Apr 30, 2011

கார்பரேட் கனவுகள் - ஒரு கடிதம்


வணக்கம்,
நண்பர் கிரிக்கு,

நலமா? உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குறது என்று நினைக்கிறேன். குழந்தை எப்படி இருக்கிறது? உங்களுக்கு இது என்னுடைய முதல் கடிதம் என்று நினைக்கிறேன். மேலும் இந்த கடித போக்குவரத்து தொடரட்டும். Cadbury chocolate உடன் தொடங்குவோம்.


 

சென்ற வாரமே உங்களின் புத்தகம் படித்து விட்டேன். இருந்தாலும் தாமதமான இந்த கடிதத்திற்கு மன்னிக்க வேண்டும். நிறைய பணிசுமை அதனால் எழுத முடியவில்லை. 

உங்களின் புத்தகத்தில் எளிய நடை, இருந்தாலும் நன்றாக இருந்தது. எழுத்தினூடே செல்லும் சிறு நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. BPO ஊழியர்கள் தூக்கத்தை எவ்வளவு சொர்க்கமாக கருதுகின்றனர் என்பதை சிறு நகைச்சுவையினூடே பொட்டில் அடித்தாற்போல சொல்லியது என்னை கவர்ந்தது. அலுவலகத்தில் பயன்படுத்தும் சில சங்கேத வார்த்தைகளுக்கு அளித்த விளக்கம் ம்ம் சூப்பர்!!!. 

பெரும்பாலும் பணியை பற்றியும், பணியில் சந்திக்கும் சிக்கல்களை பற்றியும் இந்த புத்தகம் பேசும் என நினைத்த எனக்கு ஏமாற்றமே!. புத்தகம் உங்களை சுற்றியுள்ள பணியாட்களை பற்றியே அதிகமாக பேசுகிறது. இது வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படும். இடையில் பேய் கதை, காதல் கதை எல்லாம் அந்த ரகம் தான். இவை எல்லாம் உங்களின் கதை எழுதும் திறனை காட்டுகிறது. இது எல்லாம் இத்துறை மட்டும் அல்ல மற்றவையும் என்னால் எழுத முடியும் என்பதை கட்டியம் கூறுகிறது. "நேத்தைக்கு வரைக்கும் நான் பேமானி இன்னைலிருந்து நான் அம்பானி"(சரியாய் சொல்லிடேனா? ) மற்றும் "கூரிய பார்வை" என்பதை ஊசியில் நூல் கோர்க்கும் பார்வை போன்ற வரிகள் சிலாகிக்க வைக்கிறது.

புத்தகத்தின் தலைப்பான கார்ப்ரெட் கனவுகள் என்பது  புதிதாக இத்துறையில் நுழைய நினைக்கும் நண்பர்களுக்கு வழி காட்டும் என எண்ணிய எனக்கு பெப்பே என்று சொல்லிவிட்டது. மெதுவாக அங்கங்கு தொட்டு கொண்டு வருகிறதே ஒழிய விளக்கமாக இல்லை.

முக்கியமாக பணியாட்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையான உடல் சார்ந்த பிரச்சனைகளை அலசாதது ஏமாற்றம். இத்துறை ஊழியர்கள் அதிகமாக சந்திக்கும் Back-pain மற்றும் சீக்கிரம் சந்திக்கும் சர்க்கரை வியாதி போன்றவை விவாதிக்கப்படவில்லை.  அமர்ந்தே வேலை பார்க்கும் மற்றத் துறை ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், அவர்கள் காலையில் ஜாகிங் வாக்கிங் போன்றவை மூலம் கட்டுக்குள் இதை வைக்க முடியும், ஆனால் இத்துறை ஊழியர்களால் இவர்கள் பணிநேரத்தினால் அதையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை! 

ஒபமாவின் சட்டம் குறித்த பார்வை அருமை. இத்துறைக்கு அமெரிக்காவில் இருந்து அவுட்சோர்ஸ் கிடைகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து மட்டுமே கிடைக்கவில்லை என்பது தெளிவு. இது மிக அருமையாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அனைத்து நாடுகளும் இந்த சட்டம் இயற்றினால் அப்போது இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கும்!. இந்த கருத்து என்னையும் தலையாட்ட செய்தது, அருமை!!!. 

எங்க வேலை செய்யறீங்க என கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் BPO என்றால் ஓ... BPL -ah என்று அவர்களாகவே முடிவு எடுத்து கொள்ளும் நண்பர்களை தவிர்த்து (பின்ன என்ன சொன்னாலும் புரியப்போறது இல்ல), BPO என்றால் ஓ கால் செண்டரா? என கேட்கும் என அறிவுஜிவி நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன்.

இங்ஙனம்,  
வான்முகில் 

அன்பு நண்பர் வான்முகில் அவர்களுக்கு,
உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி! என் மகன் அகில் நலமாக இருக்கிறான். நீங்கள் அனுப்பிய சாக்லேட் சுவை போலவே மனதிற்கு இனிப்பைத் தந்தது உங்கள் கடிதம். படித்த புத்தகத்திற்கு கடிதம் எழுதுவது என்கிற நல்ல செயலை எல்லோரும் செய்வதில்லை <நான் உட்பட>, உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்குக் கடிதம் எழுதியமைக்கு நன்றிகள் பலப்பல.

புத்தகத்தின் ப்ளஸ் பாயின்ட்டுகளுக்கு நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அதே போல் தாங்கள் சொன்ன டெவலப்மன்ட் பாய்ண்ட்களை குறித்துக் கொண்டேன்.  அடுத்த புத்தகம் (அ) அடுத்த பதிப்பில் அவற்றை சரி செய்ய முயல்கிறேன்.

தங்கள் நண்பர்களுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள், அதற்கு என் "ஸ்பெஷல் தேங்க்ஸ்"!

அன்புடன்
கிரி
.
.
.

Apr 26, 2011

கடவுள், சாத்தான், கடிதம்.

ஜெமோ'வுடனான என் கேள்வி-பதில் அரட்டை அவர் தளத்தில் என் பதிவு ஒன்றுக்கான இணைப்பையும் பகிர்ந்தபடி சமீபத்தில் வெளியானது <http://www.jeyamohan.in/?p=14260>. அங்கிருந்து இங்கு வந்த அன்பர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக எழுதிய பின்னூட்டங்கள் இங்கே.


Yavana ruban said...
அன்புடன் ஜெமோவுக்கு,
கடந்த 135 வருடங்களாகவே கடவள் இல்லை, இல்லவே இல்லை என்று ப்ரஸ்தாபிக்கப்பட்டு வருகிற இ ந்தியாவில் எந்த‌
கடவுளர்களும் இல்லாமலேயே அரசாங்கமும் ஸ்தாபிக்கப்பட்டு குறிப்பாக‌
தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா.(சாத்தானா?) மற்றும் அவரது சீஷர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் அவரது சஹாக்களும்(பிஸாஸுகளா?) இன்றைய வரையில்
தமிழ் நாட்டின் மாற்றுக் கடவுளர்களாக மற்றும் ஏனைய மதக் கடவுளர்கள் (அல்லா,இயேசுகிறிஸ்து,புத்தா,ராமா,மஹாவீர்) எல்லோருக்கும் மாற்றாகவே ஒரு
சாத்தானின் ராஜ்யத்தை(?) ஸ்தாபித்து(முற்காலத்தில் கடவுள‌ின் ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் அல்லது ராமராஜ்யம் என்றெல்லாம் வானமென்னும் திரையின் கீழ் இருந்த ஸாம்ராஜ்யத்தை )ஒரு சினிமா திரையில் காட்டப்படும் சினிமா ஸாம்ராஜ்யமாக பொய்மான்கள் ஓடும் ஆரண்யமாக மாற்றிய இந்த‌ 
கலிகாலத்தில் 'யார் கடவுள்,யார் சாத்தான்' என்று 'கிரியும் ஜெமோவும்' தான் என்னைப் போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாருக்கும் தெளிவிக்க வேண்டும்!

