Feb 28, 2011

உலகக் கோப்பை - வடை போச்சே!

என்னத்த கிரிக்கெட் விமர்சனம் எழுத! எதைன்னு எழுத? 

அட போங்க சார்!


Feb 26, 2011

அகிலும் நாங்களும்


குழந்தை வளர்ப்பு தொடர்பாக அப்பாமார்கள் எழுதின பதிவேதும் இதுவரை என் கண்களில் பட்டதில்லை. சமீபத்தில் யதேச்சையாக நண்பர் ஒருவர் தந்த இணைப்பு வாயிலாக "நமது கைகளில்" என்னும் ஒரு பதிவைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. 

அதில் சொன்னதைப் பார்க்குமுன் நம் சொந்தக்கதை கொஞ்சம்...

டிப்பாக்கம் குடிவந்து ஐந்து மாதங்கள் ஆனாலும் உண்மையான தனிக் குடித்தனம் தொடங்கி இரண்டு வாரங்கள்தான் ஆயிற்று. என் அண்ணனுக்கு  "ஒரு தற்காலிகப் பிரிவு" வடிக்கும் நேரம் வந்ததால் பள்ளிக்குச் செல்லும் சஹானா'வைப் பார்த்துக் கொள்ளவென அம்மா மாதவரம் சென்றாயிற்று. . சஹானா தம்பியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். பெயர் கூடத் தேர்ந்தெடுத்து ஆயிற்று.

கணினியில் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும்போது "ஊஃப் ஊஃப் " என கரண்டியில் எதையோ ஊதிக் கொண்டு அருகில் நிற்கிறாள் என் மனைவி.


"கொஞ்சம் புளி காரம் சரியா இருக்கான்னு சொல்லுங்க", கரண்டியில் சுடச் சுட ஏதோ ஒரு குழம்பு.


"..ஜுர்ர்ர்ரர்ர்ர்ர்.... கொஞ்சம் கொதிக்கணும்"


கொஞ்சம் இடைவெளிவிட்டு வேறொரு கரண்டியில் உருளைக் கிழங்கு பொரியல்.


"உப்பு, காரம் பாருங்க"

"காரமே இல்ல"

"கொழந்தைக்கு கொடுக்கணுமில்ல"


"அப்ப சரி"

 அம்மா நகர்ந்த பின் மனைவி எடுத்திருக்கும் புதிய சமையல் அவதாரம் எனக்கு அவ்வப்போது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. சொல்லத் தேவையின்றி எல்லோருமே அவரவர் அம்மாவின் சமையல் சுவையைத்தான் சமையலுக்கான அளவுகோலாக (பெஞ்ச்மார்க்) வைத்திருக்கிறோம். அதைவிட நன்றாக உலகில் யாராலும், மனைவி உட்பட, சமைத்துவிட முடியாது என்பது நம்மில் 99% பேரின் நம்பிக்கை. 



கல்யாணப் புதிதில் நாங்கள் மாதவரத்தில் இருந்த போது வெந்நீர் வைத்தலில் தொடங்கி அப்பளம் சுடுவதைக் கற்று அட்வான்ஸ் கோர்ஸ் ஒன்றின் வழியே தயிர் தயாரிக்க என் மனைவி கற்றுக்கொண்ட காலகட்டத்தில் அம்மாவும் அண்ணியும் எங்கோ ஊருக்கு சென்றிருந்த ஒரு சுபயோக சுபதினத்தில் நிர்பந்தத்தின் பேரில் கரண்டியைக் கையில் எடுத்ததுதான்  அவள் சமையல் சகாப்தத்தின் ஆரம்பம் எனச் சொல்ல வேண்டும். <இந்தக் கட்டுரையை தப்பித் தவறி அவள் படிக்க நேர்ந்தாலும் இந்த பாராவை அவள் பார்க்காது கடக்கக் கடவது>.

அந்த சமையலின் விளைவுகளை நான் இங்கே வெளிப்படையாக எழுதினால் எனக்கு விவாகரத்து நோட்டிஸ் நிச்சயம். எனவே தற்காலத்திற்கு வருவோம்...

அகில் உண்ணும் மெனு ஐட்டங்கள் சிக்கலில்லாமல் அமைந்து விடுவதாலும், இன்னமும் அவன் ஏதும் சமையலுக்கும் சுவைக்கும் அளவுகோல்களை நிறுவிக்கொள்ளாத காரணத்தாலும் அவனுக்கான சமையல் சார்ந்த விஷயங்கள் பிரச்னைக்கு வெளியே போய்விடுகின்றன.

இந்த நிஜத் தனிக்குடித்தனத்தில் சமையல்..... சரி சமையலை விடுங்கள்.... சமையலுக்கு அடுத்து எங்களுக்கு எதிரே பெரிதாக நின்று கொண்டிருக்கும் ஒரு சவால் அகில். அவனைப் பார்த்துக் கொள்வதென்பது இப்போது எங்களுக்கு கடவுள் தந்திருக்கும் பெரிய புராஜக்ட்.

குப்பைக்கூடை, துடைப்பம், மிதியடி, குப்பைவாரும் பிளாஸ்டிக் முறம், மாப் ஸ்டிக், திறந்து வைத்த குளியலறை, கண்ணுக்கு நெருக்கத்தில் தொலைக்காட்சி - இவைதான் அவன் உலகின் சுவாரசிய விஷயங்கள்.


கொஞ்ச நாளாய்த்தான் நாற்காலி, மேஜைகளைப் பிடித்து நிற்கப் பழகியிருக்கிறான். நிற்பவன் மீண்டும் அமர எத்தனிக்கையில் நிதானம் தடுமாறி தடாரென அமர்ந்து பின்சாய்ந்து புத்தம் புதிய மொட்டை மண்டையில் சத்தத்துடன் அடி வாங்கி வீறிடத் தவறுவதில்லை. அவன் பின்னாலேயே எப்போதும் நிற்க வேண்டும் நாங்கள். 


இப்போது என் மடியில் உட்கார்ந்தவாறே நான்காவது ரவுண்டு உச்சா போகும் அகில் என்னை நிமிர்ந்து பார்த்து "ஆஅஆஅ..." என்ற வழக்கமான விசேஷ ஒலி எழுப்புகிறான். கணினித் திரையில் அவனுக்கு ஒதுக்கிய விண்டோ'வில் "உலகமெல்லாம் ஓடி" ஓடியோடித் தேய்ந்து கொண்டிருக்கிறது. சஹானா பாடிய "கொஞ்சிக் கொஞ்சி" பாடலை மாற்ற வேண்டும் என்பது அவன் செய்த சத்தத்தின் அர்த்தம்.


சமையலும் ஆயிற்று, அகில் பின்னால் ஓடியாட வேண்டும், அதுவும் பேசியாயிற்று. இன்னும் முக்கியமாய் முன் நிற்பது அவனைக் குளிப்பாட்டும் விஷயம். உடம்புக்கு  ஊற்றுதல் என்றால் சரி. தலைக்கு குளிப்பாட்ட வேண்டும் என்றால்?



"என்னங்க, பையன் தலைக்கு ஊத்தி பத்து நாள் ஆச்சு. மொட்டை அடிச்சப்ப அவன் தலைக்கு குளிச்சது. அந்த கம்ப்யூட்டரை கட்டிக்கறதை விட்டுட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கன்னா ரெண்டு பெரும் சேந்து  குளிப்பாட்டிடலாம்"

"அதான் தலைல முடி இல்லதானம்மா, எதுக்கு தலைக் குளியல்? ஒடம்புக்கே ஊத்திடலாம்",


அதற்கு மேல் நான்கைந்து ரவுண்டு விவாதம் பண்ணி பேசி முடிவெடுத்ததில் அவனுக்கு தலைக்கு குளிப்பாட்ட தீர்மானம் நிறைவேறிற்று.


கோதாவில் நானிறங்கி கால்களை நீட்டியமர்ந்து அவனைக் குப்புறப் படுக்க வைத்து தலையை லேசாக அழுத்திப் பிடித்து தலையில் நீரூற்றி மூக்கு வாயில் நீர் போகாவண்ணம் காத்துவிட்டோமென நினைக்கையில் வீறிடத் தொடங்குகிறான். அவசரப்பட்டு என்னவாயிற்று எனப் பார்க்கத் அவன் தலையைத் தூக்கிப் பார்த்தால் அப்போதுதான் நீர் வழிந்து அவன் வாய் புகுகிறது.

ஆனது ஆச்சு என அவனுக்கு ஸ்பெஷலாக அரைத்த ஆயுர்வேத மாவை தலையில் தேய்த்து அப்படியிப்படி சோப்பும் போட்டு இரண்டாம் ரவுண்டு தண்ணீர் ஊற்ற வேறொரு டெக்னிக்கை தேர்ந்தெடுக்கிறேன்.

அவன் தலைக்கு மேலே கைகளை தொப்பிபோல் காத்து நீர் ஊற்றுகிறேன். ஓரளவு தண்ணீர் முகத்தில் வழியாமல் இந்த முறையில் காப்பாற்றியாயிற்று. எனினும் மீண்டும் அவன் வீறிடல்கள். பைப்பைத் திறந்து அருகில் அவனை நிறுத்தி வைத்து அதில் அவனை விளையாட விட்டு கொஞ்சம் அழுகையை திசை மாற்றுகிறேன். எனினும் அழுகையின் விரிவாக்கமாக தேம்பல்கள் தொடர்கின்றன. 

குளித்து முடித்து தலை துவட்டி, உடல் துடைத்து பவுடர் பூசி மையிட்டு உடை அணிவித்து இவை எல்லாவற்றுக்கும் இடையில் அவன் கை கால்களை உதைத்துப் பண்ணிய ராவடிகளைப் பொறுத்து என....ஹம்மா...... ஒருவழியே குளியல் படலம் முடிந்தது.


"இருங்க, கம்ப்யூட்டர்ல போயி ஒக்கார்றதுக்கு முன்னால இந்த இட்லியை அவனுக்குக் குடுத்துடுங்களேன். நான் அதுக்குள்ள தேங்காய் துருவிக்கறேன்."


வாசலில் நடந்தவாறே மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கைகளைக் காட்டி "காக்கா! காக்கா! காக்கா பாரு... " என அவனிடம் பேசியவாறு அவனுக்கு ஊட்டுகிறேன். 


"நடுநடுல தண்ணி குடுக்கணும்", வெந்நீர் டம்ளர் வந்து எதிரில் அமர்கிறது. வெதுவெதுவென அவன் குடிக்கும் இளம் சூட்டில் நீரை ஊதிஊதிக் கொடுக்க வேண்டும்.


அரைமணிநேர நடைகளுக்குப் பிறகு ஒரு இட்லியில் பாதி வயிற்றுக்கும், கொஞ்சம் தரைக்கும் போக, மீதம் தட்டில் இருக்க... 


"உவ்வாய்....",


"அவனுக்கு எடுத்துட்டு வந்தா கொஞ்சம் தண்ணி குடுங்க"


ஃபீடிங் பாட்டிலையோ, ஸிப்பரையோ பழக்கம் செய்தால் அதை நிறுத்துவது கஷ்டம் என்று ஊரே கூடி அறிவுரைகள் சொன்னதால் அப்படியேதும் பழக்கப்படுத்தாது நேரிடையாக தம்ளரிலேயே நீர் தரும் வழக்கம். முதலில் சில நாட்கள் அதிலேயே நீரைப் பருகியவன் பின்னர் "ப்புளுப்புளுப்புளுப்புளு" என நீரைப் பருகாமல் நீர்க்குமிழிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கற்று எங்களை சிரிப்பேற்றிக் கொண்டிருந்தான்.


