Jun 29, 2014

படைச்சவன் கொங்கை ஓயல்ல

நேற்று ட்விட்டரில் நிகழ்ந்த வாலி பற்றிய ஒரு சுருக்கமான சம்பாஷனை ஒரு பழைய நிகழ்வை நினைவுப்படுத்தியது....

-----

தோளில் வந்து விழுந்த கை யாருடையது என திரும்பிப் பார்த்தேன்.

”சார், ஒரு டவுட்டு. உங்களைக் கேட்டாதான் சரிவரும்”

“சொல்லுங்க”, என்றேன்.

”கொங்கை’ன்னா என்ன சார்”, கேட்டார் தோளைத் தொட்ட நண்பர்.

’அது ஏன்யா என்னப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்ட?’ என்று முகம்சுளிக்க நான் பார்ப்பதை உணர்ந்து...

“நீங்கதான சார் நம்ம சர்க்கிள்லயே புலவர், அதான் உங்க கிட்ட கேட்டா பதில் கெடைக்கும்னு....”

“யோவ்! நான் என்னைக்குய்யா சொன்னேன் நான் புலவன்னுட்டு”

நண்பர் சற்றே சத்தமாகத்தான் கேட்டதைக் கேட்டதால், சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். இரண்டு இருக்கைகள் தாண்டி அமர்ந்திருந்த பெண் கர்மசிரத்தையாக தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டிருந்தாள்.

நண்பர் வேறு யாருமல்ல. நாம் இவரைப் பத்தி முன்னமே எழுதியிருக்கோம் இங்கே.

“உமக்கு ஏன்யா திடீர்ன்னு இந்த சந்தேகம், இப்படி சந்தேகம்?”

“நம்ம வாலி ஒரு பாட்டுல எழுதியிருக்காரு. அதான் அர்த்தம் தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன் சார்”

மனுஷர் ஒரு மிகப் பெரிய வாலி ரசிகர். எப்படி, ஏன் ரசிகர் என்று நாம் அறியோம். ஆனால் வாலி வெறியர் போல தம்மை வெளிப்படுத்திக் கொள்வார். நாம் ஏதேனும் ஒரு பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் அங்கே வாலியைக் கொண்டு இடைச் செருகுவார். ”சார், இதைவிட பெட்டரா வாலி எழுதியிருக்கிறார் சார்”, என்று வாலியின் பாட்டு ஒன்றினை சம்பாஷனைக்கு இடையில் தூக்கிப் போடுவார். வைரமுத்து பற்றி இவரிடம் பேசிவிடவே முடியாது. வைரமுத்துவை விட வாலிதான் பெட்டர் தெரியுமா என்று மறக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்லுவார். நான் மையமாகச் சிரிப்பதோடு சரி. நமக்கு வைரமுத்து, கங்கை அமரன், வாலி, நா.முத்துக்குமார் என்று எல்லோருமே லெஜெண்டுகள்தானே.

திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது.

“யோவ்! நீர்தான் வைணவ வழியைப் பின்பத்துறவராச்சே. இந்தக் கேள்வியே நீர் கேக்கப்படாதே?”

“அது ஏன் அப்படி சொல்றீங்க?”

”கோவர்த்தனைப் பார்க்காமல் பயனில்லாத கொங்கையைக் கிழங்கோடு பறித்து எறிந்து அழலை தீர்வேன் அப்படின்னு ஆண்டாள் எழுதியிருக்காங்களேய்யா?”

”திருப்பாவைலயா?”

“சரியாப் போச்சு. அது நாச்சியார் திருமொழி தம்பி”

”பாத்தீங்களா, நான் உங்களை புலவன்னு சொன்னது சரியாப்போச்சு”

“சரியாப் போச்சு. பேசிக்கிட்டே கூகுளக் கேட்டேன் சொல்லிடுச்சுய்யா”

“ரைட்டு. அதை நான் கவனிக்கலை. சரி அப்போ அது பிரபந்தம் இல்ல!”

