Jun 30, 2012

விரைவில்....

image courtesy: http://soe.ucdavis.edu

Jun 26, 2012

இன்னொரு தமிழ்ப்படம்



நாகராஜுக்கு வாரந்தவறாமல் சனிக்கிழமை விடியற்காலையில் வேலைவிட்டுப் போனால் வெள்ளி ரிலீஸ் சினிமாவை தியேட்டரிலோ, திருட்டுவிசிடி.டாட்.காமிலோ பார்த்துவிட வேண்டும். திங்கள்கிழமை மறவாமல் பார்த்த கதையை இரவு உணவு வேளையில் என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

இந்த வாரம் பார்த்த சினிமாவின் கதை இதுதான்...

முதல்வர் ஒருவர் மீது செக்ஸ் புகார் தந்து அவரைப் பதவி இறக்கி தற்கொலைக்குத் தூண்டி தான் முதல்வர் பதவி ஏற்கிறான் வில்லன்.

“கட்”

டைட்டில்!

டைட்டில் முடிய, ஆயா ஒருத்தி வடை சுடுகிறாள். காக்கா வடை கவ்வுகிறது. பறக்கும் காக்கா வாயின் வடை தரையில் வீழ்கிறது. இப்போது வடை க்ளோஸப்பில். ஷூக்கால் ஒன்று வடையருகே வந்து நிற்கிறது. காலுக்குப் பாத்தியக்காரன் வடையைக் குனிந்து கையில் அள்ளி முகத்தின் முன் வைக்க..... வட்ட வடிவ வடை மேலும் க்ளோஸப்பில். வடைக்குப் பின்னம்பக்கமாக வடை எடுத்தவன் முகம் மறைந்திருக்கிறது. 

வடை பிடித்த கை இப்போது வடையைப் பக்கவாட்டில் விலக்க...

... அடடா.... அடடே! நம்ம ஹீரோ ஸ்டைல் என்ற நினைப்பில் “அச்சுப் பிச்சுப்” புன்னகையோடு தரிசனம் தருகிறார்.

வடையைத் தூக்கி எறிகிறார் ஹீரோ.... காக்கா பறந்து வந்து அந்தரத்திலேயே வடையைக் கவ்விப் பறக்கிறது.

கேமரா ஒரு 360 டிகிரி சுற்றுகிறது. நகர மக்கள் பரபரப்பாக இருக்கிறார்கள்.

”மக்கள் பிஸியா இருக்காங்க இருந்தாலும் பசியா இருக்காங்க”, என்று ஏதோ டயலாக் உதிர்க்கிறார் ஹீரோ.

ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா....

யெஸ் யூ ஆர் ரைட்.... ஓபனிங் சாங்!

"கந்தா காரவடை முறுக்கு மசால்வடை
ரோட்டுலதான் இட்லிக் கடை
காசில்லன்னா பட்னிக் கட...”

ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா....”

”இதுக்கு மேல கதை வேணுமா?”, நாகராஜ் கேட்க...

“வேணாம்பா ஆள வுடு”, இது நான்.

“அதெப்டி? நாங்க பாத்து அனுபவிச்சோம் நீ கேட்ட் அனுபவி”

”சரி, சொல்லித் தொல”

”பாட்டு முடியுது. அடுத்து ஒரு ஆட்டோ வந்து நிக்குது. ஒருத்தர் காலைக் காட்டறாங்க...”

“காமெடியனா?”

”அட எப்டிப்பா கரெக்டா சொல்ற”

“மேல மேல சொல்லு”

காமெடியனும் ஹீரோவும் ஃப்ரெண்ட் ஆகறாங்க. ஆட்டோவுல போயிக்கிட்டே தன் ஃப்ளாஷ்பேக்கை விரிக்கறாரு ஹீரோ. காரைக்குடி பக்கத்துல கானாடுகாத்தான்ல ஒரு தாத்தா அவருக்கு அரண்மனை மாதிரி வீடு அதுல வேளாவேளைக்கு ஊருக்கே சோறு பொங்கிப் போடறாங்க. அந்த வீட்டுக்கு வருது ஒரு வில்லங்கம், அந்த வில்லங்கத்தை சரி செய்ய பட்டணத்துக்கு வர்றாரு ஹீரோ. அங்க ஒரு அரை டஜன் ஹீரோயினி ஒவ்வொருத்தரா வர்றாங்க. அதுல ஒண்ணு நம்ம ஹீரோவுக்கு அத்தை பொண்ணு. ஒரு ரெண்டு டூயட்டு.

