Aug 6, 2014

தெலுசுகோ தெலுகு



ட்விட்டரில் #Telugu365 என்ற tag'ன் கீழ் ஒரு 365 தின ப்ராஜக்ட் துவக்கி கடந்த 25 நாட்களாக தெலுகு வார்த்தைகளுக்கு அர்த்தம் பகிர்ந்து வருகிறேன்.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குச் சரியாக தெலுகு தெரியாது. பிறந்தது கிருஷ்ணகிரி. வளர்ந்தது மேற்கு மற்றும் வட தமிழகம். அதிகம் போனால் திருப்பதியின் ஜருகண்டி ஜருகண்டி தெலுசு. கொஞ்சம் அருகே சித்தூரில் உறவினர் இருந்தமையால் அங்கே ஓரிருமுறை சென்று வந்தது உண்டு. இவை தாண்டி அக்கட தேசத்துடன் நமக்கு வேறெந்த எக்ஸ்ட்ரா ஸ்னானப்ராப்தியும் லேது.

வீட்டில் நாம் பேசும் மொழி தெலுகு. அது எப்படி எங்கள் மாத்ருபாஷா ஆனது என்பதன் வரலாறையும் நாம் அறியோம். 

நாம் பேசும் உடைந்த தெலுகுவை சரி செய்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எப்போதும் நமக்கு உண்டு. அலுவலகத்தில் அதனாலேயே தெலுகு பேசும் அக்கட தேசத்து நண்பர்களிடம் சரியோ தவறோ தெலுகுவில் பேசி விடுவது. அவர்கள் திருத்தம் சொல்லிச் சொல்லி இப்போது 25% fluency என்பது 30% வரை என்று வந்துள்ளது. ஆந்திரத் தெலுகு பேசுமளவிற்கு / எழுதுமளவிற்கு பண்டிதன் ஆகும் எண்ணமெல்லாம் இல்லை. எனினும், தெரிந்ததை கொஞ்சம் மேலும் சரியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இந்த ப்ராஜக்டைத் தொடங்கியதன் நோக்கம்.

எனக்குத் தெரிந்த தெலுகுவை வைத்து, நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, இணையத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இந்த ப்ராஜக்டைத் துவங்கியுள்ளேன்.

ஆர்வம் இருப்பவர்கள் https://twitter.com/ipammal என்ற என் ட்விட்டர் ஹேண்டிலையோ அல்லது https://twitter.com/hashtag/Telugu365 எனும் ஹேஷ்டேகையோ தொடரலாம்.

இந்த ப்ராஜக்டின் முடிவில் புதிதாக சிலப்பல வார்த்தைகள்/அர்த்தங்களை நாமும், நம்மால் ஒரு பத்து வார்த்தைகளை மற்றோரும் கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. மேலும், இந்த ப்ராஜக்டின் முடியுமுன் தெலுகுவை தட்டுத்தடுமாறியேனும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

இவற்றை பத்து பத்து ட்வீட்டாகத் தொகுத்து ஒவ்வொரு பதிவாக இங்கே அவ்வப்போது நம் ப்ளாகில் பகிர்கிறேன். அந்தப் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்  :)
Related Posts Plugin for WordPress, Blogger...