Apr 10, 2011

கல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு




மாதங்களில் மார்கழிக்கு இருக்கும் மகத்துவம் வீணை இசைக்கலைஞர்கள் இடையே காயத்ரிக்கு உண்டு என இசை விமரிசகர் சுப்புடு குறிப்பிட்டார்.  வீணை காயத்ரி அவர்கள் பூமிக்கு வந்த சரஸ்வதி என தினமணி நாளிதழ் புகழாரம் சூட்டுகிறது. இவற்றை நான் முன்னர் எழுதிய வீணையின் சரஸ்வதி பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இப்படிப்பட்ட உயரிய கவுரவங்களையும் மரியாதைகளையும் வீணை காயத்ரி அவர்கள் அடைந்தமைக்கு அஸ்திவாரம் அமைத்துத் தந்தவரும் வீணை காயத்ரி அவர்களின் இசைப்பயணத்தில் அவருக்கு ஞானகுருவாய் இருந்து வழி நடத்தியவரும் கல்பகம் சுவாமிநாதன் அவர்கள்.

அண்மையில் தனது எண்பத்து ஒன்பதாம் வயதில் இறைவனடி சேர்ந்த கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் தனது ஆறாம் வயதில் வீணை கற்கத் துவங்கினார். அவர் கல்லிடைக்குறிச்சி அ.ஆனந்தக்ருஷ்ண ஐயரிடம் வீணை பயின்றார். அதன் பின் பி.சாம்பமூரத்தி அவர்களது வழிகாட்டுதல் அவருக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் பாணி வாசிப்பில் தேர்ந்த ஞானம் உடையவராக இருந்தார் கல்பகம் சுவாமிநாதன்- அவரது வீணை பேசிற்று. ராகங்களை நுட்பமாக வாசிப்பவராக கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் இருந்தார்- குறிப்பாக அந்தந்த ராகத்துக்குரிய கமகங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார் அவர் என்று எழுதுகிறார் காயத்ரி அவர்கள்.

வீணை ஒரு கேளிக்கை சாதனம் அல்ல. அது ஆன்மிக சாதனைக்குத் தக்க கருவி என்கிறார் காயத்ரி. வீணை வாசிப்பை 'ரகசிய வித்யா' என்று சொல்வார்கள். அது நாதோபாசனையாகப் பழகப்படும்போது ஸ்ரீவித்யா உபாசனைக்கு இணையானதாக நம் சாஸ்திரங்களால் கருதப்படுகிறது. வீணையை ஒரு தவமாக இசைத்துப் பழகும்போது அந்த வாத்தியம் தனது அனைத்து நுட்பங்களையும் ரகசியங்களையும் தன் உபாசகனிடம் வெளிப்படுத்தித் தந்து விடுகிறது. அவ்வகையில் கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் வீணையாகவே வாழ்ந்து வீணையை சுவாசித்தார் என்று தன் குருவைக் குறித்து சொல்கிறார் காயத்ரி- தனது இறுதி நாட்களில் வீணை வாசிக்க இயலாத நிலையே அவருக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தருவதாக இருந்தது என்பதை அவர் பதிவும் செய்கிறார். தனது எண்பத்து ஒன்பதாம் வயதில் பூதவுடல் நீத்த இந்த மேதை தனது எண்பத்து ஏழாம் வயது வரை வீணை வாசித்தார் என்பது நெஞ்சை நெகிழ வைக்கும் தகவல். ஒருவர் எண்பதாண்டுகள் உயிர் வாழ்வதே ஒரு பெரிய பாக்கியமாகக் கருதப்பட வேண்டும், எண்பது ஆண்டுகள் வீணை போன்ற ஒரு மேன்மையான இசைக் கருவியை வாசிப்பது என்பது எப்பேற்பட்ட மகத்தான சாதனை!

கல்பகம் சுவாமிநாதன் அவர்கள் தன் முதுமையிலும் சிறப்பாக வீணை வாசித்த காட்சியை காயத்ரி இவ்வாறு விவரிக்கிறார்: "நடப்பதற்கும்கூட உதவி தேவைப்படுகிற நிலையில் இவர் வீணை வாசிக்கும்போது எவ்வளவு சிக்கலான பிரயோகங்களையும் தனது கரங்களால் எவ்வளவு சுலபமாக வாசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சராசரி உயரம் கொண்டவர். வயோதிகத்தால் இவரது உயரம் அதனினும் குன்றியது போன்ற தோற்றம் தருகிறது. அதனால் வீணையின் தண்டி இவரது முகவாய்க்கு இணைகோட்டில் இருக்கிறது. இவரது பத்து பன்னிரெண்டு வயது சிறுமியைப் போன்ற உடல்வாகு வீணை வாசிப்பதற்குப் பொருத்தமான ஒன்றாக உள்ளது- நேராக நிமிர்ந்த அவரது தண்டு வடம் குண்டலினி சக்தி மேல்நோக்கி எழுந்து தடை இல்லாமல் பரவ உதவுகிறது."