இப்படியாக இருக்கின்றன என் காலை வேளைகளும் வேலைகளும். குழந்தை வளர்ப்பு பற்றின புத்தகங்கள் இப்போது எங்கள் வீட்டு நூலகத்தில் முன்வரிசையில் இருக்கின்றன. இணைய மேய்தல்களிலும் "குழந்தை வளர்ப்பு" தொடர்பான தேடல்கள். 

இதோ இதை எழுதிக் கொண்டிருக்கையில் மீண்டும் என் மடியில் அகில்.  முகம் நிமிர்த்தி மீண்டும் என் முகம் பார்க்கிறான். மீண்டும் அதே  "ஆஅஆஅ..." சத்தம். இப்போது "பிரம்மம் ஒக்கட்டே" பாடல் ஒலிக்கவேண்டும்.



சரி, இப்போது நமது கைகளில் பதிவிலிருந்து சில அசத்தும் வரிகள் இதோ! மாபெரும் விஷயங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே உரிய மிகவும் நுட்பமான அவதானிப்புகள்.



கண் தெளிந்த குழந்தை நம்மை அடையாளம் காணும்போது நாம் நம் இருப்பை புதிதாக மீண்டும் அறிகிறோம்.

நம் கண் முன் ஒரு பிரபஞ்சம் பிறந்து விரிந்து தன்னை நிறுவிக்கொள்கிறது. 

நம்வீட்டில் மூலைகளும் இடுக்குகளும் நம் கண்களுக்குப் படுவதேயில்லை. நாம் மையங்களில் வாழ்கிறோம். ஆனால் குழந்தைகள் முதலில் அங்குதான் செல்கின்றன. மறந்து விடப்பட்ட பொருட்கள் அவர்களால் தான் கண்டடையப்படுகின்றன 

சாப்பிடாவிட்டால் காக்காய்க்குக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி ஊட்டக்கூடாது. காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான் சொல்லவேண்டும்.


பை தி வே....நமது கைகளில் எழுதியவர் வேறாருமல்ல - ஜெமோ
.
.
.

Feb 24, 2011

உலகக்கோப்பை - நச்சுன்னு நாலு



போட்டிகள் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகியிருக்கின்றன. பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கனடா போன்ற முக்கியத்துவம் இல்லாத அணிகளுடன் பந்தயக் குதிரை அணிகள் பங்கு பெற்ற ஆட்டங்கள் முடிந்திருக்கின்றன. இதுவரை அதிர்ச்சி முடிவுகள் ஏதுமில்லை.


கடந்த இரண்டு நாட்களில் நடந்த போட்டிகளில் இங்கிலாந்து - நெதர்லாந்து போட்டி நல்ல சுவாரசியம் சேர்த்த போட்டி. பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக அனாயசமாக 292 ரன்களை நெதர்லாந்து குவித்தது அசத்தலாக இருந்தது. மயிரிழையில் இங்கிலாந்து தோல்வியைத் தவிர்த்தது. இந்திய அணிக்கு அடுத்த வாரம் நெதர்லாந்துடன் ஒரு போட்டி உள்ளது. இந்தியா எப்படி சமாளிக்கிறது எனப் பார்க்கவேண்டும்.

நான்னேஸ் என்ற வேகப் பந்து வீச்சாளரை நினைவிருக்கிறதா? ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி டேர்டெவில் அணிக்கு பந்து வீசி அசத்தியவர். அவர் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று இப்போது அந்த அணிக்கு ஆடத் தொடங்கியுள்ளார். டுவென்டி டுவென்டி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் அவர் பந்து வீசுவதைப் பார்க்கலாம்.

"நான்னேஸ் கண்டி இருந்திருந்தான், இங்கிலாந்து பசங்க பல்லப் பேத்திருக்கலாம்", என நேற்று ரயிலில் ஒருவர் பேசுவதைக் கேட்டேன்.

  

நேற்றைய பாகிஸ்தான் - கென்யா போட்டியில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் கொண்ட உத்தியை பாகிஸ்தான் அணியும் பயன்படுத்தியது. நிதானமாக ஆடத் தொடங்கி ஆட்டத்தின் பின்பாதியில் ரன் சேர்த்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சின்ன அணிகள் தரும் அதிர்ச்சி வைத்தியங்களிளிருந்து தப்பிப்பது எப்படி எனப் பாடம் எடுத்தார்கள். கென்யா வீரர்கள் பேட்டிங்கில் சென்னை போட்டியைப் போலவே சொதப்பியது "போங்கடா டேய், நீங்கள்லாம் எதுக்குடா ஆட வர்றீங்க?" எனக் கேட்கத் தோன்றியது.

நிஜமான போட்டி இன்றுதான் துவங்குகிறது எனலாம். இன்று தொடங்கி வரும்  ஞாயிறு வரை தொடர்ச்சியாக முக்கியத்துவம் வாய்ந்த எட்டு அணிகளும் பங்குபெறும் ஆட்டங்கள்.

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - இன்று
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - நாளை
இலங்கை - பாகிஸ்தான் - சனிக்கிழமை
இந்தியா - இங்கிலாந்து - ஞாயிறு

இவற்றில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க அணிகளின் ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். சனி மற்றும் ஞாயிறு ஆட்டங்களில் நான்கு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்தை எதிர்நோக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்! விரிவாக விவாதிப்போம்!

Feb 23, 2011

திரைவிமர்சனம் செய்வதெப்படி? - பயணம் படத்தை முன்வைத்து...


திரை விமர்சனம் பண்ண யூ.டியூப்ல கம்பெனி ஆரம்பிச்சி நடத்தறாங்க டோய்! 




கொஞ்சம் இருங்க! அந்தத் தம்பி 

என்ன சொல்லுதுன்னு 
முழுசாக் கேப்போம்!





உண்மைத்தமிழன், அதிஷா, ஹரன் பிரசன்னா, பாரா, கேபிள் ஷங்கர், மருதன்  என எத்தனை பேர் எழுதிய விமர்சனங்கள். அப்பப்பா! ஒருவர் நல்ல படம் என்கிறார். ஒருவர் குப்பை என்கிறார். ஒருவர் தூக்கி வைத்து ஆடணும் என்கிறார், மற்றவர் தூக்கிப் போட்டு மிதிக்கணும் என்கிறார்.

படம் பாரு, பார்க்காதே என ஒவ்வொரு விமர்சனம் படித்த பின்னும் என் மனம் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருந்தது. கடைசியில் போச்சுடா விடு விஜய் டி.வி.யில் உலகத் தொலைக் காட்ச்சியில் முதல் முறை திரையிடும்போது பார்த்தால் ஆச்சு என நினைத்துக் கொண்டேன்.

இன்றும் இணையத்தை மேய்ந்த போது கிடைத்தது இன்னும் ஒரு விமர்சனம். உள்ளதில் ஆகச் சிறந்தது என இதையே கொண்டாடுவேன் நான்.... பாரா'வை விட, பிரசன்னா'வை விட இவர் சிறந்த விமர்சகராக எனக்குத் தெரிகிறார்!

திரை விமர்சனம் எழுதுவது எப்படி என பாரா முதலானோர் பாடம் எடுக்கும் அவசியத்தைத் தகர்த்தெறிகிறார் இந்த இளம் விமர்சகர்.







Feb 22, 2011

முதல் மூன்று நாட்கள்

மூன்று தினங்களையும் நான்கு ஆட்டங்களையும் கடந்திருக்கிறோம். எட்டு அணிகள், அவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசி அணிகளுக்கு எதிரில் ஆடிய நான்கு அணிகள் பந்தயத்தில் இல்லாதவை. எனினும் இத்தகைய அணிகள் திடீர் ஆச்சர்யம் ஏதேனும் தந்து பந்தயத்தில் முந்தும் குதிரைகளின் காலை வாரிவிடும் சாத்தியம் கொண்டவை. நல்லவேளையோ அல்லது கெட்டவேளையோ  இந்த மூன்று நாட்களில் அத்தகைய ஆச்சர்யங்கள் ஏதும் நிகழவில்லை.



இந்திய அணி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றது. சேவாகையும் அவருக்கு இணையாக ஆடிய விராத் கோலியையும் மறக்கலாகாது. 

2007 உலகக் கோப்பை தோல்விக்கு பங்களாதேஷ் அணியை இந்தியா பழி வாங்கியது" என எந்தத் தலைப்புச் செய்தியும் வராமல் போனது ஏமாற்றமளித்தது. முற்றிலும் சரணாகதி அடையாமல் ஒரு கண்ணியமான ஸ்கோரை எட்டும் விதம் நேர்த்தியான ஆட்டத்தை பங்களாதேஷ் அணியினர் தந்தனர். தமிம் இக்பாலும் ஷகீப் அல் ஹசன் இருவரின் அரை சதங்களும் பாராட்டிற்கு உரியவை. முனாப் படேல் சாய்த்த நான்கு விக்கெட்டுகள் அவருக்கு நல்ல கிரெடிட். விக்கெட் வேட்டையை அவர் தொடர பிரார்த்திப்போம்.


சென்னையில் பகல் ஆட்டமாக நடந்த நியூசி - கென்யா ஆட்டத்திற்கு டிக்கெட் வாங்கியிருந்தேன். சொந்த அலுவல்கள் காரணமாக சற்றே தாமதமாக பன்னிரண்டு மணிக்கே புறப்பட இயன்றது. சேப்பாக்கத்திலிருந்து நண்பன் அழைத்து "வரவேண்டாம், மேட்ச் முடியப் போகுது" என்றான். தொடர் தோல்விகளின் பிடியில் சிக்குண்டு கட்டுண்டு கிடக்கும் நியூசிலாந்து அணிக்கு 2003'ஆம் ஆண்டின் அரையிறுதி அணியான கென்யா கொஞ்சமேனும் நெருக்கடி தரும் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நியூசி அணி பவுலர்கள் சரிசமமாக கலக்கினர். மூன்று நான்கு என விக்கெட்டுகளை ஓரம், பென்னெட், சௌதீ மூவரும் வீழ்த்தியிருந்தனர். நியூசி அணி பவுலர்களின் கலக்களைத் தாண்டி கென்யா அணியினர் தாமே முன்வந்து சுருண்டனர் எனவும் சொல்லலாம். அதுவே நிஜம். 



இந்த நான்கு ஆட்டங்களில் குறிப்பிடத் தக்கவையாக இலங்கை - கனடா மற்றும் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டங்களை சொல்லத் தோன்றுகிறது. சிறிய அணிகளுக்கு எதிரே ஆடினாலும் இலங்கை ஆகட்டும் அல்லது ஆஸ்திரேலியா ஆகட்டும் முதலில் பேட் செய்தபோது இருபத்தியைந்து ஓவர்களுக்கு எந்தவித பதட்டமும் இன்றி நிதானமாக ஆடி கணிசமான விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் பின்பாதியை ரன் சேர்க்க பயன்படுத்திக் கொண்டனர். இது ஒரு விதத்தில் நல்ல உத்தி. இது போன்ற ஆட்டங்களில் பவுலர்களின் பங்கும் மகத்தானது என்பதை மறக்கக் கூடாது.



இப்போதைக்கு விவாதிக்க மேற்கொண்டு ஏதுமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்டம் சூடுபிடிக்கப் பிடிக்க நம் விமர்சனங்களும் சூடு பிடிக்கலாம்.

