Feb 26, 2011

அகிலும் நாங்களும்


குழந்தை வளர்ப்பு தொடர்பாக அப்பாமார்கள் எழுதின பதிவேதும் இதுவரை என் கண்களில் பட்டதில்லை. சமீபத்தில் யதேச்சையாக நண்பர் ஒருவர் தந்த இணைப்பு வாயிலாக "நமது கைகளில்" என்னும் ஒரு பதிவைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. 

அதில் சொன்னதைப் பார்க்குமுன் நம் சொந்தக்கதை கொஞ்சம்...

டிப்பாக்கம் குடிவந்து ஐந்து மாதங்கள் ஆனாலும் உண்மையான தனிக் குடித்தனம் தொடங்கி இரண்டு வாரங்கள்தான் ஆயிற்று. என் அண்ணனுக்கு  "ஒரு தற்காலிகப் பிரிவு" வடிக்கும் நேரம் வந்ததால் பள்ளிக்குச் செல்லும் சஹானா'வைப் பார்த்துக் கொள்ளவென அம்மா மாதவரம் சென்றாயிற்று. . சஹானா தம்பியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். பெயர் கூடத் தேர்ந்தெடுத்து ஆயிற்று.

கணினியில் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும்போது "ஊஃப் ஊஃப் " என கரண்டியில் எதையோ ஊதிக் கொண்டு அருகில் நிற்கிறாள் என் மனைவி.


"கொஞ்சம் புளி காரம் சரியா இருக்கான்னு சொல்லுங்க", கரண்டியில் சுடச் சுட ஏதோ ஒரு குழம்பு.


"..ஜுர்ர்ர்ரர்ர்ர்ர்.... கொஞ்சம் கொதிக்கணும்"


கொஞ்சம் இடைவெளிவிட்டு வேறொரு கரண்டியில் உருளைக் கிழங்கு பொரியல்.


"உப்பு, காரம் பாருங்க"

"காரமே இல்ல"

"கொழந்தைக்கு கொடுக்கணுமில்ல"


"அப்ப சரி"

 அம்மா நகர்ந்த பின் மனைவி எடுத்திருக்கும் புதிய சமையல் அவதாரம் எனக்கு அவ்வப்போது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. சொல்லத் தேவையின்றி எல்லோருமே அவரவர் அம்மாவின் சமையல் சுவையைத்தான் சமையலுக்கான அளவுகோலாக (பெஞ்ச்மார்க்) வைத்திருக்கிறோம். அதைவிட நன்றாக உலகில் யாராலும், மனைவி உட்பட, சமைத்துவிட முடியாது என்பது நம்மில் 99% பேரின் நம்பிக்கை. கல்யாணப் புதிதில் நாங்கள் மாதவரத்தில் இருந்த போது வெந்நீர் வைத்தலில் தொடங்கி அப்பளம் சுடுவதைக் கற்று அட்வான்ஸ் கோர்ஸ் ஒன்றின் வழியே தயிர் தயாரிக்க என் மனைவி கற்றுக்கொண்ட காலகட்டத்தில் அம்மாவும் அண்ணியும் எங்கோ ஊருக்கு சென்றிருந்த ஒரு சுபயோக சுபதினத்தில் நிர்பந்தத்தின் பேரில் கரண்டியைக் கையில் எடுத்ததுதான்  அவள் சமையல் சகாப்தத்தின் ஆரம்பம் எனச் சொல்ல வேண்டும். <இந்தக் கட்டுரையை தப்பித் தவறி அவள் படிக்க நேர்ந்தாலும் இந்த பாராவை அவள் பார்க்காது கடக்கக் கடவது>.

அந்த சமையலின் விளைவுகளை நான் இங்கே வெளிப்படையாக எழுதினால் எனக்கு விவாகரத்து நோட்டிஸ் நிச்சயம். எனவே தற்காலத்திற்கு வருவோம்...

அகில் உண்ணும் மெனு ஐட்டங்கள் சிக்கலில்லாமல் அமைந்து விடுவதாலும், இன்னமும் அவன் ஏதும் சமையலுக்கும் சுவைக்கும் அளவுகோல்களை நிறுவிக்கொள்ளாத காரணத்தாலும் அவனுக்கான சமையல் சார்ந்த விஷயங்கள் பிரச்னைக்கு வெளியே போய்விடுகின்றன.

