Feb 7, 2011

கேஸட் - தொடர் பதிவு"எச்ச குஞ்சல நாதகத்தி பிசிபேடாகுளி சாமுத்ரிகா லட்சண சுந்தர வராந்தர குடமுருட்டி சீதா லக்ஷ்மி நரசம்மா...."

_________________

சொக்கன் தட்டிவிட்ட ரீவைண்ட் எஃபெக்டில் நானும்....

கேசட்டுகளைப் பற்றி என் நினைவுகளை மீட்ட வேண்டுமென்றால் தேய்ந்த ஒலிநாடாவாய்ப்  பகிர்ந்து தேய்க்க என்னிடம் பக்கம் பக்கமாக நிறைய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


எட்டு வருடங்கள் முன் மலேசியாவிலிருந்து நண்பர் பெருமாள் வாங்கித் தந்த டிஸ்க்மேன் மூலம் கேசட் உலகில் இருந்து சி.டி. உலகிற்குத் தாவினேன். அதற்கு முன் கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகள் கேசட்டுகளைத் தேய்த்துத் தேய்த்து இசை கேட்டவை நம் காதுகள். ஆகவே சி.டி.க்களை விடவும் கேசட்டுகளுடனான பந்தம் நமக்கு ரொம்பவே அதிகம்.

அப்படியே நம் பிளேயரில் ரிவர்ஸ் பட்டனை அழுத்தி விட்டு கொஞ்சம் நெடுநேர ரீவைண்டிற்குப் பின் எண்பதுகளின் ஆரம்பத்திற்குப் போவோம். 

எண்பதுகளின் தொடக்கத்தில் அப்பா வாங்கி வந்த ஒரு பெட் டைப் (bed type) கேஸட் பிளேயர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது. அந்த பிளேயர்தான் என் இசை உலகப் பயணத்தின் முதல் படி. எங்கள் சாதிசனக் கூட்டத்தில் டேப் ரெகார்டர் வாங்கிய முதல் குடும்பம் என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு.

எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்கள் தொகுப்பு ஒன்று, திருவிளையாடல் வசனங்கள், சங்கராபரணம் பாடல்கள், தெலுகுவில் கலந்து கட்டிய அஸார்டிஸ் பாடல்கள் தொகுப்பு ஒன்று (தூருப்பு தெல்ல தெல்ல  வாரகனி என்ற பாடல் மட்டும் நினைவிருக்கிறது), தங்கவேலு காமெடி தொகுப்புகள் - இவைதான் எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். 
பின் வந்த நாட்களில் ஒரிஜினல் கேசட்டுகள் ரொம்பவும் அரிதாகத்தான் வாங்கிய நினைவு. பெரும்பாலும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு லிஸ்ட் தயாரித்து வீட்டில் ஆளாளுக்கு எஜமானம் என்பதால் அடித்துப் பிடித்து சண்டை போட்டு அந்தப் பாடலை இணைத்து இந்தப் பாடலை அடித்து என கடைசியில் ஒரு வழியாக லிஸ்டை எழுதி நிறைவு செய்து அந்தத் தொகுப்பிற்குத் தகுந்தார்ப்போல் சிக்ஸ்டி அல்லது நைன்டி வகை கேசட்டுகளில் பதிவது வழக்கம்.

இரண்டும் எங்கள் வீட்டில் பிரபலமாக இருந்த பாடல்கள். இரண்டாம்ப்பு படிக்கும்போதே வாசமில்லா மலரிது (கையில் ரோஜாப் பூ போன்ற ஏதோ ஒன்றுடன்), இளையநிலா பொழிகிறது பாடல்களையெல்லாம் நெட்டுரு போட்டுப் பாடினவனாக்கும் நான். அப்போது அந்த வயதில் அப்படிப் பாடுவதெல்லாம் ரொம்ப ஆச்சர்யம். இப்போது எல்.கே.ஜி. வயதுக்கு முன்னரே "எம் பேரு மீனா குமாரி" என்கிறார்கள் சின்னஞ் சிறுசுகள்.