“செத்தாண்டா சேகரு. யோவ்! அதுவும் நாலாயிரத்துல சேர்த்திதான்யா”

”அதுவும் கூகுள் சொல்லிச்சா”

”ஹே ராம். அது எனக்கே தெரியும்யா. இது பிரபந்தம்தான்.”

“இல்லை சார் பிரபந்தமெல்லாம் நான் அவ்வளவா படிச்சது இல்லை. எங்களுக்கு வேதம்தான் மெயின்”

“இதுவும் திராவிட வேதம்தானய்யா. சரி சரி! அந்த அரசியல், காண்ட்ராவெர்ஸிக்கெல்லாம் நான் வரல்லை. இந்த வார்த்தையை எங்க படிச்ச? அத்தச் சொல்லு”

“மரியான் படத்துல வருதே சார் பாட்டு”

“மரியான் படத்துல கொங்கையா?”

“ஆமா சார். வருதே!”

“????”

“ஓய ஓயல்ல!  எந்த நாளும் ஓயல்ல! என்னைப் படைச்சவன் கொங்கை ஓயல்ல”, இப்போதும் மீண்டும் சத்தமாக. திரும்பினால் அந்த துப்பட்டா பெண் சேஃப்டி பின்னை எடுத்து துப்பட்டாவை காபந்து பண்ணிக் கொண்டிருந்தார்.

“யோவ்! மெதுவாப் பேசுய்யா”

“ஏன் சார்? எதான கெட்ட வார்த்தையா?”

“கொங்கை’க்கு அர்த்தம் அப்புறமா சொல்றேன். ஆனா அதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சிக்கோ. சோனாப்பரியா பாட்டுல வர்றது கொங்கை இல்ல, கொடுக்கும் கை. கொடுக்கும் கை ஓயல்ல’ன்னுதானே வாலி எழுதியிருப்பாரு”

“நோ நோ! இல்லை சார். கொங்கை ஓயல்லதான்”

“இல்லைய்யா! படைச்சவன் கொடுக்கும் கை ஓயல்ல”

“ஆர் யூ ஷ்யூர் சார்?”

“ஆக்சுவல்லி, கொங்கைன்னா என்னன்னா ........... “, சொன்னேன்.

அதற்கு மேல் நம்ம ஆளு அங்கே எப்படி ரீயாக்ட் செய்தார் என்பது, சுற்றுமுற்றும் யார் யார் இந்த சம்பாஷனையை கவனித்தார்கள் என்று கவனியாதது போல் கவனித்தது, மெதுவாக அந்த ஸீனில் இருந்து நழுவியதை எல்லாம் இங்கே வார்த்தையில் எழுதி வருணிக்க இயலாது.


Jun 25, 2014

வெல்லப் பிள்ளையார்

எழுத்தாளர் பா.ராகவனை சென்ற ஞாயிறன்று சந்திக்கப் போயிருந்தேன். “ஸ்டீவ் ஜாப்ஸ்” அப்புவும் உடன் வருவதாகச் சொன்னார். 

”ஒன்பதே முக்காலுக்கு குரோம்பேட்டைல மீட் பண்ணலாம். என்னை பிக்கப் பண்ணிடுங்க, அங்கருந்து பத்து மணிக்கு பாரா வீட்டுக்குப் போயிடலாம்”  என்று சொன்ன அப்பு ஒன்பது இருபத்தைந்துக்கு போன் செய்து, “சார், நான் சீக்கிரமாவே வந்துட்டேன். அதனால நான் நேரா பாரா வீட்டுக்குப் போயிடறேன். நீங்களும் வீட்லருந்து நேரா வந்துடுங்க”, என்று சொன்னதன் விளக்கம் எனக்குப் பின்னர்தான் புரிந்தது.

பாரா வீட்டிற்குப் போனபோது ’அட்வான்ஸ்’ அப்பு அங்கே தோசையை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். #நல்லவரய்யா!