“மேல மேல”

”ஃப்ளாஷ் பேக் முடியுது. நம்ம முதலமைச்சர்தான் ஹீரோவுக்கும் வில்லன். அவருக்கு எதிரா இட்லிக்கடை லேடியை இண்டர்வெல் முடிஞ்சி கவுன்சிலராக்கி, அங்கருந்து மேயராக்கி, அவங்க மூலமா முதலமைச்சர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டறாரு ஹீரோ.

“செம்ம செம்ம... மேல மேல”

”ஹீரோவை ஜெயில்ல போட்டுடறாங்க?”

“கஞ்சா கேஸா”

”எப்டி சொல்றா? நீ படம் பாத்துட்டு கதை கேக்கறியோ?”

“இல்லையில்லை, சொல்லு சொல்லு... மேல சொல்லு”

“அங்க அவரு நேர்மையான எதிர்க்கட்சித் தலைவரை பாக்கறாரு”

“அவரை வெளில கொணாந்து இவருக்கு எதிரா நிக்க வெச்சு முதல்வர் ஆக்கறாரா?”

“அது அது அதான்! அவ்ளோதான் படம்”

“கிராமத்து வீடு என்னா ஆச்சு?”

“அதை புது முதல்வர் தன் மொதோ கையெழுத்து மூலமா மீட்டுத் தந்துடறாரு”

”ச்ச..... இதல்லவா உலக காவியம். இந்த படத்து ஒரிஜினல் டிவிடி வந்ததும் சொல்லு”

“எதுக்கு?”

“பன்னண்டு காப்பி வாங்கறேன். பன்னண்டும் எனக்குத்தான். காலத்துக்கும் வெச்சிருந்து பாத்துக்கிட்டே இருப்பேன்”

“ஆமா! படம் பேரு என்னான்னு நீ கேக்கலியே!”

“எதுக்குய்யா? எதுக்கு! அட என்னாத்துக்குன்னேன்! இப்படிப்பட்ட காவியத்துக்கு பேரே வேணாமய்யா!”

Jun 24, 2012

அல்ஜீப்ரா @ அஞ்சு மணி

நன்றி: http://www.cartoonstock.com

மாடிவீட்டு சுந்தர் வந்தான். கேந்த்ரீய வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.

“அங்கிள்! எனக்கு ஒரு நாலு சம் போடணும். ஹெல்ப் பண்றீங்களா?”

“சம்?”

“கணக்கு அங்கிள்”

“ஓ ஷ்யூர்! நான் 1991’லயே பத்தாங்கிளாஸ்ல கணக்குல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவனாக்கும்”

“சூப்பர் அங்கிள். புக் கொண்டு வரவா?”

“இப்போ வெளியே போறேன். சாயந்திரம் அஞ்சு மணிக்கு வாயேன்”

“ஓகே அங்கிள்”

மாலை ஐந்து மணி:

“அங்கிள்”

“வா சுந்தர்!”

“இதான் அங்கிள்”, நோட்டுப் புத்தகத்தை விரித்துக் காண்பிக்கிறான்”

“எது”

“இந்த நாலு சம் அங்கிள்”

“இது நாலா?”

“யெஸ் அங்கிள்”

“திஸ் ஃபோர்?”

“ஆமா அங்கிள்”

“ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா!”

“என்ன அங்கிள்?”

”ட்ட்ட்ட்டமால்.....” (நான் மயங்கி விழுந்த ஓசை)


சுந்தர் காண்பித்த நான்கு கணக்குகளுள் சுமாரேசுமாராய் சுலபமான கணக்கைப் பார்த்தால் நான் மயங்கிய காரணம் உங்களுக்குப் புரியும்...