அன்புடன் 
யவன‌ரூபன்.
Yavanaruban said...
கடவுள் யார்?சாத்தான் யார்?

'கிரி மற்றும்ஜெமோ&கோ',
உங்க‌ளுக்கே நன்றாகத் தெரியும் கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கு கடவுளும் உண்டு! சாத்தான்,பேய் மற்றும் ஏனய பிஸாஸுகளும் (கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கும் உண்டு!)ஆகிய‌
ஈ.வெ.ரா.மற்றும் ஏனைய அவரது சஹாக்களும் அவர்களது கூட்டாளிகளும் ஸ்தாபித்த'கடவுள் இல்லை;இல்லவே இல்லை 'என்கிற ‌சாத்தானுடைய சாம்ராஜ்ய சிந்தனைகளும் எண்ணங்களும் ஏன் அவர்களது ஆவிகளும் கூட எங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்,ப்ரொட்டஸ்டன்டுகள் ஆகியோரைப் பிடித்து ஆட்டிவிடக் கூடாதென்பதில் பென்டகொஸ்தேக் காரர்கள் கொஞ்சம் சற்று தீவிரமாய் உபவாஸித்து,இரவெல்லாம் கண் விழித்து,ஜெபித்து 'ஈ.வெ.ரா.&கோ 'வை

'தூரத் துரத்தி'விட்டுத்தான் தூங்குவது என்று முடிவு செய்து இருக்கிறோம்!

உங்களுக்கு வேண்டுமானால் 'சாத்தானுடன் மற்றும் அவனது ஸஹாக்களுடன்' சமரசம் மற்றும் உடன்படிக்கை ‌செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் இருக்கலாம்!

ஆனால் 'பெந்தெகோஸ்தே'காரர்களுக் கு நிச்சயம் சாத்தானுடன் 'ஸமரஸம்'இல்லை;இல்லவே இல்லை!



இதனை 'கிரி மற்றும்ஜெமோ&கோ' அறியக் கடவ தாக!
"ஸஸரிரி" கிரி said...
@யவன ரூபன்
அறிந்து கொண்டோம். நன்றி!

ஜெமோ அவர்களுக்கு ஏதேனும் சொல்லவேணும் எனில் அவர் ஈ.மெயில் முகவரிக்கு எழுதவும். 'தகுந்த' பதில் கிடைக்கும்.
Yavanaruban said...
அன்புடையீர்,'(கிரி மற்றும்ஜெமோ)'
எனது'யார் கடவுள்,யார் சாத்தான்',என்ற கேள்விக்குப்'பதிலும் நானே கேள்வியும்நானே'என்கிற ரீதியிலான ‌எனது விளக்கம்,உங்களைப் 
புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!அன்பர்'ஜெமோ'அவர்களது' ப்ளாக்குக்கு' நானும் ஒரு சந்தாதாரன் தான்!தற்சமயம் என் ஜிமெயில் கடவுச் சொல் மற‌ந்த போனதால் என்னால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை!
ஆயின் எனது முக நூல் பதவில் (ரூபன் டேவிட் வில்லியம்)'கிறிஸ்துவத்தை பற்றி' என்ற தலைப்பில் போஸ்டிங் செய்துள்ள எனது தொடர் விளக்கத்தை காணும்படி அன்புடன் வேண்டுகிறேன்!

/யவனரூபன்!‌ு
Yavana ruban said...
கடவுள் யார்?சாத்தான் யார்?

'மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!

சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!

அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.'

ஜெமோ,அவரது மதமென்னும் வலையில்!


ஆனால் கிரி &கோ,

சாத்தானுக்கு பைபிள் தெரியுமோ எனனவோ,'ராமயாணம். மஹாபாரதம்' நல்லா தெரியும்! (உ-ம்- ஈ,வெ.ரா.&கோ)

இங்கு இந்து தேசத்தில் ம்றுக்கப்பட்ட,மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட கடவுள், 'ராமனோ,க்ருக்ஷ்ணனோ தான்!'

அவனைப் பற்றி உங்கள் 'ஹராம்' ஹிந்துக்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் ஹிந்து ஹராம்களை ரட்சிககப் பாருங்கள்!

உங்கள் பார்ப்பன மானததையும் காப்பாற்றப் பாருங்கள்!

எங்களை ரட்சிக்க எங்கள் கிறிஸ்த்வ கடவுள் போதும்!

தெரிகிறதா?
.
.
.



Apr 19, 2011

பெயர்க் காரணம் - தொடர்ப்பதிவு

இந்தத் தொடர்பதிவிட அழைத்த கோபி அவர்களுக்கு மிக்க நன்றி (அதனால் அவர் முன்னுரையை அப்படியே இங்கே செலவில்லாமல் போட்டுக் கொள்கிறேன்)

தொடர்பதிவுகளால் பல நன்மைகள் உண்டு. நம்மையும் மதித்து ஒருவர் பதிவிட அழைக்கிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. மனித மனம் ஏங்குவது அங்கீகாரம் என்ற ஒன்றுக்குத்தானே.

இன்னொரு முக்கியமான விஷயம். பதிவிட எனக்கு விஷயம் இல்லாத இதுபோன்ற தருணங்களில் (எப்போவுமே அப்படித்தான்னு யாருப்பா முணுமுணுக்கிறது) இது போன்ற அழைப்புகள் பாலைவனச்சோலை மாதிரி.

இதுபோன்ற பதிவுகளால் நட்பு வட்டம் பெரிதாகிறது. நல்ல விஷயங்கள் பகிரப்படுகின்றன. சக பதிவர்கள் பற்றிய புரிதல் அடுத்த நிலைக்கு நகர்கிறது. ஆக மொத்தத்தில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் (ஐயோ முடியலைன்னு யாருப்பா கத்துறது).



________________________________________________________________


முன்குறிப்பு: காலச்சக்கரத்தில் மேலே, கீழே, முன்னே, பின்னே, இடது, வலது  என மாறிமாறிப் பயணம் செய்ய வேண்டியிருப்பதால் பயண நேரங்களில் வாந்தி, மயக்கத் தொந்தரவு இருப்பவர்கள் தயவு செய்து அவோமின், டொமஸ்டால் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இந்தப் பதிவைப் படிப்பது நலம் 


ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அத்தனையாம் வருஷம்......

மழையும் இல்லாமல், இடியும் இல்லாமல், வெயிலும் இல்லாமல், காற்றும் இல்லாமல் கடலலை இல்லாமல், வெறுமையில் இந்த உலகம் உழன்று கொண்டிருந்த ஒரு சுபயோகமில்லாத அந்த செப்டம்பர் மாதம் ஆறாம் நாளை சுபநாளாக்க....