Image courtesy: cricinfo

Feb 21, 2011

இசைக் கோலங்கள் - மலேசியா வாசுதேவன் நினைவாக...

படம் நன்றி: ரேடியோஸ்பதி 

நான் ஏதேதோ எழுதுகிறேன். ஆனால் அவையெல்லாம் நான் எழுத வந்தவையல்ல.

நீங்கள் ஏதேனும் கல்யாண ரிசப்ஷனுக்குச் செல்லுங்கள். மெல்லிசைக் கச்சேரி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு வரிசைக்கிரமம் இருக்கும். பக்திப் பாடல், லேட்டஸ்ட் மெலடி, கொஞ்சம் பழைய கல்யாணப் பாடல், லேட்டஸ்ட் ஃபாஸ்ட் நம்பர், மீண்டும் இடைக்கால மெலடி ஒன்று, பின்னர் கச்சேரியின் கடைசி கட்டங்களில் வேகப் பாடல்கள் என.

அதில் அவர்களுக்கு என இருபத்தைந்து முப்பது பாடல்கள் கொண்ட ஒரு ஸ்டாண்டர்ட் லிஸ்ட் ஒன்று இருக்கும். அந்தப் பாடல்களை பாட, இசைக்க என அந்த குழுவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவற்றிலிருந்து பத்து பாடல்களை நீங்கள் எந்த கல்யாண ரிசப்ஷன் என்றாலும் கேட்கலாம். 

அந்த லிஸ்டில் எந்தப் பாடலைப் பாடினாலும் சரி, அல்லது எந்தப் பாடலை ஒதுக்கினாலும் சரி....ஒரேயொரு பாடல் மாத்திரம் எல்லா கச்சேரிகளிலும் கட்டாயம் நீங்கள் கேட்பீர்கள் . அது என்ன பாட்டு என உங்களால் சொல்ல முடியுமா? உங்களிடம் விடையில்லை என்றால் நானே அதைக் கடைசியில் சொல்கிறேன்.

லேசியா வாசுதேவன் அவர்கள் பற்றி என் நினைவுகளை வருடினால் காலச் சக்கரம் முன்னும் பின்னுமாகச் சுற்றி ஏதேதோ நினைவுகளில் ஊசலாடுகிறது.

"பூவே.....இளைய பூவே...." பாடலின் கம்பீரம், "ஒரு கூட்டுக் குயிலாக" பாடலில் தெறிக்கும் அன்பு, "முதல் மரியாதை" படத்தில் நடிகர் திலகத்திற்கு அவர் தொடுத்த இதமான, நையாண்டித்தனமான, ரொமான்சான  விதவிதமான பாடல்கள், அதிசயபிறவியில் ரஜினிக்கு அவர் கட்டிய தோரணங்கள், எஜமான் படத்தின் "தூக்குச்சட்டி" பாடலில் ரஜினி, கவுண்டமணி என இருவருக்கும் அவர் இருகுரலில் பாடினது  என அவர் பாடிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

"ஓ,,,, பார்ட்டி நல்ல பார்ட்டிதான்" ஒரு நல்ல மெலோடியஸ் கில்மா பாடல் பாடுவது எப்படி என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.

தர்மயுத்தம் படத்தின் தங்கைப்பாடல் "ஒரு தங்க ரதத்தில்" நம்முள் இருக்கும் அந்த அன்பான அண்ணனை ரஜினி வடிவில் நம் கண்முன் கொணர்கிறது.

டி.எம்.எஸ்.'சுக்கு அப்புறம் சிவாஜிக்குப் பொருத்தமான குரல் மலேசியா சார் குரல்தான்  என இதுவரை ஒரு நூறுபேர் சொல்லக் கேட்டிருப்பேன்.

ரஹ்மானுக்கு அவர் பாடிய "தென் கிழக்குச் சீமையில" எப்படிப்பட்டவனையும் கரைய வைக்கும்.

"கதாநாயகன்" படத்தில் அவர் ஏற்ற காமெடி வில்லன் ரோல் எப்படிப் பட்டவரையும் சிரிக்க வைக்கும்.

இப்படிப் போய்க்கொண்டே இருக்கிறது என் எண்ணத்தில் தோன்றும் மலேசியா அவர்களின் நினைவுகள்.

நான் ஏதேதோ எழுதுகிறேன் என முதலில் சொன்னேன் இல்லையா அதற்குக் காரணம் நான் இங்கே விவரிக்கப் போகும் ஒரு சம்பவம் அல்லது அனுபவம்.

ந்த நண்பரின் பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு விஜய் டி.வி. சூப்பர் சிங்கரில் கோவையில் முதல் இரு சுற்றுக்கள் கலந்து கொண்டுவிட்டு மேற்கொண்டு சுற்றுகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்.

ஆரம்ப ரவுண்டுகளில் அவர் பெயர் பரபரப்பாக அடிபட ஆரம்பித்தது. சென்னை சின்மயா சென்டரில் உள்ள ஆடிட்டோரியத்தில் மூன்றாம் சுற்று பதிவுகள் நடந்து கொண்டிருந்த போது அவரை நான் அங்கே பார்த்தேன். அவர் கலந்து கொண்டபோது அவருக்கு மலேசியா அவர்கள் நடுவராக இருந்தார். எங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். நான்காம் சுற்றில் வெளியேறி அவர் அஸ்ஸாம் திரும்பினார்.

சில மாதங்கள் கழித்து அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார்.

"கிரி, நான் மலேசியா வாசுதேவன் சார் நம்பர் கலெக்ட் பண்ணி வெச்சிருந்தேன். மிஸ் பண்ணிட்டேன். எப்படியாவது யாரையாவது புடிச்சி வாங்கித் தர முடியுமா. அவர் ஒரு அற்புதமான மனிதர்.  நான் அடுத்த மாசம் சென்னை வர்றேன். அவரை சந்திக்க விருப்பமா இருக்கு. ரொம்ப எளிமையான நம்மைப் போல பார்டிசிபன்ட்கள் கிட்ட கூட ரொம்ப எளிமையா பழகினார், நான் சூப்பர் சிங்கர் போல நிறைய போட்டிகள்'ல கல்கத்தாவுக்கு எல்லாம் போயி பாடியிருக்கேன். அங்கயும் சரி, உங்க சென்னை'ல இருக்கற மத்த நடுவர்கள்'லயும் சரி மலேசியா போல ஒருத்தரை பார்க்க முடியாது சார். தோத்துப் போனவங்களுக்கு அவர் சொன்ன அட்வைஸ் சும்மா சால்ஜாப்பு போல இல்லாம, நிஜமாவே அடுத்த முறை அவங்க இங்க வந்து பாடணும் அப்படின்ற மாதிரி இருந்துச்சு. அவரைப் போல் ஒரு ஜெம் ஆஃப் தி பர்ஸனை இந்த லோகத்துல பார்க்கறது ரொம்ப கஷ்டம்".

ஒரு தனி மனிதனின் தனித் திறமையை உலகம் வியப்பது, ஆராதிப்பது என்பது காலகாலமாக பலதுறைகளில் பலருக்கும் நிகழ்ந்து வருவது. கலையம்சம் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது, அதில் சிறந்து விளங்குவது, உலகப் புகழ் பெறுவது, மனிதர்களின் மாறா அன்பைப் பெறுவது என்பவற்றைக் காட்டிலும் எனக்கென்னவோ இது போன்ற நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு ரசிகனின் இதயத்தில் ஒருவர் அவரது இயல்பான செயல்பாடுகள் மூலம் பெரும் இடம் உன்னதம் பெற்றதாகத் தெரிகிறது.

ஒரு உன்னதக் கலைஞனின் இழப்பு தேற்ற முடியாத ஒரு சோகம். ஒரு அற்புதமான மனிதனின் மறைவு எவ்வகையிலும் ஈடு செய்ய இயலாத ஒரு வெற்றிடம்.


மலேசியா அவர்கள் நினைவாக அவர் பாடிய ஒரு அரிதான மெலடி இங்கே:




அந்தப் பாடல்: "ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை"
.
.
.

Feb 18, 2011

மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!


இன்று ஒரு ஸ்வராஜ் மஸ்தா வண்டியின் பின்புறம் பார்த்த தகவல்..
இத்தகவல் யாருக்கேனும் உதவினால் மகிழ்வேன்!

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு!
லெதர் பின்னல் பின்னும் வேலை.
முன் அனுபவம் இல்லையென்றால் பயிற்சி தரப்படும்.
PF / ESI உண்டு


ஐயப்பன் என்டர்ப்ரைஸ்
அரும்பாக்கம், சென்னை.
போன்:  044 - 2374 3707 / 2374 3708


Feb 15, 2011

பெங்களூரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

சிறப்புப் பதிவர்: சங்கர கண்ணன்

நட்சத்திரப் பட்டாளங்களுடன் அதகளம் செய்து கொண்டிருக்கும் இந்திய அணிக்கும்  தோல்விகளின் பிடியில் இருந்து மீண்டு வந்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே பெங்களூருவில் நடந்த "பயிற்சி ஆட்டம்" என்று அழைக்கப்பட்ட அந்த ஆட்டம் காண்பதற்கு சென்னையிலிருந்து சென்று வந்தேன். அந்த இனிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஏக எதிர்பார்ப்புகளுடன் ஞாயித்துக்கிழமை ஆட்டம் காண சென்னையிலிருந்து சனிக்கிழமை காலையே பிருந்தாவனில் புறப்பட்டேன். என் எதிர்பார்ப்புகளில், அவற்றைக் கனவுகள் எனவும் சொல்லலாம், மிக முக்கியமானது லாங் ஆனில் சேவாக் அடிக்கும் ஒரு ஃப்ளாட் சிக்ஸ், அந்தப் பந்து நேரே வந்து என் கையைப் பதம் பார்த்து அதனால் ஏற்படும் ஆனந்த வலி. கனவு கலைந்து எழுந்தால் "கிருஷ்ணராஜபுரம்" கடந்திருந்தது. ஒருமணி சுமாருக்கு பெங்களூரு அந்த நேரத்திலும் இளம் குளிருடன் வரவேற்றது. வெளியில் வந்ததும்தான் வெயிலின் சுவடு தெரிந்தது. 

ஆட்டத்திற்கான டிக்கெட்டை இன்டர்நெட்டில் பதிவு செய்ததால், அதை ஒரிஜினல் டிக்கெட்டாக மாற்றிக் கொள்ள ஒரு ஆட்டோ அமர்த்திக்கொண்டு சின்னசாமி ஸ்டேடியத்தை அடைந்தேன். டிக்கெட்டின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய். ஒரு பயிற்சி ஆட்டத்திற்கு இது ரொம்பவே அதிகம் என நீங்கள் நினைத்தால், இன்னும் கேளுங்கள். அங்கே குறைந்தபட்ச டிக்கெட்டே அந்த விலைதான். சச்சின், சேவாக், யுவராஜ்கள் எல்லாம் உலகின் தலைசிறந்த ஒரு அணியுடன் மோதுவதைக் காண இது ஒன்றும் பெரிதில்லை என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் என்னே ஒரு ஏற்பாடு! இன்டர்நெட் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கால்கடுக்க ஒரு மணிநேரம் நிற்க வைத்தார்கள். எனினும் பெங்களூருவில் இந்தியா சார்ந்த வேறு முக்கிய ஆட்டங்கள் ஏதும் இந்த உலகக்கோப்பை அட்டவணையில் இல்லாதது (கல்கத்தாவிலிருந்து மாற்றியமைக்கப்பட இங்கிலாந்து ஆட்டம் தவிர்த்து) அந்தக் காத்திருப்பிற்குப் பின் இருந்த முக்கியத்துவம் என எங்களில் பலர் உணர்ந்தோம். அந்த நீண்ட காத்திருப்பிற்குப் பின் என் கைகளில் ஆட்டத்திற்கான டிக்கெட் தவழ்ந்த அந்த வினாடி ஏதோ அமெரிக்கா செல்ல விசாவே எனக்குக் கிடைத்தது போல் உணர்ந்தேன்.