Prove...
(a+b)^3+(b+c)^3+(c+a)^3-3*(a+b)*(b+c)*(c+a) = 2*(a^3+b^3+c^3-3*a*b*c)







Jun 18, 2012

திருநீர்’மலையில் சிவபெருமான்?

அன்றாயர்    குலக்கொடி  யோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
மாமலையாவது நீர்மலையே.  
- திருமங்கை ஆழ்வார்.

-----------

நன்றி: என் தமிழ்

கல்யாணமான ஐந்து வருடங்களில் என் மாமனார் முதன்முறையாக சேர்ந்தாற்போல் ஐந்து நாள்கள் எங்களுடன் வந்து தங்கியிருந்தார். அவரை வெளியில் அழைத்துப் போக உகந்த, இந்தக் கொடும் வெயில் நாளில் நேரம் ரொம்பத் தின்னாத இடம் என்றால் நம்ம திருநீர்மலைதான். நம் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைச்சலான தூரம். வண்டி எடுத்தால் மூன்று நிமிடத்தில் போய்விடலாம். நேற்று காலையில் போய் வந்தோம்.

புறப்பட அப்படி இப்படி மதியம் பதினோரு மணி ஆகியதில் முடிந்தால் நால்வரும், இல்லையேல் நீர்வண்ணர் மாத்திரம் என்று முடிவானது.

நால்வரும்? யெஸ்! பெருமாள் நின்ற, அமர்ந்த, நடந்த, படுத்த என நான்கு கோலத்திலும் காட்சி தரும் கோயில் திருநீர்மலை.

போகும் வழியில், ”கோயில்’ல சிவன்தானே இருக்காரு?”, மாமனார் கேட்டார்.

”என்னது? சிவன் கோயிலா? தெய்வமே! இவர் 108 பெருமாள்’ல ஒருத்தர் மாமா”, என்றேன். 

“திருநீர்’ன்னு ஊர் பேர் இருக்கே?”

”நீர்’ன்னா தண்ணி மாமா. வைணவர்கள் எல்லாத்துக்கும் முன்னால ஒரு திரு சேர்ப்பாங்க தெரியாதா உங்களுக்கு?”

”ஓ”

“இந்த ஊரை ஒரு காலத்துல தண்ணி சூழ்ந்து அதன் பின்னாடி ஏதோ வரலாறு இருக்கு. சரியா நினைவில்லை”

“சரி சரி, ரோடு பாத்து வண்டி ஓட்டுங்க”

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்றாலும் வெயிலின் மகிமையில் கோயிலில் அத்தனை ஆரவாரம் இன்றியே இருந்தது. மதிய அன்னதானத்திற்குக் காத்திருந்த கூட்டம் தவிர்த்து கோயிலில் ஒரு டஜன் தலைகள் இருந்திருந்தால் அதிகம்.

அணிமாமலர்த் தாயார் சன்னதி பட்டரிடம், ”திருநீர்மலை’ன்னு எதுக்கு பேர் வந்தது?”

ஆரத்தி காட்டியவாறே, ”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ வால்மீகி ’அந்த’ மலை மேல உட்கார்ந்து பெருமாளோட தரிசனம் வேண்டி தவமிருந்தாரு. வெள்ளம் வடிஞ்சு முடிய ஆறு மாசமாகி பெருமாளும் தரிசனம் தந்தாரு. பெருமாளை வால்மீகி இங்கயே நிரந்தரமாத் தங்கிடச் சொல்ல அப்போ இங்க எழுந்ததுதான் ’நீர்வண்ணப் பெருமாள்’ கோயில்”

“ரொம்ப தேங்க்ஸ்”

குங்குமம் தந்தவாறே, ”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ வால்மீகி ’அந்த’ மலை மேல உட்கார்ந்து பெருமாளோட தரிசனம் வேண்டி தவமிருந்தாரு..........”