ஆம் ஆம் அதே நாள்தான்.... மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடியாம் நம் வாமனனின் பாதத்தைத் தன் சிரசில் தாங்கி சேரத் திருநாட்டிற்கு மாவலி மன்னன் ஓணத் திருநாள் தந்த அந்தப் புரட்டாசி மாதத்தின் திருவோணத் திருநாளில் அவதரித்தான் ஒரு தேவ பாலகன்.....

ஷ்.... ஹப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே என்னும் அன்பர்களுக்காக மட்டும் இங்கேயே சுருக்கமாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்த பாலகன் யாருமல்ல, தன் எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் சொற்களாலும் சோடைபோகா சிந்தனையாலும்  கடந்த பதினெட்டுத் திருத்திங்கள்களாய் வீரத்திற்கு ஈரத்திற்கும் பெயர்போன ....

...யோவ்! நிறுத்தித் தொலைச்சுட்டு யாருன்னு சொல்லுவியா?....

.... அது நாந்தாங்க! வேறாருமில்லை!

காலச் சக்கரத்தை சற்றே முன்னோக்கிச் சுற்றி கொஞ்சம் முப்பத்து சொச்ச வருடங்கள் கடந்தால்.... இருங்கள் இருங்கள் ஏதோ ஆரவாரம் கேட்கிறது. இது சென்னை போல இருக்கிறது. ஆம் கூவத்தின் மணம் நாசியெங்கும் கமழ்கிறதே. ராயப்பேட்டை ஸ்வாகத் ஹோட்டல் என்கிறது இங்கிருக்கும் பித்தளை எழுத்துக்கள். ஆம் ஆம்.... அந்தப் பாலகன் வளர்ந்து உருவாகி இன்று அந்த மேடையில் அமர்ந்திருக்கிறான். ஆன்றோர் சான்றோர் அனைவரும் அவன் எழுதிய எழுத்தினைப் பற்றிப் பேசியமர, ஏற்புரை வாசிக்க போடியம் வருகிறான் அந்தப் பொடியன்.  

அவன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா அது. அந்தப் புத்தகம் உருவாகிட முக்கியக் காரணம் தன் தாய்தான் எனக் கூறி அவளுக்கு ஒரு பொன்னாடை போர்த்திட வருகிறான் அவன். அவ்வேளையில் அந்த அன்னையின் மனதினில் கீற்றாய் ஓர் எண்ணம். அந்த பாலகன் உருவான வரலாறை அவள் அந்த ஓரிரு நொடிகளிலேயே முப்பத்து சொச்ச வருடங்கள் பின்னோக்கிச் சென்று அசைபோட்டுத் திரும்புகிறாள்.

நான்கு தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தில் ஒற்றை ஆண் வாரிசு என்பதே தொடர்கதை. அந்தப் பாலகனின் அப்பா ராமசுப்ரமணியன், தாத்தா பட்டாபிராமன், கொள்ளுத்தாத்தா சுப்பராமையா, எள்ளுத்தாத்தா பட்டாபிராமன் என எல்லோருமே ஒற்றை ஆண் வாரிசுகள். அதற்கும் முந்தின தலைமுறையிலேயே மூன்று சகோதரர்கள் ஒரே வீட்டில் பிறந்திருந்தார்கள். அவர்கள் பெயர் முறையே ரங்கநாதன், ராமையா, சோமையா. இந்த வீட்டினில் மீண்டும் ஒற்றை வாரிசுக் கதை தொடர்ந்திடக் கூடாது என, அந்தப் பாலகனுக்கு முன்னதாகப் பிறந்த மூத்த சகோதரனுக்கு "ரங்கநாதன்" எனப் பெயரிட்டார்கள் அவன் பெற்றோர். அந்த வீட்டின் நம்பிக்கை வீண் போகாமல் பாலகனுக்கு முன்னதாக மற்றுமொரு ஆண் வாரிசும் பிறந்தது. ராமையா என்னும் பெயர் எழுபதுகளில் கொஞ்சம் பழமையானது என்பதால் அந்தக் குழந்தைக்கு ராமையாவில் ராமனை எடுத்துக் கொண்டு "பட்டாபிராமன்" என்று தாத்தாவின் பெயரையே அந்தக்  குழந்தைக்கு வைத்தார்கள்.


அதன் பின் ஒரு பெண்குழந்தை, அதற்கும் அடுத்ததாக அந்த வீட்டில்  பிறந்தான் இந்தப் பதிவின் நாயகனான அந்தப் பாலகன். சோமையா என்னும் பெயரை நீட்டி நிறுத்தி சோமசுந்தரம் என்னும் பெயர் வழங்கி மகிழ்ந்தனர் (!!) அவனைப் பெற்றவர்கள்.


அந்தப் பாலகனைக் கருவினில் சுமக்கையில் அந்தத் தாய் சுமந்த வேதனைகளைச் சொல்லி மாளாது <பொறந்த பின்னால மட்டும் வேதனை இல்லாம வேறே என்னத்தக் கண்டுச்சி அந்தத் தாயி என்று பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் என்னைக் கலங்கடித்து விடாது என்பதைப் புரிந்து கொண்டு சத்தம் போடாமல் படியுங்கள் தோழ தோழிகளே>.


நல்ல குடும்பத்திற்கு நாலு போதுமே என்னும் இந்திய அரசின் விளம்பரங்கள் தேய்ந்து "முத்தான குடும்பத்திற்கு மூன்று போதுமே" என்னும் விளம்பரக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில் "இரண்டு மகன்களும் ஒரு மகளும் ஆயிற்று, மீண்டும் மகள் பிறந்தால் என்ன செய்வாய்?" என்று ஊரும் உலகும் அந்தத் தாயைக் கேட்ட வேளைதனில் "இல்லையில்லை, இந்தப் பிள்ளை இப்பூவுலகினில் அவதரித்துப் பண்ணி முடிக்க வேண்டிய காரியங்கள் எண்ணிலடங்காதவை. எனவே நான் இவனைப் பெற்றே தீருவேன்", என வைராக்கியம் இருந்து அந்தப் பாலகனைப் பெற்றாள் அந்தத் தாய். அந்தத் தாயின் அந்த வைராக்கியத்தை மெச்சி இப்படியொரு "அவதாரத்தைப்" பெற்ற அவளுக்கு தத்தமது கம்ப்யூட்டர் முன் சாஷ்ட்டாங்கமாய் நமஸ்கரிக்கும் தோழ தோழிகளே, உங்களது வணக்கங்களை அந்தத் தாயிடம் சேர்ப்பித்து விட்டேன் என்பதனையும் இந்த வேளையில் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.  


"சோமசுந்தரம்? யு மீன் சோமு? தட்ஸ் எ ஓல்ட் நேம்" என்று சொன்ன  சிலபேர், அவன் பிறந்த ஊர் கிருஷ்ணகிரி என்பதால் அவனை "கிரி கிருஷ்ணா" என்றும் அழைக்கத் துவங்கினர். கொஞ்ச நாட்களில் கிருஷ்ணா தேய்ந்து கிரி என்று மட்டும் ஆகிப்போனது. பிறந்ததும் பர்த் சர்டிபிகேட் வாங்கும் வழக்கம் இல்லாத காலகட்டம் அது.  பள்ளியில் சேர்க்கும் பருவத்தில் அங்கே என்ன பெயர் சொல்கிறோமோ அதுவே பர்த் சர்டிபிகேட் ஆகிப்போகும் அப்போது. ஐந்து வருடங்கள் ஆனபின் பஞ்சாயத்துப் பள்ளியில் நெடிய க்யூவில் நின்று ஃபாரம் வாங்கி அதை நிரப்பும்போது "சோமசுந்தரம்? கிரி கிருஷ்ணா? கிரி?" என்ற தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அந்தப் பாலகனின் தந்தை "கிரி என்பதே ஓகே", என்னும் முடிவுக்கு வந்ததே என் பெயருக்கான 'சிம்பிள்" காரணம்.


