Sep 25, 2017

அரண்மனையும் அண்ணாச்சியும்


குஷ்பு குளித்த குளம் என்று பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றி ஒரு பதிவு எழுதியிருப்பார் ஜெயமோகன்.  


கேட்பாரற்றுக் கிடந்த பேய் உலாத்தும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த அரண்மனையின்பால் சினிமாக்காரர்கள் பார்வை பட்டதும் எப்படி மாறிப்போனது அந்த அரண்மனை என்பதான பதிவு,

இதோ மேலே உள்ள இந்தக் கட்டிடத்தைக் கடந்த பல வருடங்களாக இந்த ஓயெம்மாரில் பார்க்கிறேன். இப்படி வண்ணவொளி விளக்குகள் மின்ன மின்னவெல்லாம் இல்லை. அழுது வடிந்த ஒரு பழைய கட்டிடமாய் இருந்தது, கேட்பாரற்று. உஸ்ஸ் உஸ்ஸ் என்று அழைத்து அவிழ்த்துக் காட்டிடும் மோகினிப் பேய்களெல்லாம் இருந்திருக்குமோ என்னமோ? 

இப்போது ஓவியா திறப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று சரவணா ஸ்டோர்ஸாக எழுந்து நிற்கிறது. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு நேர் என்றால் நேர் நேர் எதிரே இந்தக் கட்டிடம்.

காலையில் அலுவலகம் போனதும் மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் எழுந்து நின்று கேட்ட முதற்கேள்வி - "என்ன சார்? எத்தனை மணிக்காம்?". 

"போகப் போறியா?", என்ற என்னிடம் ,"போவும்போது கண்டிப்பா சொல்றேன் சார்".

"சொல்லு சொல்லு. மறக்காம சொல்லு. நான் தப்பித்த தவறி கூட அந்தப்பக்கம் வந்துடக் கூடாது பாரு", என்று வேலையில் மூழ்கிப் போனேன்.

மதியம் ஒரு மணிக்கு யதேச்சையாக நினைவு வர, நான் பணிபுரியும் ஆறாம் தளத்தின் சாளரத் திரைகளைத் தூக்கிவிட்டு எட்டிப் பார்த்தால் எதோ ஆரவாரம் நடந்து முடிந்து அடங்கிய கோலத்தில் இருந்தது அந்தப் புதிய கட்டிடம்.

இருக்கைக்குத் திரும்பி வந்து நண்பரிடம், "என்னய்யா போய் வந்தாச்சா?", என்ற கேள்விக்கு நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டினார். "ஜென்ம சாபல்யம் சார்", என்றார்.

இதோ இது இன்னொரு அலுவலகத் தோழி ஒருத்தரின் ஃபேஸ்புக் பதிவு.


அண்ணாச்சி பிரேக் ஈவனை தான் எதிர்பார்த்ததற்கு மிகமிக முன்னதாகவே அடைந்து விடுவார் என்பதில் எனக்குக்  கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

மாலையில் வேலை ஓய்ந்து வெளியே வரும்போது தடதடத்து வந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய எட்டுப் பத்து பேர் சாலையைக் கடக்கும் முன் இந்தப்புறம் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தா அங்கதாண்டா மேடை போட்டிருந்தாங்க. இந்தா இங்கதாண்டா தலைவி மைக் புடிச்சி நின்னாங்க என்று அவர்களுள் ஒருவன் ஒருத்தன் கூவிக் கொண்டிருந்தான்.

அங்கே நின்றிருந்த காரைச் சுட்டிக்காட்டி இதுதான் ஓவியாவோட ட்ரைவர் ஓட்டினு வந்த காரு என்று சொல்லியிருந்தால் எதிர்க்கேள்வி ஏதும் கேட்காமல் தொட்டுக்க கும்பிட்டுவிட்டு அவர்கள் அனைவரும் அங்கப்பிரதட்சணம் வந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.


Sep 15, 2017

வீழ்வேன் என்று நினைத்தாயோ?




இணையதளங்களில் உங்களுக்கு என்று ஒரு கணக்குத் துவங்கப் போகிறீர்கள் என்றால் உங்கள் பெயருக்கு அடுத்ததாக அங்கே உங்களைப் பற்றிய சுயகுறிப்பு (பயோடேட்டா) ஒன்றை வரையச் சொல்கிறார்கள் எல்லா தளத்தினரும். இந்த சுயகுறிப்புகளை எல்லாம் தேடிப்பிடித்து வாசிப்பது என்பது என் பொழுது போக்குகளுள் ஒன்று, குறிப்பாக டிவிட்டரில்.  குறிப்பாக நம் தமிழ் மக்கள்தம் குறிப்புகள் வாசித்தல் அலாதியிலும் அலாதி அனுபவம்.

"| இளையராஜா ரசிகன் | ரயில் பயணம் | ஜெயகாந்தன் | நா.முத்துக்குமார் | கலைஞர் | பரோட்டா சால்னா |" என்று சிலர் எளிமையாக முடித்துக் கொள்வர்.

பொதுவாக பத்து பேர்களில் ஒருவரேனும் "தன்மானத் தமிழன்" என்று இருப்பார். தெலுகு நமக்கு வாசிக்க வாராது என்பதால் "மானங்கெட்ட தெலுங்கன்" என்று எம் கொல்ட்டி மக்கள் யாரும் தெலுகு ட்வீட்டர்லு உலகில் எழுதிக் கொள்கிறார்களா எனத் தெரிவதில்லை.

"தாறுமாறான தல ரசிகன்", "கொலைவெறி பிடித்த தளபதி ரசிகன்" இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தம் பயோடேட்டாவாகக் கொண்டோர் நிறைய தென்படுவர்.