“ரொம்போ நன்றி”

மஞ்சள் தந்தவாறே, “”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ.....”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” 

“இவர்தான், நீர்வண்ணர்தான் மொதல்ல வந்தது. அதன் பிறகுதான் ரங்கநாதர் எல்லாம் மலை மேல எழுந்தருளினது”

“ஓ... சந்தோஷம் மாமா”

”பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ரெண்டு பேரும் இந்த பெருமாள் மேலே பாடியிருக்காங்க. மேலேயும் போயிட்டுப் போங்கோ”

”ஷ்யூர்”

நன்றி: என் தமிழ்

நீர்வண்ணர் சன்னதியிலும் கூட்டம் ஏதுமில்லை. நிதானமாக நின்ற கோலத்தில் பெருமாளின் அழகை ரசித்துத் தரிசனம் செய்ய முடிந்தது. சாளக்கிராம மாலையை லென்த்தியாக அழகாக அணிந்திருக்கிறான் நீர்வண்ணன். திருமலையப்பன் நம் ஏடுகொண்டலவாடு ”பாலாஜி பக்வான்” கொண்ட ஸேம் போஸ்ச்சர்.

இதற்கு முன் இரண்டு மூன்று முறைகள் ஷைலஜாவுடன் வந்தபோதும் மாலை நேரமான காரணத்தால் மேலே படியேறி மற்ற மூவரையும் தரிசனம் செய்யக் கொடுத்து வைக்கவில்லை. இந்தமுறை வெய்யில் மனத்தடை வைக்க, “நெக்ஸ்ட் டைம் மேல போலாம் மாப்ளே”, என்றார் மாமனார். 

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டாக படிகளில் அமர்ந்திருந்தோம். தீவிர கருணாநிதி ஆதரவாளரான மாமனார் எதிரில் அமர்ந்திருந்த ‘அன்னதானக் காத்திருப்புக்’ கூட்டத்தைப் பார்த்து, ஜெயலலிதா கோயில்களை ஹோட்டல் கதையாக மாற்றிவிட்டார் என வைதுதீர்த்தார். 

”இது 108 தலத்துல ஒண்ணுங்க”, பக்கத்தில் குரல்.

“ஆமாம் சார்”, இது நான்.

“அதுல 106தான் நாம பார்க்க முடியும். மத்த ரெண்டுல ஒண்ணு சொர்க்க லோகத்துலயும், இன்னொண்ணு வேற எங்கயோவும் இருக்கு”

“பாற்கடல்’ல இருக்குங்க”

”ஆமா ஆமா, கரெக்டு கரெக்டு. வந்து.... சாப்பாடு எங்க போடுவாங்க?”

”எந்த சாப்பாடு”

“அன்னதானம்?”

“தெரியலைங்க”

“உங்களுக்குத் தெரியுமா?”, இம்முறை மாமனாரைப் பார்த்து கேள்வி.

“தோ எதிர்ல இருக்காங்களே அவங்க கிட்ட கேளுங்க சொல்லுவாங்க”

“நான் மதுரைல இருந்து வந்திருக்கேன் சார். இந்தக் கோயில்ல அன்னதானம் நல்லா இருக்குமா?”

“தெரியலைங்க”

“சில கோயில்கள்ல நல்லா இருக்கு. பல இடங்கள்ல சரியில்லைங்க.”

“ஓ”

“இங்க எப்படி இருக்கும்”

“தெரியலை சாமி”

“யாரைக் கேட்டா தெரியும்”

“அவங்க கிட்டயே கேளுங்க”

”கொஞ்சம் எங்க கிடைக்கும், எப்படி இருக்கும்னு நீங்க கேட்டு சொல்ல முடியுமா?”

ஒருமுறை அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டேன்.

”கண்டிப்பா செய்யறேன். ஆனா நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும்”

“கேளுங்க”

”இங்க பெருமாள் பேர் என்ன?”

“நீர்வண்ணப் பெருமாள்”

“நீருக்கு நிறம் இருக்கோ?”

“இல்லையே?”

“பெறகு எதுக்கு நீர்-வண்ண பெருமாள்?”

“ம்ம்ம்ம்....”

“சொல்லுங்க....”