ஞாயிறன்று மதியம் ஒரு மணிக்கே அரங்கத்தை வந்தடைந்தேன். அரங்கம் உள்ளும் புறமும் மக்களால் நிரம்பி வழிந்தது. எங்கெங்கு காணினும் இந்திய தேசிய கோடி பட்டொளி வீசிப் பறந்தது. பலர் முகத்தில் மூவர்ணக் கலவையில் பெயின்ட் செய்த இந்தியக் கொடி மினுமினுத்தது. விசில்களின் உற்சாகக் கூக்குரல்களையும், பாரத் மாதாகி ஜே கோஷங்களையும் இன்னமும் என் காதுகள் மறுபடி மறுபடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படி அப்படி எனச் சொல்லாத வண்ணம் இருந்தன பாதுகாப்பு ஏற்பாடுகள். நான் கொண்டு சென்ற தயிர்சாத பாக்கெட் கூட பிடுங்கி வீசப்பட்டது. அடப்பாவிகளா சச்சினுக்கு அப்புறம் இந்த உலகத்துல எனக்குப் பிடிச்ச ரெண்டாவது விஷயம் அதுதாண்டா என சொல்லியும் பயனில்லை. "போ போ, உள்ள போயி சச்சினைப் பாரு" என்று வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளப்பட்டேன். அரங்கினுள்ளே உண்டு, பருகி, உறங்கி என எல்லாமும் செய்ய கிரிக்கெட் இருக்கிறது என அவர்கள் நினைத்தார்களோ என்னமோ? 

சரி, சச்சினும் சேவாகும் பேட் செய்ய வீர நடை போட்டு வரப்போகிறார்கள் எனும் என் எண்ணம் என் வாழ்வின் இரண்டாவது அத்தியாவசியத்தை மறக்கச் செய்தது. இப்போது என் தேவை நான் டிக்கெட் வாங்கிய "ஏ" ஸ்டாண்டில் ஆட்டத்தைக் கண்டு ரசிக்க ஒரு "ஏ கிளாஸ்" இருக்கை. ஒரு அருமையான இடத்தில் கிடைத்தது ஆசனம். அடடே பக்கத்தில் பார்த்தால் அழகுத் தமிழ் பேசும் ஒரு நண்பர். ஓரிரு நிமிடங்களிலேயே நாங்களிருவரும் சினேகிதமாகிவிட்டோம். பிறகென்னா நமக்குப் பேசக் கற்றா தரவேண்டும் பேட்டிங் லைன்-அப், வெதர் கண்டிஷன், பெங்களூருவில் இந்திய அணியின் சாதனைகள் என எங்களுக்குப் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தன 

ஒரு மணியிலிருந்தே மக்கள் திரள்திரளாக அரங்கினுள் வந்து கொண்டிருந்தனர். சுமார் இரண்டு மணியளவில் ஒரு பாதி அரங்கம் நிறைந்திருந்தது. டாஸ் போடுமுன் நிகழ்ந்த இரு அணி வீரர்களின் பயிற்சியை குறித்து இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். முதலில் ஆஸ்திரேலிய அணியினர் மஞ்சள் உடையில் ஜம்மென வந்து சேர்ந்தார்கள். ஸ்ட்ரெச் பயிற்சிகள், ஹை கேட்ச்கள், ஸ்லிப் கேச்கள் வந்தவுடன் அவர்கள் தீவிரமாக இறங்கிவிட்டனர். 

பிரெட் லீயும் ஜான்சனும் பயிற்சியின் போதே வீசிய அனாயாச வேகப்பந்துகளைக் காண ஆயிரம் கண் வேண்டும். ஜான்சன் அங்கு பயிற்சியில் இருந்தவர்களில் க்விக் அண்ட் ஸ்மார்ட் ஆக இருந்தார். ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய ஃபீல்டர்களுக்குத் தந்த ஸ்லிப் கேச் பயிற்சிகள் "சூப்பரோ சூப்பர்".

பலத்த ஆரவாரங்களுக்கிடையே இந்திய அணி சிகப்பு ஜெர்சிகளில் நுழைந்தது. இந்திய அணியின் பயிற்சி பெரும்பாலும் பேட்டிங் சார்ந்தே இருந்தது எனலாம். பேட்டிங் பயிற்சி முடித்துவிட்டு சச்சின் ஒரு ஸ்டான்ட் வழியாக உள்ளே நுழைந்தபோது எழுந்த ரசிகர்களின் பெரும் ஆரவாரம் ஆயிரம் சிங்கங்கள் எழுப்பிய ஒலியை ஒத்தது. பயிற்சியின் போது சச்சின் மிகவும் முனைப்புடன் செயற்பட்டது அவர் பேட்டிங்கை ஓபன் செய்ய வந்து முதல் ஓவரை அவர் எதிர்கொள்வது பற்றின எதிர்பார்ப்பையும் ஆவலையும் ரசிகர்கிடையே மென்மேலும் தூண்டியது.

டாஸ்:

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தோனி டாஸ் ஜெயிப்பதைப் பார்க்கிறேன். எங்கள் எதிர்பார்ப்பை ஏதும் வீணடிக்காமல் அவர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளும் தங்கள் பதினைந்து வீரர்களையும் சுழல் முறையில் பயன்படுத்த ஒப்புக் கொண்டன.

வர்ணனையாளர் ஒருவர் இந்தியா பேட் செய்யப்போவதாக அறிவித்தபோது அரங்கமே ஒரு எழுச்சியுடன் வண்ணமயமாக இருந்ததை அங்கிருந்த ஜயன்ட் டி.வி. ஸ்க்ரீன் ஒன்று பிரதிபலித்தது. பல வண்ணமய மாற்றங்களுடன் உலகக்கோப்பை தொடங்கிவிட்டது என்பதை அந்தக் காட்சி நிரூபித்தது.

இந்திய பேட்டிங்:

இந்திய அணியின் ஒபனர்கள் மைதானத்தில் நுழைந்த வேளையில் முழு அரங்கமும் ஆரவாரமும் உற்சாகமும் பொங்க "இந்தியா இந்தியா, சச்சின் சச்சின்" என மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எனினும் எங்கள் அனைவருக்கும் சற்றே, சற்றே என்ன சற்றே...மிகவும் அதிகமாகவே, உற்சாக இழப்பை அளிக்கும் வண்ணம் சேவாகுடன், கவுட்டியைக் கண்டோம். எந்திரன் பார்க்கப் போன தியேட்டரில் "வீராசாமி" திரையிட்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ஆகிப்போனது அங்கே பலருக்கு. சரி சச்சின் இரண்டாம் விக்கெட்டிற்கு வருவார் போல என சமாதானம் செய்து கொண்டோம்.

கம்பீர் தொடக்கத்திலேயே பிரெட் லீயின் வேகத்தையும் டொவ்கியின் ஸ்விங்'குகளையும் சந்திக்கத் தடுமாறிக் கொண்டிருந்தார். எனினும், மறுபுறம் வீரூ தன் வழக்கமான விளாசல்களால் அதகளம் செய்து கொண்டிருந்தார். பிரெட் லீயின் புல் டாஸ் ஒன்றில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவ் மூலம் தன் ரன்களின் கணக்கைத் துவங்கினார் வீரு.

தன் இன்னிங்க்ஸ் முழுவதும் மிகவும் நிதானமும் அமைதியுமாக இருந்த கம்பீர்  போலிஞ்சரின் அவேயில் சென்ற பந்தை தானே சென்று அதேபோல் அவேயில் ஆடி வைட்'டிடம் ஸ்லிப்பில் சரணாகதியடைந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த வீராத் கோலி மிக எளிதாக செட்டில் ஆனார். டவ்கி பந்தில் அவர் அடித்த ஒரு சூப்பர்ப் ஸ்ட்ரைட் டிரைவ் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போலிருந்தது. அங்கே "ஷீட் ஆங்கர்" ரோலை எடுத்துக் கொண்ட பக்குவத்தில் தன் ஆட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டார் வீரு. அடிதடி அதகளங்களை ஓரத்தில் வைத்தாலும் சரியான பந்துகளை அவர் பவுண்டரிக்கு விரட்டத் தயங்கவில்லை. ஜேசன் கிரேஜா  பந்துவீச வந்தபோது அவருக்கு பேட்டிங்கின் பல நுணுக்கங்களை மறுமுனையிலிருந்து சேவாக் கற்றுத் தந்தார் என்றால் அது மிகையாகாது. ஸ்க்வார் கட், ஸ்க்வார் டிரைவ், லேட் கட் என எல்லாமுமே அதில் அடங்கும். வீரு, கோலி பார்ட்னர்ஷிப் சரியாக செட்டில் ஆன வேளையில் புதுமுக ஹேஸ்டிங்க்ஸ் பந்தில் தூக்கியடித்து கவர் திசையில் ஹசியிடம் கேச் தந்து வெளியேறினார் கோலி.

அடுத்து யுவி உள் நுழைந்தார். சாய்ந்து சரிந்த தன் பேட்டிங் ஃபார்மை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஒரு கண்ணியமான துவக்கத்தையே தர அவர் நினைத்தாலும் கூடிய விரைவில் ஜான்சன் புண்ணியத்தில் அவருக்கு இறுதியாத்திரை இசை முழங்கியது. விக்கெட் கீப்பர் பெயின் யுவராஜ் அடித்த ஷார்ட் பாலை அமுக்கிப் புடி என பிடித்தபோது ரசிகர்கள் மனத்திலும் பெயின் புகுந்தது.

எம்.எஸ். தோனி வழக்கம்போல் வீர தீரமாக உள்ளே நுழைந்தார். அவர் விளையாடத் துவங்குமுன்னரே அவரைத் தொடர்ந்து வரும் விதி எனும் பேட்டிங் ஃபார்ம் அவருடன் ஹேஸ்டிங் ரூபத்தில் விளையாடி அவரையும் வழியனுப்பி வைத்தது. விடுவேனா பார் என வீரு மறு முனையில் சோலோ சங்கீதம் இசைத்துக் கொண்டிருந்தது மட்டுமே சற்று ஆறுதல்.

ராபிட் ரெய்னாவும் வீருவின் ஐம்பதும்:

ரெய்னாவின் சமீபத்தைய சொதப்பல்கள் ரசிகர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மையை விதைத்திருந்தாலும் இந்திய மண்ணில் அவருடைய பேட்டிங் பலம் வீண் போகாது எனும் நம்பிக்கையும் வீருவுடன் அவர் கைகோர்த்து நல்லிசை பாடுவார் எனும் நம்பிக்கையும் எல்லோர் மனத்திலும் இருந்தது.