ஓகே... ஒரு சம்பவம் அல்லது கதை:

தென்கச்சி சுவாமிநாதனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. அவர் ஆல் இந்தியா ரேடியோவில் “இன்று ஒரு தகவல்” சொல்லிக் கொண்டிருந்தபோது அவருக்கு நிறைய நேரங்களில் தகவல், துணுக்குகள் அன்றாடம் திரட்ட உதவியாக “ராமகிருஷ்ண விஜயம்” புத்தகம் இருந்ததாம். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு ரெஃபரன்ஸ் கைட் “ராமகிருஷ்ண விஜயம்” என்றால் அது மிகையில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் தென்கச்சி. அனைவரும் அறிந்த பொதுவான துணுக்குகள், குட்டிக் கதைகள்தான் என்றாலும் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியருக்கு ஒரு நன்றி தெரிவிக்காமல் அவற்றைக் கையாள்வது அவருக்கே வருத்தமாயிருந்திருக்கிறது. 

அந்நேரத்தில் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியரிடமிருந்து தென்கச்சிக்கு ஒரு அழைப்பு.

என்னவோ ஏதோ என்று யோசனை தென்கச்சிக்கு. “எப்படிய்யா எங்க அனுமதி இல்லாம எங்க விஷயத்தையெல்லாம் ரேடியோவுல சொல்லுவ?”, என்று ஆசிரியர் டோஸ் விடப்போகிறார் என்று பயந்தபடி நேரில் செல்கிறார் தென்கச்சி.

“வாங்க! அது வந்து.... நீங்க டெய்லி ரேடியோவுல பேசறதை நான் தவறாம கேக்கறது உண்டு. ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நீங்க ஏன் ராமகிருஷ்ண விஜயம் புத்தகத்துல ஒரு கட்டுரைத் தொடர் எழுதக் கூடாது?”, என்றாராம் ஆசிரியர்.

அது சரி, இந்த கதைக்கும் பாரா சந்திப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

பாராவை சந்தித்ததும் முதலில் அவர் என்னிடம், “உங்க ட்வீட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு”, என்று சொன்னார்.

Jun 21, 2014

அறை குரை

Wrote in FB a couple of days back. Posting it here.... rather pasting it here! :))

பெல்ஜியமும் அல்ஜீரியாவும் ஆடி முடித்த இடைவெளி. இதோ பிரேசில் மெக்சிகோவுடன் மோதத் தயாராகும் இடைவெளியில் கிடைக்கும் பத்து நிமிஷத்தில் ஏதும் எழுதலாமென்று பார்க்கிறேன்.

எழுதி நெம்ப நாளாச்சு. அதிலும்நெகட்டிவாக ஏதும் எழுதி ஜன்மம் ஒன்று கடந்தாற்போல் உணர்வு. ஆகவே இதோ....

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னவொரு விஷயம் இதை எழுதத் தூண்டியது. தூண்டியதை சுத்தமாய் மறந்தே மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இருந்தும், நினைவில் நிற்பவற்றை அரைக்கிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் இந்தப் பதிவின் கடைசி பத்தியில்.

அதற்குமுன்....

எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியாது
எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியாது

இப்படித்தான் நாலுவகையாக மக்களை நான் பிரித்துக் கொள்வேன். இரண்டாவது ஆள் அலட்டல் பார்ட்டி. நான்காவது ஆள் முட்டாள்.

எங்கேயோ படித்ததை “யாரோ” என்றும் கூடக் குறிப்பிட்டு க்ரெடிட் தாராது தன் பெயரில் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுக் கொள்பவர்களைக் கண்டால் முன்பெல்லாம் பத்திக் கொண்டு வரும். இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. காரணம் இந்த ஐந்தாவது வகை மக்கள்.

"Jack of all trades; master of none" - டேமியனில் வேலை பார்த்தபோது தன்னைப் பற்றி இப்படி சொல்லிக் கொள்வார் ப்ரேம் சார்.