ஆகவே மக்களே! இதற்கு மேலே இங்கே சொல்ல வேறு ஒன்றும் இல்லாததால் நீங்கள் வேறு உருப்படியான பதிவுகளைப் படிக்கச் செல்லலாம்.


<பதிவைப் படிக்கும் எல்லோரையும் இந்தத் தொடர்ப்பதிவைத் தொடர அழைக்கிறேன்.>
.
.
.



Apr 13, 2011

இன்னா செய்தாரை ஒறுத்தல்...




துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்- 

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:  
அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். 
 (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால் அவர் நாண நல் நயம் செய்து விடல் - அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும் 

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே- 

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.
.
.
.

சின்னூண்டு சர்வே சினங்கொண்ட உ.பி.

நேற்று நான் வெளியிட்ட அந்த சின்னூண்டு சர்வேவைப் படித்து சகலநாடியும் துடிக்க ம.து'வின் உ.பி. ஒருவர் காரசாரமாக எழுதிய பின்னூட்டம் இங்கே. அவர் எழுதியதை அவரே இரண்டாம் முறை படித்திருந்தால் அதில் இருந்த முரண்களை அறிந்திருப்பார். அவருக்குப் பதில் சொல்லும் பக்குவம் எனக்கு இல்லாததால் அந்தப் பின்னூட்டத்தை மட்டும் இங்கே வெளியிடுகிறேன்.
அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும் 

இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .

உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ? ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ? அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ? 

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

-ஜோதி
.
.
.

Apr 12, 2011

தமிழக தேர்தல் - ஒரு சின்னூண்டு சர்வே

இதோ நாளை நாம் அனைவரும் மற்றுமொரு ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். திமுக'வா அதிமுக'வா என பெரிது பெரிதாய் பட்டிமன்றங்கள் வீடெங்கும் வீதியெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நடக்கின்றன.

இந்த வேளையில் என் அலுவலகத்தில் 34 பேரிடம் எடுத்த ஒரு எக்ஸ்ப்ரஸ் சர்வே முடிவுகளை இங்கே வெளியிடுகிறேன்.



இதில் திமுக'வுக்குப் பத்து வோட்டா? ரொம்ப ஜாஸ்தி தம்பி என்று சொன்னவர்கள் உண்டு.

இத்தனை மக்கள் விரோத மனப்பான்மையை சம்பாதித்தும் சென்னையிலே எடுத்த இந்த தக்குனூன்டு சர்வே முடிவில் அவர்களுக்கு பத்து ஓட்டு கிடைக்கிறது. அப்படியென்றால் தென் தமிழகத்தில் 2G போன்ற முழுபூசணி விவகாரங்களை வடிவேலு களேபரங்களை முன்னிறுத்தி மறைக்கும் சாமர்த்தியத்தில் எத்தனை ஓட்டுக்கள் கிடைக்கும்? இது என் கேள்வியல்ல அலுவலகத்தில் அதிமுக'விற்கு ஓட்டுப் போட்ட ஒருவரின் சோகக் கேள்வி.

அறிவித்த மற்றும் அறிவிக்காத பவர்-கட்'களால் துயருறும் தென்தமிழகம் இந்த வாய்ப்பை முழுக்கப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதால் ஆளும் அரசுக்குச் சாதகமாக இந்த தேர்தல் முடிவுகள் இருக்கப் போவதில்லை என்பது இன்னொரு அதிமுக அபிமானியின் கருத்து.

எது எப்படியோ, நாளை ஓட்டு. ஒரு மாதத்திற்குப் பின்னர் வோட்டு எண்ணிக்கை. காத்திருப்போம் தோழர்களே. இரட்டை இலை வெல்லட்டும். மீண்டும் தாங்கள் நிறுத்தற்குறியிட்ட (நல்லபல???) கணக்குகளை புதிதாய்த் துவங்கட்டும். ஐந்து வருடங்கள் கழித்து திமுகவிற்குச் சாதகமாக பதிவுகள் எழுதுவோம்.
.
.
.

Apr 11, 2011

இந்தத் தேர்தலின் ஹீரோ - தொடர்ச்சி...

தேர்தலின் ஹீரோ யார் எனக் கேட்டு நான் எழுதிய முந்தைய பதிவிற்கு வழக்கம் போலவே பயங்கர (!!!) ரெஸ்பான்ஸ். வந்திருந்த நானூற்று சொச்ச பின்னூட்டங்களில் தேர்ந்தெடுத்த ஒன்றை மட்டும் இங்கே பிரசுரிக்கிறேன்.


ஹலோ சார்,



1 . முதலில் அரசியல் கட்சிகளை மட்டும் குறை கூறுவதை விடுங்கள்.. இந்த மக்களையும் கொஞ்சம் திட்டியிருக்கலாம்... அவர்களை யோசிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் எழுதியிருக்கலாம்... ஏன் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான முடிவையே (மாற்றி மாற்றி ஒட்டுப்போடுதல்) எடுக்கிறார்கள் (றோம்) என்று யோசிக்கவேண்டும். 

2 . மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எந்தெந்த துறையில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை... (நான் உட்பட) அதை ஒவ்வொரு துறையில் உள்ள உயர் அதிகாரிகள் அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்... அதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்... 



3. அரசாங்க தொலைக்காட்சி இருப்பது போல் ஏன் அரசாங்க செய்தித்தாள் இருக்ககூடாது.. அதில் ஒவ்வொரு மாதத்திற்கும் எந்தெந்த நகரங்களில் எவ்வளவு வருவாய்கள் எந்தந்த துறைகளில் வந்திருக்கிறது எவ்வளவு செலவுகள் எந்தெந்த துறைகளில் செய்திருக்கிறார்கள் என்று முழு விவரங்களை அறிவிக்க வேண்டும். (இது எல்லாம் நடைமுறையில் இருக்கிறது என்று கூட சொல்வார்கள், ஆனால் அதுவும் என்னை போல் ஆட்களுக்கு தெரியாது)
மக்களிடம் நிரோத் விளம்பரம் கொண்டு செல்வது போல, இதையும் மக்கள் ஒரு பாதுகாப்பான் உறவு அரசாங்கத்துடன் ஏற்ப்படுவதற்காக.



4. வீட்டு பட்ஜெட் மற்றும் நாட்டு பட்ஜெட் பார்ப்பது போல் ஒவ்வொருவொரும் தனது நகரத்தின் பட்ஜெட்டையும் பார்க்க வேண்டும்

தேர்தலில் 



1. ஒவ்வொரு கட்சியினரிடத்தும் முதல் பத்து அல்லது அதற்க்கு மேற்பட்ட முக்கிய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு அதற்கான தேவை மற்றும் இருப்புகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அந்த அறிக்கையில் அதற்கு தேவை இருப்பது போல் மக்கள் ஒட்டு போடலாம்... 



2. இதனை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற பெறப்போகின்ற நீதிபதிகளை அல்லது பெறவைத்து கூட நியமிக்கலாம்.