“இல்லை, பரவாயில்லை. நானே அன்னதானம் பத்தி கேட்டுக்கறேன்”

நாங்கள் எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தோம்.

Jun 15, 2012

500வது கிறுக்கல்!

இந்த தளத்தில் இதுவரை 499 கிறுக்கல்கள் கிறுக்கித் தள்ளியிருக்கிறேன்!

இதோ இந்த 500வது கிறுக்கல் நம்ம அகில் கிறுக்கிய முதல் கிறுக்கல். நம் புது இல்லத்தின் புதிய சுவரில்... :)




Jun 3, 2012

மொஸாட் – புத்தக விமர்சனம்


mozaat 197x300 மொஸாட்   புத்தக விமர்சனம்
இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம். 
 
ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் பிரான்சில் அடையாளம் தெரியாத ஒருவரால் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் மூன்று சிறு குழந்தைகளும் அவர்களின் யூத ஆசிரியையும் கொல்லப்பட்டதுவரை யூதர்களின் மீதான இந்த உலகின் வன்மம் தொடர்கிறது. இது எங்கே தொடங்கியது, எங்கே தொடர்கிறது, இவற்றின் மூலம் என்ன, யூதர்கள் அடிப்படையில் நல்லவர்களா கெட்டவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணுதல் அத்தனை எளிமை அல்ல.
 
எது எப்படியோ, தன்னைச் சுற்றி காலம் காலமாகத் தொடர்ந்து வரும் பிரச்னைகளை சமாளிக்கவும், நேரத்தில் சரியான பதிலடி தரவும் இஸ்ரேல் உருவாக்கிய உளவு நிறுவனம்தான் "மொஸாட்". அந்த உளவு நிறுவனத்தின் கதைதான் என்.சொக்கன் எழுதியுள்ள "மொஸாட்" என்கிற இந்தப் புத்தகம். 
 
ஒரு விஷயத்தை உறுதிபடக் கூறலாம். இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். அத்தனை சுவாரசியம் நிறைந்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் சொக்கன். 
 
"உலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறை குறித்த விரிவான அறிமுகம்" என்ற அட்டைப்படத்  தகவலோடு புத்தகம் தொடங்குகிறது. பொதுவாக உளவுத்துறை சார்ந்த தகவல்கள், அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்தல் அத்தனை எளிய காரியமன்று. அதிலும் இஸ்ரேல் போன்ற ஒரு உலகின் மிகவும் சென்சிடிவான தேசத்தின் உளவு நிறுவனம் பற்றி எப்படி புத்தகமெல்லாம் எழுத முடியும் என்று புத்தகத்தைக் கையில் எடுக்கும் முன் நான் யோசிக்கவே செய்தேன். புத்தகத்தின் சுவாரசியத்தில் கடைசி  அத்தியாயம்  வாசிக்கும் வரை எனக்கு அந்த  யோசனை மீண்டும் வரவேயில்லை. கடைசி அத்தியாயமும், புத்தகத்தின் முடிவில் நன்றியும் ஆதாரங்களும் வாசித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் உருவான பின்னணியை அறிய முடிந்தது.
 
டேமியன் ஃபவுண்டேஷனில் வேலை பார்த்தபோது எனக்கு அக்கவுண்ட்ஸ் ஆபீசராக இருந்த பிரேம்குமார் உலகளாவிய பல  விஷயங்கள் குறித்து என்னுடன் அளவளாவுவார்.  அவற்றுள் மிக முக்கியமானதும் அவர் அடிக்கடிக்  குறிப்பிட்டதுவும் இஸ்ரேல்  குறித்தது. இஸ்ரேலியர்களின் அபார செயற்பாடுகள் பற்றி அடிக்கடி பிரேம் பேசுவார்.
 