வீணை காயத்ரி அவர்கள் சங்கீதத்தை வெறும் கலையாக அணுகுவதில்லை. அதை அவர் ஆன்மீக சாதனையாக அடையாளம் காட்டுகிறார். கல்பகம் சுவாமிநாதனின் அத்தகைய ஒரு ஆன்மீக அனுபவத்தை காயத்ரி விவரிப்பது அவர் அடைந்த உச்சங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது-
"அவரது அமெரிக்க பயணம் நன்றாக இருந்ததா என்று நான் கேட்டேன் (அவர் முந்தைய ஆண்டு க்ளீவ்லாந்துக்கு ஒரு பரிசு பெறச் சென்றிருந்தார்). அப்போது அவர் அமெரிக்கா செல்லும்போது விமானத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை ஆர்வமாக விவரித்தார். விமானப் பயணத்தில் அவருக்கு ஒரு அசாதாரணமான அனுபவம் கிடைத்தது என்று என்னிடம் சொன்னார். உடன் பயணித்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, டீச்சர் மட்டும்தான் விழித்திருந்திருக்கிறார், அப்போது அவருக்கு கடும் தாகம் ஏற்பட்டிருக்கிறது. டீச்ச்சருடன் துணைக்கு வந்தவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காரணத்தால் அவரை எழுப்ப முடியவில்லை. ஸ்டீவார்டெஸ்களை அழைக்க ஒரு அழைப்பு மணி இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. டீச்சர் தான் தாகத்தில் மயக்கமடையும் நிலைக்குப் போய் விட்டதாக சொன்னபோது எனக்கு அழுகையே வந்து விட்டது. தொண்டை வற்றிப் போயிருந்ததால் அவரால் எதுவம் சொல்லகூட முடிந்திருக்கவில்லை. அப்போது திடீரென்று விமானமெங்கும் மிக உரக்க அவரது வீணை ஒலியெழுப்ப அவர் கேட்டிருக்கிறார். உறக்கத்தில் இருந்த அனைவரையும் அது சுலபமாக எழுப்பிவிடக் கூடிய அளவுக்கு சப்தமாக இருந்த வீணையின் கானம் ஏன் யாரையும் எழுப்பவில்லை என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்ததாம். அனைவரும் உறக்கத்தில் இருந்து எழுந்த பின்னும் அவரது வீணை ஒலித்ததாம், அவர் ஒரு வழியாக தனது தாகத்தைத் தணித்துக் கொண்டிருந்திருக்கிறார். டீச்சர் தன்னுடன் பயணித்த சக இசைக் கலைஞர்களிடம் அவர்களுக்குத் தனது வீணையின் நாதம் கேட்கிறதா என்று கேட்டாராம். ஆன மட்டும் காது கொடுத்து கேட்க முயற்சி செய்தும் அவர்களில் யாராலும் வீணையின் ஒலியைக் கேட்க முடியவில்லை. டீச்சருக்கு பெரும் குழப்பமாகி விட்டது.


"இது குறித்து டீச்சர், அவ்வளவு உரக்க ஒலித்த என் வீணையின் கானம் எப்படி வேறு யாருக்கும் கேட்காதிருந்திருக்க முடியும் என்று நான் இன்று வரை யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் புரியவில்லை என்று திகைப்புடன் கூறினார். 

டீச்சருக்குக் கிட்டியது ஆன்மிகத்தின் மிக உயர்ந்த தளங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கக்கூடிய அநாகத நாதத்தின் த்வனி என்று வீணை காயத்ரி விளக்கம் தருகிறார். தனக்குள் இருந்த வீணையை எழுப்பி இசையா த்வனியை தான் மட்டும் கேட்டிருக்கிறார் என்கிறார் காயத்ரி. இந்த த்வனி மிக உயர்ந்த யோகிகள் மட்டுமே அறியக்கூடிய ஒன்று என்பதால் மற்றவர்கள் இதைக் கேளாதிருந்ததில் வியப்பொன்றுமில்லை.

கல்பகம் சுவாமிநாதன் அவர்களை தன் தனது ஆறாம் வயதில் குருவாக அடைந்திருக்கிறார் காயத்ரி. அவர் டீச்சர் பற்றி எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும்  அவரது குருபக்தி புலனாகிறது. கல்பகம் சுவாமிநாதனின் தோட்டத்தில் சிதறிக் கிடந்த பாரிஜாத மலர்களைத் தன் கைக்குட்டையில் சேகரிக்க சிறுமியாக இருந்த காயத்ரி அங்குமிங்கும் ஓடுவாராம். அப்போது டீச்சர் வாசலுக்கு வந்து, "காயத்ரி, சீக்கிரம் வாம்மா!" என்று அன்புடன் அழைப்பாராம். தனது டீச்சரை பாரிஜாத மலரின் மணத்துடன் இணைத்தே தன்னால் எப்போதும் நினைத்துப் பார்க்க முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் காயத்ரி. அவரது சொற்களிலேயே சொல்வதானால்,கல்பகம் சுவாமிநாதனின் வீணாகானம் பாரிஜாதம் போன்ற ஒரு தேவமலரை நினைவூட்டுவதில் ஆச்சரியமென்ன!

இத்தனை மாபெரும் மேதையை மியூசிக் அகாடமியின் "சங்கீத கலா ஆச்சார்யா", கிருஷ்ணகான சபாவின் "ஆச்சார்யா சூடாமணி" போன்ற விருது கவுரவங்கள் அலங்கரித்தன.

அன்னாரின் நினைவுகளுக்கு இந்தப் பதிவை நன்றியுணர்வோடு சமர்ப்பணம் செய்கிறோம்.



மொழிபெயர்ப்பு உதவி: நட்பாஸ் 
புகைப்படம் உதவி: தி ஹிந்து

3 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள். மனப்பூர்வ அஞ்சலி.

Shanmuganathan said...

எனது மனபூர்வமான அஞ்சலி....

natbas said...

நல்ல பதிவு, சிறப்பாக இருக்கிறது. நன்றி கிரி.

இந்த மாதிரி உயர்ந்த மனிதர்களைப் பற்றி அடிக்கடி பதிவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...