வீரு அரை சதத்தை நெருங்கிய போதே அரங்கினில் ஒரே உற்சாகக் கரை புரளல்கள் நேர்ந்தன. அவர் தனக்கேயுரிய பாணியில் க்ரேஜா பந்தில் லாங் ஆப்பில் சிக்ஸ் அடித்து அரை சதத்தை எட்டிய போது ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து டி.ஜே.யின் இசைக்கு ஏற்ப நடனங்களாடி "வீரு வீரு"  என கோஷமிட்டது. அந்தக் கோஷங்கள் அடங்குமுன்னமே வீரு போல்டாகிப் போக ஒட்டு மொத்த அரங்கமும் "சைலன்ட்" மோடிற்கு வந்தது. வீரு வெளியேற மீண்டும் ஆரவார கோஷங்கள் முழங்க தன் அதியற்புத ஒருநாள் ஆட்டம் ஒன்றை சமீபத்தில் சந்தித்த யூசுப் பதான் உள்நுழைந்தார். 

இப்போது ரெய்னா....மீண்டும் ஒரு விக்கெட். பிரெட் லீயின் அனுபவ ஷார்ட் பால் ஒன்றுக்கு ரெய்னா அடிபணிய, விக்கெட் கீப்பர் பெயின் எளிமையான கேட்சிங் பிரக்டீசில் ரெய்னா வெளியேறினார்.

பெயின் (Paine)ஆஸ்திரேலியாவின் பேக்-அப் கீப்பர் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். 

லீயின் நர்த்தனங்கள்:

தன் வழக்கமான அதிரடி ஆட்டங்களை ஓரங்கட்டிவிட்டு யூசுப் பதான் ஹர்பஜனுடன் இணைந்து நிதான ஆட்டத்தை சிறிது நேரம் ஆடினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியில் உள்ளே-வெளியே ஆடிக் கொண்டிருந்த பிரெட் லீ இந்தப் போட்டியில் புயல் வேகத்தில் பந்து வீசி இந்திய அணியை அசரடித்தார். அடுத்தடுத்து அவர் ஹர்பஜனையும், பியூஷ் சாவ்லாவையும் நூற்று நாற்பது கி.மீ.வேகத்தில் யார்க்கர்களை வீசி பெவிலியனுக்கு அனுப்பினார்.

யூசுப் - அஸ்வின் ஜோடி

138 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது இந்திய அணி. பார்வையாளர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு நூற்று ஐம்பது ரன்கள். எப்போதும் நம் எதிர்பார்ப்பை சிதறடிப்பவர்கள்தானே நம்மவர்கள். இங்கும் அதுவே நேர்ந்தது. அஸ்வினுடன் யூசுப் இணைந்து ஆடிய நுட்பமான ஆட்டம் சரிவிலிருந்த இந்திய அணியை சற்றே மீட்டது. எனினும் ஓரளவிற்கு மேல் யூசூப் தன் நிலையைக் கட்டுப்படுத்தாது பார்ட் டைம் பவுலர் டேவிட் ஹசியிடம் தன் விக்கெட்டை இழந்தார். அவர் விக்கெட் விழுமுன் அதே ஹசி பந்தில் மிட் விக்கெட் திசையிலும், ஸ்ட்ரெயிட்டிலும்  மக்களின் "வீ வான்ட் சிக்சர்" கோஷங்களுக்குப் பதிலாக "வாங்கிக்கோ இந்தா" என இரண்டு சிக்சர்களை விளாசிவிட்டுச் செல்ல அவர் தவறவில்லை.

ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றிய வால்பையன்கள் 

ஆஸ்திரேலியர்கள் இந்திய இன்னிங்க்சை பண்டல் கட்டிவிட்டார்கள் என எண்ணிய வேளையில் நெஹ்ரா அஸ்வினுடன் இணைந்தார். "அண்ணே உங்களுக்கு பேட் புடிக்கத் தெரியுமா?" என மக்கள் நக்கலடிக்கத் தொடங்கிய போது.... "தம்பிகளா, நம்ம ஆட்டத்தைப் பாருங்க" என நெஹ்ரா நிதானமாக இயல்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். மூன்று பவுண்டரிகள் உட்பட நெஹ்ரா சேர்த்த பத்தொன்பது ரன்கள் மற்றும் அஸ்வின் சேர்த்த கால்சத ரன்கள் புண்ணியத்தில் இந்திய சொல்லிக் கொள்ளும்படியில்லை என்றாலும் "வாங்க ராசா, ஒரு முப்பது ஓவராவது போடலாம்" என கேப்டன் சொல்லிக் கொள்ளும்படிக்கு 214 ரன்களைச் சேர்த்தனர்.

(மேலும்)

எஸ் ராஜம் நினைவு விழா

இளம் வயது எஸ்.ராஜம்
Image courtesy: sawf.org

இப்படியெல்லாம் நட்பாஸ் அவர்கள்  எழுதுவதால்தான் அவரை நான் என் ஆசான் என்று விளிக்கிறேன். எஸ்.ராஜம் அவர்கள் நினைவு விழாவிற்கு  திரு.லலிதாராம் அழைத்திருந்தார். போகாதது எத்தனை குற்றம் என நட்பாஸ் அவர்களின் இந்த இடுகையை வாசித்தபின் முற்றிலும் உணர்ந்தேன்.

முழுக்கட்டுரையை வாசிக்கஎஸ் ராஜம் நினைவு விழா- நன்றி நவில் முகமாக…


அந்தக் கட்டுரையிலிருந்து சில பத்திகள்...


எஸ் ராஜம் நினைவு விழாவின் முடிவில் திரு எஸ் பி காந்தன் மற்றும் லலிதா ராம் ஆகியவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் சில காட்சிகளைத் திரையிட்டார்கள்....
...ஒரு வகையில் அந்த ஆவணப் படத்தை ஒரு கண் திறப்பு என்று சொல்ல வேண்டும். ஒரு கணத்தில்.....

......அந்தஆவணப் படத்தின் துவக்கத்தில் டைட்டில் போடும்போது ராஜம் அவர்களின் இள வயது புகைப்படங்களை ஸ்டாப் மோஷன் ஷாட்களாக அமைத்து பின்னணியில் அவர் பாடுவதைக் கேட்கையில் அந்தக் குரலின் வேகமும் கோர்வையும் அருவி போல் பாய்ந்தன.....

....நான் அந்த கணத்தில் புகைப்படங்கள் மற்றும் அவரது குரல், கானம் வாயிலாக ராஜம் அவர்களை அறிந்தேன்- ஒரு கம்பீரமான ரீங்காரமாக. உச்சி வெய்யில் வேளையில் சர்வமும் அசைவற்றுக் கிடக்கும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் இருக்கிறவனை திடீரென்று அறையுள் நுழைந்து ரீங்கரிக்கும் பொன் வண்டு போல் அந்தக் குரல் என்னை எழுப்பியது-  மலர்ப்படுகைகள், வனம், ஆறு என்று அந்த வண்டின் ரீங்காரத்தூடே விரிந்து கொண்டே போகிறது அறைக்குள் இருக்கும் நம் உலகம்.....

....நாம் நம்மை மறந்து, நம் நினைவுகளை இழந்து காலப் பிரக்ஞையின்றி இந்த இசையின் லயத்துடன் ஒன்றும்போது நமக்கும் இந்த உன்னதம், நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தின் சாந்நித்யம் ஒரு சிறு சன்னலின் ஊடாகத் தென்படுகிறது- இந்த லயிப்புக்கு வெளியே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவை லயிப்பின் அனுபவத்தை சுட்டலாமே அன்றி தொட்டு விட முடியாது......

நானே நேரில் கண்டிட்ட அனுபவம் தந்த என் ஆசானுக்கு நன்றி!
.
.
.

Feb 14, 2011

கவிதைபோல் கிவிதையும் வைசி வெர்சாவும் - 2





பயணம் 

போய்க்கொண்டே 
இருந்தேன்
போய்விடுவேன் 
எனத்தான் நினைத்தேன்
போய்விட்டேன் எனவும்
நினைத்தேன்.
போய்க்கொண்டே 
இருக்கிறேன்.


தந்திமீட்டும் தனி விரல்கள்

தார்ச்சாலை
அணைத்து மூடிய மணல்
சலசல நீரோடை
தத்தித் தாவும் சலவைக்கல்
கரைபுரளும் தண்ணீர் 
கரையோரம் நாணல்
கிழக்குநோக்கிக் காற்று 
மேற்கிலசையும் கதிர்கள்
தந்திமீட்டும் விரல்கள்
பக்கத்தில் இல்லை வீணை


Feb 11, 2011

கிழக்கு கிளியரன்ஸ் சேல் - காசா பணமா!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

"கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான்," என்பான் கம்பன். நமது நண்பர் கிரியின் "கறை (ரொம்ப) நல்லது" பதிவைப் படித்ததும் எனக்கும் புத்தகங்களை அள்ளும் ஆசை வந்தது என்கோ! - சத்தமில்லாமல் அவசர செலவுக்குப் பதுக்கி வைத்திருந்த ஐநூறை ஆட்டைய போட்டுக் கிளம்பினேன், கிழக்கு நோக்கி.

போகும் வழியில் கிரிக்கு ஒரு போன், "சார், நீங்க நேத்துப் போனீங்களே, அந்தக் கடைக்கு எப்போ லஞ்ச்?"

"ஜி, உங்களால ஒரு உதவி வேணுமே..." என்று தயங்கினார் கிரி, "நீங்க உதவி செய்ய முடியுமா சொல்லுங்க,  உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்"

எப்படியெல்லாம் மிரட்டுறாங்க!- "உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கேன் சார்."

"இல்லை, நம்ம நண்பர் ஒருத்தர் பெங்களூரில இருக்கார். அவருக்கு சில புத்தகங்கள் வேணுமாம், நீங்க இப்ப போனா சரியா இருக்கும். அவரோட போன் நம்பர் தரேன், நீங்க கிழக்குல இருந்து அவரைக் கூப்பிட்டு பேசுங்க, லிஸ்ட் தருவார்"

"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!"- சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.

கிரியின் வேண்டுகோள் என் செல்போன் பாலன்சைப் பதம் பார்ப்பதாக இருந்தது. பத்து ரூபாயை வைத்து இந்த வார இறுதியை ஓட்டி விடுவதாக கணக்கு போட்டு வைத்திருந்தேன்- மளிகை கடை லிஸ்ட் போல் பெங்களூர்காரர் பட்டியல் போடப் போகிறார் என்ற நினைப்பில் ஒரு லெவன் ஏவை போக விட்டேன். இந்த மாதிரி சமயங்களில் ஆற அமர ஆத்திரம் தீர யோசிக்க வேண்டும், இல்லையா?

"அற்றவன் தலை மீதோங்கி...
மின்னோடும் இடியினோடும் 
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன..." என்று கம்பன் இவ்வகையான நிலைமையை உத்தேசித்தே பாடியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

---



ஆனால் சும்மா சொல்லக்கூடாது-கிழக்கு பதிப்பகத்துக்கு ஏதோ வேண்டுதல் போலிருக்கிறது. எந்தக் குறையும் சொல்ல முடியாத தரத்தில் உள்ள புத்தகங்களை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளித் தருகின்றனர். நான் பெங்களூர்காரருக்குப் போன் பண்ணி அவருக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடப் போனால், அங்கே மூன்று பேர் புத்தக மலைகளை கையில் வைத்துக் கொண்டு நின்றனர்.

இங்கே சஞ்சீவி மலையைத் தூக்கிய கோலத்தில் ஹனுமனை வர்ணித்தால் நன்றாக இருக்கும்- ஆனால் நாஞ்சில் நாடனோ ஜெயமோகனோ எந்த ஒரு கதையிலோ கட்டுரையிலோ ஓரிரு முறைகளுக்கு மேல் கம்ப ராமாயணத்தை எடுத்து விடுவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறேன், சாரி, வாளாவிருக்கிறேன்.

