Feb 22, 2011

முதல் மூன்று நாட்கள்

மூன்று தினங்களையும் நான்கு ஆட்டங்களையும் கடந்திருக்கிறோம். எட்டு அணிகள், அவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசி அணிகளுக்கு எதிரில் ஆடிய நான்கு அணிகள் பந்தயத்தில் இல்லாதவை. எனினும் இத்தகைய அணிகள் திடீர் ஆச்சர்யம் ஏதேனும் தந்து பந்தயத்தில் முந்தும் குதிரைகளின் காலை வாரிவிடும் சாத்தியம் கொண்டவை. நல்லவேளையோ அல்லது கெட்டவேளையோ  இந்த மூன்று நாட்களில் அத்தகைய ஆச்சர்யங்கள் ஏதும் நிகழவில்லை.இந்திய அணி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றது. சேவாகையும் அவருக்கு இணையாக ஆடிய விராத் கோலியையும் மறக்கலாகாது. 

2007 உலகக் கோப்பை தோல்விக்கு பங்களாதேஷ் அணியை இந்தியா பழி வாங்கியது" என எந்தத் தலைப்புச் செய்தியும் வராமல் போனது ஏமாற்றமளித்தது. முற்றிலும் சரணாகதி அடையாமல் ஒரு கண்ணியமான ஸ்கோரை எட்டும் விதம் நேர்த்தியான ஆட்டத்தை பங்களாதேஷ் அணியினர் தந்தனர். தமிம் இக்பாலும் ஷகீப் அல் ஹசன் இருவரின் அரை சதங்களும் பாராட்டிற்கு உரியவை. முனாப் படேல் சாய்த்த நான்கு விக்கெட்டுகள் அவருக்கு நல்ல கிரெடிட். விக்கெட் வேட்டையை அவர் தொடர பிரார்த்திப்போம்.


சென்னையில் பகல் ஆட்டமாக நடந்த நியூசி - கென்யா ஆட்டத்திற்கு டிக்கெட் வாங்கியிருந்தேன். சொந்த அலுவல்கள் காரணமாக சற்றே தாமதமாக பன்னிரண்டு மணிக்கே புறப்பட இயன்றது. சேப்பாக்கத்திலிருந்து நண்பன் அழைத்து "வரவேண்டாம், மேட்ச் முடியப் போகுது" என்றான். தொடர் தோல்விகளின் பிடியில் சிக்குண்டு கட்டுண்டு கிடக்கும் நியூசிலாந்து அணிக்கு 2003'ஆம் ஆண்டின் அரையிறுதி அணியான கென்யா கொஞ்சமேனும் நெருக்கடி தரும் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நியூசி அணி பவுலர்கள் சரிசமமாக கலக்கினர். மூன்று நான்கு என விக்கெட்டுகளை ஓரம், பென்னெட், சௌதீ மூவரும் வீழ்த்தியிருந்தனர். நியூசி அணி பவுலர்களின் கலக்களைத் தாண்டி கென்யா அணியினர் தாமே முன்வந்து சுருண்டனர் எனவும் சொல்லலாம். அதுவே நிஜம். இந்த நான்கு ஆட்டங்களில் குறிப்பிடத் தக்கவையாக இலங்கை - கனடா மற்றும் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டங்களை சொல்லத் தோன்றுகிறது. சிறிய அணிகளுக்கு எதிரே ஆடினாலும் இலங்கை ஆகட்டும் அல்லது ஆஸ்திரேலியா ஆகட்டும் முதலில் பேட் செய்தபோது இருபத்தியைந்து ஓவர்களுக்கு எந்தவித பதட்டமும் இன்றி நிதானமாக ஆடி கணிசமான விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் பின்பாதியை ரன் சேர்க்க பயன்படுத்திக் கொண்டனர். இது ஒரு விதத்தில் நல்ல உத்தி. இது போன்ற ஆட்டங்களில் பவுலர்களின் பங்கும் மகத்தானது என்பதை மறக்கக் கூடாது.இப்போதைக்கு விவாதிக்க மேற்கொண்டு ஏதுமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்டம் சூடுபிடிக்கப் பிடிக்க நம் விமர்சனங்களும் சூடு பிடிக்கலாம்.

Image courtesy: cricinfo

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...