அந்த முதல் டேப் ரெகார்டர் எங்கு சென்றாலும் தூக்கிச் செல்லும் வண்ணம் காம்பேக்ட் ஆக இருந்ததால் எங்கள் கிராமத்திற்குச் சென்றாலும் சரி அல்லது நெடுந்தூரப் பயணங்கள் என்றாலும் சரி அதுவும் எங்களோடு பயணிக்கும். பேட்டரியிலும் இயங்கும் என்பதால் ஆன்-தி-கோ பிளேயராகவும் அது இருந்தது. ஒருமுறை திருவனந்தபுரத்தில் நாங்கள் ரொம்ப எந்துவாகி தமிழ்ப் பாடல்களை சத்தமாக கேட்டு வர இரண்டொரு மல்லுக்களால் "எடோ நிறுத்திக்கோ" என எங்களுக்கு ஆணை பிறந்தது தனிக்கதை..
வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருமே பாத்ரூம் பாடகர்கள் என்பதால் கேட்க வாங்கிய கேசட்டுகளுக்கு இணையாக குரல் பதிவிற்கு என காலி கேசட்டுகள் வீட்டில் நிறைய தேவைப்பட்டன. நாங்கள் அப்போது பதிந்த கேசட்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தும் இப்போது சேகரிக்கப் படாமல் காணாமல் போய் விட்டாலும், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் ஒரே ஒரு ரெகார்டட் கேசட் மாத்திரம் என் அம்மாவின் பீரோவில் பத்திரமாக இருக்கிறது. அதில் இப்போது எங்களுடன் இல்லாமல் மறைந்துவிட்ட என் சகோதரன் ஒருவனின் குரலும் மறைந்த என் அப்பாவின் குரலும் இருப்பதே அந்தச் சேகரிப்பின் காரணம்.

என் அந்த மூத்த சகோதரனின் மறைவுத் துயரிலிருந்து அம்மாவை விடுவிக்க என் மாமாவும் என் அத்தை மகன் ஒருவரும் இணைந்து செய்த முயற்சியிலும் அந்த டேப் ரெகார்டரும் சில கேசட்டுகளும் பங்காற்றின.  பாங்கோ ட்ரம் வகையறா ஒன்றை என் அத்தை மகன் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்தார் (நாங்கள் அப்போது விழுப்புரத்தில் இருந்தோம்). என் அம்மாவும் மாமாவும் இணைந்து சில பாடல்கள் பாடி சில கேசட்டுகளில் பதிவு செய்த நேரங்களில் மறைந்தவனைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த என் அம்மாவின் நினைவுகளை சற்றே திசை திருப்ப அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.

சிலப்பல காரணங்களால் நம் இசை சேகரிப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டுப் போக, பின்னர் நம் ஒரே பொக்கிஷமான அந்த கேசட் பிளேயரும் நிறையவே மக்கார் பண்ணத் தொடங்க நம் கேசட் பந்தத்தில் ஒரு வெறுமை ஏற்பட்டது. இடையில் இரண்டாண்டுகள் வசித்த புதுச்சேரியில் எட்டு, ஒன்பது வகுப்புகள் படிக்கையில் ஏதும் பாடல்கள் பதிந்த நினைவில்லை. எண்பதுகளின் மத்திக்குப் பின் என் நினைவுகள் தொண்ணூற்று மூன்றாம் ஆண்டிற்குத்தான் வந்து நிற்கின்றன. 

