Dec 7, 2008

வி.பி. சிங்

மும்பை தாக்குதல்களின் பரபரப்பில் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் முக்கியமானது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மறைவு குறித்த செய்தி.

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இந்தியாவிற்குத் தந்த பிரதமர்களுள் ஒருவர், மண்டல் கமிஷன் பரிந்துரைத்தவர், ரத யாத்திரை சென்ற அத்வானியை கைது செய்து ஆட்சியை இழந்தவர், புற்றுநோயோடு போராடி வாழ்ந்தவர் என இவர் பற்றி சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் உண்டு. இவர் மறைந்த ராஜீவ் காந்தியின் சிறந்த நண்பர் என்பது நான் அறியாதது. விகடனில் வந்த அவர் பற்றிய ஒரு article உங்கள் பார்வைக்கு.


ஆக்கிரமிப்பது அவமானம்... பின்வாங்குவது பெருமை!

விஸ்வநாத் பிரதாப் சிங் என்றால் பலருக்குத் தெரியாது. அனைவருக்கும் அவர் வி.பி.சிங்!
திடீரென்று அரசியலில் அவரைப் போல உச்சத்தில் போனவரும் இல்லை. சத்தமில்லாமல் ஒதுங்கியவரும் இல்லை. 'காற்றைப் போல எளிமையானவர். வானத்தைப் போல சுத்தமானவர்' என்று இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பெயர் வாங்கிய தலைவர், சமீப காலச் சரித்திரத்தில் இவர்தான்.
கேன்சருக்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 'நாட்களை எண்ணி வாழ்பவன் நான்' என்று சொல்லி, கவலை இல்லாமல் நாட்களைக் கழித்தவர் இந்த ராஜ குடும்பத்துக்காரர். மாண்டோ சமஸ்தான மன்னர் ராம்கோபால் சிங் இவரின் சித்தப்பா. அவருக்கு வாரிசுகள் இல்லாததால், வி.பி.சிங்கைத் தனது வளர்ப்பு மகனாக எடுத்து வளர்த்தார்.
உ.பி. முதல்வராக இருந்தவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தவர் இந்திரா. ராஜீவுக்கு நெருக்கமான நண்பரானார் சிங். ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் ஆனார். 'நண்பன் என்ற எல்லையைத் தாண்டி, ராஜீவ் என் துறையில் அதிகமாகத் தலையிடுகிறார்' என்று வெளிப்படையாகவே குற்றம் சொன்னவர் வி.பி.சிங். அதன் பிறகு, அவருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அதில் போபர்ஸ் பூதம் கிளம்பியது. சுமார் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதப் பரிமாற்றத்துக்கு 68 கோடி கமிஷன் தரப்பட்டதாக எழுந்த புகாரில், பிரதமர் ராஜீவைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் சொல்லின. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் வி.பி.சிங் பதவி விலகினார். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி தனது நண்பனுக்கு எதிராகவே தேசிய முன்னணியை ஆரம்பித்து, அதிரடியாக ஆட்சியிலும் அமர்ந்தார் சிங்.
341 நாட்கள் இந்தியாவின் பிரதமராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மூன்று காரியங்கள் காலங்கள் கடந்தும் பேசப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அமல்படுத்தினார்.
அடுத்ததாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவை செய்ய பாரதிய ஜனதா, வி.ஹெச்.பி. கிளம்பியபோது, ராணுவத்தை வைத்து அடக்கினார். இத்தனைக்கும் பி.ஜே.பி. தயவில்தான் வி.பி.சிங் பிரதமர் நாற்காலியில் இருந்தார். 'எனக்கு நாற்காலியைவிட தத்துவம்தான் முக்கியம்' என்று அறிவித்தார்.
இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்தது. அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் கோரிக்கைவைத்தன. 'வாபஸ் வாங்கினால் இந்தியாவுக்கு அவமானம்' என்றார்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள். 'ஆக்கிரமிப்பதுதான் அவமானம். பின்வாங்குவது பெருமைதான்' என்று சொல்லி, அமைதிப் படையை வாபஸ் வாங்கினார்.
பதவி நாற்காலி பற்றி கவலைப்படாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர்களில் வி.பி.சிங்குக்கு ஓர் இடம் உண்டு!

Nov 9, 2008

தெலு(ங்)கு

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் வீட்டில் சுந்தரத் தெலுகு மாட்லாடும் ஒரு கோடி பேரில் நானும் ஒருவன். சென்னைத் தெலுகு சேலம் தெலுகுவை கிண்டலடிப்பதும், சேலம் தெலுகு திருநெல்வேலித் தெலுகுவைக் கிண்டலடிப்பதும், திருத்தணி சென்னையைக் கிண்டலடிப்பதும்தான் இதில் காமெடி.