எனக்கு முன் நின்றிருந்தவரைப் பார்த்து நட்பாக சிரிக்கிறேன், "லைப்ரரிக்கா சார்?"

"இல்லீங்க, வாங்கிப் போட்டா அது கெடக்கும் வீட்ல. வேணுங்கறப்ப படிச்சுக்கலாம்"

எனக்கு இது தோன்றவே இல்லையே- என் கையில் உள்ள பத்தே பத்து புத்தகங்களை மெல்ல மறைக்கிறேன்.

"நீங்க புக்கு வாங்கலையா?"

என் கையில் உள்ளவை புத்தகங்களாகத் தெரியவில்லை போல- இருபதுக்கு மேல்தான் ஒன்று இரண்டு என்று எண்ணுவாராயிருககும்.

"இல்லை சார். புக்கை உள்ள கொண்டு போனாலே வீட்ல வையறாங்க"

நண்பர் சிரிக்கிறார்- "அதுக்காக நாம புக்கு வாங்காம இருக்கலாமா சார்? என் வீட்ல பாருங்க, நாம இல்லாதப்ப சத்தமில்லாம அவ்வஞ்சு புக்கா எடைக்குப் போட்டுடறாங்க!"

"அடப்பாவி!" என்று நினைத்துக் கொண்டேன், "நீ தராசோடு அல்லவா வந்திருக்க வேண்டும்!"

"இப்ப பாருங்க, இந்த புக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய அட்டைப் பெட்டில போட்டு சீல் வெச்ச மாதிரி டேப் ஒட்டி மேல போட்டிருவன்ல- என்ன செய்யறா பாக்கறேன்!"

கிழக்கு மக்களை ஒரு மார்க்கமாத்தான் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று அவதானித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இனிய பெண் குரல்- "சார், இங்க ஜெயமோகனோட உலோகம் கிடைக்குமா?"

அதுக்குள்ளே உலோகம் ஸ்க்ராப் ஆயிடுச்சா என்று திடுக்கிட்டேன். நல்ல வேளை, எத்தனை கைகள் தொட்டாலும், எவ்வளவு புழுதி பட்டாலும், கறைபடாத அட்டைகள் நம்ம வாத்தியாருக்கும் ஆசானுக்கும்- அவர்களின் எந்த ஒரு புத்தகத்தையும் அங்கே காணோம்.

ஆனாலும் கண் சிவந்த அந்த அம்மணிக்கு ஆசை விடவில்லை- "அவரோட அங்காடித் தெரு இருக்குங்களா?"

"இன்னும் வரலைம்மா. சொல்லுங்க, ஆடர் பண்றோம்- ஒன் அவர்ல எழுதித் தந்திடுவார், எங்களுக்கு அச்சடிக்கதான் கொஞ்ச நாள் ஆவும்!"

"இணையத்துல ஏத்திட்டாருங்களா?" கண் சிவந்த அந்த அம்மணி கறை படிந்த காகிதங்களை விசிறி போல் விரித்தார்- "என் மவன் பிரிண்ட் எடுத்துக் குடுத்திருவான்!"

"அப்படி எடுத்த பிரிண்ட் அவுட்டுங்க தானுங்கலாம்மா நீங்க வெச்சிருக்கிற பேப்பரு?"

கண் சிவந்த அம்மணி, தன் கையில் இருந்த கறை படிந்த காகிதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்- அவை இன்னும் கறையாயின.

"இந்த வாரம் முழுக்க ஒரே அழுவாச்சிங்க," கண் சிவந்த அம்மணியின் கண் இன்னும் சிவந்து கன்னங்களைக் கண்ணீரால் உழுதது. குழறும் குரலில் தொடர்ந்தார், "பீம் சிங் படம் மாதிரி இருக்குங்க அவரோட ஒவ்வொரு கதையும்- அறம்ல ஆரம்பிச்சது, எவ்வளவு அழுதாலும் ஆறல. அதான் வேற ஏதானும் பெருசா புக்கு இருக்கான்னு பாக்க வந்தேன்."

"விஷ்ணுபுரம்னு ஒரு பெரிய புக்கு இருக்குங்க. திருவிளையாடல் மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன், நீங்க வேணா அதைப் படிச்சுப் பாருங்களேன்!"

கண் சிவந்த பெண்மணி மூக்கு சிந்திக்கொண்டே அகன்றார்.

அதற்குள் என் முறை வந்திருந்தது.

சந்தேகமாக ஒரு குரல், "சார், இது அந்த தேகம்தானா?"

மீசைகூட முளைக்காத ஒரு விடலைப் பையன்- ஒரு தடிமனான புத்தகத்தை முடிந்த அளவுக்கு ரகசியமாக மறைத்திருந்தான்.

"எந்த தேகம்?"

"அதுதான் சார் அந்த தேகம்!"

"ஓ! அந்த தேகமா! இல்லப்பா, இது தேகம் யாவும். இது வேற அது வேற"

"தேகம் யாவுமா?" கண்கள் விரிய புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

சொல்லுங்கள் நண்பர்களே, தேகம் பெரிசா, தேகம் யாவும் பெரிசா?

பெங்களூர்க்காரர் அதிகம் செலவு வைத்திருக்கவில்லை. யுவன் சந்திரசேகரின் முன்னூறு ரூபாய் சிறுகதைத் தொகுப்பையும் சேர்த்து ஏழு புத்தகங்கள் மொத்தமும் நூற்று ஐம்பத்து ஐந்து ரூபாய்தான். திருப்தியாக பஸ் பிடித்து ஆபிஸ் திரும்பினேன்.

நேரம் கிடைத்தால் நீங்களும் இந்த வாரம் கிழக்கு கிளியரன்ஸ் சேல் போய்ப் பாருங்கள்- காசா பணமா!


Feb 10, 2011

கறை (ரொம்ப) நல்லது!



கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் பிறக்க இன்னும் ஏழெட்டு வருடங்கள் பாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு நல்காலைப் பொழுதில் எங்கள் வீட்டில் அரங்கேறிய  ஒரு நிகழ்வு...

"அப்பா வந்துட்டியா வா வா வா..."

"கண்ணா, உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கேன். எழுந்த கையோட அப்படியே வீதிக்கு வந்து நிக்காதேன்னு. பல்லு தேச்சியா, மொகம் கழுவி காபி சாப்டுட்டு வெளிய வந்து உட்காரு"

"எனக்கு அதெல்லாம் தெரியும். நீ என்ன கைய பின்னால மறைச்சி வெச்சுட்டு இருக்க?"

"ஒண்ணுமில்லையே! ஒண்ணுமில்ல! நீ போயி காபி சாப்பிட்டுட்டு வா, நான் கொஞ்சம் இங்க ஒக்காந்துட்டு இருக்கேன்"

"அதெல்லாம் இருக்கட்டும். என் பல்லும் அம்மா காபியும் எங்கயும் போகாது. நீ உன் கையில மறைச்சி வெச்சுட்டு இருக்கற குமுதத்தை இங்க கொஞ்சம் தந்துட்டு உள்ள போயி ஏதாவது வேலை இருந்தா பாரேன்"

"குமுதமா? குமுதம் எங்க இருந்து வந்துது?"

"கடைல இருந்து. இப்ப காலங்கார்த்தால போயி வாங்கிட்டு வந்தயில்ல?"

"ஹி ஹி ஹி...! இல்லியே!"

"பொய் சொல்லாதப்பா. அந்த கைய முன்னால காட்டு!"

ஏய்! ஏய்! ஏய்! பல்லு கூட வெளக்கமா என்னைத் தொடாத. நான் குளிச்சு எல்லாம் ஆச்சு. பூஜை கூட இன்னும் முடியலை"

"அப்போ பூஜையை முடிச்சிட்டு வா. அதுக்குள்ள நான் குமுதம் படிச்சிட்டு தந்துடறேன்"

"டேய் டேய்... இருடா. ரெண்டே நிமிஷம். அப்புசாமி மாத்திரம் படிச்சிட்டு தந்துடறேன். அப்புறம் நீ முழுக்க படிச்சிக்கோ"

"நானும் அதேதான் சொல்றேன். நானும் அப்புசாமி மட்டும் படிச்சிட்டு ரெண்டே நிமிஷம், குமுதம் மொத்தத்தையும் உன்கிட்டே தந்துடறேன். நீ அப்புறம் நாள் முழுக்க அந்த அப்புசாமியையும் ஆப்பிரிக்க அழகியையும் வெச்சுக்கோ"

"அப்பன் கிட்ட பேசற பேச்சா பேசறான். விச்சி! ஏ விச்சி! இவனை என்னன்னு கேளு! காலைவேளையில பல்லுகூட தேக்க செய்யாம என்கிட்டே வந்து ராவடி பண்றான்"

"அப்பா...அப்பா... குடு குடு... தூணை சுத்தி ஓடாதே. திண்ணைலருந்து டிச்சில விழுந்துடப் போறே"

என் அப்பாவும் தாத்தாவும் அப்புசாமிக்கும் ஆப்பிரிக்க அழகிக்குமாய்ப் வாரவாரம் போட்டுக்கொண்ட சண்டைகளை அம்மா இத்தனை வருடங்களில் எங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

எங்கள் வீட்டில் வரலாறு கண்ட அந்த அ.ஆ.அ. கதையை புத்தக வடிவில் இரண்டொரு வருடங்கள் முன்பு புத்தகக் காட்சியில் கண்டபோது கையிருப்புக் காசு அனைத்தும் காணாமல் போயிருந்தது. வருடந்தோறும் இதே கதைதான். அ.ஆ.அ. கண்ணில் படும்போது என் அந்த வருட பட்ஜெட் அல்லது கையிருப்பு ரொக்கம் காணாமல் போயிருக்கும். இந்த வருடமும் அப்படியே ஆகிப்போனது.

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை புத்தக மணம் மாறாமல் புத்தம்புதிதாய் இருபது ரூபாய்க்குத் தருகிறேன் என ஒருவர் கடைகட்டிச் சொன்னால் உங்களுக்கு  எப்படியிருக்கும்?

பத்ரி அவர்களின் அதிரடிப் புத்தகத் திருவிழாப் பதிவும் பாரா அவர்களின் கறை நல்லது படித்த போதெல்லாம் "சுண்டியிழுக்கறாங்க சுண்டியிழுக்கறாங்க டோய் சலனம் காட்டாதே!" என இருந்தது.  சொக்கனின் ட்வீட் வழியே ஹாய் மதன் முதலான புத்தகங்கள் இருபது ரூபாய்க்குக் கிடைக்கின்றன எனத் தெரிந்தது. ஓகே...நம்ம பட்ஜெட் இருநூறு ரூபாய். போறோம் அஞ்சு பத்து புக்கு வாங்கறோம். வந்துடறோம் எனத் தீர்மானம் நிறைவேறியது.

இன்று யதேச்சையாக வங்கி வேலையாய் அலுவலகத்திக்கு மட்டமடித்துவிட்டு அப்படியே மயிலை குளம் அருகே கிழக்கில் நுழைந்தேன். அப்போது அள்ளினதுதான் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இருபது என்றால் இருபது...ஆமாம் இருபதே ரூபாய்க்கு! அட்டை மட்டும் லேசாய் லேசாய் கறை பட்டிருக்கிறதே தவிர...புத்தகம் இன்னும் காகித மணம் மாறாமல் அப்படியே!