அப்போது சென்னை வந்து சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. பழுதுபட்ட கேசட் பிளேயர் அத்தனை நாட்களாக மேலே பரணில் உறங்கிக் கொண்டிருக்க, அத்தனை நாள் நம்முள்ளேயும் உறங்கிக் கிடந்த அந்த உத்வேகம் எப்படியோ பீறிட்டுக் கிளம்பி பரணிலிருந்து தூசி தட்டி அந்த கேசட் பிளேயரை "ரிப்பேர் பண்றோம்டா" என இறக்கினோம். நமக்கு உத்வேகம் இருந்தென்ன? ஊர் உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி "இது தேறாதுபா" என எல்லோராலும் புறம்தள்ளப்பட்டது அந்த பிளேயர்.

கடைசியில் நான் படித்த மாதவரம் ஹைஸ்கூலுக்கு எதிரிலேயே பேக்கரி நடத்திக் கொண்டிருந்த ஜோசப் குரியன், "ஏது கொண்டு வா, நான் பாக்கும்" என்று சொல்லி அதை ஏதோ நோண்டிப் பார்த்து பின் முப்பது ரூபாய் செலவில் ஒரு பெல்ட்டை மாற்ற ஊர் உலகமெல்லாம் கைவிட்ட அந்த பிளேயர் "கேளடி கண்மணி பாடகன் சங்கதி" என்று சட்டென்று பாடத் துவங்கியது.

ஹுர்ரே! 

அதன் பின்னர்தான் நம் ஒரிஜினல் கலெக்ஷன்கள் தொடங்கின எனலாம். எஸ்.பி.பி.ஸோலோஸ், யேசுதாஸ் ஸோலோஸ், சித்ரா ஸோலோஸ், . எஸ்.பி.பி. - சித்ரா டூயட்ஸ், எஸ்.பீ.பி. - எஸ்.ஜானகி டூயட்ஸ், யேசுதாஸ் டூயட்ஸ் என வகை வகையாக பதிவு செய்தேன். எங்கள் வீட்டருகேயே இரண்டு இடங்களில் பதிவு செய்வது வழக்கம். கொஞ்சம் அரிதான இங்கேயே கிடைக்காத பாடல்கள் வேண்டுமென்றால் சர்மா நகர் சங்கர் மியூசிக் அல்லது பெரம்பூர் கிருஷ்ணா ம்யூசிகல்ஸ் செல்ல வேண்டும். 

மேலும் ஒரு வருட காலம் தன் சேவையை எங்களுக்கு அந்த பிளேயர் நீட்டித்துத் தர, வேலைக்குச் சென்று கைநிறைய (!) சம்பாதித்துக் கொண்டிருந்த அண்ணன் புண்ணியத்தில் ஒரு பானசோனிக் டூ-இன்-ஒன் எங்கள் வீடு புகுந்தது. மோனோ வகை பிளேயரில் இருந்து ஸ்டீரியோ பிளேயருக்கு நம் இசை வாழ்க்கை மாறியது.


அந்த காலகட்டத்தில் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனாக இருந்தேன். ராஜாவைத் தவிர யாருக்கும் இசை தெரியாது எனவும் நம்பிக் கொண்டிருந்தேன். மேலே சொன்ன கலெக்ஷன்கள் எல்லாம் ராஜா பாடல்கள் மட்டுமே. ரஹ்மானையெல்லாம் திரும்பிக் கூடப் பார்த்திடேன். இன்னொரு பக்கம் என் அண்ணனும் எங்கள் வீட்டருகே வசித்த எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரும் தீவிர ரஹ்மான் ரசிகர்களாக உருவெடுத்திருந்தார்கள். ராஜா - ரஹ்மான் லடாய்கள் எங்களிடையே அதி தீவிரமாக நிகழும்.