இந்த நிஜத் தனிக்குடித்தனத்தில் சமையல்..... சரி சமையலை விடுங்கள்.... சமையலுக்கு அடுத்து எங்களுக்கு எதிரே பெரிதாக நின்று கொண்டிருக்கும் ஒரு சவால் அகில். அவனைப் பார்த்துக் கொள்வதென்பது இப்போது எங்களுக்கு கடவுள் தந்திருக்கும் பெரிய புராஜக்ட்.

குப்பைக்கூடை, துடைப்பம், மிதியடி, குப்பைவாரும் பிளாஸ்டிக் முறம், மாப் ஸ்டிக், திறந்து வைத்த குளியலறை, கண்ணுக்கு நெருக்கத்தில் தொலைக்காட்சி - இவைதான் அவன் உலகின் சுவாரசிய விஷயங்கள்.


கொஞ்ச நாளாய்த்தான் நாற்காலி, மேஜைகளைப் பிடித்து நிற்கப் பழகியிருக்கிறான். நிற்பவன் மீண்டும் அமர எத்தனிக்கையில் நிதானம் தடுமாறி தடாரென அமர்ந்து பின்சாய்ந்து புத்தம் புதிய மொட்டை மண்டையில் சத்தத்துடன் அடி வாங்கி வீறிடத் தவறுவதில்லை. அவன் பின்னாலேயே எப்போதும் நிற்க வேண்டும் நாங்கள். 


இப்போது என் மடியில் உட்கார்ந்தவாறே நான்காவது ரவுண்டு உச்சா போகும் அகில் என்னை நிமிர்ந்து பார்த்து "ஆஅஆஅ..." என்ற வழக்கமான விசேஷ ஒலி எழுப்புகிறான். கணினித் திரையில் அவனுக்கு ஒதுக்கிய விண்டோ'வில் "உலகமெல்லாம் ஓடி" ஓடியோடித் தேய்ந்து கொண்டிருக்கிறது. சஹானா பாடிய "கொஞ்சிக் கொஞ்சி" பாடலை மாற்ற வேண்டும் என்பது அவன் செய்த சத்தத்தின் அர்த்தம்.


சமையலும் ஆயிற்று, அகில் பின்னால் ஓடியாட வேண்டும், அதுவும் பேசியாயிற்று. இன்னும் முக்கியமாய் முன் நிற்பது அவனைக் குளிப்பாட்டும் விஷயம். உடம்புக்கு  ஊற்றுதல் என்றால் சரி. தலைக்கு குளிப்பாட்ட வேண்டும் என்றால்?"என்னங்க, பையன் தலைக்கு ஊத்தி பத்து நாள் ஆச்சு. மொட்டை அடிச்சப்ப அவன் தலைக்கு குளிச்சது. அந்த கம்ப்யூட்டரை கட்டிக்கறதை விட்டுட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கன்னா ரெண்டு பெரும் சேந்து  குளிப்பாட்டிடலாம்"

"அதான் தலைல முடி இல்லதானம்மா, எதுக்கு தலைக் குளியல்? ஒடம்புக்கே ஊத்திடலாம்",


அதற்கு மேல் நான்கைந்து ரவுண்டு விவாதம் பண்ணி பேசி முடிவெடுத்ததில் அவனுக்கு தலைக்கு குளிப்பாட்ட தீர்மானம் நிறைவேறிற்று.


கோதாவில் நானிறங்கி கால்களை நீட்டியமர்ந்து அவனைக் குப்புறப் படுக்க வைத்து தலையை லேசாக அழுத்திப் பிடித்து தலையில் நீரூற்றி மூக்கு வாயில் நீர் போகாவண்ணம் காத்துவிட்டோமென நினைக்கையில் வீறிடத் தொடங்குகிறான். அவசரப்பட்டு என்னவாயிற்று எனப் பார்க்கத் அவன் தலையைத் தூக்கிப் பார்த்தால் அப்போதுதான் நீர் வழிந்து அவன் வாய் புகுகிறது.

