Jan 20, 2013

என்னவோ போங்க....

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கு அடுத்த நிலைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!

எதிரணி தன் முட்டாள்தனத்தை உதறாமல் இருக்கும்வரை காங்கிரஸ் இப்ப்டிப்பட்ட பிம்பிலாக்கி வேலைகளைச் செய்து மக்கள் கண்களில் மண்தூவி அடுத்தமுறையும் ஆட்சிக் கப்பல் ஏறி நம்மைக் கவிழ்ப்பது உறுதி என எனக்குத் தோன்றுகிறது.

புதிய பதவி குறித்த செய்தி வந்த நிமிடம் தொட்டு, வழமை மாறாது சிலப்பல உறுதிகளை, கனவுகளை, சூளுரைகளை ராகுல் விடுத்தபடி இருக்கிறார். 

மேலும், தான் தன் சீனியர் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்று தேறியிருப்பதாகவும், இன்னும் நிறைய கற்றவாறே இருப்பேன் என்றும் கூட சொல்லியிருக்கிறார். 

இதைக் கேட்டால்தான் நமக்கு உதறல் எடுக்கிறது.

------------------

நேற்று இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை ஜெயித்ததன் மூலம் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. வாழ்த்துகள்.

நேற்றைய வெற்றிக்குப் பிரதான காரணம் ரவீந்திர ஜடேஜா. அவர் நன்றாக ஆடினதை இந்தத் தேசம் தரிசித்து மாமாங்கங்கள் முப்பத்தியிரண்டு கடந்திருக்க அவரின் நேற்றைய சூப்பர் டூப்பர் ஆட்டம் கண்டு புளகாங்கிதமடைந்து தலைவர் தோனி அவருக்கு சுற்றியிருக்கும் புகழாரம் காண்கையிலும் ராகுல் காந்தி விஷயத்தில் நாம் கண்ட அதே உதறல் மறுபடி நம்மைப் பீடிக்கிறது.

---------------

நேற்று முன் தினம் மீண்டும் ஒரு பள்ளி விபத்து. மேலும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் மரணம். 

இந்தமுறை கிருஷ்ணகிரி அருகே பள்ளி ஒன்றில் மூடாமல் விட்ட செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றுவயது பெண் குழந்தை பலி. சம்பிரதாய நிமித்தம் பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது யாரது அஜாக்கிரதை? 

கவனிக்காமல் விட்ட பள்ளியுடையதா? இல்லை இப்படிப்பட்ட சம்பவங்களை பத்தோடு பதினொன்றாகப் பார்த்து, பள்ளியின் கட்டமைப்பு விஷயங்களில் கடுமையான வரையறை ஏதும் வரையாது மெத்தனம் காட்டும் நம் அரசு / நீதித் துறைகளையா? இல்லை பள்ளி எத்தகையது, என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே உள்ளன என்று கவனியாது இருக்கும் நம்முடையதா?

யாரை என்ன சொல்ல? இவற்றையெல்லாம் எப்படி எப்போது நிறுத்தப் போகிறோம்?

-------------------

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...