Aug 28, 2012

டெஸ்ட் போஸ்ட்

டெஸ்டிங் ஒன் டூ த்ரீ....  

Aug 25, 2012

ஓ அப்படியா?


வடபழனி க்ரீன்பார்க் ஹோட்டல். ஆறுவருஷம் மின்ன இப்போ வேலை பாக்கற கம்பேனில சேர்ந்த புதுசுல மூணுநாள் இண்டக்‌ஷன் நடந்தது.  அதாகப்பட்டது கம்பேனி உள்ள எப்படி நடந்துக்கணும், செய்வன, செய்யத்தகாதன, ரூல்ஸ், ரெகுலேஷன்ஸ் கத்துக்குடுக்கற நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

ரெண்டாவது நாள் காலைல உள்ள அடைச்சி வெச்சு ஏதேதோ மந்திரங்கள் ஓதினாங்க. அவனவன் வந்தவேலையைக் கவனிக்கறேன்னு தலையைத் தொங்கப் போட்டுட்டு ஊசலாடிட்டு இருக்கான். 

மீட்டிங் தொடங்கி ஒண்ணரை மணிநேரம் ஆகியிருந்தது. கைக்கு எட்டற தூரத்துல பாட்டில் பாட்டிலா மினரல் வாட்டரும், சாக்லேட்டுகளும் டேபிள்ல வெச்சிருந்தாங்க. ஆர்வக்கோளாருல இதைத் தின்னு அதைக் குடிச்சுன்னு நேரத்தை ஓட்டிட்டு இருந்ததால ‘அவசர’ வேலைக்கு அவசியம் ஏற்பட்டது. ப்ரேக் குடுப்பாங்க குடுப்பாங்க’ன்னு பாத்தா தர்ற வழியாக் காணோம்.

அந்தநேரம் பாத்து ‘நான் பாடுவேன்’னு தெரிஞ்ச ஒரு ப்ரம்மஹத்தி “சார், கிரியை ஒரு பாட்டு பாடி எண்டர்டெயின் பண்ண சொல்லுங்க’ன்னுச்சு.

”இஸ் இட்? கிரி ப்ளீஸ் ஸிங் ஃபார் அஸ்”, என்றார் அந்த ஸெஷன் நடத்திக் கொண்டிருந்தவர்.

“டேய்! இப்போ எனக்கு வேண்டியது ஒரு ப்ரேக்’டா. ஒரேஒரு நிமிஷம் அனுமதிங்கடா, அதை முடிச்சிட்டு வந்து எதை வேணா பண்றேன்’னு சொல்லணும் போல இருந்துச்சி. ஆனா, ”நான் என்ன ச்சீர் கேர்ளாடா”ன்னு கேக்க வந்த கோவத்தையும் மறைச்சிக்கிட்டு வேற வழியில்லாம என்னத்தையோ பாடினேன்.

அப்புறம் ஒருவழியா ஒரு ரெண்டுமணிநேரத்துக்குப் பெறகு ஒரு ப்ரேக் குடுத்தாங்க. மூணரை மணிநேர அடக்குமுறையை ரிலீஸ் செய்ய ‘தடதட’ன்னு ஷார்ட் ஸ்டெப் வெச்சு சினிமா ஃபாஸ்ட் மோஷன் மாதிரி ஓடறேன்.

ரெஸ்ட் ரூம் வாசல்ல முன்னாடியே ‘ரிலீஸ்’ வேலையை முடிச்ச இன்னொரு ப்ரம்மஹத்தி வழியை அடைச்சி நின்னுக்கிட்டு “அப்புறம், எங்க வந்தீங்க”ன்னுது.

“டேய் வழியை வுடுடா. ரிலீஸுக்கு முன்ன இங்கயே ப்ரீவ்யூ நடந்துடப் போவுது’ன்னு அவனை இடிச்சித் தள்ளிட்டு உள்ள போறேன்.

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹப்பாஆஆஆஆஆஆடாஆஆஆஆஆஆஆஆ”ன்னு நிம்மதியா கண்ணை மூடி லயிச்சி போன வேலையைப் பாத்துட்டு இருக்கேன், பக்கத்துல ஒரு கொரல்.