ஆனது ஆச்சு என அவனுக்கு ஸ்பெஷலாக அரைத்த ஆயுர்வேத மாவை தலையில் தேய்த்து அப்படியிப்படி சோப்பும் போட்டு இரண்டாம் ரவுண்டு தண்ணீர் ஊற்ற வேறொரு டெக்னிக்கை தேர்ந்தெடுக்கிறேன்.

அவன் தலைக்கு மேலே கைகளை தொப்பிபோல் காத்து நீர் ஊற்றுகிறேன். ஓரளவு தண்ணீர் முகத்தில் வழியாமல் இந்த முறையில் காப்பாற்றியாயிற்று. எனினும் மீண்டும் அவன் வீறிடல்கள். பைப்பைத் திறந்து அருகில் அவனை நிறுத்தி வைத்து அதில் அவனை விளையாட விட்டு கொஞ்சம் அழுகையை திசை மாற்றுகிறேன். எனினும் அழுகையின் விரிவாக்கமாக தேம்பல்கள் தொடர்கின்றன. 

குளித்து முடித்து தலை துவட்டி, உடல் துடைத்து பவுடர் பூசி மையிட்டு உடை அணிவித்து இவை எல்லாவற்றுக்கும் இடையில் அவன் கை கால்களை உதைத்துப் பண்ணிய ராவடிகளைப் பொறுத்து என....ஹம்மா...... ஒருவழியே குளியல் படலம் முடிந்தது.


"இருங்க, கம்ப்யூட்டர்ல போயி ஒக்கார்றதுக்கு முன்னால இந்த இட்லியை அவனுக்குக் குடுத்துடுங்களேன். நான் அதுக்குள்ள தேங்காய் துருவிக்கறேன்."


வாசலில் நடந்தவாறே மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கைகளைக் காட்டி "காக்கா! காக்கா! காக்கா பாரு... " என அவனிடம் பேசியவாறு அவனுக்கு ஊட்டுகிறேன். 


"நடுநடுல தண்ணி குடுக்கணும்", வெந்நீர் டம்ளர் வந்து எதிரில் அமர்கிறது. வெதுவெதுவென அவன் குடிக்கும் இளம் சூட்டில் நீரை ஊதிஊதிக் கொடுக்க வேண்டும்.


அரைமணிநேர நடைகளுக்குப் பிறகு ஒரு இட்லியில் பாதி வயிற்றுக்கும், கொஞ்சம் தரைக்கும் போக, மீதம் தட்டில் இருக்க... 


"உவ்வாய்....",


"அவனுக்கு எடுத்துட்டு வந்தா கொஞ்சம் தண்ணி குடுங்க"


ஃபீடிங் பாட்டிலையோ, ஸிப்பரையோ பழக்கம் செய்தால் அதை நிறுத்துவது கஷ்டம் என்று ஊரே கூடி அறிவுரைகள் சொன்னதால் அப்படியேதும் பழக்கப்படுத்தாது நேரிடையாக தம்ளரிலேயே நீர் தரும் வழக்கம். முதலில் சில நாட்கள் அதிலேயே நீரைப் பருகியவன் பின்னர் "ப்புளுப்புளுப்புளுப்புளு" என நீரைப் பருகாமல் நீர்க்குமிழிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கற்று எங்களை சிரிப்பேற்றிக் கொண்டிருந்தான்.


இப்படியாக இருக்கின்றன என் காலை வேளைகளும் வேலைகளும். குழந்தை வளர்ப்பு பற்றின புத்தகங்கள் இப்போது எங்கள் வீட்டு நூலகத்தில் முன்வரிசையில் இருக்கின்றன. இணைய மேய்தல்களிலும் "குழந்தை வளர்ப்பு" தொடர்பான தேடல்கள். 

இதோ இதை எழுதிக் கொண்டிருக்கையில் மீண்டும் என் மடியில் அகில்.  முகம் நிமிர்த்தி மீண்டும் என் முகம் பார்க்கிறான். மீண்டும் அதே  "ஆஅஆஅ..." சத்தம். இப்போது "பிரம்மம் ஒக்கட்டே" பாடல் ஒலிக்கவேண்டும்.சரி, இப்போது நமது கைகளில் பதிவிலிருந்து சில அசத்தும் வரிகள் இதோ! மாபெரும் விஷயங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே உரிய மிகவும் நுட்பமான அவதானிப்புகள்.கண் தெளிந்த குழந்தை நம்மை அடையாளம் காணும்போது நாம் நம் இருப்பை புதிதாக மீண்டும் அறிகிறோம்.