அவரவர் வட்டாரத்தமிழை தெலுகுவாக transliterate செய்வது அடுத்த காமெடி. உதாரணம்: கோவையில் செஞ்சுபோட்டு, தின்னுபோட்டு என்பார்கள், தமிழில். சிலர் இதைத் சேசிவேசி, தினிவேசி என்று தெலுகுப் "படுத்துகிறார்கள்".

சும்மா என்ற சொல், சுகமா என்பதில் இருந்து வந்ததாய் சொல்வர். நெல்லை வட்டாரத்தில் "சௌக்கியமா" என்பதை "சுகமா இருக்கீயளா?" என்பார்கள். இதை தெலுகுப் படுத்தி, "ஊரிக (சும்மா) உன்னாரா (இருக்கீங்களா) ? என்கிறார்கள்....!!?

ஏமி கொடும பாசு இதி...!!!!

By the way... மொழி விற்பன்னர்கள் தெலுகுவை இந்தியாவின் இரண்டாவது இனிய மொழியாக பெங்காலிக்கு அடுத்து சொல்கிறார்கள். தமிழ் எங்கே சார்....?

Nov 1, 2008

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..

1990ல் சென்னை வந்தேன். 18 வருடங்கள். அதே சாலைகள், அதே பாலங்கள், அதே போக்குவரத்து நெரிசல், மழை வந்தால் அதே குண்டும் குழியுமான கடந்தே செல்ல முடியாத வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பாலங்கள். சாலைகளில் காத்திருந்து காத்திருந்து வயது ஏறியதுதான் மிச்சம்.

கட்டப்பட இருந்த ஒரே பெரம்பூர் பாலத்தையும் கட்ட விடாமல் 'அம்மா' அவர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார். பத்து வருடங்களாக ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது பால வேலை. வாழ்க ஜனநாயகம்.

வைரமுத்து "கள்ளிக்காட்டு இதிகாசத்தில்" எழுதியது போல், கடந்து செல்லும்போது கடவுள் கூட கண்ணை மூடிக்கொள்வார் என நினைக்கிறேன்.

தென் சென்னைக்காரன் கட்டும் அதே வரியைத்தான் நானும் கட்டுகிறேன். ஏலே அரசியல்வாதிகள், ஏன் இந்த ஓர வஞ்சனை?

Sep 11, 2008

என்ன கொடும டாக்டர்ஸ்....

டாக்டர்களுக்கு அவர்களிடம் வரும் நோயாளிகள் ஒரு வகையில் Modern ATMகள் என்று எங்கோ படித்தேன்.

அவர்களுக்கு பணம் வேண்டுமென்றால் அவர்கள் நேரடியாக demand செய்து வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை. சமீபத்தில் என் அண்ணன் மகளை test செய்த அந்த லேடி டாக்டர், "இவளுக்கு heart beat கொஞ்சம் அப்நார்மலா இருக்கு, ஒரு test எடுக்கணும்" என்று சொல்லி, Echo என எழுதுவதற்கு பதிலாக EEG என எழுதித் தந்தார். முதலில் EEG எடுத்து, பின்னர் "அடடா, Echo இல்ல எடுத்து இருக்கணும்" என அதையும் எடுத்து, ஒரு நியுமரலாஜி sorry நியுரோ டாக்டரை பார்த்து, கடைசியில் "ஒண்ணும் இல்லை" என்றார்கள்.

இதில் கஷ்டம் நாம் செலவழித்த ஆயிரக்கணக்கான பணம் இல்லை, அந்த 15 நாட்கள் பட்ட மன உளைச்சல்தான். குழந்தைக்கு என்னவோ ஏதோ என்று பயந்து, நமக்கு உணவு இறங்காமல், உறக்கம் இல்லாமல் நாம் தவித்தோம்.

Lab-ல் அவன் பங்கிற்கு அவனும் அவன் மூலமாக கமிஷன் என டாக்டரும் சம்பாதித்து சந்தோஷப் பட்டுக் கொண்டனர். நம் மன உளைச்சல் குறித்து அவர்களுக்கு என்ன?

ஷைலஜாவிற்கு backpain வந்தபோது இன்னொரு கொடுமை. அவர் ஷைலஜாவின் குடும்ப டாக்டர் ஆதலால் MRI எடுக்கச் சொல்லிவிட்டு எழுதித் தந்த காகிதத்திலேயே Rs.4000/- எழுதித் தந்தார். அவர் எழுதாவிடில் அந்த test-எடுக்க 7000 முதல் 10000 வரை ஆகுமாம். என்ன கொடும சார் இது?