“சார்....”

ஒத்தைக் கண்ணை ஓபன் பண்ணிப் பக்கவாட்டுல பாக்கறேன். பனைமர ஒசரத்துக்கு ஒருத்தன் இருக்கான்.

அண்ணாந்து ஆகாசத்தைப் பாத்தா அவன் மூஞ்சி தெரியுது.

“ம்ம்ம்??”

“நீங்க நல்லாப் பாடினீங்க சார்”

”அவனவன் எந்த அவசரத்துல எந்த நிலைமை எல்லாம் கடந்து வந்து லயிச்சி ஒரு காரியத்தை பண்ணிட்டு இருக்கான். சக காரியவாதி காரியத்தை கவனிக்காம என்னாடா நல்லாப் பாடினீங்க, நொள்ளாப் பாடினீங்கன்னுட்டு”, அப்டின்னு கேட்டிருக்கணும். ஆனா நாம  கண்ணெல்லாம் சொருகின கோலத்துல இருந்ததால....

“ஓ அப்படியா?”, அப்டின்னு ஒரு மடத்தனமான எக்ஸ்ப்ரெஷன் தந்தேன்.

மூணுநாள் கழிச்சி வேலைக்கு ஆபீஸ் வந்தப்போதான் தெரியுது கேள்வி கேட்ட ப்ரம்மஹத்தி என் டீம் மெம்பர்’ன்னு.

இன்னைய வரைக்கும் அந்த, “ஓ அப்படியா?”ங்கற பதிலை அவன் மறக்கலை. “ஒண்ணா தேங்க்ஸ்’னு சொல்லணும். இல்லை அட்லீஸ்ட் ஜஸ்ட் ஒரு ஸ்மைல் செஞ்சிருக்கணும். அதென்னய்யா - ஓ அப்படியா’ன்னு ஒரு எக்ஸ்ப்ரெஷன்?”ன்னு இன்னைய வரைக்கும் சந்தர்ப்பம் கெடைக்கும்போதெல்லாம் என்னை ஓட்டறதுதான் அவன் வேலை.

நம்ம ச்சின்னப்பையன் எழுதின எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு? பதிவை வாசிச்சதும் அந்தப் பழைய நியாபகம் வந்துடுச்சு. அதான் சரசரன்னு இந்தப் பதிவு.

Aug 24, 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை




உலகின் எல்லாப் பெருநகரங்களும் கொண்ட அத்தனைப் பெருமைகளும் ‘நம்ம’ சென்னைக்கு உண்டு. 

”எழுபதுகளின் மத்தியில் பிறந்த” நம்ம ஹரிராமுக்கு சென்னை என்றால் பெரியாரோ திருவள்ளுவரோ பிடித்துப் பிரயாணித்து தாம்பரமும் மாம்பலமும் தாண்டினால் பஸ்சின் வலப்புற ஜன்னல் வழியே அண்ணாந்து பார்க்கையில் “ஒன்று, இரண்டு, மூன்று...” என எண்ணக் கிடைக்கும் எல்.ஐ.சி. கட்டிடமும் (ஒருமுறை கூட அந்த எண்ணிக்கை பதினாலில் முடிந்ததில்லை), சென்னைக்கான வாசமாய்த் தன் மனதில் பதிந்துபோன க்ளோரின் வாசம் தரும் தண்ணீரும், தன் மாமா வீடு அமைந்திருந்த ஐ.சி.எஃப். காலனியின் காவிநிற கட்டம் கட்டிய ஜாலிகள் கொண்ட வரிசையான வீடுகளும், அண்ணா டவரும், பட்டையாக பச்சை நிற பெயிண்ட் அடித்த பல்லவன் பஸ்களும்தான் தெரியும். அவைதான் அவனைப் பொறுத்தவரையில் சென்னையின் அடையாளங்கள்.