அப்போதிலிருந்தே இஸ்ரேல் மீது (அது எத்தனை நல்ல அல்லது குரூரமான தேசமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்) எனக்கு ஒரு தீராக் காதல். "இவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மூளை டோய்" என்ற  கருத்து  பிரேமின்  பேச்சு  வாயிலாக  என் மனதில் அழுந்தப் பதிந்து போனது. இந்தமுறை புத்தக விழாவில் நண்பர் பிரகாஷ் (டிவிட்டரில் @f5here) "சொக்கன் எழுதின இந்த மொஸாட்'ங்கறது இஸ்ரேல் இன்டலிஜன்ஸ் பத்தின புத்தகம்" என்று எடுத்துக் கூறியவுடன் உடனடியாக மதி நிலையத்தில் ஒரு புத்தகத்தை உருவிக்கொண்டேன் (பணம் தந்தேனா என நினைவில்லை icon smile மொஸாட்   புத்தக விமர்சனம் ). 
 
தன்னைச் சுற்றி இருந்த அரைடஜன் தேசங்கள் விடுத்த தாக்குதலை ஒற்றை ஆளாய் நின்று சமாளித்ததோடு அல்லாமல் எதிரி நாட்டின் மண்ணைக் கொஞ்சம் பிடுங்கிக் கொண்ட பெருமையும் இஸ்ரேலுக்கு உண்டு என புளகாங்கிதம் சேரக் கூறுவார் பிரேம். 1972'ஆம் ஆண்டில் நடந்த ப்ளாக் செப்டெம்பர் அட்டாக் பற்றின பேச்சும் அடிக்கடி வரும். ஜெர்மனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் ஜெர்மன் உள்ளே புகுந்து  இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்றதும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அதற்குத் தந்த பதிலடியும்தான் அந்த சம்பவங்களின் சுருக்கம். 
 
இந்த ப்ளாக் செப்டம்பர் சம்பவத்தில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். முதல் ஆறு அத்தியாயங்கள் அந்தத் தீவிரவாதிகளின் அட்டாக் மற்றும் அவர்களுக்கு இஸ்ரேல் திட்டமிட்டுத் தந்த பதிலடி இவை குறித்து விரிவாகப் பேசுகிறது, விறுவிறுப்பாகவும் கூட.  மொஸாட்  நிறுவனத்தின் தேவையும் அது உருவான விதமும் இந்த அத்தியாயங்களில் நமக்குத் தெரிகிறது.
 
அதன் பின் மொஸாட் வளர்ந்த கதையும் இஸ்ரேலைச் சுற்றிச் சுழற்றி அடித்த பிரச்னைகளை சமாளிக்க அந்த நிறுவனம் புரிந்த பல்வேறு சாகசப் பணிகளும், உலகின் அத்தனை நாடுகளும் மொஸாடை மூக்கின் மீது விரல் வைத்துப் பார்த்தது குறித்த தகவல்களும் ஆச்சர்யம் தருகின்றன. ரஷ்ய விமானம் ஒன்றைக் கடத்தி வர மொஸாட் செய்த வேலைகள் பற்றிப் படிக்கும்போது ஏதோ படம் பார்க்கும் நினைவில் நான் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன் icon smile மொஸாட்   புத்தக விமர்சனம் ))
 
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கூட அந்த குட்டியூண்டு தேசத்தின் உளவுத்துறைச் செயற்பாடுகள் பார்த்து வாய் பிளந்து நிற்பதன் காரணம் இந்தப் புத்தகம் படித்ததும் புரிகிறது.
  
ஒரு திரில்லர் நாவலின் சுவாரசியம் ப்ளஸ் உலகின் மிகச் சிறந்த ஒரு இன்டலிஜன்ஸ் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களின் உள்ளடக்கம் என இந்த இரண்டின் நல்ல மிக்ஸ் இந்தப் புத்தகம். புத்தகத்தின் ஒரே பிரச்னை திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் 186'ஆம் பக்கத்தில் புத்தகம் முடிந்துவிடுகிறது icon wink மொஸாட்   புத்தக விமர்சனம்
 
 
மொஸாட் – என்.சொக்கன்
வெளியீடு: மதி நிலையம்
விலை: ரூ.100/- (முதல் பதிப்பு, ஜனவரி 2012)
ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்
Related Posts Plugin for WordPress, Blogger...