ப்ரேம் சாருக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியும், கிடார் வாசிப்பார், அரசியல் அத்துப்படி, மெடிக்கல் பேசுவார், கடவுள் நம்பிக்கை அரைக்கால் மாத்திரையளவே இருந்தாலும் பைபிளில் இருந்து கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார், எங்கள் ஆபீஸின் கம்ப்யூட்டர் கில்லாடி அவர்தான்... இன்னும் சொல்லிக் கொண்டே....

இருந்தும் தன்னை மாஸ்டர் ஆஃப் நன் என்றுதான் ஒரு கோடு போட்டு நிறுத்தி வைத்துக் கொள்வார். அவரை எழுத வாராத சுஜாதா என்றால் அது மிகைதான் என்றாலும் அதில் கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் உண்டு. தனக்குச் சொந்தமில்லாத விஷயத்திற்கு என்றும் சொந்தம் கொண்டாட மாட்டார் ப்ரேம் சார். அங்க படிச்சம்பா, இங்க படிச்சம்பா என்று யாருடைய சரக்கு அது என்று சொல்லிவிடுவார்.

மேலே சொன்ன நான்கு வகைகளில் ப்ரேம் சார் முதல்வகையறா. எனக்குத் தெரியும் என்பதுடன் சேர்த்து சைலண்ட்டாக < டாட் > என்று தனக்குள் முடித்துக் கொள்பவர்.

சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு வந்தபிறகு; குறிப்பாக ட்விட்டருக்கு வந்த பிறகு மேலே சொன்னவைகள் அல்லாது இதில் ஐந்தாவது வகை நபர்கள் சிலரைச் சந்திக்க (அல்லது அவர்களுடன் உரையாட) நேருகிறது.

எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்; ஆனா அது இங்க யாருக்கும் தெரியாது என்கிற ரகம் இவர்கள்.

ஒரு கம்ப்யூட்டர் (அல்லது மொபைல் அல்லது டேப்) ஒன்றையும் தேடும் நல் சூட்சுமத்தையும் கையகப் படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் அலப்பரை இருக்குதே...... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷபாஆஆஆஆஆ!

தெரியாத விஷயத்தைப் பேசும்போதும் கூட உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றுகொண்டு ஆத்தெண்டிக்காகப் பேச ஒரு பெரும் மனோதிடம் வேண்டும் பாருங்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் இந்த உச்சாணிக் கொம்பர்களை விட எனக்கு உச்சாணிக் கொம்பின் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டு “அண்ணா, அண்ணா, தம்பீ, தம்பீ, மகனே, மக்கா, அக்கா” என்று அந்த உ.கொ’களை இன்னும் உச்சிக்கு ஏற்றி விடும் பிருஹஸ்பதிகளைக் கண்டால்தான் சிரிப்புப் பொத்துக் கொண்டு வருவது.

ஆ.... இதோ மேட்ச் தொடங்கி விட்டது. ப்ரேசிலப் பெண்மணியர் குதித்துக் குதித்துத் தம் நாட்டின் தேசிய கீதந்தனைப் பாடிக் களிக்கின்றனர் அரங்கத்தினில்.

எது ஹெட் எது டெயில் என்று இரண்டு கேப்டன்களுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு காயினைச் சுண்டுகிறார் அம்பயர்... இல்லையில்லை இவர் அவர்.... ஆம் ரெஃப்ரீ...!

மேல்மருவத்தூருக்க்கு நேர்ந்து கொண்டார்போலான உடையில் டீம் ஹட்டுல் நடத்துகிறார்கள் சலவைக்காரி நாட்டினர்....

ஆம்... மேட்ச் தொடங்கிவிட்டது.

ஆ... நண்பர் ஏதோ சொன்னதாய்ச் சொன்னேனே....

That fellow is always like that. What surprises me is that why many think he knows a lot despite his half baked knowledge on everything 
Related Posts Plugin for WordPress, Blogger...