Sep 4, 2008

சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்"


இன்றுதான் படித்து முடித்தேன் இரண்டாம் பாகத்தை. எப்படியும் இன்னும் ஒருவாரம் கதையின் ஆக்கிரமிப்பில் இருப்பேன், நிச்சயம்.

பாபநாசம் ரகுவைக் காதலித்து கல்யாணம் நிச்சயித்தபின் அமெரிக்க ராதாகிஷனை அப்பா சொல்படி மணந்து அமெரிக்காசெல்கிறாள் மதுமிதா. ரகுவைச் சுற்றியே வலம் வரும் முதல் பாகம் அவன் உள்ளக்குமுறல்களுடன் முடிகிறது . இரண்டாம் பாகம் MBA படிக்க ரகுவையும் அமெரிக்கா அழைத்துச் செல்கிறது. அவன் அங்கு சந்திக்கும் விந்தையான அனுபவங்கள், மதுவை சந்திப்பது, மதுவுக்கு ராதாகிஷன் செய்யும் துரோகம், இந்திய வம்சாவளிப் பெண் ரத்னாவை சந்திப்பது என கதை விரிந்து எங்கெங்கோ சென்று கடைசியில் மது இறந்து, ரத்னாவை ரகு மணப்பதாய்கதை முடிகிறது.

இந்தக் கதையில் கதையை விட அதை சொன்ன விதத்தில் சுஜாதா எங்கோ நிற்கிறார்.

1980களில் அப்போது சுஜாதா விவரிக்கும் நாகரிகத்தில், கலாச்சாரத்தில் இப்போது நாம் கொஞ்சம்தான் மிச்சம் வைத்திருக்கிறோம்; கம்ப்யுட்டர், மொபைல் போன், சாட்டிலைட் TV தவிர பெரிய வளர்ச்சி எதையும் சொல்லமுடியவில்லை. ஆனால், அப்போதே அவர் விவரிக்கும் அமெரிக்கா, அதன் தொழில்நுட்பம், அந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், விமானம், கார்கள், சாலைகள் அனைத்தும் நமக்கு பிரமிப்பு, மயக்கம், பயம், அருவருப்பு அனைத்தையும் தருகின்றன.

நான் ஏற்கெனவே சுஜாதாவின் அதிதீவிர வாசகன். இந்தக் கதையை படித்த பின், அவரைப் போன்ற பிதாமகர்களுக்கும் சாவைக் குறித்து அழைத்துச் சென்ற கடவுள் மேல் கோபம் வந்தது.

Aug 16, 2008

நாம் விரும்பும் மாற்றம்....

கதை ஒன்று உண்டு. ஒரு கிறிஸ்துவ பெண் ஒரு வேற்று மதம் சார்ந்த ஒருவனை காதலித்தாள். வீட்டில் அவள் அப்பா வழக்கமான அப்பாவாய் இதனை எதிர்த்தார். காரணமாக அவர் சொன்னது, “வேற்று மதத்தவனை என் மருமகனாய் என்னால் ஏற்க இயலாது, நீ அவனை மதம் மாறச்சொல் நான் சம்மதிக்கிறேன்” என்றார். இவள் இதனை காதலனிடம் சொல்ல, அவன் காதலின் மிகுதியில் மதம் மாற சம்மதித்தான். இவளுடன் அவன் தேவாலயம் செல்லத் தொடங்கினான்.

சில நாட்கள் சென்ற பின் அப்பெண் அழுது கொண்டே அப்பாவிடம் வந்தாள். 

"என்னம்மா, என்ன ஆச்சு?",
"அப்பா, அவர் வந்து......."
"என்னம்மா ஆச்சு, மதம் மாற மாட்டேன்னு இப்போ சொல்றனா...?"
"இல்லப்பா....வந்து...."
"என்ன சொல்லு, உன்ன மதம் மாற சொல்றனா?"
இல்லப்பா, வந்து......"
"என்னன்னு சொல்லி தொலையேன்....."
"அவர் பாதிரியாரா போயிட்டருப்பா...."

பொதுவாக நாம் மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம். ஆனால் அந்த மாற்றத்திற்கும் ஒரு வரையறை வைக்கிறோம். நீ இந்த அளவுக்கு மாறினா போதும், அதுக்கு மேலே மாறாதே என்று....

இதை நம் விஷயத்தில் compare செய்ய வேண்டுமென்றால் நம் matrimonial வெப்சைட்-கள் பக்கம் சென்று பார்த்தால் தெரியும். "I expect a girl with a blend of modern & our traditional values" என்று எல்லாம் இருக்கும். எது எந்த விகிதத்தில் வேண்டும் என்பது அவனவனுக்கே வெளிச்சம்.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...