நான் நுழைந்தது மதியம் இரண்டே கால் சுமாருக்கு. அங்கு அமர்ந்திருந்த ஒரேயொரு விற்பனை சிப்பந்தி கொலைப் பசியில் இருந்தே நேரம். நான்கைந்து பேர் சுற்றி சுற்றி புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

"சார், டெய்லி சாப்பிடப்போக நாலு மனியாகிடுது. கொஞ்சம் சீக்கிரம் பாத்தீங்கன்னா. போயிட்டு வந்துடுவேன். ரெண்டே முக்காலுக்குள்ள வந்து  திறந்திடலாம். நீங்க மறுபடி வாங்க ப்ளீஸ்!", என கெஞ்சிக் கொண்டிருந்தார். நம் புத்தகப் பசியை அவர் அறியார் பாவம்.

ஐந்தே நிமிடம் ஒரு சூறாவளிச் சுற்றில் பதினேழு புத்தகங்களை அள்ளினேன். 

யுவகிருஷ்ணாவின் "சுண்டியிழுக்கும் விளம்பர உலகம்"
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
வீயெஸ்வி எழுதிய எம்.எஸ். (வாழ்வே சங்கீதம்)
என் சொக்கன் - என் நிலைக்கண்ணாடியில் உன் முகம், திராவிட், வ.மெ.இடையினம் மற்றும் ரிச்சர்ட் ப்ரான்சன்
இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் மற்றும் சைக்கிள் முனி
எஸ்.சந்திரமௌலியின் "கோபுலு (கோடுகளால் ஒரு வாழ்க்கை)
ஆர்.முத்துக்குமார் எழுதிய அத்வானி
பா.ரா'வின் பர்வேஸ் முஷாரஃப் 
இந்திரா பார்த்தசாரதியின் "இயேசுவின் தோழர்கள்"
எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய பி.பீ.ஓ. ஓர் அறிமுகம்
வாசுதேவ் தொகுத்த "பூஜைரூம்"
ஞானியின் ஓ பக்கங்கள் 2007
யுவன் சந்திர சேகர் சிறுகதைகள்

பசியில் இருந்த அந்த விற்பனை சிப்பந்திக்கு நன்றி. இல்லையென்றால் ஐந்து பத்து இருபது விலைகளில் அங்கிருந்த இன்னமும் இருபது புத்தகங்களை அள்ளியிருப்பேனோ என்னவோ?

"தி.நகர்'ல இன்னமும் பெரிய இடம் சார். இன்னமும் நிறைய புக் இருக்க வாய்ப்பு இருக்கு" என ஒரு குரல் கேட்டது. சாவதானமாக இன்னும் ஒருமுறை போக வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும்....

நான் வாங்கிய புத்தகங்களின் ஒரிஜினல் விலை ரூ.1545/- நான் வாங்கின விலை ரூ. 365/-. போதுமா கனவான்களே? ரூ.1180/- தள்ளுபடி.... அதாவது 76% தள்ளுபடி. 


கறை ரொம்ப நல்லதுதானுங்களே?

வரும் ஞாயிறுவரை தி.நகரிலும் மயிலையிலும் இந்த தள்ளுபடி விற்பனை உள்ளது. 

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
.
.
.

Feb 9, 2011

கவிதைபோல் கிவிதையும் வைசி வெர்சாவும்



காயாத கானகம்


அடர் ரோஜா வனத்தினிடை
சீதைக்கு ஒரு கிளியாய்
பறந்து திரிந்திட்ட பொழுதுகளில் 
வனமெங்கும் வண்ணம் சிந்திய
களைப்பினில்
முள்ளோ மலரோ பாராது
அமிழ்த்தும் நினைவுகளில் 
அமர்ந்து வழிந்து சிவந்த 
நாசிநுனியின் முத்தத்தில்
இன்னமும் காயாதது
என் குருதியும்.




நானா?



கருணைப் பெருங்கடலென்றான்
கையிருப்பைத் தந்தேன்
கண்ணீர் துடைக்கப் பிறந்தவனென்றான்
கைக்குட்டை தந்தேன்
கைகளைக் காலெனத் தொட்டான்
சரிதானென்றேன்
கடவுளே நீதானென்றான்
கையை விடப்பா என்றேன்.
ராசா ராசாவென அழைத்தான்
விட்டுவிடய்யா என்னை என்றேன்

Feb 8, 2011

ஞான் வந்நு - ஸ்ரீசாந்த் ஆக்ரோஷம்

மீண்டு வந்த.... மீண்டும் வந்த ஸ்ரீசாந்த் அவர்களே!
வருக வருக!
தங்கள் வரவு நல்வரவாகுக!


எப்பிடி இருந்த நான்!







இப்பிடி ஆயிட்டேனே....!






யெஸ்....யெஸ்.....யெஸ்...




யெஸ்....யெஸ்.....யெஸ்...

என் கோடான கோடி ரசிகர்களுக்கு...

Feb 7, 2011

கேஸட் - தொடர் பதிவு



"எச்ச குஞ்சல நாதகத்தி பிசிபேடாகுளி சாமுத்ரிகா லட்சண சுந்தர வராந்தர குடமுருட்டி சீதா லக்ஷ்மி நரசம்மா...."

_________________

சொக்கன் தட்டிவிட்ட ரீவைண்ட் எஃபெக்டில் நானும்....

கேசட்டுகளைப் பற்றி என் நினைவுகளை மீட்ட வேண்டுமென்றால் தேய்ந்த ஒலிநாடாவாய்ப்  பகிர்ந்து தேய்க்க என்னிடம் பக்கம் பக்கமாக நிறைய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


எட்டு வருடங்கள் முன் மலேசியாவிலிருந்து நண்பர் பெருமாள் வாங்கித் தந்த டிஸ்க்மேன் மூலம் கேசட் உலகில் இருந்து சி.டி. உலகிற்குத் தாவினேன். அதற்கு முன் கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகள் கேசட்டுகளைத் தேய்த்துத் தேய்த்து இசை கேட்டவை நம் காதுகள். ஆகவே சி.டி.க்களை விடவும் கேசட்டுகளுடனான பந்தம் நமக்கு ரொம்பவே அதிகம்.

அப்படியே நம் பிளேயரில் ரிவர்ஸ் பட்டனை அழுத்தி விட்டு கொஞ்சம் நெடுநேர ரீவைண்டிற்குப் பின் எண்பதுகளின் ஆரம்பத்திற்குப் போவோம். 

எண்பதுகளின் தொடக்கத்தில் அப்பா வாங்கி வந்த ஒரு பெட் டைப் (bed type) கேஸட் பிளேயர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது. அந்த பிளேயர்தான் என் இசை உலகப் பயணத்தின் முதல் படி. எங்கள் சாதிசனக் கூட்டத்தில் டேப் ரெகார்டர் வாங்கிய முதல் குடும்பம் என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு.

எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்கள் தொகுப்பு ஒன்று, திருவிளையாடல் வசனங்கள், சங்கராபரணம் பாடல்கள், தெலுகுவில் கலந்து கட்டிய அஸார்டிஸ் பாடல்கள் தொகுப்பு ஒன்று (தூருப்பு தெல்ல தெல்ல  வாரகனி என்ற பாடல் மட்டும் நினைவிருக்கிறது), தங்கவேலு காமெடி தொகுப்புகள் - இவைதான் எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். 
பின் வந்த நாட்களில் ஒரிஜினல் கேசட்டுகள் ரொம்பவும் அரிதாகத்தான் வாங்கிய நினைவு. பெரும்பாலும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு லிஸ்ட் தயாரித்து வீட்டில் ஆளாளுக்கு எஜமானம் என்பதால் அடித்துப் பிடித்து சண்டை போட்டு அந்தப் பாடலை இணைத்து இந்தப் பாடலை அடித்து என கடைசியில் ஒரு வழியாக லிஸ்டை எழுதி நிறைவு செய்து அந்தத் தொகுப்பிற்குத் தகுந்தார்ப்போல் சிக்ஸ்டி அல்லது நைன்டி வகை கேசட்டுகளில் பதிவது வழக்கம்.

இரண்டும் எங்கள் வீட்டில் பிரபலமாக இருந்த பாடல்கள். இரண்டாம்ப்பு படிக்கும்போதே வாசமில்லா மலரிது (கையில் ரோஜாப் பூ போன்ற ஏதோ ஒன்றுடன்), இளையநிலா பொழிகிறது பாடல்களையெல்லாம் நெட்டுரு போட்டுப் பாடினவனாக்கும் நான். அப்போது அந்த வயதில் அப்படிப் பாடுவதெல்லாம் ரொம்ப ஆச்சர்யம். இப்போது எல்.கே.ஜி. வயதுக்கு முன்னரே "எம் பேரு மீனா குமாரி" என்கிறார்கள் சின்னஞ் சிறுசுகள்.

அந்த முதல் டேப் ரெகார்டர் எங்கு சென்றாலும் தூக்கிச் செல்லும் வண்ணம் காம்பேக்ட் ஆக இருந்ததால் எங்கள் கிராமத்திற்குச் சென்றாலும் சரி அல்லது நெடுந்தூரப் பயணங்கள் என்றாலும் சரி அதுவும் எங்களோடு பயணிக்கும். பேட்டரியிலும் இயங்கும் என்பதால் ஆன்-தி-கோ பிளேயராகவும் அது இருந்தது. ஒருமுறை திருவனந்தபுரத்தில் நாங்கள் ரொம்ப எந்துவாகி தமிழ்ப் பாடல்களை சத்தமாக கேட்டு வர இரண்டொரு மல்லுக்களால் "எடோ நிறுத்திக்கோ" என எங்களுக்கு ஆணை பிறந்தது தனிக்கதை..
வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருமே பாத்ரூம் பாடகர்கள் என்பதால் கேட்க வாங்கிய கேசட்டுகளுக்கு இணையாக குரல் பதிவிற்கு என காலி கேசட்டுகள் வீட்டில் நிறைய தேவைப்பட்டன. நாங்கள் அப்போது பதிந்த கேசட்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தும் இப்போது சேகரிக்கப் படாமல் காணாமல் போய் விட்டாலும், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் ஒரே ஒரு ரெகார்டட் கேசட் மாத்திரம் என் அம்மாவின் பீரோவில் பத்திரமாக இருக்கிறது. அதில் இப்போது எங்களுடன் இல்லாமல் மறைந்துவிட்ட என் சகோதரன் ஒருவனின் குரலும் மறைந்த என் அப்பாவின் குரலும் இருப்பதே அந்தச் சேகரிப்பின் காரணம்.

என் அந்த மூத்த சகோதரனின் மறைவுத் துயரிலிருந்து அம்மாவை விடுவிக்க என் மாமாவும் என் அத்தை மகன் ஒருவரும் இணைந்து செய்த முயற்சியிலும் அந்த டேப் ரெகார்டரும் சில கேசட்டுகளும் பங்காற்றின.  பாங்கோ ட்ரம் வகையறா ஒன்றை என் அத்தை மகன் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்தார் (நாங்கள் அப்போது விழுப்புரத்தில் இருந்தோம்). என் அம்மாவும் மாமாவும் இணைந்து சில பாடல்கள் பாடி சில கேசட்டுகளில் பதிவு செய்த நேரங்களில் மறைந்தவனைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த என் அம்மாவின் நினைவுகளை சற்றே திசை திருப்ப அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.