“கெட்டும் பட்டணம் போய்ச் சேர்” என்று நாம் கேட்டிருக்கிறோம். இதே போன்றதொரு ஆகஸ்டு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நம்ம ஹீரோ ஹரி’யின் வாழ்க்கையின் பதின்ம வயதின் தொடக்கத்தில்  அப்படி ஒரு சூழலில்தான்  நுழைகிறது சென்னை அல்லது சென்னையில் நுழைகிறான் ஹரி.

பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒருநாள் எழுந்து பார்த்தால் வீடு தலைகீழாய்க் கிடக்கிறது, கிட்டத்தட்ட வீட்டின் மேல்சுவர் தரையாகவும், தரை மேல்சுவராகவும் மாறின லட்சணத்தில். வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் ஊர்மொத்தம் வழக்கம்போல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, பிரச்னை தன் வீட்டில் மட்டும் எனத் தெரிகிறது.

வீட்டின் ஆதார சுருதி பார்ட்டி ஒருத்தர் வீட்டில் மிஸ்சிங். அடித்து விரட்டாத குறையாக வாழ்ந்த ஊரைவிட்டு பின்னங்கால் பிடறியில் விழ திக்குத் திசை தெரியாமல் ஓடத் துவங்குகிறார்கள் ஹரி குடும்பத்தினர். “யூ ஆர் மோஸ்ட் வெல்கம்”, என்று வரவேற்க நூற்று ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் சென்னை இருந்தது அவர்கள் ஏதோ பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த புண்ணியம்.

வாழ்க்கை பூஜ்ஜியத்தில் புத்தம் புதிதாய்த் துவங்குகிறது. கைகொடுக்க நல்ல உறவினர் சிலரும், வந்த இடத்தில் கிடைத்த நல்ல நண்பர்கள் பலரும் படகு மூழ்கி விடாமல் காக்க, தட்டுத் தடுமாறி  நிகழ்கிறது பயணம்.

நம்ம கதையின் ஹீரோ இப்போது தன் வாழ்க்கையில் ஹீரோ ஆகிவிட்டான் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஜீரோவில் தொடங்கிய வாழ்க்கை இன்று மதிக்கத்தக்க ஒரு உயரத்தில் இருக்கிறது.

”ஸ்டாப் ஸ்டாப்! உன்னோட செல்ஃப் ஹிஸ்டரியும், லைஃப் க்ராஃபும் கேட்க இங்க யாருக்கும் நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை மேன்”

“நோ நோ! இது என் கதை இல்லை. என்னைப் பத்தி நான் எதுவும் பேசமாட்டேன் நான் இருவது வருஷம பாத்த சென்னையை பத்தி மட்டும்தான் பேசுவேன்”

சென்னை புகுந்து இருபத்து இரண்டு வருடங்கள் நிறைந்த நிலையில் சென்னை தினம் கொண்டாடப்படும் இந்த ஆகஸ்டு மாதத்தின் அதே மூன்றாவது வாரத்தில் சென்னையின் பெருமைகளைச் சொல்லத் துவங்கினான் ஹரி.


Aug 23, 2012

தாஜ்மஹாலும் என் தாத்தா அமர்ந்த நாற்காலியும் - தொடர்ச்சி

முந்தைய பகுதி


ஸ்டாம்ப்பிலும், புகைப்படங்களிலும், சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் பார்த்து என் மனதில் பதிய வைத்திருந்த தாஜ்மஹாலின் உயரமானது சுமாரே சுமாராக ஒரு வீட்டின் உயரம் இருக்கும். 

“வி ஹேவ் எண்டர்ட் தி மெயின் எண்ட்ரன்ஸ் சார், மேடம்! நவ் வி ஆர் கோயிங் டு ஸீ தி வேர்ல்ட் ஃபேமஸ் தாஜ்”, என்று சொல்லி சினிமாத்தனமாக தனக்கு வலப்புறம் கையை நீட்டினான் எங்கள் ’கைட்’ ரவி.

தலையை சமர்த்தாக நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முயற்சித்தவனுக்கு அங்கிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலை கொஞ்சம் நிமிர்ந்தேதான் பார்க்கத் தேவையிருந்தது.