காதல் தேசம் பாடல்கள் கேட்டபோதுதான் ரஹ்மானின் பக்கம் திரும்பினேன். ஊரே "முஸ்தபா முஸ்தபா" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்க நான் அது தவிர அந்தப் படத்தின் பிற அனைத்துப் பாடல்களையும் உருகியுருகிக் கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக மென்பாடல்கள்தான் என் சாய்ஸாக இருக்கும். இப்போது யோசித்தால் ஏன் எனத் தெரியவில்லை, ஆனால் அப்போது அந்தப் படத்தில் வந்த வெஸ்டன் வகை "ஹலோ டாக்டர்" பாடலைப் பித்துப் பிடித்தவன் போல் கேட்டுக் கொண்டிருப்பேன். காரணம் ஒருவேளை அந்தப் பாடலில் இருந்த அற்புதமான மிக்சிங் தொழில்நுட்பமாக இருக்கலாம்.


அதன் பின் என் ராஜா கலெக்ஷன்களுடன் சேர்ந்து ரஹ்மானும் நம்முடன் பயணித்தார். ரஹ்மான் படப் பாடல்களை கேசட் வெளிவரும் முதல் நாளிலேயே காத்திருந்து வாங்குபவன் ஆனேன். கேசட் ரிலீஸ் நாளிலேயே மாதவரத்தில் புது கேசட் கிடைக்காது என்பதால் சைக்கிள் எடுத்துக் கொண்டு பெரம்பூர் கிருஷ்ணா மியூசிகல்ஸ் சென்று வாங்க வேண்டும். வாங்கிய இரவிலேயே பாடல்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு மறுநாள் நண்பர்கள் இடையே பெருமையாக அவற்றை முணுமுணுக்க வேண்டும் எனக்கு.
இடையே கையிலிருந்த காசைக் கொண்டு லோக்கலாக ஓரிரு மோனோ வாக்மேன்கள் வாங்கிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். அவற்றின் ஆயுள் மிகக்குறைவு ஆனதால் சீக்கிர சீக்கிரத்தில் நம் இசை வாழ்க்கையில் பேதாஸ் ஒலிக்க நேர்ந்தது. நல்ல வாக்மேன் வாங்க குறைந்தது ஆயிரம் ரூபாய் வேண்டும், நம் சம்பாத்தியத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. என்ன செய்ய என யோசித்தபோது அலுவலகத்தில் பாஸ் அழைத்து "இருபது நாள் வெளியூர் பிரயாணம் போகணும் நீ. ஒரு நாளைக்கு அலவன்ஸ் இருநூறு ரூபாய். ரெண்டாயிரம் அட்வான்ஸ் வாங்கிக்கோ. திரும்ப வந்து விசிட் ரிப்போர்ட் தந்துட்டு மீதம் ரெண்டாயிரம் வாங்கிக்கோ என்று சொல்ல துள்ளிக் குதித்தேன். எண்ணூறு ரூபாயில் நான் அப்போது வாங்கிய பீ.பி.எல் வாக்மேன் ரொம்பநாள் என் உடன்பிறப்பாக என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. மீதமிருந்த அட்வான்ஸ் பணத்தில் நான் அந்த இருபது நாட்களையும் கஷ்டப்பட்டு நகர்த்தியது ஒரு கிளைக்கதை.

வாக்மேனின் கையிருப்பால் கேசட் கலெக்ஷன்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்து கிட்டத்தட்ட கேசட்டுகள் எண்ணிக்கை இருநூறைத் தொட்டது.


பாடல்களைத் தாண்டி எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்தவைகள் நான் வாங்கிக் குவித்த எஸ்.வீ .சேகர் நாடக கேசட்டுகள் மற்றும் என் அண்ணன் திரட்டின திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற கேசட்டுகள். இப்பதிவின் தலைப்பில் அந்தப் புரியாத பாஷையிலிருக்கும் வசனம் (எச்ச குஞ்சல நாதகத்தி...) எஸ்.வீ.சேகரின் "எல்லோரும் வாங்க" புகழ் தெலுகு வசனம். அதையெல்லாம் மனப்பாடம் செய்தோமென்றால் பாருங்கள் நம் மோகத்தை.