சிலப்பல காரணங்களால் நம் இசை சேகரிப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டுப் போக, பின்னர் நம் ஒரே பொக்கிஷமான அந்த கேசட் பிளேயரும் நிறையவே மக்கார் பண்ணத் தொடங்க நம் கேசட் பந்தத்தில் ஒரு வெறுமை ஏற்பட்டது. இடையில் இரண்டாண்டுகள் வசித்த புதுச்சேரியில் எட்டு, ஒன்பது வகுப்புகள் படிக்கையில் ஏதும் பாடல்கள் பதிந்த நினைவில்லை. எண்பதுகளின் மத்திக்குப் பின் என் நினைவுகள் தொண்ணூற்று மூன்றாம் ஆண்டிற்குத்தான் வந்து நிற்கின்றன. 

அப்போது சென்னை வந்து சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. பழுதுபட்ட கேசட் பிளேயர் அத்தனை நாட்களாக மேலே பரணில் உறங்கிக் கொண்டிருக்க, அத்தனை நாள் நம்முள்ளேயும் உறங்கிக் கிடந்த அந்த உத்வேகம் எப்படியோ பீறிட்டுக் கிளம்பி பரணிலிருந்து தூசி தட்டி அந்த கேசட் பிளேயரை "ரிப்பேர் பண்றோம்டா" என இறக்கினோம். நமக்கு உத்வேகம் இருந்தென்ன? ஊர் உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி "இது தேறாதுபா" என எல்லோராலும் புறம்தள்ளப்பட்டது அந்த பிளேயர்.

கடைசியில் நான் படித்த மாதவரம் ஹைஸ்கூலுக்கு எதிரிலேயே பேக்கரி நடத்திக் கொண்டிருந்த ஜோசப் குரியன், "ஏது கொண்டு வா, நான் பாக்கும்" என்று சொல்லி அதை ஏதோ நோண்டிப் பார்த்து பின் முப்பது ரூபாய் செலவில் ஒரு பெல்ட்டை மாற்ற ஊர் உலகமெல்லாம் கைவிட்ட அந்த பிளேயர் "கேளடி கண்மணி பாடகன் சங்கதி" என்று சட்டென்று பாடத் துவங்கியது.

ஹுர்ரே! 

அதன் பின்னர்தான் நம் ஒரிஜினல் கலெக்ஷன்கள் தொடங்கின எனலாம். எஸ்.பி.பி.ஸோலோஸ், யேசுதாஸ் ஸோலோஸ், சித்ரா ஸோலோஸ், . எஸ்.பி.பி. - சித்ரா டூயட்ஸ், எஸ்.பீ.பி. - எஸ்.ஜானகி டூயட்ஸ், யேசுதாஸ் டூயட்ஸ் என வகை வகையாக பதிவு செய்தேன். எங்கள் வீட்டருகேயே இரண்டு இடங்களில் பதிவு செய்வது வழக்கம். கொஞ்சம் அரிதான இங்கேயே கிடைக்காத பாடல்கள் வேண்டுமென்றால் சர்மா நகர் சங்கர் மியூசிக் அல்லது பெரம்பூர் கிருஷ்ணா ம்யூசிகல்ஸ் செல்ல வேண்டும். 

மேலும் ஒரு வருட காலம் தன் சேவையை எங்களுக்கு அந்த பிளேயர் நீட்டித்துத் தர, வேலைக்குச் சென்று கைநிறைய (!) சம்பாதித்துக் கொண்டிருந்த அண்ணன் புண்ணியத்தில் ஒரு பானசோனிக் டூ-இன்-ஒன் எங்கள் வீடு புகுந்தது. மோனோ வகை பிளேயரில் இருந்து ஸ்டீரியோ பிளேயருக்கு நம் இசை வாழ்க்கை மாறியது.


அந்த காலகட்டத்தில் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனாக இருந்தேன். ராஜாவைத் தவிர யாருக்கும் இசை தெரியாது எனவும் நம்பிக் கொண்டிருந்தேன். மேலே சொன்ன கலெக்ஷன்கள் எல்லாம் ராஜா பாடல்கள் மட்டுமே. ரஹ்மானையெல்லாம் திரும்பிக் கூடப் பார்த்திடேன். இன்னொரு பக்கம் என் அண்ணனும் எங்கள் வீட்டருகே வசித்த எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரும் தீவிர ரஹ்மான் ரசிகர்களாக உருவெடுத்திருந்தார்கள். ராஜா - ரஹ்மான் லடாய்கள் எங்களிடையே அதி தீவிரமாக நிகழும்.

காதல் தேசம் பாடல்கள் கேட்டபோதுதான் ரஹ்மானின் பக்கம் திரும்பினேன். ஊரே "முஸ்தபா முஸ்தபா" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்க நான் அது தவிர அந்தப் படத்தின் பிற அனைத்துப் பாடல்களையும் உருகியுருகிக் கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக மென்பாடல்கள்தான் என் சாய்ஸாக இருக்கும். இப்போது யோசித்தால் ஏன் எனத் தெரியவில்லை, ஆனால் அப்போது அந்தப் படத்தில் வந்த வெஸ்டன் வகை "ஹலோ டாக்டர்" பாடலைப் பித்துப் பிடித்தவன் போல் கேட்டுக் கொண்டிருப்பேன். காரணம் ஒருவேளை அந்தப் பாடலில் இருந்த அற்புதமான மிக்சிங் தொழில்நுட்பமாக இருக்கலாம்.


அதன் பின் என் ராஜா கலெக்ஷன்களுடன் சேர்ந்து ரஹ்மானும் நம்முடன் பயணித்தார். ரஹ்மான் படப் பாடல்களை கேசட் வெளிவரும் முதல் நாளிலேயே காத்திருந்து வாங்குபவன் ஆனேன். கேசட் ரிலீஸ் நாளிலேயே மாதவரத்தில் புது கேசட் கிடைக்காது என்பதால் சைக்கிள் எடுத்துக் கொண்டு பெரம்பூர் கிருஷ்ணா மியூசிகல்ஸ் சென்று வாங்க வேண்டும். வாங்கிய இரவிலேயே பாடல்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு மறுநாள் நண்பர்கள் இடையே பெருமையாக அவற்றை முணுமுணுக்க வேண்டும் எனக்கு.




இடையே கையிலிருந்த காசைக் கொண்டு லோக்கலாக ஓரிரு மோனோ வாக்மேன்கள் வாங்கிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். அவற்றின் ஆயுள் மிகக்குறைவு ஆனதால் சீக்கிர சீக்கிரத்தில் நம் இசை வாழ்க்கையில் பேதாஸ் ஒலிக்க நேர்ந்தது. நல்ல வாக்மேன் வாங்க குறைந்தது ஆயிரம் ரூபாய் வேண்டும், நம் சம்பாத்தியத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. என்ன செய்ய என யோசித்தபோது அலுவலகத்தில் பாஸ் அழைத்து "இருபது நாள் வெளியூர் பிரயாணம் போகணும் நீ. ஒரு நாளைக்கு அலவன்ஸ் இருநூறு ரூபாய். ரெண்டாயிரம் அட்வான்ஸ் வாங்கிக்கோ. திரும்ப வந்து விசிட் ரிப்போர்ட் தந்துட்டு மீதம் ரெண்டாயிரம் வாங்கிக்கோ என்று சொல்ல துள்ளிக் குதித்தேன். எண்ணூறு ரூபாயில் நான் அப்போது வாங்கிய பீ.பி.எல் வாக்மேன் ரொம்பநாள் என் உடன்பிறப்பாக என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. மீதமிருந்த அட்வான்ஸ் பணத்தில் நான் அந்த இருபது நாட்களையும் கஷ்டப்பட்டு நகர்த்தியது ஒரு கிளைக்கதை.

வாக்மேனின் கையிருப்பால் கேசட் கலெக்ஷன்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்து கிட்டத்தட்ட கேசட்டுகள் எண்ணிக்கை இருநூறைத் தொட்டது.


பாடல்களைத் தாண்டி எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்தவைகள் நான் வாங்கிக் குவித்த எஸ்.வீ .சேகர் நாடக கேசட்டுகள் மற்றும் என் அண்ணன் திரட்டின திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற கேசட்டுகள். இப்பதிவின் தலைப்பில் அந்தப் புரியாத பாஷையிலிருக்கும் வசனம் (எச்ச குஞ்சல நாதகத்தி...) எஸ்.வீ.சேகரின் "எல்லோரும் வாங்க" புகழ் தெலுகு வசனம். அதையெல்லாம் மனப்பாடம் செய்தோமென்றால் பாருங்கள் நம் மோகத்தை.

இப்படியாக அப்படியாக ஒரு வழியாக பெருமாள் தந்த சி.டி.பிளேயர் புண்ணியத்திலோ அல்லது பாவம் கேசட்டுகளின் பாவத்திலோ அந்த இருநூறு கேசட்டுகளும் பரணுக்குச் செல்ல நேர்ந்தது.

இப்போது கைபேசியில், கையடக்க எம்பி3 பிளேயரில், கணினியில் என எல்லாத் திசைகளிலும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் சிதறிக் கிடந்தாலும் அந்த கேசட் நாட்களில் இசையில் உய்ந்து கிடந்தது போல வாராது எனத்தெரிகிறது.

கேசட் ஒரு வரலாறு ஆகிப் போனது நம் வீட்டில் என நினைத்திருக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பின் பரணில் இருந்து அந்த கேசட்டுகள் மீண்டும் தரை இறங்க நேர்ந்தன. மனைவியிடம் பிரசவ நேரத்தில் "ஏதாவது கேளு வாங்கித் தர்றேன்", என்றதற்கு அவள் கேட்டது "ஒரு வாக்மேன்".

"ஆர் யு ஷ்யூர்? டிஸ்க்மேன் வேணாமா?".

"அட அதை யாருங்க சி.டி.போட்டு பாட்டு நம்பர் தேடி... அதெல்லாம் நமக்கு சரி வராது. எனக்கு ரிவர்ஸ் ஃபார்வர்ட்'தான் சரிப்படும்"

வாக்மேன் எல்லாம் இப்போது எங்கே கிடைக்கப் போகிறது என நினைத்தால் பெரம்பூரிலேயே "ஷாப்பிங் சிங்கப்பூரில்" வகை வகையாய் நிறைய மாடல்கள் கிடைத்தன. பானாசோனிக் ஸ்பீக்கருடன் கூடிய வாக்மேன் ஆயிரத்தி ஐநூறு விலையில் வாங்கியாயிற்று. பரணிலிருந்து கேசட்டுகளை இறக்கி அவளுக்குப் பிடித்த பக்திப் பாடல்களையும், மகாபாரதத்தில் மங்காத்தாவையும் அவளுக்குத் தந்துவிட்டு மீண்டும் மீதம் பரணுக்கே சென்றன.

அடுத்த ரவுண்டு மனைவி கேட்ட கேசட்டுகளைத் தேடி கிருஷ்ணா சென்றால், அங்கே இன்னமும் கேசட் கலெக்ஷன்களுக்கு வரவேற்பு உள்ளதும்  புதிய படங்கள் அனைத்துமே கேசட் வடிவிலும் இன்னமும் வந்து கொண்டிருப்பதும் தெரிந்தது.

அப்போது நான் வாங்கிய....

.... என்ன...?? போதுமா? ரெகார்ட் ரொம்ப தேய்ஞ்ச வாடை வருதா?

சரி..... ஸ்டாப்!

ட்ட்டக்.....


படங்கள் - நன்றி: paanaasonic.com
Related Posts Plugin for WordPress, Blogger...