3. காசுவங்குபவன் இருக்கும் வரைதான் காசு கொடுப்பவனும் இருப்பான்.. அந்த காசு அவருக்கு (வேட்பாளர்) எப்படி வருகிறது என்று தெளிவாக்கினால் அந்த காசை மக்கள் கட்டாயமாக வாங்கமட்டர்கள், இல்லையென்றால் கிடைக்கும் வரை லாபம் என்ற மனப்பான்மைதான் தொடரும்.. இது மக்களின் எல்லாசெயல்களிலும் தொடர்ந்துவிடும் (மிகபெரிய ஆபத்தே இதுதான்) .



4.  நம்மூரில் எத்தனயோ அறிவு ஜீவிகள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்.. அவர்களிடம் இக்கருத்துகளை விவாதிக்கலாம் (கால அவகாசத்துடன்) செயல் படுத்த எத்தனயோ இளைஞர்கள் இருக்கிறார்கள் (றோம்).

மக்கள் தான் என்றுமே ஹீரோவாக இருக்க வேண்டும். 

இது எனது ஆவல்... 


-சண்முகநாதன்
.
.
.

Apr 10, 2011

கல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு




மாதங்களில் மார்கழிக்கு இருக்கும் மகத்துவம் வீணை இசைக்கலைஞர்கள் இடையே காயத்ரிக்கு உண்டு என இசை விமரிசகர் சுப்புடு குறிப்பிட்டார்.  வீணை காயத்ரி அவர்கள் பூமிக்கு வந்த சரஸ்வதி என தினமணி நாளிதழ் புகழாரம் சூட்டுகிறது. இவற்றை நான் முன்னர் எழுதிய வீணையின் சரஸ்வதி பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இப்படிப்பட்ட உயரிய கவுரவங்களையும் மரியாதைகளையும் வீணை காயத்ரி அவர்கள் அடைந்தமைக்கு அஸ்திவாரம் அமைத்துத் தந்தவரும் வீணை காயத்ரி அவர்களின் இசைப்பயணத்தில் அவருக்கு ஞானகுருவாய் இருந்து வழி நடத்தியவரும் கல்பகம் சுவாமிநாதன் அவர்கள்.

அண்மையில் தனது எண்பத்து ஒன்பதாம் வயதில் இறைவனடி சேர்ந்த கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் தனது ஆறாம் வயதில் வீணை கற்கத் துவங்கினார். அவர் கல்லிடைக்குறிச்சி அ.ஆனந்தக்ருஷ்ண ஐயரிடம் வீணை பயின்றார். அதன் பின் பி.சாம்பமூரத்தி அவர்களது வழிகாட்டுதல் அவருக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் பாணி வாசிப்பில் தேர்ந்த ஞானம் உடையவராக இருந்தார் கல்பகம் சுவாமிநாதன்- அவரது வீணை பேசிற்று. ராகங்களை நுட்பமாக வாசிப்பவராக கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் இருந்தார்- குறிப்பாக அந்தந்த ராகத்துக்குரிய கமகங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார் அவர் என்று எழுதுகிறார் காயத்ரி அவர்கள்.

வீணை ஒரு கேளிக்கை சாதனம் அல்ல. அது ஆன்மிக சாதனைக்குத் தக்க கருவி என்கிறார் காயத்ரி. வீணை வாசிப்பை 'ரகசிய வித்யா' என்று சொல்வார்கள். அது நாதோபாசனையாகப் பழகப்படும்போது ஸ்ரீவித்யா உபாசனைக்கு இணையானதாக நம் சாஸ்திரங்களால் கருதப்படுகிறது. வீணையை ஒரு தவமாக இசைத்துப் பழகும்போது அந்த வாத்தியம் தனது அனைத்து நுட்பங்களையும் ரகசியங்களையும் தன் உபாசகனிடம் வெளிப்படுத்தித் தந்து விடுகிறது. அவ்வகையில் கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் வீணையாகவே வாழ்ந்து வீணையை சுவாசித்தார் என்று தன் குருவைக் குறித்து சொல்கிறார் காயத்ரி- தனது இறுதி நாட்களில் வீணை வாசிக்க இயலாத நிலையே அவருக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தருவதாக இருந்தது என்பதை அவர் பதிவும் செய்கிறார். தனது எண்பத்து ஒன்பதாம் வயதில் பூதவுடல் நீத்த இந்த மேதை தனது எண்பத்து ஏழாம் வயது வரை வீணை வாசித்தார் என்பது நெஞ்சை நெகிழ வைக்கும் தகவல். ஒருவர் எண்பதாண்டுகள் உயிர் வாழ்வதே ஒரு பெரிய பாக்கியமாகக் கருதப்பட வேண்டும், எண்பது ஆண்டுகள் வீணை போன்ற ஒரு மேன்மையான இசைக் கருவியை வாசிப்பது என்பது எப்பேற்பட்ட மகத்தான சாதனை!

கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் தன் முதுமையிலும் சிறப்பாக வீணை வாசித்த காட்சியை காயத்ரி இவ்வாறு விவரிக்கிறார்: "நடப்பதற்கும்கூட உதவி தேவைப்படுகிற நிலையில் இவர் வீணை வாசிக்கும்போது எவ்வளவு சிக்கலான பிரயோகங்களையும் தனது கரங்களால் எவ்வளவு சுலபமாக வாசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சராசரி உயரம் கொண்டவர். வயோதிகத்தால் இவரது உயரம் அதனினும் குன்றியது போன்ற தோற்றம் தருகிறது. அதனால் வீணையின் தண்டி இவரது முகவாய்க்கு இணைகோட்டில் இருக்கிறது. இவரது பத்து பன்னிரெண்டு வயது சிறுமியைப் போன்ற உடல்வாகு வீணை வாசிப்பதற்குப் பொருத்தமான ஒன்றாக உள்ளது- நேராக நிமிர்ந்த அவரது தண்டு வடம் குண்டலினி சக்தி மேல்நோக்கி எழுந்து தடை இல்லாமல் பரவ உதவுகிறது."

வீணை காயத்ரி அவர்கள் சங்கீதத்தை வெறும் கலையாக அணுகுவதில்லை. அதை அவர் ஆன்மீக சாதனையாக அடையாளம் காட்டுகிறார். கல்பகம் சுவாமிநாதனின் அத்தகைய ஒரு ஆன்மீக அனுபவத்தை காயத்ரி விவரிப்பது அவர் அடைந்த உச்சங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது-
"அவரது அமெரிக்க பயணம் நன்றாக இருந்ததா என்று நான் கேட்டேன் (அவர் முந்தைய ஆண்டு க்ளீவ்லாந்துக்கு ஒரு பரிசு பெறச் சென்றிருந்தார்). அப்போது அவர் அமெரிக்கா செல்லும்போது விமானத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை ஆர்வமாக விவரித்தார். விமானப் பயணத்தில் அவருக்கு ஒரு அசாதாரணமான அனுபவம் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார். உடன் பயணித்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, டீச்சர் மட்டும்தான் விழித்திருந்திருக்கிறார், அப்போது அவருக்கு கடும் தாகம் ஏற்பட்டிருக்கிறது. டீச்ச்சருடன் துணைக்கு வந்தவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காரணத்தால் அவரை எழுப்ப முடியவில்லை. ஸ்டீவார்டெஸ்களை அழைக்க ஒரு அழைப்பு மணி இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. டீச்சர் தான் தாகத்தில் மயக்கமடையும் நிலைக்குப் போய் விட்டதாக சொன்னபோது எனக்கு அழுகையே வந்து விட்டது. தொண்டை வற்றிப் போயிருந்ததால் அவரால் எதுவம் சொல்லகூட முடிந்திருக்கவில்லை. அப்போது திடீரென்று விமானமெங்கும் மிக உரக்க அவரது வீணை ஒலியெழுப்ப அவர் கேட்டிருக்கிறார். உறக்கத்தில் இருந்த அனைவரையும் அது சுலபமாக எழுப்பிவிடக் கூடிய அளவுக்கு சப்தமாக இருந்த வீணையின் கானம் ஏன் யாரையும் எழுப்பவில்லை என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்ததாம். அனைவரும் உறக்கத்தில் இருந்து எழுந்த பின்னும் அவரது வீணை ஒலித்ததாம், அவர் ஒரு வழியாக தனது தாகத்தைத் தணித்துக் கொண்டிருந்திருக்கிறார். டீச்சர் தன்னுடன் பயணித்த சக இசைக் கலைஞர்களிடம் அவர்களுக்குத் தனது வீணையின் நாதம் கேட்கிறதா என்று கேட்டாராம். ஆன மட்டும் காது கொடுத்து கேட்க முயற்சி செய்தும் அவர்களில் யாராலும் வீணையின் ஒலியைக் கேட்க முடியவில்லை. டீச்சருக்கு பெரும் குழப்பமாகி விட்டது.