இப்படியாக அப்படியாக ஒரு வழியாக பெருமாள் தந்த சி.டி.பிளேயர் புண்ணியத்திலோ அல்லது பாவம் கேசட்டுகளின் பாவத்திலோ அந்த இருநூறு கேசட்டுகளும் பரணுக்குச் செல்ல நேர்ந்தது.

இப்போது கைபேசியில், கையடக்க எம்பி3 பிளேயரில், கணினியில் என எல்லாத் திசைகளிலும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் சிதறிக் கிடந்தாலும் அந்த கேசட் நாட்களில் இசையில் உய்ந்து கிடந்தது போல வாராது எனத்தெரிகிறது.

கேசட் ஒரு வரலாறு ஆகிப் போனது நம் வீட்டில் என நினைத்திருக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பின் பரணில் இருந்து அந்த கேசட்டுகள் மீண்டும் தரை இறங்க நேர்ந்தன. மனைவியிடம் பிரசவ நேரத்தில் "ஏதாவது கேளு வாங்கித் தர்றேன்", என்றதற்கு அவள் கேட்டது "ஒரு வாக்மேன்".

"ஆர் யு ஷ்யூர்? டிஸ்க்மேன் வேணாமா?".

"அட அதை யாருங்க சி.டி.போட்டு பாட்டு நம்பர் தேடி... அதெல்லாம் நமக்கு சரி வராது. எனக்கு ரிவர்ஸ் ஃபார்வர்ட்'தான் சரிப்படும்"

வாக்மேன் எல்லாம் இப்போது எங்கே கிடைக்கப் போகிறது என நினைத்தால் பெரம்பூரிலேயே "ஷாப்பிங் சிங்கப்பூரில்" வகை வகையாய் நிறைய மாடல்கள் கிடைத்தன. பானாசோனிக் ஸ்பீக்கருடன் கூடிய வாக்மேன் ஆயிரத்தி ஐநூறு விலையில் வாங்கியாயிற்று. பரணிலிருந்து கேசட்டுகளை இறக்கி அவளுக்குப் பிடித்த பக்திப் பாடல்களையும், மகாபாரதத்தில் மங்காத்தாவையும் அவளுக்குத் தந்துவிட்டு மீண்டும் மீதம் பரணுக்கே சென்றன.

அடுத்த ரவுண்டு மனைவி கேட்ட கேசட்டுகளைத் தேடி கிருஷ்ணா சென்றால், அங்கே இன்னமும் கேசட் கலெக்ஷன்களுக்கு வரவேற்பு உள்ளதும்  புதிய படங்கள் அனைத்துமே கேசட் வடிவிலும் இன்னமும் வந்து கொண்டிருப்பதும் தெரிந்தது.

அப்போது நான் வாங்கிய....

.... என்ன...?? போதுமா? ரெகார்ட் ரொம்ப தேய்ஞ்ச வாடை வருதா?

சரி..... ஸ்டாப்!

ட்ட்டக்.....


படங்கள் - நன்றி: paanaasonic.com

6 comments:

Anonymous said...

ரெக்கார்ட் பட்டனை அழுத்திப் பதிவு செஞ்சமாதிரி ... நல்ல பதிவு, நன்றி தலீவா ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Rathnavel said...

நல்ல, நீண்ட, அருமையான பதிவு நண்பரே.
வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

kalakkal post boss ;-)

"ஸஸரிரி" கிரி said...

@ சொக்கன்
நன்றி ஐயா! நீங்க போட்ட கோடு. நான் ரோடு போடலைன்னாலும் வளைச்சு நெளிச்சு ஒரு கிறுக்கலாவது பண்ண முயன்றிருக்கேன்.

@ரத்னவேல்
ரொம்ப நன்றி சார்!

@கானா பிரபா
ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாஸ்!

susila said...

kalangha vechchutte giri susila

Murali said...

rewind of memories.... same holds good for many people.. my home as well there are three full boxes of cassettes and not even feel like throwing it............. memories na......

Related Posts Plugin for WordPress, Blogger...