ஹா.................... என்ன ஒரு பிரம்மாண்டம். கட்டிடக் கலைச் சிறப்புகளுக்கெல்லாம் அரசன்/அரசி என புகழப்படும் அந்த “வொண்டர்”. நேரில் பார்க்கும்போதுதான் எத்தனை சிறப்பானது என்று விளங்குகிறது.

மழைபெய்து கழுவித் துடைத்திருந்த அந்த வெள்ளைப் பளிங்கு அதிசயம் கருமேகங்களைப் பின்னணியாய்க் கொண்டு ரம்மியமாய்க் காட்சி தந்தது.



என் வாய் திறந்த நிலையில் இருக்க மற்றவர்களை கவனித்தேன். அவர்களும் வாய் பிளந்து தாஜை ரசித்துக் கொண்டிருந்தனர். “ஓகே, யூ மே க்ளோஸ் யுவர் மௌத். லெட் மீ ஓபன் மை மௌத் டு எக்ஸ்ப்ளெய்ன் ஃபர்தர்”, என்று தன் வாய் திறந்தான் ரவி.

மும்தாஜ் ஷாஜஹானின் மூன்றாவது மனைவி, அதன் பின் எத்தனை பேர் அவன் மனைவியர் எனத் தெரியவில்லை. ஆனாலும் எல்லோரிலும் மோஸ்ட் ஃபேவரிட் மும்தாஜ்தான் என்பது சொல்லித் தெரியும் அவசியமில்லை.
தன் 14’ஆவது குழந்தையைப் பிரசவிக்கும் தருவாயில் மரணித்தவள் மும்தாஜ். 
தன் மீதான காதலை எப்படி நிரூபிப்பாய் என்ற மும்தாஜின் மரணப் படுக்கைக் கேள்விக்கு பதிலாய் ஷாஜஹான் அவள் கல்லறை மீது எழுப்பிய கட்டிடம்தான் உலகப்புகழ் தாஜ் :)
அந்தக் காலத்திலேயே (பதினேழாம் நூற்றாண்டு) கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு வைத்தது.
இருபது வருடங்களுக்கும் மேல் கஜானாப் பணத்தின் பெரும்பங்கு தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு திருப்பிவிடப்பட்டது. அடுத்ததாக தாஜுக்கு எதிரே தனக்கும் ஒரு கல்லறை (இன் அட்வான்ஸ்) கட்டப் பூர்வாங்க வேலைகளை ஷாஜூ துவக்கிய நேரத்தில்தான் ”போதும்டா சாமி உன் கலை ஆர்வம்”, என்று சொந்த மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப்பட்டான். அந்தச் சிறை யமுனையின் மறுகரையில் ஜன்னல் வழியே தாஜ்மஹாலைப் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டதாம். அங்கிருந்தே கடைசி காலத்தைக் கழித்தானாம் ஷாஜூ.
உத்திரப்பிரதேசத்தில் சென்ற ஆட்சி காலத்தில் மாயாவதி செய்த சிலை இன்ஸ்டல்லேஷன்களுக்கும், அதே உ.பி.யில் அண்ணன் ஷாஜஹான் செய்த இந்த ’கல்லறை” இன்ஸ்டலேஷனுக்கும் பெரிய வித்யாசம் உண்டா என்ன என்று பக்கவாட்டில் ஒரு கேள்வி வர, சாதுர்யமாகச் சிரித்து மழுப்பினான் ரவி. 
இந்தியா, அரேபிய நாடுகள், திபெத், சைனா, ஆப்கன் என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விதவித மார்பிள்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலிருந்து கட்டடக் கலை வஸ்தாதுகளை தாஜ்மஹால் கட்ட பயன்படுத்தியிருக்கிறான் ஷாஜஹான்.
மற்ற ஃபேக்ட்டுகள் கூகுள் செய்தால் உங்களுக்குக் கொட்டிக் கிடைக்கும்.