நம் கண் முன் ஒரு பிரபஞ்சம் பிறந்து விரிந்து தன்னை நிறுவிக்கொள்கிறது. 

நம்வீட்டில் மூலைகளும் இடுக்குகளும் நம் கண்களுக்குப் படுவதேயில்லை. நாம் மையங்களில் வாழ்கிறோம். ஆனால் குழந்தைகள் முதலில் அங்குதான் செல்கின்றன. மறந்து விடப்பட்ட பொருட்கள் அவர்களால் தான் கண்டடையப்படுகின்றன 

சாப்பிடாவிட்டால் காக்காய்க்குக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி ஊட்டக்கூடாது. காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான் சொல்லவேண்டும்.


பை தி வே....நமது கைகளில் எழுதியவர் வேறாருமல்ல - ஜெமோ
.
.
.

8 comments:

natbas said...

//காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான் சொல்லவேண்டும்.//

நீங்க சொல்றதை நம்பி ஆன்னு வாயைப் பாக்கற காக்கா உங்க புள்ள சாப்ட்டு முடிச்சதும் 'வட போச்சே'ன்னு அழ வேண்டியதுதான்.

கத சொல்றாங்களாம் கத :)

"ஸஸரிரி" கிரி said...

//நீங்க சொல்றதை நம்பி//

சொன்னவன் நானில்லை. சொன்னவர் ஜெமோ.

anyay, thanks

Shanmuganathan said...

கிரி, உங்கள் நடை மிகவும் இயல்பாகவும் அதே சமயம் அழகானதாகவும் இருந்தது... this is the best ever your writing in your blog , my best wishes to அகில்...

"ஸஸரிரி" கிரி said...

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! ரொம்ப நன்றி சண்முகம்!

virutcham said...

குளிப்பாட்டல் விவரிப்பு அருமை. நான்கு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் என் இரெண்டாவது மகனுக்கு இன்னும் தலைக் குளியல் என்றால் அலர்ஜி. என்னைக யாராவது காப்பற்றுங்க என்று ஊரக் கூடி விடுவான். மேல் குளியல் என்றால் அலாதி சுகம். குளிப்பாட்டி முடித்த பின் ஒரு பக்கெட் தண்ணீரை விட்டு வைக்க வேண்டும் அவன் விளையாட.

காக்காவும் நாமும் சேர்த்து உண்ணலாம் .... yes exactly

இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டா அகிலுக்கு உணவு ஊட்ட வேறு உத்திகள் தேவைப்படும்.

குழந்தைகளுக்கான ( parenting வகை) சில பதிவுகள் http://www.virutcham.com/category/kids-corner/

"ஸஸரிரி" கிரி said...

நீண்ட இடைவெளிக்குப் பின் விருட்சத்திலிருந்து ஒரு பின்னூட்டம். நான் அரவிந்த அன்னைப் பதிவுகளில் பின் தங்கியிருப்பது நினைவிற்கு வருகிறது. :)

"ஸஸரிரி" கிரி said...

@ விருட்சம்
கிட்ஸ் கார்னர் பகிர்வுக்கு நன்றி! அவசியம் படிக்கிறேன்.

virutcham said...

நான் இடையிடையே வந்து உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிழக்கு sale பதிவை படித்தபோது அப்புசாமி சீதாப் பாட்டியை நினைவுக்கு வர என்னால் உடனே போக முடியாமல் தெரிந்தவர் மூலம் சென்ற ஞாயிறன்று வாங்க முயன்றால் பிரபல எழுத்தாளர்கள் புத்தகங்கள் எதுவுமே கிடைக்க வில்லை. விற்று தீர்ந்து விட்டது என்று சொன்னார்கள். ஒரே ஒரு அப்புசாமி மட்டும் கிடைத்தது.
இ.பா வின் ஒரு நாடகம் கிடைத்தது.

அகிலோடு நீங்கள் ரொம்ப பிஸி தெரியுது. அன்னைக்காக அன்னையையும் கொஞ்சம் கவனிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...