"விவசாயியின் மகன், VB script எழுதுகிறேன்", "காவிரிப்படுகையில் பிறந்தவன்; காசுக்கு தண்ணீர் விற்கும் உலகில் உழல்கிறேன்" என்ற பொருள் தரும் குறிப்புகள் அங்கங்கே இடரும்.

"வெளிய சிரிக்கிறேன்; உள்ள அழுகறேன்", என்போரை அடிக்கடிப் பார்க்கலாம். < எதுக்கு அழுகணும்? ஃபிரிட்ஜ்ல போயி உக்காரலாமே? >

"ரொம்ப கெட்டவன்", "ரொம்ப ரொம்ப கெட்டவன்", "மோசமானவன்"  "கேவலமானவன்",  என்று பயமுறுத்துவோரும் உண்டு.

இந்த மேற்படி இனத்தவருக்கு டஃப் கொடுக்கும் பெண்ணினம் உண்டு.  "ராட்சசி", "அடங்காதவள்", "திமிர் பிடித்தவள்", "கேடு கெட்டவள்" மற்றும் இன்னபிற.

அச்சுப் பிச்சுப் பெண்கள் என்றோர் இனம் உண்டு.  "அம்மா அப்பாவின் செல்லக்குட்டி", "அப்பாவின் தேவதை", "டெய்ரி மில்க் சாப்டுட்டே இருப்பேன்", "பிங்க் கலர்ன்னா ரொம்ப புடிக்கும்", என்றெல்லாம் போகும்.

இதையெல்லாம் தாண்டினால் தமிழ்ச் சூழலில் தடுக்கி விழுந்தால் நமக்குத் பார்க்கக் கிடைப்பது "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ", என்ற வசனம். இது பாரதியார் எழுதியது என்று நான் சொல்லித் தெரியும் அவசியம் இங்கே யாருக்கும் இல்லை என்று நம்புகிறேன்.

அதென்னவோ நம்மவர்கள் எல்லோருக்கும் அந்த வசனத்தை பாரதி தமக்காகவே எழுதியதாகக் காதில் ஒலிக்கிறது போலும். 

இந்த பாரதியின் வசனத்தை நான் முதன்முதலில் கேட்டது "மகாநதி" திரைப்படத்தில். படத்தின் இடையில் வரும் ஒரு பாடலுக்கு முன்னதாகவும், படம் முடியும் வேளையிலும் கமல்ஹாசன் இந்த வசனத்தை வாசிப்பார். அதற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவெளியில் இந்த வசனத்தை நான் எழுத்திலோ ஒலியிலோ பார்த்து / கேட்டதில்லை.

கூகிள் ஆண்டவரிடம் இந்தப் பதத்தைத் தந்து கொஞ்சம் என்னான்னு பாரு நைனா என்றால் இப்படி இமேஜ் இமேஜாகக் கொட்டித் தீர்க்கிறார்.



"நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க"களுக்கு இடையே "வீழ்வேன் என்று நினைத்தாயோ"க்களுக்கும் டிசர்ட்டுகள் வருவது சந்தோசம் தருகிறதுதான் என்றாலும், நம் மக்களுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் நிஜமாகவே விளங்கித்தான் இதையெல்லாம் பயோவில் எழுதுவதையும், சட்டையில் பொறித்துக் கொள்வதையும் செய்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.



என் புரிதலில், "உன்னா மேரி யா.மொய்தீன் கடைல மட்டன் பிரியாணி துன்னுட்டு டயபடீஸ் வந்து, அந்து நொந்து வெந்து நட்டுனு போற டம்மி பீஸ் இல்லடா நான். எனக்கு சாவு இல்ல, இந்த ஒலகம் அழிய வரியும் என் கவிதை வாழும்டா என் சிப்ஸு", என்கிறார் பாரதி. இல்லையா?

ஆனால் நம்ம மக்கள் என்னவோ, "ஹாஃப் உள்ள உட்டாலும் ஸ்டெடியா ஸ்டெய்ட்டா நிப்பன் கேட்டியா?", என்ற ரேஞ்சுக்கு இதைப் புரிந்து வைத்திருப்பதாக எனக்குப்படுகிறது.

...இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன்எழுகிறான்உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும்.....
இப்படியும் ஒருத்தர் இந்தப் பாடல் குறித்துச் சொல்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க.... ...அலுவலகத்தில் ஹைதராபாத்தில் இருந்து தோழர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். நம்ம பண்ருட்டிக்காரர்தான். ஹைதையில் எட்டு வருடம் ஜாகையை நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறார். அதிதீவிர அஜீத் ரசிகர். விவேகம் படம் வெளியான நாள்முதல் தினப்படி பட வசூல் குறித்த செய்தியை அவர் வாசிக்க அதை நாங்கள் கேட்க எனத்தான் எங்கள் காலைச் சிற்றுண்டி துவங்கும்.

நேற்று ட்வீட்டர், வாட்சாப் என்று என்னத்தையோ நான் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் இடறிய யாரோ ஒருத்தரின் பயோடேட்டா, "நான் வீழ்வேன் என்று நினைப்பாயோ" என்று சொல்ல நம்ம ஹைதை நண்பரிடம், "தம்பி இந்த வீழ்வேன் என்று நினைத்தாயோ" வசனத்தை யார் ஒரிஜினலாச் சொன்னதுன்னு தெரியுமா என்று கேட்டேன்.

"அஜீத் தான் ஜி. பில்லா-டூ  படத்துல சொல்லுவாரே", என்றார்.

Sep 13, 2017

பேலியோ

பாரா'வின் இந்தப் பதிவைப் படித்தேன்.

ரொம்பவும் பயமாக இருக்கிறது.

http://www.writerpara.com/paper/?p=11717
Related Posts Plugin for WordPress, Blogger...