தாஹ்மஹாலின் பிரம்மாண்டத் தோற்றம், புற அழகு இவற்றைவிட அங்கே கவனிக்கத்தக்க விஷயம் தாஜ்மஹாலின் உள்ளே காணக்கிடைக்கும் நுணுக்கமான டிசைன்கள். மேலே படத்தில் காணக் கிடைக்கும் பச்சை/சிவப்பு வண்ண டிசைன் பார்க்க பெயிண்ட் போலத் தோன்றினாலும் அருகில் சென்றால்தான் அது காலத்தால் அழியாத மார்பிளால் பதிப்பிக்கப்பட்ட டிசைன் எனத் தெரிகிறது. இங்கே காணும் அந்தப் பூ வடிவை உருவாக்க நுண்ணிய அளவில் முப்பத்தி இரண்டு சிறுசிறு மார்பிள் துண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

தாஜ்மஹாலைக் கட்டிய பணியாளர்களின் சந்ததியினர் இன்னமும் ஆக்ரா நகரிலேயே வசிக்கின்றனர். பளிங்கினால் பலப்பல பொருள்கள் செய்து விற்பதே அவர்கள் தொழில்.

தாஜ் கட்டி முடிக்கப்பட்டதும் அதைக் கட்டியவர்கள் கைகளை வெட்டினான் ஷாஜஹான் என்று சொல்லப்படுவதன் பொருளையும் சொன்னான் ரவி. அதாவது, தாஜ் எழுப்பப் பாடுபட்டவர்கள் அத்தகைய அதிசயம் வேறெங்கும் கட்டிவிடாமல் தடுக்க அவர்களுக்கு சம்பளமாக ஏதும் தராமல், ஆக்ராவிலேயே நிலபுலன்களை வழங்கினானாம் ஷாஜஹான். ஆக, அவர்கள் ஊரைவிட்டு வெளியேற முடியாது என்பது அவன் திட்டம்.

தாஜ் உள்ளே நாங்கள் நுழைந்ததும் ரொமாண்டிக்காக ”ஸோ”வென மழை. உள்ளே விளக்குகள் ஏதும் கூடாது என்பதால் இருட்டறையாக இருந்தது உட்புறம். உள்ளே நுழைந்ததும் தபுசங்கர் ”தத்துபித்துவெனப்” பூஜித்த அந்த வாட்ச்மேன் இருக்கிறானா என்று பார்த்தேன். எல்லோரும் சீருடை அணிந்த லாத்தி, துப்பாக்கிகள் கொண்ட இயந்திரங்களாக இருந்தனர். நமக்கு எங்காவது ஷாஜஹான் - மும்தாஜை நினைத்து உடல், மனம், அல்லது வேறு ஏதாவது ஒன்று உதறவோ பதறவோ செய்கிறதா எனப் பார்த்தால், அப்படி ஒன்றும் செய்யலை. யோவ் கவிஞர்களே! உங்க உட்டாலக்கடி கவிதை எழுத இப்பிடியாய்யா ஒருத்தன் மூணா பொண்டாட்டிக்கு பதினாலா பிரசவத்துக்குப் பின்னே கட்டின கட்டிடத்தை வெச்சு அண்டப்புளுகுவீங்க என்று நினைத்துக் கொண்டேன்.

ஆக, உலகின் ஒப்புமை இல்லாத ஒரு மாபெரும் ஆர்கிடெக்சுரல் எக்ஸலன்ஸ் எனலாமே தவிர தாஜ்மஹாலை காதலின் சின்னம் என்று சொல்வதை சுத்த ஹம்பக்.


வெளியே வந்தால் ஒரு மிகப்பெரிய ஜனசந்தடி முட்டி மோதிக் கொண்டிருந்தது.

“அரே சாப், போகும்போதே அங்கே ஃபோட்டோ புடிச்சிருக்கணும். பரவால்லை வாங்க நாமும் இப்போ அங்கே போய் முட்டி மோதுவோம்”, அழைத்தான் ரவி.

“என்னாது அது?”

“ப்ரின்ஸ் டயானா வந்தப்போ அந்த பெஞ்ச் மேலேதான் உக்காந்து ஃபோட்டோ புடிச்சாங்க. அந்த பெஞ்ச் பேரே டயானா பெஞ்ச் சார்”

”சரியாப் போச்சு! அங்கே எல்லாம் போக வேணாம்”, என்றேன்.

