Jul 19, 2014

காலமென்னும் தேர்

மாதவன் பெங்களூரிலிருந்து வந்திருக்கிறான். அங்கே பிறந்து, படித்து, வளர்ந்த தமிழ்ப்பயல். ப்ரமோஷன் தர்றோம் என்று சொன்னவுடன் ட்ரான்ஸ்ஃபர் பேப்பரைக் கையில் வாங்கிக்கொண்டு பொட்டி கட்டிக்கொண்டு சென்னை வந்துவிட்டான். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனியே பேயிங் கெஸ்ட் அகாமடேஷன் பெருங்குடியில்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று எங்கேயோ படித்திருப்பான் போல, வந்துவிட்டான் பாவம்.

மூன்று வாரங்கள் கடந்த நிலையில் சென்ற வாரயிறுதிக்கு பெங்களூர் போகத் தயாரானவனிடம், “என்னய்யா ப்ளான் வீக்கெண்டுக்கு?”, வினவினேன்.

”ஊருக்குதான் சார். கொஞ்சம் திருவான்மியூர்ல ட்ராப் பண்றீங்களா? அங்கயே டைரக்டா ட்ரெய்ன் டிக்கெட் வாங்கிக்கிட்டு சென்ட்ரல் போயி லாஸ்ட் ட்ரெய்ன் ஏறிடுவேன்”

“கேள்வி கேட்டதுக்கு இப்டியா.... சரி வாய்யா ட்ராப்பிடறேன். மண்டே லீவா? லாங் வீக்கெண்ட்?”

“அதெல்லாம் இல்லை சார். வீக்கெண்ட் மட்டும் அப்டியே ஃப்ரீஸ் ஆகிட்டா தேவலாம்”, என்றான்.

சிரித்தபடி தலையாட்டிக் கொண்டேன்.

“என்ன சார்?”

“ஒண்ணுமில்லே”, என்றேன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் இந்தப் பாடலின் வாலி வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு;
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு?இந்த வரிகளைக் கேட்ட நாள்முதல் அதைச் சிலாகிக்காத நாளே இல்லை. இப்படி யோசிக்க முடிவதால்தான் அவன் கவிஞன் என்று நான் நினைத்துக் கொள்வது.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கான நூலை வாலி எங்கே பிடித்தார் என்று வெகு சமீபத்தில்தான் புலப்பட்டது நமக்கு, கீழ்காணும் இந்தப் பாடலில். 

வாலிபக் கவிஞருக்கே இன்ஸ்பிரேஷன் தந்தவர் நம்ம கங்கை அமரன். அந்த வரிகள் என்ன என்று உங்கள் தேடலுக்கே விடுகிறேன்.இரண்டு பாடலுக்கும் சிச்சுவேஷன் என்னவோ கதைநாயகியின் விரகதாப சிச்சுவேஷன்தான். முன்னது கல்யாணத்துக்கு முன்னே நாயகி நாயகனுடன் இணையும் கட்டம்; பின்னது கல்யாணமான நாயகி வேற்று ஆடவனுடன் கொள்ளும் கூடல்போதில் வருவது.

கங்கை அமரன் சொல்வதற்கு நேரெதிரான வரிகளை வாலி சொல்கிறார். ஆனால் இரண்டு இடங்களிலும் நாயகியின் எதிர்பார்ப்பில், மன வெளிப்பாட்டில் இம்மியளவும் வித்யாசமில்லை.

வாலிக்கு கங்கை அமரன் இன்ஸ்பிரேஷன் என்றால், கங்கையாருக்கு கண்ணதாசனாய் இருந்திருக்கலாம். கண்ணதாசனுக்கு கம்பன்? அப்போ கம்பனுக்கு?

ok, coming back to மாதவன்... அவன் வார இறுதியில் காலமெனும் தேர் ஆடிடாமல் நின்றுவிட எதிர்பார்ப்பது அவன் சென்னையில் சந்திக்கும் கல்ச்சுரல் ஷாக் என்று அவதானிக்கிறேன். இதைப் பற்றி தெளிவாய்ப் புரிந்து கொண்டபின் தனியாகத்தான் அதை எழுதவேணும் :)


Related Posts Plugin for WordPress, Blogger...