"இது குறித்து டீச்சர், அவ்வளவு உரக்க ஒலித்த என் வீணையின் கானம் எப்படி வேறு யாருக்கும் கேட்காதிருந்திருக்க முடியும் என்று நான் இன்று வரை யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் புரியவில்லை என்று திகைப்புடன் கூறினார். 

டீச்சருக்குக் கிட்டியது ஆன்மிகத்தின் மிக உயர்ந்த தளங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கக்கூடிய அநாகத நாதத்தின் த்வனி என்று வீணை காயத்ரி விளக்கம் தருகிறார். தனக்குள் இருந்த வீணையை எழுப்பி இசையா த்வனியை தான் மட்டும் கேட்டிருக்கிறார் என்கிறார் காயத்ரி. இந்த த்வனி மிக உயர்ந்த யோகிகள் மட்டுமே அறியக்கூடிய ஒன்று என்பதால் மற்றவர்கள் இதைக் கேளாதிருந்ததில் வியப்பொன்றுமில்லை.

கல்பகம் சுவாமிநாதன் அவர்களை தன் தனது ஆறாம் வயதில் குருவாக அடைந்திருக்கிறார் காயத்ரி. அவர் டீச்சர் பற்றி எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும்  அவரது குருபக்தி புலனாகிறது. கல்பகம் சுவாமிநாதனின் தோட்டத்தில் சிதறிக் கிடந்த பாரிஜாத மலர்களைத் தன் கைக்குட்டையில் சேகரிக்க சிறுமியாக இருந்த காயத்ரி அங்குமிங்கும் ஓடுவாராம். அப்போது டீச்சர் வாசலுக்கு வந்து, "காயத்ரி, சீக்கிரம் வாம்மா!" என்று அன்புடன் அழைப்பாராம். தனது டீச்சரை பாரிஜாத மலரின் மணத்துடன் இணைத்தே தன்னால் எப்போதும் நினைத்துப் பார்க்க முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் காயத்ரி. அவரது சொற்களிலேயே சொல்வதானால்,கல்பகம் சுவாமிநாதனின் வீணாகானம் பாரிஜாதம் போன்ற ஒரு தேவமலரை நினைவூட்டுவதில் ஆச்சரியமென்ன!

இத்தனை மாபெரும் மேதையை மியூசிக் அகாடமியின் "சங்கீத கலா ஆச்சார்யா", கிருஷ்ணகான சபாவின் "ஆச்சார்யா சூடாமணி" போன்ற விருது கவுரவங்கள் அலங்கரித்தன.

அன்னாரின் நினைவுகளுக்கு இந்தப் பதிவை நன்றியுணர்வோடு சமர்ப்பணம் செய்கிறோம்.



மொழிபெயர்ப்பு உதவி: நட்பாஸ் 
புகைப்படம் உதவி: தி ஹிந்து

Apr 9, 2011

மாப்பிள்ளை - திரை விமர்சனம்



கல்லூரியில் படிப்பதற்காக தன் அழகான சிறுநகர வாழ்க்கையைத் துறந்து கதாநாயகி பட்டினத்தில் தஞ்சம் புகுகிறாள். அந்த மாநகரிலும் மற்றும் தன் ஹாஸ்டலிலும் அவள் சந்திக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் , நிகழ்வுகள் அவளுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சிகள் அவளை மீண்டும் தன் சிறுநகருக்கே திரும்பும் முடிவை எடுக்க வைக்கிறது. அந்த வேளையில் அவள் கதாநாயகனைச் சந்திக்க, ஊர் திரும்பும் தன் முடிவை மாற்றிக் கொள்கிறாள்.

நகரத்து நாகரீகங்களை கதாநாயகன் கதாநாயகிக்கு அறிமுகம் செய்கிறான். நடை, உடை, பாவனை என எல்லாமும் மாறிப்போக தான் ஒரு முழு பட்டினத்துப் பைங்கிளி ஆகிப் போகிறாள் நாயகி. அவ்வாறு வாழ்வதை அனுபவித்து ரசிக்கவும் அவள் துவங்கும் வேளையில் பண்டிகை விடுமுறைகள் வந்து சேர, ஊரில் இருக்கும் தன் நீண்ட நாள் தோழனின் நினைவுகள் கதாநாயகனின் நினைவுகளுடன் சேர்ந்து நாயகியைக் குழப்பி அலைக் கழிக்க ஆரம்பிக்கின்றன.

நாயகனுக்கு பண்டிகைக் காலத்தைச் செலவிட நண்பர் உறவினர் என்று வேறு யாரும் இல்லாத நிலையில், நாயகி அவனைத் தன் ஊருக்கு அழைத்துப் போகிறாள். அங்கே அவள் பெற்றோரும் பெரியோரும் அவளது நவநாகரீக மாற்றத்தைக் கண்டு வியக்க, நாயகனின் வருகையும் ஊரில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு சுபயோகசுபதினத்தில் தான் நாயகியை மணக்க இருப்பதாக நாயகன் அவளது நீண்டநாள் தோழனிடம் சொல்ல, நாயகனின் மூக்கு உடைபடுகிறது. நாயகியின் தந்தையும் அவர்களிடையேயான உறவு திருமணத்தில் முடிவதை விரும்பவில்லை. இது இப்படிச் செல்ல, நாயகன் அந்த சிறு நகரத்து நிலங்கள், விவசாயம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு காட்டத் துவங்குகிறான்.

"நூ வொஸ்தாவன்ட்டே நேனொத்தன்டானா" கதையாக பட்டினத்து நாயகன், கிராமத்துத் தந்தை, விவசாயம், அது இது என கதை நீள்கிறது. கிராமத்தில் நாயக - நாயகியிடையே வருவதற்கு என்றே ஒரு இளம்பெண் அறிமுகம் ஆகிறாள். நாயகன் மற்றும் அந்தப் பெண்ணிடையே ஏதோ உறவு மலர்வதாக  ஒரு நாடகம் உருவாக... நாயகன்-நாயகயிடையே லடாய், கலாட்டாக்கள் என கதை நகர்ந்து, நாயகியின் தந்தை மனதை எப்படி நாயகன் மாற்றுகிறான், நாயகி நாயகனைப் புரிந்து கொண்டாளா என்பவைகளுடன் கதை நிறைகிறது.