“நோ நோ. வி மஸ்ட் கோ தேர் டு டேக் எ ஸ்னாப்”, என்றார் டயானாவின் நாட்டுக்காரரான துரையம்மா.

“நீங்க க்யூ கட்டுங்க. எனக்குப் பொறுமை இல்லை. அப்படியே ஃபோட்டோ புடிச்சிட்டு இருக்கேன். ஃபோட்டோவுக்கு நிக்கையில நான் வந்து சேர்ந்துக்கறேன்”, என்று நகர்ந்தேன்.

பக்கவாட்டில் இருந்த ஒரு காரிடாரில் மாடங்களின் பின்னணியில் இந்த வ்யூ ரம்யமாகக் கிடைக்க ஒரு ‘க்ளிக்” அடித்தேன்.




டயானா பெஞ்சுக்கு எல்லோரும் முண்டியடித்துப் பரபரப்பாய் இருக்க ஒரேயொரு பெஞ்ச் மாத்திரம் கேட்பாரற்றுக் கிடந்தது. அதன் பின்னணியில் தாஜை வைத்து ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்.




இன்னமும் ஒன்றிரண்டு க்ளிக்குகள் எடுத்து முடிக்க துரையம்மா தூரத்திலிருந்து ”வா வா” எனக் கையசைத்தார்.

டயனா அமர்ந்த அதே பெஞ்ச்சில் துரையம்மா, என் மேனேஜர் அம்மணி, வேந்தன், நான் நால்வரும் சம்ப்ரதாய நிமித்த ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.

“அது சரி, அதென்ன அந்த பெஞ்ச்சைப் போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்த?”, என்ற துரையம்மாவிடம்...

“எண்பது வருஷம் முன்ன எங்க தாத்தா தாஜ்மஹால் வந்தப்போ அந்த பெஞ்ச்’லதான் உட்கார்ந்து ஃபோட்டோ புடிச்சிக்கிட்டாராம்”, என்றேன்.

Aug 22, 2012

ஆம்னிபஸ் - புத்தகப் புழுக்களுக்கு ஒரு தளம்


ஆம்னிபஸ் தளம் தொடங்கி வெற்றிகரமாக இருபத்தியிரண்டு நாள்கள் ஆகின்றன. வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் என்ற உத்தரவாதத்துடன் துவங்கிய ப்ராஜக்ட் இது. அதற்குள் முப்பது பதிவுகள் வாயிலாக முப்பது புத்தக அறிமுகங்கள் ஆயிற்று. 

சுஜாதா, நாஞ்சில் நாடன், பாரதியார், ஆதவன், லா.ச.ரா, ஷோபா சக்தி, என்.சொக்கன், வாலி, கலாப்ரியா, சா.கந்தசாமி, சுகுமாரன், யுவன் சந்திரசேகர், லலிதா ராம் என்று ஒரு பெரிய ரவுண்டு அதற்குள் அடித்தாகிவிட்டது.

எட்டு நண்பர்கள் தொடர்ந்து எழுதுகிறோம். அவ்வப்போது சிறப்புப் பதிவர்களும் தனியே பதிவுகளை அனுப்பிச் சிறப்பிக்கிறார்கள்.

A library is a hospital for mind என்பார்கள். புத்தக வாசிப்பின் அவசியம் சொல்ல இந்த ஒரு quote போதுமானது. இந்த 365 ப்ராஜக்ட் மூலம் நாங்கள் புதிது புதிதாய் வாசிக்கிறோம், வாசிப்பவற்றை அறிமுகம் செய்கிறோம்.

இந்த நல்ல நோய் உங்களையும் தொற்றிக் கொள்ள http://omnibus.sasariri.com தளத்தைத் தொடர்ந்து வாசிக்க அழைக்கிறோம்.


கூகுள் ரீடரில் ஆம்னிபஸ்

மறுபடி ஒரு தமிழ்ப்படம்

டைப்பிங் ஏறுக்கு மாறாக இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.....

