கிரதை? 

கவனிக்காமல் விட்ட பள்ளியுடையதா? இல்லை இப்படிப்பட்ட சம்பவங்களை பத்தோடு பதினொன்றாகப் பார்த்து, பள்ளியின் கட்டமைப்பு விஷயங்களில் கடுமையான வரையறை ஏதும் வரையாது மெத்தனம் காட்டும் நம் அரசு / நீதித் துறைகளையா? இல்லை பள்ளி எத்தகையது, என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே உள்ளன என்று கவனியாது இருக்கும் நம்முடையதா?

யாரை என்ன சொல்ல? இவற்றையெல்லாம் எப்படி எப்போது நிறுத்தப் போகிறோம்?

-------------------

Jan 13, 2013

புத்தக விழாவில் நம் புத்தகம்

இந்தமுறை சென்னை புத்தகவிழாவில் கடை விரித்திருக்கும் ஐநூற்று தொண்ணூற்று மூன்று ஸ்டால்களிலும் “கார்பரேட் கனவுகள்” புத்தகம் ஸ்டாலுக்கு ஆயிரம் காப்பிகள் என்ற மேனிக்கு அடுக்கி வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்றமுறை போல மக்கள் ஒன்றிரண்டு ஸ்டால்களில் முண்டியடித்து நம் புத்தகத்தை வாங்குவதற்காக வேட்டி கிழிப்புகளில் ஈடுபட்டு மற்ற புத்தகர்களின் யாவாரத்தைக் கெடுத்த நிலைமை மீண்டும் வாராது தவிர்க்கவே இந்த ஏற்பாடு.


அந்த ஐநூற்று தொண்ணூற்று மூன்றில் 590 கடைகளில் புத்தகம் தீர்ந்துபோய் யாவாரிகள் கைவிரித்தாலும் கீழ்கண்ட மூன்று ஸ்டால்களில் “கார்பரேட் கனவுகள்” கட்டாயம் கிடைக்கும் என்று உறுதி சொல்கிறேன்.

அருணோதயம் - ஸ்டால் எண்: 392 & 393

செல்வ நிலையம் - ஸ்டால் எண்: 23

புத்தகப் பூங்கா - ஸ்டால் எண்: 137


புத்தகத்திற்கு என்.சொக்கன் எழுதிய அணிந்துரை இங்கே

பிகு: புத்தகம் வாங்கிவிட்டு கடையின் வாசலிலேயே நின்று படித்தல், அங்கேயே உட்கார்ந்த வண்ணமோ அல்லது வீடு போகும் வழியில் காரை / பைக்கை ஓட்டிய வண்ணமோ எனக்குக் கடிதம் எழுதும் காரியங்களைத் தவிருங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
Related Posts Plugin for WordPress, Blogger...