1993'ல் வெளிவந்த "சன் இன் லா" படத்தை ஸ்டீவ் ராஷ் இயக்கினார். பாவ்லி ஷோர் மற்றும் கார்லா குகினோ இருவரின் அற்புத நடிப்பில் ஒரு சுமாரான பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக இந்த Son-In-Law படம் அமைந்தது.


மேலதிகத் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Son_in_Law

Apr 8, 2011

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

இந்தப் பதிவு எழுதிட தலைப்பு, புகைப்படம், வார்த்தைகள் தந்து உதவிய சாளரம் கார்க்கிக்கு நன்றிகள்.


ALL THE VERY BEST CSK


Apr 7, 2011

லோக்பால் பில் / அன்னா ஹசாரே




லோக்பால் பில் என்றால் என்ன?

லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?

லோக்பால் என்பது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.


இந்தத் தலைப்பில் ஜவஹர் அவர்களின் விரிவான பதிவு:  இந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே


Apr 5, 2011

இந்தத் தேர்தலின் ஹீரோ


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், வழக்கமான தேர்தல் காமெடிகளுக்கு எந்தவிதக் குறைவும் வைக்காமல் இம்முறையும் இயன்ற அளவில் படேபடா பல்டிகளை அடித்து மக்களை மகிழ்வித்து வருகின்றன திராவிடக் கட்சிகள்.

ஒரு ஆட்சியின் ஐந்து வருடச் சாதனைகளைக் கருத்தில் கொண்டு ஓட்டுப் போடும் மனநிலை நான் அறிந்தவரையில் என்றுமே தமிழக வாக்காளர்களுக்கு இருந்ததில்லை.  கடந்த ஐந்து வருடங்களில் ஒரு ஆட்சி செய்த சாதனைகள் என்ன என்பதைக் கருத்தில் கொண்டு ஓட்டளிக்கும் நிலை தமிழகத்தில் இருந்திருந்தால் 2001'லும் 2006'லும் ஆட்சி மாற்றங்களை தமிழகம் சந்தித்திருக்காது. 

ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை என்ற இரண்டு காரணிகள் மட்டுமே இங்கே செயற்படும். ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகளை நிர்ணயிக்க இப்படி ஏதேனும் ஒரு காரணி அமைந்துவிடுகிறது.  ஏதேனும் ஒரு விஷயத்தை கதாநாயகனாகவோ அல்லது வேறு ஏதேனும் விஷயத்தை வில்லனாகக் கொண்டு அளிக்கப்படும் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சியில் அமர்பவரை எப்போதும் தீர்மானித்து வருகிறது தமிழகம்.

1977, 1980, 1985 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். மற்றும் இரட்டையிலை என்னும் எளிய கேக்வாக் காரணிகள் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உதவின. எம்.ஜி.ஆரின் விஸ்வரூப சினிமா பிம்பத்திற்கு முன்னால் கருணாநிதி செய்த ஜாலங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்பது வரலாறு அறிந்தது. பதிமூன்று ஆண்டுகால வனவாசத்திற்குப் பின் எம்.ஜி.ஆர். மறைந்தபின் மட்டுமே அவர் மீண்டு எழ இயன்றது. 

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினாரோ இல்லையோ ஊழல் என்னும் வார்த்தையை எதிர்க்கட்சியினர் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்காமல் ஆட்சி செய்தார். 

1989'ல் எம்.ஜி.ஆரை இழந்த காரணம், ஜானகி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் குடுமிப்பிடி மற்றும் இரட்டையிலை சின்ன இழப்பு ஆகியவற்றால் கருணாநிதி மீண்டும் அரியணை ஏறினார். எனினும் ஜெயலலிதா அம்மையார் அப்போதைய மத்திய அரசிடம் கொண்டிருந்த செல்வாக்கு இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக கருணாநிதியை வீட்டிற்கு அனுப்பியது. இரண்டே ஆண்டுகால ஆட்சி என்பதால் சாதனை வேதனைகளைப் பற்றி விவாதிக்க வாய்ப்பளிக்காமல் வீடு திரும்பினார் மு.க.

1991'ஆம் ஆண்டு ராஜீவ் மரணம் என்னும் ஒரு பேரலை ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அதன் பின் நடந்த வரலாறு காணாத ஊழல்கள் எல்லாமுமே அதுவரை தமிழகம் காணாதவை. ஊழல் நடக்காத துறைகள் என எதுவும் இருந்ததாக நினைவில்லை. உடன்பிறவா சகோதரி & கோவின்  தமிழகம் முழுவதுமான சுரண்டல்கள், மகாமகக் குள சோகங்கள், வளர்ப்புமகன் ஆடம்பரத் திருமணம், போயஸ் தோட்டத்தில் புறப்படும் ஜெயலலிதாவுக்காக போடிநாயக்கனூரில் ட்ராஃபிக்கை நிறுத்துவது  என தன் எல்லைக்குள் மட்டுமே வாழ்க்கை என ஜெயலலிதா வாழ்ந்தார். இதுவே அவரது அராஜக முகத்தை மக்கள் மனதில் வலுவாகப் பதிவு செய்து, பத்திரிக்கைகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்து அடுத்து வந்த தேர்தலில் அவரை மண்கவ்வ வைத்தது.

1996 'ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அலையின் பலனாக கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இப்போதைய 2006 -2011 ஆட்சிகளோடு ஒப்பிட்டால் அந்த காலகட்டத்தின் திமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் எனலாம். போக்குவரத்து மற்றும் மாவட்டப் பெயர்களில் இருந்த ஜாதி மற்றும் தலைவர் பெயர்கள் நீக்கப்பட்டன, உழவர் சந்தை உருவாக்கப் பட்டது, சமத்துவபுரம் திட்டம் கொண்டு வந்தார், கார் கம்பெனிகள் தமிழகத்தில் உற்பத்தியைத் துவக்கின, ஸ்டாலின் மேயர் ஆனார், சென்னை நகரம் சிங்காரச் சென்னை ஆக திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

2001 'ஆம் ஆண்டின் தேர்தல் முடிவு தமிழக வரலாற்றில் மிகவும் விநோதமானது. மீண்டும் அரியணை ஏற வாய்ப்பே இல்லை என்று ஓரம்கட்டப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில்"பணப் புழக்கம்" சரிவர  இல்லை என்ற மொக்கைக் காரணத்தைக் காரணம் காட்டி அடுத்த முறை அரியணை ஏறினார். தமிழர்கள் ஒரே முதல்வரை மீண்டும் பார்க்க விரும்புவதில்லை என ஊடங்கங்கள் கருத்துரைத்தன. முந்தைய ஆட்சியின் தவறுகளில் இருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டது இந்த முறை ஜெயலலிதாவின் சாதனை. நிர்வாகத் திறனில் கருணாநிதி அரசுடன் ஒப்பிடும் அளவு சாதனைகள் இல்லாவிடினும் ஊழல் இல்லாத அரசாங்கம் என்பதே அரசின் ஆகச் சிறந்த சாதனை.

1996 மற்றும் 2001 ஆண்டுகளின் தேர்தல்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த சிறைபுகு நாடகங்கள் மிகக் காமெடியானவை. திமுக ஆட்சியில் ஊழல்களைப் பட்டியலிட்டு ஜெயலலிதாவை கருணாநிதி அரசு சிறை அனுப்பியதும், பின் வந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் போக்கில் தான் அடைந்த அதே சிறையில் கருணாநிதியை ஜெயலலிதா அடித்ததும் மறக்க இயலாத சம்பவங்கள். அதிலும் சன் டி.வி. துணையில் கருணாநிதியின் "கொலைப் பண்றாங்கப்பா" டயலாகுகள் இன்னமும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுபவை.