படத்தின் தாறுமாறுத்தனத்தை நீங்கள் உணர அப்படி டைப்பப் பட்டுள்ளது :)


வழக்கம் போல நேற்று இரவு உணவு நேரத்தில் நாகராஜ் தான் சென்ற வாரம் பார்த்த இன்னொரு லேட்டஸ்ட் சினிமாவின் கதை சொன்னார்.

சென்னையை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பரட்டைத்தலை நாயகன்- பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம்  வகுப்போ தாண்ட பிரம்மப் பிரயத்தனப்படுகிறார்-  முதல் அழகு ஈரோயினியை பஸ்ஸில் சந்திக்கிறார் - காதல் - பின் சுற்றல்- கடிதம் தரல்-  இவரை அண்ணா என்கிறார் ஈரோயின்- எஸ்கேப்- அடுத்து இரட்டை சகோதரிகளை அதே பஸ்ஸில் பார்க்கிறார்- ரெண்டு பேரில் யாரோ ஒருத்தர் மேல் காதல்- பொத்தாம் பொதுவாய் லெட்டர் தந்து யாருக்கு புடிச்சிருக்கோ எனக்கு ஒக்கே என்கிறார்- இரட்டையர் ஊரில் அடி பின்னுகிறார்கள்-  மீண்டும் எஸ்கேப்- மூன்றாவது ஒருத்தி வீடு தேடி வருகிறாள்-  இவரிடம் கடிதம் நீட்டி இவர் அண்ணனிடம் தரச் சொல்கிறார் - அங்கும் எஸ்கேப்பு.

ஒரு வழியாக பன்னிரண்டு தாண்டி சென்னை வந்து கல்லூரி சேர்கிறார்- மீண்டும் முதல் ஈரோயினி என்ட் ரி- மீண்டும் காதல்- கடைசியில் அந்தக் காதலி காதலி த்தது தன்னையல்ல எனப் புரிகிறது- அவளுக்கு வேறொருவனுடன் திருமணம்- ட்டமால்- தொய்ந்து போய் ஊருக்கு நடந்தே வருகிறார்- வழியில் ஒரு சைக்கிளில் வரும் பெண்ணுடன் உரசி இடிக்க - கட்- அடுத்த சீன் ஓபன் செய்தால்.... அந்த சைக்கிள் பெண்ணுடன் இவருக்குத் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்க்கை - சுபமாம்.

இந்தப் படத்திற்குத்தான் டைம்ஸ் ஆஃப் இந்தியா மூன்றரை நட்சத்திரங்கள் தந்திருக்கிறது.

என்னவோ போடா மாதவா!

Aug 20, 2012

அந்த மூன்று நாட்கள்



கடந்த மூன்று நாட்களாக (அல்லது நாள்களாக) இணையத்துப் பக்கம் வரவில்லை. அதாகப்பட்டது கணினி எதிரே அமரவில்லை, மொபைலினுள்ளே மூழ்கவில்லை.

இடக்கையை வலக்கையால் கிள்ளிப் பார்க்கிறேன். ஆ..... சொர்ணா இருக்கிறாள். இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன்.

இரண்டு புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைத்தது. வீட்டுப் பரணில் வீடுவந்த புதிதில் (ஆறு மாதமுன்) தூக்கிக் கடாசியிருந்த பொருள்கள் அத்தனையையும் எடுத்து இறக்கி வைத்து வேண்டுதல், வேண்டாதல் பிரித்து இரண்டரை சாக்குப் பைகள் நிறைய வேண்டாதனவற்றை எறிந்துவிட்டு, வேண்டியனவைகளை ஒழுங்காக கட்டி வைத்த வேலை முடிக்க இரண்டு நாள்கள் (அல்லது நாட்கள்) தேவைப்பட்டன.

இரண்டு ஹிந்திப் படங்கள் பார்த்தேன். அஜய்தேவ்கன் நடித்த சிங்கம் மற்றும் ரவிதேஜா நடித்த தமிழ்ச் சிறுத்தை தெலுகுவிலிருந்து ஹிந்தி டப்பிங்கில். எப்போதும் அரைகுறையாகப் பார்க்கும் படங்களை இந்த முறை சீன் பை சீன் பார்த்தேன்.

அப்புறம்.... ஸ்ரத்தையாக தினமும் எட்டு மணிநேரம் தூங்கினேன்.

வீட்டு அம்மணிக்கு என்னைப் பார்க்கவே விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும். இணையம் இன்றி இந்த மனிதன் உயிர் வாழ்வதாவது என்று ஆச்ச்ச்ச்ச்சர்ய விசித்திரம் அது. இரண்டொரு முறைகள் என் கழுத்தில் கைவைத்து ஜுரம் கிரம் அடிக்கிறதா என செக் செய்தார். எதற்கும் இருக்கட்டும் என்று வேப்பிலைக் கட்டுகள் வேறு தயாராய் அலமாரியில்.

“என்னத்துக்கும்மா?”

”என்னவோ எனக்கு பயமா இருக்கு. அது அங்கயே இருக்கட்டும்”

தோ.... இதோ இன்று இப்போது இணையம் வந்ததும் வராததுமாய் ஒரு ரவுண்டு ட்விட்டரை எட்டிப் பார்த்தேன், ஏதேனும் ஜீபூம்பா நிகழ்வில் உலகம் மாறியிருக்குமோ என்ற நப்பாசையுடன்.

சில இணையப் பொங்கல் புரட்சிகள், இலியானா, கொஞ்சம் பெண்ணீயம், தமிழ்த் திருத்தங்கள், க்ரந்த சண்டைகள், டாக்டர் ராமதாஸ், கேப்டன் விஜய்காந்த், சிபிசெந்திலின் மொக்கை ஜோக் ஒன்றிரண்டு, ஃபேக் ஐடி புலம்பல்கள், அண்ணேய்ய்ய்ய்ய்ய் என்று பிரபலங்களின் முதுகுப் பக்கம் அமர்ந்த குஞ்சுக் குளுவான்கள்.....

இன்னும் முப்பது நாள்கூட இந்தப் பக்கம் வராமல் இருக்கலாம் போல! நான் மறுபடி வனவாசம் போறேன்....

“என்னது?”

“என்னது என்னது?”

“அப்படியா?”




ஓகெ ஓக்கேய்ய்ய்ய்.....

Aug 13, 2012

நான் ஈ



படம் வந்து ஒரு மாசம் ஆச்சோ என்னவோ. இன்றைக்குத்தான் நமக்குப் பார்க்க வாய்த்தது.

விமர்சனத்தை தமிழில் பி.ஆர்.மஹாதேவர் தவிர்த்து எல்லோரும் எழுதியாச்சு என்பதால் பிரித்து மேயும் வேலை நமக்கு கொஞ்சம் நிறையவே மிச்சம்.

முந்தைய மஹதீரா’வில் முன் ஜென்மம் மறு ஜென்மம் பேசினார் இயக்குனர் ராஜமௌலி.

இந்தப் படத்தில் கதை ஆரம்பித்த இருபது நிமிடத்தில் ஹீரோயினுக்காய் செத்துப் போகும் ஹீரோ ஈ வடிவில் மறுபிறப்பு எடுக்கிறார். மீதமுள்ள இரண்டு மணிநேரத்தில் வில்லனை ஜாலியாக, ரசனையாக, அமர்க்கள அதகளங்களுடன் அல்லாட விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு கொள்ளி வைக்கிறார், அவ்வளவே கதை.


ஒன்றுமே இல்லாத அல்லது ரிப்பீட் அடிக்கத்தக்க கதைக்கும் ஸ்க்ரீன் ப்ளே என்கிற வஸ்து ஸ்ட்ராங்காக இருந்தால் போதும் என்பதற்கு இந்தப் படம் ஒரு க்ளாசிக் உதாரணம். கொஞ்சமும் தொய்வின்றி படம் முழுக்க உங்களை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைக்க கேரண்டி தருகிறார் இயக்குனர். படம் நெடூக காமெடிக்குப் பஞ்சமே இல்லை.

இன்னமும் அங்கங்கே தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டே இருக்கிறது. படம் பார்க்காதவர்கள் ஒரு எட்டு உங்கள் வீட்டு மழலைகள் சூழ தியேட்டர் போய் வந்துவிடுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...