2006'ஆம் ஆண்டு சன் டி.வி. மற்றும் தினகரன் குழுமத்தின் பலத்தில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இந்த முறை தேர்தல் கூட்டங்கள் நேரிடையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு ரூபாய்க்கு அரிசி, கண்ணகி சிலை, விவசாயக் கடன் ரத்து ஆகிய தேர்தல் அறிக்கைகளைக் கையில் வைத்துக் கொண்டு ப.சிதம்பரம் முதலானோர் பேசிய எனர்ஜடிக் பேச்சுக்கள் திமுக பக்கமாக ஆதரவு அலையை வரவழைத்தன.

இந்த ஆட்சியின் சாதனைகள் என்றால் அவை தொடரும் செம்மையான நிர்வாகத்திறன். உதாரணம்: குஜராத் தவிர்த்து வேறு மாநிலங்கள் எவற்றுடனும் ஒப்பிட முடியாத வகையில் உள்கட்டமைப்பு வசதிகள், பாலங்கள், தரமான பேருந்துகள், வெளிநாட்டு நிறுவனங்களின் வரவு ஆகியவை. 

வேதனைகளை லிஸ்ட் போட்டால் நான் இங்கே இந்தக் கட்டுரையை எழுதி முடிக்க இயலாது. ரியல் எஸ்டேட் துறையை முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தாங்கள் விரும்பிய விலைக்கு நிலம், கட்டிடம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது, எல்லாத் துறைகளிலும் வாரிசுகளின் கை, தரையில் இருந்த விலைவாசியை ஆகாயத்தையும் தாண்டிப் பயணிக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அட, 2ஜி'யை மறந்தால் எப்படி?

இவைதான் தமிழகத்தின் கடந்த முப்பத்து ஐந்து வருட தேர்தல்களின் ஆட்சிகளின் சுருக்க வரலாறு. 

இந்த முறை தேர்தலின் கதாநாயகன் யார்?  ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் காரணி என்ன?  ஆதரவு விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் இரண்டு திராவிட கட்சிகளுக்குமே என்னென்ன?  அவற்றை நீங்கள்தான் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன், ப்ளீஸ்!
.
.
.

Apr 3, 2011

ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் நாம ஜெயிச்சிட்டோம்


தொண்ணூற்றியாறு மற்றும் இரண்டாயிரத்து மூன்று - இந்த இரண்டு ஆண்டுகளிலும் நேர்ந்த அவமானத்திற்கு உணர்ச்சிமயப் பழி வாங்கல்!

விமர்சனம் என்ற பெயரால் "போகிற போக்கில்" பேசிச் சென்ற வெட்டி ஜாம்பவான்கள் முகத்தில் கரி!

இருபத்தியிரண்டு ஆண்டுகள் உழன்று சுழன்றவனுக்கு என ஒரு அர்ப்பணம்!

இருபத்தியெட்டு  வருடத்துத் தவம்! நூறுகோடி மக்களின் கனவு! பதினைந்து பேர் இந்த நாற்பத்தி மூன்று நாட்கள் போராடி விளையாடி முடித்து பரிசைத் தந்திருக்கின்றனர் பாரத தேசத்திற்கு!

லங்கைக்கு நேர்ந்தது போல் எளிமையாக அமைந்து விடவில்லை இந்தியாவின் ஃபைனல்ஸ் நோக்கிய பயணம். நியூசிலாந்து தவிர்த்து மற்ற அனைத்து முக்கிய நாடுகளையும் மிச்சம் வைக்காமல் லீக் போட்டிகளிலும், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் பந்தயங்களிலும் சந்தித்து விட்டது இந்தியா.  ஆகவே நாம் ட்ரூ சாம்பியன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க சறுக்கலை திருஷ்டி எனக் கொள்வோம்.

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னரும் சரி, நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் சரி, தோனி சந்தித்த விமர்சனங்களைத் தொகுத்தால் ஒரு டஜன் தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் தயாரிக்கலாம். அத்தனை பேருக்கும் நேற்று தன "கேப்டன் இன்னிங்க்ஸ்" மூலம் பதில் சொன்னார் தோனி. டிவிட்டரில் அவரைப் "பாடியவர்கள்" கூட கண்ணில் சிறுதுளி நீருடன் அவருக்கு "ஓ......" போட்டனர். ஒரு சிறு உதாரணம் கீழே <நன்றி: <http://twitter.com/#!/anbudan_BALA>)


Dear Dhoni, I take back everything I said about you for this one remarkable innings under pressure & apparently out of form :) #WC11Sat Apr 02 17:34:37 via Echofon




இணையத்தில் நண்பர் அன்பர்களின் பதிவுகள் மற்றும் நாளிதழ்களின் கவரேஜ்:


தமிழ் ஓவியம் (இலவச கொத்தனார்)


தினமலர்


தினகரன்

தினத்தந்தி

தினமணி

டைம்ஸ் ஆப் இந்தியா

ஹிந்து 

டெக்கன் க்ரானிகிள்

இந்தியன் எக்ஸ்பிரஸ்



க்ரிக் இன்போ' உதவியுடன் சில க்ளிக்குகள்:














கடைசியாக.... நம்ம பூனம் பாண்டே தன் வாக்கைக் காப்பாற்றியபோது எடுத்த படம்....

  

Apr 1, 2011

ஜெ, வைகோ சமரசம் - தினமலர்


நாங்களும் நிம்மதி, மக்களுக்கும் நிம்மதி என ஒதுங்கி ஒதுங்கி இருக்கத் தலைப் பட்டாலும் "விடமாட்டோம்" என கொக்கரிக்கிறார்கள். என்னதான் செய்வார் அவர், பாவம்?

சத்ரியன் படத்தில் வரும் "தமிழ்ச்செல்வன் ஐ.பி.எஸ்." போல தான் உண்டு தன் கட்சி (!!!) உண்டு என இருக்க நினைக்கும் வைகோவை வைத்து தினமலர் இன்று பண்ணியிருக்கும் காமெடி, "கொஞ்சம் ஓவர் நக்கல்ங்ணா". 

தினமலர் வெளியிட்ட செய்தி:



அதன் தொடர்ச்சியாக வந்த ஏப்ரல் ஒன்று "உண்மை என்ன?" இணைப்பு....


//எப்படியும் மே 13'ஆம் தேதிக்குப் பின், மக்களை முட்டாலாக்கத்தான் போகின்றனர்// 

அப்படின்னா மே 13 'க்கு முன்னால மட்டும் என்ன நம்மளை புத்திசாலியாவா வாழ வெச்சுட்டு இருக்காங்க?

இந்த செய்திக்கு தமிழ் ட்விட்டர் உலகத்தில் எழுந்த கூக்குரல்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தாவிட்டாலும், நம்மவர்கள் பொங்கி எழாத விஷயம் என்று எதைத்தான் மிச்சம் வைத்தார்கள் என "அட போங்கய்யா" சொல்ல வைத்தது. யாரை வைத்து ஏப்ரல் காமெடி பண்ணியிருந்தால் சும்மா இருப்பார்கள்?


Related Posts Plugin for WordPress, Blogger...